செவ்வாய், 10 ஜூலை, 2018

தனித்திரு விழித்திரு பசித்திரு 3

பெண்களின் பிறப்புறுப்புகளில் ஒளிந்திருக்கின்றன நாகங்கள். முட்டைகளை காலா காலத்திற்கும் அடை காத்துக் கொண்டிருக்கும் அவை. ஆனால் நான் காண்பதோ வேறாய் இருந்தது. உயிருள்ள பாம்புகள் அவர்களை நித்தியமாய் புணர்ந்து கொண்டே இருக்கின்றனவாம். அதற்காகவே அவர்கள் நாகங்களை முழுமையாய் படம் விரிய தங்கள் மார்புகளில் பச்சைகுத்திக் கொள்கிறார்கள். படம் விரித்த அதன் நீலக் கண்கள் இரு காம்புகள் வழி மிளிரிக் கொண்டிருக்கிறது. நடுமார்பில் வழிந்தோடும் விடம் ஒழுகி பிளந்து போனது இரும்பை லிங்கத்தின் மண்டை. மண்டை ஓடு தெறித்த அகால ரூபன் சிவன். நாகங்களில் ஆதி நாகம். ஆம் அழித்தலிலிருந்தே தொடங்குகின்றன பாதாளத் திண்டுகள்.

காமம் விடைத்த பிளந்த குறி. நல்ல பாம்பு உறங்கும் அடிப் பொந்து. சோழனின் புடைத்த லிங்கதினடியிலும் அணங்குகிறது பற்கள் விழுந்த பழைய நாகம். தோலுறிந்த நிலையில் வவ்வால்கள் மொய்க்கக் கண்டேன். நாகங்கள் தங்கள் காலத்தினுள் இறப்பதில்லை. அவைகள் பூஜிக்கப்படும் தோறும் பிறந்து கொண்டே இருக்கின்றனவே தவிர இறப்பதில்லை. புற்றுக்கள் வளர்ந்த இருள் முக்கில் சொற்கள் தனக்குள் உசாவிக் கொண்டே வரலாற்றைப் பிதுக்கிக் கொண்டிருக்கிறது. நேற்றைய கனவின் மொழியில் படிந்த விந்துத் துளியின் காய்ந்த படிமத்தைத் தேடி அலைக்கழிகிறது காமம் எனும் நல்ல பாம்பு.

அணங்குகள் உண்மையில் பாம்புகள் தானா. உன்னைப் பீடிக்க பீடிக்க உனக்குள் கிளம்புமே ஒரு வெறிக் கவர்ச்சி. அது பாம்பைத் தவிர எதில் கண்டாய். பெண் பாம்பல்லாது வேறேன்ன. குருதி சொட்டக் காத்திருக்கிறது கரு முட்டைகள். பலிகளின் அடியினுள் புதைந்து கிடக்கிறது எதிர்காலம். ஏன் இப்பொழுது காலத்தை இழுக்கிறாய். இல்லை. பலிகளுக்கடியில் காத்திருக்கின்றன வன்மத்தின் தீர்க்கமான கூர் நுனி. அவன் முதுகில் வரையப்பட்ட பாம்பின் வால் குதத்தின் வழி வெளி நெளிகிறது. கனவுகளின் சிதல் புற்றிலிருந்து நெடிதுயர்கிறது மொழி. காலமும் கரு நாகமாய் உருமாறிச் சீறுகிறது. அட்டை போலத் தான் கனவுகளும்.

குருதி ருசி ரெட்டை நாக்கிலிருந்து வழிந்தோடுகிறது. கருவறைக்குள் வீற்றிருக்கிறது ஆவுடை. நல்லபாம்புகள் காலத்தைப் புணர்ந்து கருவுறுகின்றன அணங்குகளை.

ரமேஷ் பிரேதனின் நல்லபாம்பு: நீல அணங்கின் கதை பற்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக