திங்கள், 16 ஏப்ரல், 2018

எனும் சொல்

ஒரு நெருக்கமான வாதையுடன்
அருகில்
வந்தமர முயற்சித்தது பறவை
வெட்டுண்ட கால்களுக்கடியில்
புதைமணலாலான பெரு நகரம்
அங்கு மக்கள் மீள மீளக் குடித்துக் கொண்டே இருந்தனர்
நகர் நடுவில் ஒரு சிதைந்த கோவில்
ஆம்
மிக நெருக்கமான என் பறவை
என்னைப் போலவே மையப் போதமற்ற
புளிப்பூறிய மதுக்கடைக்கு வந்தது
திமிறிக் கொண்டிருந்த ஒரு சொல்லால்
அதற்கு பெயரிட்டேன்
அதற்கும் மொழி இருந்தது
நாங்கள் ஒன்றாக குடித்துத் தீர்த்தோம்
கையில் குத்தீட்டியுடன் வந்த வழிப்போக்கச் சொல்
என் பறவை சொல்லை அபகரிததது
நெருக்கமான வாதையின் பாடலை எழுதி
சொற்களில்லாத கோவிலின் கருவறையில் புதைத்தேன்,
உடைந்த பால் பற்களைப் புதைப்பதைப் போல
தெய்வங்கள் இழந்த சொற்களைக் கொண்டு
பறவையின் மொழியறிந்தேன்
ஆம்
என் மொழியிலிருந்து மறைந்து போனது 
பறவை எனும் சொல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக