புதன், 21 ஏப்ரல், 2021

எல்லாம் யோசிக்கும் வேளையில்

 ஈரம் ஊறிப் போன காகிதம்  காய்ந்து உடையும் பொழுது அதில் உள்ள எழுத்துக்களின் நீல மை பொடிந்து ஒன்றுமில்லாமலாவது போல 

அகத்தின் மொழி பொடிந்து போகிறது 

லாயக்கற்றவன் என்ற சொல் 

ஒரு சூழல் போல நாற்புறமும் சுழல்கிறது 

வேலை தொழில் திறமை சமயோஜிதம் எதுவுமற்ற ஜந்து என்னதான் செய்து விட முடியும். தன்னைத் தானே பிறாண்டிக் கொள்கிறது. 

சுயம் என்ற ஒன்று மொத்தமாக அழிந்து விட்டிருக்கிறது. அதற்குண்டான எந்த மதிப்புகளும் இல்லை. பேசுவதற்கும் கேட்பதற்கும் யாருமற்ற வெளியில் தனிமை ஒரு வன்மிருகம் போல பல்லிளிக்கிறது. அமைதியாக அதன் வாயினுள் தலையைக் கொடுத்து விட்டால் முடிந்தது. அது தன் கூர் நகங்களால் வயிற்று சதையைப் பிய்த்து  பெருங்குடல் சிறுகுடல்களைக் கிழித்து குருதி சொட்டச் சொட்டக் கடித்து விழுங்கவேண்டும். அந்த மிருகம் ஒரு காக்கையைப் போல இருப்பதை விரும்புகிறேன்.நடுச்சந்தியில் அடிவயிற்றிலிருந்து தன் கூர்மையான அலகினால் கிழித்து முழுவதும் விழுங்க இயலாமல் என்னை இழுத்துக் கொண்டே செல்ல வேண்டும். பல நூறு அலகுகளால் குத்திக் குத்தி குழிகள் மட்டுமே கொண்ட உடலாவதைப் பற்றி யோசித்தேன்.

ஒரு சமயம் நான் எனும் இருப்பின் எந்த பயனுமற்ற தன்மையினை வைத்துக் கொண்டு சின்னஞ்சிறிய குகையின் நாற்புறமும் தலை தெறிக்க ஓடிக் கொண்டிருப்பேன். மறு சமயம் அதன் புனிதத் தன்மையினைப் பற்றிய பைசாசக் கதைகளை புனைந்து ஏமாற்றிக் கொள்வேன். 


தனக்குத்தானே பொய் சொல்லிக் கொண்டிருப்பேன். தன் சொந்தப்பொய்களால் தன்னையே ஏமாற்றிக் கொள்ளும் விசித்திர உயிரி. ஆனால் மொழி தவிர வேறொன்றையும் வரிக்கத் தெரியவில்லையெனில் மொழியின் பிம்பங்களின் பிம்பங்களுக்குள் மூட்டைப்பூச்சி போல ஊறுகிறது. அது குடித்துக் கொண்டிருப்பது சொந்தக் குருதி. சுவரெங்கும் திட்டுக்கள். அழுத்தி அழுத்தி நசித்து தேய்த்த தீற்றல்கள். 

தீற்றல்களிலிருந்து நொதிக்கும் அதன் உடலின் மணம். அது மறைக்கத் தவறிய ரகசியங்களின் ஒரு சொல் உயிர்த்தெழுகிறது. 

சொற்களைப் பற்றிக் கொள்ளலாம். அதன் வழி தவறிய பாதைகளில் அமைதியற்று உழலும் ஒரு கிறுக்கு மனம் எதையுமே முழுதாய் முடிக்க முடியாமல்,  அதன் வழி பற்றிய பிரஞ்சையும் இல்லாமல் பிதற்றத் தொடங்குகிறது. 


லாயக்கற்றவன் எதற்கும் லாயக்கற்றவன்.


"எல்லாம் யோசிக்கும் வேளையில் 

உண்பதும் உறங்குவதுமாய் முடியும்"


-தாயுமானவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக