செவ்வாய், 10 ஜூலை, 2018

தனித்திரு விழித்திரு பசித்திரு 1


முலையை  தெய்வமாய் வணங்கும் கோவில் கண்டேன்.  அங்கு என் கனவினுள் இருக்கும் சொற்களின் கூட்டு உருவாக்கிய கோபுர நுனிகளில் இருந்து குமிழ்ந்து பெய்கிறது பால் மழை. கழுத்தில் கால்களில் இடையில் தோள்களில் மார்பில் முலைகளில் குறுக்கில் நெளிந்து கொண்டிருக்கின்றன நாகங்கள். கடவுளர்கள் நாகங்களின்றி வெளிர்ந்து போய்விடுகின்றனர். ஆம் காலம் அறியும். அதுவே அழிக்கும். அரவுகளின் உலகம் பாதாளம். நாகங்களிலானது புடவி. பயமும்  கவரச்சியும் ஒரு சேர என் இடைக் கீழ் துயிலும் கரு நாகக் கண்களைக் காண்கிறேன். முலைக்கண்களின் நடுவே இருந்து விடம் ஊருகிறது.

மார் பியத்தெறிந்த நொடி மதுரை எரிந்தது. விடைத்த குறியை பிய்த்து எறிந்ததும் அவை நாகங்களாய் உருமாறின.விண்ணை நோக்கி படம் விரித்து ஆடின. விஷ நாக்குகளால் அனல் கக்கி எரித்தன. மதுரை அழிந்தது. கண்ணகன் பெரும் லிங்க ரூபனாய் ஆவாகனம் செய்யப்படடான் நகர் நடுவில். அவன் கழுத்தை சுற்றிப் படர்ந்தன நாகங்கள். தெய்வங்கள் உருவாகின்ற பொழுதெல்லாம் நாகங்கள் காத்திருக்கின்றன. அவைகளும் கடவுளாக்கப்படும் பொழுது மகுடி வாசிக்கத் தொடங்குகிறது. பின் வரும் வரலாற்றில் பெண்களும் பாம்புகளும் ஒன்றுதான் என்றும். அவைகளின் விஷப்பற்களுக்கு பதில் முலைகள் படைக்கப்படடன என்றும் சொல்லிக் கலைந்தன என் கனவின் மொழி.

தவறி விழுந்து கொண்டிருக்கிறேன் வெகு ஆழத்தில். பெண்களின் ஓரினச்சேர்க்கையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இது இது. இரு வேறு உடல்களின் புழைகள் அதக்க அதக்க பீறிடும் முணங்கல். சீறிச்செல்லும் வெம்மை. தாயாகவும் மகளாகவும் ஒரு சேர முளைக்கின்றன கதைகள். பின் அவளைக் காணும் போதெல்லாம் அறிகிறேன். மஞ்சள் கயிறுகளால் இறுக்கப்பட்ட நாகச் சிற்பங்களை. நாக ராஜா கோவிலின் மூலச்சிலை இருக்கும் குடிசைக்கு புறத்தே இருக்கிறது அந்த கரு நீலக் குளம். நடுவே பீடத்தில் ஐந்து தலையும் ஒருடலுமாய் அவள். ஒவ்வொர் தலையிலும் ஒவ்வோர் பாவம். ரெட்டை நாக்குகள் சூழச் சுற்றிலும் பரவுகிறது நீலம். பின்னொரு நாளில் கதைகளுக்கு மத்தியில் சுருண்டு கிடந்த நல்லபாம்பு கணக்கின்றி முட்டைகள் இடத் தொடங்கியது.

ரமேஷ் பிரேதனின் நல்லபாம்பு: நீல அணங்கின் கதை பற்றி.
https://rameshpredan.blogspot.com/2018/01/nallabambutale-of-blue-goddess-novel.html?m=1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக