ஞாயிறு, 18 நவம்பர், 2018

கிறுஸ்துவின் கடைச் சபலம் 5

அவர்கள் பன்னிருவர் இருந்தனர். ஒவ்வொருவரையும் தனித்தனியே நோக்கினான். சுற்றிலும் பெரும் பாலை நிலம். வானம் தாய் மிருகத்தின் அடிவயிறு போல சுருங்கி விரிந்து மூச்சிழைத்தது. அதன் நீலத் துணுக்குகளில் வெண்ணிற முடிக் கற்றைகள் போல விண்மீன்கள் சுருண்டிருந்தது. அவர்களின் இருப்பு அந்த இருள் நதியினுள் உதிர்ந்து விழுந்த இலைக் கற்றைகள் போல சலனமின்றி அலையாடியது. குழப்பத்துடன் அவர்கள் ஒவ்வொருவரையும் தொட்டு மீள்கையில் அவனது உறுதிப்பாடு அவர்களிடையில் கடத்தப்பட்டது. ஒரு பெரிய சிலையின் பூதாகர உறுப்புகள் போல அவர்கள் இருந்தனர். ஆனால் தனித்தனியே அவர்கள் நதியினுள் சலனமின்றி பாசி பீடித்து உறங்கிக் கிடக்கும் பாறைகள் போல எண்ணங்களே இன்றி இருந்திருக்கக் கூடும். தங்களுக்குள் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் அறிந்திருந்தனர். செந்தாடிக் காரனின் சொற்கள் எண்ணங்களாய் உருமாறும் முன்னரே அவர்கள் உணர்ந்தனர். அமைதியாக அவன் வழி நடப்பதையே அவர்களும் விரும்பினர். இருந்தும் அவர்கள் தியாகத்தை அஞ்சினர். மரணம் என்றும் தியாகமாவதில்லை. அதன் இறுதிச் சொல் நிச்சயம் வன்மத்துடன் தான் இருக்க முடியும். யாதொரு மனிதனும் தியாகத்தின் பொருட்டு தன்னை முழுக்க ஒப்புக் கொடுத்திட முடியாது என்றே நம்பினர். ஆனால் அவர்கள் ஒற்றை உடலாக ஆகுகையில் எதனையும் செய்யும் ஒரு இயந்திர பாவம் அவர்களுள் உருவாகி விடுகிறது. அதன் பின் எதன் முன்னும் முட்டி மோதி அவர்கள் நகர்ந்து கொண்டே இருப்பர். கடவுளர்களின் சொற்களால் வழி நடத்தப்படுவதாகவே அவர்கள் முழுக்க நம்பினர். நம்பிக்கையின் பேரில் நம்பிக்கை கொண்டனர். அதனால் கொலைகள் மானுடத் தூய்மையை நோக்கியே எனும் பெரும் லட்சியத்தின் முன் அவர்கள் அதன் கருவிகளாக தங்கள் கடமையை செய்வதாகவும் தங்களுக்கு மீட்பு உண்டு என்றும் உறுதி கொண்டனர்.

காலத்தின் நிழலில் சர்ப்பம் போல நெளிந்து தலைகீழாகியது காட்சிகள். கனவும் அல்லாததும் குழம்பிய சேற்று வண்டலாய் சொத சொதத்துக் கிடந்தது.

யாரை ஏமாற்றுகிறாய். நீ! அந்த இறவாப் பேறுடைய ஆப்ரகாமின் மைந்தன். நீதானே! பயத்தினை ஒழித்தவன். தீமை அண்டாத தூயன். கருணை உருவாய் ஆனவன். வெற்றுப் பிண்டங்கள். உன் நல்லொழுக்கங்களை குப்பையில் வீசியெறி. அண்டிப்பிழைக்கும் அற்பக் கூட்டங்களே. சுயமில்லாத முதுகற்ற புழுக்களே.

ஓ! நீ! மத்தேயுவின் புத்திரனல்லவா! சந்தைக் கடைகளில் தேவனின் ராஜ்ஜியத்தை விற்றுக் கொண்டிருக்கிறீர்களே. உங்களுக்கு வெறும் பொருள் தானே அவன்.

கடவுளர்கள் உங்கள் கிடங்குகளில் ஊற வைக்கப்பட்டிருக்கும் போதை ரசம். உங்களின் இன்பக் களியாடல்களில் அவர்களை இருத்தி வியாபாரம் செய்து கொள்வீர்கள். ஜெகோவாவை அறிவீர்களா நீங்கள்? அவனது குகைக்கருகில் செல்லும் தைரியம் உண்டா உங்களுக்கு? உங்களது சொற்களுக்குள் அவரது பெயர்கள் எத்தகைய விலையைப் பெறுகின்றன.

உன் அகங்காரத்தையும் வன்மத்தையும் உன் முட்டாள் தனங்களையும் கொண்டு நீ வரைந்த உன் ஆடிப்பிம்பம் உன் கடவுள். அதன் முன் உன்குறைகளை மண்டியிட்டு அழு.

தெருவெங்கும் ஓடுகிறது, பலிபீடங்களிலிருந்து சிதறிதெறிக்கும் அடர் குருதி. ஆம். அவனது சொந்தக் குருதி. அவர்களிடமிருந்து பறித்ததைக் கொண்டு அவர்களுக்கு உதவுங்கள். தயாளர்களே! இந்த நன்மைகளின், அன்பின் விசுவாசத்தின் ஆன்ம தியாகத்தின் ஒவ்வோர் துளிகளையும்... தேவா! உன் நாமத்தால்...

உன் நாமமே! எங்களுக்கு கிடைத்த கொலைக் கூர் வாள்.

மறுமையின் காரியங்களை செய்து கொண்டிருக்கும் துர் நாற்றம் அண்டிய செல்வக் கிடங்குகளில். கால்கள் இறுக்க கண்ணிகளால் கட்டப்பட்டு விலைப்பட்டியல் இடப்பட்டு தலை கீழாக தொங்க விடப்பட்டிருக்கும் கடவுளர்களின் இறைச்சியைக் கண்டிருக்கிறேன். நீ காறி உமிழவும் மலம் கழிக்கவும் அமைக்கப்பட்ட கூடாரங்களில் தன்னந்தனியே அகப்பட்டுக் கிடக்கும் அந்த அனாதரவான கடவுளை நான் அறிவேன். உனது சொந்த நியாயங்களுக்கும் காரியங்களுக்கும் உன்னுடன் புணர்ந்து கொள்ள ஒரு உருவம் கிடைத்தே விட்டது. உனது வன்மங்களின் சபலங்களின் நிமித்தத்தின் பொருட்டு நீ தேடிக் கிடைக்கும் கீழ்மைகளின் சிக்கல்களுக்கு வழியமைத்துக் கொடுக்கவும் ஒரு உருவம். கால பேதமற்ற ஒன்றை நீ உனக்காகவெ உருவாக்கிக் கொண்டாய். மரணக்கிழியின் அனத்தத்தில் நான் உன்னை சந்த்திப்பேன். அதுவே உன்னிடம் நான் பகிர்ந்து ஏதேனும் உள்ள ஒரு இடம். கால் கைகள் முடுக்கி வெறும் பிண்டமாய்க் கிடக்கும் அது நீதானா? உனக்கு பெயருண்டா? மதிப்புண்டா? இருப்பு ஏதெனுமுண்டா? நீ யார்? நாற்றம். நாற்றம். மறுமையின் வருகையில் அழுகிக் கொண்டிருக்கிறது. ஆசிர்வதிக்கப்பட்ட மறுமை.


பன்னிருவர்களும் வார்த்தைகளின்றி இருந்தனர். தங்கள் முன் நிற்கும் தலைவனின் ஒவ்வொரு அலைக்கழிதலும் நீரலை போல அதிர்வுற்று அதிர்வுற்று அவர்கள் ஒவ்வோர் உடல் கணுக்களிலும் நெளியத் தொடங்கியது.

-The Last Temptation of Christ -Nikos Kazantzakis


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக