செவ்வாய், 17 ஜூலை, 2018

அருகருகே

அருகருகே முளைக்கின்றன
கொலை வேல் நுனிகள்
துவர்க்கும்
அடித்தொண்டை செருமல் போல
ஒவ்வொரு முறை நினைவுகளை பொதி மூடுகிறேன்
அந்து சிந்தும் பாலித்தீன் திரவமாய்
என் விந்துத் துளி
சொட்டிய நொடியிலிருந்து
இந்த பச்சைக் காடுகளினுள் வடிந்தோடுகிறது.
பனி பொங்கிய அந்திச் சூரியனிடமிருந்து
நழுவி நழுவி
ஆழம் நுழையும்
பேரருவியின் சின்னஞ் சிறிய கையிருப்பில்
திருவிழாக் கடைகளில் தொங்க விடப்படும்
பல நிறக் குழந்தை பொம்மைகளின்
விழிகளைப் பார்த்தேன்
அருகருகே நொதிக்கின்றன
உன்னுடையதாய்
நான் உருவாக்கிக் கொண்ட
பாவனைகளின் கனத்த தோல்பை
அதனால்
வெறுமனே உறங்கிப் போகிறேன்
இரவின்
சோர்ந்து போன க்ளிசேக்களைக்
கூட்டிக் கொண்டே இருக்கும்
தொலை தூர வாகன இரைச்சலிலிருந்து
அலைக்கழிந்து
ஈரமாகிக் கொண்டே இருந்தது
சலனமற்ற நதி
அருகருகே இருக்கின்றன
நீயும் நானும்
ஜன்னலுக்கு அப்பால்
வெறித்து நிற்கும்
மதில் சுவர் போல...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக