செவ்வாய், 13 மார்ச், 2018

வருத்து

பறவைகள் இல்லாத வானம் ஒன்றிருந்தது.
உடைந்து போன சிதல வெளியில்
யாரும் காணாது வெறித்துக் கிடந்தது மாநகரம்.
புற்றுக்களினால் உருவான கருவறையில் சயனித்திருந்தாள் வண்டிமலச்சி.
சர்ப்பங்கள் உதிர்த்த மொட்டைத்தலையுடன் 
காலடியில் அரவு நீள் சடையான்.
அம்மணமாய் உதிர்ந்தது தெருவெங்கும் வில்வம்.
நாக லிங்கப் பூச்சிகள் கொத்துக் கொத்தாய் கூடமைத்தது
சோழன் கொண்ட பழையாற்றுக் கரையினில்.
ஒடிந்த சிறகுகளுடன் பேந்தப் பேந்த விழிக்கிறது
கோலவார்குழலியின் தோளமர்ந்த ஒற்றைக் கிளி.
கிலி கொண்டு பந்தம் பற்றினான் கோட்டை மாடன்.
எங்கோடி கண்டன் கடைசிப் படையலுடன்
நாடு விட்டு அகல்கிறான்.
ஆரல் கணவாயில் பதைபதைக்க
நெஞ்சடிக்கிறாள் அவ்வை.
இசக்கியின் சூல்
ஒரு பெரும் ஆலமாய் சுற்றி வேர்கிளப்பி
இரை எடுக்கிறது.
பறவைகள் இல்லா வானத்தில்
எச்சங்களால் நிரம்பிய
பெரும் பிரதேசம் அடைகாக்கப்பட்டது.
மரங்கள் மட்டுமே வாழத் தகுந்த நிலம்.
நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம்,
நகர் விட்டு,
ஊர் விட்டு,
எல்லை விட்டு,
வான் விட்டு.
என்னையும் உன்னையும் விட்டு.
பூதங்களினால்
வாதைகளினால்
பேய்களினால்
நாங்கள் அமைக்கிறோம்.
சிறகடிப்புகளின் தீராக் கனவுகளையும்,
எண்ணிலடங்கா உதிரத்துளிகளையும்.
உங்கள் அடர் இருள் சாமங்களில் உயிர்ப்பிக்கிறோம்
பெரும் உயிர் வெளியை.
அங்கு உன்னைப் போலவே புணர்ந்து பெற்றெடுக்கிறோம்
எங்களுக்கான பலி தெய்வங்களை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக