வியாழன், 15 மார்ச், 2018

தஸ்தாயெவ்ஸ்கியும் தல்ஸ்தோயும்

கிழவனுக்குள்ளும் இளைஞனுக்குள்ளும் திரும்பத் திரும்ப வீழ்கிறேன். ஆனால் சூதாடும் மனது இளைஞனைப் பற்றிக் கொள்ள பலப்பிரயோகம் செய்கிறது. என்னுடைய கீழ்மை படிந்த சொந்த அகத்துக்குள்ளேயே அடி மண்டிக் கிடப்பது பாதுகாப்பாய் இருப்பதாய் தோன்றுகிறது. விட்டத்தின் சிலந்தி வலைகளின் நடு மையத்தில் பொதியப்பட்டிருக்கும் இரையாகவும், கொடுக்குகள் இழுபட விழுங்கக் காத்திருக்கும் சிலந்தியாகவும் ஒரே சமயத்தில் உருமாறும் விந்தையினுள் அமிழ்ந்திருப்பதிலேயே காலம் கழித்து விடலாம் என்று நம்பிக்கை கொள்கிறேன். அழுக்கு படிந்த என் கட்டில் துணிகளுக்கிடையில், அதன் உவர் நாற்றத்தின் வாதையினுள் முகம் புதைந்து வீழ்ச்சியுற்றவனாய், பாவம் படிந்தவனாய், தனியனாய், வெறுப்புமிழ்பவனாய், கூச்சம் மிகுந்தவனாய், அன்னியனாய் ஆனால் உலகையே அணைத்துக் கொண்டு, சுண்டு விரல் பற்றி வழி செல்ல விளையும் சின்னஞ்சிறு உயிரைப் போலவும் கட்டின்றி புனைந்து கொண்டே இருக்கிறது.  ஆனால் தனிமையின் பாதைகளுள் நான் இருளைக் கொண்டு ஒளியைத் தேடிக் கொண்டிருந்தேன். நான் பல்லாயிரம் நாக்குகளுடன் அங்கு வாதிட்டுக் கொண்டிருந்தேன். சபலங்கள் தீண்டிய, நீலம் கன்றிய இருள் அறைகளுள் எனது பிரத்யேகமான மொழியால் அனுதாபப் பட்டுக்கொள்ள, மூர்க்கமாய் முட்டிக் குருதி வடிய பிளந்து செல்ல, மண்டியிட, அணைந்து கொள்ள, காறி உமிழ, இன்னொரு மனிதனை நான் அங்குத் தேடியும், பின் உருவகித்தும் கொண்டேன். கீழ்மைகளினுள் உழல்வது ஒன்றே மனிதனுக்கு சாத்தியப்படுவது என்பதை நான் அந்த வெளிச்சத்தின் மிணுங்கலில் திரும்பத் திரும்ப உணர்ந்து கொண்டேன். ஆனால் ஒரு கனவுலக வாசியாக என்னைப் புனையும் தோறும் நான் மகத்தான ஒன்றின் உஷ்ணத்தால் உருகி வழியப்பட்டேன். எண்ணிலடங்கா திரைச்சீலைகளின் உள் எந்த மாற்றமுமின்றி அந்த ஒளி அசைவின்மையத் தரித்துக் கொண்டு தனக்குள் தானே ஒளிந்து கிடக்கிறது. அதை மானுடம் மொத்ததுக்குமாய்த் தூண்டி விட நான் சூதாடுகிறேன். இன்றைக்கும் என்றைக்குமாய் அந்த வீழ்ச்சியில் என் சிறகுகளை அவிசாக்கி, அதனுள் செல்ல விளைவேன்.
ஆனால் நான் நன்மை தீமைகளை உருவாக்கிக் கொள்ளும் தோறும் அதன் முகமூடிகள் கழன்று திருகி நிற்கிறது. உள்ளும் புறமும் தீமைகளை மட்டுமே ஏந்திச் செல்லும் சிலுவையினுள் மானுடத்தின் ஆன்மா அடகு வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த சாம்பல் படிந்த பிரேதத்தின் அலைக்கழிப்பைத்தான் எவ்வளவு ஆதுரமாய் நாம் விரும்பினோம். நம் பாவங்களின் பொதிகளை அவன் நுகத் தடியில் கொளுத்தி விடத்தான் எத்தனை ஆயத்தம் கொண்டோம். ஒரு வாட்சுக்காக உயிர் நண்பனைக் கத்தியால் குத்திக் கிழிக்கும் மூர்க்கம் விளங்குகிறது. ஒரு சிலுவைக்காக மானுடம் முழுமையும் அழிக்கும் தழல் நம்மில் ஊட்டப்படும் போதும், வெறுமனே முத்தமிட மட்டுமே லாயக்கான அந்த மனித குமாரனை நான் அவன் வழிக் காண்கிறேன். வெற்றுடலுடன் அவனது இரண்டாவது வருகையின் பொழுதும் அவன் சிலுவையில் அறையப்படுவான் என்பதை நான் இன்று முழுமையாக நம்புகிறேன். இன்னும் எத்தனை முறை வந்தாலும். நிச்சயம் அவனது ஒரு பெருங்கதையாடல் அல்ல. ஆனால் அழுக்கு படிந்த பீட்டர்ஸ்பர்க்கின் தெருக்களில் அவன் கட்டவிழ்த்திருப்பது உலகம் முழுமைக்குமான இருளின் நாக்குகளை.
ஒரு லௌசீகத்தனம் அவனிடம் தென்பட்டதா? திரும்பத் திரும்ப அவன் குற்றத்தின் பால் சென்று கொண்டிருந்தது ஏன்? தன் பெண்டாட்டி ஓடிப்போவதை ஊரெல்லாம் பரப்பி அழும் அவன், பின் எல்லா பெண்களிடமும் ஈர்ப்பான விஷயம் ஏதாவது ஒன்றாவது இருக்கும் என்கிறான். எதிரெதிர் சுவர்களில் இழுபடும் விசையுறு பந்தினைப் போல பாதாள உலகங்களிலும், விண்ணிற்கும் அவன் புக முனையும் வேட்கையில், கழுத்து கட்டப்பட்ட நாயின் வெறி வேட்கையைப் போல மனிதனுள் பொதியப்படும் ஆன்மிகத்தின், அமைப்பின் துர் நாற்றன் சீழ் வழிய வீச்சமெடுக்கிறது. அங்கு வாதிடத்துணியும் ஜோசிமாக் கிழவனும் வயிறு புழுத்து வெடித்து நாற்றம் கமழ பிணமாய்க் கிடப்பதை உள் வாங்க முடியாது அலைக் கழிகிறது. ஒன்றிலும் பற்றின்றி வீழ்கிறது அகம். தீமையினுள் சொரூபமாய் மிளிரும் நன்மையையும், நன்மையினுள் மலப் புழுக்கள் நெழிவதையும்.
எல்லைகள் தகர்ந்து அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டதுதானா? என்று புழங்குகிறது. அங்கு சாத்தான் பதில் சொல்லக் காத்திருக்கிறது. உனது ஆன்மிகத்தின் வழியில் பல்லாயிரம் காதம் நடந்து கொண்டே இருக்க சாபமிடுகிறது. அங்கு தூங்கி விடும் மானுடத்தை, எழுப்பி திரும்ப ஆரம்பித்த இடத்திற்கே செல்ல கட்டளையிடுகிறது. பாவங்களின் பால் நம்பிக்கை இழக்காத தேவமைந்தன் அங்கு தன் ஒளிர் மிகு சிறகுகளால் மனிதத்தை ஏற்றுக் கொள்வான். ஆம். ஆனால் அவன் மண்டியிட வேண்டும். தன் குற்றத்தினை அவன் மொத்த மானுடத்திற்கும் முன் மண்ணை முத்தி ஏற்க வேண்டும். எந்த நிமிடத்திலும் அவன் எதிரில் இருக்கும் பிலத்தில் விழுவது சாத்தியமே. அங்கு அவன் சாய்ந்து கொள்ள ஒரு தூய ஆன்மாவை நாடி நிற்கிறான். எல்லா வழிகளிலும் வலியினை உணர்ந்த ஆன்மா. அது மனிதனை அதன் சாத்தியமான வழியில் உணர்ந்து கொண்ட ஆன்மா. அது தன் தூய்மையினால் அவனை ஏற்றுக் கொள்ளும்.
அப்படி நம்பிக் கொண்டிருக்கையிலேயே அந்த ஆன்மாவின் பிரேதத்தையும் காட்டிச்செல்வது எத்தனை குரூரமானது. கிறுஸ்துவின் மனித உடல், வலிகளினால் துடி துடிக்கும் உடல், மண்ணில் அனாதராவாய்க் கிடக்கும் உடல். தேவனின் குழந்தைக்கு விதிக்கப்பட்ட சாத்தியமான இறுதி. ஒரு கை விடப்பட்ட ஆடாய் அவன் கிடக்கையில் திரும்ப தீமையினுள்ளேயே அமிழ மனிதன் விதிக்கப்பட்டிருக்கிறானா? ஒரு பெருத்த அவ நம்பிக்கை சூழ்கிறது. ஏன் இப்படி ஒவ்வொரு முறையும் ஏற்றுக் கொள்ளுதலும் மறுதலித்தலும். குற்றங்களின் ஆதி தேவதையின் முலைக் கண்களிலிருந்து வழிகின்றன நிராதரவற்ற கீழ்மையின் நியாயங்கள். அதனைக் கொண்டு அவனது சூதாட்ட விடுதியில் பணயம் வைக்கிறேன். அதன் சுழல்களின் தற்செயல்களில் அலைவுறுவதைத் தான் மீண்டும் மீண்டும் காட்டிக்கொண்டே இருக்கிறான், ஒரு கொம்பு முளைத்த, சிறகுகள் கொண்ட அந்த தேவதைச் சாத்தான்.
ஆனால் கிழவன் நன்மை தீமைகளை வெறுமனேக் காட்டிச் செல்கிறான். மனிதனின் இயல்பான சபலத்தின் அனிச்சத்தை வெளிப்படையாய்க் காட்டிக் கொண்டு நகர்கிறான். லௌசீகமாய் அவன் பெண்ணை வர்ணிக்கிறான். சுண்டுகளுக்கு மேல் படரும் மெல்லிய மயிரைக் கூட அவன் தவற விடுவதில்லை. நாடகீயம் அவனுக்கு தேவைப்படவுமில்லை. பெரும்பரப்பில் பிரபஞ்சத்தின் சின்னத் துளியாயும், அந்தத் துளியினால் வழியும் காட்டாறாகவும் ஒரே சமயத்தில் காட்டி விட அவனால் முடிகிறது. உண்மையில் அவனில் தனி மனிதர்களே இல்லை. திரளின் ஒட்டுமொத்த கதையாடலில் மானுடர்கள் என்று தனித்தனியே யாருமில்லை அல்லது எல்லாருமிருக்கிறார்கள். இன்னும் இன்னும் சலிப்பேற்றத் தெரிந்திருக்கிறது. அவனின் கதைத் திரளில் உலகத்தின் ஒட்டுமொத்த வரலாற்றையும் இணைத்து விடும் கண்ணிகளைப் பொருத்தி விடுகிறான்.
ஆனால் அவன் கையில் பைபிள் இருக்கிறது. அதன் போதனைகளின் உக்கிரம் இன்னும் ஆறா ரணமாய் எரிய எரியக் காத்திருக்கிறது. எல்லா செய்கைகளிலும், வரலாற்றின் போக்குகளிலும் அந்த போதனைகளிலிருந்து வழி தேட விழையும் அவனது ஆற்றாமையை எளிதில் மறுதலிக்கவும் முடியவில்லை.

நான் எதைத் தேர்ந்தெடுக்க… அவனது போதனைகளையா? இல்லை, பிரேதத்தையா? தெரியவில்லை. ஆனால் திரும்பத் திரும்ப அந்த இளைஞனையே நாட முயல்கிறது மூர்க்கமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக