வெள்ளி, 9 மார்ச், 2018

சமனில்லாதது

சமனில்லாத கோபுரத்தின் உச்சி நுனி,
இந்த எரி நட்சத்திரம் பிறந்தது முதலே நான் அறிவேன்.
உறக்கத்தின் வேர்களில் தீயிடும் பொழுது
இதன் மகரந்தங்கள் பீய்ச்சப்பட்டன.
காலாதீதமான கலன் இதற்காக காத்திருந்தது.
அது பதற்றத்துடன்
தன் பழுத்த இலைகளை உதிர்த்த நேரம்
சிறகடிப்புகள் மடிந்த இந்நகர வீதிகளில்,
முடுக்குகளில்,
அழையா விருந்தாளிகளாக
வந்தமரும் வான நிழல்களை
நினைவு கூர்கிறேன்.
வண்டல் நதிக் கரைத்திப்பிகளில்
தேயாது அலைகிறது
பழுத்த முழுநிலவு.
அந்தரங்க முடிக்கற்றைகள் போல
தாபம் தீண்டும் இரவின் மணம்.
கோர்க்க இயலாத கண்ணிகளால் ஆன ஒளி.
சமனில்லாதது ஊன்
சமனில்லாதது அதன் உண்மை
சமனில்லாதது இந்த வானம்
சத்தங்களால் அளவிடப்படும் இதன் உயரங்கள்
இதன் மூடிய பிரதேசங்களுக்குள்
நான் அறிகிறேன்,
அணையாத அந்த எரியை
ஒரு சமனற்ற மலைமுகட்டிற்கிடையில் வந்தமரும்
மேகத்தைப் போல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக