புதன், 21 ஏப்ரல், 2021

சமூகத் தேவையற்ற உடல்

 வாழ்க்கை அதன் லயத்தில் எந்த சாரமுமற்றது. எந்த பயனும் அதற்கில்லை. தன்னளவில் அது நகர்வது கூட காலம் எனும் அடிப்படையை அதற்கு நாம் உருவாக்கி வைத்திருப்பதினால் தான். காலமற்ற ஒன்றில் வாழ்க்கை என்று நாம் தீர்மானிக்கும் இல்லை வரையறுக்க முயலும் ஒன்றிற்கும் எந்த அர்த்தமும் இல்லை. அப்படியென்றால் நாம் ஏன் வாழ்கிறோம். வாழ்வின் மேல் நமக்கேன் இவ்வளவு பற்று. நாம் ஏன் அதனை ஒரு ஸ்தூலமான இருப்பு போல உணர்கிறோம். அதற்கான அர்த்தங்களை ஏற்படுத்திக் கொள்கிறோம். செயல் மூலம் அதனை மதிப்பிழக்காமல் பார்த்துக் கொள்வது போல நம்புகிறோம். பலதரப்பட்ட பாவனைகள் மூலம் அதனை அர்த்தமாக்குகிறோம். உறவுகள் வழி நம் சந்ததிகள் வழி அதனை ஒரு தொடர்ச்சியாக்கிக் கொள்ள நாம் நினைக்கிறோம்.  இங்கு நான் எனும் தன்னிருப்பு தன் வாழ்வு என்பது இதுவரை உருவாக்கியிருந்ததை ஒத்தே அமையப் போகிறது என்பதிலுள்ள ஏமாற்றத்தில் சாரமற்ற தன்மையை அறிகிறேன். அது இது நாள் வரை நான் அடித்துச் செல்லப்பட்ட அனைத்தையும் இணைத்த ஒரு வடிவமே நான் என  வரையறுக்கிறது. அது இத்தனை நாட்கள் நான் என நான் அமைத்துக் கொள்ள ஏற்படுத்திய பல்வேறு உருவகங்களின் பாவனைகளின் ஒரு  தோற்றம். உண்மையில் அதனுள் மறைத்துக் கொண்டிருக்கும் என்னிருப்பு ஒரு சமூக உயிரியாய் கூட இல்லாமலிருக்கலாம். 


அப்படியென்றால் அர்த்தப்படுத்துதல் அல்ல. அடையாளமே பிரச்சனை. நான் என்று பொதுவில் அடையாளப்படும் தன்னிலை. அதற்கு சாராம்சமான நம் செயல்களின் நான் என இதுவரை விட்டுச்சென்ற கடந்த கால பாவனைகளின் சாயல்கள் மற்றும் உறவு கொள்ளுதல். சக உயிர்களுடனும் உயிரற்ற பொருட்களுடனும் இதுவரையிலான உறவாடுதல்களின் தொகுப்பிலிருந்து உருவாக்கப்பட்ட நான் எனும் இருப்பு பற்றிய அடையாளம்.அதன் மதிப்புணர்தல். அதன் மூலம் இச்சமூகத்தில் எனக்கான நிலை உணர்தல் அல்லது ஸ்தாபித்தல். அதன் மேன்மை கீழ்மைகளைக் கொண்டும் தொழில் மற்றும் ஜாதி இன்னபிற சமூகத் தொகுப்புகளின் மூலம் இன்னார் என வரையறுத்தல். வாழ்தலின் பொருட்டு எனும் முதல் கேள்வியிலிருந்து அடையாளம் எனும் இரண்டாம் கேள்வியினுள் வரும்பொழுது சமூகம் அற்ற ஒரு தனித்த வாழ் நிலையைப் பற்றி யோசிக்கிறேன். எந்த விதத்திலும் கட்டுப்பாடுகளற்ற சுய சிந்தனையுடன் தன்னிலை என்பதை தொகுத்துக் கொள்வதிலும்,  உறவாடுதல் என்பது ஒரு நிலைத்தன்மையற்ற திரவ வடிவிலான ஒரு அமைப்பாய் இருப்பதில் இருக்கும் அனுகூலத்தைப் பற்றியும் நினைக்கிறேன். அதன் மூலம் எதுவும் ஸ்தாபிக்க அவசியமற்றுப் போகிறது. உறவுகளும் அந்தந்த காலத்தின் நிலையே அன்றி அதுவே கடைசி வரை அப்படியே அவர்களைக் கட்டுக்குள் வைக்கும் ஒரு அமைப்பாக ஆகாமல் பார்த்துக் கொள்வது. ஒவ்வொரு தனிமனிதனுக்குமான ஒரு தனித்த அவனுக்கு விருப்பமான வாழ்வினை அவனை  அமைத்துக் கொள்ள விடுதல். அதற்கு தடையாக இருக்கும் சமூக உறவாடுதல்,  தேவைகள்,  காதல்,  அன்பு,  பாசம்,  இன்ன பிற அனைத்தையும் ஒத்திப்போடுதல். அது அத்தனிமனிதனின் சுய விருப்பாக அன்றி கட்டாயமாக்கப் படாமல் இருத்தல். அத்தகைய மனிதன் தனக்கானதை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை அமைத்துக் கொடுத்தலே ஒரு சமூகத்தின் கூட்டுப்பயனாக இருக்க வேண்டும். தன்னளவில் கட்டுகளற்ற வாய்ப்புகளைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரமுள்ள மனிதன் நிறைவாக முயல்வான் என்று நம்புகிறேன். அவனது தேடல் நிச்சயமாக ஆதியில் உடலை மையப்படுத்தியே அமைய முயலும். உடல் கொண்டே அவன் அனைத்தையும் அறிய முற்படுவான். உயிர்களை இன்னும் இன்னும் என தன்னுடல் மூலமே அணுக்கமாக அணுகி அறிவான். உடலை நேசிக்கும் பண்பே சக உடல்களை அடையாளம் துறந்து நேசிக்கும். அடையாளமற்ற மனிதம் மேன்மை கீழ்மைகளிலிருந்து நகர்ந்து ஒரு மாபெரும் ஒற்றை உடலாக தன் அறிதலை நகர்த்தும். அங்கும் அனைத்து உயிர்களுக்குமான சுதந்திரத் தன்மையே முதன்மையான விளைவு. 


சமூகத் தேவையற்ற உடலை அடையும் விளைவு. அது தன்னளவில் பூர்த்தியாகும் ஒரு மேலான ஒன்றை பற்றி கனவு காண்கிறேன். 


சாரமற்ற ஒன்றிலிருந்தே அது சாத்தியப்படும். பயனற்ற அதன் தன்னிலையே அனைத்திற்குமான வித்து.


சோர்பாவின் நடனத்தை திரும்பவும் ஆடுகிறேன். நிச்சயமாகத் தனியாகத்தான்.

தன்னிலை என்பது ஒரு விடுதலையான தூய மிருகம். அது இந்த அத்துவான வெளியில் தனியே சுகிக்கிறது. தன் தன்னந்தனிமையை சமூகத் தேவையற்றதாய் ஆக்கிக் கொள்ள விளைவதால்!



#zorbathegreek

#NikosKazantzakis

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக