திங்கள், 19 டிசம்பர், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -77

    


    காற்றின் திசைகளுக்கேற்ப, பாளம் பாளமாய்ப் பிளர்ந்தப் புழுதிப்பாதைகள், கணத்திற்குக் கணம் ரேகைகளைக் கலைத்துச் சுழற்ற, பாதைகளுக்கு அப்பாலிருந்து செந்நிறக் கோளகை உருவெடுத்து எழும்பியது. அதன் தீற்றல்களின் நீள் பாட்டைகள் மண்ணில் படும் இடங்களிலெல்லாம், வெப்பம் சலனித்து, பின் உசுப்பி விட்டு, அதன் அறியாதக் கனவுகளின் மேற் தோலைப் பிறாண்டியது. ஒளியின் மூர்க்கம் கூடக் கூட, அது ஒரு வன் மிருகத்தின் லயத்தை ஆட்கொண்டது. பாலையின் விளிம்புகள் எல்லைகள் வரைகையில், பூதாகரமான ஒரு ஆண் சிங்கம் மெல்ல சிலுப்பிக் கொண்டு அடி எடுத்து வைப்பதைப் போல ஒளியும், மண்ணின் பழுப்பைப் பூசிக் கொண்டுத் தன் உடல் முழுவதையும் உதறிக் கொண்டு மேலெழும்பியது. அக்கதிர்களின் நீண்டுக் கனத்தக் கைகள் இஸ்ரவேலத்தின் ஒவ்வொரு வீட்டுக் கதவுகளையும் முட்டி உள் நுழைந்து, அவர்களின் காலைப் பிரார்த்தனைக்குள், ஊடுருவிக் கொண்டிருந்தது. தங்களின் இறைஞ்சல்களையும், வாழ்த்துத்துதிகளையும், கடினமே உருவான ஆதித்தந்தையும், கடவுளுமான ஜெகோவாவிடம் அவர்கள் சமர்ப்பித்துக் கொண்டிருந்தனர்.

    "நாங்கள் உம்மை மகிமைப் படுத்துவோம், எங்கள் துதிகளின் சங்கீதத்தால், எம்மைப் பெலப்படுத்தும்,  எம் தேவனே! எம் தந்தையர்களுக்கும் தேவனே! நித்திய ரூபனே! சினம் பொருந்தியவனே! நீரே எமக்கு சத்தியமும், தைரியமும். உமக்கே மகிமை! நித்தியனே! நாங்கள் உம்மை மகிமைப் படுத்துவோம்! எம் தந்தை ஆப்ரகாமிற்குப் பாதுகாவலனே! நீர் எம்முடன் இருக்கையில் எவர் வருவர் எங்களுடன் மோதிட! நீரே! உண்மையும், உறுதியும். உம்மைப் பற்றுதலே எங்களின் விடுதலை! உம்மைத் தவிர யாருளர் எங்களின் அடிமைச் சங்கிலியை உடைக்க. எங்களின் பாடுகளை நீரே அறிவீர். தாழ்ச்சியுறுகிறோம்! எம்மைக் கொல்வதும், மீட்பதும் உனையன்றி யாருமிலர். மகிமை! எம் தேவனுக்கு மகிமை! ஆண்டவரே! எங்கள் எதிரிகளைப் பொடித்துத் தூளாக்கு! அவர்களின் பாதைகள், பாழ்குழிகளாகட்டும். ஆனால் சீக்கிரம். எங்கள் இறப்பிற்கு முன்னே நீவிர் சத்தியத்தை மீட்கக் கடவீர். ஆம்! இஸ்ரவேலத்தின் சுதந்திரம் ஒன்றே நாங்கள் இறைஞ்சும் ஒற்றைப் பிரார்த்தனை. எம் தேவனே! இம்மைக்கும் மறுமைக்குமாய் நாங்கள் உம் சொல்லைக் கூர்கிறோம்! எம்மைப் பெலப்படுத்தும்!"

    ஜோர்டான் நதிக்கருகில் மேலேக் குத்தற இருக்கும் ஒரு சாம்பல் பாறைப் பிளவினுள், ஜீசஸும், திருமுழுக்கு ஜானும் அமர்ந்திருந்தனர். வெளிச்சம் ஊர்ந்து வரும் பிராணியைப் போல அவர்களின் பாதங்களில், நெழிந்து சென்றது. முழு இரவும், அவர்கள் என்ன செய்வதென்று அறியாது, தங்கள் கைகளுக்குள் இவ்வுலகத்தை பதற்றத்துடன் அமிழ்த்தி வைத்துக் கொண்டிருந்தனர். ஒருவர் மாறி ஒருவர் அதனை கைமாற்றி அமைதியிழந்தனர். ஆனால் வேறு வேறு வகையில். சன்னதத்தில் தன்னை உதறிக் கொண்டிருந்த ஒருவரின் முகம் கோபமும் தீர்க்கமும் கொண்டு வெறியேறியிருந்தது. தன் கையில் வைத்திருந்தக் கோடாரியினால் அந்த அழுத்தத்தை மேலும் கீழுமாகக் கிழித்துக் கொண்டிருந்தார். மற்றொருவன் தன்னுள் எழுந்தமரும் அதிர்வுகளுக்கு செவி கொடுத்திருந்தான். அவன் கண்கள் பனித்திருந்தன. எல்லையில்லாக் கருணையின் துக்கத்தைத் தன்னுள் அனுமதித்துக் கொண்டிருந்தவனின் முகம் நிலத்தில் குத்திட்டிருந்தது.

"அன்பு மட்டும் போதுமானதா?" ஜீசஸ் கேட்டான்.

    "இல்லை. நிச்சயமாக இல்லை!" திருமுழுக்கு ஜான் கோபத்துடன் பதிலுரைத்தார். "வேர் அழுகிக் கொண்டிருக்கிறது. நம் தேவன் எம்மை அழைத்து, என் கைகளினுள் இக்கூர்மையானக் கோடாரியை அளித்தார். நான் இவ்வழுகல் வேர்களை வெட்டி எறிந்துத் தகுதியான நிலத்தில் மரத்தினை ஊன்றிப் புதுப்பிக்க முயல்கிறேன். என்னுடையக் கடமையை நான் செய்தேன்.இப்பொழுது உன் வழி. ஆம்! இக்கோடாரியை எடுத்துக் கொள்! முன் ஏகு!"

    "நான் தீயாக இருப்பேன் எனில் எரிவேன், ஒரு மரம் வெட்டும் கோடாரியாக இருப்பின், எதிர்படுபவற்றை வெட்டி வீழ்த்துவேன். ஆனால் நான் இருதயம், என்னால் அன்பு கொள்ள மட்டுமே முடியும்"

    "நானும் இருதயமே, அதனாலேயே என்னால் அநியாயங்களை, இழிவை, இந்தக் கேடுகெட்டத்தனைத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எப்படி அநீதியான ஒன்றிடம் உன்னால் அன்பு கொள்ள முடியும். இந்தக் கீழ்மைகளின் முன் ஒருவன் வெறியும், வெறுப்பும் கொள்ளவே சாத்தியம். கேள்! மனிதனின் அதிமுக்கியத் தகுதியானக் குணமான கோபத்தைக் கைகொள். அதுவே நம் சத்தியமும் வழியுமாக இருக்கட்டும்."

    "கோபமா?" ஜீசஸின் குரல் நடுங்கியது. அவன் தன் கைகளை குறுக்காக இறுக்கக் கட்டி நின்று கொண்டிருந்தான். கொந்தளிப்பின் அதிர்வுகள் அவன் உடல் முழுதும் சலனித்து அமர்ந்தது. " நாம் சகோதரர்கள் இல்லையா?"

    "சகோதரர்களா?" ஜான் ஒருவித வெறிப்புன்னகையுடன் அவனைப் பார்த்தார். நீ உண்மையில், இறைவனின் வழி அன்பு ஒன்றே என நம்புகிறாயா? ம்ம்! அங்கே பார்!"

    தன் வலிமையான மயிரடர்ந்தக் கைகளைத் தூண்டி தூரத்தே, சலனமற்றுக் கிடக்கும் சாக்கடலைக் காண்பித்தார். நாட்பட்டு வயிறுவெடித்துக் குடல் அழுகிக் கிடக்கும் பூதாகரமான மிருகத்தின் அழுகிய சடலம் போல விகாரமான அக்கரியக்கடலை ஜீசஸ் நோக்கினான்.

    "இதன் ஆழ்குழிகளின் உலகை நீ அறிவாயா? அதன் பாழினுள் நாறிக் கிடக்கும்  இரு கீழ்மை நகரங்களைப் பற்றி உனக்குத் தெரியுமா? சோடோம் மற்றும் கொமோரோ எனும் இரு நகரங்கள் அதன் அடியினுள் அமிழ்ந்திருக்கிறது. நம் தேவனின் கோபமே அதனை எரித்து சாம்பலாக்கியது. பின் இம்மாபெரும் கடல் அவற்றை மிச்சமின்றி விழுங்கிக் கொண்டது. கேள்! நம் அப்பனின் வழியே நம்முடையதும். அதுவே உறுதியும் மீட்சியும் கொண்டது. நம் மூதாதையர்களின் தீர்க்க தரிசனங்கள் என்ன உரைக்கின்றன? " நம் தேவனின் தீர்ப்பு நாளில், மரங்களின் நரம்புகளிலிருந்து ரத்தம் பீறிடும். வீடுகளின் கற்கள் உயிர் பெறும். அவைகள் ராட்சசர்களாக் உருமாறி வீட்டின் உரிமையாளர்களைக் கொல்லும். தேவனின் தீர்ப்பின் நிமித்தம், அந்த நாள் நெருங்கிவிட்டது. நானே அதனை முதலில் கண்டுணர்ந்தேன். ஒரு தீக்குமிழ் உருள்வதைப் போல அது என்னுள் எழும்பியது. அடக்கமுடியாத ஆர்ப்பரிப்பும், அழுகையுமாக இப்புனிதக்கோடாரியைக் கைகளில் ஏந்திக் கொண்டேன். வெட்டு! வெட்டு! எனும் சொல் மட்டுமே என் முன்னே இருந்தது. நான் அதனை உள்வாங்கிக் கொண்டேன். இப்பூமியின் சீழ் பிடித்த வேர்களை வெட்டி எறிவது ஒன்றே எனக்க்கிட்டப் பணி. தேவனின் சொல்லை என்னுள் அணையாது வைத்துக் கொண்டேன். இரவு பகலற்று, காலங்களற்று நான் உன்னை அழைத்தேன். இதோ! நீ வந்து விட்டாய்! இனி உன் வழி! நான் இங்கே என்னை நிறுத்திக் கொள்வதே! தேவனின் ஆணை!"

    அவர் தன் உடலுடன் ஜீசஸை அணைத்து இறுக்கிக் கொண்டார். அவரது உடலின் சூடு அவனுள் மெல்ல இறங்கியது. கைகளுக்குள் இருந்த கோடாரியின் பிடி, அவன் முதுகினை அழுத்தியது. அவன் பயந்து விலக்கிப் பின் வாங்க முயன்றான். "கொஞ்சம் பொறுங்கள், இன்னும் சிறிது காலம், நான் உங்களிடம் மண்டியிட்டுக் கேட்கிறேன். அவசரம் வேண்டாம். நான் பாலையிடம் செல்கிறேன். இறைவனிடம் தனித்து செல்கிறேன். அங்கே அவனது குரலைத் தனித்து அறிவேன். எனக்கான சொல்லை ஏற்றுக் கொள்வேன். அதுவரைப் பொறுத்திருங்கள்."

    "சபலத்தின் சொற்களையும்! ஜாக்கிரதை! சாத்தான் அங்கு உனக்காகத் தன் அனைத்துப் படைகளுடன் வரிசைக் கிரமமாகக் காத்துக் கொண்டிருப்பான். அவனுக்குத் தெரியும், நீ பணயம் வைப்பது உன் வாழ்வை என்று. அவன் தன் எல்லாவிதமானத் தந்திரங்களுடனும், வன்மத்துடனும் உன்னிடம் வருவான். காத்துக் கொள். இந்தப்பாலைவனத்தின் குரல், இன்மையின், மரணத்தின் குரல் மட்டுமல்ல. நம்முள் நீங்காது கனல முயலும், விருப்பு வெறுப்புகளின், தாபங்களின், கீழ்மைகளின், அதிகாரத்தின், ஆணவத்தின் குரலும் கூட."

    "அது இன்பங்களின் குரலோ, மரணத்தின் குரலோ, எதுவாக இருப்பினும் நான் அடிபணிய மாட்டேன், என்னில் சத்தியம் கொள்ளுங்கள்!"

    " நிச்சயமாக, நான் காத்திருப்பேன். அது சாத்தானின் சொல்லோ, இல்லையேல் தேவனின் சொல்லோ!, நீயே அதை உன் சொந்த ஆன்மாவால் அறிந்து கொள்ளும், நீயே, அந்த ஒருவன் எனில் நான் உனக்காக காத்துக் கொண்டிருப்பேன். இறைவனின் சொல் ஏற்கனவே அருளப்பட்டு விட்டது. உன்னால் அதிலிருந்து விலக முடியாது. நீ அந்த ஒருவன் இல்லையெனில், நீ நசிந்தழிவதைப் பற்றி யார் கவலை கொள்ளப் போகிறார். ஆம், முன்னேறு! பார்க்கலாம்! ஆனால் விரைவாக, நான் இவ்வுலகைத் விட்டுத் தனியனாகச் செல்ல விரும்பவில்லை."

    "எனக்குத் திருமுழுக்கிடும் பொழுது, நம் தலைக்கு மேலே இரு நீண்ட வெண் சிறகுகள் வினோதமாகச் சிறகடித்துக் கொண்டு ஒலி எழுப்பிச் சென்றதே, அது என்ன சொல்லியது?"

    "அது வெறும் சிறகுகள் மட்டுமல்ல! உன்னுடைய நாளில் அதன் சொல்லை நீ அறிவாய். ஆனால் அதுவரை அச்சொல் இரு கூரிய வாட்கள் போல உன் தலைக்கு மேலேத் தொங்கிக் கொண்டிருக்கும்."

    ஜீசஸ் தன் கைகளை அவரை  நோக்கி நீட்டிப் புறப்பட ஆயத்தமானான். "என் அன்பின் சகோதரரே! விடைபெறுகிறேன். ஒருவேளை, என்றென்றைக்குமாக!"


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக