வெள்ளி, 4 மார்ச், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் - 64

   

    வெம்மையும் ஈரப்பதமும் கலந்தக் காற்றின் சுகந்தம் ஜென்னசரேட் ஏரிக்கரையில், பெரிய பெரிய அலைகளாக விழுந்து கொண்டிருந்தது. உப்பின் வீச்சம் தெறிக்க அலைக்கற்றைகள் கரையில் பாறைக் குன்றங்களைத் தழுவின. வசந்தத்தின் விடியல், சீரானக் காற்று, பறவைகளின் கிரீச்சிடல்கள், ஆண்கள் பெண்களின் கூச்சலும், நடமாட்டமும் சேர்ந்து கார்பெர்னம் ததும்பியது. கொத்துக் கொத்தாய் திராட்சைக் கொடிகள் தோட்டத்தில் கனத்துக், கனிந்துத் தரைதொட்டுத் தொங்கிக் கொண்டிருந்தது. இளம் பெண்களும் திராட்சைகள் போலவேக் கனிந்து கொத்தும் குலையுமாகத் திரட்சியாக இருந்தனர். அவர்கள் திராட்சைக் கொடிகளில் இருந்தக் கனிகளைப் பிய்த்து, புளிப்பும் இனிப்பும் திகட்டும் அதன் சுவையை நாவுகளில் சப்புக் கொட்டும் பொழுது, அவர்களின் முகங்களும் அப்பழச்சாற்றின் ரசம் போல மயங்குவதை, இளைஞர்கள் மறைந்திருந்தும், நேரடியாகவும் கண் கொட்ட உல்லசமாக ரசித்துக் கொண்டிருந்தனர். இளைஞர்கள், இளமைக்கே உரித்த துடுக்குத்தனத்துடனும், வேகத்துடனும் தங்களுக்குள் கேலி பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தனர். இளம் பெண்கள் தங்களைக் காணும் இளைஞர்களை, வம்புக்கிழுப்பது போல சத்தமாகப் பேசிக் கொண்டு அவர்கள் காணும்படி செய்கைகளால் பரிகாசம் செய்து கொண்டிருந்தனர். அதைக்காணும் இளைஞர்களின் முகம் வெட்கத்தில் சிவந்தன. அறுவடைக்காகக் கனிந்திருந்த திராட்சைத் தோட்டங்களிலெல்லாம், ஆண் பெண்களின் கேலியும், வம்பளத்தல்களும், கூச்சல்களும், நகைப்புகளும் அதிகரித்தபடியே இருந்தது. ஒரு மாயக் கரங்களினால் அச்சூழலே வனப்பும்  இனிப்பும் மிகுந்து, ரகசிய சமிஞ்சைகளால் கவர்ந்திழுக்கப்படும், வேட்டை உலகம் போல மாறியிருந்தது.

    கிராமத்திலிருந்த முதிய செபெதீயின் பெரிய வசதியான வீடு திறந்து கிடந்தது. வெளிச்சம் படர்ந்து காலைச்சூரியனின் சூட்டில் வேலைகள் தொடங்கியிருந்தன. வாதிலின் இடது புறம் இருந்த விளையில் ஒரு திராட்சை ரசம் தயாரிக்கும் கூடம் இருந்தது. இளைஞர்கள் ஏற்கனவேக் கிராமங்களின் தோட்டங்களிலிருந்து வாங்கி வந்திருந்தக் கொத்துக் கொத்தான திராட்சைப் பழங்கள் அடங்கிய மூடைகளை அங்குதான் இறக்கிவைத்திருந்தனர். நான்கு வலியத் திடமான இளைஞர்கள், பிலிப், ஜேக்கப், பீட்டர் மற்றும் இந்த வேலையில் அனுபவற்ற இளையவன், அந்தக் கிராமத்தின் செருப்பு தைக்கும் தொழிலாளி நாத்தனேல்,  ஆகியோர்  தங்களது கைகள், முழங்கால்கள், பாதங்களை கழுவி சுத்தம் செய்து கொண்டு, திராட்சைப் பழங்களை மிதித்துப் பிழியும் வேலைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். கிராமத்திலிருந்த எல்லாக் குடியானவர்களும் தங்களது இல்லங்களில் சிறிய அளவிலேனும் திராட்சைப் பழங்களை, மதுவிற்காக வளர்க்கும் பழக்கம் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு வருடமும், சிறியக் கால இடைவெளிகளில் அவர்கள் தங்கள் விளைச்சல்களை இங்கு அளித்துத் , தங்களுக்கான திராட்சை ரசத்தைப் பங்கிட்டுக் கொண்டனர். இந்தக் கிழவரும் வருடா வருடம், அவரது ஜாடிகளிலும், பீப்பாய்களிலும் தனக்கான கூலியாகத் தேவையான அளவு திராட்சை ரசம் நிரப்பி எடுத்துக் கொள்வார். அதை அவரது சொந்தத் தேவைக்கும், பின் வியாபரத்திற்குமாகத் தயாரித்து பதுக்கி வைத்துக் கொள்வார். வந்திருந்த மூடைகளில் தனது பேனாக் கத்தியால் எண்களையும், அதன் உரிமையாளனின் பெயர்களையும் குறிப்பெழுதிக் கொண்டிருந்தார் கிழவர். ஆனால் உரிமையாளர்களும் தாங்கள் அளித்திருந்த எண்ணிக்கையைக் கணக்கிட்டு வைத்திருந்தனர்.  ஏனென்றால் நாளை அவரவர்களுக்கான வினியோகத்தில் குளறுபடிகள் ஏற்பட வாய்ப்புண்டு. முதிய செபெதீயை உண்மையில் ஜனங்கள் யாருமே நம்புவதில்லை. எல்லோருக்கும் தெரியும் அவரது தகிடுதத்தங்கள். அதனால் அவரிடம் செய்யும் எந்த வியாபாரத்திலும் கறாராகவும், உஷாராகவும் இல்லையென்றால் நஷ்டம் அவர்களுக்குத்தான்.

    வீட்டின் உள்புறமிருந்து முற்றத்தைப் பார்த்து இருக்கும்  அளிகளற்ற ஜன்னல் கதவு  வழியே, வெளியே நடப்பவற்றைக் கவனித்துக் கொண்டிருந்தாள் அந்த வீட்டின் எஜமானி, முதிய சலோமி. அவள் தான் எல்லா வரவு செலவுக் கணக்குகளையும் பார்த்துக் கொள்கிறாள். வெகு நேரம் நின்று கொண்டிருந்தவளின் கால் மூட்டிகள் தளர்ந்து வின் வின்னென்று வலியில் தெறித்தன. ஆனால் அவள் அதைச் சட்டை செய்யாமல், வெளியேப் பார்க்கிறாள். அவளது வனப்பு இந்த வயதிலும் முற்றிலுமாக  மறைந்துவிடவில்லை. இளமையில் அவள் மிகவும் அழகாக இருந்திருக்க வேண்டும். உயரமாகவும், ஒல்லியாகவும், ஆலிவ் பழத்தைப் போன்ற மேனியும், நீண்டக் கூர்மையானக் கண்களும், தக்க சமயோஜிதமும், புத்தியும் கொண்டிருந்த இளம்பெண்ணானவள்,  கிடைப்பவனுக்கு ஒரு நல்ல சேகரிப்பாக அவளை வாழ்நாள் முழுதும் வைத்துக் கொள்வதற்கான எல்லாத் தகுதிகளும் ஒருங்கே கொண்டிருந்தாள். அவளுக்காக, கார்பெர்னம், மாக்தலா மற்றும் பெத்சைடா ஆகிய கிராமங்களிலிருந்த ஆண்கள் போட்டியிட்டுக் கொண்டிருந்தனர். மூன்று சாமர்த்தியமான இளைஞர்கள் ஒரே நேரத்தில் அவளுடையத் தந்தையிடம் பெண் கேட்டு வந்திருந்தனர். அவளது தந்தை சொந்தமாகக் கப்பல் வைத்துத் தொழில் செய்யும் ஊரிலேயேப் பெரிய கணவான். இளைஞர்களும் சொந்தமாகப் படகுகள், வீடு, ஒட்டகங்கள் மற்றும் நிறைய சேமிப்புகள் வைத்திருந்தத் தகுதியானவர்கள் தான். முதிய தந்தை ஒவ்வொரு இளைஞனையும், அவர்களின் பூர்வீகம், தாய் தந்தையர், அவர்களின் ஒழுக்கம், ஊரில் அவர்களுக்கு இருக்கும் நற்பெயர், சொத்துபத்துகள் என எல்லாவற்றையும் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழி, தீவிரமாக அவர்களைப் பற்றி ஆராய்ந்து விசாரித்து வைத்திருந்தார். இறுதியாக அவர் செபெதீயைத் தேர்ந்தெடுத்தார். பின் செபெதீ அவளை மணந்து கொண்டார். அவள் அவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தாள். ஆனால் அந்த நேர்த்தியானப் பெண்ணுக்கு, இப்பொழுது வயதாகி விட்டது, அழகும் காலத்தால் மங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் இன்றைக்கும் திருவிழா நாட்களில் அவளது வீரியமிக்க கிழட்டுக் கணவன், இரவு நேரங்களில் கிராமங்களில் இருக்கும், ஆண் துணையற்றப் பெண்களிடம் சல்லாபிப்பதை நிறுத்தவில்லை.

    இன்று தன் இளைய மகன் ஜானின் திடீர் வருகை அவளை உற்சாகப்படுத்தியிருந்தது. அவனை அவள் நேரடியாகப் பார்க்கவில்லை. இருந்தும் செபெதீ அவனைப் பற்றிக் கூறியதிலிருந்து அவனின் எண்ணங்களிலேயே ஆழ்ந்திருந்தாள். புனித மடாலயத்திலிருந்து வந்திருந்தத் தனது மகன் வெளிறிப் போயும், மிகவும் இளைத்தும் இருந்தான். பிரார்த்தனைகளும், விரதங்களும் அவனை உருக்குலைத்திருந்தது என்று கேள்விப்பட்டவள் வருத்தத்தில் ஆழ்ந்தாள். அவள் அவனைத் திரும்பப் போக விட்டிருக்கக் கூடாது என்று தனக்குள் நினைத்தாள். தன்னருகிலேயே அவனை வைத்துக் கொண்டு அவனுக்குப் பிடித்தமான உணவும், பானமும் அருந்தக் கொடுத்து அவன் உடலைத் தேத்தியிருக்க வேண்டும். இளைஞனாக, ஆண் மகனாக அவன் உடல் வலுவுடன் இல்லாமலிருப்பது ஒரு தாயாக அவளுக்கு அமைதியின்மையைக் கொடுத்தது. அவனுக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுத்துப் பழைய படி அவனை மீட்க, ஒளிரும் அவனின் அந்தப் பழைய ரூபத்தைக் காண எனக்கு வழி உண்டோ எனத் தெரியவில்லையே என அங்கலாய்த்தாள். "கடவுள் நல்லவர்தான், அவரின் கருணைக்காக, நாம் அவரிடம் மண்டியிட்டு வழிபாடுகளும் ,பிரார்த்தனைகளும் செய்கிறோம். ஆம்! ஆனால் அந்த நல்லத் தன்மையினால் அவர் என் பிள்ளைகளின் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்க விளைகிறாரே! நிதானமான விரதம், பிரார்த்தனைகள் அவ்வப்பொழுது செய்வது நல்லது தான். அதுதான் மனிதனுக்கும், கடவுளுக்கும் கூட நல்லது. அப்படித்தான் அவர்கள் தங்களுக்கான வழியைப் புத்திசாலித்தனத்துடன் செப்பனிட வேண்டும். திறந்திருக்கும் வாதிலைக் கவலையுடன் பார்த்தாள். தன் மகன் ஜானிற்காக அவள் காத்துக் கொண்டிருக்கிறாள். திராட்சைத் தோட்டங்களுக்கு அறுவடைக்காகச் சென்ற இளைஞர்களின் கூடே தன் பிள்ளையும் உதவி செய்வதற்காகப் போயிருக்கிறான். எப்படியும் திரும்பி வந்து விடுவான் என்று நினைத்துக் கொண்டவள், இன்னும் வாசலில் இருந்துத் தன் பார்வையை விலக்கவில்லை.

    முற்றத்தின் நடு மையத்தில் இருந்த கட்டைதாட்டையான விரிந்த கிளைகள் கொண்ட, பழங்கள் அடர்ந்துத் தொங்கும் பாதாம் மரத்திற்குக் கீழே யூதாஸ் குனிந்து அமர்ந்திருந்தான். அமைதியாகத் தன் உணர்ச்சியற்ற முகத்தை வைத்துக் கொண்டுக் கைகளில் இருந்த சுத்தியலால் மதுப் பீப்பாய்களைச் சுற்றித் தகரப் பட்டைகளை அடித்து இறுக்கிக் கொண்டிருந்தான். வெளிச்சத்தில் அவனது ஒரு பக்க முகத்தில் வன்மமும், உள்ளுறக் கோபமும் தெறிக்கும். மறுபக்கத்தில் அமைதியற்ற சஞ்சலமும், வருத்தமும் படர்ந்திருக்கும். இரவோடு இரவாக அவன் ஒரு திருடன் போல மடாலயத்தை விட்டு ஓடி வந்து சில நாட்கள் ஆகியிருந்தன. இடைப்பட்ட சமயத்தில் அவன் கிராமம் கிராமமாகச் சுற்றித் திரிந்தான். ஜனங்களுக்கு புதிய அத்தியாவசியத் தேவையாக இருந்தப் பீப்பாய்களுக்கு, இரும்புப்பட்டைகள் அடித்துக் கொடுக்கும் வேலையை செய்து வந்தான். ஒவ்வொரு வீடுகளிலும் அவன் வெறுமனே அவனுக்குள்ள பணியைச் செய்வான். எதுவும் பேசுவதில்லை. குடும்பங்களில் ஆண்களும், பெண்களும் உரையாடிக் கொள்வதையும், அவர்களின் உண்மையானத் தேவைகள் என்னென்ன என்றும் அவர்களின் வார்த்தைகளைக் கவனித்து அறிந்து கொள்வான். அதன் மூலம் தான் என்ன செய்யவேண்டும், தன் சகோதரர்களுக்கு இதன் மூலம் என்ன தெரிவிக்க வேண்டும் என்பதையும் ஆலோசித்துக் கொண்டிருப்பான். ஆனால் அந்தப் பழைய செந்தாடிக்காரன், போக்கிரி, முரட்டு ஆசாமி எங்கே போனான் என்று தெரியவில்லை. எப்பொழுது மடாலயத்திலிருந்து அவன் வந்தானோ அன்றிலிருந்து அவன் புரிந்து கொள்ள முடியாதவனாக ஆகிவிட்டான்.

    "அடடா! யூதாஸ் இஸ்காரியெட், உன் வாயைத்திற! பிசாசே!" செபெதீ அவனைப் பார்த்துக் கத்தினார். "என்ன சதா சிந்தித்துக் கொண்டே இருக்கிறாய்?, இரண்டும் இரண்டும் நான்கு என்பது இப்போது கூட உனக்குப் புரியவில்லையா? வாயைத் திறந்து ஏதாவது பேசு, ஆசிர்வதிக்கப்பட்ட என்  முரட்டுக் கிறுக்கனே!. இது திராட்சைப் பழங்களை அறுவடை செய்யும் பருவம், சின்னக் காரியமல்ல. இந்த நாட்களில் எல்லோருமே சிரித்தும்  கூத்தடித்தும் நாட்களை அனுபவிப்பர். ஒரு மந்த கதியான கறுப்பு ஆடு கூடத் தொணடையை கனைத்துக் கூப்பாடு போடும். நீ என்னடாவென்றால்!"

    "அவனைத் தேவையில்லாமல் தூண்டி விடாதே, செபெதீ" பிலிப் இடையிட்டான். "அவன் மடாலயத்திலிருந்து வந்திருக்கிறான், அவனைப் பார்த்தால் அவனும் மடாலயத்திற்குப் போய்த் தூய அங்கியை அணிந்து கொள்வான் போலிருக்கிறது. உனக்குத் தெரியுமா, சாத்தானுக்கு வயதாகி விட்டால், அவன் துறவியாகி விடுவான்" கேலியாக சிரித்துக் கொண்டே பதில் கூறினான் குண்டு பிலிப்.

    யூதாஸ், வாயைத்திறந்து விஷம் தோய்ந்த பற்களைக் காட்டும் பாம்பினைப் போல, பிலிப்பை வெறித்தான். ஆனால் எதுவும் பேசவில்லை. உண்மையில் அந்தக் குண்டுப் பிறப்பை நினைத்து உள்ளூற  வெட்கினான். "ஒரு மலடன், ஆண்மையற்றப் பிறவி அவன் . வார்த்தைகளை வைத்துக் கொண்டு பாசாங்கு செய்யும் இழிந்தவன். எந்தச் செயலையும் பயமில்லாமல் உறுதியாகச் செய்யத் தெரியாத முதுகெலும்பற்றப் பிறவி. கடைசி நிமிடத்தில், அன்று உணர்ச்சிப் பெருக்குடன் தன்னிடம் வாக்களித்த, தன் சகோதரர்களின் புரட்சி அமைப்புடன் இணைந்து கொள்வதிலிருந்து பின் வாங்கினான் இந்த வேசை மகன். அதற்கு அவன் ஒரு காரணமும் சொன்னானே! "என்னை நம்பி என் ஆடுகள் இருக்கின்றன, அவைகளை விட்டு என்னால் எப்படி வர முடியும்" என்று" ச்ச்சீ!  "இவனுக்கெல்லாம் ஒரு கம்பும் கோலும்" என்று தனக்குள் கோபமாகச் சொல்லிக் கொண்டான்.

    முதிய செபெதீ அடக்க முடியாமல் சிரித்தார், பின் செந்தாடிக் காரனைப் பார்த்து, "கவனமாக இரு, போக்கிரியே" என்று கத்தினார். "இந்தத் துறவறம் என்று சொல்லிக்கொள்கிறார்களே, அது உண்மையில் ஒரு தொற்று நோய், அதனிடம் இருந்து தூரயே இரு, இல்லையென்றால் அது உன்னை எளிதில் தொற்றிக் கொள்ளும். என் சொந்த மகன் அந்த நோய் ஆட்கொண்டுதான் மடாலயத்திற்கு சென்று தப்பித்து விட்டதாக நினைக்கிறான். இதோ இங்கே என் வீட்டில், என் மனைவி, அவனது தாய் அவனை நினைத்தே உருகி உருகித் தன் உடலைக்கெடுத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் அவள் ஆசிர்வதிக்கப்பட்டவள். அவளது வளர்ப்பு சோரம் போகாது. அவன் தன் குருக்களிடமிருந்து மூலிகைகளை நோய்களுக்கு எப்படிப் பயன்படுத்துவது என்று கற்றுத்தேர்ந்து ஒரு மருத்துவனாகத் திரும்ப வருவான். நீ வேண்டுமென்றால் பார், அவன் என் வழிக்கு வந்துதான் தீர வேண்டும். நிச்சயமாக என் மகன் ஒரு பைத்தியக்காரனாக நடந்து கொள்ள மாட்டான். அவனை நாங்கள் அப்படி விட்டு விட மாட்டோம். அவன் அங்கே அந்தப் பாலை நிலத்தில் தன் பசியை, தாகத்தை, தன் அடக்க முடியாத தாபங்களின் சுரப்புகளை வைத்துக் கொண்டு கடவுளிடம் என்ன வேண்ட முடியும். அதுவே இங்கே  பசிக்கு நல்ல சுவையுள்ள உணவும், தாகத்திற்கு உயர்ந்த மதுவும், தாபங்களுக்கு பெண்களும் இருக்கிறார்களே, இங்கும் கடவுள் இருக்கிறாரே! கடவுள் எங்கும் நிறைந்தவர் இல்லையா, அதனால் அவரைத் தரிசிக்க அவன் எதற்கு பாலைவனத்திற்குச் செல்ல வேண்டும். நீ என்ன நினைக்கிறாய், யூதாஸ் இஸ்காரியெட்?".

    ஆனால் செந்தாடிக் காரன் தன் வேலையில் மும்முரமாக இருந்தான். அவனது கைகளிலிருந்த சுத்தியல் ஒரு தன்னிச்சையான போக்கில் தகரத்தில் அறைந்து கொண்டிருந்தது. அவன் எதுவுமே பேசவில்லை. "எப்படி இந்தக் கிழவனிடம் பேச முடியும், உலகில் உள்ள எல்லாமே அவனுக்கு ஒரு அழுக்கு பிடித்த நாய்தான். இன்னொரு மனிதனின் உள்ளக் கிடக்கை இந்தக் கிழவன் எப்படிப் புரிந்து கொள்வான். ஏன் கடவுளும் கூட, மற்றவர்களை இவ்வுலகிலிருந்து துடைத்தெறிந்து விட்டு, உடலில் ஒட்டியிருக்கும் தேவையற்ற உண்ணி போன்ற இந்த மனிதர்களைத்தானே பத்திரமாகத் தன் கைகளிற்குள் வைத்து பாதுகாக்கிறார். "பன்றிப் பிறவி, மற்றவர்களின் ரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி, பணத்தை மட்டுமே நக்கிக் கொண்டு வாழும் ஜந்து. எப்பொழுதும் வாதைகளின் நிழல் இவர்களின் கூடாரத்தை அண்டுவதே இல்லை. குளிரினுள் அவர்கள் கதகதப்புடன் போர்த்திக் கொள்ளவும், கோடையில் அவனது உடலை ஒட்டிக் குளிர்விக்கும் பருத்தித் துணியைப் போலவும் தான் மற்ற மனிதர்கள். இவர்களுக்காகவே உழைத்தும், செத்தும் போக வேண்டும். இவனால் ஒரு மனிதனிடம் இருந்து எதை அறிந்து கொள்ள முடியும்? இந்தக் கிழட்டு வேசைமகன், நம் இஸ்ரவேலத்தின் எதிர்காலத்தைப் பற்றி, நம்மைக் கொன்று கொண்டிருக்கும் அடிமைத் தளைகளைப் பற்றி என்றாவது நினைத்துக் கவலைப்பட்டிருப்பானா?. ஏன் தன் சுண்டு விரலைக் கூட இஸ்ரவேலத்தின் நன்மைக்காக உயர்த்தியிருப்பானா? இந்த இழிபிறவிகள், உண்மையில் ரோமானியர்களின் ஆட்சி பீடத்தின் கீழ் மகிழ்ச்சியாக உணர்கின்றனர். அவர்கள் தான் இவனைப் போல உள்ளவர்களைப் பாதுகாத்து போஷிக்கிறார்கள். கடவுள் இவர்களுக்குத் துணையிருக்கட்டும். இவர்கள் தான் தேசத்தின் ஒழுங்கைப் பேணுகிறார்கள். இவர்கள் மட்டும் இல்லையென்றால், இந்த முரட்டுப் போராளிகளும், வெற்றுக்காலுடன் அலைந்து திரியும் கீழ்மக்களும், இவர்களை, இவர்களின் சொத்தை கபளீகரம் செய்து விடுவர்....ஆனால் பயப்படாதே, கிழவா, கிழட்டு வேசை மகனே, அதற்கான சரியானத் தருணம் வரும். கடவுள் மறந்ததை, செய்யாமல் விட்டதை, நாங்கள் புரட்சியாளர்கள், எங்களை ஆசிர்வதியும், நாங்கள் ஞாபகம் வைத்து சரியாகச் செய்வோம். பொறுமை! யூதாஸ்! எந்த வார்த்தைகளையும் உதிர்த்து விடாதே, நம் தந்தையின் மாட்சிமை பொருந்தியப் படைகளின் ஆரவாரத்தை உணர்கிறேன். அந்த நாள் வெகு அருகிலேயே இருக்கிறது. அது வரை பொறுமையாக இரு."

    தனது கருகுமணி போன்றக் கண்களை உயர்த்தி, செபெதீயைப்பார்த்தான். கைகளில் சுத்தியல் அனாயசமாகச் சுழன்று கொண்டிருந்தது. தன்னை முழுமையாகக் கட்டுப்படுத்திக் கொண்டு உணர்ச்சியற்று அவரைப் பார்த்து சிரித்து வைத்தான்.

    அத்தருணத்தில் அந்த நான்கு வலுவான உடல்கள் கொண்ட இளைஞர்களும் அகன்ற உருளை வடிவத் தொட்டியில் கவனமாக இறங்கினர். தொட்டியினுள் ஏற்கனவே சேகரித்த திராட்சைக் குவியல்களை நன்றாகக் கழுவிப் போட்டிருந்தனர். அவர்களின் முழங்கால்கள் முழுகுவது வரை திராட்சைக் கொத்துகள் நிறைந்திருந்தது. அவர்கள் நிலையாக நான்கு திசைகளிலும் நின்றுக் கொண்டு அழுத்தி மிதித்துப் பழங்களைக் கால்களால் நசுக்கித் தேய்த்தனர். குனிந்து இன்னும் மிதிபடாதப் பழங்களைக் கை நிறைய எடுத்து உண்டனர். அதன் சாறு அவர்களின் தாடி வழியே வழிந்தது. ஒரு சமயம் அவர்கள் தங்கள் கைகளைக் கோர்த்துக் கொண்டு நடனமாடுவது போல அசைந்தனர். ஒரு சமயம் அவர்கள் தனித்தனியாச் சத்தமிட்டுக்கொண்டே குதித்துக் குதித்து ஆழமாக மிதித்தனர். சாறுக் குழைந்து உருவாகும், திராட்சையின் பிரத்யேகமான நறுமணம் குழைந்து நாசிகளில் நிறைந்துக் கிறங்கடித்தது. அவர்கள் குதூகலமாக இருந்தனர். வாசலுக்கு வெளியே இளம் பெண்கள், தோட்டத்தில் இன்னும் திராட்சைகளைக் கொடிகளிலிருந்து பறித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் குனிந்தும் நிமிர்ந்தும் திராட்சைக் கொத்துகளைப் பிடுங்குகையில், அவர்களின் மேனி அழகு நாலாபுறமும் வெளிப்பட்டது. அவர்களின் துள்ளும் மார்பகங்களும், முழங்கால் வரை உடுத்தியிருந்ததால் தெரியும் தொடைப்பகுதிகளும், அவர்களின் கிசுகிசுப்பானக் குரலும் சேர்த்து வாலிபர்களைக் கலங்கடித்தன. அந்த இன்பத்திலேயே அவர்கள் தங்களின் மொத்த வலுவையும் பழங்களை மிதிப்பதில் காண்பித்தனர். அவர்கள் ஏதோ ஒரு கிளர்ச்சியானப் பாடலைப் பாடிக் கொண்டே தொடர்ந்து குதித்துக் கொண்டிருந்தனர்

    இதைப் பார்த்த, அருகில் நின்று கொண்டிருந்த வியாபாரிகளுக்கும் அந்த களிப்புத் தொற்றிக் கொண்டது. அவர்கள் அங்கே மது தயாரிக்கும் கூடத்தையோ இல்லை தோட்டத்தில் திராட்சைகளை அறுவடை செய்வதையோக் காணவில்லை. மாறாக அந்தச் சூழலே ஒரு சொர்க்கபுரியாக உருமாறியிருந்தது. அங்கே முற்றத்தில் அமர்ந்திருந்து தனது நீளமானக் குச்சியாலும், பேனாக் கத்தியாலும் , அடையாளங்கள் இட்டு , ஒவ்வொருவருக்கும் தேவையானதை, சரிவரப் பங்கிட்டுக் கொண்டிருக்கும் முதியவர் பார்ப்பதற்கு ஒரு இறைக் கணக்காளன் போலக் காட்சியளித்தார். எத்தனை மூடை திராட்சைக் கொத்துகள் வந்திருக்கின்றன, எத்தனை ஜாடி திராட்சை ரசம் அதிலிருந்துக் கிடைக்கும், நாளையோ, இல்லை மற்ற நாளிலோ, இறந்து போகிறவர்களுக்கு, எவ்வளவு ஜாடி திராட்சை மதுவும், எத்தனை மூடைகள் தானியங்களும், எத்தனை வகையான பெண்களும் வழங்க வேண்டும் என்றத் தீவிர சிந்தனையில் இருப்பது போல அவர் தோற்றம் கொண்டார்.

    "ஓ! என் மரியாதைக்கு உரியவரே" பீட்டர் எழுச்சியுற்றது போலக் கத்தினான். " இந்த அருமையானத் தருணத்தில் கடவுள் என்னிடம் வந்து, ஹேய்! பீட்டர், உனக்கு வேண்டியதை என்னிடம் கேள்! என்ன வேண்டுமானாலும் கேள்! அதை நான் நிறைவேற்றுகிறேன், நான் இன்று நல்ல மன நிலையில் இருக்கிறேன் என்று என்னிடம் கேட்கிறார்". நான் அவருக்கு பதிலளித்துக் கொண்டிருக்கிறேன். இதோ என் கால்களில் மிதிபட்டு அரைகின்றன திராட்சைகள். திராட்சைகளை மிதித்து மிதித்து நான் அழிவற்றவனாகிறேன். என் கால்களின் வழியே என் உடலின், என் மனத்தின் ஆன்மாவின் ருசியை, இந்த மதுச்சாற்றினுள் கடத்துகிறேன். அந்தச் சுவை நித்தியமானது."

    "அப்படியென்றால் நீ மது அருந்தக்கூடாது! செபெதீ சற்றுக் கடுமையானக் குரலில் கேட்டார்.

    "இல்லை, நான் என் இதயத்தின் அடியாழத்திலிருந்து, திராட்சைக்கு என் சுவையைக் கடத்துகிறேன்" அவன் சிரிக்காமல் பதிலளித்தான். அவனது முகம் மிகத்தீவரமாக எளிதில் பற்றிக் கொள்வதைப் போல இருந்தது. மிதிப்பதை சற்று நிறுத்திக் கொண்டு வானில் ஒளிரும் சூரியனை நிமிர்ந்து பார்த்தான். அவன் மேலுடுப்பு அணிந்திருக்கவில்லை. அவனது வலது மார்பில், ஒரு பெரியக் கரிய மீனின் உருவத்தைப் பச்சைக் குத்தியிருந்தான். ஒரு கைவினைஞன், முன்னே ஒரு கைதியாக இருந்தவன் பல வருடங்களுக்கு முன்பு தன்னுடைய ஊசியினால் மிகத் திறமையாகவும், தத்ரூபமாகவும் அந்த மீனை வரைந்திருந்தான். அவன் உடலின் வளர்ச்சியின் கூடவே அதுவும் வளர்ந்திருந்தது. அது அவனது கற்றையானச் சுருள் முடிகள் அடர்ந்த மார்பினில் நீந்துகிறது. அந்த மீனின் உருவத்திற்கு மேலே ஒரு சிறிய நங்கூரத்தை நான்கு கைகள் குறுக்காகப் பிடித்திருக்கின்றன, ஒவ்வொரு கைகளிலும் தூண்டில் முட்களின் கூர்மை வெளிப்படுகிறது.

    பிலிப் தன் ஆடுகளை நம்பியே ஜீவிதம் நடத்துகிறான். அவன்  நிலத்தில் இறங்கி உழவோ, இல்லை இந்த மது தயாரிப்பிலோ, ஏன் திராட்சைத்தோட்டங்களில் பழங்கள் அறுவடை செய்யவோ சாதாரணமாக விரும்புவதில்லை.

    "நல்லக் கடவுள், பீட்டர்!", பிலிப் ஏளனமாகப் பேசத் தொடங்கினான்."இன்று நீ உனக்குத் தோதான வேலையைத் தேர்ந்தெடுத்தாய், இதோ இந்த திராட்சைகளை மிதித்துக் கூழாக்கி நீ நித்தியத்துவத்தை அடைந்துவிடுவாய்! நானாக இருந்தால் இந்த பூமி முழுதும் ஒரு மாபெரும் புல்வெளியாக உருமாறி, அதில் வெள்ளாடுகளும், செம்மறி ஆடுகளும் மட்டும் செழித்துப் பெருக வேண்டுவேன். நான் அவைகளிடமிருந்து பாலினைச் சேகரித்து பூமியெங்கும் தெளித்துவிடுவேன். அது மலைகளிலும், ஏரிகளிலும், குளங்களிலும், ஆறுகளிலும் நிறைந்து ததும்பி வழியும். ஏழைகள் வஞ்சனை இல்லாமல் அதைக் குடித்து இன்புறுவர். ஒவ்வொரு நாள் இரவும் நாங்கள், எல்லா மேய்ப்பவர்களும் ஒன்று கூடி ஓரிடத்தில் அமர்ந்து இளைப்பாறுவோம். எங்களுடன் கடவுளும், மேய்ப்பர்களின் தலைவராக எங்கள் குழுவில் அமர்ந்து வம்பளப்பார். நாங்கள் அடுப்பு மூட்டி, ஆட்டுக்குட்டியின் இறைச்சியை வேகவைத்துக் கூடி அமர்ந்து உண்டு மகிழ்வோம். அது தானே எங்களுக்கான சொர்க்க ராஜ்ஜியம்."

    "உங்களுக்கெல்லாம் நோய் பீடித்திருக்கிறது முட்டாள்களா!", யூதாசின் கடினமானக் குரல் வெளிவந்தது. அவன் திரும்பிப் பிலிப்பைக் கொல்வது போலப் பார்த்தான்.

    இளம் பருவத்தினர் முற்றத்தின் உள்ளேயும், வெளியேயும் வந்து போய்க் கொண்டிருந்தனர். அரை நிர்வாணமாக, ஆண்களின் மார்பு மயிர்கள் வெளித்தெரிய, இளம்பெண்கள் தங்கள் இடுப்பில் பலவண்ணத் துணிகளால் உடலை மறைத்திருந்தனர். அந்த இடமே ஒரு பயங்கரக் கொண்டாட்ட மனநிலையில் இருந்தது. அவர்களுக்கான கடவுள் எப்படி இருப்பார். ஒருவேளை அவர்களால் அதற்கான சரியான விளக்கத்தை அளிக்க முடியாது. ஆனால் மகிழ்வின், களிப்பின், உடற் தொடுகையின், ஸ்பரிசத்தின், உழைப்பின், உடலால் ஈட்ட முடிந்த அனைத்திற்குமானக் கடவுளை எதைக் கொண்டு வகுக்க. அவர்கள் தங்கள் மண்வெட்டிகளால், திராட்சைக் கொத்துக்களைக் கிளறித் தொட்டியில் போட்டனர். நொதித்துக் கொண்டிருந்த கூழின் நெடி காற்றில் பரவியது. பின்னர் தோட்டங்களில் அறுவடைக்கு இருக்கும் மிச்ச மீதிக் கொடிகளையும் அணுகி, பழங்களைப் பிய்த்துக் கொண்டும், கதை பேசிக் கொண்டும், சிரித்துக் கேலி பேசியும் அவர்கள் தங்கள் வேலைகளைத் தொடர்ந்தனர்.

    எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த செபெதீ பதில் ஏதும் பேசாமல், ஒருவித புத்திசாலித்தனமானத் தோரணையில் தன் உதடுகளைச் சுழித்துக் கொண்டு, அவர்களுக்கு முன் நின்று கொண்டிருந்தார். ஒரு விசித்திரமானப் பார்வையாளன், இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை வெகு நேரம் வாசலில் நின்று கேட்டுக் கொண்டிருந்ததை அவர் அப்பொழுதுதான் கண்ணுற்றார். அவன் ஒரு கறுப்பு ஆட்டுத்தோலைக் கொண்டு தன் மேலுடலை மூடியிருந்தான். கழுத்துவரை அதனால் தன் உடலை மறைத்திருந்த அவன் கால்களில் எந்தக் காலணியுமில்லை, தலை முடி கலைந்து பரட்டையாக இருந்தது. முகம் வெளிறிக் கந்தகம் போல மஞ்சளும் கருமையும் கலந்த நிறத்தில் இருந்தது. நீண்டப் பெரிய விழிகளால், தீ உமிழ்வது போல இருந்தது அவனது பார்வை.

    தொட்டியில் திராட்சை மிதிப்பது சற்று நின்றது. செபெதீ இன்னும் திறந்த வாயை மூடாமல் வாசலையேப் பார்க்கிறார். வாசலிலிருந்து ஆழ்ந்த நகைப்பொலி முற்றத்தின் உள்ளே வரைக் கேட்டுக்கொண்டிருந்தது. யார் இந்த உயிருள்ள எலும்புக்கூடு? எதற்காக வாசலிலேயே நின்று கொண்டு நம்மை வெறிக்கிறது? அவர்கள் எல்லோருக்குள்ளும் கேள்விகள். இன்னும் அது அங்கேயே தான் நின்று கொண்டிருந்தது. முதிய சலோமி, ஜன்னல் துவாரத்தின் வழியே அவனைப் பார்க்கிறாள். புரிந்துகொண்டவள் போல அழுது கொண்டே கத்தினாள், "ஆண்ட்ரூ...ஆண்ட்ரூ".

    "கடவுளே! நல்லது! ஆண்ட்ரூ" செபெதீ சத்தமாக அவனை அழைத்தார். "பார்! உன்னைப் பார்த்தால் ஏதோ பாதாள உலகத்திலிருந்து எழுந்து வந்தவன் போல இருக்கிறாய், அல்லது உனது வழியில் அந்தப் புதைகுழிப்பாதைக்கு போய்க் கொண்டிருக்கிறாயா"

    திராட்சை ரசம் நொதிக்கும் தொட்டியிலிருந்து வெளியே குதித்த பீட்டர், ஓடிப்போய்த் தன் சகோதரனின் கைகளைப் பிடித்துக் கொண்டான்.  அவனிடம் இருந்து எந்த வார்த்தைகளும் வரவில்லை. ஆதுரத்துடன் இறுக்கமாய்த் தன் சகோதரனின் கைகளைப்  பிடித்திருந்தவனின் விரல்கள் நடுங்கின. "ஆண்ட்ரூ, இது நீதானா! நல்லத் திடமும் வலிமையும் கொண்ட இளைஞன்,  ஜனங்களால் கொண்டாடப்பட்டத் தடகள வீரன், விளையாட்டிலும், வேலையிலும் முதன்மையாக இருந்தவன். இந்த ஆண்ட்ரூ தானா, கிராமத்திலேயே அழகான பெண்ணான, ஆளிவிதையின் நிறத்தில் மின்னும் கேசத்தைக் கொண்ட ரூத்திற்கு நிச்சயிக்கப்பட்டவன். ஒரு இரவில் கடவுளின் சபிக்கப்பட்டப் புயற்காற்றில் தன் தந்தையுடன் அவள் படகு கவிழ்ந்து இந்த ஏரியில் மூழ்கிச் செத்தாளே! அந்த நிகழ்விலிருந்து வாழ்வதற்கான நம்பிக்கை இழந்துத் தெருத்தெருவாய்ச் சுற்றித்திரிந்து, ஒரு நடைப்பிணமாய்க் கடவுளிடம் தன் உடல், பொருள் ஆவி அனைத்தையும் ஒருசேர மண்டியிட்டுக் கையளித்தானே! அந்த ஆண்ட்ரூதானா இது!"

    யார் இவர்களிடம் சொன்னார்கள், நான் கடவுளிடம் சரணடைந்திருந்தால் ஒருவேளை அவளை என்னுள் கண்டுகொண்டிருப்பேன். அது போலவே அவளும் தன் மணமகனைக் கடவுளிடம் கண்டடைந்திருப்பாள். ஆண்ட்ரூ தனக்குள் நினைத்துக் கொண்டான்.

    பீட்டர் தன் அண்ணனை முழுமையாகப் பார்த்தான். அவனது குரல் கம்மி வார்த்தைகளின்றி நின்று கொண்டிருந்தன். எப்படி அவன் கடவுளின் பிடியால் பீடிக்கப்பட்டு இங்கிருந்து போனான். பின் இப்பொழுது அக்கடவுளாலேயே விடுவிக்கப்பட்டு எவ்வாறு நலிந்துத் திரும்பி வந்திருக்கிறான் என்று நினைத்து விம்மினான்.

    "ஹேய்!" செபெதீ கத்தத் தொடங்கினான். "நீ நாள் முழுதும் இப்படியே அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டு நிற்கப் போகிறாயா?" அவனை உள்ளே அழைத்து வா! வெளிக்காற்று பலமாக வீசுகிறது. அவனைத்தாக்கி கீழே வீழ்த்திவிடும். உள்ளே வா! ஆண்ட்ரூ! என் அன்பான நல்லப் பையா! , வா, பார்! நிலமெங்கும் திராட்சைகள் முளைத்துக் கிடக்கின்றன. எடுத்துச் சாப்பிடு. ரொட்டியும் இருக்கிறது. பசியாற முதலில் உண். "கடவுளுக்கே நன்றியும் பெருமையும்". சாப்பிட்டு உன்னைக் கொஞ்சம் திடப்படுத்திக் கொள். ஏன் சொல்கிறேன் என்றால், உன்னுடைய இந்த அவலத் தோற்றத்தை உன் பாவப்பட்டத் தந்தைப் பார்த்தார் என்றால், அவர் பயந்து போய்த் திரும்பவும் தன் சுறாவின் வயிற்றிற்குள் சென்றுவிடுவார்."

    ஆனால் ஆண்ட்ரூ அமைதியாகத் தன் சுள்ளி போன்றக் கைகளை உயர்த்தினான். "உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அவன் சுற்றி நின்ற எல்லோரையும் பார்த்து வெகுண்டு சீற்றத்துடன் கத்தினான். "உங்களுக்கு கடவுளின் மேல் பயமில்லையா!" உலகமே அழிந்து கொண்டிருக்கிறது. ஆனால் நீங்கள் இங்கு திராட்சைகளை அரைத்து மது தயாரித்துக் களிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறீர்கள்!"

    "புனிதர்கள் நம்மைக் கைவிடவில்லை, இதோ இன்னொருத்தன் நம் போராத நேரத்தில் நம்மைச் சோதிக்கச் சரியாக வந்துவிட்டான். கிழவர் முணுமுணுத்துக்கொண்டே ஆண்ட்ரூவை உற்று நோக்கினார். "நீ எப்படியும் எங்களை விட மாட்டாய் இல்லையா?", நாங்கள் எங்கள் செவுள்களை இறுக்கி அடைத்து வைத்துள்ளோம். இந்த மாதிரிதானே உனது தீர்க்கதரிசி, அந்த ஞானஸ்நானம் செய்து வைப்பவன் ஜனங்களைப் பார்த்துப் பேசச் சொல்லிக் கொடுத்திருக்கிறான். நல்லது! ஒன்று செய்! வேறு எதாவது புதிய செய்திகள் இருந்தால் சொல்! இல்லையேல் உன் போதனைகளை, வேறு மாதிரி இன்னும் ஜனங்களைக் கவரும் வண்ணம் எப்படிச் சொல்லலாம் என்று பயிற்சி எடுத்துவிட்டு வந்து பேசு, என்ன! ஏற்கனவே நீ சொல்லிக்கொண்டிருக்கிறாயே, உலகம் அழியப் போகிறது, கடவுள் கோபத்துடன் பூமியில் இறங்கிவிட்டார். கல்லறைகள் திறந்து பிணங்களும், பேய்களும், உயிர்க்கொல்லும் பூச்சிகளும் வந்து மனித இனத்தையே கொன்றழிக்கப் போகின்றன. இது கடவுளின் இரண்டாவது வருகை. அப்பப்பா! வேறென்ன! வேறென்னப் பொய்கள்!  இன்னும் எத்தனைக் காலம் இந்தப் பொய்களைக் கொண்டு நாங்கள் குடும்பம் நடத்த, அய்யோ! இதெல்லாம் எப்பேர்ப்பட்ட புரட்டுகள்! இதையெல்லாம் கேட்டு விட்டு எங்களிடம் வந்து ஒப்புவிக்காதே, பையா! பார்த்தாயா! நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம்! வா! உன்னால் முடிந்தால் எங்களுடன் வந்து இந்த அமிர்தமான திராட்சை மதுவைச் செய்ய உதவி செய்! செபெதீ அமைதியாகச் சற்றுப் புன்னகையுடன் அவனையும், சுற்றி இருந்த எல்லோரையும் பார்த்து பதிலுரைத்தார்.

    "இது பாவம்! பாவம்!. ஜோனாவின் மகன் எல்லோரையும் பார்த்து முழக்கமிட்டான். அவன் தன் தம்பியின் கைகளிலிருந்து தன் உடலை விடுவித்து, முற்றத்தின் நடுமையத்தில் வந்து நின்றான். நேராக செபெதீயைப்பார்த்து கை நீட்டி நின்று , வானத்தைப் பார்த்து கத்திக் கொண்டே இருந்தான்.

    "உனது நன்மைக்காகத் தான் சொல்கிறேன், ஆண்ட்ரூ, இங்கே உட்கார், கொஞ்சம் சமாதானமாகு. ரொட்டியும், மதுவும் எடுத்துக் கொள். உன் பசியை முதலில் போக்கு. எளிமையான விஷயம் பையா! பசிதான் உன்னை இப்படிப் பைத்தியக்காரனாக்குகிறது" செபெதீ கனிவுடன் கூறினார்.

    "எளிமையாக வாழ்வது உன்னைத்தான் பைத்தியமாக்கி விட்டது, செபெதீ", ஜோனாவின் மகன் காட்டமாக பதில் கூறினான். கடவுள் உன் கால்களுக்கடியில் இருக்கும் நிலத்தைப் பெயர்த்திடுவான். ஒரு நில அதிர்வாக அவன் வருவான். நிலம் பிளந்து உன் வீடும், படகுகளும், இதோ மது தயாரிப்பதற்காக அமைத்து வைத்திருக்கிறாயே இந்தக் கூடமும் எல்லாமும் உள்ளே போய்விடும். உன்னையும், உன் கேவலமான இந்தப் பெருத்த வயிற்றையும் கூட அவன் நிச்சயமாக விழுங்கி விடுவான்."

    அவன் தீப்பற்றிக் கொண்டதைப் போல எரிவுடன் சீறீக் கொண்டிருந்தான். வார்த்தைகள் எச்சில் தெறிக்க வெளிவந்தன. எதிரில் நின்றிருந்த ஒவ்வொருத்தராய் அனலெரியப் பார்த்தான். பார்! இந்தத் திராட்சை சாறு, நொதித்து மதுவாகும் முன், உலகின் இறுதி நாள் வரும். யாரும் ஒன்றும் செய்ய முடியாது. தலை தெறிக்க ஓடுங்கள், மாரில் அடித்துக் கொண்டு அழுங்கள். யாராலும் தப்பிக்க முடியாது.  "நான் பாவி! நான் பாவி! என்று அழுது புலம்புங்கள். இந்த உலகம் ஒரு முதுமரம். அதன் வேர் வரை நீங்கள் அழுக விட்டு விட்டீர்கள். நிச்சியமாக நமது மெசியா ஒரு கோடாலியுடன் உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறான்."

    அது வரை நடந்து கொண்டிருக்கும் எதையுமே கவனிக்காது, தன்  சுத்தியலை அறைந்து கொண்டிருந்த யூதாஸ் நிறுத்தினான். அவன் தன் பற்கள் தெரிய இளித்தான். உதடுகளைச் சுழித்து சூரிய ஒளியை உடலில் வாங்கிக் கொண்டு முன்னே வந்தான். அவன் எழுந்து வருவதைப் பார்த்த செபெதீ அவனைத் தடுக்க முயலவில்லை.

    "கடவுளின் அன்பின் பெயரில், பீட்டர், இவனைத் தூக்கிக் கொண்டு வெளியே போய் விடு. கர்ஜிக்கும் குரலில் யூதாஸ் கத்தினான். நமக்கின்னும் செய்யவேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது. 

    "அவன் வருகிறான், அவன் வருகிறான்" சில சமயம் நெருப்பினை ஏந்திக்கொண்டு, சிலசமயம் பேரேட்டை, இப்பொழுது என்ன அடுத்தது கோடாலியா! . ஏன் உங்களால் எங்களைத் தனியாகவே விட முடியாதா? வஞ்சகத்துடன் வெளிவரும் உங்களின் வார்த்தைகளால் இந்த மக்களை காலங்காலமாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த உலகிற்கு எந்தக் குறையுமில்லை. அது நன்றாகத்தான் இருக்கிறது. ஆம்! மிக நன்றாகவே! அதைத்தான் நான் சொல்ல விளைகிறேன்....அதனால் திராட்சிப்பழத்தைப் பிழிவோம், நாம்! மீதமுள்ளதை காலம் பார்த்துக் கொள்ளட்டும்."

    பீட்டர் அவனது அண்னனின் முதுகில் கைவத்துக் கைகளால் அழுத்தினான். "அமைதியாக இரு, மெல்லியக் குரலில் கனிவாக அவனிடம் கூறினான், "அமைதியாக இரு", சத்தம் போடாதே". நீ நெடு நாள் பயணத்தினால் மிகவும் சோர்ந்திருக்கிறாய். வா! நாம் வீட்டிற்குப் போவோம். நீ கொஞ்சம் ஓய்வெடுத்து உன்னைத் தேற்றிக்கொள். அதன் பிறகு அப்பாவும் உன்னைக் கண்டு அமைதியடைவார்"

    அவன் தன் அண்ணனின் கைகளைப் பிடித்துக் கொண்டு, அவனை வழி நடத்தி முற்றத்தைத் தாண்டிச் சென்றான். பின் நேராகவும், குறுக்காகவும் இருக்கும் தெருக்களின் வழியாக, அவனைக் கவனமாகத் தாங்கிப் பிடித்துக் கொண்டு சென்று மறைந்தான்.

    முதிய செபெதீ, திரும்பவும் நடந்தவற்றை நினைத்துக் கேலியாகச் சிரித்துக் கொண்டார். "ஓ! பாவப்பட்ட என் அருமை மீனவத்தீர்க்கதரிசியே, கண்டிப்பாக உன்னிடத்தில் என்னை வைத்துப் பார்க்க முடியவில்லை. எப்படிப்பட்டக் கொடுமையான சூழ்நிலையில் நீ மாட்டிக் கொண்டிருக்கிறாய்? என்று வெறுமனே சோகம் வந்தது போலப் பாவனை செய்தார்.

    ஆனால் இப்பொழுது முதிய சலோமியின் முறை, அவள் அழுகையுடன் வாய் திறந்துத் தன் கணவனைக் கண்டிக்கும் தொனியில் பேசினாள். நீங்கள் அவனின் துயரம் மிக்கக் கண்களைக் காணவில்லையா! அது என்னுள் பற்றிக்கொள்கிறது. நான் அலைக்கழிகிறேன். அய்யோ! நீங்கள் பேசும் வார்த்தைகளில் உங்களுக்கு கவனம் இருக்கிறதா! ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் நம் பாவங்களைக் கணக்கெடுக்க நமக்கு மேலே தேவதைகள் உலாவிக் கொண்டிருக்கின்றன. உங்களது கிண்டல் பேச்சுகளை நீங்கள் எப்பொழுதுதான் நிறுத்தப் போகிறீர்களோ! என்று தான் நீங்கள் கடவுளுக்குப் பயந்து நடந்தீர்கள். கேட்டால் எல்லாவற்றிற்கும் உங்களுக்கேயான வழியில் வியாக்கானம் பேசுவீர்கள். தேவையில்லாமல் பாவங்களை சம்பாதித்துக் கொள்கிறீர்கள். அது நம்மையும், நம் பிள்ளைகளையும் தான் பாதிக்கும்." கிழவி இன்னும் விசும்பலை நிறுத்தவில்லை.

    "அம்மா சொல்வது சரிதான்!" இதுவரை வாயைத் திறக்காமலே இருந்த ஜேக்கப் பேசத் தொடங்கினான். "நீர் மட்டும் என்ன, அந்த முதிய ஜோனாவைப் போலத் தான், உன் பிள்ளையைத் தொலைத்து விட்டு நிற்கிறாய். அவரை விட நீர்தான் இன்னும் அபாயத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறீர். உன் பிள்ளையாக உனக்கு உதவி செய்ய உன் கைகளில் ஒன்று உன்னிடம் இல்லை. நான் அவனை விட உம்மை நினைத்துத்தான் பரிதாபப்படுகிறேன். யாருக்குத் தெரியும், கடவுள், மீட்சி, விரதம் , பிரார்த்தனைகள் என்று அவன் பாவனைகள் செய்து கொண்டிருக்கத்தான் வாய்ப்பு அதிகம். சிறுவயதிலிருந்தே நான் அவனை அறிவேன். அந்த ஆகாவழி ஒரு முழுச் சோம்பேறி. இங்கிருந்தால் உடல் வளைத்து உழைக்க வேண்டுமே என்று அந்தப் பயல் அங்கு போய் பதுங்கிக் கொண்டிருக்கிறான். தன்னுடைய பிரார்த்தனைகளிலும், கனவுகளிலும் அவன் பெண்களுடன் சல்லாபித்துக் கிடக்கிறான். நீர் இங்கிருந்து கொண்டு மற்றவர்களைக் கேலியும், கிண்டலும் செய்து கொண்டு உம்மை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறீர். இனிமேலும் உம்முடன் என்னால் போராடிக் கொண்டிருக்க முடியும் என்று தோன்றவில்லை. ஜேக்கப் மடைதிறந்தது போலப் பேசிக் கொண்டிருந்தான்.

    உதடுகள் கோணத் தன் தந்தையைப்பார்த்து சிரித்தான். அவரது சோம்பேறியானச் செல்ல மகனை வைதது அவனுக்குக் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. எதைப்பற்றியும் பெரிதாக சிந்திக்காமல் திரும்பவும் தொட்டிக்குள் குதித்து திராட்சைகளை மிதிக்கத் தொடங்கினான் ஜேக்கப்.

    ரத்தம் சூடாகத் தலைக்கேற முதிய செபெதீ, அவனது மூத்தமகனைக் கோபமாகப் பார்த்தார். என் சோத்தைத் தின்றுவிட்டு என்னையே எதிர்த்துப் பேசுகிறது இந்த குஞ்சுக் குருமாண்டி! என்ன தெரியும் இந்தப் புழுக்கைப் பயல்களுக்கு. தன் அப்பன் என்னவெல்லாம் செய்து, தன் ரத்ததையும் வேர்வையையும் கொடுத்து இந்த நிலைமைக்கு வந்திருக்கின்றான் என்று. சுகமாகப் பசிக்கும் நேரத்தில் உணவும், ஓய்வெடுக்க உறைவிடமும் இவனுகளுக்குக் கிடைத்துவிட்டதால் இவனுகளும் எதைப் பற்றியும் நினைத்துக் கூடப் பார்க்க மாட்டார்கள். சுயநலம் பிடித்த பச்சோந்திப் பயல்கள் என்று தனக்குள் சொல்லிக்கொண்டவர். அவனை நோக்கி முன்செல்ல எத்தனித்தார். எப்படியும் அப்பனுக்கும் பிள்ளைக்கும் சண்டை மூளப் போகிறது என்று நினைத்தத் தருணத்தில் நாசரேத்தில் வாழும் ஜோசப்பின் மனைவி, மேரியைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு ஜான் உள்ளே நுழைந்தான். அவளது மெல்லியக் கால்களில் அடிபட்டு ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. முழங்கால் வரைப் புழுதி படிந்திருந்தது. அவள் இது நாள் வரைப் பயணப்பட்டுக் கொண்டிருந்தாள். தன் இல்லத்தையும், கணவனையும் அப்படியே விட்டுவிட்டு கிராமம் கிராமமாகத் தன் ஒரே மகனைத் தேடி அலைந்து திரிந்து கொண்டிருந்தாள். கடவுளால் ஆட்கொள்ளப்பட்டுப் பித்தனைப் போல அவனது மகன் அவளை விட்டுப் போய்விட்டான். அவன் மனிதனின் வழிகளிலிருந்து பெயர்ந்து எங்கோ மறைந்து விட்டான். மேரியோக் கைவிடப்பட்டத் தன் குழந்தையை, அவனது சாபத்தை எண்ணி எண்ணி, ஒவ்வொரு வீடுகளாகத் தெருக்களாக, வயல் வெளிகளாக எல்லா இடமும், அவனை நினைத்துப் புலம்பிக் கொண்டே, அங்குள்ள எல்லா மக்களையும் அணுகி விசாரித்துத் தேடிக் கொண்டிருந்தாள். "யாராவது அவனைப்பார்த்தீர்களா, எங்காவது அவனைப் பற்றிய செய்திகள் கிடைத்தனவா" என்று அவனைப் பற்றிய அங்க அடையாளங்களைச் சொல்லிச் சொல்லித் தேடினாள் அந்த முதியவள். நல்ல வளர்த்தியான, ஒல்லியானத் தேகம் கொண்டவன், நீல நிற அங்கியும், இடுப்பில் ஆட்டுத் தோலால் செய்த வார்ப்பட்டையும் அணிந்திருந்தான். காலணிகள் எதுவும் அணியவில்லை. எங்காவது அவனைப் பார்த்தீர்களா! ஒருவேளை?"...யாருக்குமே அவனைப் பற்றித் தெரியவில்லை. செபெதீயின் இளையமகனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவன் தன்னுடைய வழியில் முதியத் துறவியை வழி அனுப்பி விட்டுத் திரும்ப பாலைவனத்திற்குள் மடாலயத்தை நோக்கி சென்று கொண்டிருந்தான். வழியில் பரந்துக் கிடக்கும் வெற்று மணல் வெளியில் தரையோடுத் தரையாக குப்புற விழுந்து கிடந்த வெள்ளை நிறத்துணியால் மூடப்பட்டிருந்த ஒன்றை வெகுதூரத்திலிருந்துப் பார்த்தான். பின் அதனருகில் சென்றுப் பார்த்தபோதுதான் தெரிந்தது, அங்கே மண்ணைத்துளைத்துத் தன் பிரார்த்தனைகளையும், கேவலையும், சொல்லிக் கொண்டே இருக்கும் ஒரு மனிதக் குரலைக் கேட்க முடிந்தது. ஜான் அவளிடம் மன்னிப்புகள் தெரிவித்தான். அவளைத்தூக்கி தன்னிடமிருந்த நீரை அருந்த வைத்து சற்று ஆசுவாசப்படுத்தினான். பின் அவள் சொன்னதைக் கவனமுடன் கேட்டான். இப்பொழுது, ஜானின் கைகளைப் பிடித்துத் தாங்கிக் கொண்டு செபெதீயின் இல்லத்திற்கு, பாலைவனத்திற்கு செல்வதற்குமுன் சற்று தெம்பாகிக் கொள்ளவும் ஓய்வெடுக்கவும் அவள் வந்திருந்தாள். 

    முதிய சலோமி அவளைத் தன் கைகளை நீட்டி ஆதுரத்துடன் வரவேற்றாள். "வா! மேரி! என் அன்பே!", "உள்ளே வா" அவளது குரலில் கனிவும் அன்பும் மிளிர்ந்தது.

மேரி தலையைக் குனிந்து கொண்டு நிலத்தைப் பார்த்துக் கொண்டு, தன் கைக்குட்டையினால் நெற்றியையும், கழுத்தையும் அழுத்தித்துடைத்து, விம்மிக் கொண்டே முன்னே சென்றாள். முதியக் கைகளிற்குள் தன் கைகள் வெம்மையை உணர்ந்ததும் விசும்பல் உடைந்து பீறிட்டது.

"உன்னை அழ வைத்தது எவ்வளவு பெரிய பாவம், என் குழந்தாய்". அவளை ஒரு இருப்புப்பலகையில் இருக்கவைத்து, தான் அவளின் முகத்தைக் காணும் வண்ணம் அந்த முதியவள் அமர்ந்தாள். "உன் மகன் பத்திரமாக இருக்கிறான், கடவுளின் நிழல் தாங்கலில் அவனுக்கு எதுவும் நேராது" பயப்படாதே"

"ஒரு தாயின் வலி கொடியது, அது அந்தக் கடவுளும் அறியாதது, சலோமி!" மேரிக்கு மூச்சிறைத்தது. மெதுவாகத் தன்னை பக்கவாட்டில் அசைந்து கொடுத்து அமைதி படுத்த முயன்றாள். "கடவுள் எனக்கு கொடுத்தது ஒரு மகன், ஆனால் அவனும் தன்னைத்தானே அழித்துக்கொண்டு விட்டான்."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக