ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

கடைசிமுகம்



எத்தனை முகங்கள், உடல்கள். அதில் முலைகளும், அல்குல்களும். என் வாழ்தலின் கணங்கள் இந்த உடல்களால் நாசி நிரப்புகையில், அகம் மூட்டைப்பூச்சியாய் உள்ளுள் நகர்கிறது. அதன் கூர்மையான உறிஞ்சுக்குழாய் எப்பொழுதும் தகித்துக் கொண்டிருக்கிறது. இரை! இரை! என்று. காமம் ஒரு கவிழ்த்துப் போட்ட கரப்பானைப் போல கால்கள் நடுங்க உணர்கொம்புகள் உராயத் துடித்துக் கொண்டே இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத கண்ணிகளில் என் முதுகுச் செதில்கள் கொழுத்தியிட்டிருக்கிறது. அதன் ஒவ்வோர் அழுத்தத்திலும் தன்னுணர்வின்றி என்னுள் ஒரு ஆதி மிருகம் மிக வன்மமாய் பதுங்கிக் கொண்டு நோட்டமிடுகிறது. சிறுதுளி தாமதமுமில்லை, அதை எதிரில் இருக்கும் எந்த உடலும் எளிதில் புரிந்து கொள்ளும். அவர்களின் அகம் அதை உணரும் நொடியில் பார்வையைத் திருப்பிக் கொள்கிறேன். நான் மனிதன் என்று சொல்லிக் கொள்கிறேன். மனிதனாய் இருப்பது என்பது வெறும் பாவனைகளால் வாழ்வதுதானே. குறுக்கு வெட்டாய் என்னை ஆராய்கையிலெல்லாம் இந்த மிருகத்தின் சமிக்ஞ்களை அணுக்கமாய் அறிந்திருக்கிறேன். வெகு நாள் நான் காத்திருக்கப்போவதில்லை, என்பதைப்போல அதன் சிவந்த உள் நாக்கு காட்டி, வீரப்பல் மிளிர இளித்துக் கொண்டிருக்கிறது.
பின் சுயமைதுனத்திற்காக, உடலங்களின் நுண்ணிய பரப்புகளை மீட்டுக் கொள்கிறேன். சிறுவயதில் நான் எப்பொழுது அல்குலை அறிந்தேன். முதல் முறை நான் அதை அறிகையில் அங்கு நான் ஒரு ஆண் குறியை எதிர்பார்த்தேன். அங்கு எதுவுமில்லாதிருந்தது. ஆனால் அது என்னுள் நான் உள் நுழைந்து கொள்ள வேண்டிய, நான் உயிர் வாழ்வதற்கான உறுப்பாய் உருமாறிக் கொண்டேயிருக்கிறது இத்தனை நாட்களாய். எங்கும் நான் தொலைந்து போகும் ஒரு இடம் எனில் அதனுள் மட்டுமே. அது அவ்வளவு சுலபமுமல்ல. நான் என் அம்மையை அங்கு உணர்கிறேன். அந்த மெல்லியத் துளை வழி நான் அவளது உடலுடன் நெருக்கமாய்ப் பிணைந்து ஒட்டியிருக்கிறேன். பிரிக்கவே வழியில்லாதபடி. அங்கு முடிவில்லாத் தூரம் அவளை நான் விரும்புகிறேன்.  வெறுக்கிறேன்.
என் கனவுகளுக்குத் தெரிந்திருக்கிறது. நான் தேடும் முகங்களை. அந்த முகங்களில் என் விந்துவைப் பீய்ச்சி பீய்ச்சி பழிக்கிறேன். நீயல்ல! நீயல்ல என்று. முடிந்தவுடன் தன்னிரக்கம் மேலிட நொய்ந்த குறியையும், விரையையும் அழுத்திப்பற்றிக் கதறுகிறேன். உண்மையில் உங்களுக்கு என்னதான் வேண்டும். எவ்வளவு வடித்தாலும் நிரம்பாப் பிலங்களை நான் அதன் பிறகான கனவுகளில் கண்டு விதிர்த்துக் கொண்டிருந்தேன். சின்ன முக அசைவுகளில், சிணுங்கல்களில், உடல் நெளிவுகளில் நான் முடிவெடுத்துக் கொள்கிறேன். ஆம்! ஆம்! இது காமம். அவளது அழைப்பு இது என்று. என்னுள் எம்பக் காத்திருக்கிறான். இந்த முகம். இல்லை அந்த முகம். முகங்கள் தன்னுள் தான் அமிழ்ந்து முடிவிலியில் பிரதிபலித்து, முகங்கள் மட்டுமேயான விராட உருவமெடுக்கிறது. அங்கு பெண்ணுடல்கள் நொதித்துக் கொண்டே இருக்கும் குழியில் நான் தனித்து விடப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
என்னுள் கேள்விகள் எழுப்புகிறேன். இது என்ன வகையானத் தன்மை என்பதை பிரித்தறியவே முடியவில்லை. இது ஒரு ஈடிபஸ் காம்ப்ளக்சா? உன் சகோதரிகளை நீ எங்கனம் உணர்கிறாய்? அப்படி சகோதரிகள் இருந்திருந்தால் உனது காமம் அவர்களை நோக்காமல் விட்டு விடுமா? உண்மையில் இதனுள் செல்லச் செல்ல குறியை அறுத்து விடலாமா? என்று விடலைத்தனமான எண்ணம் தோன்றாமலில்லை. ஒரு ஆண் பெண்ணுடலைப் புரிந்து கொள்ளுதல் என்பது சாத்தியமில்லாத தூரத்தில் கோடிடப்பட்ட எல்லைக் கோட்டைத் தாண்டிய எதிரொலிகள் மட்டுமே இறைந்து கிடக்கும் அகாலப் பெருவெளியாய், விடாமல் என் கருஞ்சுவர்களில் பட்டுத் தெறித்துக் கொண்டே இருக்கிறது.
தெருவில் நாய்கள் புணர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தவுடன், சே! எத்தனை எளிதான விசயம். காற்று நிரம்பிய பலூனைப் போலவோ, இல்லை கனத்த ஈயக் குண்டைப் போலவோ அகம் மாறி மாறி ஒளிந்தும், வெளிப்பட்டும் போக்கு காட்டுகிறது. அது ஒரு ஊளையாக மாறிடும் போது, அந்த மெல்லியத் துளைகளை இடைவிடாது முட்டி மோதிக் கொண்டே இருக்கிறேன். அவர்களது முகங்கள் என்னை அலைக்கழிக்க அங்கு காத்துக் கொண்டிருக்கிறது. சபலங்களின் ஒவ்வொரு படிகளிலும் நான் தேடும் முகம் ஒன்றேதான் என்பது சில நேரங்களில், குளத்தின் நீரலைகளில், தலைதூக்கி முழுகும் நீர்க்காகத்தைப் போல மின்னி மறைந்து விடுகிறது. பின் நான் முகங்களுக்காக அலையவில்லையோ, எனக்குத் தேவையானது வெறும் உடல்தானோ என்று, ஆபாசப்படங்களுள் கட்டின்றி புணர்ந்து கொண்டே இருக்கிறேன்.
இந்தக் கற்பனையின் துர் கனவுகளில், அவையெல்லாம் என் எண்ணங்களின் கரைந்து கொண்டிருக்கும் பகல் கனவுகள் தான் என்பதை நான் என்று அறியப் போகிறேன். சபலங்கள் திரைப்படிந்த கண்களின் வழி பெண்களை அணுகுகையில், அதே போல ஒரு திரைதான் எதிராளியிடமும் இருக்கும் போல என்று எல்லவற்றையும் எளிதாக்கிக் கொள்ள பிரயத்தனப்படுகிறேன். உண்மையில் இந்த மூடுதிரைக்கு அப்பால் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எத்தனை பெண்களை ஒரு ஆண் தன் பகற்கனவுகளில் வடித்துக் கொண்டேயிருக்கிறான். விடையே இல்லாத புதிர்க்கணக்கு.
எத்தனை முகங்களைக் கண்டாலும் இன்னும் ஒன்று என்று ஆவலுடன் காத்துக்கொண்டிருகிறேன். அது என்னுடையதாக இருக்கும் என்று நம்பிக்கையில். அங்கு நான் முகங்களைக் கண்டறியப் போவதில்லை. ஏன்? என்னால் எதையுமே தேர்ந்தெடுக்க முடியாது. மெல்லியத் துளை வழி நான் கண்டறியப் போகும் ஒரு முகம் என்னை உள்ளீடற்றதாய் மாற்றும் தருணம், நான் எதிர்பாரா அந்தக் கணம். அவள் தன் ராட்சச உகிர்களால் என்னை முழுதும் கிழித்துக் குடிக்கையில், நான் அறிந்திருக்கக் கூடுமா? இல்லை இன்னும் முடிவிலி முகங்கள் எனக்காகக் காத்திருக்கின்றனவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக