ஞாயிறு, 10 மே, 2020

மாடத்தி

மடுத்துப் போச்சு மக்கா. இதுக்கொரு வாழி பாடி ஓய்ச்சு விடலான்னா, நடக்க மாட்டுக்கு. இந்த திருப்பு கொடைக்கு நிக்க மாட்டேன் கேட்டியா. சரியான உழுந்தரைச்ச அம்மி மக்கா நான். பாரு இன்னும் சொர்ணாவிட்டிருக்கேன்.
மாமா! நீங்க போய்ட்டா, யாராடுவா? இன்னும் பத்து நாள்ள கார்த்திகை வந்திரும்.
ஒனக்கு வெளங்காது லெ. தரித்திரியம். இங்கன இருந்தா அவ என்னக் கடிச்சு திம்பா. அதான் ஒருக்கே நடக்க போகு.
மெதுவாக பிளாஸ்டிக் குவளையில், கட்டிங் ஊற்றினேன்.
லே! என்னத்தல வாங்கிருக்க. நம்ம பாய் கடைலயா?
இல்ல மாமா. எசக்கிக்க.
அரதப்பயலுக்க பொறைந்தைக. வேகாதத தந்திருக்கான். சவக்கு சவக்குனு. ரப்பர் மாறி.
இரவின் நிசப்தம். பொட்டல் வெளியில் மாடன் மட்டும் ஏழடி உயரத்தில். நிலவைக் குடிக்கும் அவரது நிழல் நாங்களிருக்கும் மண் மேட்டைத்தாண்டி படர்ந்து கிடந்தது.
இவனைப்பாரு, அவனக்க ஒலக்க மூட்ட, நீட்டிட்டு கெடக்கான்.
மாமா! அந்தப் பறக்குடிக்கு இப்பம் போகதுண்டா!
லேய், நாரப்பயலே. நீ என்ன வாக்குமூலம் வாங்குதையாக்கும். சவட்டிப்போடுவேன் அந்த தேவடியாள.
                மாமா! எனக்கு உங்கள்டே வருத்தமுண்டு. அன்னைக்கு ஏன் அப்படி செஞ்சேங்க.
                எதைல சொல்லுக.
                சட்டில பீயள்ளி, விடுமாடனுக்கும், மாடத்திக்கும் மேல எறிஞ்சேங்கல்லா!
                நா எப்பம்ல எறிஞ்சேன்.
                பொறவு ஆராக்கும்.
                ஆமாண்டே. நீயே பாரு, எத்தன வருசமாச்சுடே.
                எனக்க இருவத்து நாலு வயசுல இருந்து ஆடுதேன். இப்ப நாப்பத்தேழு. எதாம் ரெட்ச உண்டா.
                அந்த ஆஸ்ராமங்காரி, அத்துட்டு போய்ட்டா. எனக்க பிள்ளைகளக் கூட காணிக்க மாட்டுக்கா. ஒத்தைல கெடக்கேன்.
                உம்ம மேல கொறையே இல்லைலா? போ வே!
சரிடே! ஊத்து.
அதாண்டே. கிறுக்கு புடிக்கு. இந்தத் தெருவ விட்டு போயிராலான்னா. எதான் வழி கெடைக்குன்னு பாத்தா, அவ...அவதாம்லே அந்த சிறுக்கிவிள்ள உட்டாத்தானே. பட்டியப் போல ஆக்கிட்டா. ஒரு கெதிக்கும் வழியில்ல. காஞ்ச பீ மாறி இருக்கேன் மக்கா இங்கன.
சரி. விடும் வே! இந்த திருப்பு நீ இல்லைனு வச்சுக்கிடும். கொடை கழியாது. போன கொடைல நீர் மட்டையாயிப் போட்டேரு. மாடத்தி வருத்தில்ல. மாடன் ஊட்ட ஏக்கல. மகராச மாமாக்கு செவுட்டுல அடி உழுந்து. அதுக்கப்பொறவு அவரு கோயிலுக்கே வர மாட்டேண்டார். உமக்கு தெரியாதா!
ஆமா! அவனக்க ஒரு ஊட்டு. மயிராண்டிக்க சுன்னியெழும்பி வருசமாச்சு. இப்பங்கெடக்கது கிழட்டுப்பய. அவனுக்க ஒரு கொடை. அந்த மண்ணு மூட்ட இடிச்சு தள்ளனும். சில நேரங்களில் மாமாவின் குரல் அவருடையதைப் போலவே இருக்காது. அதுவும் மாடனைப்பற்றிப் பேசினாலே கொதிப்பார் கெடந்து.
நான் போய்ருக்கணும். இந்த ஊரப் பாரு. எவன் மூஞ்சிலயாது களை இருக்கா. இவன், இவந்தான் மக்கா, எல்லாத்துக்கும் காரணம். இந்த பொளையாடி மகனுக்கு கொடை மயிரு வேற.
காறி உமிழ்ந்தார். இரவுப்பூச்சிகளும், கொசுக்கடியும் அதிகமாக இருந்தது. தூரத்து மின் கம்பத்தில், வெளிச்சம் கழுத்திறுபட ஊசலாடிக் கொண்டிருந்தது. பழையாற்றின் தேங்கல் நீரில், நீர்க்கோழிகள் முழுக, கலந்திருக்கும் சப்தம் அலையாடியது.
மாமா, ஒரு புரோட்டா மாஸ்டர். ஒழுகினசேரில அவர் அளவுக்கு சால்னா, சூப், புரோட்டா, கொடல் கறி, மட்டன் ரோஸ்ட் வைக்க இன்னொருத்தன் பொறந்து வரணும். எந்த கடைலயும் அவர் ஒழுங்கா நிக்க மாட்டாரு. ஒரு வாரம். அதுக்குள்ள கிறுக்கு புடிக்கும், ஃபுல் போதைல எங்கயாவது சாக்கடைக் கெடைல கெடப்பார். இது வரைக்கும் நாலு பொண்ணு, எனக்குத் தெரிஞ்சு. மத்தது கதைகள் எத்தனையோ! பொண்டாட்டி அவர தொரத்தி உட்டுட்டா. பைசா வாங்கதுக்கு மட்டும் அப்பப்ப வந்து கலையரசி டீக்கடைக்கிட்ட நிக்கத பாத்திருக்கேன்.
லேய். கமுத்திப் போடு. வெரல நல்லா இறுக்கிக் கெட்டு. குண்டியக் கழுவுல. பேதி போய்ருக்கு.
களபம் எடுத்தியா! தண்ணி நறைய ஊத்திட்டே. கொவுந்திட்டு.
பன்னீரக் கொளைச்சு, அடை. நாடிக்கெட்ட இப்படியால கட்டுவான்.
கண்டாற வோளிக்கு சூத்தப்பாத்தியாலே.
கதம்பைய இங்கன வை. அங்க ரெண்டு வை. ரைட்டு.
தலைய இந்த செய்டு வைக்கணும். என்னத்தல படிச்ச நீ!
செம்மண் கொளைக்கும் போது தண்ணிய செய்டுல விட்டு கொளையும், மூத்திரம் பெய்ஞ்ச மாறி, இங்க கொடும் வே.
கங்கு…கங்கு எங்க? லேய் சுத்து போதும். திரும்பி பாக்காம சட்டிய உடு.
கங்கைப் பொதிந்து கதம்பைகளுக்கிடையில் செருக, உயிர் புகை மூட்டமாய் கமறியது. குளைத்த செம்மண்ணை பனை ஓலைப்பாயில் கொண்டு வந்து கொட்டினார்கள்.
லேய் இரு! ஒரு நிமிட்… கோட்டர் உடைத்து பிரேதக்குழியில் ஊற்றினார்கள்.
இல்லைனா...இவன் வேகவே மாட்டான் கேட்டியா. சிரிப்புச்சத்தம் அடங்குவதும், மூன்று ஓட்டைகளின் வழி வெண் புகை உத்திரத்தை நிரப்பி வெளியை பொத்துக் கொண்டு சிதறுவதுமாய் இருந்தது. வேப்ப மரத்திலிருந்து உதிர் சருகுகள் ஓயாது ஏதோ ரகசியம் சொல்ல விளைவது போல முணுமுணுத்து, காற்றோட்டத்தில் நின்றவர்களின் கால்களுக்கிடையில் இறைஞ்சிக் கொண்டிருந்தது. தோர்த்தும் சோப்பு டப்பாவுமாக நின்றவர்கள் நகர்ந்து வடக்காத்துப்படித்துறையை நோக்கி சென்றனர்.

நையாண்டி மேளம் உருவ, தென்னை ஓலை எரியும் நெருப்பில் தப்பட்டைகளை சூடு காட்டினார்கள். ஒத்தைக்கொட்டு உறுமிக் கொண்டு ஆரம்பமானது. நாதஸ்வரங்கள் இருபுறமும் மேலெழும்பி, ஒரு பிளிறலைப் போலவும், கனைத்தலைப் போலவும் சப்தித்தது. அது பின்னர் ஓயாது பிறாண்டும் மென் உகிர் போல பிடறியில் சொரிந்து கொண்டிருந்தது. அவ்வையார் வழக்கம் போல மஞ்சனையை விழுங்கிக் கொண்டு, கமுகம் பூவை முகத்தில் அறைந்து, மறுகையால் முந்தானையையும் சரி செய்து கொண்டிருந்தாள். மாடன் கிராமத்து படித்துறையில் பால்குடமெடுக்கும் நிகழ்விலிருந்து கோவிலை நோக்கி வந்து கொண்டிருக்கிறான். கச்சைகள் குலுங்க உடலெல்லாம் சந்தனம் மொழுக, கோலுடனும், தடியுடனும், விடைத்த காது கொண்ட தலைக் கச்சை அணிந்து, துள்ளலே நடையாக நகர்ந்து கோவிலை நோக்கி வருகிறான்.
என்னுடல் என்னுடையதல்லாதது போல சத்தங்களின், ஒலிகளின், நாதங்களின் இழுப்புகள் தாளம் தடுமாற கை, கால்கள் விடைக்க, நாக்கு பற்களுக்கிடையில் மடிந்து இழுபட, கண்கள் ரத்தக்கனலாய்த் தெறிக்க சுழன்று கொண்டிருக்கிறேன். நான்கு பேர் என்னைப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். மஞ்சனையை என் முகம் முழுதும் பூசிக் கொண்டிருக்கிறேன். கைகளில் சூலமும், கமுகம் பூவும், சம்மந்தி மாலையும் நாசியில் மணம் நிறைக்கிறது. என்னைச் சூழ்ந்து கொண்டு தப்பட்டை அறைகிறது. கொட்டின் எண்ண ஓட்டங்கள் என் மூளை நரம்புகளுக்குள் கிழிபடுகிறது. நாதஸ்வரம் உயர்கையில் மூச்சின் கடைசிக் கார்வை அறுபட்டு நான் அந்தரத்தில் மிதக்கிறேன். திரும்ப தரையில் கால்கள் அழுந்துகையில், வெறிக்கூச்சல் என் குரல் வளையிலிருந்து எழுந்து கோவிலின் உள்ளறைகளில் எதிரொலிக்கிறது. இது நான் மட்டுந்தானா? உடலினுள் இருப்பு தங்காது வெளியில் குதிக்க எண்ணும் இன்னொரு குமிழ் என்னுள் எம்பிக் கொண்டிருக்கிறது. நான் அதை வேடிக்கை பார்க்கிறேன்.
அங்கு நானல்லாது என்னுள் நிகழ்ந்து கொண்டிருக்கும் இன்னொன்றிடம் வினவ முயல்கிறேன். அதன் கோரைப்பற்கள் என்னை விழுங்கத் துடிக்கிறது. ஒரே சமயத்தில் கெஞ்சலும், உறுமலுமாக பெண்குரலில் ஆடிக் கொண்டிருக்கிறது என்னுடல். இடுப்பில் பாவாடை. மார்பில் மேற் கச்சை. கைகளில் சூலம். ரத்தம் ஊறும் நாக்கு. கோரைகளாக சிதறித் தழலும் கூந்தல். ஆட்டின் கிழிந்த கழுத்தை வாயில் உறிஞ்சிக் கொண்டிருக்கிறேன். பாதங்கள் கிழிந்து குருதி வழிய அந்த மண் பீடத்தில் மூர்ச்சையற்று வீழ்வது வரை, மேலிருந்து எண்ணிலடங்கா கயிறுகள் என் உடலில் முடிச்சிட்டிருக்கிறது. அறிய இயலாத அந்த கைகளின் அசைவில் என்னுடல் அகப்பட்டுக் கொண்டிருந்ததை நான் பின்பு மீள் செய்கையில் உணர்ந்தேன்.
காடாத்துக்கு எலும்பு பொறுக்கிக் கொண்டிருந்தார்கள். கபாலம் சிதைந்து மண் துகள்களாக இருந்தது. அதில் எஞ்சிய பெரிய ஓட்டையும், கைகால்களின் நொறுங்கிய எலும்புகளையும் வாழை இலையில் அடுக்கி வைத்தனர். மஞ்சள் பிடித்து பூஜை செய்த பின், கெண்டி நீரில் எலும்புகளைக் கழுவி, பாலூற்றி, மலர்கள் தூவி சூடங்கொழுத்தி கும்பிட்டு பிளாஸ்டிக் பொதியில் கட்டிக் கொண்டனர். சங்கிலித்துறையில் எலும்புகளை விட்டு விட்டு திரும்பி பாராது நகர்ந்து வந்தேன். மூதாதைகள் வாழும் பாதாள லோகமொன்று இதன் அடிமண்டிய பிரதேசத்தில் உண்டு எனும் நம்பிக்கை.
மாடத்தி கூட அங்க இருந்து தான் வந்தாளோ?
மக்கா, நம்ம விடுமாடத்தி என்னைக்கு வந்தாளோ அன்னைக்கு புடிச்ச சனியன் மக்கா. வாழ்க்கைய தொலைச்சாச்சு.
நடு நிசி தாண்டிய பின்னிரவு. கூகை இழுத்து விடும் ஓங்கார விளி. பழையாற்றுக்கரைச் சாக்கடையில் பன்றிகள் உருளுவதும், பின் உறுமுவதும், இடையில் நிற்கும் வேப்பமரத்துக் கிளைகளின் இடைவெளியாய் என்னுடைய போதத்தில் வந்திறங்கியது.
லேய்! அவ ஒரு தேவடியா கேட்டியா. நான் இருக்கம்போவே அவனக் கூட்டிட்டு வருவா. இன்னைய நாளு வரை என்ன மனுஷணா அவ மதிச்சதே இல்ல.
ஆமா! உம்ம சீருக்கு மதிக்கவா முடியும். எனக்குள்ளேயே முணுமுணுத்தேன்.
லேய். நான் யாரு? யாருன்னு நெனைக்க. மாடத்தியாக்கும்.
மாமாவின் குரல் இளகியது.
என்னாச்சு! என்னாச்சு…
ஒன்னும்மில்லடே. இதாக்கும். இதாக்கும் எல்லாத்துக்கும் காரணம்.
அதாண்டே ஒனக்கு வெளங்காது. லேய். தீந்தா!
கடைசி கட்டிங்கை இருவரும் நிரப்பிக் கொண்டோம்.
மக்கா. சாமியாடுதுன்னா. என்னனு நெனைக்க. அது நமக்கு கெடைக்கது இல்ல. அவ வந்து விழது. நமக்கு வேற வழியெல்லாம் கெடையாது. அது பாதாளக்குழியாக்கும். உள்ள போனவன் திரும்பதுக்கு ஒக்காது. அங்கனயே கெடந்து சாக வேண்டியதான்.
இவ, நம்ம மாடத்தி இருக்காள்ளா, லேசுபட்டவளா. செரியான உக்கிரம் பிடிச்சவ. யார் கம்பைக்கும் அடங்க மாட்டா. அவ கதை தெரியுமா உனக்கு.
சிவங்கிட்ட வரம் வாங்குனவளாக்கும். இங்க ஒழுகினசேரி ஊருக்கு அங்க எங்கயோ கெழக்க இருந்து வந்திருக்கா. தேவிக்க உடமபுல இருந்து சப்த தேவதைகள் வந்தாங்களாம். அதுல அவளுக்கு நாக்குல இருந்து அவதாரம் எடுத்தவளாக்கும்.  மகிசாசுரன்னு அரக்கன கொல்லதுக்கு உருவானவள்ள மொதல்ல வந்தவளாக்கும். அவன தலைய வெட்ட வெட்ட அந்த ரத்தத்தில இருந்து திரும்ப உருவாயிருவான். அதுனால சிந்தச் சிந்த ரத்தத்த குடிச்சவளாக்கும் நம்ம மாடத்தி. அதான் மூணு ஆட்டு ரெத்தத்த குடிச்சாலும் அடங்க மாட்டுக்கா.
எங்கிருந்தோ ஒரு ஒரு இரவுப்பறவை எங்கள் தலைக்கு மேலே சிறகுகள் படபடத்த பறந்து சென்றது.
ஆங்…சத்தியம்!
அப்படியாக்கும் இங்க வந்தா. முன்னைலா, மனுஷ பலியாக்கும். இப்பம் ஆடுங்கெடையாது. முட்டையும், தடியங்காயும், கோழியும் கொடுத்து பசி தீக்காணுகோ. கள்ளவாளிப்பயக்கோ.
சரி அது கெடக்கு, நான் சொல்ல வந்தது அதில்ல டே. கேட்டியா!
அவள வருத்தி ஆடுதம் பாத்தியா. அவ எப்பவும் ஏங்கூட இருக்க மாறி ஆயிட்டு.
அதுக்குத் தான் இந்தக் குடி. இது இல்லைனு வை. நான் செத்தேன். அவ என்ன தின்னு போடுவா.
உனக்கு தெரியாது. அன்னைக்கு எனக்க மத்தவா, அவ உண்மையிலேயே பாத்துட்டா.
பொறவு நான் இப்பம் எங்கயும் போகதுங்கெடையாது.
என்ன நடந்துச்சு.
ஒன்னுமில்லடே. நான் அவக் கழுத்த நெறிக்கேன். எனக்கு தெரியல. அவ பாத்தது அங்க என்னைய இல்ல. அவ நல்லா பயந்துட்டா. அங்க களபமும், மஞ்சனையும் மணந்துனு அதுக்குப்பொறவு ஒரு நா போதைல இருக்கம்போ சொன்னா.
ஆமா மக்கா, நான் தனியா இருக்கம்போ கண்ணாடிய பாக்கவே மாட்டேன்.
அன்னைக்கு நான் பாவாடைக்கட்டிக்கிட்டு என் முலைய, நானே உறிய மாறி சொப்பனம். எந்திரிச்சா ஒரு ரெண்டு மணியிருக்கும். அடுத்த நாளாக்கும் ஆடிப்பூரம்.
அவ என்ன உட மாட்டா.
என்னத்த செய்யதுக்கு, குடிச்சேன்னு வை. ஸ்டடி ஆயிரும். பொறவு போட்டி மயிருனு நான் பாட்டுக்கு இருப்பேன்.
என் பொண்டாட்டி ஒரு நா சொன்னா, உனக்கு மேல நாத்தம் அடிக்குனு. எனக்கு புரியல. என்னட்டினா, பொண நாத்தம் அடிக்கு மனுசா. எங்க கெடந்து வாரியும் இங்கனனு கேட்டா. அதுக்க முன்னாடித்தான் குளிச்சு சூடங்கொழுத்தி மாடத்தியக் கும்பிடுட்டு வந்தேன்.
ஒன்னுஞ்செரியில்ல கேட்டியா. இங்க இருந்து போனா விமோசனம்.
சரி விடும் வே. நான் பீடியைச் சொருகி பற்ற வைத்தேன். தொண்டைக்குழி வழி அந்த புகை நெஞ்சுக்கூட்டில் இறங்குவது வரை இழுத்து விட்டார்.
காற்றில் பீடத்தின் மணிச்சத்தம் மெல்ல அலங்கிக் குலுங்கியது.
லேய்! நான் மாடத்தியாக்கும் லேய். வெட்டிழுத்தது போல அவரது கண்கள் சொருகி மேலே சென்றது. நாசி வழி ரத்தம் கசிந்தது. மண்ணில் கமுந்து கைகால்கள் இழுபட நெஞ்சு, சரளைக் கற்களில் உராயத் துடித்துக் கொண்டிருந்தார்.
ஆம்! நீங்கள் யூகித்தது சரிதான். நான் கேட்டது ஒரு உக்கிரமான் பெண் குரல்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக