ஞாயிறு, 18 மார்ச், 2018

பறவைகள் விட்டுச் சென்ற வானம்

பறவைகளற்ற பிரதேசத்தில்
கிளைகளை மரங்கள் உதிர்த்துக் கொண்டிருக்கின்றன.
பல்லாயிரம் காத தூரம் ஓடிக் கொண்டிருந்த
நதித்தடம் கொண்டு
கடலை அடைந்தேன்.
உப்பு மலைகள் வானம் வரை நீண்டு கிடந்தது.
பறவைகளின் எச்சங்களும் சாம்பல்களும் கொண்டு உருவாக்கிய
கடவுளர் பீடங்களில் அவிசாக்கப்பட்டுக் கொண்டிருந்தன,
உதிர்ந்த கிளைகளும்
ஒடிந்த சிறகுகளின் மிச்சங்களும்.
கவி மிக அவசரமாக பறவைகளை மொழியாக்கியிருந்தான்.
அவனது கதைப் பாடலில்
பல கோடி சிறகுகளால் ஆன தெய்வம்
ஆவாகனம் செய்யப்பட்டது.
தொடர்ச்சியாக மனிதர்கள் தங்கள் குறுக்கெலும்புகளை உடைத்து உடைத்து காணிக்கை செலுத்தினர்.
பறவைகளற்ற பிரதேசத்தில்
வானம் ஒரு பொட்டல் வெளியாகியிருந்தது.
பிறையும் சூரியனும் என்றோ மறைந்து விட்டன.
பகலும் இரவுமில்லா
இந்த கைவிடப்பட்ட நிலத்தில்
மனிதர்களும் மரங்களும்
சில கவிகளும் கதைகளும்
கதைகளுள் பறவைகளும் மட்டும் உயிர் வாழ்ந்தனர்.
அங்கு பறவைகள் விட்டுச் சென்ற வானமும் எங்காவது  இருந்திருக்கக் கூடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக