வியாழன், 3 மார்ச், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் - 63

    

Author: Nikos Kazantzakis

    கிழவர் பிதற்றிக் கொண்டே இருந்தார், அவரது குரல் அவரினுள் இருந்து கூச்சல்களாக குதித்துக்கொண்டிருந்தது. கீழே குத்தவைத்து அமர்ந்து, கைகளினால் தலையைப் பிதுக்கினார். தலையினுள் ஏதோ வலுவாக அறைவது போல "நங்க்...நங்க்" என்ற சப்தங்கள். மூளையின் நிணத்தினுள், ஒரு பழுத்தக்கம்பி கீறிச் செல்வது போல. அதன் கீறலினுள்ள்ளிருந்து புழுக்கள் நெழிந்து வெளியேறுகின்றன. அவரது காட்சிப்புலம் மங்கி எதிரில் திரையாடுகிறது. முன்னே தெரியும் உலகம் அலைந்து நெகிழ்கிறது. 

"அதன் அர்த்தம் என்ன ? அதன் செய்தி என்ன?"

    திடுக்கென்று கண்களில் தாரைதாரையாக கண்ணீர் பெருக, ஒரு குழந்தையைப் போல வீறிட்டு அழத் தொடங்கினார். தன்னுள் தன்னை மீறீ நிகழ்வதை சகிக்க முடியாது, கைகளினால் தரையில் அறைந்தார். பின் அருகில் இருந்த மடாதிபதியின் புனிதக் கோலைப் பிடித்து எழுந்து மேஜையின் விளிம்பில் சாய்ந்து தன்னை சகஜப் படுத்த முயன்றார், துறவி ஜெரோபோம். அருகில் ஜீசஸ் கண்கள் மூடி அமர்ந்திருந்தான்.

    "ஜீசஸ்" மிகவும் தாழ்ந்தக் குரலில் யாரையும் தொந்தரவு செய்யாத படி விளித்தார் முதியவர்.

"நீ உன் இருதயத்தினுள் என்ன உணர்கிறாய்"

    இளைஞனுக்கு எதுவுமே கேட்கவில்லை. அவனது தொண்டை வறண்டிருந்தது. வார்த்தைகளற்ற அகத்தின் மேலும் கீழும் சலசலப்புகள் அற்று அமைதியினுள் மூழ்கியிருந்தான். எத்தனையோ வருடங்களாய் அவனுள் கனன்று கொண்டிருந்த ஒன்றை இந்த இரவு வெளியேற்றியிருக்கிறது. முதல்முறையாகத் தன் இருதயத்தின் ஆழ்ந்த இருளினுள் நுழைந்து அவன் தன்னைப் பற்றிப் பேசமுடிந்த இரவு. ஒவ்வொன்றாகத் தன்னை அழுத்திக் கொண்டிருப்பவைகளை, அதன் பலப் பல பாவனைகளை, சுருண்டு நெழிந்து நொதித்துக் கொண்டிருக்கும் பாம்புகளின் வெவ்வேறான உருவங்களை அவனால் வேறுபடுத்திப் பார்க்க முடிந்தது. அதன் தாறுமாறானச் சீற்றங்களை உட்கிரகித்து, அதனுள் உழன்று உணர முடிந்தது. அதனைத் தன் உடலிலிருந்து அறுத்தெடுத்த உறுப்புகள் போலப் பார்த்தான். தன்னுள் இதுவரை எவ்வாறு அது ஒரு கண்ணுக்குத்தெரியாத ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் போல வாழ்ந்து கொண்டிருந்தது என்பதும், இப்பொழுது அதனைப் பிய்த்துத் தன் எதிரில், இந்த முதியத்துறவியிடம் வெளிப்படுத்தியவுடன் அவைகளின் உருக்களும், நிறங்களும் எப்படி ஸ்தூலமாகத் தெரிந்தன என்பதும் அவனுக்கு தெளிவாகப் புரிந்தது. அவனும் அவைகளிலிருந்து தான் விடுபட்டது போல உணர்ந்தான்.

    "ஜீசஸ், இப்பொழுது உன் இருதயம் எப்படி உணர்கிறது, நீ விடுவிக்கப்பட்டது போல உணர்கிறாயா". துறவி ஜெரோபோம், திரும்பவும் தாழ்ந்த அமைதியான குரலில் அவனைக் கேட்டார். ஆனால் அவனைப் பேசவிடாமல் கைகளால் அவன் உதடுகளைப் பொத்திக் கொண்டார்.

    "வா" என்று சொன்னவர் தனது இன்னொரு கையால் அவனது கைகளைப் பிடித்துக் கொண்டு இழுத்துச் சென்றார்.

    வெளிக்கதவைத் திறந்து அவர்கள் முற்றத்தைத் தாண்டி சென்று கொண்டிருந்தனர். பாம்புகள் உடல்கள் பிணைந்து வால்கள் துடிதுடிக்க எதிரே நிலத்தில் ஊன்றிச் சுழன்றாடுகின்றன. ஒன்றாய்ப் பலவாய் நிலமெங்கும் முளைத்திருக்கும் பல்லாயிரம் மணற்சுழல்கள் துடிப்பதும், அடங்குவதும், நகர்வதும், சுழல்வதும், ஆடி அடங்குவதுமாய் சதகோடி நாட்டியங்கள். கடவுளின் மூச்சின், அளவிடமுடியாத திமிர்வினால் விடைத்துக் கொண்டு  எம்பிச் சுருங்கிக் கொண்டிருந்தன புழுதித் துகள்கள்.

    அவைகளைப் பார்த்ததும் மேரியின் மகன் பின்வாங்கினான். ஆனால் துறவியின் கைகள் அவனை இறுக்கிப் பிடித்திருந்தன. அவர் அவனை இழுத்து வந்து, ஒரு மேகக்கொத்து போல மென்மையாகவும், ஆனால் துகள்களின் பெருக்கால் திடத்தன்மையும் கொண்ட பசித்து விடைத்துச் சுழன்றாடும் அதன் தூய நுனிகளைத் தொட்டுணர வைத்தார்.

    "இங்கே இருக்கின்றன அவைகள்" மெதுவாகச் சொன்னவர், இளைஞனைப் பார்த்து அமைதியாகச் சிரித்தார். "இதோ அவைப் பிரிந்து துகள்களாகப் பறந்தோடுகின்றன"

"பறந்தோடுகின்றனவா?" மேரியின் மகன் குழப்பமாகக் கேட்டான்.

"எங்கு பறந்தோட முயல்கின்றன"

    "இப்பொழுது உன் இருதயம் சுமைகளற்றுக் காலியாக இருப்பதை நீ உணர்கிறாய் இல்லையா! அவைகள் உன் இருதயத்திலிருந்து பறந்தோடி விட்டன"

    மேரியின் மகன் தனது நீண்ட விழிகளால் ஆழ்ந்து துறவியைப் பார்த்தான். அவர் அதே வெறிச்சிரிப்புடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவன் ஸ்பரிசத்தின் நுனிகளிலிருந்து கிளம்பிச் சென்ற பாம்புகளின் பிணைந்த ரூபம், நிலத்திலிருந்து குதித்துத் குதித்து நடனமாடுகின்றன. பின் அந்தப் பாழுங்கிணற்றை நோக்கி நகர்ந்து செல்லுகின்றன. அவன் தன்னை உணர்கிறான், தன் உடலை இன்னும் இன்னும் ஆழமாகத் தொட்டுணர்கிறான். தன் கையை நெஞ்சினில் வைத்து அதன் துடிப்புகளை, எந்த சலனமுமற்றுக் கேட்கிறான். அது விரைவாகவும், மகிழ்ச்சியுடனும் பதில் கூற முயல்கிறது.

    "வா! நாம் உள்ளே போகலாம்". துறவி திரும்வும் அவனது கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு உள்ளே சென்றார். பின் கதவை இறுக்கி அடைத்தார்.

    "எல்லாம் வல்ல இறைவனுக்கு பெருமை" துறவி பயபக்தியுடன் வானை நோக்கிக் கூறிப் பின் மேரியின் மகனின் கண்களைப் பார்த்தவர் தன்னுள் விசித்திரமானத் தொந்தரவுக்குள்ளானார்.

    "இது அற்புதம் தான்" அவர்  தனக்குத்தானே சொல்லிக் கொண்டார். "என் முன்னே நிற்கும் இந்தப் பையனின் வாழ்க்கை உண்மையில் ஒரு அற்புதம் தான்".

    ஒரு சமயம் ஜீசஸின் தலையில் கைவைத்து அவனுக்கு ஆசிர்வாதங்களை வழங்க நினைத்தார். மறு சமயம் அவன் முன் மண்டியிட்டு அவனது பாதங்களில் முத்தமிட வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. ஆனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். காலங்காலமாக இதுநாள் வரைக் கடவுள் அவரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளுக்குச் செவி கூர்ந்து எத்தனையோ முறை மலைமுகடுகளிலும், அடர்ந்த பாலைவனத்திலும் அலைந்து திரிந்துத் தேடும் பொழுது அவனது குரல் கேட்கும் திசை நோக்கி அலைக்கழிப்பப்படுவார். "இவன் தான் மெசியா" "இவன் தான் மெசியா" என்று அதற்கான அடையாளங்களை அது  காட்டும். ஆனால் கடவுள் ஒவ்வொருமுறையும் அவரை ஏமாற்றிக் கொண்டே இருந்தார். எந்தத் தருணத்திலும், அவனின் அழைப்பு, அவனின் விளி கேட்கும் என்று நம்பிக் கொண்டு, மலர்வதற்காக காத்திருந்த அவரது இருதயம், வாடி வதங்கிய ஒரு மொட்டைக் காம்பாகத் தான் இதுவரை இருந்திருக்கிறது. அவர் தன் உணர்ச்சிகள் வெளிப்படுவதை வலிய அடக்கிக் கொண்டார். 

    "இவனை முதலில் சோதிக்க வேண்டும் என்று தன்னுள் நினைத்துக் கொண்டார். இவனுள் இருந்து இவனை விழுங்கிக்கொண்டிருந்த நாகங்கள் இதோப் பறந்து வெளியேறிவிட்டன. இப்பொழுது இவன் தூய்மையாகிவிட்டான். இது சரியானத் தருணம். இவன் தன்னிருப்பின் மலர்ச்சியானப் பக்குவத்தில் இருக்கிறான். இவன் இனி மனிதர்களிடம் பேசுவான். அப்பொழுது நாம் அறிந்து கொள்வோம் இவன் யாரென்று"

    ஜெரோபோம் கதவைத் திறந்தார். அவருடன் இரு விருந்தாளிகள் உடனிருந்தனர். அவர்கள் தங்களின் எளிய இரவுணவை அருந்துவதற்காகத் தரையில் அமர்ந்தனர். பார்லி ரொட்டியும், ஆலிவ் எண்ணெயும் பாலும் அவர்களுக்கு முன் எடுத்து வைத்தார் ஜெரோபோம். பின் ஜீசசைப் பார்த்து உன்னுடையப் படுக்கையை வெளியில் இருக்கும் இன்னொரு அறையில் ஒருக்கம் செய்துள்ளேன். உனக்கு இரவில் துணையாக, இன்னொருத்தனும் தங்குவான் என்று சொல்லிக் கொண்டு அவர்களுடன் அமர்ந்தார்.

    அந்த இரு விருந்தாளிகளின் அகமும் இரு வேறுதிசையில் தன்னைச் செலுத்திக் கொண்டிருந்தன. அவர்கள் தங்களை அருகருகில் உணர்ந்ததாகக் கூடத் தெரியவில்லை. அந்த மூச்சு சீறும் ஒலி, கிணற்றின் அடியாழத்திலிருந்துக் கேட்கிறது. அதன் உடல் குழாய்கள் உராய்ந்து கொள்கிறது. அதன் குரலின் ரகசியத் தன்மை கட்டுக்குள் இல்லாமல் இன்னும் கேட்டுக் கொண்டே இருந்தது.

    அவைகள் திருமணம் செய்துகொள்ளும், சொன்ன முதியவர் வெறுமனே சிரித்து வைத்தார். சூழலின் அழுத்தம் சற்றுத் தளர்ந்தது. கடவுளின் மூச்சு இன்னும் சீறிக் கொண்டிருக்கிறது. அது அவைகளுள் ஒரு நோய்க்கூறு போல பரவி விட்டிருக்கிறது. ஆனால் அவைகளுக்குப் பயமில்லை. அதனால் இது திருமணத்தில் போய்தான் முடியும்.

    இளைஞன், முதியவரைப் பார்த்தான். ஆனால் அவன் முகத்தில் எந்த உணர்ச்சிகளுமில்லை. துறவி தனது ரொட்டியைப் பாலில் முக்கிப் பிய்த்து தின்று கொண்டிருந்தார். அவர் பசியில் தளர்ந்திருந்தார். அவர் தன் உடலின் வலுவைத் திரும்பப் பெற வேண்டும். அப்பொழுதுதான் திரும்பவும் தன்னால் மேரியின் மகனுடன் பேச முடியும் என்று நினைத்தவர், அமைதியாக உண்ணத் தொடங்கினார். இந்த ரொட்டியும், எண்ணெயும் பாலும் தன்னுள் வலுவாக, அறிவாக மாறுகிறது என்று நினைத்துக் கொண்டார். பைத்தியத் துறவி ஜெரோபோம், வெறுமனே எதுவும் பேசாமல் அமர்ந்திருந்த இருவரையும் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். பின் சலிப்புற்று அங்கிருந்து சென்றுவிட்டார்.

    சம்மணிமிட்டு எதிரெதிரே அமர்ந்திருந்த இருவரும் இன்னும் பேச வாயெடுக்கவில்லை. வெறுமனேத் தின்று கொண்டிருந்தனர். ஏழு நிலைகள் கொண்ட விளக்கொளியில், அறையின்  மங்கலான வெளிச்சம் வாசல் வரைப் பதிந்துக் கிடந்தது. ஒரு ஊரும் ஜந்தினைப் போல ஒளியும் அங்கு நெழிந்து ஊறியது. தீர்க்கதரிசி டேனியலின் புனித வார்த்தைகளின் பட்டயம் இன்னும் மேஜை மேல் திறந்து வைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த சொற்களின் குரல்கள் ஒரு தணல் போல அறையினுள் ஒரு உயிருள்ள பொருள் போலவே அலைந்து திரிந்து கொண்டிருந்தது. மடாதிபதியின் புனிதக் கோல் அசைவற்று மூலையில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது.

    நறுமணத்தைலத்தின் புகைச்சுருள் கிளம்பி உத்திரம் வரைச் சுழலிடுவது, அந்த மங்கலான ஒளியினுள் இன்னும் இறந்தவரின் ஞாபகங்களைச் சீண்டிக் கொண்டிருந்தன.

    "காற்றின் வேகம் சற்றுத் தணிந்தது போல இருக்கிறது" முதியவர் பேச்சைத் தொடங்கினார். 

"கடவுளின் குரல் அருகிலும் தூரத்திலுமாய் விளிப்பது போல என்ன!"

    இளைஞன் எந்தப் பதிலும் அளிக்கவில்லை. "அவைகள் போய்விட்டன, அவைகள் போய்விட்டன, என்னுள் பிணைந்திருந்த பாம்புகள் ஓடிவிட்டன. ஒருவேளைக் கடவுள் இதைத்தான் செய்ய நினைத்திருந்தாரா! அதற்காகத் தான் என்னை இந்த பாலைவனத்திற்குள் வர வைத்தாரா! என்னை என்னுள்ளிருந்து உயிர்ப்பிக்கத்தான் அவர் இந்த சோதனைகளினுள் என்னை ஆடுவிக்கிறாரா!"

    அவனின் உடலிலிருந்து கொத்தாக அந்த பாம்பு உடலங்கள், சிதறி வெளியேறியதை அவன் நேரடியாகப் பார்த்தது போலவே உணர்ந்தான். 

"கடவுளுக்கே எல்லாப் பெருமையும்"

    தனது உனவை உண்டு முடித்ததும், கைகளை உயர்த்தி முதியவர் நன்றி தெரிவித்தார். பின் தன்னெதிரே இருந்த இளைஞனைப் பார்த்தார்.

    "ஜீசஸ்! உன் நினைப்பு எங்கே இருக்கிறது? நான் தான் நாசரேத்தின் துறவி! நீ நான் சொல்வதைக் கேட்கிறாயா?"

    "நான் நீங்கள் சொல்வதைத்தான் கேட்கிறேன், சிமியோன் மாமா!" தன்னுடைய எண்ணங்களிலிருந்து சட்டென்று விழித்துக் கொண்ட இளைஞன் அவரைப்பார்த்து புன்முறுவல் உதிர்த்தான்.

"நமது காலம் இங்கே உள்ளது! நண்பா! நீ தயாராக இருக்கிறாயா"

"தயாரா! எதற்கு!" ஜீசஸ் புரியாமல் கேட்டான்.

    "உனக்கு நன்றாகத் தெரியும், எதற்காக என்னிடம் கேட்கிறாய்? எழுந்து நின்றுப் பேசத் தயாரா?"

"யாரிடம்?"

"இந்த மனித குலத்திடம்"

"பேசுவதென்றால், என்ன பேச?"

    "அதைப்பற்றிக் கவலைப்படாதே! நீ உன் வாயை மட்டும் திற! கடவுள் உன்னிடம் வேறு எதையுமேக் கேட்கவில்லை, நீ இந்த மனிதகுலத்தை விரும்புகிறாயா?"

    "எனக்குத் தெரியவில்லை. நான் மனிதனைக் காணும் பொழுதெல்லாம் அவனுக்காக கவலையுறுகிறேன், வேறு ஒன்றும் எனக்குத் தோன்றியதில்லை"

    "அது போதும். என் மகனே, அது போதும். அவர்களுக்கு முன் நின்று நீ பேசு. அதனால் உனது துயரங்கள் இன்னும் அதிகமாகலாம். ஆனால் அவர்கள் அதன் மூலம் ரட்சிக்கப் படுவார்கள். ஒருவேளைக் கடவுளும் அதற்காகத் தான் உன்னை அனுப்பி வைத்திருக்கிறாரோ, என்னவோ! நாம் பார்க்கலாம்!"

    "ஒருவேளைக் கடவுள் அதற்காகத் தான் இந்த உலகிற்கு என்னை அனுப்பியிருக்கிறாரா!" இளைஞன் அந்த வார்த்தைகளைத் திரும்பச் சொல்லிக் கொண்டான். "உங்களுக்கு எப்படித் தெரியும், தந்தையே?". இளைஞனின் ஆன்மா, அவன் உடலிருந்து வெளியேறி அவரிடம் மன்றாடும் தொனியில் இருந்தது  அவனது குரல். அது அவரின் பதிலை எதிர்பார்த்து இன்னும் ததும்பி நிற்கிறது.

    "எனக்குத் தெரியாது, யாரும் என்னிடம் அப்படிச் சொல்லவில்லை" ஆனால் அதற்கான சாத்தியக் கூறுகளை நான் உன் வழியேக் காண்கிறேன். ஒரு முறை நீ சிறுவனாக இருக்கும் பொழுது களிமண்ணை வைத்து ஒரு பறவையைச் செய்தாய். மிக நுட்பமாக அதன் சிறகுகளைப் படைத்திருந்தாய். நீ அதனை ஸ்பரிசிக்கும் பொழுது அதன் சிறகுகள் உருக்கொண்டு அது உடலெடுத்து, உன் கைகளிலிருந்து பறந்துவிடுவதைப் போல உணர்ந்தேன். அதற்கு சாத்தியமுண்டு ஜீசஸ். அந்தப் பறவைதான் மனித ஆன்மா. ஆம்! மகனே! மனிதனின் ஆன்மா உன் கைகளினுள் படபடபக்கிறது.

    இளைஞன் எழுந்துக் கவனமாகக் கதவினைத் திறந்து, வெளியைக் கூர்ந்தான். கடைசியாகச் சர்ப்பங்களின் மொலுமொலுத்தல் சுத்தமாக அடங்கியிருந்தது. "தயவுசெய்து, என்னை ஆசிர்வதியுங்கள் தந்தையே, என்னிடம் வேறு எதுவும் பேசாதீர்கள், நீங்கள் அதிகமாகவே எனக்கு வழங்கிவிட்டீர்கள், இனிமேலும் என்னால் தாங்க முடியாது"

    மறுபடியும் அமைதி! சிறிதுகணம் கழித்து, "எனக்கு சோர்வாக இருக்கிறது, மாமா! நான் உறங்கச் செல்கிறேன். சிலசமயம் கடவுள் இந்த இரவினுள் வந்து இன்று நிகழ்ந்த அனைத்திற்குமான காரணத்தை எனக்கு விளக்க வாய்ப்புண்டு, நன்றாக உறங்குங்கள் மாமா!

வரவேற்பாளர் வாசலில் அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.

    "போகலமா வா!, எங்கே உனக்கு படுக்கை வசதி செய்து வைத்திருக்கிறேன் என்றுக் காட்டுகிறேன் ! உன் பெயர் என்ன சொன்னாய், என் கெட்டிக்காரப் பையா?"

"தச்சனின் மகன்"

    "என்னுடைய பெயர் ஜெரோபோம். என்னை மூளை கெட்டவன் என்றும் அழைப்பார்கள். அரைப்பைத்தியம் என்று கூட. அதனால் என்ன! நான் கடவுள் கொடுத்த என் சொந்தப் பற்களைக் கொண்டு என் நாக்கினையேக் கடித்துக் கொள்கிறேன். யார் என்னிடம் கேட்கப் போகிறார்கள்? நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று!" சொன்னவர் வெடிக்கச் சிரித்தார்.

"என்ன நாக்கினையா"

    அரைப்பைத்தியம் சிரித்தது. "உனக்குப் புரியவில்லையா, முட்டாளே? அது என் ஆன்மா! எப்படியும் அதை நான் தின்று விடுவேன் - நல்லிரவு, இனியக் கனவுகள் அமையட்டும்! நானும் செல்கிறேன். என்னை அமர்த்தி சாரோன் எப்படியும் இவ்விரவை ஓட்டி விடுவான். நாம் நம் பாதாள உலகத்தில்  சந்திக்க வாய்ப்பிருக்கலாம்."

நின்றவர், அந்தச் சிறியக் கதவினை அழுத்தித் திறந்தார்.

    "உள்ளே வா" "அதோ பின்னால் மூலைக்கருகே உனக்குப் பாய் விரித்திருக்கிறேன். அங்கே உறங்கிக் கொள்" "போ," என்று அங்கேத் தள்ளினார். "நன்றாக உறங்கு, பையா!, பயப்படாதே! எப்படியும் பெண்களைப் பற்றியக் கனவுகள் தான் வரும், ஏன் என்றால் இங்கு வீசுவது மடாலயத்தின் காற்று" என்று சொன்னவர் எச்சில் தெரிக்க, பற்கள் தெரிய அவனைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தார். பின் வெளியே சென்று கதவை இறுக்கிச் சாத்தினார். அவ்வொலி அறையெங்கும் எதிரொலித்தது.

    மேரியின் மகன் அறை இருளினுள் அசையாமல் நின்று கொண்டிருந்தான். ஒன்றுமேத் தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக கண்ணுக்கு புலப்படும் வகையில் பொருட்களை வேறுபடுத்திப் பார்க்க முடிந்தது. வெள்ளை நிறச் சுண்ணம் மெழுகிய அறைச்சுவர்கள் சற்றுத் துலக்கமாகத் தெரிந்தது. படுக்கைக்கு அருகில் மூலையில் ஒரு சாடியில் குடிக்கத் தண்ணீர் இருந்தது. இருளினுள் இரு மனிதக் கண்கள் அவனைக் குத்துவது போல எதிரில் பார்த்துக் கொண்டிருந்ததை அப்போதுதான் கவனித்தான்.

    தட்டுத்தடுமாறி மெதுவாக அந்தப் பார்வையை நோக்கி முன்னே வந்தான். கால்களுக்கடியில் படுக்கைவிரிப்புகள் கலைந்துச் சிக்கின. கைகளை முன்னே நீட்டிக் கொண்டே நகர்ந்தவன், விழுவது போலச் சரிந்து ஓரிடத்தில் நின்றான். அந்தப் பார்வையும் அதுபோலவே அவனை நோக்கி வந்து எதிரில் நின்றது. 

    "மாலை வணக்கங்கள், நண்பனே!", மேரியின் மகன் எதிரில் நின்றிருந்த அந்த உருவிற்கு வணக்கங்கள் தெரிவித்தான். ஆனால் எந்தப் பதிலும் வரவில்லை. 

    தன் முழங்கால்களில் நாடித் தொடும் வரைக்  கீழேக் குனிந்து ஆழமாக மூச்சிறைத்தான். அவனது சுவாசம் அறைமுழுதும் எதிரொலித்து ஒரு மிருகலயத்தை உண்டு பண்ணியது. எல்லாம் தன் மயக்குதான் என்று நினைத்தவன், அப்படியேத் தன் பாயில் சரிந்துப் படுத்துக் கொண்டான். யூதாஸ் எதிரில் சுவரோடுச் சுவராக நின்று கொண்டிருந்தான். "வா! வா! வா! என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். அவனது வலது உள்ளங்கையினுள், தனது கத்தியை அவனது நெஞ்சில் குத்துவதற்குத் தோதாகக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தான். வா! வா! வா! இன்னும் எதிரில் அப்படியே அசையாமல் அவனைக் கவரும் வகையில் நின்று தனக்குள் மந்திரம் போல, வா! வா! வா! என்று சொல்லிக் கொண்டுத் தயாராக நின்று கொண்டிருந்தான்.

    யூதாசின் நினைப்பு அங்கிருந்துக் கழன்றுத் தான் பிறந்தக் கிராமத்தினுள் நுழைந்தது. கெரியோத் எனும் அச்சிறியக் கிராமம் இதுமியாவிலிருந்தும் தொலைவில் இருப்பது. அவனுக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. தனது மந்திரவாதி மாமா எப்படித் தன் மந்திரவித்தையால் குள்ள நரிகளை, முயல்களை, கௌதாரிகளைக் கவர்ந்துக் கொல்வார் என்பது. வேட்டையின் போது,  அவர் தன்னை நிலத்தோடு நிலமாக இருத்திக் கொண்டு, தன் கனன்று எரியும் கண்களால், அம்மிருகங்களைக் கூர்ந்துப் பார்ப்பார். மந்திரங்கள் இடைவிடாமல் அவரது நாக்கில் உருண்டோடும். அது ஒருசமயம் பிரார்த்தனை போலவும், மறுசமயம் கட்டளைகள் போலவும் தாழ்ந்தும் உயர்ந்தும் அவரது குரல் அம்மிருகத்தை நோக்கிப் பதுங்கும்" வா!....வா!...வா!...அந்த மிருகம் தான் நின்ற இடத்திலேயே மயங்கி வீழும், கைகால்கள் இழுத்துக் கொள்ளும். தலைத் தரையில் அறைந்து ஆடிக் கொண்டிருக்கும், அதன் சுவாசம் துடித்திறங்கும். கணப்பொழுதில் அது அப்படியே துடித்துத் துடித்து மரணிக்கும்.

    அங்கிருந்து மீண்டவன், உடனே தன் மென்மையானக் குரலில் அடித்தொண்டையில் அதே போல ஒரு மந்திர உச்சாடணத்தை இருளிற்குள் தெளித்தான். சிறுகச் சிறுக அக்குரலின் அழுத்தம் கூடி அச்சுறுத்தும் வகையில் முழுக்க அடைத்திருந்த அந்த அறையில் குழுமத் தொடங்கியது. கீழேப் பாயில் படுத்திருந்த இளைஞன் பயத்தில் திடுக்கிட்டு எழுந்தான். "யார் எனக்கு எதிரில் நின்று கொண்டிருப்பது? யார் இந்த சீற்றமிகுக் குரலை எழுப்புகிறார்? என்று தனக்குள் எண்ணிக் கொண்டவனின் மூச்சு சீரற்றிருந்தது. ஆனால் அந்தப்பதுங்கித் தாக்கக் காத்திருக்கும் மிருகத்தை அவனால் அருகில் உணர முடிந்தது. அவன் புரிந்துகொண்டான்.

    "யூதாஸ், இது நீதானா, என் சகோதரா?" அவன் விரைந்து அவ்வுருவைப் பார்த்துக் கேட்டான்.

    "சிலுவையில் அறைபவன்" ஒரு உறுமல் குரல். கால்களை அழுத்தித் தரையில் மிதித்து அந்த முரட்டு உருவம் பதில் உரைத்தது.

    "யூதாஸ், என் அன்பு சகோதரா" திரும்பவும் அழைத்தான் மேரியின் மகன். "சிலுவையில் அறையப்படுவனை விட அறைபவன் அதிகமும் வாதைக்குள்ளாகிறான்"

    செந்தாடிக்காரன், இளைஞனைப் பார்த்து வசைமாறிப் பொழிந்து கொண்டே தன் முரட்டு உடலை அவனை நேருக்கு நேர் பார்க்கும் படித் திருப்பினான்.

    "நான் என் புரட்சியாளச் சகோதரர்களுக்கும், சிலுவையில் அறையப்பட்டு மாண்டவனின் அன்னைக்கும் சத்தியம் செய்திருக்கிறேன். "என் கையாலேயே உன்னைக் குத்திக் கொல்வேன் என்று, வருக! சிலுவை செய்பவனே. நான் உன்னை இங்கே கவர்ந்திருத்துக் கொண்டு வந்திருக்கிறேன்."

    அங்கிருந்து குதித்து வந்து அறைக்கதவை மறுமுறை சரியாக அறைந்து சாத்தி, பின் மூலையில் தரையில் அமர்ந்திருக்கும் ஜீசசை இன்னொருமுறை முழுமையாகப் பார்த்து நின்று கொண்டான்.

    "நான் என்ன சொல்கிறேன் என்பதைக் கேட்டாய் இல்லையா", உன் மழுப்பும் பாசாங்குகளை என்னிடம் காட்டாதே!, ம்ம்! தயாராகு!"

"நான் தயார்"

    "இல்லை, சத்தம் போடு இப்பொழுது!, சீக்கிரம்! நான் இங்கிருந்து இந்த நிமிடமே, இந்த இருளிற்குள் புகுந்துத் தப்பித்து விடுவேன். ம்ம்! சீக்கிரம்!"

    "நான் உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சியடைகிறேன் யூதாஸ், என் சகோதரா!. நான் தயார். நீயல்ல என்னைக் கவர்ந்து வந்தது, கடவுள்! -அதனால் தான் நான் இங்கு வந்தேன். அவனுடைய அளவிடமுடியாக் கருணை எல்லாவற்றையும் சரியாகத் திட்டமிட்டிருக்கிறது. நீ அதற்கான சரியானத் தருணத்தில் இங்கே வந்திருக்கிறாய், யூதாஸ், என் சகோதரா!. இந்த இரவில் என் இருதயம் தன் பாரங்களை எல்லாம் இறக்கிக் காலியாக்கி, தூய்மையாகி விட்டது. நான் என்னைக் கடவுளிடம் இக்கணம் முழுதளிக்க முடியும். நான் உண்மையில் அவனுடன் போராடித் தளர்ந்து விட்டேன். உண்மையில் வாழ்வதிலும் சலிப்படைந்து விட்டேன். நான் என் கழுத்தை உனக்கு அளிக்கிறேன். ம்ம்! எடுத்துக் கொள்! நான் முற்றிலுமாகத் தயார்!"

    கொல்லன் அவனை ஏறிட்டு நோக்கினான். அவனது புருவங்கள் உயர்ந்து நெற்றியில் ரேகைகள் முடிச்சிட்டன. அவன் இது போல ஒன்றை எதிர்பார்க்கவில்லை. அவன் எப்பொழுதுமே இப்படி ஒன்றை விரும்ப மாட்டான். இது அவனை அருவருக்கச் செய்தது. எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் கழுத்தை வெட்டுவதற்காக, ஒரு ஆட்டைப் போல  நீட்டும் இப்படி உயிரை உண்மையில் அவனால் எதிர்கொள்ள முடியவில்லை. அது போராட வேண்டும். தன் உயிரைப் பிடித்துக் கொண்டுத் துடிதுடிக்க வேண்டும். சண்டையிட வேண்டும். இல்லையேல் தப்பியோடவாவது முயற்சிக்க வேண்டும். அதன் நிணம், கொழுத்தக் குருதி தெறிக்க, தன் வலுவால் அதனைக் கொன்றுக் கிழிக்க வேண்டும். ஒரு ஆண்மகன் அப்படித் தான் செய்வான். ஆனால் இப்படி ஒருத் தருணத்தில் தான் என்ன் செய்வது என்று குழம்பிப் போனான் செந்தாடிக்காரன்.

    மேரியின் மகன் தன் கழுத்தை முன்னே நீட்டிக் காத்துக் கொண்டிருந்தான். ஆனால் தன் வலுவானக் கைகளை உயர்த்தியக் கொல்லன் திரும்பப் பின் வாங்கிக் கொண்டான்.

"ஏன் நீ எதிர்ப்பு காட்டாமல் அமர்ந்திருக்கிறாய்" அவன் கத்தினான். என்ன மாதிரியான மனித ஜென்மம் நீ? எழுந்து என்னிடம் சண்டையிடு!"

    "ஆனால் எனக்கதில் விருப்பமில்லை, யூதாஸ், என் சகோதரா. எதற்காக நான் எதிர்க்க வேண்டும். நீ என்ன விரும்புகிறாயோ, நான் என்ன விரும்புகிறேனோ, கடவுளும் அதைத்தான் விரும்புகிறார். அதற்காகத் தான் அவர் எல்லாவற்றையும் சரியாகக் கோர்த்திருக்கிறார். நீ இதை நினைத்துப் பார்த்தாயா! சரியாக நான் இந்த மடாலயத்திற்கு எப்போது நுழைந்தேனோ, அதே சமயத்தில் தான் நீயும் வந்திருக்கிறாய். நான் இங்கே வந்தேன், என் இருதயம் முழுதும் தூய்மையாகி, அமைதியடைந்து விட்டது. நான் கொல்லப்படுவதற்குத் தயாராகவே இங்கு வந்தேன். நீ உன் கத்தியை உயர்த்தி வைத்துக் கொண்டு இந்த மூலையில் என்னைக் கொல்வதற்காகவேக் காத்து நின்றிருந்தாய்; கதவு திறந்தது, நான் உள்ளே வந்தேன்....இதற்கு மேல் என்ன சமிஞ்சைகள் உனக்கு வேண்டும், யூதாஸ், என் சகோதரா!"

    ஆனால் கொல்லன் எதுவும் பேசவில்லை. தன் தாடியைப் பற்களில் கடித்துக் கொண்டு கனலும் விழிகளுடன் நின்று கொண்டிருந்தான். கொந்தழிக்கும் அவனது குருதி அவனின் உடல் முழுதும் குமிழ்ந்து கொப்பளித்துக் கொண்டிருந்தது. அடக்க முடியாத அவனது வெறுப்பும், கோபமும் ஒரு கனல் போலப் பற்றிக் கொள்ளும் தருணத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தது. எரிதழல் போல ஜ்வாலையுற அவன் அசைவின்று ஜீசஸை வெறித்தான்.

    "எதற்காக நீ சிலுவைகள் செய்தாய்" அவனது கடுமையானக் குரல் இறுதியில் வெளிப்பட்டது.

    இளைஞன் தலை தாழ்த்தி அமர்ந்திருந்தான். அது அவனது ரகசியம். அதை எப்படி அவனால் வெளிப்படுத்த முடியும். ஒரு கனவின் பாதையை விளக்கினால், அதில் என்ன நம்பகத்தன்மை இருக்கும். தன் கனவினுள் எழுந்த வார்த்தைகளையும், குரல்களையும், அவனைத் துரத்திய மனிதர்களையும், தான் தனிமையில் இருக்கும் பொழுது தன்னைப் பீடிக்கும், தன் மூளையினைக் குத்திக் குதறும் அந்தப் பறவையின் கூரிய உகிர்களையும், அது தன்னை சொர்க்கத்தின் பாதைக்கு அழைத்து உந்துவதை, அதனை நான் மறுதலிப்பதை, இந்த வாதைகளின் சித்ரவதைகளிலிருந்துத் தப்பித்துக் கொள்ள நான் கடவுளுக்கு எதிராக, பாவங்களின் பாதையைத் தேர்ந்தெடுத்து என்னை விடுவிக்க முயல்வதை, இந்த பூமியில், மண்ணில் என்னை இருத்திக் கொள்ள ஆசைப்பட்டதை. இதை  எல்லாம் எப்படி நான் விளக்குவேன். அப்படியே விளக்கினாலும் இதில் இவன் எப்படி நம்பிக்கைக் கொள்ள முடியும். ஸ்தம்பித்து நின்றிருந்த இளைஞனின் அகம் நிலைகொள்ளாமல் அலைந்து கொண்டிருந்தது.

    "என்னால் உன்னிடம் அதற்கு விளக்கங்கள் சொல்ல முடியாது, யூதாஸ், என்னை மன்னித்துவிடு" நான் வருந்துகிறேன். ஆனால் என்னால் முடியாது"

    கொல்லன் அங்கிருந்து சற்றுத் திரும்பி நின்றான். சற்றே வெளிச்சத்தில், மேரியின் மகனின் முகம் தெளிவாகத் தெரியும் படி நின்று கொண்டவன், அவனை ஊடுருவது போலப் பார்த்தான். ஆர்வத்துடன் அவனது வெளிறிய முகத்தில் தேடிய அவனது கண்கள் பின் அறையின் வெற்றுச்சுவர்களை வெறித்துத் திரும்பியது. "என்ன மாதிரியானா ஆள் இவன், என்னால் புரிந்து கொள்ள  முடியவில்லையே!, எனக்கு உண்மையில் ஆச்சரியமாகவும், குழப்பமாகவும் இருக்கிறது. இவனை வழி நடத்துவது சாத்தானா, இல்லை கடவுளா?, எதாவது இருந்துத் தொலையட்டும். அது அவன் பாடு! தன் கைகளை இறுக்கிக் கொண்டு அவனை நோக்கி அடி எடுத்து வைத்தான். அவன் எந்த எதிர்ப்பும் காட்டாததே, பெரிய எதிர்ப்புதான். என்னால் ஒரு ஆட்டைக் கொல்ல முடியாது. மனிதர்களைத்தான் நான் இதுவரைக் கொலை செய்து இருகிறேன். ஆடுகளை அல்ல!"அவன் தனக்குள்ளேயே அங்கலாய்த்துக் கொண்டான்.

    "நீ ஒரு கோழை, இழிபிறவியே!, அறையே அதிரும்படிக் கத்தினான் யூதாஸ். நீ ஏன் நரகத்திகுப் போகவில்லை!. ச்ச்சீய்! உன் ஒரு கன்னத்தை அடித்தால், நீ என்னடாவென்றால் மறுகன்னத்தையும் காட்டுகிறாய். உன்னைக் கொல்லக் கத்தியுடன் வந்தால்,  நீ தோதாகக் கழுத்தை  நீட்டுகிறாய்! ஒரு உண்மையான் ஆண்மகன் உன்னைத் தொடுவானா!" என்று அருவருப்புடன் கண்களைச் சுருக்கி அவனை நோக்கினான்.

    "அது கடவுளால் முடியும்". உணர்ச்சியற்றக் குரலில் மேரியின் மகன் அமைதியாகச் சொன்னான்.

    கொல்லனின் கைகளில் இன்னும் கத்தியிருந்தது. இறுக்கமாக அதைப் பிடித்து வைத்திருந்த அவனின் அகம் இன்னும் தெளிவடையவில்லை. ஒரு நொடிக்கணம் ஒரு வெண் ஒளிவட்டம் இருளினுள் இளைஞனின் தலைக்குப் பின்னே ஒளிர்வது போல மயக்கு அவனுக்குத் தோன்றியது. சட்டெனக் கண்களைக் கசக்கித் திரும்பவும் நோக்கினான். செந்தாடிக்காரனின் முகம் வெளிரிப் போயிருந்தது. அவனது கைகள் தளர்ந்து கையிலிருந்த கத்தி நழுவியது.

    "ஓரு வேளை  நான் எளிதில் புரிந்து கொள்ள முடியாத மடையனாக இருக்கலாம், பரவாயில்லை. நீ சொல்! நான் புரிந்து கொள்கிறேன். நீ யார்? உனக்கு என்ன வேண்டும்? நீ எங்கிருந்து வருகிறாய்? உன்னைச் சுற்றிக் குழுமும் இந்த மயக்கு நிலையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எதுவோ ஒன்று உன்னிடம் ஈர்க்கிறது. உன்னிடம் உருவாகித் துளிர்த்துக் கொண்டே இருக்கும் மலர்ச்சி, எல்லாத் திசைகளிலிருந்தும் உன் வழியே உருவாகும் கனிவு, நீ நடக்கும் பொழுது கூட எதுவோ ஒன்று உன்னை ஆட்கொள்கிறது, உனது சொற்கள் இந்த இருளினுள் இருந்து என் காதுகளுக்குக் கேட்டதே? சொல்! உன்னிடம் இருக்கும் ரகசியம் என்ன?"

"துன்பம், யூதாஸ், என் சகோதரா!"

    "யாருக்காக? நீ யாருக்காகத் துன்பப்படுகிறாய்? உனக்காகவா? உன்னுடைய இந்த அவல நிலைக்கும், பரிதாபகரமான வாழ்வினையும் நினைத்தா? அல்லது இஸ்ரவேலத்தின் ஜனங்களின் துரதிஷ்டத்தினை எண்ணியா? நல்லது! சொல்! இஸ்ரவேலத்திற்காகவா? அதைத்தான் நானும் உன்னிடம் சொல்ல விழைகிறேன். நீ கேட்கிறாயா? அதேதான், வேறொன்றுமில்லை!. நீ இஸ்ரவேலத்தின் இந்த இழிந்த நிலையினை எண்ணி உன்னை வருத்துகிறாயா?"

"மனிதர்களுக்காக, யூதாஸ், என் சகோதரா!"

"மனிதனா! மனிதனைப் பற்றி மறந்துவிடு, இந்த கிரேக்கர்கள், பலவருடங்களாக நம்மைப் படுகொலை செய்தனர், விட்டொளி! அவர்கள் மனிதர்கள். இதோ இந்த ரோமானியர்கள் அவர்களும் மனிதர்கள் தான், அவர்களும் நம்மை அடிமைகளாக்கி, வரலாறு நெடுகிலும் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார்கள். நம் கடவுளையும், அவரது புனித ஆலயங்களையும் மண்ணோடு மண்ணாக்குகிறார்கள். அவர்களைப் பற்றி நாம் ஏன் வருத்தப்பட வேண்டும். இங்கு இஸ்ரவேலத்தில் நீ உன் தலையை உயர்த்திப் பார்!, நீ துன்பப்படு, வாதைக்குள்ளாகு, நம் இஸ்ரவேலத்திற்காக. மற்ற அனைவரும் நரகத்திற்குப் போகட்டும்.

    "ஆனால் நான் அலைந்து திரியும் இந்த மிருகங்களுக்காகவும், சிறகடித்துப் பறக்கின்றனவே புல்லினங்களுக்காவும், வியாபித்துப் படர்ந்திருக்கும் புல்வெளிக்காகவும் வருத்தப்படுகிறேன். என் சகோதரா!"

    "ஹா...ஹா....ஹா....ஏன் எறும்புகளை மட்டும் விட்டு விட்டாய், பைத்தியக்காரா!" கேலியாக சிரித்தான்.

    "ஆம், இந்த எறும்புகளுக்காகவும் தான். எல்லாமே கடவுள் தான். நான் கீழேக் குனிந்து ஒரு எறும்பின் ஜொலிக்கும் கருமை நிறக் கண்களைக் காணும் பொழுது எனக்கு கடவுளின் முகம் தான் தெரிகிறது"

    "ஓ! அது சரிதான். அப்படியென்றால் என் முகத்தை இப்பொழுது உற்று நோக்குகிறாயே, அதில் என்ன தெரிகிறது" தச்சனின் மகனே!"

    "அதிலும் கூடத்தான், வெகு ஆழத்தினுள் என்னால் கடவுளின் முகத்தைக் காண முடிகிறது"

"நீ மரணத்தைக் கண்டு பயப்படமாட்டாயா?"

    "எதற்காக நாம் பயப்படவேண்டும், யூதாஸ், என் சகோதரனே" மரணம் என்பது மூடியக் கதவு அல்ல. அது திறந்திருக்கும் வாசல். திறந்திருக்கும் அதன் வழியே நாம்  நுழையலாம்"

"எங்கே நுழையலாம்"

"இறைவனின் அன்புகொண்ட நெஞ்சத்தினுள்"

    யூதாஸ் எரிச்சலுடன் பெருமூச்சிட்டான். "இவனை நம்மால் பிடிக்க முடியாது. அவன் திரும்பத் திரும்ப சொன்னான். ஆம்! இந்த மனிதனை நம்மால் பிடித்துவைக்க முடியாது. ஏனென்றால், இவனுக்கு மரணத்தைக் கண்டும் பயமில்லை...." தனது விரல்களால் ஜீசஸின் நாடியைப் பிடித்து கண்களுக்குள் உற்று நோக்கினான். அவனுள் எண்ணங்கள் அலைக்கழிகின்றன. ஒரு முடிவுக்கு வந்தவனாய்ப் பேசத்தொடங்கினான்.

    "நான் உன்னைக்கொல்லவில்லை எனில், நீ என்ன செய்வதாக உத்தேசம்" இறுதியில் அவனைப் பார்த்துக் கேட்டான்

    "எனக்குத் தெரியவில்லை, கடவுள் என்ன முடிவெடுக்கிறாரோ அதன் படி, அவரது விருப்பத்தின் படி ...நான் மனிதர்களிடம் சென்று பேசுவேன்"

"என்ன பேசுவாய்?"

    "அதை எப்படி நீ என்னிடம் எதிர்பபார்க்கிறாய், சகோதரா!. நான் வெறுமனே வாயைத் திறக்கிறேன். கடவுள் என் வழியே பேசட்டும்."

    இளைஞனின் தலைக்குப் பின்னே இருந்த ஒளிவட்டம் பெரிதாகியது. அதன் ஒளிர்வு கூடிக் கொண்டே இருந்தது. அவனது கவலை தோய்ந்த முகத்தில், ஒரு விவரிக்க முடியாத ஜொலிப்பு பொலிகிறது.  நீண்ட, மின்னும் கண்களைப் பார்த்துக் கொண்டிருந்த யூதாஸ் வார்த்தைகளின்றித் தத்தளித்தான். தாங்கவொண்ணாத ஒன்றினால் தான் ஆட்கொள்ளப்பட்டதைப் போல, அதிலிருந்து விடுபடமுடியாமல் அவன் தனக்குள்ளேயே அரற்றினான். அது அவனுக்கு மகிழ்ச்சியாகவும், எரிச்சலாகவும் இருந்தது. செந்தாடிக் காரன் தன் நடுங்கிக் கொண்டிருக்கும் விழிகளைக் கீழே தாழ்த்தினான். நான் உன்னைக் கொல்லப் போவதில்லை. அவனது பேச்சு ஒருவேளை இஸ்ரவேலத்தின் மக்களைத் துயிலிலிருந்து எழுப்பும்,  ரோமர்களைத் விரட்டுவதற்கானசொற்களின் பெருக்கு அவனுள் கடவுளின் கிருபையால் ஊறட்டும் என்று யூதாஸ் நினைத்துக் கொண்டான்.

    "இன்னும் எதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறாய், என் அன்பு நண்பா?" இளைஞன் கேட்டான். "ஒரு வேளை, இறைவன் என்னைக் கொல்வதற்காக உன்னை அனுப்பவில்லையோ?, ஒருவேளை அவனுடைய விருப்பம் வேறாகவும் இருக்கலாம். அது என்னவென்று நமக்குத் தெரியவில்லை. நீ என் கண்களின் ஊடே அந்தத் தெய்வீக விளைவு என்னவென்றே அறியத்துடிக்கிறாய். நான் சாவதைப் போலவே வாழ்வதற்கும் தயாராக இருக்கிறேன், நீயே முடிவெடு"

    "அவசரப்படாதே! சற்றுக் கண்டிப்பாகப் பதில் கூறினான் யூதாஸ். "இந்த இரவு மிகவும் நீண்டது. நமக்கின்னும் நேரம் இருக்கிறது"

    சிறிது நேர இடைவெளிக்குப் பின், அவன் பித்துப்பிடித்தவனைப் போலக் கத்தத் தொடங்கினான். " ஒரு மனிதன் தன்னை உண்மைத்தன்மையுடன் காட்ட முடியாமல் உன்னை நேருக்கு நேர் சந்தித்து உரையாட முடியாது. நான் உன்னிடம் ஒன்று கேட்டால் நீ அதற்கு வேறு ஒரு பதில் சொல்கிறாய். ஆனால் உன்னை என்னால் மறுதலிக்க முடியவில்லை. என் உள்ளமும், மூளையும் உன்னைக் காண்பதற்கு, நீ சொல்வதைக் கேட்பதற்கு முன்பு வரை அத்தனை உறுதிப்பாட்டுடன் இருந்தது. ஆனால் இப்போது, என்னைத் தனியாக விடு!. உன் முகத்தை எனக்குக் காட்டாதே! போய்த் தூங்கு! நான் தனியாக இதைப் பற்றி சிந்திக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த நிகழ்வுகளை உட்கிரகித்துக் கொண்டு நான் இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி திடமாக முடிவெடுக்க முடியும்.

    சொல்லி முடித்தவன், திரும்பச் சுவரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். ஆனால் அவனது முணுமுணுப்புகள் இன்னும் அடங்கவில்லை.

மேரியின் மகன் அவனது பாயில் படுத்துக்கொண்டான். அவன் தனது கைகளை அமைதியாகக் குறுக்கே கட்டிக் கொண்டு அறையின் மோட்டு வளைவைப் பார்த்தான்.

    எதனைக் கடவுள் நினைத்திருக்கிறோ, அதனை அவர் நடத்திக் காட்டுவார் என்று தனக்குள் சொல்லிக் கொண்டு கண்களை நிதானமாக, முழு நம்பிக்கையுடன் மூடினான்.

    ஒரு ஆந்தையின் அலறல் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது. அமைதியாகவிட்ட வெளியில் அது அந்த நாளின் இரை தேடும் படலத்தைத் தொடங்கியிருந்தது. கடவுளின் கோபத்திலிருந்து ஒரு வழியாய் நாங்கள் தப்பித்து விட்டோம் என்பது போல அது அலறியது. வானத்து விண்மீன்களின் ஒளி ஒரு மாதிரியானச் சாம்பல் நிறத்தில் அறையினுள் ஒளிர்ந்தது. கண்களைத் திறந்த மேரியின் மகன் அந்த வெளிச்சத்தைப் பார்த்து மற்றொரு முறைத் தனக்குள் சொல்லிக் கொண்டான், "கடவுளின் விருப்பம்". ஒளி ஓரிடத்திலிருந்து நகர்ந்து நகர்ந்து சென்று கொண்டிருந்தது. நேரமும்.

    யூதாஸ் சுவரைப்பார்த்து சம்மணமிட்டு அமர்ந்திருந்தான். இரண்டு மூன்று முறை கதவைத் திறந்து வெளியே சென்றவனின் முணுமுணுப்புகள் இன்னும் அடங்கவில்லை. அவனது சீறும் மூச்சொலிகள் கேட்டுக் கொண்டே இருந்தது. மேரியின் மகன் அரைக்கண்கள் விழித்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான். "எது கடவுளின் விருப்பமோ, அதுவே நடக்கும், என்று நினைத்து ஜீசஸ் காத்துக் கொண்டிருந்தான். நேரம் கடந்து கொண்டிருந்தது.

    அருகில் இருந்த கூடத்தில் கட்டிப் போட்டிருந்த ஒட்டகத்தின் கனைப்பொலி. அது எதையோக் கண்டு பயந்தது போல விளித்தது. கனவில் ஓநாயையோ, சிங்கத்தையையோக் கண்டிருக்கும். வானத்தின் ஜொலிப்பு நேரம் ஆக ஆகக் கூடிக் கொண்டே இருந்தது. மேகங்களற்ற வானம், நட்சத்திரங்களால் நிரம்பி வழிந்தது.

    திடீரென கோழிக் கூவும் சப்தம் கேட்டது. ஆழ்ந்த இருளினைத் துளைத்து அதன் கூவல் யூதாசின் காதுகளுக்குக் கேட்டது. உடனே எழுந்தவன் கதவைத் திறந்து தன், திடமானக் கால்களை ஊன்றி, நடைபாதை வழியாக, சரளைக் கற்களை  மிதித்து வெளியை நோக்கி சென்றான். 

    அதன்பிறகு, மேரியின் மகன் அவனை சதா துரத்திக் கொண்டு பின்தொடர்ந்து வரும் தனது உண்மையுள்ள சகபயணியைக் கண்டு கொண்டான். அவள் அவனுக்கு எதிரே இருள் மூலையில், நிமிர்ந்து விழிப்புடன் உற்று நோக்கி அவனைப் பார்த்தாள். 

"மன்னித்து விடு! என் சகோதரியே!" அவன் அவளைப் பார்த்துச் சொன்னான். இன்னும் நேரம் கை கூடவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக