ஞாயிறு, 6 மார்ச், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் - 65

    

    அவளது புலம்பல்களைக் கேட்ட செபெதீ (அவரது லாபங்களில் யாரும் இடையிடாத வரை, அவர் அப்படி ஒன்றும் கெட்டவர் இல்லை), அவளை சமாதானப் படுத்துவதற்காக அறைக்குள் வந்தார். "இது அவனது இளமைத்துடுக்கு செலுத்தும் பாடு, மேரி", "அவனது வயதுதான் அவன் பிரச்சனை, கவலைப்படாதே", எல்லாம் சரியாகிடும். இளமை, ஒரு தூய்மையான மதுவினைப் போல, ஆனால் அதை நிதானமாக அருந்த வேண்டும், அப்பொழுதுதான் சரியான வழியில் அதற்கு எதிர்ப்பு காட்டாமல், சுமூகமாக நுகத்தில் இழுத்துக் கட்ட முடியும். அதன் பின் நாம் நடத்திச் செல்லும் பாதைக்கு அதுவும் பலப்ரயோகங்களின்றி வரும். உன் மகனும் சீக்கிரமே தன்னை நிதானித்துக் கொள்வான். என்னுடைய சொந்த மகனைப் பார், அவனும் இப்படித்தான். முன்னாடி இருந்தப் பித்து இப்போது சற்று தணிந்திருக்கிறது, தன்னுடைய இளமையில் நிதானிக்க முடிந்தவன், நிச்சயம் எங்கும் வழிதவற மாட்டான். என் பிள்ளை இப்பொழுது எவ்வளவோ பரவாயில்லை, இறைவனுக்குத்தான் அதன் அத்தனை பெருமையும் சேரும்"

    கேட்டுக் கொண்டிருந்த ஜானின் முகம் சற்று அசௌகரியமாய் மாறியது, ஆனால் அவன் எதுவும் பேச வாயெடுக்கவில்லை. உள்ளே சென்று ஒரு குவளையில் குளிர்ந்த நீரும், சிலப் பழுத்த அத்திப்பழங்களையும் விருந்தினருக்குக் கொடுப்பதற்காக எடுத்து வந்தான். இரு பெண்களும் எதிரெதிரே அமர்ந்து தங்களது கைகளைப் பிடித்துக் கொண்டு, கடவுளால் துடைத்தெறியப்பட்ட தத்தமது பிள்ளைகளை நினைத்து உள்ளூற விசும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் மூக்குறிஞ்சும் சத்தம் மட்டுமே கேட்டது. அவர்களின் அழுகைக் குரல் கேட்டுத் தேவையில்லாமல் இந்த ஆண்கள் வந்து சமாதானம் செய்கிறேன் பேர்வழி என்று, பெண்கள் மட்டுமே உணரும் வலியினை, அதனை இன்னொரு பெண்ணிடம் கடத்துவதால் கிடைக்கும் ஆசுவாசத்தை அவர்கள் இழக்க விரும்பவில்லை. அதனால் அமைதியாகத் தங்களின் வலிகளை அவர்கள் ஒருவருக்கொருவர் கடத்திக் கொண்டிருந்தனர்.

    "அவன் பிரார்த்தனைகளுக்குள் தன்னை முழுதுமாக மூழ்கடித்து இருக்கிறான். "உன் மகன் என்னிடம் சொன்னான், சலோமி!". அவன் தன்னைத் தீவிரமான ஒரு மன்றாட்டுதலுக்கு உட்படுத்தியிருப்பதாகவும், தன் கைகள் மற்றும் முட்டுக்கண்ணிகளைத் தரையில் ஊன்றி, ஒரு சுயவதை போல அவன் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறான் என்றும். அவன் தொடர்ந்து உணவு எடுத்துக் கொள்ளாததால், உடல் மெலிந்து உருகிக் கொண்டிருக்கிறது என்றும் ஜான் சொல்கிறான். அவனுக்குக் காற்றின் ஊடேச் சிறகுகள் தெரிகின்றன, அப்படியென்றால் தேவதைகளைப் பார்ப்பதற்காக அவன் தண்ணீர் கூடக் குடிக்காமல் தன்னை வதைப்படுத்திக் கொண்டிருக்கிறான். இந்தத் தீவிரமான நோய் அவனை எங்குக் கொண்டு போய் விடப்போகிறதோ, சலோமி! அவனது மாமா சிமியோனால் கூட அவனைக் குணப்படுத்த முடியவில்லை. என்ன செய்ய? உனக்குத் தான் தெரியுமே! எத்தனை பெரியப் பெரியப் பேய் பிசாசுகளையெல்லாம் அவர் ஓட்டியிருக்கிறார் என்று! எதற்காகக் கடவுள் என்னைப் பழிக்கிறார்? நான் அப்படி என்ன பாவம் செய்து விட்டேன்? சலோமி! என்னால் முடியவில்லை" என்று கூறியவள் தாள முடியாமல் சலோமியின் மடியில் தன் தலை புதைத்து விம்மி அழத் தொடங்கினாள்.

    ஜான் ஒரு பித்தளைக் குவளையில் தண்ணீரும், ஒரு தட்டில் ஐந்தாறு அத்திப்பழங்களையும் எடுத்துக் கொண்டு அவர்கள் முன் வந்தான். மேரியைப் பார்த்து அழாதீர்கள் என்று சொன்னவன் அவளது மடியில் தட்டினை வைத்தான். 

    ஜான் தொடர்ந்து அவர்களைப் பார்த்து பேசத்தொடங்கினான். "அவன் முகத்தில் அபரிவிதமான ஒரு ஒளித்தீற்றல் நிகழ்வதை, அப்புனித ஒளி கொஞ்சம் கொஞ்சமாக அவனை விழுங்குவதை, அவனைச் சுற்றிலும் அதன் சதகோடிக் கரங்கள் ஆக்கிரமித்து அவனுள் நுழைந்துப் பெருகுவதை, அச்சமயங்களில் விளக்க முடியாத பேருவகையிலும், தாளமுடியாத வலிப்பெருக்கிலும் அவனது முகம் உருமாறிக் கொண்டிருப்பதையும் அருகிலிருந்து சில சமயங்களில் நான் பார்த்திருக்கிறேன். அச்சுறுத்தும் வகையில் அதன் நாளங்கள் இருக்கும். சில சமயங்களில் ஒரு உயிருள்ள கொடிய விஷமுள்ள, கொடுக்குகள் கொண்ட அதன் கீற்றுகள் அவனுள் இறங்கி வெளியேறுவதைப் போலத் தோன்றும். நான் பயந்து வெளியே ஓடிவிடுவேன். ஆனால் அவன் தன்னை மறந்து முற்றிலுமானத் தியானத்தில் இருப்பான். எங்களின் அருட்தந்தை இறந்தபிறகு,  மூத்ததுறவி ஹப்பாக்குக் எல்லா இரவுகளிலும் அவனைக் கனவுகளில் கண்டார். அதில் இறந்த எங்களின் புனிதத் தந்தை உங்கள் மகனைக் கைப்பிடித்து, ஒவ்வொரு அறைகளாக அழைத்துச் செல்கிறார். எதுவும் பேசாமல், ஒவ்வொருத்தரையும் பார்த்து, அவனைச் சுட்டிக் காட்டிப்  புன்முறவலுடன் அடையாளம் காண்பிக்கிறார். பீதியில் கனவு கலைந்து, அருளாளர் ஹப்பாக்குக் அதிர்ச்சியில் படுக்கையிலிருந்து குதித்தெழுந்து வெளியே சென்று, ஒவ்வொரு துறவியாக எழுப்பினார். நாங்கள் எழுந்து ஒன்றாக கூடத்திற்கு வந்தோம். அரைத்தூக்கத்தில் கனவா நனவா என்று பிரித்தறிய முடியாத படி கண்களைக் கசக்கிக் கொண்டே அவர் முன் நின்றோம். அவர் தனக்கு வந்தக் கனவை எங்களுக்கு விளக்கினார். ஆனால் எங்களால் அதனைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. நமது புனிதத்தந்தை நம்மிடம் என்ன சொல்ல விளைகிறார்? எதற்காக அவர் புதிதாக நம் மடத்திற்கு வந்த விருந்தாளியைச் சுட்டிக் காட்டிச் சிரிக்கிறார், எல்லாமே ஒரு புதிர் போல இருந்தது. புனிதத்தந்தை இறந்து இன்னும் நாற்பது நாட்கள் கூட கடந்திருக்கவில்லை. நிச்சயமாக அவரது இருப்பு எங்களுக்குள் ஏதோ ஒன்றைக் கடத்த முயல்கிறது. அவர் சொல்லாமல் விட்ட ஒன்றினைப் பற்றிய சமிஞ்சைகள் தான் இது என்று நாங்கள் நினைத்துக் கொண்டோம். ஒரு நாளிற்கு முன்பு நான் மடாலயத்தை விட்டு வெளிவந்த நாளில், மடத்திலிருந்த எல்லாத் துறவிகளும் ஒட்டு மொத்தமாக, ஒரே சமயத்தில் தங்களின் உள்ளுணர்வினால் அடித்துச் செல்லப்பட்டனர். அனைவருக்குள்ளும் கனவின் புதிர் அவிழ்ந்தது போல ஒரு உறுதி ஏற்பட்டது. தங்களுக்குள் அவர்கள் உணர்ந்த அவ்வனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். அவர்களின் ஒவ்வொருக் கனவுகளும் விசித்திரமானதாகவும், சிக்கலானதாகவும், எதையோ குறிப்புகளால் சொல்ல முயல்வதாகவும் இருந்தது. 

    ஒரு கனவில் வண்ணத்துப்பூச்சிகளின் இறகுகள் மட்டும் உடலற்றுப் பறந்து போகின்றன. நிலத்திலிருந்து எம்பி எம்பி உயரே, வானில் நீல நிறத்தில் ஒளிரும் ஒரு விண்மீனை நோக்கித் தன் சிறகுகளைப் படபடத்துகின்றன. இரவின் மிளிர்வில் பூமியே ஒரு நீலப் பெருங்கடல் போலத் ததும்புகிறது. சிறகுகள் அலைகளாகின்றது. அது திரும்பத் திரும்ப ஓய்வின்றி கரையைப் பற்றிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு முறை அது கரைப் பற்றும் பொழுதும்,  நிலம் பிளன்று நகர்ந்து விடுகிறது. ஒவ்வொரு அலையும் பிளன்றிருக்கும் பள்ளத்தை நோக்கிப் பாய்கிறது. நிமிர்ந்து பார்க்கையில் நீல வெளி ஒரு பெரும் மழையாகப் பொழிகிறது. வண்ணத்து பூச்சிகள் நீர்மையாய், திரவத் துளிகளாய் தலை கீழாக, நிலத்தை நோக்கி தங்கள் சிறகுகள் மட்டுமேக் கொண்ட உடலைச் செலுத்தி, பூமியில் விதைகளாகின்றன. பின் விதைகள் வேர் விட்டு முளைத்து ஒரு சிலுவை மரமாய்த் துளிர்க்கிறது. 

    இன்னொருவர் கனவில், ஒரு பல்லியின் வால் துடிதுடிக்கிறது. ஒரு மயில் அதனைத் தன் அலகால் கவ்வுகிறது. அதன் வாயில் அது இன்னும் துடித்துக் கொண்டிருக்கிறது. அருகிலே இருந்த ஒரு ஆலிவ் மரப்பட்டையில், மரமொடு மரமாக அந்தப் பல்லி அசையாமல் தன் வாலைத் திங்கும் மயிலைப் பார்த்தபடி இருக்கிறது. சட்டெனப் பல்லி அங்கிருந்து குதித்துப் பறந்து மயிலின் கொண்டையினைத் தன் சவ்வுகளால் பற்றி உட்கார்ந்துக் கொள்கிறது. மயிலால் அதனை உணர முடிந்தாலும் அதை அகற்ற முடியவில்லை. அது பதற்றத்தில் அங்குமிங்கும் அலைகிறது. தலையை அசைத்துச் சுழற்றிப் பார்க்கிறது. ஒன்றும் முடியவில்லை. நிலத்தில் தரையோடுத் தரையாகக் குந்தி தன் தலையை ஒரு பாறையில் அறைகிறது. அதன் தலையும், பல்லியும் ஒரு சேரச் சிதறித் தெறிக்கின்றன. அதன் அலகிலிருந்த பல்லியின் வால் சற்றுத் தொலைவில் விழுந்து இன்னும் துடித்துக் கொண்டிருக்கிறது. 

    மற்றுமொருவர் கனவில், ஒரு ஒற்றைக் கடிஎறும்பு ஒரு முழு மனித உடலைத் தூக்கிக்கொண்டு அதன் சிதல் புற்றை நோக்கிச்செல்கிறது. புற்றின் குறுகிய வாய்ப்பகுதியை அடைந்ததும். தன் பற்களால் அந்த உடலைக் கடித்து உடைக்கிறது. அந்த உடல் ஒருக் கண்ணாடி போலப் பாளம் பாளமாக நொறுங்குகிறது. அதன் உதிரித்துகள்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் சேகரிப்பில் இடுகிறது. முழு உடலையும் இட்டு அது அயர்ந்து போய் நிற்கும் பொழுது, மழை பொழியத் தொடங்குகிறது. பெரும் மழை. வானம் இடிந்து விழுவது போல விழுந்து, அந்த சிதல் புற்றைக் கரைத்து ஒன்றுமில்லாமல் ஆக்குகிறது. அந்த ஒற்றை எறும்பு தன்னந்தனியாக அம்மனித உடலின் சேகரிப்பைப் பாதுகாக்க, பதைபதைக்க அக்குவியலைத் தூக்கிக் கொண்டு இங்கும் அங்கும் அலைகிறது. திடீரென தன் தலையின் பாரத்தில் அழுந்தும் மனித உடல் ஒரு செடியாகிறது. அதன் கிளைகள் பெருகி மரமாகிறது. உயர்ந்து எம்பி வானம் வரைத் தொட்டு நிற்கிறது. மழை நிற்கிறது. அது திரும்பவும் தூசித்துகள்களாகிறது. எறும்பு தான் நின்ற இடத்திலேயே அசையாமல் அதைத் தாங்கிக் கொண்டு காலமற்று நிற்கிறது. மழை பொழிவதும் அடங்குவதுமாய் அது ஒரு அலகிலா நாடகமாக நடந்து கொண்டே இருக்கிறது.

    என் கனவுகள் பற்றிய விளக்கங்களில் சற்றுப் பீடிகை இருக்கலாம். நான் என் ஞாபகங்களிலிருந்து, என்னால் முடிந்த வரை அதைச் சரியாக உங்களிடம் சொல்ல நினைத்தேன். ஆனால் எல்லோருக்கும்ம் தன் கனவுகளில் இருந்த புதிர்த்தன்மை, ஒரு வித அச்சத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. அவர்கள் தங்கள் கனவுகளில், வாழ்விற்கும், மரனத்திற்கும் இடையே, மனிதனின் உடல், ஆன்மா எனும் ஊசலாட்டத்தில் எதைப் பற்றிக் கொள்ள என்று குழம்பும் பொழுது பொறுமை! காத்திருப்பு! நம்பிக்கை! மன்றாட்டு! பிரார்த்தனை! வலிமை! அதிகாரம்! கருணை! அன்பு! வன்முறை! கலகம்! என்றுப் பல பல விளக்கங்களைச் சொல்லிக்கொண்டிருந்தனர். 

    ஆனால் அக்கனவுகளில் இருந்த பொதுத்தன்மை, எல்லோருமே அதனுள் உள்ளுறையாகப் புதிதாக வந்திருந்த இளைஞனை, தவிர்க்க முடியாத இருப்பாய் உணர்ந்தனர். அவனது இருப்பின் முகங்களே பலப்பல வித இயற்கை நிகழ்வுகளாய், உயிரினங்களாய், குழைந்து செல்லும் காட்சி வெளிகளாய் அவர்களுக்குத் தோன்றியது. அதற்கான விளக்கங்களைக் கூட அவனை முன்னிறுத்தியே, பலவிதமானக் கோணங்களில் அவர்கள் அணுகினர். அவர்களால் எதையும் உறுதியாக தெளிவு படுத்த முடியா விட்டாலும், மரணமடைந்த புனிதத்தந்தை, உங்கள்  மகனைத்தான் அடுத்த புனிதத்தந்தையாக்க விரும்புகிறார் என்று இக்கனவுகளின் வாயிலாக முடிவு செய்த அவர்கள், உணர்ச்சிப் பெருக்கில் அவன் கால்களில் விழுந்து வேண்டினர். கடவுளின் விருப்பம் , நீ இம்மாடலயத்தின் அருட்தந்தையாவதே எனச் சொல்லி அழுதனர். ஆனால் உங்கள் மகன் அதை முற்றிலுமாக மறுத்தான். 

    "இல்லை! இல்லை!. இது என்னுடைய வழி அல்ல! நான் இதற்குத் தகுதியற்றவன். நான் இங்கிருந்து போகிறேன்." சரியாக அந்த நாளின் மதியப் பொழுதில் நான் மடாலயத்தை விட்டு வெளியேறும் போது, அவனின் அழுகுரலைக் கேட்டேன்,  மற்ற துறவிகள் அவனை ஒரு அறையில் போட்டுப் பூட்டி வைத்திருந்தார்கள். அவன் தப்பிக்காமல் இருக்க வெளியே காவலுக்கு இரு துறவிகள் நின்றிருந்தார்கள். அறையினுள் இருந்து கேவிக் கொண்டிருந்தது அக்குரல். அவனது அழுகையும், மறுப்பும்."

    "வாழ்த்துக்கள், சகோதரியே! வாழ்த்துக்கள்", சலோமியின் வயதான முகத்தின் ரேகைகள் துடித்தன. " நீ ஒரு பேறுபெற்ற அன்னை, இறைவன் தன் கருணையையே உன் மகவாக கருவறையினுள் தருவித்திருக்கிறான், ஆனால் அதைப்பற்றி எதுவுமே நீ உணரவில்லை" சலோமியின் கண்கள் பணிந்தன.

    கடவுளால் விரும்பப்படும் அவ்வன்னை இதனைக் கேட்டுத் தலையை இல்லை என்பது போல ஆட்டினாள். இன்னும் விம்மிக் கொண்டிருந்த அவளது மனம் இதுவரை அவனுக்கு நிகழ்ந்த அனைத்தையும் நினைவுகளில் ஓட்டியது. அதன் தாங்க இயலாத தன்மையும்,  எதனாலும் ஆற்றுப்படுத்த முடியாத அதன் வலிகளையும், காயங்களையும் எண்ணி மருகிக் கொண்டே இருந்தாள்.

    "என் மகன் புனிதனாவதை நான் விரும்பவில்லை, அவனும் ஏனைய மனிதர்கள் போல திருமணம் செய்து எனக்கு பேரப்பிள்ளைகள் பெற்றுக்கொடுத்து சந்தோஷமாக வாழவேண்டும். அது தான் கடவுளின் வழி"

    "அது மனிதன் செல்லும் பாதை அம்மா, என்ன இருந்தாலும் அது வெறுத்து ஒதுக்க வேண்டிய ஒன்று." ஜான் தனது மெல்லியக் குரலால் மேரியை இடைமறித்தான். "உண்மையில் இப்பொழுது அவன் செல்கிறானே அதுதான் நிச்சயமாக கடவுளின் பாதை".

    பை நிறையத் திராட்சைகளைத் தூக்கிக் கொண்டு இரு இளைஞர்கள், தோட்டத்திலிருந்து வாசலைத்தாண்டி உள்ளே வந்து கொண்டிருந்தனர். அவர்கள் தங்களுக்குள் எதுவோ குசுகுசுத்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும், கேலி பேசிக் கொண்டும் வருவதை செபெதீயும், மற்றவர்களும் முற்றத்தில் இருந்துப் பார்க்கின்றனர்.

    "கெட்ட செய்தி, முதலாளி! அவர்கள் நகைப்பதை நிறுத்தாமல் கத்திக் கொண்டே வந்தார்கள். மாக்தலாவில் ஏதோ கலகம் போலத் தெரிகிறது. மக்கள் கற்களை வைத்துக் கொண்டு நம் தேவதையை வேட்டையாடத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

     "யாரை, எந்தத் தேவதையைச் சொல்கிறீர்கள், பையன்களா?" அங்கே மதுத்தொட்டியில் மிதித்து அசைந்து கொண்டிருந்த இளைஞர்கள் அதை நிறுத்திவிட்டுப், புரியாமல் அவர்களைப் பார்த்துக் கேட்டனர். "மாக்தலேனா?"

    "ஆமாம். மாக்தலேன் தான், நல்ல காலம் அவள் தப்பித்துவிட்டாள். கடவுளுக்கு நன்றி. கழுதை ஓட்டி வந்த இரு நாடோடிகள் மூலம் தான் இந்தச் செய்தி எங்களுக்கேத் தெரிய வந்தது. கொள்ளைக் கும்பலின் தலைவன் பராபஸ்ஸை உங்களுக்குத் தெரியும் அல்லவா!, பார்த்தாலே பயந்து நடுங்கும் தோற்றம் கொண்ட அந்த முரட்டுப் போக்கிரிப் பயல், அவன் நேற்று, சனிக்கிழமை, நாசரேத்திலிருந்து மாக்தலாவிற்கு தன் கொள்ளைக் கும்பலுடன் அவளை வேட்டையாடச் சென்றிருக்கிறான்.

    "இங்கே இன்னொருத்தனும் உங்களுக்காக இருக்கிறான்", செபெதீ ஆத்திரம் பொங்கக் கத்தினார். ஒரு கொள்ளை நோய் பீடித்தக் பேய்க்கிறுக்கன், அந்த புரட்சியாளச் சகோதரக் கும்பலைச் சேர்ந்தவன். இஸ்ரவேலத்தைக் காப்பாற்றப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டுத் திரிவானே, அவனும் அவனின் வளைந்த மிருக நெடி கொண்ட மூக்கும்,  நரகக் குழியில் அழுகி நொதிக்கட்டும் இந்த கேவலங்கெட்ட வேசைப் பயல்...ச்ச்சே!"

    "சரிதான்!" அவர்கள் பேச்சைத் தொடர்ந்தனர். அந்தக் கும்பல் அந்தியில் மாக்தலேனாவின் தொழில் நடக்கும் குடிலுக்குச் சென்றிருக்கிறது. அங்கு ஏற்கனவே கூடம் நிறைந்து ஆள்கூட்டம் இருந்திருக்கிறது. சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட அவள் அந்த நாளின் வேலையை சீக்கிரமே முடித்துவிட்டு அடுத்த நாளில் ஓய்வெடுப்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். ஆனால் இந்த வன்மம் பிடித்தப் பயலுக்குக் கொஞ்சம் கொழுப்பு அதிகம். விரைந்து முற்றத்திற்கு வந்தவன் தன் கையில் கத்தியை வைத்து பயமுறுத்தி, அங்கேக் காத்திருந்த வணிகக் கும்பலைத் தள்ளிக் கொண்டு உள்ளே போக எத்தனித்தான். வியாபாரிகள் கும்பலும் தங்களின் வாள்களை உருவிக் கொண்டு சண்டைக்குத் தயாராகி விட்டனர். இருந்தக் கூட்டத்தினர் அனைவருமே அவசர அவசரமாக எப்படியோ இந்த சனிக்கிழமை நாளை அனுபவித்துப் போவதற்காக பொறுமையற்றிருக்கின்றனர். இப்படி ஆளாளுக்கு முந்திக் கொள்ளக் கூட்டத்தில் களேபரமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டு அவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளத் தொடங்கினர். இருவர் காயம் பட்டுக் கீழே விழுந்தனர். ரத்தத்தைப் பார்த்ததும் வியாபாரிகள் பயந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தலை தெறிக்க வெளியே ஓடி விட்டனர். உள்ளே இருந்தப் பெண்ணைக் கண்டம் துண்டமாக வெட்டுவதற்குத் தயாராக, பராபஸ் தன் சூரிக் கத்தியைக் கையில் வைத்துக் கொண்டு, காலால் எட்டி மிதித்து, அவளிருந்த சிறிய அறைக்கதவை உடைத்துத் திறந்தான். ஆனால் அறையினுள் யாருமில்லை. அவள் தன்னை முழுக்க மறைத்து முக்காடிட்டுக் கொண்டு, யாருக்கும் தெரியாமல் பின்வாசல் வழியேத் தப்பி ஓடிவிட்டாள். மொத்தக் கிராமமும் அவளை வேட்டையாடத் தேடுகிறது. ஆனால் இரவு கவிந்து இருண்டு விட்டதால் அவளைத் தேட முடியவில்லை. விடிந்ததும் எல்லாத் திசைகளிலும் அவர்கள் சிதறி ஓடி மண்ணில் இருக்கும் அவளின் பாதத்தடங்களைப் பின் தொடர்ந்து அவள் போனத் திசையைக் கண்டு பிடித்தனர். அந்தப் காலடிச்சுவடுகள் கார்பெர்னம் இருந்த வழி நோக்கி இருந்தது. கதை போல அந்த இளைஞர்களில் ஒருவன் இதைச் சொல்லிக் கொண்டிருந்தான்.

    "என்ன ஒரு அதிஷ்டம்! ஐயோ! அவள் இங்கே வந்திருக்கிறாள்", நம் கார்பெர்னத்திற்கு. பிலிப் உற்சாகத்தில் குதித்தான். அவனது பெரிய உடலின் மார்புச் சதைகள் அங்குமிங்கும் குலுங்கியது. அவள் ஒருத்திதான் நம் சொர்க்கபுரியில் விடுபட்டுப் போனவள். ஆம், எப்படியான மாலைப் பொழுது அது! இன்றைக்கும் அழியாமல் ஞாபகம் இருக்கிறது. இப்பொழுது மட்டும் அந்தப் பேரழகியைக் காண முடிந்தால் போதும், என்ன இது! நான் அவளுக்காக ஏங்கத் தொடங்கி விட்டேனே!" பிலிப்பின் கிழிந்த வாயில் பற்கள் மின்னின.

    "அவளது சுனை ஓய்வு நாளில் கூடச் சுரந்து கொண்டிருக்கும், அவளுக்குப் புண்ணியம் உண்டாகட்டும்." சொல்லும் பொழுது  நாத்தனேலில் கன்னச் சதைகள் சிவந்திருந்தன. அவனின் திருத்தி வெட்டியத் தாடியில் தந்திரமானச் சிரிப்பு வெளித்தெரிந்தது. தான்  சவரம் செய்து, குளித்து, நன்கு உடுத்தி, நறுமணத்தைலம் பூசிக் கொண்டு சுத்தபத்தமாக அவளின் இல்லத்தை நோக்கி சென்ற ஒரு ரம்மியமான, சாயங்காலம் அவனது நினைவுகளில் அலையாடியது. தன்னைக் கைபிடித்து அவளை நோக்கி இழுத்துச் சென்றத் தன் சபலத்தை எண்ணினால் இன்றும் அவனால் புளங்காங்கிதம் அடையாமல் இருக்க முடியவில்லை. அவர்கள் மாக்தலாவில், மேரியின் இல்லத்திற்குச் சென்று அவளிற்காகக் காத்திருக்கும் வரிசையில் தங்களையும் ஒரு கண்ணிகளாக இணைத்துக் கொண்டனர்.  கடவுளுக்கு நன்றி! அது கூதிற்காலம் முடிந்துக் குளிர்காலம் முற்றிலுமாக ஆக்கிரமித்திருந்தப் பருவம். உண்மையில் பெரிதாகக் கூட்டமில்லை. நாத்தனேல் மட்டுமே மீதமிருந்தான் ஒரு ஓய்வு நாள் முடியும் வேளையில். அந்தப் பெரிய முற்றத்தில் தான் மட்டும் அமர்ந்திருந்து அழைப்பிற்காகக் காத்திருந்தான். திருப்தியாகவும் தன்னுள் குதூகலத்துடன் அவன் இருந்தான். "ஆம்! இது ஒரு மாபெரும் பாவம் தான்! ஆனால் ஒருவன் மாபெரும் பாவத்தைச் செய்யும் பொழுதும், கடவுளிடம் முழு நம்பிக்கைக் கொண்டு அதற்காக உள்ளிலிருந்து வருத்தப்பட்டானென்றால் கடவுள் அவனை மன்னிப்பார். அமைதியான, பாவப்பட்ட, துன்புறுத்தப்பட்ட, இன்னும் கல்யாணம் ஆகாத, நான் இத்தருணத்தில் என் வாழ்நாள் முழுதும் கூட அவளின் சிறிய அறைக் கதவை ஆசை தீரப் பார்த்துக் கொண்டு கிராமத்தின் கடைக்கோடி மூலையில் இருக்கும் அவளது இல்லத்தில் அமர்ந்திருக்கத் தயாராக இருந்தேன். வெளியே கிராமத்தான்கள் உரத்துப் பேசிச் செல்வதும், ஆடு மேய்ப்பவர்களின் கனமானக் காலடிச் சப்தமும், இங்கு நடக்கும் எதற்கும் தொடர்பின்றிப் பொருளற்றுக் கேட்டுக் கொண்டிருந்தது. என்ன மாதிரியானத் தருணம் அது! ஒரு முறை! ஒரே ஒரு முறையே ஒருத்தன் தன் வாழ்நாளில் அனுபவிக்க முடிந்த விலைமதிப்பில்லாத தருணத்தின் காலத்துளிகள் அவை. என்னுள் இருந்த எல்லாச் சங்கடங்களையும் ஒரு பொட்டலம் போல மடக்கி வெளியே எறிந்து விட்டு ஒரு ஆண் மகனாகக் காத்திருந்தக் கணம். அந்தப் பிரார்த்தனை நாளின் தித்திப்பான நொடிகளை இன்னும் கரைக்காமல், ஒரு இனிப்புப்பலகாரம் போல நக்கி நக்கி இன்புற்றுக் கொண்டிருக்கிறேன். அதுதான். நாம் சொன்னது போலக் கடவுள் மனிதனின் இந்தப் புனிதப் பிரச்சனையைப் பற்றிப் புரிந்து கொள்வார், மன்னிப்பார் என்ன!"

    எல்லாப் பிரசங்கங்களையும் அமைதியாகக் கேட்டு முடித்த முதிய செபெதீ! கைகளை உயர்த்திக் கத்தினார். "பிரச்சனைகள், பிரச்ச்னைகள்", என் வீட்டு முற்றத்தில் தான் இவர்கள் எல்லோரும் வரிசையாக வந்து தங்கள் பிரச்சனைகளைப் பேசி வம்பளந்து நேரத்தைக் கடத்துவார்கள். முதலில் புனிதர்கள், பின் விபச்சாரிகள் இல்லையேல் அழுது புலம்பும் மீனவர்கள், இப்போது இந்த பராபஸ். எங்கு போய் நான் முட்டிக் கொள்ள என்று எனக்கேத் தெரியவில்லை. அவர் மதுத்தொட்டியில் வெறுமனே நின்று கொண்டிருந்த இளைஞர்களைத் திரும்பிப் பார்த்து, என் அன்புப் பிள்ளைகளே, உங்கள் வேலையைக் கொஞ்சம் கவனித்தால் நல்லா இருக்கும், இந்த வீண் பேச்சுகள் நம் நேரத்தைத் தின்று கொண்டிருக்கிறது.

    வீட்டினுள் இருந்து இதனைக் கேட்டுக் கொண்டிருந்த சலோமியும், ஜோசப்பின் மனைவி மேரியும் , தங்களுக்குள் எதுவும் பேசாமல் திரும்பவும் தரையைப் பார்த்துக் குனிந்து அமர்ந்தனர். தன் சுத்தியலைத் தூக்கி எடுத்து வைத்து விட்டு, யூதாஸ் வாதிலை நோக்கிச் சென்றான். இது வரை அவர்கள் பேசிக் கொண்டிருந்தது, நடந்த நிகழ்வுகள் எல்லாவற்றையும் தன் மனதினுள் ஓட்டிக் கொண்டு வாயில் கதவின் அருகி நின்று ஏறிட்டான். ஒரு முறை திரும்பி முதிய செபெதீயை விழுங்குவதைப் போலக் குரூரமாகப் பார்த்தான். 

    வாசலிலிருந்து வெளியே, பலவிதக் குழப்படியான கூச்சல்கள். ஆண்களும் பெண்களும் கத்திக் கொண்டே புழுதி மண்டியப்பாதையில் ஓடுகின்றனர். புழுதி கிளம்பித் தெரு மங்கலாகத் தெரிகிறது. மது தயாரிக்கும் தொட்டியில் ஆண்கள் தங்கள் கால்களை அழுத்த ஊன்றிக் குதிக்க உந்துகின்றனர். "பிடி! அவளைப் பிடி! அவளைப் பிடி!" எனும் குரல்கள் வெளியிலிருந்து இப்பொழுது தெளிவாகக் கேட்கிறது. செபெதீ, திராட்சை மூடைகளைத் தூக்கி அளவையில் பார்த்து நிறுத்திக் குறித்துக் கொண்டிருக்கிறார். புழுதிப்படலத்தின் ஊடே ஒரு பெண் தன் உடைகள் தரையில் சரசரக்க, பதைபதைக்க நாக்கைக் கடித்துக் கொண்டே முற்றத்திற்குள் வந்து வீட்டிற்குள் புகுந்து விடுகிறாள். வீட்டின் உள்ளே திண்டில் கால்தடுக்கி சலோமியின் பாதங்களைத் தழுவித் தரையில் குப்புற விழுகிறாள்.

    "காப்பாற்றுங்கள், என்னைக் காப்பாற்றுங்கள், அவர்கள் என்னைத் துரத்துகிறார்கள்" அழுதுகொண்டே அப்பெண் இன்னும் எழுந்திருக்காமல் அவர்களை நிமிர்ந்து பார்த்து மருகுகிறாள்.

    "முதிய சலோமிக்கு அவள் யார் எனப் புரிந்தது, ஆனால் அவளை எழுப்ப முயற்சிக்கவில்லை. ஜீர வேகத்தில் ஜன்னல் கதவுகளை இழுத்துச் சாத்தினாள். தன் மகனைப் பார்த்து வேகமாகக் கதவை அடை என்று முடுக்கினாள்.

    "அப்படியே தரையில் குந்தி இரு, ம்ம்! முக்காடிட்டு உன்னை மறைத்துக் கொள். ம்ம்! சீக்கிரம்! இந்தா இந்தத் துணியை வைத்து மறைத்து, அந்த இருப்புப் பலகைக்குப் பின்னே போய் ஒளிந்து கொள். சலோமி பதைபதைப்புடன் கூறினாள்.

    ஜோசப்பின் மனைவி மேரி அவளைக் குனிந்து உற்று நோக்கினாள். வழிதவறிச் சென்ற அந்தப் பாவி மகளை, வருத்தத்துடனும், திகிலாகவும் பார்த்தாள். ஒழுக்கமாக வளர்க்கப்பட ஒரு பெண் எப்படி வழிதிரிந்து மானங்கெட்டு, மரியாதை இழந்து ஒரு அருவருப்பூட்டும் ஜந்து போல இன்று ஆகிவிட்டாள் என நினைத்து அவள் வேதனை உற்றாள். அதே நேரம் திரட்சியான ஒரு காட்டுமிருகம் போன்ற இந்தப் பெண்ணுடல், ஆண்களை எப்படி எளிதில் கவர்ந்துவிடுகிறது. அங்கங்களைக் காட்டும் அவளது உடுதுணியும், உயிருக்குப்பயந்து மாட்டிக் கொண்டிருக்கும் பொழுதும் சீண்டும் வனப்பும், முகத்தில் அழியாமல் இருக்கும் அலங்காரங்களும், விஷ உயிரினங்களுக்கே உரிய கொடுக்குகள், பற்கள் போன்று பயமும் ஈர்ப்பும் ஒருங்கே அவளிடம் இருக்கின்றன. ஆண்களும் விட்டில்கள் போல இவளின் எரிவில் விழுந்துவிடுகிறார்கள். தன் இருபது வயதில் இந்த மிருகம் என் மகனை,  ஒரு பேய் போல அல்லவா பிடித்து வைத்திருந்தது. ஆனால் மயிரிழையில் அவன் இவளிடமிருந்து தப்பி விட்டான். அவன் பெண்ணிடமிருந்து தப்பி விட்டான். ஆனால் கடவுளிடமிருந்து...நினைத்தவள் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள்.

    "ஏன் அழுகிறாய்? என் அன்பு மகளே!" முதிய சலோமி மாக்தலேனின் தலையில் தன் கைகளை ஆதுரத்துடன் வைத்து இரக்கமாகக் கேட்டாள்.

    "எனக்கு சாக விருப்பமில்லை அம்மா!, இந்த வாழ்க்கை எனக்கு அவ்வளவு பிடித்திருக்கிறது, நான் சாக மாட்டேன்" அவள் தன் உதடுகள் துடிக்க நடுக்கத்துடன் பதில் கூறினாள்.

    ஜோசப்பின் மனைவி மேரியும் அவளைப் பார்த்துக் கைகளை நீட்டினாள். உண்மையில் மாக்தலேனை அவள் வெறுத்தாலும், அவளைப்பார்த்து பரிதாபம் தான் வந்ததே தவிர அருவருப்பு தோன்றவில்லை. "பயப்படாதே, மேரி, கடவுள் உனக்குத் துணையிருப்பார். நீ சாக மாட்டாய்"

    "உங்களுக்கு எப்படித்தெரியும் மேரி?" ஒளிரும் கண்களுடன் மாக்தலேன் கேட்டாள்.

    "கடவுள் நமக்காக இன்னும் செவி கூர்ந்துக் காத்திருக்கிறார், வருத்தப்படுபவர்களை அவர் கைவிடுவதே இல்லை, கவலைப்படாதே", ஜீசஸின் அன்னை உறுதியாகக் கூறினாள்.

    அந்த மூன்று பெண்களும் ஒன்றாகத் தங்கள் வலிகளை, காயங்களை உணர்ந்து கொண்டு அமைதியாக இருந்தனர். "அவர்கள் வருகிறார்கள், இதோ இங்கே வந்து விட்டார்கள்" மேரி கமுக்கமானக் குரலில் தனக்குள் சொன்னாள். அவர்கள் தோட்டத்தைத் தாண்டி ஓட்டமும் நடையுமாகக் குதித்து வருகிறார்கள். முற்றத்தில் அமர்ந்திருந்த முதிய செபெதீயை அணுகி, வாசற்கதவிற்கருகில் ஒரு முரட்டு ஆசாமி சீற்றத்துடன் வருகிறான். அவன் உடல் முழுதும் வேர்வையில் நனைந்திருக்க, ஆவேசமாக உரக்கக் கத்தி வசை மாறி பொழிந்து கொண்டே அவருக்கருகில் வந்து நின்றான்.

    "ஹேய்! செபெதீ! நாங்கள் இஸ்ரவேலத்தின் கடவுளின் பெயரால், உன் அனுமதியின் தேவை இன்றி உள்ளே நுழைந்திருக்கிறோம்" மற்ற எல்லா ஒலிகளையும் அமிழ்த்தி, பராபஸின் குரல் மட்டுமே உயர்ந்துக் கேட்டது.

    அவன் சொல்லி முடிப்பதற்குள், அந்தக் கிழட்டு முதலாளி வாயைத்திறந்தார். "சாத்தியிருக்கும் அறைக்கதவை உதைத்துத் திற. உள்ளே போய் அந்த வேசை மகளின் முடியைப் பிடித்து என் வீட்டிலிருந்து வெளியே இழுத்து வா!"

    "வெளியே வா! வேசையே! வெளியே வா! பராபஸ் வசைபாடிக் கொண்டே அவளை இழுத்து வெளியே முற்றத்திற்கு வந்தான். அங்கே கூடி நின்ற மாக்தலாவின் மக்கள் ஏளனத்துடன், சிரித்துக் கொண்டே அவளைப் பார்த்தனர். பின் அதில் இருந்த இரு வலிய ஆண்கள் அவளைப் பிடித்துத் தூக்கினர். கூட்டத்தில் இருக்கும் ஆண்களின் வெறிகொள் பார்வை அவளைத் துளைத்தது. பாரபட்சம் பார்க்காமல் சிறுவர்களில் இருந்து பெரியக் கிழட்டு ஆண்கள் வரை அவளின் உடலைத் தொடுவதில், அதைக் கிழித்து நார் நாராக்குவதில் அத்தனை இச்சைக் கொண்டிருந்தனர். அவளைத் தூக்கியதும் அவளின் புட்டத்தை, மாரைப் பிடித்துக் கசக்கிப் பிதுக்குவதற்கு ஒரு கும்பல் குவிந்து ஓடியது. ஒரு பழைய, அழுகிய உபயோகிக்க முடியாத பொருளைக் கொண்டு போய் எரித்தழிப்பதைப் போல அவர்கள் அவளின் உடலை ஆரவாரத்துடன் ஊர்வலமாகத் தூக்கிக் கொண்டு சென்றனர். ஏரிக்கருகில் இருக்கும் சற்று ஆழமான பள்ளத்தில் அவர்கள்  அவளை இறக்கி விட்டனர். பள்ளத்தைச் சுற்றி மக்கள் சிதறி நாலாபுறமும் நின்றுத் தங்கள் மேலங்கிகளில் மறைத்து வைத்திருந்தக் கற்களைக் கைகளில் எடுத்துத் தயாராகினர். 

    இருக்கையிலிருந்து விரைவாக எழுந்த முதிய சலோமி, தன்னை இது நாள் வரைத் தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டிருக்கும் வலிகளால் உந்தப்பட்டு, தன் கணவனைத் திட்டுவதற்காக முற்றத்தை நோக்கி ஓடி வந்தாள்.

    "உம்மைப் பார்த்து உமக்கே வெட்கமாக இல்லையா!," அவள் வேகமாக, மூச்சிறைக்கக் கத்தத் தொடங்கினாள். உன்னை நம்பி உன் வீட்டிற்கு அடைக்கலம் தேடி வந்த பெண்ணை, உன் கண் முன்னாலேயே இந்த முரட்டுப் பயல்கள் உன் வீட்டிற்குள்ளேயே வந்து இழுத்துச் செல்வார்கள். நீயும் அதற்குத் துணை போகின்றாயே! என்ன மாதிரியான மனுஷனய்யா நீ! ச்ச்சீ! உனக்கு இரக்கம் என்பதே இல்லையா?"

    பின் அங்கே எந்த பாவமுமற்று நின்று கொண்டிருந்த தன் மகன் ஜேக்கப்பை, ஆத்திரமாகப் பார்த்தாள்.

    "நீ! நீயும் உன் அப்பனைப் போலத்தானே! உன்னைப் பார்த்தால் எனக்கே அவமானமாக இருக்கிறது. நீ என் வயிற்றில் தான் பிறந்தாயா என்று!" நேரடியாகப் பார்க்க முடியாமல் தலை குனிந்து நின்றிருந்தான் ஜேக்கப். "என்று தான் நீங்கள் திருந்தப் போகிறீர்களோ! இந்த வஞ்சக செயலிலிருந்து உங்களுக்குக் கிடைத்த  நற்பெயரைக் கடவுளிடம் போய்ப் பகிர்ந்து கொள்ளுங்கள் பாவிகளே! அதைச் செய்யுங்கள். உங்கள் விளைவுகளுக்கு பிராயச்சித்தம் தேடும் எண்ணம் இருந்தால், அந்த அபலைப் பெண்ணைக் கொல்லத் துடிக்கும் இந்தக் கிராமத்து மக்களிடமிருந்து காப்பாற்ற முயற்சி செய்யுங்கள். ஒரு பெண்ணை ஒரு ஒட்டு மொத்தக் கிராமமேக் கொல்லத் துடிக்கிறது. என்ன மாதிரியான ஜனங்கள் இவர்கள். ஏன் மனிதர்கள் நாம் இப்படிக் கீழ்மையான விலங்குகள் போல நடந்து கொள்கிறோம். சலோமியால் அதற்கு மேல் பேச முடியவில்லை. தொண்டைக் கமறி இருமினாள். மூக்கினை உறிஞ்சிக் கொண்டுக் கண்ணீர் வடிய, அவள், அவர்கள் இருவருக்கும் நடுவில் நடுங்கிக் கொண்டிருந்தாள்.

    "அமைதியாகுங்கள் அம்மா! நான் போகிறேன்" உலகில் தன் அன்னையின் சொல்லன்றி வேறு எதற்கும் அஞ்சாத ஜான் பதில் கூறினான். ஒவ்வொரு முறையும் அவள் கோபத்தில் அவனிடம் கத்தும் பொழுதெல்லாம் அவன் தன் பயத்தை விட்டொழித்து வெளிவந்துவிடுவான். ஏனெனில் அவளின் வார்த்தையை அவனால் அவ்வளவு எளிதில் தட்ட முடியாது. அது அவளின் குரல் மட்டும் அல்ல, அது காலங்காலமாக நம்மைத் தாங்கி நிற்கும் இந்த இஸ்ரவேல் பாலை மண்ணின் வலிமையான ஆதிப்பெண்ணின் வார்த்தை."

    "வாருங்கள்! போகலாம்! என்று தன்னுடன் நின்று கொண்டிருந்த பிலிப்பையும், நாத்தனேலையும் கைத்தூண்டி அழைத்தான் ஜேக்கப். பீப்பாய்களுக்கிடையில் யூதாசைத் தேடினான். ஆனால் அவன் முன்னமே அங்கிருந்து சென்று விட்டான்.

    "நானும் வருகிறேன்", செபெதீ எரிச்சலுடன் கூறினார். இங்கே இனிமேலும் தன் மனைவியுடன் நிற்கும் தைரியம் அவருக்கு இல்லை. குனிந்துத் தன் கோலை எடுத்துக் கொண்டு அவரும் அவர்களுடன் செல்லப் புறப்பட்டார். 

    "மாக்தலேன் அலறினாள். அவளது உடல் முழுதும் காயங்கள், கடித்தடங்கள், நகக் கீறல்கள். குழியினுள் அவள் அங்கும் இங்கும் ஓடுகிறாள். ஒரு வேட்டை விலங்கைப் பார்ப்பதைப்போல மகிழ்ச்சியும், களிப்புமாக சுற்றி மக்கள் கூட்டம் அவளைப் பார்க்கிறது. அவள் தன் கைகளால், தலையையும் முகத்தையும் மறைத்துக் கொண்டு ஓரிடத்தில் குந்தி அமர்கிறாள். திராட்சைத் தோட்டங்களில் அறுவடை செய்து கொண்டிருந்த இளைஞர்களும், இளம்பெண்களும், திராட்சை பாரங்களை ஏற்றி இறக்கும் திடமான ஆண் மகன்களும் தங்கள் வேலைகளை அப்படியே விட்டு விட்டு மாக்தலேனைப் பார்க்க ஒடினர். ஆண்களோ அவளின் பாதி வெளித்தெரியும் அரை நிர்வாண உடலை, ரத்தக் கோரையுடன்  பார்க்கும் ஒரு வித கிளுகிளுப்பான வாய்ப்பிற்காகவும், பெண்கள்,  அப்படி என்ன அவளிடம் ஈர்ப்பு இருக்கிறது, ஆண்களைக் கவரும் வகையில்  என்பதைக் கண்டறியவும், பல ஆண்களுடன் சல்லாபித்த அந்த அருவருப்பானவளை ஆசை தீர சபிப்பதற்காகவும் அங்கே வந்து கொண்டிருந்தனர்.

    பராபஸ் கூச்சலிட்டுக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து கையை உயர்த்தி அடங்கச் சொன்னான். தயாராக இருக்கும் மக்களைப் பார்த்து கல்லெறியச் சொல்வதற்கான ஆணையைப் பிறப்பிக்க முன்னே வந்து நின்றான். சரியாக அத்தருணத்தில் ஜேக்கப் அங்கு வந்தான். கொள்ளைக் காரக் கூட்டத்தின் தலைவனான பராபஸ்ஸை நோக்கி அவனைச் செல்ல விடாமல் பிலிப் அவன் கைகளை இறுக்கிப் பிடித்திருந்தான்.

    "எங்கே போகிறாய்? ஜேக்கப்!, நாம் எங்கே வந்து நிற்கிறோம் தெரிகிறதா? நாம் நால்வர் தான் இருக்கிறோம். அங்கே பார் மொத்தக் கிராமமும் நமக்கெதிரே வெறியுடன் நிற்கிறது. எதிர்த்தால் நமக்கு எந்த வாய்பப்பும் கிடைக்காது" பிலிப் பதற்றத்துடன் கூறினான்.

    ஆனால் தன் அன்னையின் கடுமையான வார்த்தைகளைத் தவிர எதுவும் அவன் காதுகளில் விழவில்லை. அவன் நிற்காமல் முன்னே சென்று கொண்டிருந்தான். "ஹேய்! பராபஸ்! கொலைகாரா! அவன் கத்தினான். நீ எங்கள் கிராமத்திற்கு வந்தது எங்கள் ஜனங்களைக் கொல்வதற்காகத்தானே? நல்லது! அப்படியென்றால் அந்தப் பெண்ணை விட்டுவிடு! அவளை என்ன செய்ய வேண்டும் என்று நாங்கள் முடிவெடுத்துக் கொள்கிறோம். மாக்தலா, மற்றும் கார்பெர்னத்தின் தலைக்கட்டுகள் அவளை விசாரணை செய்யட்டும். அவளது தந்தையான நாசரேத்தின் தூறவியும் வர வேண்டும். அது தான் நியதி!

    "என்னுடைய மகன் சொல்வது தான் சரி!" செபெதீ, இடைமறித்தார். அவரது கையிலிருந்தக் கோலை அழுத்தமாக மன்ணில் ஊன்றியிருந்தார். "அவன் சொல்வது தான் சரி, அது தான் நியதி" அவர் அவனுடைய வார்த்தைகளையே எதிரொலித்தார்.

    பராபஸ் தன் பெரிய முரட்டு உடலை முழுவதும் திருப்பி ஜேக்கப்பை நேருக்கு நேர் பார்த்து நின்றான். "நம் கிராமத்துத் தலைக்கட்டுகள்! இந்தக் கிழட்டுப்பயல்கள் எல்லாம் முடிவெடுக்கத் திராணியற்றவர்கள். இதோ இந்த செபெதீயும் அந்தக் கூட்டத்தில் தானே உண்டு. இவர்களையெல்லாம் நான் நம்ப மாட்டேன். எனக்கு என்னுடைய சொந்த நியதிகள் இருக்கிறது. அதை மீறத் தைரியம் உள்ள ஆண்பிள்ளைகள் முன்னே வாருங்கள். நமக்கெல்லாம் கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் தான். நம் வலுவை நாம் மோதிப் பார்த்து முடிவெடுத்துக் கொள்வோம். என்ன கேட்கிறதா ஆண் பிள்ளைகளா!" என்று கூறித் தன் முஷ்டியை உயர்த்தி கைகளை முறுக்கி அவர்களைக் குத்துவதைப் போலக் காண்பித்து ஏளனமாகச் சிரித்தான்.

    கிராமத்து மக்கள் எல்லோரும் பராபஸ்ஸைச் சுற்றித் திரண்டனர். சிறுவர்கள் தங்கள் கைகளில் கவண்களையும், கல்லையும் வைத்துக்கொண்டு ஒரு படை போல குழியைச் சுற்றி நின்றுகொண்டிருந்தனர். அவர்களின் கொலை வெறி மிளிரும் கண்கள், சாவு! சாவு! செத்தொழி! என்று வசை பாடிக் கொண்டிருந்தது.

    பிலிப், நாத்தனேலைத் தூக்கிக் கொண்டு கூட்டத்தின் ஆரவாரத்திலிருந்து மெதுமெதுவாகப் பின் வாங்கினான். திரும்பி ஜேக்கப்பைப் பார்த்து "உனக்கு வேண்டுமானால் நீ போ! நாங்கள் இங்கேயே நிற்கிறோம். இது சுத்தப் பைத்தியக்காரத்தனம், எங்களை விட்டு விடு"

    "ச்ச்சீ! கோழைப் பிறவிகளா! கேவலமாக இருக்கிறது உங்களைத் துணைக்குக் கூட்டி வந்தது!

    "இல்லை! இல்லை! எங்களால் வர முடியாது! உனக்கு வேண்டுமானால் நீ போ!"

    "ஜேக்கப் அவனது தந்தையை ஒரு முறை பார்த்தான், ஆனால் அவர் அவன் கண்களைப் பார்த்தது இருமுவது போலப் பாவலா செய்து நெஞ்சைப் பிடித்துக் கொண்டார்.

"நான் கிழவனப்பா" அவர் சொன்னார்.

    "நல்லது! அதுதான் உமக்கும், உம் குடும்பத்திற்கும் நல்லது! எனக்கு எரிச்சல் வருவதற்கு முன் இங்கிருந்து ஓடிப் போய்விடுங்கள் முட்டாள் பயல்களா! என்று புருவங்களை உயர்த்திக் கைத்தூண்டிச் சொன்னான்.

    ஜான் தன் அம்மாவைத் தாங்கிக் கொண்டு அங்கே வந்து கொண்டிருந்தான். அவர்களுக்குப் பின்னே மேரி, ஜோசப்பின் மனைவி பின் தொடர்ந்தாள். இன்னும் அவள் அழுகையை நிறுத்தவில்லை. தாக்குண்டது போலத் தன் வாயைப் பொத்திக் கொண்டு விசும்பிக் கொண்டே வந்தாள். அவர்களது வருகையைப் பார்த்த ஜேக்கப், என்ன செய்வது என்று அறியாமல், கோபத்தில் கால்களால் நிலத்தில் மாறி மாறி மிதித்தும், ஓரிரு முறை நிலத்தில்  காறி உமிழவும் செய்தான். எதிரேத் தன் வெறிபிடித்த விவசாயக் கும்பலுடன் பராபஸ், அவர்களை அளக்கிறான். அவனுக்குப் பின்னே, முதிய சலோமி, எதுவும் பேசாமல், அந்தக் கொலைகார கூட்டத்தை அலட்சியத்துடன் பார்க்கிறாள்.

    "ம்ம்! தயாராகுங்கள்!" பராபஸ் கூட்டத்தைப் பார்த்துக் கட்டளையிட்டான். தன் மேலங்கியின், கைகளை மறைக்கும் துணியை மடித்து உருட்டிக் கல் எறிவதற்கு வாகாகக் குழியினைப் பார்த்தான்.

        "அவன் அவளைக் கொன்று விடுவான், அம்மா!" என்று அதிர்ச்சியில் சத்தம் போட்ட ஜான், தன் தாயினைத் தாங்கியிருந்த கைகளைத் தளர்த்தி ஜேக்கப்பை நோக்கிப் போக முயன்றான். சற்றுத் தடுமாறிய சலோமி அவனைப் பிடித்து நிறுத்தினாள்.

"பேசாமல் நில்! ஜான், நீ அங்கு இடைப்படாதே!" 

    திடீரென்று அங்கு தூரத் தொலைவில் இருவர் ஆரவாரமிட்டுக் கொண்டு வருகின்றனர். ஆனந்தக் கூச்சலிட்டு ஏரியின் விளிம்பிலிருந்து கூட்டத்தைக் கிழித்து உள்ளே நுழைகின்றனர்.

    மந்திரம் போல அவர்களின் குரலில் ஒரு சொல் திரும்பத் திரும்ப உச்சாடனம் ஆகிறது.

"ஓ! நம் இறைவன் வருகிறான்!" "நம் இறைவன் வருகிறான்"

    வெயிலில் குளித்து நனைந்து வரும் அந்த இளைஞனால் நிற்க முடியவில்லை. எதனாலோ ஆட்கொண்டது போல அவன் அங்கும் இங்கும் அலைந்து குதிக்கிறான். தன்னிலையற்ற அவன் வாயிலிருந்து அச்சொல் மட்டும் திரும்பத் திரும்ப அதிர்கிறது. அவன் கைகளைத் தலைக்கு மேலே ஆட்டி ஆட்டி நடனமிடுகிறான்.

"MARAN ATHA, MARAN ATHA", நம் இறைவன் வந்து கொண்டிருக்கிறான்" தொண்டைக் கிழிய மொத்தக் காதுகளுக்கும் கேட்கும்படிக் கத்திக் கொண்டிருந்தான்.

    "யார் வருகிறார்கள்" அவர்களின் வெறியாட்டு மொத்தக் கூட்டத்தையும் தொற்றிக் கொண்டது. அங்கு நின்றிருந்த மக்கள் அனைவருமே அழத் தொடங்கினர். தங்கள் கைகளை உயர்த்தி வானத்தைப் பார்த்துக் கதறினர். தங்களின் வெகு நாள் பிரார்த்தனைகளின் சொற்கள் அவர்களுக்குள் நாலாபுறமும் சிதறிக் குமைந்தது.

    "நமது இறைவன்" சொல்லிக் கொண்டே அந்த இளைஞன் பாலைவனத்தின் திசையை நோக்கிக் கை காட்டினான். "அதோ! நம் இறைவன்"

    எல்லோரும் அவன் கைசுட்டியத் திசையை நோக்கினர். கிரக நேரச் சூரியன் மறைவது போலத் திடீரென எங்கும் நிழல் பரவியது. வெக்கை கொஞ்சம் கொஞ்சமாகத் தன் கைகளைத் தாழ்த்தியது. ஏரிக்கரையின் மேடான பகுதியிலிருந்து, தொலைவில் ஒரு புள்ளியாய் அவர்களைப் பார்த்து வந்து கொண்டிருக்கிறான். முழுக்க வெண்மை நிற அங்கியை அணிந்திருந்த அவன், மடாலயத்திலிருந்து வரும் துறவியைப் போலத் தோன்றியது. ஏரிக்கரையின் அலைமடிப்புகளில், பாறைகளில் தொற்றிக்கொண்டிருக்கும் பாசிகளின் பலவண்ண நிற பேதத்தின் ஊடாக வெண்ணிறம் சூடிக் கொண்டு அந்த மனிதன் அவர்களை நோக்கி வருகிறான். அதிலிருக்கும் சிவப்பு நிறப்பாசிக் கொத்தைப் பறித்து முகர்ந்து பார்க்கிறான். சிலக் கடற்காகங்கள் கரையில் படர்ந்திருக்கும் கூழாங்கற்களில் தத்தித்தத்திச் வருகிறது. அது அவன் வருகையின் நிமித்தம் சற்று விலகி நின்று பார்க்கிறது. 

    முதிய சலோமி, தன்  நரை முடிததும்பும் தலையை உயர்த்தி வீசிக் கொண்டிருக்கும் காற்றை நுகர்கிறாள் 

    "யார் வருகிறார்?" அவள் தன்மகனைப் பார்த்துக் கேட்டாள். "காற்றில் சுகந்தத்தின் நறுமணம், ஏதோ ஒரு அபரிவிதமானத் தூய இருப்பினை அக்காற்றின் வழித் தான் உணர்வதாகச் சொல்கிறாள்.

    "என் இருதயம் வெடிப்பதற்குத் தயாரக இருக்கிறது, அம்மா" வருவது அவனாகத் தான் இருக்க வேண்டும். ஜான் கூறினான்.

"யார்?"

"ஸ்ஸ்ஸ்ஸ்.......,பேசாதே அம்மா!"

    "அவனுக்குப் பின்னால் வருகிறார்களே அவர்கள் யார்? ஒரு பெரும்படையையே அவன் கூட்டி வருவது போலல்லவா இருக்கிறது"

    "அவர்கள் பாவப்பட்டவர்கள் அம்மா!, திராட்சைத் தோட்டங்களில் இலைகளைப் பொறுக்கிப் பிழைக்கும் அடிமைகள், அவர்கள் ஒன்றும் சேனைகள் அல்ல, பயப்படாதே!"

    உண்மையில் அவனைப் பின் தொடர்ந்து இந்தக் கந்தல் துணி அணிந்து வரும் பாவப்பட்ட ஏழை ஜீவன்களின் திரள் தான் அவனின் பெரும்படை போல இருக்கிறது. திடீரென்று திரளாக வந்த ஆண்களும், பெண்களும், அவர்களின் குழந்தைகளும் அறுவடை நடக்கும் திரட்சைத் தோட்டங்களை நோக்கித் தங்கள் கூடைகளையும், பைகளையும் தூக்கிக்கொண்டு ஓடினர். அவர்கள் அன்றைய விளைச்சலுக்கானக் கூலியை, அந்தந்த நிலஉடைமையாளர்களிடமிருந்து வாங்குவதற்குத்தான் அவர்களுக்கு இத்தனை அவசரம்.  ஒவ்வொரு வருடமும், திராட்சை மற்றும் ஆலிவ் விளைச்சல் செழித்திருக்கும் அறுவடை சமயங்களில், கலீலியின் பாலை நிலத்திலிருந்து பஞ்சம் பிழைக்க வரும் இந்த பசித்த நாடோடி மக்கள் தான் தங்கள் முழு உழைப்பினையும் கொடுத்து முதலாளிகளுக்கு நல்ல செழிப்பான அறுவடை ஈட்டிக் கொடுக்கிறார்கள். அதற்குக் கூலியாக குறைந்த பட்சக் கோதுமை தானியங்கள். திராட்சைகள், ஆலிவ் பழங்களை வாங்கிக் கொண்டு தங்கள் பிழைப்பை ஓட்டுகிறார்கள். வருடா வருடம் விளைச்சலில் இத்தனை அளவை அவர்களுக்குக்  கூலியாக வழங்க வேண்டும் என்பது இஸ்ரவேலத்தில் எழுதப்படாத விதி.

    வெண்ணிற ஒளி போல வரும் அந்த மனிதன் ஓரிடத்தில் நின்று தூரத்தில் தெரியும் மக்கள் கூட்டத்தைப் பார்க்கின்றான். அந்தப் பெருங்கூட்டம் அவனுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. அவன் அதைப் பார்த்துப் பயப்படவும் செய்கிறான். "நான் திரும்பப் போய்விடுகிறேன்; திரும்பப் பாலைவனத்திற்கே போய்விடலாம், அதேப் பழையப் பிரச்சனை அவனை அலைக்கழிக்கிறது. இந்த மனிதர்களின் உலகில் என்னால் இருக்க முடியாது, நான் திரும்பவும் என் கடவுளின் பிரார்த்தனைகளின் உலகிற்குத் திரும்பி விடுகிறேன். திரும்பவும் அவனது விதி ஒரு சிக்கலானக் கயிற்றில் ஊசலாடுகிறது. "எந்த வழியில் நான் செல்ல வேண்டும். முன் நோக்கியா! இல்லை பின் நோக்கியா!"

    குழியினைச் சுற்றி நின்று கொண்டிருந்த அனைவருமே அசைவற்று அவனின் வருகையை எதிர் நோக்கி நிற்கின்றனர். ஜேக்கப்பும் பராபஸும் இன்னும் எதிரெதிரே ஒருவரை ஒருவர் வெறித்து, தங்கள் முஷ்டிகளை உயர்த்திப் பிடித்து தாக்குவதற்குத் தயாராக முன்னேறுகின்றனர். குழியினுள்ளிருக்கும் மாக்தலேன் தன் முகத்தை உயர்த்தித் திரளாய் நிற்கும் கூட்டத்தைப் பார்க்கிறாள். வாழ்வா? சாவா! எனும் இருமையினுள் சதா பந்தாடப்பட்டுக் கொண்டே இருக்கும் தன் விதியை எண்ணி நொந்து கொண்டும், அங்கிருந்து தப்பிக்க ஏதாவது வழி கிடைக்காதா என ஏங்கியும் சுற்றி சுற்றிப் பார்க்கிறாள். மக்களோ தங்களை மறந்து எங்கோ எதிலோ கருத்தூன்றி அசைவற்று நிற்பதைப் பார்த்துத் திகைத்துக் குழம்பியும், குழியிலிருந்து மேலேறிச் செல்ல எதாவது திண்டுபோல இருந்தால், குதித்து ஓடி விட வாய்ப்புண்டா என்ற யோசனையிலும் அங்கும் இங்கும் ஓடுகிறாள். எங்கும் அமைதி பற்றிக்கொண்டு இருக்கிறது. திடீரென அவள் ஒரு சிறிய மணல் திண்டில் கால் வைத்துக் குதித்து எம்பி எம்பிக் கத்துகிறாள், "காப்பாற்றுங்கள்!".

    வெள்ளை அங்கி அணிந்து வரும் மனிதனால் அக்குரலைக் கேட்க முடிகிறது. மிகவும் பரிசயமான அக்குரல் அவனைப் பிறள வைக்கிறது.

    "அது மாக்தலேன்" "மாக்தலேன்" அவளை நான் காப்பாற்ற வேண்டும்" அவன் தனக்குள் சொல்லிக் கொண்டே அக்குரலின் திசை நோக்கி ஓடி வருகிறான்.

    அவன் அந்த மக்கள் திரளை நோக்கி அருகே வந்து விட்டான். அவர்கள் அனைவரும் எதோ துஷ்ட மிருகம் பீடிக்கப்பட்டதைப் போல கோபாவேசத்துடன், உயிரை வதைத்துக் கொல்லும் வன்மம் மிகுந்த தீக்கண்களுடன் குழியினைச் சுற்றி நின்று கொண்டிருப்ப்பதைப் பார்க்கின்றான். அவர்களின் பலப்பல முகங்கள் அவனுள் ஊடாடுகிறது. அவன் ரத்தமும் சதையுமாகத் தன் முன் நிற்கும் மனிதத்திரள் ஒவ்வொன்றிற்காகவும், வருத்தமும் துக்கமும் படுகிறான். அவனால் தாங்கிக் கொள்ள முடியாத அன்பின் பிரவாகம் அவனுள் ஊற்றெடுக்கிறது. சற்று முன்பிருந்த உணர்ச்சிகள் முற்றிலுமாகக் குலைந்து தன்னைப் போலவே அம்மக்களையும் ஒரு பெரும் கனிவுடன் நோக்குகிறான். அது ஒரு செய்கையோ, பாவனையோ அல்ல. அவனால் அதனை யூகிக்க முடியவில்லை. அது அவனை மீறி அவனுள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதன் கட்டுப்பாடின்மையின் விசையே அவனை இழுத்துச் செல்கிறது. "இவர்கள், இந்த மனிதர்கள் ஒவ்வொருத்தரும் என் சகோதரர்கள். அவர்களுக்கு அது தெரியவில்லை, அதனாலேயே அவர்கள் துன்பப்படுகிறார்கள், பாவச்சழுக்குகளில் வீழ்கிறார்கள். ஆனால் நான் மிக மிக அணுக்கமாக இந்த ஒவ்வொரு மனித உயிரையும் என்னுள் உணர்கிறேன். ஒரு வேளை இம்மனிதர்கள் இதனை உண்மையாகத் தாங்களும்  உணர்ந்து விட்டால், அவர்கள் பரஸ்பரம் அன்பு கொள்வார்கள், கட்டிப் பிடித்து முத்தமிடடுவார்கள், அங்கு என்ன ஒரு இன்பமயமான ஒரு உலகம் உருவாகிடும்"

    கடைசியாக அவன் அங்கு வந்துசேர்ந்தான். கூட்டத்திற்கு அருகிலிருந்த சிறியப் பாறைக் குன்றத்தின் மேலேறி நின்று அவர்களை முழுதாகப் பார்த்தான். சொல்! ஒரு மகத்தான சொல்! அச்சொல்லின் ஒன்றின் பலதின் பல்லாயிரம் துளிகளின் ஒருத்துளியாக அவனுள்ளிருந்து துடித்துக் கொண்டிருந்தது அச்சொல். அவன் வாயைத்திறந்தான். அது தன்னைக் வெளிப்படுத்தியது.

"சகோதரர்களே!"

திகைத்துப் போன மக்கள்! வாயடைத்து நின்று கொண்டிருந்தனர்.

"சகோதரர்களே!" ஒரு பீறிடலாய், உடைப்பாய், திறப்பாய், பல்கிப்பெருகும் வித்துக்களாய் அச்சொல் மறுபடியும் வெளிப்பட்டது. 

"சகோதரர்களே! உங்களைக் கண்டதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்"

    "நல்லது, ஆனால் எங்களுக்கு உன்னைக் கண்டதில் எந்த மகிழ்ச்சியுமில்லை, வெறுப்புதான் தலைக்கேறுகிறது சிலுவைகள் செய்யும் துரோகியே". பராபஸ் குனிந்து ஒரு பெரிய உருளைக்கல்லை எடுத்துக் கொண்டு அவனைப் பார்த்து பதிலளித்தான்.

"என் மகனே!" உருகி வழியும் அழுகையுடன் மேரி ஜீசஸை அணுகி அவனைத்  தன் மாரோடு இழுத்து அணைத்துக் கொண்டாள். தன் மார்புச்சூட்டில் அவனைப் பொத்தி வைத்து சிரித்தாள், அழுதாள், விம்மினாள், ஏங்கி ஏங்கி மூச்சிறைத்தாள். தன்னுள் அப்படியே அவனைப் புகுத்த வாய்ப்பிருந்தால் அவள் அவனை அமிழ்த்திப் புதைத்திருப்பாள். ஆனால் அவனோ அவளிடம் எதுவும் பேசாமலவள் முகத்தைக் கூட ஏறிட்டுப் பார்க்காமல், இறுக்கிப்பிடித்திருந்த அவளின்  கைகளை விலக்கி பராபஸை நோக்கிச் சென்றான்.

    "பராபஸ்! என் சகோதரா! உன்னைப் பார்த்தது எனக்கு எவ்வளவு மகிழ்வளிக்கிறது தெரியுமா!. நான் பேரன்புடன் உங்களிடம் ஒரு செய்தியைச் சொல்ல வந்திருக்கிறேன்"

    "அருகில் வராதே" கடுமையானக் குரலில் சொன்னவன், நின்ற இடத்திலிருந்து சற்று விலகிப் பின்னால் குழியினுள் இருக்கும் மாக்தலேனை மற்றவர்களின் பார்வையிலிருந்து மறைக்கும் வண்ணம் நின்று கொண்டான். ஆனால் தன் அன்பிற்குரியவனின் குரல் அவளுக்குக் கேட்டது. அவனின் முகத்தைக் காணத் தன் ரத்தம் வழியும் முகத்துடன் குதித்துக் குதித்துப் பார்க்கிறாள்.

    "ஜீசஸ்", என்னைக் காப்பாற்று". அது வெறும் அபய விளி இல்லை. அவள் தான் நொதிக்கும் குழியிலிருந்து அவன் ஒருவனே தன்னை வெளியேற்றும் வழி அறிந்தவன் என்பதை தீர அறிவாள். பயத்தின் பொருட்டில்லாமல் தன்னை அவனிடம் ஒப்புவித்துவிடலாம் எனும் தூய அன்பின் குரல் அது.

    ஒரு அடி முன்னே எடுத்து வைத்து அவன் பள்ளத்தின் விளிம்பிலிருந்து கீழே பார்த்தான். மாக்தலேன் மேலே ஏறுவதற்காக, ஒரு பாறையைப் பற்றிக்கொண்டு கால்களால் உந்தித் தன் கையை உயர்த்திக் காட்டுகிறாள். அவளின் கைகள், அதன் விரல் நுனிகள் அவனுக்குத் தெரிகின்றன. அவன் குனிந்துத் தன் கைகளை அவளுக்காக நீட்டினான். அவ்விரல்கள் ஜீசஸின் விரல்களுடன் இறுக்கமாகப் பிணைந்து கொண்டது. அவன் அவ்ளைப் பிடித்து ஒரே உந்தில் தூக்கிப் பள்ளத்திற்கு வெளியே, மண்ணில் அமர்த்துகிறான். உடல் முழுதும் கொப்பளிக்கும் காயங்களின் வேதனையுடன் அவள் தன் உடுதுணியால் நெற்றியின் இடது ஓரத்தில் சொட்டும் ரத்ததத்தை அழுத்தித் துடைக்கிறாள். ரத்தமும் , மண்ணும், வியர்வையும் அவளின் உடையில் திட்டுத் திட்டுகளாக ஒட்டியிருந்தது.

    பராபஸ் சற்றும் தாமதிக்காமல் முன்னே வந்து தன் கால்களால், தரையில் அமர்ந்திருந்த அவளின் முதுகில் மிதித்து, தரையோடுத் தரையாக அவளைத் தேய்த்து அழுத்திக் கத்தினான். "இவள் எனக்குச் சொந்தமானவள்"! தன் கையிலிருந்த கனத்தக் கல்லை மேலே உயர்த்தி, "நான் இவளைக் கொல்வேன்". இவள் இறைவனுக்கானப் பிரார்த்தனை நாளை மாசுபடுத்தி விட்டாள். "பாவத்திற்குச் சம்பளம் மரணம்" 

    "மரணம்! மரணம்! கூடி நின்ற மக்கள் கூட்டம் ஒருமித்து ஊளையிட்டது. அவர்கள் கைகளில் கூர்மையான மற்றும் உருளைக் கற்கள் இருந்தன, பற்களைக் கடித்துக் கொண்டு ஆத்திரம் பொங்க அவர்கள் அலறினர். ஆனால் ஒரு குழப்பம். அவர்கள் கல்லை எறிய கைகளை உயர்த்தவில்லை. தங்களுக்கான ரட்சிப்பின் வழியை அது குலைத்துவிடுமோ என்ற பயமும் அவர்களிடம் இல்லாமல் இல்லை. ஆனால் ஒருவித கும்பல் மனப்பான்மையில் அவர்கள் ஒன்றாகக் கத்துகின்றனர். யாராவது ஒருவர் மாற்றிப் பேசினால் அவர்கள் ஒருவேளை அவர்களின் சொல்படி நடந்து கொள்வதற்கே வாய்ப்புகள் அதிகம். தங்களுக்குள் அவர்கள் வாதிட்டுக் கொண்டும், சிலபேர் இன்னுமே இந்த நிகழ்பவைகளுக்குச் சம்மந்தமில்லாதது போல, தங்களுக்குள் கேலியும், கிண்டலும் பேசிக் கொண்டும், மாக்தலேனைப் பரிகாசம் செய்து கொண்டும் இருந்தனர். உண்மையில் யாருக்கும் எதன் மீதும் பெரிய நம்பிக்கை ஏற்படவில்லை. ஆட்டுமந்தையினைப் போன்ற இந்த ஜனங்கள், ஒருவன் என்ன செய்கிறானோ அதனை மற்றவனும் பிரதி செய்தால் போதுமானது என்று நினைப்பவர்கள். உள்ளூறப் பயந்த பிறவிகள். உண்மையானக் கோபமோ, வெறுப்போ, அன்போ, கருணையோ, இரக்கமோ ஏதும் அவர்களிடமில்லை. அந்தந்த சூழ்நிலைகளே அவர்களிடம் அதன் குணாதீசியங்களைத் தீர்மானிக்கின்றன. புகை போல எழும்பி அடங்கும் இம்மக்கள் கூட்டம் தற்போது என்ன செய்வது என்பதை இன்னுமே தீர்மானிக்காமல் அங்கு நின்று சலம்பிக் கொண்டிருந்தது.

    "மரணம்!" செபெதீயும் கூட அழுது கொண்டேக் கத்தினார். ஆனால் அவருடையப் பார்வை புதிதாக அங்கே வேலை செய்ய வந்திருக்கும் ஏழை ஆண்கள் மற்றும் பெண்களின் கூட்டத்தை நோட்டமிட்டது. அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் புதியவர்கள் நிச்சயமாக நமக்கு மிகவும் உதவிகரமாக இருப்பார்கள். மிகக்குறைந்த கூலிக்கு நல்ல உழைப்பை அவர்களிடம் நாம் உறிஞ்சி விடலாம் என்று தனக்குள் இயல்பாகக் கணக்குகள் இட்டுக் கொண்டிருந்தார். 

    "ஆம்! மரணம்! மரணம்! அவர் தன் கையிலிருந்து கோலை உயர்த்தி ஆட்டி, அத்தருணத்தை ஆகோசித்தார்.

    ஜீசஸ், பரபாஸை மேலும் முன் நகராதபடி தடுத்து நிறுத்தினான். "பராபஸ்" சாந்தமாகவும், கவலையுடனும் அவன் விளித்தான். "கடவுளின் கட்டளைகளை நீ ஒரு முறையாவதுக் கீழ்படிந்து மீறாமல் நடந்து கொண்டிருக்கிறாயா?" உன்னுடைய வாழ்நாளில் ஒரு முறைக் கூட நீ திருடவோ, கொலை செய்யவோ, பிறன் மனை நோக்கவோ, இல்லை பொய்யோ சொல்லாமல் இருந்திருக்கிறாயா?"

    ஜீசஸ் நின்றிருந்த இடத்திலிருந்துத் திரும்பி ஊளையிட்டு ஆரவாரிக்கும் மக்கள் கும்பலைப் பார்த்தான். அங்கே  நின்று கொண்டிருந்த ஒவ்வொரு முகங்களையும் தனித்தனியே உற்றுக் கவனித்தான். அவனது துளைக்கும் பார்வை அவர்களை உள்ளீடற்றதைப் போலக் கடந்து செல்வதாக அவர்கள் உணர்ந்தனர். அவனின் கண்களைப் பார்க்கும் தைரியம் இல்லாமல் அவர்கள் குனிந்து நின்றனர். ஆனால் கைகளிலிருந்த கற்களை இன்னும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    "உங்களில் யார் பாவம் செய்யவில்லையோ, அவர்கள் முதலில் கல்லெறியுங்கள்!"

    அவர்கள் பின் வாங்கினர். கூர்மையான அவனின் தகிக்கும் பார்வை அவர்களின் ஞாபகங்களை, கடந்த காலத்தை, அவர்கள் மட்டுமே மறைத்து வைத்திருந்த அந்தரங்கமானத் தீய்மைகளைக் கிளர்த்திவிட்டது. தங்களுக்குள் சமாதானம் அடைந்துகொள்ளும் நற்செயல்கள் என்ன செய்தோம் என அகத்தினுள் துருவிக் கொள்ள, மேலும் மேலும் கீழ்மைகளின் நினைவுகள் மட்டுமே அதனுள் இருந்து வெளித்தெரிவதால் அவர்கள் நிலைகுலைந்தனர். இக்கேள்வியின் அர்த்தப்பாடு என்பது தங்களின் மொத்த வாழ்க்கையையே அடகு வைக்கச் சொல்கிறது என்பது அவர்களுக்குப் புரிந்தது. தீர்ப்பு நாளில் தான் எவ்வாறு இறைவனின் முன் ஒரு புழுவினைப் போல உழலப் போகிறோம் எனும் பலதரப்பட்ட எண்ணங்களின் சுழல்களில் அவர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் தன்னைப் போல மற்றவர்களின் செயல்களையும் சமமாக ஒப்பிட்டு அப்படி ஒன்றும் தான் பெரிய கீழ்மையினைச் செய்து விடவில்லை, நம் பாவங்களும், கீழ்மைகளும் மன்னிக்க முடிந்த குற்றங்களே, கருணை மிக்க இறைவன் நிச்சயமாகத் தங்களை மன்னிப்பான் என்று சமாதானமும் அடைந்தது. ஆனால் தம்மில் பாவம் செய்யாத ஒருத்தர் யார் இருக்கிறார். அவர்களுக்கு அக்கேள்வியின் அர்த்தம் புரிந்தும் அதன் அபத்தம் அவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. அதனால் அவர்கள் எதிர்த்து எந்தக் குரலும் எழுப்பாமல் அமைதியாகப் பின் வாங்கினர். தன் கைகளிலிருந்தக் கற்களை அப்படியே நின்ற இடத்திலேயே கீழே போட்டனர்.

    நிலைமை தலைகீழாகிக் கை மீறிப் போவதை உணர்ந்த செபெதீ கூட்டத்தை நோக்கி ஆத்திரத்துடன் விரைந்தார். திரும்பவும் ஜீசஸ் அதே சாந்தமானக் குரலில் எந்த ஏற்ற இறக்கமுமற்று அவர்களை நோக்கிக் கேட்கிறான், அவனது பார்வை அங்கே நின்று கொண்டிருந்த ஒவ்வொருத்தரின் அகத்தைக் குத்தி உள்ளே செல்லும் கூர்மையுடனும், அனுதாபத்துடனும் இருந்தது.

"உங்களில் யார் எந்தப் பாவமும் செய்யவில்லையோ, அவர்கள் முதலில் கல்லெறியுங்கள்!"

"நான் இருக்கிறேன்" கூட்டத்தை முறித்து உள்ளே வந்தார் செபெதீ. பராபஸ் உன்னிடம் இருக்கும் கல்லை என்னிடம் கொடு. அப்பாவித்தனம் என்றும் பயமற்றதுஎன்று நான் நிரூபிக்க வேண்டும். அதனால் நான் முதலில் எறிகிறேன்"

    பராபஸ் சந்தோஷமாகக் கல்லை அவரிடம் கொடுக்க முன்னே அடி எடுத்து வைத்தான். செபெதீ கீழே குனிந்து மாக்தலேனைப் பார்த்து, தன் கையில் இருக்கும் உருளைக் கல்லை உருட்டிப் பார்த்து அதன் எடையைக் கணித்துக் கொண்டு, குறிவைத்து சரியாகத் தலையில் எறிவதற்காகத் தயாரானார். அவள் தரையில் கைகளால் உந்தித் தவழ்ந்து வந்து, நின்று கொண்டிருந்த ஜீசஸின் கால்களைப் பற்றிக் கொண்டு அவனுக்குப் பின்னே மறைந்து கொண்டாள். அவனைத் தொட்ட அந்தக் கணம் அவள் அமைதியானாள், அவளின் பயங்கள் பறந்து போயின. தன்னை யாராலும் கொல்ல முடியாது என அவள் தீர்மானமாக நம்பினாள். விசும்பலை நிறுத்திக் கொண்டு, தன் விரல்களினாள் தொட்டுக் கொண்டிருக்கும் ஜீசஸை, அவனின் மானசீகமான அணுக்கத்தை மேலும் மேலும் தன்னால் முடிந்த வரைப் பெருக்கிக் கொண்டாள்.

    சற்றுப் பெரிய உடல் கொண்ட வளர்த்தியான ஒரு நாடோடி, கூட்டத்திலிருந்துக் குதித்து செபெதீயை நோக்கி வந்தான்.

    "ஹேய்! செபெதீ!, கடவுள் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். தெரியுமல்லவா, உனக்கு. உன் கைகள் செயலிழந்துப் போய்விடும். கை உயர்த்துவதற்கு முன் நன்றாக யோசித்துக் கொள், உனக்குப் பயமாக இல்லை! 

"நீ எங்களைப் போன்ற ஏழைகளின் உழைப்பைச் சுரண்டி லாபம் பார்க்கவில்லை!"

"நீ பாவப்பட்டவர்களின் திராட்சைத் தோட்டத்தைக் குறைந்த விலைக்கு ஏலம் எடுத்து கொள்ளை லாபம் சம்பாதித்து உன் வயிற்றை ரொப்பிக் கொள்கிறாய், மாறாக அவர்களை அடிமைகளைப் போல நடத்தி, நீ கொடுப்பதை மட்டுமே அவர்கள் புகாரில்லாமல் வாங்கிச் செல்லும் சூழலை உருவாக்கி, அவர்களை உன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறாய்"

"நீ இதுவரை இரவு நேரங்களில், எந்த விதவைப் பெண்கள் வீட்டிற்கும் சென்றதில்லையா என்ன?"

    கேட்டுக் கொண்டிருந்த அந்த வயதானப் பாவியின் கைகளில் இருந்தக் கல்லின் கனம் கூடிக் கொண்டே இருந்தது. தந்திரமான அவரது கண்களில் பயத்தின் ரேகைகள் தெரிய ஆரம்பித்தது. திடீரென உடைந்து அழ ஆரம்பித்தார். தன் கைகள் பலவீனமாகத் தொங்கியது, அதிலிருந்த கல் நழுவி அவரது கால்களில் விழுந்து நிலத்தைத் தழுவியது.

    அந்த நாடோடி குதூகலமாகக் கத்தத் தொடங்கினான். "அற்புதம்! இது அற்புதம்!. மாக்தலேன் பாவம்! அவள் ஒரு அப்பாவிப் பெண்!"

    பராபஸ்ஸிற்கு ஆத்திரம் பொங்கியது. தழும்புகள் கொண்ட அவனது அகோரமான முகம் வெறியில் சிவந்தது. விரைந்து மேரியின் மகனை நோக்கிச் சென்றவன், தன் வலுவானக் கையை உயர்த்தி ஜீசஸின் கன்னத்தில் அறைந்தான். ஆனால் உணர்ச்சிகள் எதுவுமே வெளிப்படாது ஜீசஸ் அமைதியாகத் தன் மறுகன்னத்தைக் காட்டினான்.

    "ம்ம்! இன்னொரு கன்னத்திலும் அறைந்து விடு, பராபஸ், என்னருமை சகோதரா!" ஜீசஸின் குரலில் கனிவு கூடியிருந்தது.

    பராபஸ்ஸின் ஓங்கியக் கை உணர்ச்சியற்று, ஒரு உயிரில்லாப் பொருள் போல தோள்களில் குலுங்கியது. அவனது கண்கள் ஜீசஸிந் முகத்தை நேருக்கு நேர் பார்த்தது. யாரிந்த மனிதன்?  ஒரு பிசாசா! மனிதனா! இல்லை சாத்தானா! அவன் குழப்பமடைந்தான். நிதானிக்க முடியாமல் சற்றுப் பின்னே நகர்ந்து நின்றான்.

    "இன்னொரு கன்னத்திலும் அறைந்து விடு, என் சகோதரா!" மேரியின் மகனின் கண்கள், பராபஸ்ஸை எந்த நோக்கமுமற்ற, களங்கமின்மையுடன் பார்த்தது.

    அச்சமயத்தில் யூதாஸ் அருகில் மறைந்து நின்றிருந்த ஒரு அத்திமரத்தின் நிழலில் இருந்து வெளியே வந்தான். வெகு நேரமாக அங்கே நின்று கொண்டு நடப்பதை நோட்டமிட்டுக் கொண்டிருந்தான் அவன். எல்லாவற்றையும் பார்த்திருந்தாலும் ஒரு சொல் கூடச்  சொல்லவில்லை. மாக்தலேனை கொலை செய்தாலும் இல்லா விட்டாலும் அதில் அவனுக்குப் பெரிய வேறுபாடில்லை. ஆனால் அந்த ஏழை நாடோடி, செபெதீயின் முகத்திரையைக் கிழித்து அவனின் பாவங்களைப் பட்டியலிட்டு மக்களின் முன் பிரகடனப் படுத்தியதை அவன் கவனமாகக் கேட்டான். அப்பொழுது மக்களின் முகங்களில் உருவாகிய எண்ணங்களின் அலைவோட்டத்தை அவன் புரிந்து கொள்வதற்காகத், தான் மறைந்து நின்றிருப்பதே சரியானது என்று அங்கேயே அசையாமல் நின்றிருந்தான். ஏரிக்கரையின் மேட்டுப்பகுதிலியிருந்து பாறைகளைப் பிடித்து உந்தி ஏறி வந்து கொண்டிருந்த ஜீசஸின் அந்த வெண்மை நிறத் தோற்றத்தைப் பார்த்ததும், யூதாஸின் மனத்தில் கட்டுப்படுத்த முடியாத ஒரு உணர்வுப்பெருக்கு உருவாகியது. அவனின் அகம் துடிக்கத் தொடங்கியது. எல்லா முறையும் என்னை இந்த மனிதன் ஆச்சரியப் படுத்தி, ஆட்கொண்டு விடுகிறான் என்று நினைத்தவன் அவன் இம்மனிதர்களுக்காக அப்படி என்ன செய்தியை வைத்திருக்கிறான் என்றும்,  ஒரு வேளை அவனது வார்த்தைகள்,  இஸ்ரவேலத்தின் ஒரே இறைவனின் சொல்லாகவும் இருக்கலாம் என்ற நம்பிக்கையில், அவனையேக்  கவனித்துக் கொண்டிருந்தான். ஆனால் அவன் பேசத் தொடங்கியதும், அவனின் முதல் வார்த்தையான "சகோதரர்களே" என்பதைக் கேட்டதும் எல்லாமே அவனுக்குக் கசப்பாகி விட்டது. இவன் திருந்தவே இல்லை. இன்னும் தன் தலையில் முட்டாள்த்தனங்களைத் தான் தூக்கிக் கொண்டு இம்மக்களிடம் வந்திருக்கிறான் என்று அதிருப்தியடைந்தான். 

"இல்லை! இல்லை! நாமொன்றும் சகோதரரகள் இல்லை. இஸ்ரவேலத்தவர்களும், ரோமானியர்களும் சகோதரர்தளில்லை. ஏன் இஸ்ரவேலத்தவர்களேத் தங்கள் சகோதரத்துவத்தை அவர்களுக்குள் உணரவில்லையே! பைத்தியக்காரன்!"

    "நமது யூதத்தின் அரசக் குழு , ரோமானியர்களுக்குத் விலை போய்விட்டது. கிராமத் தலைவர்களான பெரியவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், இந்தக் கொடுங்கோலாட்சியைப் பாரபட்சமின்றி, வெட்கமில்லாமல் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். நாமெல்லாம் என்ன சகோதரர்களா! இல்லை! நீ மிகத் தவறாக இந்த மக்களின் முன் உன் வார்த்தையைத் தொடங்கி விட்டாய், தச்சனின் மகனே! கவனமாக இரு! இம்மக்கள் கூட்டத்தின் உண்மையான சுயரூபம் உனக்குத் தெரியாது. ஆனால் ஜீசஸ் தன்னை அறைவதற்கு இன்னொரு கன்னத்தையும் காட்டியவுடன், அவனைப் பற்றிய யூதாஸின் எண்ணங்கள் குழம்பிவிட்டது. என்ன இது! எந்தக் கோபமுமில்லாத இந்த முகம், இது ஒரு மனிதன் செய்வது அல்ல! ஆனால் அம்முகத்தில் எந்த மாறுதலுமில்லை. பயமில்லை! வெட்கமில்லை! கோபமில்லை! சாந்தம்! சாந்தம்! மறுதலிக்கவே முடியாத அவ்வுணர்வு மட்டுமே அதில் வெளிப்படுகிறது. அப்படி ஒரு உணர்வை அவனால் எதிர்கொள்ள முடியவில்லை. அவனுக்கு உண்மையில் ஜீசஸைப் பார்த்தால் பயமாக இருந்தது. "என்ன மாதிரியான மனிதன் இவன்?" அவன் தனக்குள்ளேயே கேள்விகளினுள் உழன்றான். ....இன்னொரு கன்னத்தையும் காட்டும் இவன் ஒரு தேவதை. ஒரு தேவதை மட்டும் தான் இப்படிச் செய்யும் இல்லையென்றால் ஒரு தெரு நாய்.

    சட்டென எம்பிக் குதித்து உள்ளே வந்த யூதாஸ், ஜீசஸை நோக்கித் திரும்பவும் கைகளை உயர்த்தி முன் செல்ல முயன்ற பராபஸ்ஸைத் தன் வலுவானக் கைகளால் முடக்கி இறுக்கினான்.

"அவனைத் தொடாதே! யூதாஸ் கத்தினான்.

"ம்ம்! உன் குடிலுக்குத் திரும்பப் போ!"

    பராபஸ் ஆச்சர்யம் தொனிக்க கண்கள் உயர்த்தி யூதாசை பார்த்தான். அவர்கள் ஒன்றாக வளர்ந்து வந்தவர்கள். அவர்களின் சகோதரக் குழுவில் அவர்களே இணைந்து திட்டம் தீட்டி ஊர் ஊராக, கிராமம் கிராமமாக, இஸ்ரவேலத்திற்கு எதிராக இருக்கும் துரோகிகளை நோட்டமிட்டுக் கண்டறிந்துக் கொன்றுக் குவித்திருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது என்னாயிற்றுத் தன் துணைவனுக்கு, என்று யோசித்து ஸ்தம்பித்து நின்றான் பராபஸ்.

"நீயா, யூதாஸ் இதைக்சொல்கிறாய்" அவன் முணுமுணுத்தான்.

"ஆம்! நான் தான் சொல்கிறேன், திரும்பிப் போ!"

    பராபஸ் இன்னமும் அசையாமல் நின்று கொண்டிருந்தான். தனது சகோதரர்கள்  குழுவில் அவனுக்குக் மேலே அவனுக்கு கட்டளைகள் இடுபவன் யூதாஸ். அதனால் அவன் வார்த்தைகளை பராபஸ்ஸால் எதிர்க்க முடியாது. அதே நேரம் தனது சுயமரியாதை அவனை அங்கிருந்து நகர விடாமல் பிடித்திருந்தது.

    "போ!" செந்தாடிக்காரன் மறுபடியும் குரலை உயர்த்தி அத்ரிந்தான்.

    கொலைகாரக் கும்பலின் தலைவன், தன் தலையைத் தாழ்த்தி அவன் சொல்லுக்கு அடிபணிவது போலத் தன் உடலைக் குறுக்கிக் கொண்டான். எதிரில் நின்றிருந்த மேரியின் மகனை, இரக்கமற்றுப் பல்லைக் கடித்துக் கொண்டுப்பார்த்து உறுமினான்.

    "நீ என்னிடமிருந்து தப்ப முடியாது, நாம் மறுபடியும் சந்திப்போம்" தன் முட்டியை இறுக்கி அவனைக் குத்துவதைப் போல நீட்டிச் சொன்னான் பராபஸ்.

    அவனது கொள்ளைக் கும்பலைப் பார்த்து அரைமனதுடன் கட்டளையிட்டான், "ம்ம்! நாம் போகலாம்!"

வெள்ளி, 4 மார்ச், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் - 64

   

    வெம்மையும் ஈரப்பதமும் கலந்தக் காற்றின் சுகந்தம் ஜென்னசரேட் ஏரிக்கரையில், பெரிய பெரிய அலைகளாக விழுந்து கொண்டிருந்தது. உப்பின் வீச்சம் தெறிக்க அலைக்கற்றைகள் கரையில் பாறைக் குன்றங்களைத் தழுவின. வசந்தத்தின் விடியல், சீரானக் காற்று, பறவைகளின் கிரீச்சிடல்கள், ஆண்கள் பெண்களின் கூச்சலும், நடமாட்டமும் சேர்ந்து கார்பெர்னம் ததும்பியது. கொத்துக் கொத்தாய் திராட்சைக் கொடிகள் தோட்டத்தில் கனத்துக், கனிந்துத் தரைதொட்டுத் தொங்கிக் கொண்டிருந்தது. இளம் பெண்களும் திராட்சைகள் போலவேக் கனிந்து கொத்தும் குலையுமாகத் திரட்சியாக இருந்தனர். அவர்கள் திராட்சைக் கொடிகளில் இருந்தக் கனிகளைப் பிய்த்து, புளிப்பும் இனிப்பும் திகட்டும் அதன் சுவையை நாவுகளில் சப்புக் கொட்டும் பொழுது, அவர்களின் முகங்களும் அப்பழச்சாற்றின் ரசம் போல மயங்குவதை, இளைஞர்கள் மறைந்திருந்தும், நேரடியாகவும் கண் கொட்ட உல்லசமாக ரசித்துக் கொண்டிருந்தனர். இளைஞர்கள், இளமைக்கே உரித்த துடுக்குத்தனத்துடனும், வேகத்துடனும் தங்களுக்குள் கேலி பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தனர். இளம் பெண்கள் தங்களைக் காணும் இளைஞர்களை, வம்புக்கிழுப்பது போல சத்தமாகப் பேசிக் கொண்டு அவர்கள் காணும்படி செய்கைகளால் பரிகாசம் செய்து கொண்டிருந்தனர். அதைக்காணும் இளைஞர்களின் முகம் வெட்கத்தில் சிவந்தன. அறுவடைக்காகக் கனிந்திருந்த திராட்சைத் தோட்டங்களிலெல்லாம், ஆண் பெண்களின் கேலியும், வம்பளத்தல்களும், கூச்சல்களும், நகைப்புகளும் அதிகரித்தபடியே இருந்தது. ஒரு மாயக் கரங்களினால் அச்சூழலே வனப்பும்  இனிப்பும் மிகுந்து, ரகசிய சமிஞ்சைகளால் கவர்ந்திழுக்கப்படும், வேட்டை உலகம் போல மாறியிருந்தது.

    கிராமத்திலிருந்த முதிய செபெதீயின் பெரிய வசதியான வீடு திறந்து கிடந்தது. வெளிச்சம் படர்ந்து காலைச்சூரியனின் சூட்டில் வேலைகள் தொடங்கியிருந்தன. வாதிலின் இடது புறம் இருந்த விளையில் ஒரு திராட்சை ரசம் தயாரிக்கும் கூடம் இருந்தது. இளைஞர்கள் ஏற்கனவேக் கிராமங்களின் தோட்டங்களிலிருந்து வாங்கி வந்திருந்தக் கொத்துக் கொத்தான திராட்சைப் பழங்கள் அடங்கிய மூடைகளை அங்குதான் இறக்கிவைத்திருந்தனர். நான்கு வலியத் திடமான இளைஞர்கள், பிலிப், ஜேக்கப், பீட்டர் மற்றும் இந்த வேலையில் அனுபவற்ற இளையவன், அந்தக் கிராமத்தின் செருப்பு தைக்கும் தொழிலாளி நாத்தனேல்,  ஆகியோர்  தங்களது கைகள், முழங்கால்கள், பாதங்களை கழுவி சுத்தம் செய்து கொண்டு, திராட்சைப் பழங்களை மிதித்துப் பிழியும் வேலைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். கிராமத்திலிருந்த எல்லாக் குடியானவர்களும் தங்களது இல்லங்களில் சிறிய அளவிலேனும் திராட்சைப் பழங்களை, மதுவிற்காக வளர்க்கும் பழக்கம் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு வருடமும், சிறியக் கால இடைவெளிகளில் அவர்கள் தங்கள் விளைச்சல்களை இங்கு அளித்துத் , தங்களுக்கான திராட்சை ரசத்தைப் பங்கிட்டுக் கொண்டனர். இந்தக் கிழவரும் வருடா வருடம், அவரது ஜாடிகளிலும், பீப்பாய்களிலும் தனக்கான கூலியாகத் தேவையான அளவு திராட்சை ரசம் நிரப்பி எடுத்துக் கொள்வார். அதை அவரது சொந்தத் தேவைக்கும், பின் வியாபரத்திற்குமாகத் தயாரித்து பதுக்கி வைத்துக் கொள்வார். வந்திருந்த மூடைகளில் தனது பேனாக் கத்தியால் எண்களையும், அதன் உரிமையாளனின் பெயர்களையும் குறிப்பெழுதிக் கொண்டிருந்தார் கிழவர். ஆனால் உரிமையாளர்களும் தாங்கள் அளித்திருந்த எண்ணிக்கையைக் கணக்கிட்டு வைத்திருந்தனர்.  ஏனென்றால் நாளை அவரவர்களுக்கான வினியோகத்தில் குளறுபடிகள் ஏற்பட வாய்ப்புண்டு. முதிய செபெதீயை உண்மையில் ஜனங்கள் யாருமே நம்புவதில்லை. எல்லோருக்கும் தெரியும் அவரது தகிடுதத்தங்கள். அதனால் அவரிடம் செய்யும் எந்த வியாபாரத்திலும் கறாராகவும், உஷாராகவும் இல்லையென்றால் நஷ்டம் அவர்களுக்குத்தான்.

    வீட்டின் உள்புறமிருந்து முற்றத்தைப் பார்த்து இருக்கும்  அளிகளற்ற ஜன்னல் கதவு  வழியே, வெளியே நடப்பவற்றைக் கவனித்துக் கொண்டிருந்தாள் அந்த வீட்டின் எஜமானி, முதிய சலோமி. அவள் தான் எல்லா வரவு செலவுக் கணக்குகளையும் பார்த்துக் கொள்கிறாள். வெகு நேரம் நின்று கொண்டிருந்தவளின் கால் மூட்டிகள் தளர்ந்து வின் வின்னென்று வலியில் தெறித்தன. ஆனால் அவள் அதைச் சட்டை செய்யாமல், வெளியேப் பார்க்கிறாள். அவளது வனப்பு இந்த வயதிலும் முற்றிலுமாக  மறைந்துவிடவில்லை. இளமையில் அவள் மிகவும் அழகாக இருந்திருக்க வேண்டும். உயரமாகவும், ஒல்லியாகவும், ஆலிவ் பழத்தைப் போன்ற மேனியும், நீண்டக் கூர்மையானக் கண்களும், தக்க சமயோஜிதமும், புத்தியும் கொண்டிருந்த இளம்பெண்ணானவள்,  கிடைப்பவனுக்கு ஒரு நல்ல சேகரிப்பாக அவளை வாழ்நாள் முழுதும் வைத்துக் கொள்வதற்கான எல்லாத் தகுதிகளும் ஒருங்கே கொண்டிருந்தாள். அவளுக்காக, கார்பெர்னம், மாக்தலா மற்றும் பெத்சைடா ஆகிய கிராமங்களிலிருந்த ஆண்கள் போட்டியிட்டுக் கொண்டிருந்தனர். மூன்று சாமர்த்தியமான இளைஞர்கள் ஒரே நேரத்தில் அவளுடையத் தந்தையிடம் பெண் கேட்டு வந்திருந்தனர். அவளது தந்தை சொந்தமாகக் கப்பல் வைத்துத் தொழில் செய்யும் ஊரிலேயேப் பெரிய கணவான். இளைஞர்களும் சொந்தமாகப் படகுகள், வீடு, ஒட்டகங்கள் மற்றும் நிறைய சேமிப்புகள் வைத்திருந்தத் தகுதியானவர்கள் தான். முதிய தந்தை ஒவ்வொரு இளைஞனையும், அவர்களின் பூர்வீகம், தாய் தந்தையர், அவர்களின் ஒழுக்கம், ஊரில் அவர்களுக்கு இருக்கும் நற்பெயர், சொத்துபத்துகள் என எல்லாவற்றையும் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழி, தீவிரமாக அவர்களைப் பற்றி ஆராய்ந்து விசாரித்து வைத்திருந்தார். இறுதியாக அவர் செபெதீயைத் தேர்ந்தெடுத்தார். பின் செபெதீ அவளை மணந்து கொண்டார். அவள் அவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தாள். ஆனால் அந்த நேர்த்தியானப் பெண்ணுக்கு, இப்பொழுது வயதாகி விட்டது, அழகும் காலத்தால் மங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் இன்றைக்கும் திருவிழா நாட்களில் அவளது வீரியமிக்க கிழட்டுக் கணவன், இரவு நேரங்களில் கிராமங்களில் இருக்கும், ஆண் துணையற்றப் பெண்களிடம் சல்லாபிப்பதை நிறுத்தவில்லை.

    இன்று தன் இளைய மகன் ஜானின் திடீர் வருகை அவளை உற்சாகப்படுத்தியிருந்தது. அவனை அவள் நேரடியாகப் பார்க்கவில்லை. இருந்தும் செபெதீ அவனைப் பற்றிக் கூறியதிலிருந்து அவனின் எண்ணங்களிலேயே ஆழ்ந்திருந்தாள். புனித மடாலயத்திலிருந்து வந்திருந்தத் தனது மகன் வெளிறிப் போயும், மிகவும் இளைத்தும் இருந்தான். பிரார்த்தனைகளும், விரதங்களும் அவனை உருக்குலைத்திருந்தது என்று கேள்விப்பட்டவள் வருத்தத்தில் ஆழ்ந்தாள். அவள் அவனைத் திரும்பப் போக விட்டிருக்கக் கூடாது என்று தனக்குள் நினைத்தாள். தன்னருகிலேயே அவனை வைத்துக் கொண்டு அவனுக்குப் பிடித்தமான உணவும், பானமும் அருந்தக் கொடுத்து அவன் உடலைத் தேத்தியிருக்க வேண்டும். இளைஞனாக, ஆண் மகனாக அவன் உடல் வலுவுடன் இல்லாமலிருப்பது ஒரு தாயாக அவளுக்கு அமைதியின்மையைக் கொடுத்தது. அவனுக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுத்துப் பழைய படி அவனை மீட்க, ஒளிரும் அவனின் அந்தப் பழைய ரூபத்தைக் காண எனக்கு வழி உண்டோ எனத் தெரியவில்லையே என அங்கலாய்த்தாள். "கடவுள் நல்லவர்தான், அவரின் கருணைக்காக, நாம் அவரிடம் மண்டியிட்டு வழிபாடுகளும் ,பிரார்த்தனைகளும் செய்கிறோம். ஆம்! ஆனால் அந்த நல்லத் தன்மையினால் அவர் என் பிள்ளைகளின் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்க விளைகிறாரே! நிதானமான விரதம், பிரார்த்தனைகள் அவ்வப்பொழுது செய்வது நல்லது தான். அதுதான் மனிதனுக்கும், கடவுளுக்கும் கூட நல்லது. அப்படித்தான் அவர்கள் தங்களுக்கான வழியைப் புத்திசாலித்தனத்துடன் செப்பனிட வேண்டும். திறந்திருக்கும் வாதிலைக் கவலையுடன் பார்த்தாள். தன் மகன் ஜானிற்காக அவள் காத்துக் கொண்டிருக்கிறாள். திராட்சைத் தோட்டங்களுக்கு அறுவடைக்காகச் சென்ற இளைஞர்களின் கூடே தன் பிள்ளையும் உதவி செய்வதற்காகப் போயிருக்கிறான். எப்படியும் திரும்பி வந்து விடுவான் என்று நினைத்துக் கொண்டவள், இன்னும் வாசலில் இருந்துத் தன் பார்வையை விலக்கவில்லை.

    முற்றத்தின் நடு மையத்தில் இருந்த கட்டைதாட்டையான விரிந்த கிளைகள் கொண்ட, பழங்கள் அடர்ந்துத் தொங்கும் பாதாம் மரத்திற்குக் கீழே யூதாஸ் குனிந்து அமர்ந்திருந்தான். அமைதியாகத் தன் உணர்ச்சியற்ற முகத்தை வைத்துக் கொண்டுக் கைகளில் இருந்த சுத்தியலால் மதுப் பீப்பாய்களைச் சுற்றித் தகரப் பட்டைகளை அடித்து இறுக்கிக் கொண்டிருந்தான். வெளிச்சத்தில் அவனது ஒரு பக்க முகத்தில் வன்மமும், உள்ளுறக் கோபமும் தெறிக்கும். மறுபக்கத்தில் அமைதியற்ற சஞ்சலமும், வருத்தமும் படர்ந்திருக்கும். இரவோடு இரவாக அவன் ஒரு திருடன் போல மடாலயத்தை விட்டு ஓடி வந்து சில நாட்கள் ஆகியிருந்தன. இடைப்பட்ட சமயத்தில் அவன் கிராமம் கிராமமாகச் சுற்றித் திரிந்தான். ஜனங்களுக்கு புதிய அத்தியாவசியத் தேவையாக இருந்தப் பீப்பாய்களுக்கு, இரும்புப்பட்டைகள் அடித்துக் கொடுக்கும் வேலையை செய்து வந்தான். ஒவ்வொரு வீடுகளிலும் அவன் வெறுமனே அவனுக்குள்ள பணியைச் செய்வான். எதுவும் பேசுவதில்லை. குடும்பங்களில் ஆண்களும், பெண்களும் உரையாடிக் கொள்வதையும், அவர்களின் உண்மையானத் தேவைகள் என்னென்ன என்றும் அவர்களின் வார்த்தைகளைக் கவனித்து அறிந்து கொள்வான். அதன் மூலம் தான் என்ன செய்யவேண்டும், தன் சகோதரர்களுக்கு இதன் மூலம் என்ன தெரிவிக்க வேண்டும் என்பதையும் ஆலோசித்துக் கொண்டிருப்பான். ஆனால் அந்தப் பழைய செந்தாடிக்காரன், போக்கிரி, முரட்டு ஆசாமி எங்கே போனான் என்று தெரியவில்லை. எப்பொழுது மடாலயத்திலிருந்து அவன் வந்தானோ அன்றிலிருந்து அவன் புரிந்து கொள்ள முடியாதவனாக ஆகிவிட்டான்.

    "அடடா! யூதாஸ் இஸ்காரியெட், உன் வாயைத்திற! பிசாசே!" செபெதீ அவனைப் பார்த்துக் கத்தினார். "என்ன சதா சிந்தித்துக் கொண்டே இருக்கிறாய்?, இரண்டும் இரண்டும் நான்கு என்பது இப்போது கூட உனக்குப் புரியவில்லையா? வாயைத் திறந்து ஏதாவது பேசு, ஆசிர்வதிக்கப்பட்ட என்  முரட்டுக் கிறுக்கனே!. இது திராட்சைப் பழங்களை அறுவடை செய்யும் பருவம், சின்னக் காரியமல்ல. இந்த நாட்களில் எல்லோருமே சிரித்தும்  கூத்தடித்தும் நாட்களை அனுபவிப்பர். ஒரு மந்த கதியான கறுப்பு ஆடு கூடத் தொணடையை கனைத்துக் கூப்பாடு போடும். நீ என்னடாவென்றால்!"

    "அவனைத் தேவையில்லாமல் தூண்டி விடாதே, செபெதீ" பிலிப் இடையிட்டான். "அவன் மடாலயத்திலிருந்து வந்திருக்கிறான், அவனைப் பார்த்தால் அவனும் மடாலயத்திற்குப் போய்த் தூய அங்கியை அணிந்து கொள்வான் போலிருக்கிறது. உனக்குத் தெரியுமா, சாத்தானுக்கு வயதாகி விட்டால், அவன் துறவியாகி விடுவான்" கேலியாக சிரித்துக் கொண்டே பதில் கூறினான் குண்டு பிலிப்.

    யூதாஸ், வாயைத்திறந்து விஷம் தோய்ந்த பற்களைக் காட்டும் பாம்பினைப் போல, பிலிப்பை வெறித்தான். ஆனால் எதுவும் பேசவில்லை. உண்மையில் அந்தக் குண்டுப் பிறப்பை நினைத்து உள்ளூற  வெட்கினான். "ஒரு மலடன், ஆண்மையற்றப் பிறவி அவன் . வார்த்தைகளை வைத்துக் கொண்டு பாசாங்கு செய்யும் இழிந்தவன். எந்தச் செயலையும் பயமில்லாமல் உறுதியாகச் செய்யத் தெரியாத முதுகெலும்பற்றப் பிறவி. கடைசி நிமிடத்தில், அன்று உணர்ச்சிப் பெருக்குடன் தன்னிடம் வாக்களித்த, தன் சகோதரர்களின் புரட்சி அமைப்புடன் இணைந்து கொள்வதிலிருந்து பின் வாங்கினான் இந்த வேசை மகன். அதற்கு அவன் ஒரு காரணமும் சொன்னானே! "என்னை நம்பி என் ஆடுகள் இருக்கின்றன, அவைகளை விட்டு என்னால் எப்படி வர முடியும்" என்று" ச்ச்சீ!  "இவனுக்கெல்லாம் ஒரு கம்பும் கோலும்" என்று தனக்குள் கோபமாகச் சொல்லிக் கொண்டான்.

    முதிய செபெதீ அடக்க முடியாமல் சிரித்தார், பின் செந்தாடிக் காரனைப் பார்த்து, "கவனமாக இரு, போக்கிரியே" என்று கத்தினார். "இந்தத் துறவறம் என்று சொல்லிக்கொள்கிறார்களே, அது உண்மையில் ஒரு தொற்று நோய், அதனிடம் இருந்து தூரயே இரு, இல்லையென்றால் அது உன்னை எளிதில் தொற்றிக் கொள்ளும். என் சொந்த மகன் அந்த நோய் ஆட்கொண்டுதான் மடாலயத்திற்கு சென்று தப்பித்து விட்டதாக நினைக்கிறான். இதோ இங்கே என் வீட்டில், என் மனைவி, அவனது தாய் அவனை நினைத்தே உருகி உருகித் தன் உடலைக்கெடுத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் அவள் ஆசிர்வதிக்கப்பட்டவள். அவளது வளர்ப்பு சோரம் போகாது. அவன் தன் குருக்களிடமிருந்து மூலிகைகளை நோய்களுக்கு எப்படிப் பயன்படுத்துவது என்று கற்றுத்தேர்ந்து ஒரு மருத்துவனாகத் திரும்ப வருவான். நீ வேண்டுமென்றால் பார், அவன் என் வழிக்கு வந்துதான் தீர வேண்டும். நிச்சயமாக என் மகன் ஒரு பைத்தியக்காரனாக நடந்து கொள்ள மாட்டான். அவனை நாங்கள் அப்படி விட்டு விட மாட்டோம். அவன் அங்கே அந்தப் பாலை நிலத்தில் தன் பசியை, தாகத்தை, தன் அடக்க முடியாத தாபங்களின் சுரப்புகளை வைத்துக் கொண்டு கடவுளிடம் என்ன வேண்ட முடியும். அதுவே இங்கே  பசிக்கு நல்ல சுவையுள்ள உணவும், தாகத்திற்கு உயர்ந்த மதுவும், தாபங்களுக்கு பெண்களும் இருக்கிறார்களே, இங்கும் கடவுள் இருக்கிறாரே! கடவுள் எங்கும் நிறைந்தவர் இல்லையா, அதனால் அவரைத் தரிசிக்க அவன் எதற்கு பாலைவனத்திற்குச் செல்ல வேண்டும். நீ என்ன நினைக்கிறாய், யூதாஸ் இஸ்காரியெட்?".

    ஆனால் செந்தாடிக் காரன் தன் வேலையில் மும்முரமாக இருந்தான். அவனது கைகளிலிருந்த சுத்தியல் ஒரு தன்னிச்சையான போக்கில் தகரத்தில் அறைந்து கொண்டிருந்தது. அவன் எதுவுமே பேசவில்லை. "எப்படி இந்தக் கிழவனிடம் பேச முடியும், உலகில் உள்ள எல்லாமே அவனுக்கு ஒரு அழுக்கு பிடித்த நாய்தான். இன்னொரு மனிதனின் உள்ளக் கிடக்கை இந்தக் கிழவன் எப்படிப் புரிந்து கொள்வான். ஏன் கடவுளும் கூட, மற்றவர்களை இவ்வுலகிலிருந்து துடைத்தெறிந்து விட்டு, உடலில் ஒட்டியிருக்கும் தேவையற்ற உண்ணி போன்ற இந்த மனிதர்களைத்தானே பத்திரமாகத் தன் கைகளிற்குள் வைத்து பாதுகாக்கிறார். "பன்றிப் பிறவி, மற்றவர்களின் ரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி, பணத்தை மட்டுமே நக்கிக் கொண்டு வாழும் ஜந்து. எப்பொழுதும் வாதைகளின் நிழல் இவர்களின் கூடாரத்தை அண்டுவதே இல்லை. குளிரினுள் அவர்கள் கதகதப்புடன் போர்த்திக் கொள்ளவும், கோடையில் அவனது உடலை ஒட்டிக் குளிர்விக்கும் பருத்தித் துணியைப் போலவும் தான் மற்ற மனிதர்கள். இவர்களுக்காகவே உழைத்தும், செத்தும் போக வேண்டும். இவனால் ஒரு மனிதனிடம் இருந்து எதை அறிந்து கொள்ள முடியும்? இந்தக் கிழட்டு வேசைமகன், நம் இஸ்ரவேலத்தின் எதிர்காலத்தைப் பற்றி, நம்மைக் கொன்று கொண்டிருக்கும் அடிமைத் தளைகளைப் பற்றி என்றாவது நினைத்துக் கவலைப்பட்டிருப்பானா?. ஏன் தன் சுண்டு விரலைக் கூட இஸ்ரவேலத்தின் நன்மைக்காக உயர்த்தியிருப்பானா? இந்த இழிபிறவிகள், உண்மையில் ரோமானியர்களின் ஆட்சி பீடத்தின் கீழ் மகிழ்ச்சியாக உணர்கின்றனர். அவர்கள் தான் இவனைப் போல உள்ளவர்களைப் பாதுகாத்து போஷிக்கிறார்கள். கடவுள் இவர்களுக்குத் துணையிருக்கட்டும். இவர்கள் தான் தேசத்தின் ஒழுங்கைப் பேணுகிறார்கள். இவர்கள் மட்டும் இல்லையென்றால், இந்த முரட்டுப் போராளிகளும், வெற்றுக்காலுடன் அலைந்து திரியும் கீழ்மக்களும், இவர்களை, இவர்களின் சொத்தை கபளீகரம் செய்து விடுவர்....ஆனால் பயப்படாதே, கிழவா, கிழட்டு வேசை மகனே, அதற்கான சரியானத் தருணம் வரும். கடவுள் மறந்ததை, செய்யாமல் விட்டதை, நாங்கள் புரட்சியாளர்கள், எங்களை ஆசிர்வதியும், நாங்கள் ஞாபகம் வைத்து சரியாகச் செய்வோம். பொறுமை! யூதாஸ்! எந்த வார்த்தைகளையும் உதிர்த்து விடாதே, நம் தந்தையின் மாட்சிமை பொருந்தியப் படைகளின் ஆரவாரத்தை உணர்கிறேன். அந்த நாள் வெகு அருகிலேயே இருக்கிறது. அது வரை பொறுமையாக இரு."

    தனது கருகுமணி போன்றக் கண்களை உயர்த்தி, செபெதீயைப்பார்த்தான். கைகளில் சுத்தியல் அனாயசமாகச் சுழன்று கொண்டிருந்தது. தன்னை முழுமையாகக் கட்டுப்படுத்திக் கொண்டு உணர்ச்சியற்று அவரைப் பார்த்து சிரித்து வைத்தான்.

    அத்தருணத்தில் அந்த நான்கு வலுவான உடல்கள் கொண்ட இளைஞர்களும் அகன்ற உருளை வடிவத் தொட்டியில் கவனமாக இறங்கினர். தொட்டியினுள் ஏற்கனவே சேகரித்த திராட்சைக் குவியல்களை நன்றாகக் கழுவிப் போட்டிருந்தனர். அவர்களின் முழங்கால்கள் முழுகுவது வரை திராட்சைக் கொத்துகள் நிறைந்திருந்தது. அவர்கள் நிலையாக நான்கு திசைகளிலும் நின்றுக் கொண்டு அழுத்தி மிதித்துப் பழங்களைக் கால்களால் நசுக்கித் தேய்த்தனர். குனிந்து இன்னும் மிதிபடாதப் பழங்களைக் கை நிறைய எடுத்து உண்டனர். அதன் சாறு அவர்களின் தாடி வழியே வழிந்தது. ஒரு சமயம் அவர்கள் தங்கள் கைகளைக் கோர்த்துக் கொண்டு நடனமாடுவது போல அசைந்தனர். ஒரு சமயம் அவர்கள் தனித்தனியாச் சத்தமிட்டுக்கொண்டே குதித்துக் குதித்து ஆழமாக மிதித்தனர். சாறுக் குழைந்து உருவாகும், திராட்சையின் பிரத்யேகமான நறுமணம் குழைந்து நாசிகளில் நிறைந்துக் கிறங்கடித்தது. அவர்கள் குதூகலமாக இருந்தனர். வாசலுக்கு வெளியே இளம் பெண்கள், தோட்டத்தில் இன்னும் திராட்சைகளைக் கொடிகளிலிருந்து பறித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் குனிந்தும் நிமிர்ந்தும் திராட்சைக் கொத்துகளைப் பிடுங்குகையில், அவர்களின் மேனி அழகு நாலாபுறமும் வெளிப்பட்டது. அவர்களின் துள்ளும் மார்பகங்களும், முழங்கால் வரை உடுத்தியிருந்ததால் தெரியும் தொடைப்பகுதிகளும், அவர்களின் கிசுகிசுப்பானக் குரலும் சேர்த்து வாலிபர்களைக் கலங்கடித்தன. அந்த இன்பத்திலேயே அவர்கள் தங்களின் மொத்த வலுவையும் பழங்களை மிதிப்பதில் காண்பித்தனர். அவர்கள் ஏதோ ஒரு கிளர்ச்சியானப் பாடலைப் பாடிக் கொண்டே தொடர்ந்து குதித்துக் கொண்டிருந்தனர்

    இதைப் பார்த்த, அருகில் நின்று கொண்டிருந்த வியாபாரிகளுக்கும் அந்த களிப்புத் தொற்றிக் கொண்டது. அவர்கள் அங்கே மது தயாரிக்கும் கூடத்தையோ இல்லை தோட்டத்தில் திராட்சைகளை அறுவடை செய்வதையோக் காணவில்லை. மாறாக அந்தச் சூழலே ஒரு சொர்க்கபுரியாக உருமாறியிருந்தது. அங்கே முற்றத்தில் அமர்ந்திருந்து தனது நீளமானக் குச்சியாலும், பேனாக் கத்தியாலும் , அடையாளங்கள் இட்டு , ஒவ்வொருவருக்கும் தேவையானதை, சரிவரப் பங்கிட்டுக் கொண்டிருக்கும் முதியவர் பார்ப்பதற்கு ஒரு இறைக் கணக்காளன் போலக் காட்சியளித்தார். எத்தனை மூடை திராட்சைக் கொத்துகள் வந்திருக்கின்றன, எத்தனை ஜாடி திராட்சை ரசம் அதிலிருந்துக் கிடைக்கும், நாளையோ, இல்லை மற்ற நாளிலோ, இறந்து போகிறவர்களுக்கு, எவ்வளவு ஜாடி திராட்சை மதுவும், எத்தனை மூடைகள் தானியங்களும், எத்தனை வகையான பெண்களும் வழங்க வேண்டும் என்றத் தீவிர சிந்தனையில் இருப்பது போல அவர் தோற்றம் கொண்டார்.

    "ஓ! என் மரியாதைக்கு உரியவரே" பீட்டர் எழுச்சியுற்றது போலக் கத்தினான். " இந்த அருமையானத் தருணத்தில் கடவுள் என்னிடம் வந்து, ஹேய்! பீட்டர், உனக்கு வேண்டியதை என்னிடம் கேள்! என்ன வேண்டுமானாலும் கேள்! அதை நான் நிறைவேற்றுகிறேன், நான் இன்று நல்ல மன நிலையில் இருக்கிறேன் என்று என்னிடம் கேட்கிறார்". நான் அவருக்கு பதிலளித்துக் கொண்டிருக்கிறேன். இதோ என் கால்களில் மிதிபட்டு அரைகின்றன திராட்சைகள். திராட்சைகளை மிதித்து மிதித்து நான் அழிவற்றவனாகிறேன். என் கால்களின் வழியே என் உடலின், என் மனத்தின் ஆன்மாவின் ருசியை, இந்த மதுச்சாற்றினுள் கடத்துகிறேன். அந்தச் சுவை நித்தியமானது."

    "அப்படியென்றால் நீ மது அருந்தக்கூடாது! செபெதீ சற்றுக் கடுமையானக் குரலில் கேட்டார்.

    "இல்லை, நான் என் இதயத்தின் அடியாழத்திலிருந்து, திராட்சைக்கு என் சுவையைக் கடத்துகிறேன்" அவன் சிரிக்காமல் பதிலளித்தான். அவனது முகம் மிகத்தீவரமாக எளிதில் பற்றிக் கொள்வதைப் போல இருந்தது. மிதிப்பதை சற்று நிறுத்திக் கொண்டு வானில் ஒளிரும் சூரியனை நிமிர்ந்து பார்த்தான். அவன் மேலுடுப்பு அணிந்திருக்கவில்லை. அவனது வலது மார்பில், ஒரு பெரியக் கரிய மீனின் உருவத்தைப் பச்சைக் குத்தியிருந்தான். ஒரு கைவினைஞன், முன்னே ஒரு கைதியாக இருந்தவன் பல வருடங்களுக்கு முன்பு தன்னுடைய ஊசியினால் மிகத் திறமையாகவும், தத்ரூபமாகவும் அந்த மீனை வரைந்திருந்தான். அவன் உடலின் வளர்ச்சியின் கூடவே அதுவும் வளர்ந்திருந்தது. அது அவனது கற்றையானச் சுருள் முடிகள் அடர்ந்த மார்பினில் நீந்துகிறது. அந்த மீனின் உருவத்திற்கு மேலே ஒரு சிறிய நங்கூரத்தை நான்கு கைகள் குறுக்காகப் பிடித்திருக்கின்றன, ஒவ்வொரு கைகளிலும் தூண்டில் முட்களின் கூர்மை வெளிப்படுகிறது.

    பிலிப் தன் ஆடுகளை நம்பியே ஜீவிதம் நடத்துகிறான். அவன்  நிலத்தில் இறங்கி உழவோ, இல்லை இந்த மது தயாரிப்பிலோ, ஏன் திராட்சைத்தோட்டங்களில் பழங்கள் அறுவடை செய்யவோ சாதாரணமாக விரும்புவதில்லை.

    "நல்லக் கடவுள், பீட்டர்!", பிலிப் ஏளனமாகப் பேசத் தொடங்கினான்."இன்று நீ உனக்குத் தோதான வேலையைத் தேர்ந்தெடுத்தாய், இதோ இந்த திராட்சைகளை மிதித்துக் கூழாக்கி நீ நித்தியத்துவத்தை அடைந்துவிடுவாய்! நானாக இருந்தால் இந்த பூமி முழுதும் ஒரு மாபெரும் புல்வெளியாக உருமாறி, அதில் வெள்ளாடுகளும், செம்மறி ஆடுகளும் மட்டும் செழித்துப் பெருக வேண்டுவேன். நான் அவைகளிடமிருந்து பாலினைச் சேகரித்து பூமியெங்கும் தெளித்துவிடுவேன். அது மலைகளிலும், ஏரிகளிலும், குளங்களிலும், ஆறுகளிலும் நிறைந்து ததும்பி வழியும். ஏழைகள் வஞ்சனை இல்லாமல் அதைக் குடித்து இன்புறுவர். ஒவ்வொரு நாள் இரவும் நாங்கள், எல்லா மேய்ப்பவர்களும் ஒன்று கூடி ஓரிடத்தில் அமர்ந்து இளைப்பாறுவோம். எங்களுடன் கடவுளும், மேய்ப்பர்களின் தலைவராக எங்கள் குழுவில் அமர்ந்து வம்பளப்பார். நாங்கள் அடுப்பு மூட்டி, ஆட்டுக்குட்டியின் இறைச்சியை வேகவைத்துக் கூடி அமர்ந்து உண்டு மகிழ்வோம். அது தானே எங்களுக்கான சொர்க்க ராஜ்ஜியம்."

    "உங்களுக்கெல்லாம் நோய் பீடித்திருக்கிறது முட்டாள்களா!", யூதாசின் கடினமானக் குரல் வெளிவந்தது. அவன் திரும்பிப் பிலிப்பைக் கொல்வது போலப் பார்த்தான்.

    இளம் பருவத்தினர் முற்றத்தின் உள்ளேயும், வெளியேயும் வந்து போய்க் கொண்டிருந்தனர். அரை நிர்வாணமாக, ஆண்களின் மார்பு மயிர்கள் வெளித்தெரிய, இளம்பெண்கள் தங்கள் இடுப்பில் பலவண்ணத் துணிகளால் உடலை மறைத்திருந்தனர். அந்த இடமே ஒரு பயங்கரக் கொண்டாட்ட மனநிலையில் இருந்தது. அவர்களுக்கான கடவுள் எப்படி இருப்பார். ஒருவேளை அவர்களால் அதற்கான சரியான விளக்கத்தை அளிக்க முடியாது. ஆனால் மகிழ்வின், களிப்பின், உடற் தொடுகையின், ஸ்பரிசத்தின், உழைப்பின், உடலால் ஈட்ட முடிந்த அனைத்திற்குமானக் கடவுளை எதைக் கொண்டு வகுக்க. அவர்கள் தங்கள் மண்வெட்டிகளால், திராட்சைக் கொத்துக்களைக் கிளறித் தொட்டியில் போட்டனர். நொதித்துக் கொண்டிருந்த கூழின் நெடி காற்றில் பரவியது. பின்னர் தோட்டங்களில் அறுவடைக்கு இருக்கும் மிச்ச மீதிக் கொடிகளையும் அணுகி, பழங்களைப் பிய்த்துக் கொண்டும், கதை பேசிக் கொண்டும், சிரித்துக் கேலி பேசியும் அவர்கள் தங்கள் வேலைகளைத் தொடர்ந்தனர்.

    எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த செபெதீ பதில் ஏதும் பேசாமல், ஒருவித புத்திசாலித்தனமானத் தோரணையில் தன் உதடுகளைச் சுழித்துக் கொண்டு, அவர்களுக்கு முன் நின்று கொண்டிருந்தார். ஒரு விசித்திரமானப் பார்வையாளன், இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை வெகு நேரம் வாசலில் நின்று கேட்டுக் கொண்டிருந்ததை அவர் அப்பொழுதுதான் கண்ணுற்றார். அவன் ஒரு கறுப்பு ஆட்டுத்தோலைக் கொண்டு தன் மேலுடலை மூடியிருந்தான். கழுத்துவரை அதனால் தன் உடலை மறைத்திருந்த அவன் கால்களில் எந்தக் காலணியுமில்லை, தலை முடி கலைந்து பரட்டையாக இருந்தது. முகம் வெளிறிக் கந்தகம் போல மஞ்சளும் கருமையும் கலந்த நிறத்தில் இருந்தது. நீண்டப் பெரிய விழிகளால், தீ உமிழ்வது போல இருந்தது அவனது பார்வை.

    தொட்டியில் திராட்சை மிதிப்பது சற்று நின்றது. செபெதீ இன்னும் திறந்த வாயை மூடாமல் வாசலையேப் பார்க்கிறார். வாசலிலிருந்து ஆழ்ந்த நகைப்பொலி முற்றத்தின் உள்ளே வரைக் கேட்டுக்கொண்டிருந்தது. யார் இந்த உயிருள்ள எலும்புக்கூடு? எதற்காக வாசலிலேயே நின்று கொண்டு நம்மை வெறிக்கிறது? அவர்கள் எல்லோருக்குள்ளும் கேள்விகள். இன்னும் அது அங்கேயே தான் நின்று கொண்டிருந்தது. முதிய சலோமி, ஜன்னல் துவாரத்தின் வழியே அவனைப் பார்க்கிறாள். புரிந்துகொண்டவள் போல அழுது கொண்டே கத்தினாள், "ஆண்ட்ரூ...ஆண்ட்ரூ".

    "கடவுளே! நல்லது! ஆண்ட்ரூ" செபெதீ சத்தமாக அவனை அழைத்தார். "பார்! உன்னைப் பார்த்தால் ஏதோ பாதாள உலகத்திலிருந்து எழுந்து வந்தவன் போல இருக்கிறாய், அல்லது உனது வழியில் அந்தப் புதைகுழிப்பாதைக்கு போய்க் கொண்டிருக்கிறாயா"

    திராட்சை ரசம் நொதிக்கும் தொட்டியிலிருந்து வெளியே குதித்த பீட்டர், ஓடிப்போய்த் தன் சகோதரனின் கைகளைப் பிடித்துக் கொண்டான்.  அவனிடம் இருந்து எந்த வார்த்தைகளும் வரவில்லை. ஆதுரத்துடன் இறுக்கமாய்த் தன் சகோதரனின் கைகளைப்  பிடித்திருந்தவனின் விரல்கள் நடுங்கின. "ஆண்ட்ரூ, இது நீதானா! நல்லத் திடமும் வலிமையும் கொண்ட இளைஞன்,  ஜனங்களால் கொண்டாடப்பட்டத் தடகள வீரன், விளையாட்டிலும், வேலையிலும் முதன்மையாக இருந்தவன். இந்த ஆண்ட்ரூ தானா, கிராமத்திலேயே அழகான பெண்ணான, ஆளிவிதையின் நிறத்தில் மின்னும் கேசத்தைக் கொண்ட ரூத்திற்கு நிச்சயிக்கப்பட்டவன். ஒரு இரவில் கடவுளின் சபிக்கப்பட்டப் புயற்காற்றில் தன் தந்தையுடன் அவள் படகு கவிழ்ந்து இந்த ஏரியில் மூழ்கிச் செத்தாளே! அந்த நிகழ்விலிருந்து வாழ்வதற்கான நம்பிக்கை இழந்துத் தெருத்தெருவாய்ச் சுற்றித்திரிந்து, ஒரு நடைப்பிணமாய்க் கடவுளிடம் தன் உடல், பொருள் ஆவி அனைத்தையும் ஒருசேர மண்டியிட்டுக் கையளித்தானே! அந்த ஆண்ட்ரூதானா இது!"

    யார் இவர்களிடம் சொன்னார்கள், நான் கடவுளிடம் சரணடைந்திருந்தால் ஒருவேளை அவளை என்னுள் கண்டுகொண்டிருப்பேன். அது போலவே அவளும் தன் மணமகனைக் கடவுளிடம் கண்டடைந்திருப்பாள். ஆண்ட்ரூ தனக்குள் நினைத்துக் கொண்டான்.

    பீட்டர் தன் அண்ணனை முழுமையாகப் பார்த்தான். அவனது குரல் கம்மி வார்த்தைகளின்றி நின்று கொண்டிருந்தன். எப்படி அவன் கடவுளின் பிடியால் பீடிக்கப்பட்டு இங்கிருந்து போனான். பின் இப்பொழுது அக்கடவுளாலேயே விடுவிக்கப்பட்டு எவ்வாறு நலிந்துத் திரும்பி வந்திருக்கிறான் என்று நினைத்து விம்மினான்.

    "ஹேய்!" செபெதீ கத்தத் தொடங்கினான். "நீ நாள் முழுதும் இப்படியே அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டு நிற்கப் போகிறாயா?" அவனை உள்ளே அழைத்து வா! வெளிக்காற்று பலமாக வீசுகிறது. அவனைத்தாக்கி கீழே வீழ்த்திவிடும். உள்ளே வா! ஆண்ட்ரூ! என் அன்பான நல்லப் பையா! , வா, பார்! நிலமெங்கும் திராட்சைகள் முளைத்துக் கிடக்கின்றன. எடுத்துச் சாப்பிடு. ரொட்டியும் இருக்கிறது. பசியாற முதலில் உண். "கடவுளுக்கே நன்றியும் பெருமையும்". சாப்பிட்டு உன்னைக் கொஞ்சம் திடப்படுத்திக் கொள். ஏன் சொல்கிறேன் என்றால், உன்னுடைய இந்த அவலத் தோற்றத்தை உன் பாவப்பட்டத் தந்தைப் பார்த்தார் என்றால், அவர் பயந்து போய்த் திரும்பவும் தன் சுறாவின் வயிற்றிற்குள் சென்றுவிடுவார்."

    ஆனால் ஆண்ட்ரூ அமைதியாகத் தன் சுள்ளி போன்றக் கைகளை உயர்த்தினான். "உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அவன் சுற்றி நின்ற எல்லோரையும் பார்த்து வெகுண்டு சீற்றத்துடன் கத்தினான். "உங்களுக்கு கடவுளின் மேல் பயமில்லையா!" உலகமே அழிந்து கொண்டிருக்கிறது. ஆனால் நீங்கள் இங்கு திராட்சைகளை அரைத்து மது தயாரித்துக் களிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறீர்கள்!"

    "புனிதர்கள் நம்மைக் கைவிடவில்லை, இதோ இன்னொருத்தன் நம் போராத நேரத்தில் நம்மைச் சோதிக்கச் சரியாக வந்துவிட்டான். கிழவர் முணுமுணுத்துக்கொண்டே ஆண்ட்ரூவை உற்று நோக்கினார். "நீ எப்படியும் எங்களை விட மாட்டாய் இல்லையா?", நாங்கள் எங்கள் செவுள்களை இறுக்கி அடைத்து வைத்துள்ளோம். இந்த மாதிரிதானே உனது தீர்க்கதரிசி, அந்த ஞானஸ்நானம் செய்து வைப்பவன் ஜனங்களைப் பார்த்துப் பேசச் சொல்லிக் கொடுத்திருக்கிறான். நல்லது! ஒன்று செய்! வேறு எதாவது புதிய செய்திகள் இருந்தால் சொல்! இல்லையேல் உன் போதனைகளை, வேறு மாதிரி இன்னும் ஜனங்களைக் கவரும் வண்ணம் எப்படிச் சொல்லலாம் என்று பயிற்சி எடுத்துவிட்டு வந்து பேசு, என்ன! ஏற்கனவே நீ சொல்லிக்கொண்டிருக்கிறாயே, உலகம் அழியப் போகிறது, கடவுள் கோபத்துடன் பூமியில் இறங்கிவிட்டார். கல்லறைகள் திறந்து பிணங்களும், பேய்களும், உயிர்க்கொல்லும் பூச்சிகளும் வந்து மனித இனத்தையே கொன்றழிக்கப் போகின்றன. இது கடவுளின் இரண்டாவது வருகை. அப்பப்பா! வேறென்ன! வேறென்னப் பொய்கள்!  இன்னும் எத்தனைக் காலம் இந்தப் பொய்களைக் கொண்டு நாங்கள் குடும்பம் நடத்த, அய்யோ! இதெல்லாம் எப்பேர்ப்பட்ட புரட்டுகள்! இதையெல்லாம் கேட்டு விட்டு எங்களிடம் வந்து ஒப்புவிக்காதே, பையா! பார்த்தாயா! நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம்! வா! உன்னால் முடிந்தால் எங்களுடன் வந்து இந்த அமிர்தமான திராட்சை மதுவைச் செய்ய உதவி செய்! செபெதீ அமைதியாகச் சற்றுப் புன்னகையுடன் அவனையும், சுற்றி இருந்த எல்லோரையும் பார்த்து பதிலுரைத்தார்.

    "இது பாவம்! பாவம்!. ஜோனாவின் மகன் எல்லோரையும் பார்த்து முழக்கமிட்டான். அவன் தன் தம்பியின் கைகளிலிருந்து தன் உடலை விடுவித்து, முற்றத்தின் நடுமையத்தில் வந்து நின்றான். நேராக செபெதீயைப்பார்த்து கை நீட்டி நின்று , வானத்தைப் பார்த்து கத்திக் கொண்டே இருந்தான்.

    "உனது நன்மைக்காகத் தான் சொல்கிறேன், ஆண்ட்ரூ, இங்கே உட்கார், கொஞ்சம் சமாதானமாகு. ரொட்டியும், மதுவும் எடுத்துக் கொள். உன் பசியை முதலில் போக்கு. எளிமையான விஷயம் பையா! பசிதான் உன்னை இப்படிப் பைத்தியக்காரனாக்குகிறது" செபெதீ கனிவுடன் கூறினார்.

    "எளிமையாக வாழ்வது உன்னைத்தான் பைத்தியமாக்கி விட்டது, செபெதீ", ஜோனாவின் மகன் காட்டமாக பதில் கூறினான். கடவுள் உன் கால்களுக்கடியில் இருக்கும் நிலத்தைப் பெயர்த்திடுவான். ஒரு நில அதிர்வாக அவன் வருவான். நிலம் பிளந்து உன் வீடும், படகுகளும், இதோ மது தயாரிப்பதற்காக அமைத்து வைத்திருக்கிறாயே இந்தக் கூடமும் எல்லாமும் உள்ளே போய்விடும். உன்னையும், உன் கேவலமான இந்தப் பெருத்த வயிற்றையும் கூட அவன் நிச்சயமாக விழுங்கி விடுவான்."

    அவன் தீப்பற்றிக் கொண்டதைப் போல எரிவுடன் சீறீக் கொண்டிருந்தான். வார்த்தைகள் எச்சில் தெறிக்க வெளிவந்தன. எதிரில் நின்றிருந்த ஒவ்வொருத்தராய் அனலெரியப் பார்த்தான். பார்! இந்தத் திராட்சை சாறு, நொதித்து மதுவாகும் முன், உலகின் இறுதி நாள் வரும். யாரும் ஒன்றும் செய்ய முடியாது. தலை தெறிக்க ஓடுங்கள், மாரில் அடித்துக் கொண்டு அழுங்கள். யாராலும் தப்பிக்க முடியாது.  "நான் பாவி! நான் பாவி! என்று அழுது புலம்புங்கள். இந்த உலகம் ஒரு முதுமரம். அதன் வேர் வரை நீங்கள் அழுக விட்டு விட்டீர்கள். நிச்சியமாக நமது மெசியா ஒரு கோடாலியுடன் உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறான்."

    அது வரை நடந்து கொண்டிருக்கும் எதையுமே கவனிக்காது, தன்  சுத்தியலை அறைந்து கொண்டிருந்த யூதாஸ் நிறுத்தினான். அவன் தன் பற்கள் தெரிய இளித்தான். உதடுகளைச் சுழித்து சூரிய ஒளியை உடலில் வாங்கிக் கொண்டு முன்னே வந்தான். அவன் எழுந்து வருவதைப் பார்த்த செபெதீ அவனைத் தடுக்க முயலவில்லை.

    "கடவுளின் அன்பின் பெயரில், பீட்டர், இவனைத் தூக்கிக் கொண்டு வெளியே போய் விடு. கர்ஜிக்கும் குரலில் யூதாஸ் கத்தினான். நமக்கின்னும் செய்யவேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது. 

    "அவன் வருகிறான், அவன் வருகிறான்" சில சமயம் நெருப்பினை ஏந்திக்கொண்டு, சிலசமயம் பேரேட்டை, இப்பொழுது என்ன அடுத்தது கோடாலியா! . ஏன் உங்களால் எங்களைத் தனியாகவே விட முடியாதா? வஞ்சகத்துடன் வெளிவரும் உங்களின் வார்த்தைகளால் இந்த மக்களை காலங்காலமாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த உலகிற்கு எந்தக் குறையுமில்லை. அது நன்றாகத்தான் இருக்கிறது. ஆம்! மிக நன்றாகவே! அதைத்தான் நான் சொல்ல விளைகிறேன்....அதனால் திராட்சிப்பழத்தைப் பிழிவோம், நாம்! மீதமுள்ளதை காலம் பார்த்துக் கொள்ளட்டும்."

    பீட்டர் அவனது அண்னனின் முதுகில் கைவத்துக் கைகளால் அழுத்தினான். "அமைதியாக இரு, மெல்லியக் குரலில் கனிவாக அவனிடம் கூறினான், "அமைதியாக இரு", சத்தம் போடாதே". நீ நெடு நாள் பயணத்தினால் மிகவும் சோர்ந்திருக்கிறாய். வா! நாம் வீட்டிற்குப் போவோம். நீ கொஞ்சம் ஓய்வெடுத்து உன்னைத் தேற்றிக்கொள். அதன் பிறகு அப்பாவும் உன்னைக் கண்டு அமைதியடைவார்"

    அவன் தன் அண்ணனின் கைகளைப் பிடித்துக் கொண்டு, அவனை வழி நடத்தி முற்றத்தைத் தாண்டிச் சென்றான். பின் நேராகவும், குறுக்காகவும் இருக்கும் தெருக்களின் வழியாக, அவனைக் கவனமாகத் தாங்கிப் பிடித்துக் கொண்டு சென்று மறைந்தான்.

    முதிய செபெதீ, திரும்பவும் நடந்தவற்றை நினைத்துக் கேலியாகச் சிரித்துக் கொண்டார். "ஓ! பாவப்பட்ட என் அருமை மீனவத்தீர்க்கதரிசியே, கண்டிப்பாக உன்னிடத்தில் என்னை வைத்துப் பார்க்க முடியவில்லை. எப்படிப்பட்டக் கொடுமையான சூழ்நிலையில் நீ மாட்டிக் கொண்டிருக்கிறாய்? என்று வெறுமனே சோகம் வந்தது போலப் பாவனை செய்தார்.

    ஆனால் இப்பொழுது முதிய சலோமியின் முறை, அவள் அழுகையுடன் வாய் திறந்துத் தன் கணவனைக் கண்டிக்கும் தொனியில் பேசினாள். நீங்கள் அவனின் துயரம் மிக்கக் கண்களைக் காணவில்லையா! அது என்னுள் பற்றிக்கொள்கிறது. நான் அலைக்கழிகிறேன். அய்யோ! நீங்கள் பேசும் வார்த்தைகளில் உங்களுக்கு கவனம் இருக்கிறதா! ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் நம் பாவங்களைக் கணக்கெடுக்க நமக்கு மேலே தேவதைகள் உலாவிக் கொண்டிருக்கின்றன. உங்களது கிண்டல் பேச்சுகளை நீங்கள் எப்பொழுதுதான் நிறுத்தப் போகிறீர்களோ! என்று தான் நீங்கள் கடவுளுக்குப் பயந்து நடந்தீர்கள். கேட்டால் எல்லாவற்றிற்கும் உங்களுக்கேயான வழியில் வியாக்கானம் பேசுவீர்கள். தேவையில்லாமல் பாவங்களை சம்பாதித்துக் கொள்கிறீர்கள். அது நம்மையும், நம் பிள்ளைகளையும் தான் பாதிக்கும்." கிழவி இன்னும் விசும்பலை நிறுத்தவில்லை.

    "அம்மா சொல்வது சரிதான்!" இதுவரை வாயைத் திறக்காமலே இருந்த ஜேக்கப் பேசத் தொடங்கினான். "நீர் மட்டும் என்ன, அந்த முதிய ஜோனாவைப் போலத் தான், உன் பிள்ளையைத் தொலைத்து விட்டு நிற்கிறாய். அவரை விட நீர்தான் இன்னும் அபாயத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறீர். உன் பிள்ளையாக உனக்கு உதவி செய்ய உன் கைகளில் ஒன்று உன்னிடம் இல்லை. நான் அவனை விட உம்மை நினைத்துத்தான் பரிதாபப்படுகிறேன். யாருக்குத் தெரியும், கடவுள், மீட்சி, விரதம் , பிரார்த்தனைகள் என்று அவன் பாவனைகள் செய்து கொண்டிருக்கத்தான் வாய்ப்பு அதிகம். சிறுவயதிலிருந்தே நான் அவனை அறிவேன். அந்த ஆகாவழி ஒரு முழுச் சோம்பேறி. இங்கிருந்தால் உடல் வளைத்து உழைக்க வேண்டுமே என்று அந்தப் பயல் அங்கு போய் பதுங்கிக் கொண்டிருக்கிறான். தன்னுடைய பிரார்த்தனைகளிலும், கனவுகளிலும் அவன் பெண்களுடன் சல்லாபித்துக் கிடக்கிறான். நீர் இங்கிருந்து கொண்டு மற்றவர்களைக் கேலியும், கிண்டலும் செய்து கொண்டு உம்மை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறீர். இனிமேலும் உம்முடன் என்னால் போராடிக் கொண்டிருக்க முடியும் என்று தோன்றவில்லை. ஜேக்கப் மடைதிறந்தது போலப் பேசிக் கொண்டிருந்தான்.

    உதடுகள் கோணத் தன் தந்தையைப்பார்த்து சிரித்தான். அவரது சோம்பேறியானச் செல்ல மகனை வைதது அவனுக்குக் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. எதைப்பற்றியும் பெரிதாக சிந்திக்காமல் திரும்பவும் தொட்டிக்குள் குதித்து திராட்சைகளை மிதிக்கத் தொடங்கினான் ஜேக்கப்.

    ரத்தம் சூடாகத் தலைக்கேற முதிய செபெதீ, அவனது மூத்தமகனைக் கோபமாகப் பார்த்தார். என் சோத்தைத் தின்றுவிட்டு என்னையே எதிர்த்துப் பேசுகிறது இந்த குஞ்சுக் குருமாண்டி! என்ன தெரியும் இந்தப் புழுக்கைப் பயல்களுக்கு. தன் அப்பன் என்னவெல்லாம் செய்து, தன் ரத்ததையும் வேர்வையையும் கொடுத்து இந்த நிலைமைக்கு வந்திருக்கின்றான் என்று. சுகமாகப் பசிக்கும் நேரத்தில் உணவும், ஓய்வெடுக்க உறைவிடமும் இவனுகளுக்குக் கிடைத்துவிட்டதால் இவனுகளும் எதைப் பற்றியும் நினைத்துக் கூடப் பார்க்க மாட்டார்கள். சுயநலம் பிடித்த பச்சோந்திப் பயல்கள் என்று தனக்குள் சொல்லிக்கொண்டவர். அவனை நோக்கி முன்செல்ல எத்தனித்தார். எப்படியும் அப்பனுக்கும் பிள்ளைக்கும் சண்டை மூளப் போகிறது என்று நினைத்தத் தருணத்தில் நாசரேத்தில் வாழும் ஜோசப்பின் மனைவி, மேரியைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு ஜான் உள்ளே நுழைந்தான். அவளது மெல்லியக் கால்களில் அடிபட்டு ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. முழங்கால் வரைப் புழுதி படிந்திருந்தது. அவள் இது நாள் வரைப் பயணப்பட்டுக் கொண்டிருந்தாள். தன் இல்லத்தையும், கணவனையும் அப்படியே விட்டுவிட்டு கிராமம் கிராமமாகத் தன் ஒரே மகனைத் தேடி அலைந்து திரிந்து கொண்டிருந்தாள். கடவுளால் ஆட்கொள்ளப்பட்டுப் பித்தனைப் போல அவனது மகன் அவளை விட்டுப் போய்விட்டான். அவன் மனிதனின் வழிகளிலிருந்து பெயர்ந்து எங்கோ மறைந்து விட்டான். மேரியோக் கைவிடப்பட்டத் தன் குழந்தையை, அவனது சாபத்தை எண்ணி எண்ணி, ஒவ்வொரு வீடுகளாகத் தெருக்களாக, வயல் வெளிகளாக எல்லா இடமும், அவனை நினைத்துப் புலம்பிக் கொண்டே, அங்குள்ள எல்லா மக்களையும் அணுகி விசாரித்துத் தேடிக் கொண்டிருந்தாள். "யாராவது அவனைப்பார்த்தீர்களா, எங்காவது அவனைப் பற்றிய செய்திகள் கிடைத்தனவா" என்று அவனைப் பற்றிய அங்க அடையாளங்களைச் சொல்லிச் சொல்லித் தேடினாள் அந்த முதியவள். நல்ல வளர்த்தியான, ஒல்லியானத் தேகம் கொண்டவன், நீல நிற அங்கியும், இடுப்பில் ஆட்டுத் தோலால் செய்த வார்ப்பட்டையும் அணிந்திருந்தான். காலணிகள் எதுவும் அணியவில்லை. எங்காவது அவனைப் பார்த்தீர்களா! ஒருவேளை?"...யாருக்குமே அவனைப் பற்றித் தெரியவில்லை. செபெதீயின் இளையமகனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவன் தன்னுடைய வழியில் முதியத் துறவியை வழி அனுப்பி விட்டுத் திரும்ப பாலைவனத்திற்குள் மடாலயத்தை நோக்கி சென்று கொண்டிருந்தான். வழியில் பரந்துக் கிடக்கும் வெற்று மணல் வெளியில் தரையோடுத் தரையாக குப்புற விழுந்து கிடந்த வெள்ளை நிறத்துணியால் மூடப்பட்டிருந்த ஒன்றை வெகுதூரத்திலிருந்துப் பார்த்தான். பின் அதனருகில் சென்றுப் பார்த்தபோதுதான் தெரிந்தது, அங்கே மண்ணைத்துளைத்துத் தன் பிரார்த்தனைகளையும், கேவலையும், சொல்லிக் கொண்டே இருக்கும் ஒரு மனிதக் குரலைக் கேட்க முடிந்தது. ஜான் அவளிடம் மன்னிப்புகள் தெரிவித்தான். அவளைத்தூக்கி தன்னிடமிருந்த நீரை அருந்த வைத்து சற்று ஆசுவாசப்படுத்தினான். பின் அவள் சொன்னதைக் கவனமுடன் கேட்டான். இப்பொழுது, ஜானின் கைகளைப் பிடித்துத் தாங்கிக் கொண்டு செபெதீயின் இல்லத்திற்கு, பாலைவனத்திற்கு செல்வதற்குமுன் சற்று தெம்பாகிக் கொள்ளவும் ஓய்வெடுக்கவும் அவள் வந்திருந்தாள். 

    முதிய சலோமி அவளைத் தன் கைகளை நீட்டி ஆதுரத்துடன் வரவேற்றாள். "வா! மேரி! என் அன்பே!", "உள்ளே வா" அவளது குரலில் கனிவும் அன்பும் மிளிர்ந்தது.

மேரி தலையைக் குனிந்து கொண்டு நிலத்தைப் பார்த்துக் கொண்டு, தன் கைக்குட்டையினால் நெற்றியையும், கழுத்தையும் அழுத்தித்துடைத்து, விம்மிக் கொண்டே முன்னே சென்றாள். முதியக் கைகளிற்குள் தன் கைகள் வெம்மையை உணர்ந்ததும் விசும்பல் உடைந்து பீறிட்டது.

"உன்னை அழ வைத்தது எவ்வளவு பெரிய பாவம், என் குழந்தாய்". அவளை ஒரு இருப்புப்பலகையில் இருக்கவைத்து, தான் அவளின் முகத்தைக் காணும் வண்ணம் அந்த முதியவள் அமர்ந்தாள். "உன் மகன் பத்திரமாக இருக்கிறான், கடவுளின் நிழல் தாங்கலில் அவனுக்கு எதுவும் நேராது" பயப்படாதே"

"ஒரு தாயின் வலி கொடியது, அது அந்தக் கடவுளும் அறியாதது, சலோமி!" மேரிக்கு மூச்சிறைத்தது. மெதுவாகத் தன்னை பக்கவாட்டில் அசைந்து கொடுத்து அமைதி படுத்த முயன்றாள். "கடவுள் எனக்கு கொடுத்தது ஒரு மகன், ஆனால் அவனும் தன்னைத்தானே அழித்துக்கொண்டு விட்டான்."

வியாழன், 3 மார்ச், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் - 63

    

Author: Nikos Kazantzakis

    கிழவர் பிதற்றிக் கொண்டே இருந்தார், அவரது குரல் அவரினுள் இருந்து கூச்சல்களாக குதித்துக்கொண்டிருந்தது. கீழே குத்தவைத்து அமர்ந்து, கைகளினால் தலையைப் பிதுக்கினார். தலையினுள் ஏதோ வலுவாக அறைவது போல "நங்க்...நங்க்" என்ற சப்தங்கள். மூளையின் நிணத்தினுள், ஒரு பழுத்தக்கம்பி கீறிச் செல்வது போல. அதன் கீறலினுள்ள்ளிருந்து புழுக்கள் நெழிந்து வெளியேறுகின்றன. அவரது காட்சிப்புலம் மங்கி எதிரில் திரையாடுகிறது. முன்னே தெரியும் உலகம் அலைந்து நெகிழ்கிறது. 

"அதன் அர்த்தம் என்ன ? அதன் செய்தி என்ன?"

    திடுக்கென்று கண்களில் தாரைதாரையாக கண்ணீர் பெருக, ஒரு குழந்தையைப் போல வீறிட்டு அழத் தொடங்கினார். தன்னுள் தன்னை மீறீ நிகழ்வதை சகிக்க முடியாது, கைகளினால் தரையில் அறைந்தார். பின் அருகில் இருந்த மடாதிபதியின் புனிதக் கோலைப் பிடித்து எழுந்து மேஜையின் விளிம்பில் சாய்ந்து தன்னை சகஜப் படுத்த முயன்றார், துறவி ஜெரோபோம். அருகில் ஜீசஸ் கண்கள் மூடி அமர்ந்திருந்தான்.

    "ஜீசஸ்" மிகவும் தாழ்ந்தக் குரலில் யாரையும் தொந்தரவு செய்யாத படி விளித்தார் முதியவர்.

"நீ உன் இருதயத்தினுள் என்ன உணர்கிறாய்"

    இளைஞனுக்கு எதுவுமே கேட்கவில்லை. அவனது தொண்டை வறண்டிருந்தது. வார்த்தைகளற்ற அகத்தின் மேலும் கீழும் சலசலப்புகள் அற்று அமைதியினுள் மூழ்கியிருந்தான். எத்தனையோ வருடங்களாய் அவனுள் கனன்று கொண்டிருந்த ஒன்றை இந்த இரவு வெளியேற்றியிருக்கிறது. முதல்முறையாகத் தன் இருதயத்தின் ஆழ்ந்த இருளினுள் நுழைந்து அவன் தன்னைப் பற்றிப் பேசமுடிந்த இரவு. ஒவ்வொன்றாகத் தன்னை அழுத்திக் கொண்டிருப்பவைகளை, அதன் பலப் பல பாவனைகளை, சுருண்டு நெழிந்து நொதித்துக் கொண்டிருக்கும் பாம்புகளின் வெவ்வேறான உருவங்களை அவனால் வேறுபடுத்திப் பார்க்க முடிந்தது. அதன் தாறுமாறானச் சீற்றங்களை உட்கிரகித்து, அதனுள் உழன்று உணர முடிந்தது. அதனைத் தன் உடலிலிருந்து அறுத்தெடுத்த உறுப்புகள் போலப் பார்த்தான். தன்னுள் இதுவரை எவ்வாறு அது ஒரு கண்ணுக்குத்தெரியாத ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் போல வாழ்ந்து கொண்டிருந்தது என்பதும், இப்பொழுது அதனைப் பிய்த்துத் தன் எதிரில், இந்த முதியத்துறவியிடம் வெளிப்படுத்தியவுடன் அவைகளின் உருக்களும், நிறங்களும் எப்படி ஸ்தூலமாகத் தெரிந்தன என்பதும் அவனுக்கு தெளிவாகப் புரிந்தது. அவனும் அவைகளிலிருந்து தான் விடுபட்டது போல உணர்ந்தான்.

    "ஜீசஸ், இப்பொழுது உன் இருதயம் எப்படி உணர்கிறது, நீ விடுவிக்கப்பட்டது போல உணர்கிறாயா". துறவி ஜெரோபோம், திரும்பவும் தாழ்ந்த அமைதியான குரலில் அவனைக் கேட்டார். ஆனால் அவனைப் பேசவிடாமல் கைகளால் அவன் உதடுகளைப் பொத்திக் கொண்டார்.

    "வா" என்று சொன்னவர் தனது இன்னொரு கையால் அவனது கைகளைப் பிடித்துக் கொண்டு இழுத்துச் சென்றார்.

    வெளிக்கதவைத் திறந்து அவர்கள் முற்றத்தைத் தாண்டி சென்று கொண்டிருந்தனர். பாம்புகள் உடல்கள் பிணைந்து வால்கள் துடிதுடிக்க எதிரே நிலத்தில் ஊன்றிச் சுழன்றாடுகின்றன. ஒன்றாய்ப் பலவாய் நிலமெங்கும் முளைத்திருக்கும் பல்லாயிரம் மணற்சுழல்கள் துடிப்பதும், அடங்குவதும், நகர்வதும், சுழல்வதும், ஆடி அடங்குவதுமாய் சதகோடி நாட்டியங்கள். கடவுளின் மூச்சின், அளவிடமுடியாத திமிர்வினால் விடைத்துக் கொண்டு  எம்பிச் சுருங்கிக் கொண்டிருந்தன புழுதித் துகள்கள்.

    அவைகளைப் பார்த்ததும் மேரியின் மகன் பின்வாங்கினான். ஆனால் துறவியின் கைகள் அவனை இறுக்கிப் பிடித்திருந்தன. அவர் அவனை இழுத்து வந்து, ஒரு மேகக்கொத்து போல மென்மையாகவும், ஆனால் துகள்களின் பெருக்கால் திடத்தன்மையும் கொண்ட பசித்து விடைத்துச் சுழன்றாடும் அதன் தூய நுனிகளைத் தொட்டுணர வைத்தார்.

    "இங்கே இருக்கின்றன அவைகள்" மெதுவாகச் சொன்னவர், இளைஞனைப் பார்த்து அமைதியாகச் சிரித்தார். "இதோ அவைப் பிரிந்து துகள்களாகப் பறந்தோடுகின்றன"

"பறந்தோடுகின்றனவா?" மேரியின் மகன் குழப்பமாகக் கேட்டான்.

"எங்கு பறந்தோட முயல்கின்றன"

    "இப்பொழுது உன் இருதயம் சுமைகளற்றுக் காலியாக இருப்பதை நீ உணர்கிறாய் இல்லையா! அவைகள் உன் இருதயத்திலிருந்து பறந்தோடி விட்டன"

    மேரியின் மகன் தனது நீண்ட விழிகளால் ஆழ்ந்து துறவியைப் பார்த்தான். அவர் அதே வெறிச்சிரிப்புடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவன் ஸ்பரிசத்தின் நுனிகளிலிருந்து கிளம்பிச் சென்ற பாம்புகளின் பிணைந்த ரூபம், நிலத்திலிருந்து குதித்துத் குதித்து நடனமாடுகின்றன. பின் அந்தப் பாழுங்கிணற்றை நோக்கி நகர்ந்து செல்லுகின்றன. அவன் தன்னை உணர்கிறான், தன் உடலை இன்னும் இன்னும் ஆழமாகத் தொட்டுணர்கிறான். தன் கையை நெஞ்சினில் வைத்து அதன் துடிப்புகளை, எந்த சலனமுமற்றுக் கேட்கிறான். அது விரைவாகவும், மகிழ்ச்சியுடனும் பதில் கூற முயல்கிறது.

    "வா! நாம் உள்ளே போகலாம்". துறவி திரும்வும் அவனது கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு உள்ளே சென்றார். பின் கதவை இறுக்கி அடைத்தார்.

    "எல்லாம் வல்ல இறைவனுக்கு பெருமை" துறவி பயபக்தியுடன் வானை நோக்கிக் கூறிப் பின் மேரியின் மகனின் கண்களைப் பார்த்தவர் தன்னுள் விசித்திரமானத் தொந்தரவுக்குள்ளானார்.

    "இது அற்புதம் தான்" அவர்  தனக்குத்தானே சொல்லிக் கொண்டார். "என் முன்னே நிற்கும் இந்தப் பையனின் வாழ்க்கை உண்மையில் ஒரு அற்புதம் தான்".

    ஒரு சமயம் ஜீசஸின் தலையில் கைவைத்து அவனுக்கு ஆசிர்வாதங்களை வழங்க நினைத்தார். மறு சமயம் அவன் முன் மண்டியிட்டு அவனது பாதங்களில் முத்தமிட வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. ஆனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். காலங்காலமாக இதுநாள் வரைக் கடவுள் அவரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளுக்குச் செவி கூர்ந்து எத்தனையோ முறை மலைமுகடுகளிலும், அடர்ந்த பாலைவனத்திலும் அலைந்து திரிந்துத் தேடும் பொழுது அவனது குரல் கேட்கும் திசை நோக்கி அலைக்கழிப்பப்படுவார். "இவன் தான் மெசியா" "இவன் தான் மெசியா" என்று அதற்கான அடையாளங்களை அது  காட்டும். ஆனால் கடவுள் ஒவ்வொருமுறையும் அவரை ஏமாற்றிக் கொண்டே இருந்தார். எந்தத் தருணத்திலும், அவனின் அழைப்பு, அவனின் விளி கேட்கும் என்று நம்பிக் கொண்டு, மலர்வதற்காக காத்திருந்த அவரது இருதயம், வாடி வதங்கிய ஒரு மொட்டைக் காம்பாகத் தான் இதுவரை இருந்திருக்கிறது. அவர் தன் உணர்ச்சிகள் வெளிப்படுவதை வலிய அடக்கிக் கொண்டார். 

    "இவனை முதலில் சோதிக்க வேண்டும் என்று தன்னுள் நினைத்துக் கொண்டார். இவனுள் இருந்து இவனை விழுங்கிக்கொண்டிருந்த நாகங்கள் இதோப் பறந்து வெளியேறிவிட்டன. இப்பொழுது இவன் தூய்மையாகிவிட்டான். இது சரியானத் தருணம். இவன் தன்னிருப்பின் மலர்ச்சியானப் பக்குவத்தில் இருக்கிறான். இவன் இனி மனிதர்களிடம் பேசுவான். அப்பொழுது நாம் அறிந்து கொள்வோம் இவன் யாரென்று"

    ஜெரோபோம் கதவைத் திறந்தார். அவருடன் இரு விருந்தாளிகள் உடனிருந்தனர். அவர்கள் தங்களின் எளிய இரவுணவை அருந்துவதற்காகத் தரையில் அமர்ந்தனர். பார்லி ரொட்டியும், ஆலிவ் எண்ணெயும் பாலும் அவர்களுக்கு முன் எடுத்து வைத்தார் ஜெரோபோம். பின் ஜீசசைப் பார்த்து உன்னுடையப் படுக்கையை வெளியில் இருக்கும் இன்னொரு அறையில் ஒருக்கம் செய்துள்ளேன். உனக்கு இரவில் துணையாக, இன்னொருத்தனும் தங்குவான் என்று சொல்லிக் கொண்டு அவர்களுடன் அமர்ந்தார்.

    அந்த இரு விருந்தாளிகளின் அகமும் இரு வேறுதிசையில் தன்னைச் செலுத்திக் கொண்டிருந்தன. அவர்கள் தங்களை அருகருகில் உணர்ந்ததாகக் கூடத் தெரியவில்லை. அந்த மூச்சு சீறும் ஒலி, கிணற்றின் அடியாழத்திலிருந்துக் கேட்கிறது. அதன் உடல் குழாய்கள் உராய்ந்து கொள்கிறது. அதன் குரலின் ரகசியத் தன்மை கட்டுக்குள் இல்லாமல் இன்னும் கேட்டுக் கொண்டே இருந்தது.

    அவைகள் திருமணம் செய்துகொள்ளும், சொன்ன முதியவர் வெறுமனே சிரித்து வைத்தார். சூழலின் அழுத்தம் சற்றுத் தளர்ந்தது. கடவுளின் மூச்சு இன்னும் சீறிக் கொண்டிருக்கிறது. அது அவைகளுள் ஒரு நோய்க்கூறு போல பரவி விட்டிருக்கிறது. ஆனால் அவைகளுக்குப் பயமில்லை. அதனால் இது திருமணத்தில் போய்தான் முடியும்.

    இளைஞன், முதியவரைப் பார்த்தான். ஆனால் அவன் முகத்தில் எந்த உணர்ச்சிகளுமில்லை. துறவி தனது ரொட்டியைப் பாலில் முக்கிப் பிய்த்து தின்று கொண்டிருந்தார். அவர் பசியில் தளர்ந்திருந்தார். அவர் தன் உடலின் வலுவைத் திரும்பப் பெற வேண்டும். அப்பொழுதுதான் திரும்பவும் தன்னால் மேரியின் மகனுடன் பேச முடியும் என்று நினைத்தவர், அமைதியாக உண்ணத் தொடங்கினார். இந்த ரொட்டியும், எண்ணெயும் பாலும் தன்னுள் வலுவாக, அறிவாக மாறுகிறது என்று நினைத்துக் கொண்டார். பைத்தியத் துறவி ஜெரோபோம், வெறுமனே எதுவும் பேசாமல் அமர்ந்திருந்த இருவரையும் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். பின் சலிப்புற்று அங்கிருந்து சென்றுவிட்டார்.

    சம்மணிமிட்டு எதிரெதிரே அமர்ந்திருந்த இருவரும் இன்னும் பேச வாயெடுக்கவில்லை. வெறுமனேத் தின்று கொண்டிருந்தனர். ஏழு நிலைகள் கொண்ட விளக்கொளியில், அறையின்  மங்கலான வெளிச்சம் வாசல் வரைப் பதிந்துக் கிடந்தது. ஒரு ஊரும் ஜந்தினைப் போல ஒளியும் அங்கு நெழிந்து ஊறியது. தீர்க்கதரிசி டேனியலின் புனித வார்த்தைகளின் பட்டயம் இன்னும் மேஜை மேல் திறந்து வைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த சொற்களின் குரல்கள் ஒரு தணல் போல அறையினுள் ஒரு உயிருள்ள பொருள் போலவே அலைந்து திரிந்து கொண்டிருந்தது. மடாதிபதியின் புனிதக் கோல் அசைவற்று மூலையில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது.

    நறுமணத்தைலத்தின் புகைச்சுருள் கிளம்பி உத்திரம் வரைச் சுழலிடுவது, அந்த மங்கலான ஒளியினுள் இன்னும் இறந்தவரின் ஞாபகங்களைச் சீண்டிக் கொண்டிருந்தன.

    "காற்றின் வேகம் சற்றுத் தணிந்தது போல இருக்கிறது" முதியவர் பேச்சைத் தொடங்கினார். 

"கடவுளின் குரல் அருகிலும் தூரத்திலுமாய் விளிப்பது போல என்ன!"

    இளைஞன் எந்தப் பதிலும் அளிக்கவில்லை. "அவைகள் போய்விட்டன, அவைகள் போய்விட்டன, என்னுள் பிணைந்திருந்த பாம்புகள் ஓடிவிட்டன. ஒருவேளைக் கடவுள் இதைத்தான் செய்ய நினைத்திருந்தாரா! அதற்காகத் தான் என்னை இந்த பாலைவனத்திற்குள் வர வைத்தாரா! என்னை என்னுள்ளிருந்து உயிர்ப்பிக்கத்தான் அவர் இந்த சோதனைகளினுள் என்னை ஆடுவிக்கிறாரா!"

    அவனின் உடலிலிருந்து கொத்தாக அந்த பாம்பு உடலங்கள், சிதறி வெளியேறியதை அவன் நேரடியாகப் பார்த்தது போலவே உணர்ந்தான். 

"கடவுளுக்கே எல்லாப் பெருமையும்"

    தனது உனவை உண்டு முடித்ததும், கைகளை உயர்த்தி முதியவர் நன்றி தெரிவித்தார். பின் தன்னெதிரே இருந்த இளைஞனைப் பார்த்தார்.

    "ஜீசஸ்! உன் நினைப்பு எங்கே இருக்கிறது? நான் தான் நாசரேத்தின் துறவி! நீ நான் சொல்வதைக் கேட்கிறாயா?"

    "நான் நீங்கள் சொல்வதைத்தான் கேட்கிறேன், சிமியோன் மாமா!" தன்னுடைய எண்ணங்களிலிருந்து சட்டென்று விழித்துக் கொண்ட இளைஞன் அவரைப்பார்த்து புன்முறுவல் உதிர்த்தான்.

"நமது காலம் இங்கே உள்ளது! நண்பா! நீ தயாராக இருக்கிறாயா"

"தயாரா! எதற்கு!" ஜீசஸ் புரியாமல் கேட்டான்.

    "உனக்கு நன்றாகத் தெரியும், எதற்காக என்னிடம் கேட்கிறாய்? எழுந்து நின்றுப் பேசத் தயாரா?"

"யாரிடம்?"

"இந்த மனித குலத்திடம்"

"பேசுவதென்றால், என்ன பேச?"

    "அதைப்பற்றிக் கவலைப்படாதே! நீ உன் வாயை மட்டும் திற! கடவுள் உன்னிடம் வேறு எதையுமேக் கேட்கவில்லை, நீ இந்த மனிதகுலத்தை விரும்புகிறாயா?"

    "எனக்குத் தெரியவில்லை. நான் மனிதனைக் காணும் பொழுதெல்லாம் அவனுக்காக கவலையுறுகிறேன், வேறு ஒன்றும் எனக்குத் தோன்றியதில்லை"

    "அது போதும். என் மகனே, அது போதும். அவர்களுக்கு முன் நின்று நீ பேசு. அதனால் உனது துயரங்கள் இன்னும் அதிகமாகலாம். ஆனால் அவர்கள் அதன் மூலம் ரட்சிக்கப் படுவார்கள். ஒருவேளைக் கடவுளும் அதற்காகத் தான் உன்னை அனுப்பி வைத்திருக்கிறாரோ, என்னவோ! நாம் பார்க்கலாம்!"

    "ஒருவேளைக் கடவுள் அதற்காகத் தான் இந்த உலகிற்கு என்னை அனுப்பியிருக்கிறாரா!" இளைஞன் அந்த வார்த்தைகளைத் திரும்பச் சொல்லிக் கொண்டான். "உங்களுக்கு எப்படித் தெரியும், தந்தையே?". இளைஞனின் ஆன்மா, அவன் உடலிருந்து வெளியேறி அவரிடம் மன்றாடும் தொனியில் இருந்தது  அவனது குரல். அது அவரின் பதிலை எதிர்பார்த்து இன்னும் ததும்பி நிற்கிறது.

    "எனக்குத் தெரியாது, யாரும் என்னிடம் அப்படிச் சொல்லவில்லை" ஆனால் அதற்கான சாத்தியக் கூறுகளை நான் உன் வழியேக் காண்கிறேன். ஒரு முறை நீ சிறுவனாக இருக்கும் பொழுது களிமண்ணை வைத்து ஒரு பறவையைச் செய்தாய். மிக நுட்பமாக அதன் சிறகுகளைப் படைத்திருந்தாய். நீ அதனை ஸ்பரிசிக்கும் பொழுது அதன் சிறகுகள் உருக்கொண்டு அது உடலெடுத்து, உன் கைகளிலிருந்து பறந்துவிடுவதைப் போல உணர்ந்தேன். அதற்கு சாத்தியமுண்டு ஜீசஸ். அந்தப் பறவைதான் மனித ஆன்மா. ஆம்! மகனே! மனிதனின் ஆன்மா உன் கைகளினுள் படபடபக்கிறது.

    இளைஞன் எழுந்துக் கவனமாகக் கதவினைத் திறந்து, வெளியைக் கூர்ந்தான். கடைசியாகச் சர்ப்பங்களின் மொலுமொலுத்தல் சுத்தமாக அடங்கியிருந்தது. "தயவுசெய்து, என்னை ஆசிர்வதியுங்கள் தந்தையே, என்னிடம் வேறு எதுவும் பேசாதீர்கள், நீங்கள் அதிகமாகவே எனக்கு வழங்கிவிட்டீர்கள், இனிமேலும் என்னால் தாங்க முடியாது"

    மறுபடியும் அமைதி! சிறிதுகணம் கழித்து, "எனக்கு சோர்வாக இருக்கிறது, மாமா! நான் உறங்கச் செல்கிறேன். சிலசமயம் கடவுள் இந்த இரவினுள் வந்து இன்று நிகழ்ந்த அனைத்திற்குமான காரணத்தை எனக்கு விளக்க வாய்ப்புண்டு, நன்றாக உறங்குங்கள் மாமா!

வரவேற்பாளர் வாசலில் அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.

    "போகலமா வா!, எங்கே உனக்கு படுக்கை வசதி செய்து வைத்திருக்கிறேன் என்றுக் காட்டுகிறேன் ! உன் பெயர் என்ன சொன்னாய், என் கெட்டிக்காரப் பையா?"

"தச்சனின் மகன்"

    "என்னுடைய பெயர் ஜெரோபோம். என்னை மூளை கெட்டவன் என்றும் அழைப்பார்கள். அரைப்பைத்தியம் என்று கூட. அதனால் என்ன! நான் கடவுள் கொடுத்த என் சொந்தப் பற்களைக் கொண்டு என் நாக்கினையேக் கடித்துக் கொள்கிறேன். யார் என்னிடம் கேட்கப் போகிறார்கள்? நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று!" சொன்னவர் வெடிக்கச் சிரித்தார்.

"என்ன நாக்கினையா"

    அரைப்பைத்தியம் சிரித்தது. "உனக்குப் புரியவில்லையா, முட்டாளே? அது என் ஆன்மா! எப்படியும் அதை நான் தின்று விடுவேன் - நல்லிரவு, இனியக் கனவுகள் அமையட்டும்! நானும் செல்கிறேன். என்னை அமர்த்தி சாரோன் எப்படியும் இவ்விரவை ஓட்டி விடுவான். நாம் நம் பாதாள உலகத்தில்  சந்திக்க வாய்ப்பிருக்கலாம்."

நின்றவர், அந்தச் சிறியக் கதவினை அழுத்தித் திறந்தார்.

    "உள்ளே வா" "அதோ பின்னால் மூலைக்கருகே உனக்குப் பாய் விரித்திருக்கிறேன். அங்கே உறங்கிக் கொள்" "போ," என்று அங்கேத் தள்ளினார். "நன்றாக உறங்கு, பையா!, பயப்படாதே! எப்படியும் பெண்களைப் பற்றியக் கனவுகள் தான் வரும், ஏன் என்றால் இங்கு வீசுவது மடாலயத்தின் காற்று" என்று சொன்னவர் எச்சில் தெரிக்க, பற்கள் தெரிய அவனைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தார். பின் வெளியே சென்று கதவை இறுக்கிச் சாத்தினார். அவ்வொலி அறையெங்கும் எதிரொலித்தது.

    மேரியின் மகன் அறை இருளினுள் அசையாமல் நின்று கொண்டிருந்தான். ஒன்றுமேத் தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக கண்ணுக்கு புலப்படும் வகையில் பொருட்களை வேறுபடுத்திப் பார்க்க முடிந்தது. வெள்ளை நிறச் சுண்ணம் மெழுகிய அறைச்சுவர்கள் சற்றுத் துலக்கமாகத் தெரிந்தது. படுக்கைக்கு அருகில் மூலையில் ஒரு சாடியில் குடிக்கத் தண்ணீர் இருந்தது. இருளினுள் இரு மனிதக் கண்கள் அவனைக் குத்துவது போல எதிரில் பார்த்துக் கொண்டிருந்ததை அப்போதுதான் கவனித்தான்.

    தட்டுத்தடுமாறி மெதுவாக அந்தப் பார்வையை நோக்கி முன்னே வந்தான். கால்களுக்கடியில் படுக்கைவிரிப்புகள் கலைந்துச் சிக்கின. கைகளை முன்னே நீட்டிக் கொண்டே நகர்ந்தவன், விழுவது போலச் சரிந்து ஓரிடத்தில் நின்றான். அந்தப் பார்வையும் அதுபோலவே அவனை நோக்கி வந்து எதிரில் நின்றது. 

    "மாலை வணக்கங்கள், நண்பனே!", மேரியின் மகன் எதிரில் நின்றிருந்த அந்த உருவிற்கு வணக்கங்கள் தெரிவித்தான். ஆனால் எந்தப் பதிலும் வரவில்லை. 

    தன் முழங்கால்களில் நாடித் தொடும் வரைக்  கீழேக் குனிந்து ஆழமாக மூச்சிறைத்தான். அவனது சுவாசம் அறைமுழுதும் எதிரொலித்து ஒரு மிருகலயத்தை உண்டு பண்ணியது. எல்லாம் தன் மயக்குதான் என்று நினைத்தவன், அப்படியேத் தன் பாயில் சரிந்துப் படுத்துக் கொண்டான். யூதாஸ் எதிரில் சுவரோடுச் சுவராக நின்று கொண்டிருந்தான். "வா! வா! வா! என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். அவனது வலது உள்ளங்கையினுள், தனது கத்தியை அவனது நெஞ்சில் குத்துவதற்குத் தோதாகக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தான். வா! வா! வா! இன்னும் எதிரில் அப்படியே அசையாமல் அவனைக் கவரும் வகையில் நின்று தனக்குள் மந்திரம் போல, வா! வா! வா! என்று சொல்லிக் கொண்டுத் தயாராக நின்று கொண்டிருந்தான்.

    யூதாசின் நினைப்பு அங்கிருந்துக் கழன்றுத் தான் பிறந்தக் கிராமத்தினுள் நுழைந்தது. கெரியோத் எனும் அச்சிறியக் கிராமம் இதுமியாவிலிருந்தும் தொலைவில் இருப்பது. அவனுக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. தனது மந்திரவாதி மாமா எப்படித் தன் மந்திரவித்தையால் குள்ள நரிகளை, முயல்களை, கௌதாரிகளைக் கவர்ந்துக் கொல்வார் என்பது. வேட்டையின் போது,  அவர் தன்னை நிலத்தோடு நிலமாக இருத்திக் கொண்டு, தன் கனன்று எரியும் கண்களால், அம்மிருகங்களைக் கூர்ந்துப் பார்ப்பார். மந்திரங்கள் இடைவிடாமல் அவரது நாக்கில் உருண்டோடும். அது ஒருசமயம் பிரார்த்தனை போலவும், மறுசமயம் கட்டளைகள் போலவும் தாழ்ந்தும் உயர்ந்தும் அவரது குரல் அம்மிருகத்தை நோக்கிப் பதுங்கும்" வா!....வா!...வா!...அந்த மிருகம் தான் நின்ற இடத்திலேயே மயங்கி வீழும், கைகால்கள் இழுத்துக் கொள்ளும். தலைத் தரையில் அறைந்து ஆடிக் கொண்டிருக்கும், அதன் சுவாசம் துடித்திறங்கும். கணப்பொழுதில் அது அப்படியே துடித்துத் துடித்து மரணிக்கும்.

    அங்கிருந்து மீண்டவன், உடனே தன் மென்மையானக் குரலில் அடித்தொண்டையில் அதே போல ஒரு மந்திர உச்சாடணத்தை இருளிற்குள் தெளித்தான். சிறுகச் சிறுக அக்குரலின் அழுத்தம் கூடி அச்சுறுத்தும் வகையில் முழுக்க அடைத்திருந்த அந்த அறையில் குழுமத் தொடங்கியது. கீழேப் பாயில் படுத்திருந்த இளைஞன் பயத்தில் திடுக்கிட்டு எழுந்தான். "யார் எனக்கு எதிரில் நின்று கொண்டிருப்பது? யார் இந்த சீற்றமிகுக் குரலை எழுப்புகிறார்? என்று தனக்குள் எண்ணிக் கொண்டவனின் மூச்சு சீரற்றிருந்தது. ஆனால் அந்தப்பதுங்கித் தாக்கக் காத்திருக்கும் மிருகத்தை அவனால் அருகில் உணர முடிந்தது. அவன் புரிந்துகொண்டான்.

    "யூதாஸ், இது நீதானா, என் சகோதரா?" அவன் விரைந்து அவ்வுருவைப் பார்த்துக் கேட்டான்.

    "சிலுவையில் அறைபவன்" ஒரு உறுமல் குரல். கால்களை அழுத்தித் தரையில் மிதித்து அந்த முரட்டு உருவம் பதில் உரைத்தது.

    "யூதாஸ், என் அன்பு சகோதரா" திரும்பவும் அழைத்தான் மேரியின் மகன். "சிலுவையில் அறையப்படுவனை விட அறைபவன் அதிகமும் வாதைக்குள்ளாகிறான்"

    செந்தாடிக்காரன், இளைஞனைப் பார்த்து வசைமாறிப் பொழிந்து கொண்டே தன் முரட்டு உடலை அவனை நேருக்கு நேர் பார்க்கும் படித் திருப்பினான்.

    "நான் என் புரட்சியாளச் சகோதரர்களுக்கும், சிலுவையில் அறையப்பட்டு மாண்டவனின் அன்னைக்கும் சத்தியம் செய்திருக்கிறேன். "என் கையாலேயே உன்னைக் குத்திக் கொல்வேன் என்று, வருக! சிலுவை செய்பவனே. நான் உன்னை இங்கே கவர்ந்திருத்துக் கொண்டு வந்திருக்கிறேன்."

    அங்கிருந்து குதித்து வந்து அறைக்கதவை மறுமுறை சரியாக அறைந்து சாத்தி, பின் மூலையில் தரையில் அமர்ந்திருக்கும் ஜீசசை இன்னொருமுறை முழுமையாகப் பார்த்து நின்று கொண்டான்.

    "நான் என்ன சொல்கிறேன் என்பதைக் கேட்டாய் இல்லையா", உன் மழுப்பும் பாசாங்குகளை என்னிடம் காட்டாதே!, ம்ம்! தயாராகு!"

"நான் தயார்"

    "இல்லை, சத்தம் போடு இப்பொழுது!, சீக்கிரம்! நான் இங்கிருந்து இந்த நிமிடமே, இந்த இருளிற்குள் புகுந்துத் தப்பித்து விடுவேன். ம்ம்! சீக்கிரம்!"

    "நான் உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சியடைகிறேன் யூதாஸ், என் சகோதரா!. நான் தயார். நீயல்ல என்னைக் கவர்ந்து வந்தது, கடவுள்! -அதனால் தான் நான் இங்கு வந்தேன். அவனுடைய அளவிடமுடியாக் கருணை எல்லாவற்றையும் சரியாகத் திட்டமிட்டிருக்கிறது. நீ அதற்கான சரியானத் தருணத்தில் இங்கே வந்திருக்கிறாய், யூதாஸ், என் சகோதரா!. இந்த இரவில் என் இருதயம் தன் பாரங்களை எல்லாம் இறக்கிக் காலியாக்கி, தூய்மையாகி விட்டது. நான் என்னைக் கடவுளிடம் இக்கணம் முழுதளிக்க முடியும். நான் உண்மையில் அவனுடன் போராடித் தளர்ந்து விட்டேன். உண்மையில் வாழ்வதிலும் சலிப்படைந்து விட்டேன். நான் என் கழுத்தை உனக்கு அளிக்கிறேன். ம்ம்! எடுத்துக் கொள்! நான் முற்றிலுமாகத் தயார்!"

    கொல்லன் அவனை ஏறிட்டு நோக்கினான். அவனது புருவங்கள் உயர்ந்து நெற்றியில் ரேகைகள் முடிச்சிட்டன. அவன் இது போல ஒன்றை எதிர்பார்க்கவில்லை. அவன் எப்பொழுதுமே இப்படி ஒன்றை விரும்ப மாட்டான். இது அவனை அருவருக்கச் செய்தது. எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் கழுத்தை வெட்டுவதற்காக, ஒரு ஆட்டைப் போல  நீட்டும் இப்படி உயிரை உண்மையில் அவனால் எதிர்கொள்ள முடியவில்லை. அது போராட வேண்டும். தன் உயிரைப் பிடித்துக் கொண்டுத் துடிதுடிக்க வேண்டும். சண்டையிட வேண்டும். இல்லையேல் தப்பியோடவாவது முயற்சிக்க வேண்டும். அதன் நிணம், கொழுத்தக் குருதி தெறிக்க, தன் வலுவால் அதனைக் கொன்றுக் கிழிக்க வேண்டும். ஒரு ஆண்மகன் அப்படித் தான் செய்வான். ஆனால் இப்படி ஒருத் தருணத்தில் தான் என்ன் செய்வது என்று குழம்பிப் போனான் செந்தாடிக்காரன்.

    மேரியின் மகன் தன் கழுத்தை முன்னே நீட்டிக் காத்துக் கொண்டிருந்தான். ஆனால் தன் வலுவானக் கைகளை உயர்த்தியக் கொல்லன் திரும்பப் பின் வாங்கிக் கொண்டான்.

"ஏன் நீ எதிர்ப்பு காட்டாமல் அமர்ந்திருக்கிறாய்" அவன் கத்தினான். என்ன மாதிரியான மனித ஜென்மம் நீ? எழுந்து என்னிடம் சண்டையிடு!"

    "ஆனால் எனக்கதில் விருப்பமில்லை, யூதாஸ், என் சகோதரா. எதற்காக நான் எதிர்க்க வேண்டும். நீ என்ன விரும்புகிறாயோ, நான் என்ன விரும்புகிறேனோ, கடவுளும் அதைத்தான் விரும்புகிறார். அதற்காகத் தான் அவர் எல்லாவற்றையும் சரியாகக் கோர்த்திருக்கிறார். நீ இதை நினைத்துப் பார்த்தாயா! சரியாக நான் இந்த மடாலயத்திற்கு எப்போது நுழைந்தேனோ, அதே சமயத்தில் தான் நீயும் வந்திருக்கிறாய். நான் இங்கே வந்தேன், என் இருதயம் முழுதும் தூய்மையாகி, அமைதியடைந்து விட்டது. நான் கொல்லப்படுவதற்குத் தயாராகவே இங்கு வந்தேன். நீ உன் கத்தியை உயர்த்தி வைத்துக் கொண்டு இந்த மூலையில் என்னைக் கொல்வதற்காகவேக் காத்து நின்றிருந்தாய்; கதவு திறந்தது, நான் உள்ளே வந்தேன்....இதற்கு மேல் என்ன சமிஞ்சைகள் உனக்கு வேண்டும், யூதாஸ், என் சகோதரா!"

    ஆனால் கொல்லன் எதுவும் பேசவில்லை. தன் தாடியைப் பற்களில் கடித்துக் கொண்டு கனலும் விழிகளுடன் நின்று கொண்டிருந்தான். கொந்தழிக்கும் அவனது குருதி அவனின் உடல் முழுதும் குமிழ்ந்து கொப்பளித்துக் கொண்டிருந்தது. அடக்க முடியாத அவனது வெறுப்பும், கோபமும் ஒரு கனல் போலப் பற்றிக் கொள்ளும் தருணத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தது. எரிதழல் போல ஜ்வாலையுற அவன் அசைவின்று ஜீசஸை வெறித்தான்.

    "எதற்காக நீ சிலுவைகள் செய்தாய்" அவனது கடுமையானக் குரல் இறுதியில் வெளிப்பட்டது.

    இளைஞன் தலை தாழ்த்தி அமர்ந்திருந்தான். அது அவனது ரகசியம். அதை எப்படி அவனால் வெளிப்படுத்த முடியும். ஒரு கனவின் பாதையை விளக்கினால், அதில் என்ன நம்பகத்தன்மை இருக்கும். தன் கனவினுள் எழுந்த வார்த்தைகளையும், குரல்களையும், அவனைத் துரத்திய மனிதர்களையும், தான் தனிமையில் இருக்கும் பொழுது தன்னைப் பீடிக்கும், தன் மூளையினைக் குத்திக் குதறும் அந்தப் பறவையின் கூரிய உகிர்களையும், அது தன்னை சொர்க்கத்தின் பாதைக்கு அழைத்து உந்துவதை, அதனை நான் மறுதலிப்பதை, இந்த வாதைகளின் சித்ரவதைகளிலிருந்துத் தப்பித்துக் கொள்ள நான் கடவுளுக்கு எதிராக, பாவங்களின் பாதையைத் தேர்ந்தெடுத்து என்னை விடுவிக்க முயல்வதை, இந்த பூமியில், மண்ணில் என்னை இருத்திக் கொள்ள ஆசைப்பட்டதை. இதை  எல்லாம் எப்படி நான் விளக்குவேன். அப்படியே விளக்கினாலும் இதில் இவன் எப்படி நம்பிக்கைக் கொள்ள முடியும். ஸ்தம்பித்து நின்றிருந்த இளைஞனின் அகம் நிலைகொள்ளாமல் அலைந்து கொண்டிருந்தது.

    "என்னால் உன்னிடம் அதற்கு விளக்கங்கள் சொல்ல முடியாது, யூதாஸ், என்னை மன்னித்துவிடு" நான் வருந்துகிறேன். ஆனால் என்னால் முடியாது"

    கொல்லன் அங்கிருந்து சற்றுத் திரும்பி நின்றான். சற்றே வெளிச்சத்தில், மேரியின் மகனின் முகம் தெளிவாகத் தெரியும் படி நின்று கொண்டவன், அவனை ஊடுருவது போலப் பார்த்தான். ஆர்வத்துடன் அவனது வெளிறிய முகத்தில் தேடிய அவனது கண்கள் பின் அறையின் வெற்றுச்சுவர்களை வெறித்துத் திரும்பியது. "என்ன மாதிரியானா ஆள் இவன், என்னால் புரிந்து கொள்ள  முடியவில்லையே!, எனக்கு உண்மையில் ஆச்சரியமாகவும், குழப்பமாகவும் இருக்கிறது. இவனை வழி நடத்துவது சாத்தானா, இல்லை கடவுளா?, எதாவது இருந்துத் தொலையட்டும். அது அவன் பாடு! தன் கைகளை இறுக்கிக் கொண்டு அவனை நோக்கி அடி எடுத்து வைத்தான். அவன் எந்த எதிர்ப்பும் காட்டாததே, பெரிய எதிர்ப்புதான். என்னால் ஒரு ஆட்டைக் கொல்ல முடியாது. மனிதர்களைத்தான் நான் இதுவரைக் கொலை செய்து இருகிறேன். ஆடுகளை அல்ல!"அவன் தனக்குள்ளேயே அங்கலாய்த்துக் கொண்டான்.

    "நீ ஒரு கோழை, இழிபிறவியே!, அறையே அதிரும்படிக் கத்தினான் யூதாஸ். நீ ஏன் நரகத்திகுப் போகவில்லை!. ச்ச்சீய்! உன் ஒரு கன்னத்தை அடித்தால், நீ என்னடாவென்றால் மறுகன்னத்தையும் காட்டுகிறாய். உன்னைக் கொல்லக் கத்தியுடன் வந்தால்,  நீ தோதாகக் கழுத்தை  நீட்டுகிறாய்! ஒரு உண்மையான் ஆண்மகன் உன்னைத் தொடுவானா!" என்று அருவருப்புடன் கண்களைச் சுருக்கி அவனை நோக்கினான்.

    "அது கடவுளால் முடியும்". உணர்ச்சியற்றக் குரலில் மேரியின் மகன் அமைதியாகச் சொன்னான்.

    கொல்லனின் கைகளில் இன்னும் கத்தியிருந்தது. இறுக்கமாக அதைப் பிடித்து வைத்திருந்த அவனின் அகம் இன்னும் தெளிவடையவில்லை. ஒரு நொடிக்கணம் ஒரு வெண் ஒளிவட்டம் இருளினுள் இளைஞனின் தலைக்குப் பின்னே ஒளிர்வது போல மயக்கு அவனுக்குத் தோன்றியது. சட்டெனக் கண்களைக் கசக்கித் திரும்பவும் நோக்கினான். செந்தாடிக்காரனின் முகம் வெளிரிப் போயிருந்தது. அவனது கைகள் தளர்ந்து கையிலிருந்த கத்தி நழுவியது.

    "ஓரு வேளை  நான் எளிதில் புரிந்து கொள்ள முடியாத மடையனாக இருக்கலாம், பரவாயில்லை. நீ சொல்! நான் புரிந்து கொள்கிறேன். நீ யார்? உனக்கு என்ன வேண்டும்? நீ எங்கிருந்து வருகிறாய்? உன்னைச் சுற்றிக் குழுமும் இந்த மயக்கு நிலையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எதுவோ ஒன்று உன்னிடம் ஈர்க்கிறது. உன்னிடம் உருவாகித் துளிர்த்துக் கொண்டே இருக்கும் மலர்ச்சி, எல்லாத் திசைகளிலிருந்தும் உன் வழியே உருவாகும் கனிவு, நீ நடக்கும் பொழுது கூட எதுவோ ஒன்று உன்னை ஆட்கொள்கிறது, உனது சொற்கள் இந்த இருளினுள் இருந்து என் காதுகளுக்குக் கேட்டதே? சொல்! உன்னிடம் இருக்கும் ரகசியம் என்ன?"

"துன்பம், யூதாஸ், என் சகோதரா!"

    "யாருக்காக? நீ யாருக்காகத் துன்பப்படுகிறாய்? உனக்காகவா? உன்னுடைய இந்த அவல நிலைக்கும், பரிதாபகரமான வாழ்வினையும் நினைத்தா? அல்லது இஸ்ரவேலத்தின் ஜனங்களின் துரதிஷ்டத்தினை எண்ணியா? நல்லது! சொல்! இஸ்ரவேலத்திற்காகவா? அதைத்தான் நானும் உன்னிடம் சொல்ல விழைகிறேன். நீ கேட்கிறாயா? அதேதான், வேறொன்றுமில்லை!. நீ இஸ்ரவேலத்தின் இந்த இழிந்த நிலையினை எண்ணி உன்னை வருத்துகிறாயா?"

"மனிதர்களுக்காக, யூதாஸ், என் சகோதரா!"

"மனிதனா! மனிதனைப் பற்றி மறந்துவிடு, இந்த கிரேக்கர்கள், பலவருடங்களாக நம்மைப் படுகொலை செய்தனர், விட்டொளி! அவர்கள் மனிதர்கள். இதோ இந்த ரோமானியர்கள் அவர்களும் மனிதர்கள் தான், அவர்களும் நம்மை அடிமைகளாக்கி, வரலாறு நெடுகிலும் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார்கள். நம் கடவுளையும், அவரது புனித ஆலயங்களையும் மண்ணோடு மண்ணாக்குகிறார்கள். அவர்களைப் பற்றி நாம் ஏன் வருத்தப்பட வேண்டும். இங்கு இஸ்ரவேலத்தில் நீ உன் தலையை உயர்த்திப் பார்!, நீ துன்பப்படு, வாதைக்குள்ளாகு, நம் இஸ்ரவேலத்திற்காக. மற்ற அனைவரும் நரகத்திற்குப் போகட்டும்.

    "ஆனால் நான் அலைந்து திரியும் இந்த மிருகங்களுக்காகவும், சிறகடித்துப் பறக்கின்றனவே புல்லினங்களுக்காவும், வியாபித்துப் படர்ந்திருக்கும் புல்வெளிக்காகவும் வருத்தப்படுகிறேன். என் சகோதரா!"

    "ஹா...ஹா....ஹா....ஏன் எறும்புகளை மட்டும் விட்டு விட்டாய், பைத்தியக்காரா!" கேலியாக சிரித்தான்.

    "ஆம், இந்த எறும்புகளுக்காகவும் தான். எல்லாமே கடவுள் தான். நான் கீழேக் குனிந்து ஒரு எறும்பின் ஜொலிக்கும் கருமை நிறக் கண்களைக் காணும் பொழுது எனக்கு கடவுளின் முகம் தான் தெரிகிறது"

    "ஓ! அது சரிதான். அப்படியென்றால் என் முகத்தை இப்பொழுது உற்று நோக்குகிறாயே, அதில் என்ன தெரிகிறது" தச்சனின் மகனே!"

    "அதிலும் கூடத்தான், வெகு ஆழத்தினுள் என்னால் கடவுளின் முகத்தைக் காண முடிகிறது"

"நீ மரணத்தைக் கண்டு பயப்படமாட்டாயா?"

    "எதற்காக நாம் பயப்படவேண்டும், யூதாஸ், என் சகோதரனே" மரணம் என்பது மூடியக் கதவு அல்ல. அது திறந்திருக்கும் வாசல். திறந்திருக்கும் அதன் வழியே நாம்  நுழையலாம்"

"எங்கே நுழையலாம்"

"இறைவனின் அன்புகொண்ட நெஞ்சத்தினுள்"

    யூதாஸ் எரிச்சலுடன் பெருமூச்சிட்டான். "இவனை நம்மால் பிடிக்க முடியாது. அவன் திரும்பத் திரும்ப சொன்னான். ஆம்! இந்த மனிதனை நம்மால் பிடித்துவைக்க முடியாது. ஏனென்றால், இவனுக்கு மரணத்தைக் கண்டும் பயமில்லை...." தனது விரல்களால் ஜீசஸின் நாடியைப் பிடித்து கண்களுக்குள் உற்று நோக்கினான். அவனுள் எண்ணங்கள் அலைக்கழிகின்றன. ஒரு முடிவுக்கு வந்தவனாய்ப் பேசத்தொடங்கினான்.

    "நான் உன்னைக்கொல்லவில்லை எனில், நீ என்ன செய்வதாக உத்தேசம்" இறுதியில் அவனைப் பார்த்துக் கேட்டான்

    "எனக்குத் தெரியவில்லை, கடவுள் என்ன முடிவெடுக்கிறாரோ அதன் படி, அவரது விருப்பத்தின் படி ...நான் மனிதர்களிடம் சென்று பேசுவேன்"

"என்ன பேசுவாய்?"

    "அதை எப்படி நீ என்னிடம் எதிர்பபார்க்கிறாய், சகோதரா!. நான் வெறுமனே வாயைத் திறக்கிறேன். கடவுள் என் வழியே பேசட்டும்."

    இளைஞனின் தலைக்குப் பின்னே இருந்த ஒளிவட்டம் பெரிதாகியது. அதன் ஒளிர்வு கூடிக் கொண்டே இருந்தது. அவனது கவலை தோய்ந்த முகத்தில், ஒரு விவரிக்க முடியாத ஜொலிப்பு பொலிகிறது.  நீண்ட, மின்னும் கண்களைப் பார்த்துக் கொண்டிருந்த யூதாஸ் வார்த்தைகளின்றித் தத்தளித்தான். தாங்கவொண்ணாத ஒன்றினால் தான் ஆட்கொள்ளப்பட்டதைப் போல, அதிலிருந்து விடுபடமுடியாமல் அவன் தனக்குள்ளேயே அரற்றினான். அது அவனுக்கு மகிழ்ச்சியாகவும், எரிச்சலாகவும் இருந்தது. செந்தாடிக் காரன் தன் நடுங்கிக் கொண்டிருக்கும் விழிகளைக் கீழே தாழ்த்தினான். நான் உன்னைக் கொல்லப் போவதில்லை. அவனது பேச்சு ஒருவேளை இஸ்ரவேலத்தின் மக்களைத் துயிலிலிருந்து எழுப்பும்,  ரோமர்களைத் விரட்டுவதற்கானசொற்களின் பெருக்கு அவனுள் கடவுளின் கிருபையால் ஊறட்டும் என்று யூதாஸ் நினைத்துக் கொண்டான்.

    "இன்னும் எதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறாய், என் அன்பு நண்பா?" இளைஞன் கேட்டான். "ஒரு வேளை, இறைவன் என்னைக் கொல்வதற்காக உன்னை அனுப்பவில்லையோ?, ஒருவேளை அவனுடைய விருப்பம் வேறாகவும் இருக்கலாம். அது என்னவென்று நமக்குத் தெரியவில்லை. நீ என் கண்களின் ஊடே அந்தத் தெய்வீக விளைவு என்னவென்றே அறியத்துடிக்கிறாய். நான் சாவதைப் போலவே வாழ்வதற்கும் தயாராக இருக்கிறேன், நீயே முடிவெடு"

    "அவசரப்படாதே! சற்றுக் கண்டிப்பாகப் பதில் கூறினான் யூதாஸ். "இந்த இரவு மிகவும் நீண்டது. நமக்கின்னும் நேரம் இருக்கிறது"

    சிறிது நேர இடைவெளிக்குப் பின், அவன் பித்துப்பிடித்தவனைப் போலக் கத்தத் தொடங்கினான். " ஒரு மனிதன் தன்னை உண்மைத்தன்மையுடன் காட்ட முடியாமல் உன்னை நேருக்கு நேர் சந்தித்து உரையாட முடியாது. நான் உன்னிடம் ஒன்று கேட்டால் நீ அதற்கு வேறு ஒரு பதில் சொல்கிறாய். ஆனால் உன்னை என்னால் மறுதலிக்க முடியவில்லை. என் உள்ளமும், மூளையும் உன்னைக் காண்பதற்கு, நீ சொல்வதைக் கேட்பதற்கு முன்பு வரை அத்தனை உறுதிப்பாட்டுடன் இருந்தது. ஆனால் இப்போது, என்னைத் தனியாக விடு!. உன் முகத்தை எனக்குக் காட்டாதே! போய்த் தூங்கு! நான் தனியாக இதைப் பற்றி சிந்திக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த நிகழ்வுகளை உட்கிரகித்துக் கொண்டு நான் இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி திடமாக முடிவெடுக்க முடியும்.

    சொல்லி முடித்தவன், திரும்பச் சுவரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். ஆனால் அவனது முணுமுணுப்புகள் இன்னும் அடங்கவில்லை.

மேரியின் மகன் அவனது பாயில் படுத்துக்கொண்டான். அவன் தனது கைகளை அமைதியாகக் குறுக்கே கட்டிக் கொண்டு அறையின் மோட்டு வளைவைப் பார்த்தான்.

    எதனைக் கடவுள் நினைத்திருக்கிறோ, அதனை அவர் நடத்திக் காட்டுவார் என்று தனக்குள் சொல்லிக் கொண்டு கண்களை நிதானமாக, முழு நம்பிக்கையுடன் மூடினான்.

    ஒரு ஆந்தையின் அலறல் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது. அமைதியாகவிட்ட வெளியில் அது அந்த நாளின் இரை தேடும் படலத்தைத் தொடங்கியிருந்தது. கடவுளின் கோபத்திலிருந்து ஒரு வழியாய் நாங்கள் தப்பித்து விட்டோம் என்பது போல அது அலறியது. வானத்து விண்மீன்களின் ஒளி ஒரு மாதிரியானச் சாம்பல் நிறத்தில் அறையினுள் ஒளிர்ந்தது. கண்களைத் திறந்த மேரியின் மகன் அந்த வெளிச்சத்தைப் பார்த்து மற்றொரு முறைத் தனக்குள் சொல்லிக் கொண்டான், "கடவுளின் விருப்பம்". ஒளி ஓரிடத்திலிருந்து நகர்ந்து நகர்ந்து சென்று கொண்டிருந்தது. நேரமும்.

    யூதாஸ் சுவரைப்பார்த்து சம்மணமிட்டு அமர்ந்திருந்தான். இரண்டு மூன்று முறை கதவைத் திறந்து வெளியே சென்றவனின் முணுமுணுப்புகள் இன்னும் அடங்கவில்லை. அவனது சீறும் மூச்சொலிகள் கேட்டுக் கொண்டே இருந்தது. மேரியின் மகன் அரைக்கண்கள் விழித்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான். "எது கடவுளின் விருப்பமோ, அதுவே நடக்கும், என்று நினைத்து ஜீசஸ் காத்துக் கொண்டிருந்தான். நேரம் கடந்து கொண்டிருந்தது.

    அருகில் இருந்த கூடத்தில் கட்டிப் போட்டிருந்த ஒட்டகத்தின் கனைப்பொலி. அது எதையோக் கண்டு பயந்தது போல விளித்தது. கனவில் ஓநாயையோ, சிங்கத்தையையோக் கண்டிருக்கும். வானத்தின் ஜொலிப்பு நேரம் ஆக ஆகக் கூடிக் கொண்டே இருந்தது. மேகங்களற்ற வானம், நட்சத்திரங்களால் நிரம்பி வழிந்தது.

    திடீரென கோழிக் கூவும் சப்தம் கேட்டது. ஆழ்ந்த இருளினைத் துளைத்து அதன் கூவல் யூதாசின் காதுகளுக்குக் கேட்டது. உடனே எழுந்தவன் கதவைத் திறந்து தன், திடமானக் கால்களை ஊன்றி, நடைபாதை வழியாக, சரளைக் கற்களை  மிதித்து வெளியை நோக்கி சென்றான். 

    அதன்பிறகு, மேரியின் மகன் அவனை சதா துரத்திக் கொண்டு பின்தொடர்ந்து வரும் தனது உண்மையுள்ள சகபயணியைக் கண்டு கொண்டான். அவள் அவனுக்கு எதிரே இருள் மூலையில், நிமிர்ந்து விழிப்புடன் உற்று நோக்கி அவனைப் பார்த்தாள். 

"மன்னித்து விடு! என் சகோதரியே!" அவன் அவளைப் பார்த்துச் சொன்னான். இன்னும் நேரம் கை கூடவில்லை.

புதன், 2 மார்ச், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -62

     

Author: Nikos Kazantzakis

    அருகிலிருந்த சுவரில் உடலைச் சாய்த்து கண்களை மூடினான் மேரியின் மகன். நாள் முழுதும் பேசிய, எண்ணியச் சொற்களின் கசப்பு இன்னும் அடிநாக்கில் எஞ்சியிருந்தது. வாயைச் சப்புக் கொட்டிக் கொண்டான். முதியவர் தன்னிலை மறந்தவராய் இன்னும் தன் முட்டுக்கண்ணிகளுக்கிடையில் தலை புதைந்து, தியானத்தில் ஆழ்ந்திருந்தார். இளைஞனுடன் நடந்த உரையாடலின் பாதிப்பு இன்னும் அவரிடமிருந்து விலகவில்லை. அது குளத்தில் எறிந்தக் கல்லைப் போல, அவரது எண்ணங்களின் நீர்மைக் கலைந்து சுழல் சுழலாக அலையிட்டுக் கொண்டிருந்தது. நரகம், சாத்தான்கள், மனித இதயம்...இம்மூன்று விளைவுகளிலும் அதன் விளிம்புகள் தொட்டுப் படர்ந்தன. "இல்லை! பூமிக்கு கீழே தகிக்கும் இந்த நரகமோ, சாத்தான்களோ கூட பெரிய படுகுழிகள் அல்ல. உண்மையில் மனிதனின் நெஞ்சம். மிகுந்த நல்லொழுக்கமுள்ள, மிகவும் நியாயவாதியாய் வாதிடும் மனிதனின் நெஞ்சம் தான் பூமியிலுள்ள மிகப்பெரிய படுகுழி. இந்தக் கடவுளும், மனிதனும் ஒரு மாபெரிய நரகக்குழியன்றி வேறென்ன. தன் நெஞ்சத்தினுள் என்னக் கனன்று கொண்டிருக்கிறது என்பதைப் பார்க்க உண்மையில் அவருக்குத் தைரியமில்லை.

    அவர்கள் தங்களுக்குள் எதுவும் பேசாமல் நேரம் கடந்து கொண்டிருந்தது. முற்றிலுமான நிசப்தம்....இரு கரிய  நாய்களும் நித்திரையில் ஆழ்ந்திருந்தன. பாலைவனத்தினுள் சென்று திரும்பியத் துறவிகள், நாள் முழுக்குமான சோர்வில் படுத்தவுடன் ஆழ்ந்து உறங்கிவிட்டனர். இருளைத்துளைக்கும் வண்ணம் ஒரு மெல்லியக் குழலின் ஓசைக் குதித்துக் குதித்து உள் நுழைந்தது. அந்த அரைப்பைத்தியக் கிழட்டுத் துறவி ஜெரோபோம் தான். அவர் காற்றின் அலைவுகளின் ஊடே, தன் புல்லாங்குழலை இசைத்துக் கொண்டிருந்தார், ஜெகோவாவின் சுவாசத்திற்குத் தோதாக, தன்னுள் இருந்து எழும்பும் இசையினை, இரவு முழுதும் அமர்ந்து மகிழ்ச்சியாக வாசித்துக் கொண்டிருப்பார். நிலைத்த காற்றின் ஊளையைக் கேட்டுக் கொண்டு அசைவற்று ஓரிடத்தில் அமர்ந்து, ஜெகோவாவின் மூச்சினை தனக்குள் உள்வாங்கி, அதைப் பிரதி செய்வது போல, தன்னுள் இருக்கும் இருப்பினைக் கிளர்த்தி அவரது கார்வையான இசையின் கமகங்கள் அந்த மடாலயம் முழுதும் அலைந்துத் திரியும். சூரியன் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்தது. ஆனால் வாதில் வரை வெளிச்சம் இன்னும் தடைபடவில்லை. முற்றம் இன்னும் வானத்தின் வெளிச்சத்தில் தெளிச்சலாகவேத் தெரிந்தது. நடைப்பாதையைத் தாண்டி இருக்கும் பாழ்கிணற்றினுள், தன் ரெட்டை நாக்கினை வெளியே நீட்டிக் கொண்டுக் கிடக்கிறது ஒரு பெரிய பெண்  பாம்பு. கரியத் தோலில், மஞ்சள் வரைகளால் ஆன செதில்கள் கொண்ட நீளமான நாகம் அது. அது அங்கு வெகு நாட்களாக வாசம் செய்கிறது. அந்தத் துறவி, தன் தனிமையில் துணை கொள்ளும் ஒரு சக உயிரி அது.  அதன் சீறும் ஒலி விட்டு விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது. எந்த ஒரு புல்லாங்குழலினாலும், அதன் தொண்டையிலிருந்து எழும் இசையை ஈடு செய்ய முடியாது என்று தனக்குள் நினைத்தவர், தன்னுடைய வாழ் நாளில் அதற்காக நான் முயற்சிக்கிறேன் என்று காற்றிடம் செய்கைகளில் கூறினார்.  குளிர் மற்றும் வெயில் என்று மாறிக் கொண்டே இருக்கும் பருவநிலைகளினுள், அவரும் கனவுகளைப் பற்றிக்கொண்டேக் கடந்து வந்திருக்கிறார். அவர் கனவில் வரும் பெண் இந்தப் பாம்புதான். அது மெல்ல ஊர்ந்து அவரது பாயினில் அவருக்கருகில் வந்து சுருண்டு கொள்ளும், பின் அவரது காதுகளில் தன்  நாக்கினை நீட்டிச் சீறும்.

    இரவில், ஜெரோபோம், தன் நாதத்தின் மூச்சுகளின் வழியேத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அவரது உடல் எனும் இருப்பு ஒரு சட்டையினைப் போலக் கழன்று நாதத்தினுள் உயிர்ப்பானது. அது சுழன்று சுழன்று வெளி நோக்கிப் போகிறது. வெளியில் கனன்று எரியும் அந்நாகத்தைத் தொட்டுணர்கிறார். அது சீறுகிறது. படமெடுக்கிறது. தன் குழாய் போன்ற உடலை எழுப்பி தலையைக் குவித்து அவரினுள்ளிருந்து எழும் நாதத்தினை உள்வாங்கி நடனமிடத் தொடங்குகிறது. சுவாசத்தின் ஏற்றமும் இறக்கமும், துளைகளினுள் அமிழ்ந்து நீர்மையாய்க் குமிழியிடுகிறது. புகையாய் சுருள் சுருளாய்ப் பிரிந்துப் பறக்கிறது. புழுதிச் செறிவுகளாய் அறைந்து அறைந்து ஓலமிடுகிறது. அதன் அணைப்பின் வெம்மையைத் தன் உடலெங்கும் பரத்துகிறார் முதியவர். அது தன் நீண்டப் பருமனான உருளை போன்ற உடலை அவருள் செலுத்திப் பிணைகிறது. மூச்சு முன்னேறுகிறது. நாதம் இன்னும் இன்னும் எனத் துளைகளிலிருந்து பிரிந்து வெளியை நோக்கிப் படபடக்கின்றன. பதற்றத்துடன் அதன் துகள் சிதறித் தெறிக்கின்றன. முதலில் வந்தது மஞ்சள் நிறச்செதில் கொண்ட நாகம், அதன் பின் நீலவண்ணத் தோலடர்ந்த, கரியக்கோடுகள் கொண்ட நாகம், அதன் பின் கரியத்திரவம் போன்ற நெகிழும் செதில்கள் கொண்ட நாகமும் அந்த ஒலியினால் ஈர்க்கப்படுகின்றன. அதன் பின்னே இருகொம்புகள் கொண்ட பழுப்பு நிற வீரியன் குட்டிகள் மொலுமொலுத்து அவர் உடலில் ஏறுகின்றது. உடல் முழுதும் பாம்புகள் பிண்ணிப் பிணைந்து சுருள்கின்றன. கொத்தாக அதன் குழாய் உடல்கள் தங்களுக்குள் பிணைந்தும், துறவியின் உடலினுள் அமிழ்ந்தும் மாபெரும் நொதிப்பாக உருமாறுகின்றன. அதன் அசைவுகளில், நெளிவுகளில், சுழிவுகளில், பலப்பல சீறும் ஒலிகளின் அலைவுகள். அதனுள் அவரின் விரல்களின் லயம் சீர்குலைகிறது, அது தன்னிலை இழக்கிறது, துளைகளின் அழுத்தங்கள் தடுமாறுகின்றன. காற்றின் சீற்றம் குழைந்துப் பெருகுகிறது. கட்டுப்படுத்தமுடியாத ஒன்று வெடித்துச் சிதற விடைத்துக்கொண்டு காத்திருக்கிறது. அவர் சட்டென்று அனைத்தையும் உதறித்தள்ளினார், கைகளிலிருந்த புல்லாங்குழல் கீழே விழுந்தது. ஒரு தோற்ற மயக்கம் போல அரவங்களின் பெருக்கின் சுழல் காணாமல் ஆனது. நிதானிக்க முயன்றவரின் மூச்சு சீரற்று இறைந்தது. "இது காமம். ஆம்! காமம்" என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். நம் மூதாதையர்களும் இந்தக் காமத்தால் தான் கடவுளின் அழகியத் தோட்டத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள்.  ஒரு ஆணும் பெண்ணும் இப்படித்தானே பிணைந்து கொள்கிறார்கள். அழிவே அற்ற அந்த ஈர்ப்பின் சக்தியை எதனைக் கொண்டு நாம் மறுதலிக்க் முடியும் என்று பிதற்றத் தொடங்கினார்.

    சற்று சமநிலைக்கு வந்தத் துறவி, வெளியேத் தன்னைக் கவர்ந்திழுக்கும் காற்றின் அழுத்தமிகு சப்தத்தைக் கூர்ந்தார். கடவுளின் அனலெரியும் காற்றின் ஜ்வாலை இன்னும் நின்றபாடில்லை. "அதன் நடுமையத்தில் தான் என்னுடைய பாம்புத்துணைகள். அவர் தன்னுள் எரியும் தீயை என்ன செய்ய என்றறியாமல், ஊதி ஊதிப் பெருக்கி உலகினையே எரித்து விடுகிறார். நம்மைப் போலவே. ஆம்! இந்தப் பாம்புகள் பிணைந்து கொள்கிறதே நம்முள் அதைப் போலவே! மாபெரும் எரித்தழல்கள் அவருக்குள்ளும் பிணைந்து கொள்கின்றன" என்று தனக்குள் சொல்லிக் கொண்டார். தன் மனதினுள் அதைக் கட்டுப்படுத்த நினைப்பதும் பின் அதன் பின்னால் அலைந்து திரிவதுமான இருவேறு துருவங்களில் இழுத்தடிக்கப்பட்டார். ஆனால் திடீரென உடல் நடுங்கப் பிதற்றத் தொடங்கினார், "எல்லாமேக் கடவுள் தான். எல்லாமும் இரட்டைத் தன்மைக் கொண்டவை தான். எல்லாவற்றிற்கும் இரு அர்த்தங்கள் நிச்சயம் இருக்கும். ஒன்று பகிரங்கமானது, தெளிவாகப் புலன்களுக்குத் தெரிவது. ஒன்று மறைந்திருப்பது, புலன்களுக்கு நேரடியாகத் தெரியாதது. சாமானிய மனிதர்கள் பகிரங்கமானதைப் புரிந்து கொள்கிறார்கள். அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும், இது பாம்புதான். அதற்கு மேல் விளக்கங்கள் தேவை இல்லை. ஆனால் கடவுளைத் தியானிக்கும் மனம் தெரிந்தவற்றினுள் மறைந்திருக்கும் தெரியாததைத் தேடிச் செல்லும். இந்த நாகங்கள், கதவிடுக்கு வழியே ஊர்ந்து வந்து உடல் முழுதும் பற்றிப்படர்ந்து , தங்களுக்குள் பிணைந்து காற்றின் ஒலியில் நிலை கொள்ளாது சீறிக் கொண்டே இருந்ததே, அந்தக் கணம். அந்தச் சின்னஞ்சிறிதான நிலை கொண்டக் காலம். சரியாக அந்தத் தருணத்தில் ஜீசசின் வாக்குமூலம். உறுதியாக ஏதோ ஒரு அர்த்தம் அதனுள் மறைந்திருக்கிறது. ஆனால் என்ன அர்த்தம்?

    அவர் நிலைத்தடுமாறித் தரையில் விழுந்தார். தன்னிலையற்ற சன்னதம் போல, அங்கும் இங்கும் புரளத் தொடங்கினார். தரையின் குளிர்ச்சி அவருள் இறங்கி, உடல் முழுதும் வெடவெடத்தது. கண்களைத் திறந்து பார்க்கிறார், இருளின் மூலையில், வெளிறிய அந்த இளைஞனின் முகம். கண்களை மூடினால், வெளியே இன்னும் நிலையற்றுத் துடித்துக் கொண்டே இருக்கும் பாம்புகளின் சீற்றம். என்ன அர்த்தம் இதற்கு?

அவர் தனது குரு, பழைய மடாதிபதியாக இருந்த, மந்திர தந்திரங்கள் அறிந்த அருட்தந்தை ஜோசபட்டிடமிருந்து, பறவைகளின் மொழியறிதலைக் கற்றுத் தேர்ந்திருந்தார். அவருக்கு கழுகுகள், புறாக்களின் குரலைக் கூர்ந்து அவற்றின் மொழியினை விளக்கத் தெரியும். ஆனால் தன் குரு, பாம்புகளின் மொழியைக் கற்றுத்தருவதாக வாக்கு கொடுத்திருந்தார், ஆனால் கடைசி வரை அந்த ரகசியத்தை தனக்கு அவர் அளிக்கவில்லை. 

"சந்தேகமேயில்லை, இன்று இரவில் எனக்குள் தோன்றிய இப்பாம்புகளின் மயக்கு நிச்சயமாக ஏதோ செய்தியைச் சொல்ல விளைகிறது" என்று தனக்குள் பிதற்றினார் அந்தத் துறவி.