செவ்வாய், 10 ஜூலை, 2018

தனித்திரு விழித்திரு பசித்திரு 2

உனக்கு தகுதியிருப்பின் நீ கடவுளை உருவாக்கியிருக்க மாடடாய். மாறாய் கடவுள்கள் வழி வந்த பாதையினைப் பற்றி புத்தகம் எழுதியிருப்பாய். அப்பொழுது கணவாய்கள் எழுப்பப்பட்டுக் கொண்டிருந்தன. நீலம் படிந்த கடவுள்கள் அனைத்து இணைப்புகளின் வழியாகவும் ஒரு வழியாய் வந்து சேர்ந்த பொழுது நாகங்களின் முடடைத் தோடுகளைக் கொண்டு கதைகளை உருவாக்கினர். அக்கதைகளில் இந்த வெள்ளை நிற உருண்டைகளிலிருந்து காமம் உருவாகியது என்றனர். ஆம் அனைத்து ஜீவ ராசிகளும் உருவாகிய வாய் அது. முதன் முதல் தோன்றிய ஆதி விதை.

உயிர்கள் தோன்றும் முன்னேயே பாதாளம் இருந்தது. பாம்புகளும் இருந்தன. அவை மண்ணின் வேர் முடிச்சுகளாய் துளிர்த்தன. பின் விழுதுகளாய் தாங்கின. புற்களாய் பாசிகளாய் கிழங்குகளாய் புழுக்களாய் மீன்களாய் பாம்புகளாய் இன்னும் இன்னும் என வழி எங்கும் படர்ந்து பொங்கிப் பெருகித் துளிர்த்தன. அப்பொழுது தான் நான் கேட்டேன். பாம்புகளுமா? ஆம் அவைகளும் தான். அனைத்தும் உருவாகின முடடையில் இருந்து. முடடைக்கு முன் என்ன என்று எண்ணிய படிக் கடவுளர்கள் திகைத்தனர். பூமி ஒரு மாபெரும் முடடை. பால் வெளியெங்கும் நெளிந்து ஊறுகின்றன பல்லாயிரம் நாகங்கள். கரிய வெளியில் நிரம்ப நிரம்ப அடை காக்கப்படுகின்றன. அதனால் உருமாறிக் கொண்டே இருக்கின்றன. சொற்கள் மெல்ல அசை போடும் தாவர உண்ணி போல ஓரிடத்திலேயே சுழன்று கொண்டிருந்தது.

மழையும் வெயிலும் தனக்குத் தானே உருவாக்கிக் கொண்ட ஒரு ஏற்பாடு. இருள் பகல் என உருண்டோடிக்கொண்டே இருக்கும் பொழுது, ஆம் ஏன் இவைகள் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. தன்னைத் தானாகவும் பிரபஞ்சம் முழுமைக்குமாய். பாம்புகள் ஓரிடத்தில் நிரந்தரமாய் தங்கி விடுவதில்லை. கடல் அலைகள் போலத் தான் அதன் இருப்பும். இருப்பு கொள்ளாத இருப்பு. தாய் மிருகத்தின் அடிவயிற்றைப் போல அமர்த்திய சூடுள்ள இடத்தில் தான் அவைகள் தங்கியிருக்கின்றன. அண்டம் முழுமையும் குளிர் மட்டுமே உறைவதில்லை. ஆனால் பாம்புகள் திசையற்றவை. நெளிந்தூறும் அனைத்தும் திசையற்று வியாபிக்கின்றன. திசைகளில்லாதவைகள் காலமும் அற்றதாய் ஆகி விடுகிறது. நிதானமாய் நோக்குகையில் அவ்வாறில்லை. காலம் உண்டு. ஆனால் அளவீடுகள் அற்றதாய் ஆகி விடும் போல. என் கனவுகளின் சொற் கூட்டில் கட்டு வீரியன்கள் மொலுமொலுக்கின்றன. இப்பொழுது அதே சொற்கள் ஊண் உண்ணியைப் போல மெல்ல உற்று நோக்குகின்றன.

எண்ண எண்ணத் தொலைந்து கொண்டிருந்தது சொற்களின் கால் பட்ட சுவடுகள். தவிப்புடன் அமர்ந்திருக்கிறேன். நாகர்களின் குளம் சவலைப் பிள்ளையைப் போலக் கிடந்தது. அடி மண்டிய தொழியில் எஞ்சிக் கிடந்தன எலும்புத் துண்டங்கள். பிணக்குளத்தில் மிஞ்சிய எலும்புத் துண்டங்களும் உறிந்த தோல்களுமாய். பாசியற்ற நீலக்குளம் போலவே நல்ல பாம்பின் கதைகளும் உள்ளீடற்றதாய் உருமாறிக் கொண்டே இருந்தது.

ரமேஷ் பிரேதனின் நல்லபாம்பு: நீல அணங்கின் கதை பற்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக