திங்கள், 12 மார்ச், 2018

என் மீட்சியும் வாதையும்

எரியில் அழல்வதும்
உன்னில் ஆழ்வதும் ஒன்றுதானா.
ஒன்றுமில்லாமல் ஆவது,
மௌனமான மெழுகுவர்த்தித் துண்டங்கள் போல.
அமைதியற்ற பொழுதுகளில்
என் நிழலை என்னை விடப் பெரிதாகக் காட்டிக் கொண்டிருக்கிறாய் 
திக்கற்ற வீதிகளில்
பலவீனமான உன் நடுங்கும் விரல்களைப் பற்றுகிறேன்.
என்னைப் போலவே அலைபாயும்
உன் தீர்க்கமற்ற குரலில்,
என் பலவீனங்களின் ஆடைகளைக் களைந்து
ஒரு அட்டையைப் போல
உன்னைத் தொற்றிக் கொள்கிறேன்.
தவிப்புடன் இரவின் தோல் உலர்கிறது,
சிறு துளி
சின்னஞ்சிறு புன்னகை
மெல்லிய இடுப்பசைவு போதும்.
அடர் கானகத்தின் குளிரில்
என் மீது நீ புகையாய் படரும் போது
ஒன்றை மட்டுமே வேண்டும் வேண்டும் என்கிறேன்.
ஒன்றுமில்லாமல் ஆவது.
இன்றைப் போல நாளை இருப்பதில்லை.
சீக்கிரம் வா...
ஆனால் ஆனால்
இரவினைக் கடப்பதே இல்லையே நான்.
கடைசி வரை ஒளிர்ந்து அடங்கும்
தீக்குச்சி போல ஒரு உடல் போதும் எனக்கு.
சீக்கிரம் வா...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக