சனி, 8 மே, 2021

கணியான்

எட்டு முட்டைகளிலிருந்து பிறந்த கதை தெரியுமா? 



பகலின் வெளிச்சம் நீரினுள் அமிழ்ந்து மெல்ல  மழை இரவு முகிழ்ந்து ததும்பியது. இருள் காயல் கடவம் போல அளைந்து அளைந்து அருகில் வருவதுமாய் போவதுமாய் போக்கு காட்டியது. அமைதியற்று காற்று ஒரு சீறிய உறுமலுடன் கடந்து சென்றது. விளையின் ஆலமரக் கிளைகளில் பல்லாயிரம் கூவல். கூடணைந்த பின்னும் அமைதியற்று அலைக்கழியும் சப்தங்களின் தூறல். மெல்லிதாய் தொடங்கி வலுக்க ஆரம்பித்தது மழை.  சுடலை கால் மாற்றி நின்று கொண்டிருந்தான். ஆறு அடிப் பீடத்தின் அடித்தூர் சிறிது இளகி இருந்தது. வெள்ளிக்கிழமை ஆரத்தின் நார் மட்டும் தொங்கிக் கிடந்தது. முதுகில் ஆடு பற்றி ஏறிப் பிறாண்டிய நீள் கோட்டுப் புண் பொருக்கு உடைந்து பழுத்திருக்கும் போல. சற்று சாய்ந்தவாறு இருந்தது பீடம். 


அண்ணாவியின் இழுப்பிற்கேற்ப மகுடம் இரண்டும்  உச்சியேறி இறங்கி பிளிறியது. பெண் கணியான்கள் இருவரும் பீடத்திற்கு இங்கும் அங்குமாய் ஓடி ஆடிக் கொண்டிருந்தனர். 


நாக முட்டைகள் மழைக்கால இரவில் பொரிந்திருந்தது. மொத்தம் எட்டு. நல்ல பாம்புக்குட்டிகள். எட்டும் விஷப்பல் தூக்கி எதிர்வரும் அனைத்தையும் கொத்தும் பாங்குடன் நெளிந்து மொலு மொலுத்தன. விஷம் தோய்ந்த அவைகள் நீலம் மின்னும் கண்களுடன் திசை எட்டும் நோக்கி சென்றன. ஆதி விளைவு என்பது பிழைத்திருத்தல். அதற்கு அவை தன் நாக்கு தீண்டிய அனைத்தையும் விஷம் தோய்த்து விழுங்கின. அஷ்ட திக்கிலிமிருக்கும் அனைத்தையும் விழுங்கிய நாகங்கள் தன் சந்ததிகளை வானம் பூமி பாதாளம் என அனைத்திலும் விரித்துப் பரப்பின. அவைகள் நெளிந்த பிரதேசங்கள் அனைத்தும் நாகங்கள் ஆயின. நீலம் நிரம்பிய தன் அமிர்தத்தை அனைத்திற்குமாய் விளம்பின. நாகங்கள் மட்டுமே வாழும் உலகில் நாகங்கள் தவிர்த்த அனைத்தும் அவைகளுக்கு உணவாயின. எட்டு பதினெட்டாய் பல கோடி முட்டைகளாய் பலப் பல கோடி நாகக் குஞ்சுகளாய் வியாபித்திருக்க ஏனைய உயிர்கள் அனைத்தும் இடமின்றி தவித்தன. ஒரு சமயம் மற்ற அனைத்து உயிர்களும் அழிந்து போக,  நாகங்கள் தங்களைத் தாங்களே உண்ணத் தொடங்கின. அவைகள் மீண்டும் மீண்டும் பிறந்து தங்கள் வாலைத் தானே உண்டு தன்னையே அழித்துக் கொண்டிருந்தன. 


இறுதியில்

எட்டு நாகங்கள் மட்டுமே மீண்டன.  அவைகள் ஒரு வளையம் போல ஒன்று மற்றொன்றை விழுங்கத் துரத்தின .  திக்கிற்கு ஒன்று என அவைகள் உருண்டன. உருள உருள அவைகள் சூழலை உருவாக்கின. பிரபஞ்சம் முழுதும் அச்சுழலில் அடங்கியது. சுழற்சியினால் உருவாகிய அலைகள் காலத்தை உருவாக்கின. காலம் ஸ்தூலத்தை தொட்டு மீண்டன. உயிர்கள் அதன் ஸ்தூல இருப்பில் துளிர் விட்டன. பல்கிப் பெருகின. பல்லாயிரம் காத தூரம் காலம் என நிறுத்த வழியின்றி அவைகள் துரத்திக் கொண்டே இருக்கின்றன. அந்நாகங்களே  நம் மூதாதை. அவர்களே காலத்தை அறிந்தனர். உருவாக்கினர். அவைகள் காளிகள் என்று வழிப்படலாயினர். காலத்தை உண்ட காளிகள். 


அஷ்ட காளிகள். 

முத்துக்காளி 

முப்பிடாதி 

பிடாரி 

பன்றி மாடத்தி  

வண்டி மலச்சி 

வடக்குவாச்செல்வி 

சந்தன மாரி 

மாகாளி  


எட்டு காளிக்கு காவலாம் மாடன்.அந்த மாடனுக்கு ஊட்டு எடுக்க வந்தவனாம் இந்த கணியான்.


என் குருதி தொட்டு அவனுக்க படையல நான் தான் விரவிக் கொடுக்கணும். அப்பத்தான் அவன் திம்பான். இல்லைனா படையல வீசியெறிவான்.அது வாதைகளுக்கு வாய்க்கரிசியாகும்.

அப்புறம் எல்லாம் கட்ட மண்ணா ஆகும். அஷ்ட காளிமார் கொதிப்பாங்க.


ஊரு தாங்குமா. நாடு தாங்குமா. எங்கய்யா மாடா வந்து ஊட்டத் தின்னும் யா!


கணியான் நாக்கிலிருந்து குருதி கூட்டி வெந்த சோறு சூலாடு சூல்ப்பன்றி பப்படம் நெய் கமக்கும் படையலில் சொட்டினான். ஒரு மிருக லயத்துடன் மாடன் சோத்தினுள் மூங்கி எழுந்தான்.


திரும்ப மகுடம் முழங்கியது. கணியான் மாடனைத் தோள் பிடித்து தூக்கினாள். பீடத்தை சுற்றி கறங்கினர். வேதாள முகமூடி அணிவித்தனர். கதைப்பாடல் தொடர்ந்தது.


பூதங்களே வாதைகளே வா வா. பாதாள நாகங்களே வந்துருங்கோ. வந்து படையல் எடுங்கோ. எங்க மாடனுக்கு மக்கமாரே வாருங்கலே. சுற்றி நின்ற அனைவருமே நடுங்கிக் கொண்டிருந்தனர். நடுப் பீடத்தில் கிடா கட்டியிருந்ததது. சூரிக் கத்தி கொண்டு வேதாளம் அதன் ஈரக்குலையை உயிருடன் பிய்த்து எடுத்தது. ஊனும் ரத்தமும் வழிய மாடன் வாயில் திணித்தது. மிச்ச இறைச்சியை எட்டுத்திக்கிற்கும் வானிற்கும் பூமிக்குமாக வீசியெறிந்து அறைந்தது. தப்பட்டை  ஒரு குமுறல் போல தொடங்கி நடுங்கும் அதிர்வலைகளாய் புரண்டது.


அண்ணாவி உச்சஸ்தாயில் மந்திரம் ஓதினார். அவரது குரல் ஏதோ கான் மிருகத்தின் கேவல் போல மாடனின் பீடம் சுற்றி அலையாடியது.


கணியான் மாடனை ஏறிப்புணர்ந்தாள். உலுக்கி உலுக்கி பீடத்தின் நடுவில் ரத்தம் கக்கினாள். பின் மூர்ச்சையுற்று விழுந்தாள்.


கதைப்பாடல் உச்சஸ்தாயில் மாடன் மா இசக்கி கொன்ற கதை பாடியது. அவள் கருவறுத்த கதையை விளம்பியது. காளிப்புலையனின் தலை தனியாய் பிய்த்து மாடன் ஆடிய கதையை சொல்லி முடிக்கும் முன்னே கணியான் எழுந்து மாடனைத் தழுவினாள். மாடன் உக்கிரம் எழ அவள் கூந்தலைப் பற்றி எரி குண்டத்தில் வீசி எறிந்தான். 


எரிந்து கரியாய் மீந்த கணியான் திரும்பவும் மாடன் கதையைப் பாடினாள். அவள் கங்கு முழுதும் கனன்று கனன்று ஆடியது.


ஏ எங்கப்போ எனக்க மாடா எனக்க தெய்வமே எனக்க குலசாமியே 


இந்தா வாரேன் உனக்க குருதி குடுக்க  வாரேன் வந்து ஏத்துக்கோ என்னப்போ எனக்க காளி அம்மே! 


இந்தா வாரேன்!

புதன், 21 ஏப்ரல், 2021

எல்லாம் யோசிக்கும் வேளையில்

 ஈரம் ஊறிப் போன காகிதம்  காய்ந்து உடையும் பொழுது அதில் உள்ள எழுத்துக்களின் நீல மை பொடிந்து ஒன்றுமில்லாமலாவது போல 

அகத்தின் மொழி பொடிந்து போகிறது 

லாயக்கற்றவன் என்ற சொல் 

ஒரு சூழல் போல நாற்புறமும் சுழல்கிறது 

வேலை தொழில் திறமை சமயோஜிதம் எதுவுமற்ற ஜந்து என்னதான் செய்து விட முடியும். தன்னைத் தானே பிறாண்டிக் கொள்கிறது. 

சுயம் என்ற ஒன்று மொத்தமாக அழிந்து விட்டிருக்கிறது. அதற்குண்டான எந்த மதிப்புகளும் இல்லை. பேசுவதற்கும் கேட்பதற்கும் யாருமற்ற வெளியில் தனிமை ஒரு வன்மிருகம் போல பல்லிளிக்கிறது. அமைதியாக அதன் வாயினுள் தலையைக் கொடுத்து விட்டால் முடிந்தது. அது தன் கூர் நகங்களால் வயிற்று சதையைப் பிய்த்து  பெருங்குடல் சிறுகுடல்களைக் கிழித்து குருதி சொட்டச் சொட்டக் கடித்து விழுங்கவேண்டும். அந்த மிருகம் ஒரு காக்கையைப் போல இருப்பதை விரும்புகிறேன்.நடுச்சந்தியில் அடிவயிற்றிலிருந்து தன் கூர்மையான அலகினால் கிழித்து முழுவதும் விழுங்க இயலாமல் என்னை இழுத்துக் கொண்டே செல்ல வேண்டும். பல நூறு அலகுகளால் குத்திக் குத்தி குழிகள் மட்டுமே கொண்ட உடலாவதைப் பற்றி யோசித்தேன்.

ஒரு சமயம் நான் எனும் இருப்பின் எந்த பயனுமற்ற தன்மையினை வைத்துக் கொண்டு சின்னஞ்சிறிய குகையின் நாற்புறமும் தலை தெறிக்க ஓடிக் கொண்டிருப்பேன். மறு சமயம் அதன் புனிதத் தன்மையினைப் பற்றிய பைசாசக் கதைகளை புனைந்து ஏமாற்றிக் கொள்வேன். 


தனக்குத்தானே பொய் சொல்லிக் கொண்டிருப்பேன். தன் சொந்தப்பொய்களால் தன்னையே ஏமாற்றிக் கொள்ளும் விசித்திர உயிரி. ஆனால் மொழி தவிர வேறொன்றையும் வரிக்கத் தெரியவில்லையெனில் மொழியின் பிம்பங்களின் பிம்பங்களுக்குள் மூட்டைப்பூச்சி போல ஊறுகிறது. அது குடித்துக் கொண்டிருப்பது சொந்தக் குருதி. சுவரெங்கும் திட்டுக்கள். அழுத்தி அழுத்தி நசித்து தேய்த்த தீற்றல்கள். 

தீற்றல்களிலிருந்து நொதிக்கும் அதன் உடலின் மணம். அது மறைக்கத் தவறிய ரகசியங்களின் ஒரு சொல் உயிர்த்தெழுகிறது. 

சொற்களைப் பற்றிக் கொள்ளலாம். அதன் வழி தவறிய பாதைகளில் அமைதியற்று உழலும் ஒரு கிறுக்கு மனம் எதையுமே முழுதாய் முடிக்க முடியாமல்,  அதன் வழி பற்றிய பிரஞ்சையும் இல்லாமல் பிதற்றத் தொடங்குகிறது. 


லாயக்கற்றவன் எதற்கும் லாயக்கற்றவன்.


"எல்லாம் யோசிக்கும் வேளையில் 

உண்பதும் உறங்குவதுமாய் முடியும்"


-தாயுமானவன்

தடம்

 வானத்துப் பறவையின் 

கால்தடங்களின் அருகில் 

மனித செருப்புத் தடங்கள் 

ஒருமித்து பறக்கத் துணிந்த

இரு பறவைகளின் இறகுகள் 

மின்சாரக் கம்பியின் இடையில் 

படபடக்கிறது 

மழைத் தூவுகிறது 

சொட்டுச்சொட்டாய் 

பின் பிளிறலாய் 

நனைந்த இறகுகள் மண்ணில் பதிந்து கிடக்கிறது 

வானம் மிக அருகில் கேவுகிறது 

தடங்கள் அழிந்த பாதை வழி 

வழிந்தோடுகிறது 

என்றென்றைக்குமான 

மழையின் நீர்மை

ரமலான் கரீம்

 பசியை ஒறுத்தல் அல்லது உணர்தல் 


நிச்சயமாக இறைவனின் உருவம் பசியாகத் தான் இருக்க வேண்டும்.  இந்த மாதம் அதற்காகத் தருவிக்கப்பட்டது. இறைவனின் ஆசிர்வதிக்கப்பட்ட மாதம். ஒரு முழு நாளும் பசி பசி என்று அதை மட்டுமே நினைத்திருத்தல். தனித்தும் விழித்தும் அதனை மட்டுமே ஸ்தூலமாக அறிதல். உடல் அதன் ஒவ்வொரு செல்லிலும் இடைவிடாது துடித்துக் கொண்டிருக்கும் ஆதி விளைவை மிக நுண்மையாக உணர முயல்வது. அது இறைவனை அறிதலைத் தவிர வேறென்ன. அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஒரு உணர்வை வலியை சாசுவதமாகவும் அமைதியாகவும் உணர்தல். தன் தனிமையில் தான் மட்டுமே தன்னுடைய எல்லாம் என்றும் உடலை இன்னும் அணுக்கமாக அறிந்திருத்தல். மற்றும் தான் என்பது அனைத்தும் என்பதை அறிவது. காலம் என்பது பசியாக உருமாறி எதிரே அமர்ந்திருக்கும். இறை என்பதும் அதுதானே. 


பசி எனும் சொல்லின் விளைவை ஒரு தூய  மிருகம் போல உணர்ந்து கொள்ளும் பொழுதே அதனை சிறுகச்சிறுக உடலின் ஒரு உறுப்பு போல இக்காலத்தில் அமைத்துக் கொள்வோம். அதன் வலியை அறிவோம். ஒவ்வொரு முறை உண்ணும் பொழுதும் நன்றி சொல்வோம். பிரார்த்திப்போம். 


பசியே இறைவன். அவனை பாசாங்கின்றி வணங்குவோம். 


ரமலான் கரீம்

சமூகத் தேவையற்ற உடல்

 வாழ்க்கை அதன் லயத்தில் எந்த சாரமுமற்றது. எந்த பயனும் அதற்கில்லை. தன்னளவில் அது நகர்வது கூட காலம் எனும் அடிப்படையை அதற்கு நாம் உருவாக்கி வைத்திருப்பதினால் தான். காலமற்ற ஒன்றில் வாழ்க்கை என்று நாம் தீர்மானிக்கும் இல்லை வரையறுக்க முயலும் ஒன்றிற்கும் எந்த அர்த்தமும் இல்லை. அப்படியென்றால் நாம் ஏன் வாழ்கிறோம். வாழ்வின் மேல் நமக்கேன் இவ்வளவு பற்று. நாம் ஏன் அதனை ஒரு ஸ்தூலமான இருப்பு போல உணர்கிறோம். அதற்கான அர்த்தங்களை ஏற்படுத்திக் கொள்கிறோம். செயல் மூலம் அதனை மதிப்பிழக்காமல் பார்த்துக் கொள்வது போல நம்புகிறோம். பலதரப்பட்ட பாவனைகள் மூலம் அதனை அர்த்தமாக்குகிறோம். உறவுகள் வழி நம் சந்ததிகள் வழி அதனை ஒரு தொடர்ச்சியாக்கிக் கொள்ள நாம் நினைக்கிறோம்.  இங்கு நான் எனும் தன்னிருப்பு தன் வாழ்வு என்பது இதுவரை உருவாக்கியிருந்ததை ஒத்தே அமையப் போகிறது என்பதிலுள்ள ஏமாற்றத்தில் சாரமற்ற தன்மையை அறிகிறேன். அது இது நாள் வரை நான் அடித்துச் செல்லப்பட்ட அனைத்தையும் இணைத்த ஒரு வடிவமே நான் என  வரையறுக்கிறது. அது இத்தனை நாட்கள் நான் என நான் அமைத்துக் கொள்ள ஏற்படுத்திய பல்வேறு உருவகங்களின் பாவனைகளின் ஒரு  தோற்றம். உண்மையில் அதனுள் மறைத்துக் கொண்டிருக்கும் என்னிருப்பு ஒரு சமூக உயிரியாய் கூட இல்லாமலிருக்கலாம். 


அப்படியென்றால் அர்த்தப்படுத்துதல் அல்ல. அடையாளமே பிரச்சனை. நான் என்று பொதுவில் அடையாளப்படும் தன்னிலை. அதற்கு சாராம்சமான நம் செயல்களின் நான் என இதுவரை விட்டுச்சென்ற கடந்த கால பாவனைகளின் சாயல்கள் மற்றும் உறவு கொள்ளுதல். சக உயிர்களுடனும் உயிரற்ற பொருட்களுடனும் இதுவரையிலான உறவாடுதல்களின் தொகுப்பிலிருந்து உருவாக்கப்பட்ட நான் எனும் இருப்பு பற்றிய அடையாளம்.அதன் மதிப்புணர்தல். அதன் மூலம் இச்சமூகத்தில் எனக்கான நிலை உணர்தல் அல்லது ஸ்தாபித்தல். அதன் மேன்மை கீழ்மைகளைக் கொண்டும் தொழில் மற்றும் ஜாதி இன்னபிற சமூகத் தொகுப்புகளின் மூலம் இன்னார் என வரையறுத்தல். வாழ்தலின் பொருட்டு எனும் முதல் கேள்வியிலிருந்து அடையாளம் எனும் இரண்டாம் கேள்வியினுள் வரும்பொழுது சமூகம் அற்ற ஒரு தனித்த வாழ் நிலையைப் பற்றி யோசிக்கிறேன். எந்த விதத்திலும் கட்டுப்பாடுகளற்ற சுய சிந்தனையுடன் தன்னிலை என்பதை தொகுத்துக் கொள்வதிலும்,  உறவாடுதல் என்பது ஒரு நிலைத்தன்மையற்ற திரவ வடிவிலான ஒரு அமைப்பாய் இருப்பதில் இருக்கும் அனுகூலத்தைப் பற்றியும் நினைக்கிறேன். அதன் மூலம் எதுவும் ஸ்தாபிக்க அவசியமற்றுப் போகிறது. உறவுகளும் அந்தந்த காலத்தின் நிலையே அன்றி அதுவே கடைசி வரை அப்படியே அவர்களைக் கட்டுக்குள் வைக்கும் ஒரு அமைப்பாக ஆகாமல் பார்த்துக் கொள்வது. ஒவ்வொரு தனிமனிதனுக்குமான ஒரு தனித்த அவனுக்கு விருப்பமான வாழ்வினை அவனை  அமைத்துக் கொள்ள விடுதல். அதற்கு தடையாக இருக்கும் சமூக உறவாடுதல்,  தேவைகள்,  காதல்,  அன்பு,  பாசம்,  இன்ன பிற அனைத்தையும் ஒத்திப்போடுதல். அது அத்தனிமனிதனின் சுய விருப்பாக அன்றி கட்டாயமாக்கப் படாமல் இருத்தல். அத்தகைய மனிதன் தனக்கானதை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை அமைத்துக் கொடுத்தலே ஒரு சமூகத்தின் கூட்டுப்பயனாக இருக்க வேண்டும். தன்னளவில் கட்டுகளற்ற வாய்ப்புகளைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரமுள்ள மனிதன் நிறைவாக முயல்வான் என்று நம்புகிறேன். அவனது தேடல் நிச்சயமாக ஆதியில் உடலை மையப்படுத்தியே அமைய முயலும். உடல் கொண்டே அவன் அனைத்தையும் அறிய முற்படுவான். உயிர்களை இன்னும் இன்னும் என தன்னுடல் மூலமே அணுக்கமாக அணுகி அறிவான். உடலை நேசிக்கும் பண்பே சக உடல்களை அடையாளம் துறந்து நேசிக்கும். அடையாளமற்ற மனிதம் மேன்மை கீழ்மைகளிலிருந்து நகர்ந்து ஒரு மாபெரும் ஒற்றை உடலாக தன் அறிதலை நகர்த்தும். அங்கும் அனைத்து உயிர்களுக்குமான சுதந்திரத் தன்மையே முதன்மையான விளைவு. 


சமூகத் தேவையற்ற உடலை அடையும் விளைவு. அது தன்னளவில் பூர்த்தியாகும் ஒரு மேலான ஒன்றை பற்றி கனவு காண்கிறேன். 


சாரமற்ற ஒன்றிலிருந்தே அது சாத்தியப்படும். பயனற்ற அதன் தன்னிலையே அனைத்திற்குமான வித்து.


சோர்பாவின் நடனத்தை திரும்பவும் ஆடுகிறேன். நிச்சயமாகத் தனியாகத்தான்.

தன்னிலை என்பது ஒரு விடுதலையான தூய மிருகம். அது இந்த அத்துவான வெளியில் தனியே சுகிக்கிறது. தன் தன்னந்தனிமையை சமூகத் தேவையற்றதாய் ஆக்கிக் கொள்ள விளைவதால்!



#zorbathegreek

#NikosKazantzakis

அப்பழுக்கின் தீர்வின்மை

 இருமையை உருவாக்கி அதனை மோத விடுவதன் மூலம் மேலான அப்பழுக்கற்ற புனிதத்தின் வழி நேர்மை குணத்தை கடைத்தேற்ற முயல்கையில் உருவாகும் ஊசலாட்டம். புனிதத் தன்மையில் இயற்கையாவாகவே இருக்கும் ஒவ்வாமை மற்றும் வலுக்கட்டாயமாக தனக்குத் தானே உண்மையற்று நடந்து கொள்ளுதல். மனிதன் எனும் ஆதி மிருகத்தின் கட்டற்ற தன்மை. எதிரிடைகளை ஆழமாக பற்றிக் கொள்வது. குற்றத்தின் ஈர்ப்பின் பால் உள்ள அலைக்கழிப்பு.  ஒரே நேரம் ஒன்றிற்கு மேற்பட்ட நியாயங்களை அதற்காக உருவாக்கிக் கொள்வது. அதை நிரூபிக்க முயலும் தோறும் அதிலிருந்து நழுவி ஆன்மீகத்தை கிறிஸ்துவை அதற்கு தீர்வாக்கிக் கொள்ள.  அதன் குணாதீசியமான பாவ மன்னிப்புக் கொள்கையை பயன்படுத்திக் கொள்ளுதல். அதே நேரம்  கடவுளே நிராதரவாக ஒரு அனாதைப்பிணமாய்க் கிடப்பதைக் காணுதல்.  எந்த தர்க்க ஒழுங்குமில்லாத வாழ்வின் புதிர்களில் எல்லாமே அனுமதிக்கப்பட்டதே என்று பிதற்றிக் கொண்டே கொலை மற்றும் துன்புறுத்துதலை ஒரு புறம் ஏற்றுக் கொள்ளுதலும் மறு புறம் அதற்காக சொந்த உடலைத் தண்டனைக்குள்ளாக்குதல். அனைத்து போகங்களுக்குள்ளும் திளைத்தல்.  தற்செயலிற்குள் வாழ்வை பணயம் வைத்தல். எல்லாக் கீழ்மையினையும் வலுக்க வரித்துக் கொண்டு அதன் மூலமாய் நான் மிகக் கீழ்மையானவன் என்று தம்பட்டம் அடித்து பரிதாபத்தை அடைய முயற்சிக்கும் கோமாளித்தன்மை. 


எல்லாவற்றிற்கும் தீர்வான புனிதத் தன்மையிடமும் காறி உமிழ்ந்து செல்வது.  பின் அதற்கும் சேர்த்து தன்னுடலையே தண்டனைப் பொருளாக பலி பீடத்தில் வைத்தல். சில சமயம் இது ஒரு விளையாட்டு போல ஒரு மிகை உணர்ச்சியாய் ஆக்கிக் கொண்டும் பின் அதனையே மூர்க்கமாக வரித்துக் கொண்டு அதன் இறுதி எல்லை வரை சென்று தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளுதல். 


கரமசோவ் 

ரோகோஸின் 

லெபதேவ் 

மர்மத்லோவ் 

இவால்ஜின் 

டிமிட்ரி 

இவான் 

ஸ்மர்த்தியோகோவ் 

ஸ்வட்ரிலிகோவ் 

ரஸ்கொல்நிகாஃப் 

இப்போலிட் 

கன்யா 


இந்த கதாபாத்திரங்கள் போல நாமும் இருக்கிறோம். நிச்சயமாக இந்த பிறழ்வுகளுக்குள் நாம் திளைக்கிறோம். திளைத்துக் கொண்டே இருக்க விரும்புகிறோம். நம் நாடிகளில் இவர்களை ஓட விடும் நுட்பம் தஸ்தாயெவ்ஸ்கிக்கு தெரிந்திருக்கிறது. 


நம்மை அவர் கடைத்தேற்ற முயல்கிறார். புனிதத்தை தீர்வாக்க முயல்கிறார். அந்த பாவப்பட்ட கிறிஸ்துவை அதற்காக அழைக்கிறார். ஆனால் ஜோஸிமாக் கிழவனின் பிணம் நாறுகிறது. தேவ மைந்தன் கந்தல் கந்தலாகக் கிடக்கிறான். எதற்கும் தீர்வில்லை என்று எக்களிக்கிறோம். 


அவரின் புனிதர்களின் அப்பழுக்கு அவருக்கும் நமக்கும் கூட எந்த தீர்வையும் தரவில்லை. 


தர விரும்பவுமில்லை. 



#dostoevsky

சனி, 10 ஏப்ரல், 2021

 பால்யத்திற்கு மட்டும் தெரிந்தவர்களின் மரணம்

நம் பால்யத்தையும் அதன் மூலம் நாம் காத்துக் கொள்ளும் காலத்தையும் குலைத்து விடுகிறது. திரும்பப் போக இயலாத அதன் ஊடு பாதைகளின் தடங்கள் அனைத்தும் மறந்து ஸ்தம்பித்து இன்று இப்பொழுது எனும் தண்டனைக்குள் போய் மாய்த்துக் கொள்ள வேண்டியதான். என் சொந்த தாய் மாமா, சித்தப்பா, மகாராச மாமா, இப்போது சக்கோட்டை கிருஷ்ண மாமா.
மாமா மார்களின் மரணங்கள் நம்முள் அதீத பதைபதைப்பை உருவாக்குவது ஏன்?
தெரியவில்லை. ஆனால் கண்ணியில் கோர்த்துக் கொள்வதைப் போல அவர்கள் ஒரே மாலையில் அமைகிறார்கள். தோற்றுப் போவதை வேண்டியே வரித்துக் கொண்டவர்கள். இருமைக்குள் நிச்சயம் அடங்காதவர்கள். வாழ்க்கை என்பதை சின்னஞ்சிறியதற்குள் அறிந்தவர்கள். ஒழுகினசேரி தவிர வேறு எல்லை ஒன்றையும் அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதோ இந்த ஊர் மக்கிக் கொண்டிருக்கிறது. இதன் வண்ணங்கள் முற்றாக வெளிர்ந்து விடும் தருணத்தை நோக்கி. இன்னும் கற்பகம் மாமா சந்தையிலிருந்து பை தூக்கிக் கொண்டு வருகிறார். பகவதி ஸ்டோர்ஸில் இன்னும் ஒரு பொடியன் மடக்கு வாங்க காத்திருக்கிறான். மகேஷ் சலூனில் இப்பவும் பெஞ்சில் ராணி புக் நடுப்பக்கம் பார்க்கலாம். அழகேசன் கடையில் பழ சர்பத்திற்காக அழுகிய பழங்கள் அவன் மிக்சிக்கு அடித்தட்டில் இருக்கும். நாடார் கடை செந்துளுவம் பழுத்து தொங்கும். பாய் கடையில் சமோசா காய்ந்து கொண்டே இருக்கும். செல்வம் டீஸ்டால் திண்டில் பாதி விழுங்கிய மிச்சம் day and night சிந்திக் கொண்டிருக்கலாம். பிகே பிள்ளை ஆசை மிட்டாய் ஸ்டாக் வைத்திருப்பார். குழுவக்குடி மாடனுக்கு வெள்ளிப்படையல் உண்டு. லூஸ் மேரி டி சர்ட் விற்கிறாள். தண்டவாளம் இருபுறமும் நிரம்ப மலத்தால் வழியும். பழையாற்று எதிர்க்கரையை பார்த்து இசக்கி இன்றும் சமிஞ்சை செய்வாள்.
மாமா மார்கள் வாழ்வது காலாதீதமான ஒரு ஒழுகினசேரியில்.
அங்கு நிறைய நிறைய பால்யத்தின் தீராத கனவுகளின் காலம் எப்பொழுதும் இருக்கும்.
மாமாக்களும்.

திங்கள், 5 ஏப்ரல், 2021

 Eli Eli Lama Sapacthani!

என் உடலும் ரத்தமும் உங்களுக்கு போதுமானது.
புசிப்பீர் குடிப்பீர் விடாய் தணியும் வரை.
பொருத்தமற்ற புன்னகையுடன் மறுபடியும் அந்த சொல்லை நினைவு கூர்ந்தான்
Lama sapachthani!
அடியாழம் காணவியலா பள்ளத்தாக்கில் விழுதலும் பின் எழுதலுமாய் ஆன ஊசலாட்டத்தில் நினைவு தப்பிக் கொண்டிருந்தது. வலி என்பது ஒரு மெல்லிய பதற்றம் போல தொடங்கி ஒரு கட்டத்தில் உடலின் நீக்க இயலாத உறுப்பு போல ஆகியிருந்தது. அதன் ஒவ்வொரு துடிப்புகளுக்கும் எதிர்ச்சொல் ஒன்று வெளியிலிருந்து உருவாகி நால் புறமும் ஒழுகி ஓடிக் கொண்டிருந்தது. அதன் சின்னஞ்சிறிய துகளில் கூட துடித்துக் கொண்டிருந்தது அந்த சொல். ஒரு எதிரொலி போல எனக்கு நானே என் குரலில் அதைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
என் முன் வியாபித்த நிலமெங்கும் திட்டுத் திட்டாய் மக்கள் கூட்டம். நான் தொங்கிக் கொண்டிருக்கும் என் சிலுவையின் அடியிலிருந்து ஒரு சிறிய குன்று போல அவர்கள் வீசியெறிந்த கற்களின் குவியல். அது ரத்தம் தோய்ந்து சிவந்த முகடு போல ஒளிர்ந்தது.
கோழை துரோகி கிறுக்கன்
சொற்களின் வசைகளின் இடையில் நான் வேறு எதையோ நோக்கினேன். வானம் வெளிர்ந்து ஏதுமற்றதுமாய் இன்னும் அடர்ந்த அமைதியுடன் இருந்தது. மேகங்களின் தீற்றல் அங்கொன்றும் இன்கொன்றுமாய் எதையோ மறைக்க எத்தனிக்கும் முயற்சியில் நகர்ந்தது.
எனக்கான கேள்விகளின் உகிர்கள் அழுத்த நான் திரும்பவும் நினைவு கூர்கிறேன். நான் யார்? என் ராஜ்ஜியம்? என் பிதா? என் மரியா? என் வலி? என் மக்கள்? கானல் நீர் சலசலப்பு போல எங்கோ தூரத்தில் அலையடித்தது?
என் பால்யத்தை என் இளமையை என் மேரியை என் பிள்ளைகளை என் பேரக்குழந்தைகளை. காட்சிப்பிழை போல எல்லாம் நகர்ந்து சென்றது. தலை முடி உதிர்ந்து நுரை ததும்பும் தாடியுடன் என்னைப் பார்த்தேன்.
என் சொற்களின் கண்ணியில் அகப்பட்டுக் கொண்டிருந்தேன். காதுகளில் ரீங்காரமிட்டது என் சொந்த சொல்லின் பிரசங்கம்.
என் விண்ணரசை உற்று நோக்கினேன். சாம்பல் பீடித்த கண்களுடன் இங்கிருந்து எட்டிப் பார்க்கும் என் பிள்ளைகளைப் பார்க்கிறேன். அணுக்கமாக அனைவரையும் அணைத்துக் கொண்டு அவர்களிடம் சொல்கிறேன்.
என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும்.
நீங்களே என் உப்பும் ஒளியும்
என் உடலைப் புசியுங்கள்.
என் குருதியைக் குடியுங்கள்.
அதற்காகவே அது தருவிக்கப்பட்டது. உங்கள் ஒவ்வொருவரின் பசியும் தாகமும் என்னால் மட்டுமே தீர்க்க முடிந்தது.
ஆம். நானே இப்பரலோகத்தின் தகப்பன். என்னை உண்டு உங்களில் விழுங்கிக் கொள்ளுங்கள்.
என்னிலிருந்து முளைக்கும் ஒவ்வொரு அணுக்களும் உங்களுக்கு நினைவுறுத்துவது ஒன்றே.
அமைதியுறுங்கள். இவ்வுலகில் அனைத்தையும் விட பசியே உண்மையானது. அவ்வுண்மையின் பொருட்டு என் உடலை அளிக்கிறேன்.
ஆம். இப்பொழுது அது நிறைவடைந்தது முற்றிலுமாக!