திங்கள், 5 மார்ச், 2018

உன் தீரா வஞ்சினம்

இன்னும் நகர இடமில்லை.
பொழுதுகள் வழியே
நான் உருவாக்கும் உன் நினைவுகள்
இந்தப் பெருக்கில் தக்கையாய் புரள்கிறது.
சன்னதமெடுத்த உன் உதடுகளின் வழி,
வழி வழியே
துளிர்த்துக் கொள்கிறேன்
ஒரு மாபெரும் ஆகாசத்திடலை.
சிவக்கும் அதி சூரியனின்
தேகக்குமிழ்கள்
உன்னிடம் அரும்பி அரும்பி மொட்டவிழ்க்கிறதா.
முகப்பருக்களிலாலான மலைக்குன்றங்கள்
ராட்சசக் கனல் சொரிகின்றனவே.
கலங்கல் குளமாய்,
திரும்பத் திரும்ப கரைகளில் 
சுழன்று திரிகிறேன்.
பாதத்தடங்களினால் அவிழ்த்தெடுத்த
உன் உடலின் வெம்மணம்.
இங்கு காடவியப் பற்றி எரியும் செம்மை.
உன்னிடம்
உன் வழியே
உன்னைக் கொண்டு
உன்னை ஏற்றி
உன்னைப் பற்றி
உன் வசம்
உன் உன் உன் உன் 
தலை கீழ் சுழன்றாடும் ராட்சச இறக்கைகள்
என் முதுகினில் செதில் புற்றுகள்
என் கால்களில் பசை நீர்மங்கள்
எனக்கு வால் முளைக்கிறது.
கொம்புகள் குத்தி நிற்கிறேன்.
பலித்தூபங்களின் சாம்பல் குரல். 
காம்புகள் உலர்ந்தன.
இன்னும் இடமில்லை தேவி.
என்னிடம் எஞ்சியிருக்கிறது ஒன்று.
இந்த வாசலின் அந்தத்தில்
நான் ஆண்
நீ பெண் என்றாய்
நான் நான் நீ நீ.
கானல் நதியின் கரைகளை உடைக்க நீ யாரடி.
சின்ன சின்ன கூழாங்கற்களினால் நான் பொதிந்த என் சாபங்களுள் நெளிந்து உருளும் நீ யார்.
என் ஊறும் கடல் பெருக்கில் ஒற்றைக்கால்த் தடம், உன் தீரா வஞ்சினம் நான் தானா.
ஒரு ஆண் தானா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக