சனி, 31 மார்ச், 2018

நீர்ப்பறவைகளின் தியானம் கதைப்பற்றி




திடூமென சலனித்து மின்னி மறையும் நீர்க்கோழிகளிடமிருந்து கரைப்படித்துறையை முட்டி முட்டி அவிழும் கதைச்சரடுகளை ஆற்றொழுக்கில் அலையும் பாசிகள் கவ்வ முயல, அவைகள் அந்த சரடின் துணுக்குகளை மட்டுமே கொண்டு வலை போல பின்னித் தலைகாட்டி மௌனித்து முழுகும். கனவுகளின் உலகம் நேர்க்கோடில்லாது சஞ்சரிக்கையில், கலைந்து விழிக்கையில். அதன் பிரதிபிம்பங்களைக் கொண்டு மீள் செய்ய முயற்சிக்க, சிறுவர் மலரில் புள்ளிகளை இணைக்க இணைக்க உருவம் உருவானது போல. கதைகளும் முரண் வடிவம் கொண்டு வியாபிக்க மறுதலிக்கிறது. இன்னும் அவிழாத எஞ்சியப் பகுதி கனவாகவே நிலைத்திருக்கிறது. அங்கு கதைகளின் பெரும் பரப்பு மூடுபனி வெளியில் பள்ளத்தாக்குகள் அமைதியற்று ஒலியை மட்டும் எதிரொலிப்பதைப் போல மீண்டும் மீண்டும் கனவுகள் அதன் திண்மங்களை மறைத்து வைத்து, துணுக்குகளின் குறுக்குவெட்டை மட்டும் மெல்லத் தலைகாட்டி ஆழத்திற்குள் இரை தேட சென்று விடுகிறது.
கதை மொழிதலில் டீக்கடையிலிருந்து ஆரம்பமாகி ஆங்கிலப்பத்திரிக்கையில் கடிதங்கள் தேடி அதன் வாயிலாகவே முடிவடையாது அப்படியே நிற்கையில், ஸ்தம்பித்து நிற்கிறேன். எங்கிருந்து எப்படி மீள் செய்து திரும்ப காட்சிப்படுத்தி உருவாக்கிக் கொள்ள, அங்கு இன்னும் மிச்சக்கதையின் பகுதி வெட்டிய சதைத் துண்டமாய் கனத்து தொங்கிக் கொண்டிருக்கிறது. கனவினைப் போலவே நீட்சியின்றி அங்கிங்கு வெளிச்சமூட்டி, நிழலாடி, துரத்தி முடிவின்றித் தொடர்வது. என் கனவுகளில் அடிக்கடி பிள்ளையார் துரத்துவார். எட்டிப்பிடிக்கும் தூரம் வரை வருகையில் நான் பாய் கடையில் புரோட்டாவில் சால்னாவைக் குழைத்துக் கொண்டிருப்பேன். அங்கிருந்து என் அறைக் கதவிடுக்கு வழி அந்த நீள் மூக்கு மனிதன் அழைத்துக் கொண்டிருப்பான். முன் பின் அறியாப் பெண்ணுடன் வாய்ப்புணர்ச்சி செய்து கொண்டே, என் காதுகளில் அலைபேசியில் ஒலிக்கும் பாட்டின் ஒலிகளும் இணையும், மாய நதியொன்று மார்பில் வழியுதே என. இவ்வாறு குறுக்கு மறுக்காய் ஓடிக்கொண்டே இருக்கும் காட்சிகளுக்கு நடுவில் நான் கனவு காண்கிறேன் என்ற இருப்பும் மெல்லத் தலை தூக்கிப் பின் அந்த அரூபக் குளத்தில் மறைந்து விடும்.
அந்தப்பத்திரிக்கை கடிதங்களில் இருந்து அந்த மேற்கோள்களினுள் நுழைந்தேன்.
“பிரபஞ்சம் கருப்பை அல்ல. கருப்பைக்குள் முடங்கிக் கிடக்கும் கருவேயாகும்.”
பின் அந்தக்கட்டுரையின் புள்ளியிலிருந்து வெளியேறிய எண்ணங்கள் வழி கரையான் புற்றுகள் வளர்ந்திருந்த வடிவிலியானத் தோற்றத்தில், அவளது மார்புப் புற்று நோய் அரிக்க ஆரம்பித்தது. அங்கே அந்த செவிலியின் பளிங்கு முன்னங்கால்கள், அவனது கனமழுத்தும் கனவு, கரையான் புற்றுப் பெண்ணுருவம், காரை மண், லூசியின் முகமாய் மாறி உதிர்தல். அதுவரை மூண்ட செவிலியுடனான காமம், லூசியின் புற்றுடன் இணைந்து கரைந்தொழுகும் போது, தன் மகன் தன்னை விட்டு பிரிந்து செல்லும் ஆசிரியரின் நினைவுப்புள்ளியில் அது எங்கு வந்து குத்தி எண்ணங்களைக் கலைத்தது.
                “குவிந்து கவனித்தலும், குவிதலின் விளிம்பினையும் அதனுள் கிரகித்தலும்” சுருங்கி விரியும் மரப்பல்லியாய் உருமாறியது. நேர்க்கோட்டிலிருந்து பிறளாத அம்மாவின் இருப்பு, ஒரு புள்ளியைப் பற்றிக் கொள்ள பல்லி காணாமலாகுவதும் அவனுக்கு குழந்தை பிறப்பதும், இறந்த அவன் அப்பா மறுபடிப் பிறத்தலான சமாதானமும் விளிம்பு வரைக் குவிந்த பிரஞ்சையில் குதிரைக் கண்களைப் போன்ற பல்லியின் பக்கவாட்டு விழிகளும், அதன் நெளியும் வாலும் சிதறிய காட்சிகளாய் நேற்றைய கனவில் என் முகத்தினருகில் அதன் ரெட்டை நாக்கு படமாடுவதும் பின் அந்தப்பச்சை செதில் நிறத்தோல் விம்மி எழுவதும், அதன் அடிப்பரப்பின் வெண்மையில் பச்சை நரம்புகள் பிணைந்தசைவதும் கண்டு எழுந்தேன். ஒரு வேளை அதே நேரம் தானா என்று கூடப் பார்க்க தவரவில்லல். கடிகாரம் 2.30 யைக் காட்டியது.
                நீர்ப்பறவைகளின் மோனத்தில் காட்சிகள் மாறாக் கணத்தில், காலம் அதன் இயல்புத்தன்மையை தலைகீழாக்கிக் கொண்டிருப்பதையும். ஒவ்வொரு மனிதனுக்குமான தனித்தனி கடிகார முட்கள் வெவ்வேறு இடமாற்றங்களில் ஓடிக்கொண்டிருப்பதையும் காண்கின்றேன். தன் வாழ் நாள் முழுதும் நீர் இறைத்துக் கொண்டே இருக்கும் பிட்சுவின் காலம் வேறு. அதைக் கண்டு கொண்டு விமர்சிக்கும் குருவின் காலம் வேறானதாக இருக்கிறது. சீடனாக முயலும் இளைஞன் அந்த அதீதத்தை பனிப்பாளமாய் உருகி நிற்கும் நதியின் கரையில் மாறா நிமித்தத்துடன் தன் முன் வானமுந்தி நிற்கும் மலைக்குன்றுகளுக்கிடையில், அசைவற்ற நதியும், அங்கு கழுத்துந்திப் பார்க்கும் நீர்ப்பறவையின் கண்களிலும் இருந்து மீட்டெடுக்க முனைகையில் அங்கு குரு பிணம் போலத் திரைக்கு பின்னால் கிடக்கிறார். திரைகளுக்கு வெளியே கணக்கற்ற இடைவெளிகளில் காலங்களின் தீட்சண்யம் அவனுள் மோதக் காத்துக் கொண்டிருக்கிறது. அந்த நீர்வெளியில் காலத்தை இரையாய் விழுங்கி நீர்ப்பறவைகள் எட்டிப்பார்த்து மின்னி மறைகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக