புதன், 2 மார்ச், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -62

     

Author: Nikos Kazantzakis

    அருகிலிருந்த சுவரில் உடலைச் சாய்த்து கண்களை மூடினான் மேரியின் மகன். நாள் முழுதும் பேசிய, எண்ணியச் சொற்களின் கசப்பு இன்னும் அடிநாக்கில் எஞ்சியிருந்தது. வாயைச் சப்புக் கொட்டிக் கொண்டான். முதியவர் தன்னிலை மறந்தவராய் இன்னும் தன் முட்டுக்கண்ணிகளுக்கிடையில் தலை புதைந்து, தியானத்தில் ஆழ்ந்திருந்தார். இளைஞனுடன் நடந்த உரையாடலின் பாதிப்பு இன்னும் அவரிடமிருந்து விலகவில்லை. அது குளத்தில் எறிந்தக் கல்லைப் போல, அவரது எண்ணங்களின் நீர்மைக் கலைந்து சுழல் சுழலாக அலையிட்டுக் கொண்டிருந்தது. நரகம், சாத்தான்கள், மனித இதயம்...இம்மூன்று விளைவுகளிலும் அதன் விளிம்புகள் தொட்டுப் படர்ந்தன. "இல்லை! பூமிக்கு கீழே தகிக்கும் இந்த நரகமோ, சாத்தான்களோ கூட பெரிய படுகுழிகள் அல்ல. உண்மையில் மனிதனின் நெஞ்சம். மிகுந்த நல்லொழுக்கமுள்ள, மிகவும் நியாயவாதியாய் வாதிடும் மனிதனின் நெஞ்சம் தான் பூமியிலுள்ள மிகப்பெரிய படுகுழி. இந்தக் கடவுளும், மனிதனும் ஒரு மாபெரிய நரகக்குழியன்றி வேறென்ன. தன் நெஞ்சத்தினுள் என்னக் கனன்று கொண்டிருக்கிறது என்பதைப் பார்க்க உண்மையில் அவருக்குத் தைரியமில்லை.

    அவர்கள் தங்களுக்குள் எதுவும் பேசாமல் நேரம் கடந்து கொண்டிருந்தது. முற்றிலுமான நிசப்தம்....இரு கரிய  நாய்களும் நித்திரையில் ஆழ்ந்திருந்தன. பாலைவனத்தினுள் சென்று திரும்பியத் துறவிகள், நாள் முழுக்குமான சோர்வில் படுத்தவுடன் ஆழ்ந்து உறங்கிவிட்டனர். இருளைத்துளைக்கும் வண்ணம் ஒரு மெல்லியக் குழலின் ஓசைக் குதித்துக் குதித்து உள் நுழைந்தது. அந்த அரைப்பைத்தியக் கிழட்டுத் துறவி ஜெரோபோம் தான். அவர் காற்றின் அலைவுகளின் ஊடே, தன் புல்லாங்குழலை இசைத்துக் கொண்டிருந்தார், ஜெகோவாவின் சுவாசத்திற்குத் தோதாக, தன்னுள் இருந்து எழும்பும் இசையினை, இரவு முழுதும் அமர்ந்து மகிழ்ச்சியாக வாசித்துக் கொண்டிருப்பார். நிலைத்த காற்றின் ஊளையைக் கேட்டுக் கொண்டு அசைவற்று ஓரிடத்தில் அமர்ந்து, ஜெகோவாவின் மூச்சினை தனக்குள் உள்வாங்கி, அதைப் பிரதி செய்வது போல, தன்னுள் இருக்கும் இருப்பினைக் கிளர்த்தி அவரது கார்வையான இசையின் கமகங்கள் அந்த மடாலயம் முழுதும் அலைந்துத் திரியும். சூரியன் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்தது. ஆனால் வாதில் வரை வெளிச்சம் இன்னும் தடைபடவில்லை. முற்றம் இன்னும் வானத்தின் வெளிச்சத்தில் தெளிச்சலாகவேத் தெரிந்தது. நடைப்பாதையைத் தாண்டி இருக்கும் பாழ்கிணற்றினுள், தன் ரெட்டை நாக்கினை வெளியே நீட்டிக் கொண்டுக் கிடக்கிறது ஒரு பெரிய பெண்  பாம்பு. கரியத் தோலில், மஞ்சள் வரைகளால் ஆன செதில்கள் கொண்ட நீளமான நாகம் அது. அது அங்கு வெகு நாட்களாக வாசம் செய்கிறது. அந்தத் துறவி, தன் தனிமையில் துணை கொள்ளும் ஒரு சக உயிரி அது.  அதன் சீறும் ஒலி விட்டு விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது. எந்த ஒரு புல்லாங்குழலினாலும், அதன் தொண்டையிலிருந்து எழும் இசையை ஈடு செய்ய முடியாது என்று தனக்குள் நினைத்தவர், தன்னுடைய வாழ் நாளில் அதற்காக நான் முயற்சிக்கிறேன் என்று காற்றிடம் செய்கைகளில் கூறினார்.  குளிர் மற்றும் வெயில் என்று மாறிக் கொண்டே இருக்கும் பருவநிலைகளினுள், அவரும் கனவுகளைப் பற்றிக்கொண்டேக் கடந்து வந்திருக்கிறார். அவர் கனவில் வரும் பெண் இந்தப் பாம்புதான். அது மெல்ல ஊர்ந்து அவரது பாயினில் அவருக்கருகில் வந்து சுருண்டு கொள்ளும், பின் அவரது காதுகளில் தன்  நாக்கினை நீட்டிச் சீறும்.

    இரவில், ஜெரோபோம், தன் நாதத்தின் மூச்சுகளின் வழியேத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அவரது உடல் எனும் இருப்பு ஒரு சட்டையினைப் போலக் கழன்று நாதத்தினுள் உயிர்ப்பானது. அது சுழன்று சுழன்று வெளி நோக்கிப் போகிறது. வெளியில் கனன்று எரியும் அந்நாகத்தைத் தொட்டுணர்கிறார். அது சீறுகிறது. படமெடுக்கிறது. தன் குழாய் போன்ற உடலை எழுப்பி தலையைக் குவித்து அவரினுள்ளிருந்து எழும் நாதத்தினை உள்வாங்கி நடனமிடத் தொடங்குகிறது. சுவாசத்தின் ஏற்றமும் இறக்கமும், துளைகளினுள் அமிழ்ந்து நீர்மையாய்க் குமிழியிடுகிறது. புகையாய் சுருள் சுருளாய்ப் பிரிந்துப் பறக்கிறது. புழுதிச் செறிவுகளாய் அறைந்து அறைந்து ஓலமிடுகிறது. அதன் அணைப்பின் வெம்மையைத் தன் உடலெங்கும் பரத்துகிறார் முதியவர். அது தன் நீண்டப் பருமனான உருளை போன்ற உடலை அவருள் செலுத்திப் பிணைகிறது. மூச்சு முன்னேறுகிறது. நாதம் இன்னும் இன்னும் எனத் துளைகளிலிருந்து பிரிந்து வெளியை நோக்கிப் படபடக்கின்றன. பதற்றத்துடன் அதன் துகள் சிதறித் தெறிக்கின்றன. முதலில் வந்தது மஞ்சள் நிறச்செதில் கொண்ட நாகம், அதன் பின் நீலவண்ணத் தோலடர்ந்த, கரியக்கோடுகள் கொண்ட நாகம், அதன் பின் கரியத்திரவம் போன்ற நெகிழும் செதில்கள் கொண்ட நாகமும் அந்த ஒலியினால் ஈர்க்கப்படுகின்றன. அதன் பின்னே இருகொம்புகள் கொண்ட பழுப்பு நிற வீரியன் குட்டிகள் மொலுமொலுத்து அவர் உடலில் ஏறுகின்றது. உடல் முழுதும் பாம்புகள் பிண்ணிப் பிணைந்து சுருள்கின்றன. கொத்தாக அதன் குழாய் உடல்கள் தங்களுக்குள் பிணைந்தும், துறவியின் உடலினுள் அமிழ்ந்தும் மாபெரும் நொதிப்பாக உருமாறுகின்றன. அதன் அசைவுகளில், நெளிவுகளில், சுழிவுகளில், பலப்பல சீறும் ஒலிகளின் அலைவுகள். அதனுள் அவரின் விரல்களின் லயம் சீர்குலைகிறது, அது தன்னிலை இழக்கிறது, துளைகளின் அழுத்தங்கள் தடுமாறுகின்றன. காற்றின் சீற்றம் குழைந்துப் பெருகுகிறது. கட்டுப்படுத்தமுடியாத ஒன்று வெடித்துச் சிதற விடைத்துக்கொண்டு காத்திருக்கிறது. அவர் சட்டென்று அனைத்தையும் உதறித்தள்ளினார், கைகளிலிருந்த புல்லாங்குழல் கீழே விழுந்தது. ஒரு தோற்ற மயக்கம் போல அரவங்களின் பெருக்கின் சுழல் காணாமல் ஆனது. நிதானிக்க முயன்றவரின் மூச்சு சீரற்று இறைந்தது. "இது காமம். ஆம்! காமம்" என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். நம் மூதாதையர்களும் இந்தக் காமத்தால் தான் கடவுளின் அழகியத் தோட்டத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள்.  ஒரு ஆணும் பெண்ணும் இப்படித்தானே பிணைந்து கொள்கிறார்கள். அழிவே அற்ற அந்த ஈர்ப்பின் சக்தியை எதனைக் கொண்டு நாம் மறுதலிக்க் முடியும் என்று பிதற்றத் தொடங்கினார்.

    சற்று சமநிலைக்கு வந்தத் துறவி, வெளியேத் தன்னைக் கவர்ந்திழுக்கும் காற்றின் அழுத்தமிகு சப்தத்தைக் கூர்ந்தார். கடவுளின் அனலெரியும் காற்றின் ஜ்வாலை இன்னும் நின்றபாடில்லை. "அதன் நடுமையத்தில் தான் என்னுடைய பாம்புத்துணைகள். அவர் தன்னுள் எரியும் தீயை என்ன செய்ய என்றறியாமல், ஊதி ஊதிப் பெருக்கி உலகினையே எரித்து விடுகிறார். நம்மைப் போலவே. ஆம்! இந்தப் பாம்புகள் பிணைந்து கொள்கிறதே நம்முள் அதைப் போலவே! மாபெரும் எரித்தழல்கள் அவருக்குள்ளும் பிணைந்து கொள்கின்றன" என்று தனக்குள் சொல்லிக் கொண்டார். தன் மனதினுள் அதைக் கட்டுப்படுத்த நினைப்பதும் பின் அதன் பின்னால் அலைந்து திரிவதுமான இருவேறு துருவங்களில் இழுத்தடிக்கப்பட்டார். ஆனால் திடீரென உடல் நடுங்கப் பிதற்றத் தொடங்கினார், "எல்லாமேக் கடவுள் தான். எல்லாமும் இரட்டைத் தன்மைக் கொண்டவை தான். எல்லாவற்றிற்கும் இரு அர்த்தங்கள் நிச்சயம் இருக்கும். ஒன்று பகிரங்கமானது, தெளிவாகப் புலன்களுக்குத் தெரிவது. ஒன்று மறைந்திருப்பது, புலன்களுக்கு நேரடியாகத் தெரியாதது. சாமானிய மனிதர்கள் பகிரங்கமானதைப் புரிந்து கொள்கிறார்கள். அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும், இது பாம்புதான். அதற்கு மேல் விளக்கங்கள் தேவை இல்லை. ஆனால் கடவுளைத் தியானிக்கும் மனம் தெரிந்தவற்றினுள் மறைந்திருக்கும் தெரியாததைத் தேடிச் செல்லும். இந்த நாகங்கள், கதவிடுக்கு வழியே ஊர்ந்து வந்து உடல் முழுதும் பற்றிப்படர்ந்து , தங்களுக்குள் பிணைந்து காற்றின் ஒலியில் நிலை கொள்ளாது சீறிக் கொண்டே இருந்ததே, அந்தக் கணம். அந்தச் சின்னஞ்சிறிதான நிலை கொண்டக் காலம். சரியாக அந்தத் தருணத்தில் ஜீசசின் வாக்குமூலம். உறுதியாக ஏதோ ஒரு அர்த்தம் அதனுள் மறைந்திருக்கிறது. ஆனால் என்ன அர்த்தம்?

    அவர் நிலைத்தடுமாறித் தரையில் விழுந்தார். தன்னிலையற்ற சன்னதம் போல, அங்கும் இங்கும் புரளத் தொடங்கினார். தரையின் குளிர்ச்சி அவருள் இறங்கி, உடல் முழுதும் வெடவெடத்தது. கண்களைத் திறந்து பார்க்கிறார், இருளின் மூலையில், வெளிறிய அந்த இளைஞனின் முகம். கண்களை மூடினால், வெளியே இன்னும் நிலையற்றுத் துடித்துக் கொண்டே இருக்கும் பாம்புகளின் சீற்றம். என்ன அர்த்தம் இதற்கு?

அவர் தனது குரு, பழைய மடாதிபதியாக இருந்த, மந்திர தந்திரங்கள் அறிந்த அருட்தந்தை ஜோசபட்டிடமிருந்து, பறவைகளின் மொழியறிதலைக் கற்றுத் தேர்ந்திருந்தார். அவருக்கு கழுகுகள், புறாக்களின் குரலைக் கூர்ந்து அவற்றின் மொழியினை விளக்கத் தெரியும். ஆனால் தன் குரு, பாம்புகளின் மொழியைக் கற்றுத்தருவதாக வாக்கு கொடுத்திருந்தார், ஆனால் கடைசி வரை அந்த ரகசியத்தை தனக்கு அவர் அளிக்கவில்லை. 

"சந்தேகமேயில்லை, இன்று இரவில் எனக்குள் தோன்றிய இப்பாம்புகளின் மயக்கு நிச்சயமாக ஏதோ செய்தியைச் சொல்ல விளைகிறது" என்று தனக்குள் பிதற்றினார் அந்தத் துறவி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக