வியாழன், 11 ஜனவரி, 2018

ஜிப்கள்

ஜிப் ரிப்பேர் ஆன பைகளை
நாம் என்ன செய்து விட முடியும்.
என் முதுகுக்குப் பின்னால்
குடல் தள்ளிய
தன் நிர்வாணத்தைக் காட்டிச்
செல்லும் வீதியில்
எல்லோரது கண்களும்
பட்டும் படாமல் தழுவி நகர்கின்றன.
உள்ளறைகளின் ரகசியக்கதவுகள்
தடாலென திறந்து கொள்வதால்,
யாரும் நம்ப முயலவில்லை.
அது ஒரு அம்மணப் பிளவு என்று
அத்தனை அருவருப்பை முகத்தில்காட்டினாலும்,
அனிச்சையாய் அவர்களும்
தத்தமது பைகளைத்
திரும்பிப்பார்த்து
நிம்மதி  கொள்ளத் தவரவில்லை.
சிலர் தன் கால்சிராய் ஜிப்பையும் அழுத்தி
இழுத்துத் தடவிக்கொண்டனர்.
ஜிப்கள் இல்லாத உலகம் இருப்பின்,
அது எப்படி இருக்கும்.
ஜிப்கள் ரிப்பேர் ஆன பைகளை
யாரும் தன்னுடன் வைத்துக் கொள்வதில்லை போலும்.
ரிப்பேர்  செய்த பின்
அதை இழுத்துப் பார்த்து
எல்லாவற்றையும் சரி செய்து விடலாம் என்பது
நமக்கு நாமே
சொல்லிக் கொள்ளும்
ஒரு சாக்கு.

நான் கடவுள்

பிரார்த்தனைகள்
ஆவி பறக்க எடுத்து வைக்கப்பட்டன.
சட்னியிலும் சாம்பாரிலும் மிதக்கும்
அதன் மிருதுவைப் பிய்த்து விழுங்குகிறேன்
தொண்டைக்குழியில்
மெதுமெதுவாக இறங்கும்
அதன்
ஸ்தோத்திரத் துதிகளின் கார நெடி.
கறிவேப்பிலைகளை
சுயாதீனமாக ஒதுக்கிக் கொள்ள,
தேங்காய் நார்
பல்லிடுக்கிலேயே தங்கிக் கொள்கிறது.
வழித்து முடித்ததும்,
பிரார்த்தனைகள் இல்லாத வெற்றுத்தட்டில்,
நான் அழுத்தி ஒத்தி எடுத்த கைத்தடம்,
ஒரு சிறிய பிரபஞ்ச உருவாய்ச்
சிதறுண்டிருந்தது.
மிளகாய் வத்தல்கள்
அந்த வெளியின் வளையங்களாய்
பல்லிக் கண்களுடன்
உற்று நோக்கியது.
தட்டைக் கழுவாமலேயே வைத்து விட்டேன்.
எங்கிருந்தோ வந்த
கரப்பான்களும், எறும்புகளும்
மீளுருவாக்க முயற்சி செய்து கொண்டிருந்தன.
நான் பல்லிடுக்கில் உள்ள நாரை
என் முழு வலிமையும் கொண்டு
வெளித்தென்ன முயற்சித்தேன்.

வாகனங்கள்

கூண்டுகள்
நகர்ந்து கொண்டே இருக்கின்றன.
இங்கிருந்து அங்கும்
அங்கிருந்து இங்கும்
தனித்தனியானவைகளாய்.
எந்தத் தகவல் பரிமாற்றாங்களுமின்றி
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதையில்
இருப்பின் சகிதம்
பெரிதாகவும்
சிறிதாகவும்
மிகச்சிறிதாகவும்.
கண்களின்றி பார்வை உணரும்
சிலக் கூண்டுகளை
பிரத்யேகமாய் ஒதுக்கி
கண்டந்துண்டமாக்கிக் கொண்டிருக்கும் பொழுது
அதன் உறுப்புகள்
அதுவரை ஏங்கிக் கிடந்த
காற்றில்லாத, நகர்வில்லாத,
நிலைத்தன்மையினால்
அவிழ்ந்து கிடக்கின்றன.
எந்த பயனுமில்லாத கடந்தகாலம்
உண்மையில்
ஓரு காலமற்ற வெளிதானே!
நாம் இஷ்டம் போல புனைந்து தள்ள.


ஒரு கனவு


தொண்டைக்குழியில் மூர்ச்சையாகி
விக்கித்தது
அவளது நிழல்.
வாசலைத்தாண்டி
கொடித்துணியைப் போல
அச்சமயம் ஒலிந்து கொண்டிருந்த்தாள்.
மெருகோடிய
அவள் வருகையின்
நிமித்தப் பிச்சி மணம்.
சரசரத்து ஊடுருவும்
புகைப்பட முகத்தரிசனம்.
கட்டிலைச் சுற்றி மழை நீர் சளசளப்பு
அருகிலும்
மிகத்தூரத்திலுமாய்
ரயில்த் திடுக்கிடல்.
காலம் கோலிக் குண்டுகளாய்
உருள உருள
தடாகத்தின் அலையடிப்பில்
முங்கி முங்கி
தன் பாதரசக் கரங்களினால்
இருள் சுட்டி
விண் மீன் அழைக்கிறாள்.
நான் அவள் கரங்களுக்கிடையில்
ஒரே சமயம்

மதலையாகவும், இளைஞனாகவும்.

கண் காணிப்பு

கட்டங்களுக்குள் அகப்பட்டிருக்கிறேன்.
அதனுள்
பல்லாயிரம் விழிகளும் செவிகளும்
இடைவிடாது உற்று நோக்குகின்றன.
வானம் தெரிவதற்கான அறிகுறி ஒன்றுமில்லை.
கழிவறைக்குள் நுழைகையில்,
அந்தக் குமிழ், நீள் மற்றும் கரங்குக் கண்கள்
முறையே முன்னும் பின்னும் பிரதியெடுத்து
சேமிக்கும் பணியில் ஓயாது உருளுகின்றன.
என் நிர்வாணங்கள்
அதன் பதிவேடுகளில் சரிவர அடுக்கி பாதுகாக்கப்படுகின்றன
மனிதனாக்கப்பட்டதற்காக
இயந்திரங்கள்
தண்டனைகளைப் பட்டியலிட்டுக் கொண்டிருக்கும் பொழுது,
நான் வானத்தைப் பார்த்துவிடும் எத்தனத்தில்
என் தலைக்கு மேல் உருட்டும் கண்களைப்
பிரதியெடுத்து            
நிர்வாணப்படுத்தத் தொடங்கினேன்.
கட்டங்கள் ஒன்றும் அவ்வளவு சிக்கலானவில்லைதான்
இப்பொழுது.