வெள்ளி, 15 மே, 2020

ரத்தம்


மரணத்தை அனுபவிப்பது என்பது அதைப்பற்றி திரும்பத் திரும்ப சிந்திப்பது மட்டுமல்ல. அது அதற்கு முன் பின் வாழ்வைப் பற்றி அறிய முனைவதும். ஆனால் அது பெரும்பாலும் அவ்வாறு எளிதில் முடிவதில்லை. முடியும் தருவாயில் அது எவ்வாறு அமைந்து விடுகிறது என்பதை திரும்ப வந்தவர்களால் கூட தெளிவாக உரைக்க முடியவில்லை. 

நான் மரணித்தலை உண்மையில் விரும்பினேனா? தெரியவில்லை. ஆனால் அதன் எல்லையின் விளிம்பில் சதா தொங்கிக் கொண்டு இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கான சூழலை நானே உருவாக்கிக் கொள்ள அதிகம் முனைந்தேன்.

தன்னைத் தானே கொல்வது. உடல் எனும் பரப்பு ஒரே நேரத்தில் சில்லுக் கண்ணாடிகளில் பிரதிபலிக்கும் பிம்பம் போல பல விதமாய் உருமாறிக் கொள்ள அனுமதித்தல். சின்னஞ்சிறு உடலிலிருந்து மாபெரும் உடல் வரை தனக்குள் தானே ஆகிக் கொண்டே இருப்பது. ஒரு தொடர் நிகழ்வு போல அதை செய்வது. அதன் மூலம் அது ஒரு எளிய செயலாக மாறிக் கொள்ளும் என்று நினைத்துக் கொள்வேன். எனக்கு மரணம் பற்றி அத்தனை தெளிவான பதில்கள் இருந்தன.  அது எனக்கு அளிக்கப் போகும் அனைத்தைப் பற்றியும் கனவு கண்டேன்.

"ஆகாயத்துப் பறவைகள்
விதைப்பதுமில்லை
அறுவடை செய்வதுமில்லை"

மரணம் ஒரு பறவை போல. சிறகுகள் மட்டுமே உடலாகக் கொண்ட பறவை. அந்தக் கடைசி விருந்தினை என் நண்பர்களுடன் நான் அருந்திக் கொண்டிருக்கையில் அவர்களுக்கும் எனக்கும் நான் என்ன தர வேண்டும் என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் அனைவருக்குமே அது தெரிந்திருந்தது. 

நான் என் சதையையும் இரத்தத்தையும் அவர்களுக்கு திங்கக் கொடுப்பேன். அவர்கள் என் உடலாவார்கள். நான் எப்படி சாக வேண்டும். வலி வலி வலி என்று சொல்லிக் கொண்டேன். வலியின் மூலம் மரணம் என்பது ஒரு மிக எளிய நிகழ்வு போல ஆகி விடும். நடக்கும் போது தன்னிச்சையாக நம் கால்களும் கைகளும் அடுத்த நகர்விற்கு அசைவது போல மரணமும் ஒரு அனிச்சை செயலாய் என்னை ஆட்கொள்ளும். ஒரு தனித்தவனாய் நான் இருக்கும் பொழுதே இந்த மொத்த பிரபஞ்சமும் என்னுள் வலி எனும் உணர்வு மூலமாய் ஒன்றிணையும் என்று நினைத்தேன். 

வலி பாரபட்சமின்றி உயிர் உள்ளது அல்லது அனைத்திற்கும் தருவிக்கப்பட்டது. அது ஒரு நிகழ்தகவு போல. அதனால் நான் வலியை நம்பினேன். என் மரணம் அதன் உச்சஸ்தாயில் ஒரு இசை போல நிகழும் என்று சொல்லிக் கொண்டேன். என் நண்பர்கள் என்னுடைய சொற்களில் அமிழ்ந்திருந்தனர். அவர்கள் என்னை அப்பொழுது மிகவும் வெறுத்தனர். நானாவது பற்றி அவர்கள் கற்பனையில் கூட நினைத்திருக்க மாட்டார்கள் 
நான் 13 தலைகளும் 26 கைகளும் கொண்ட மாபெரும் உடல். ஒரு நுண்ணுயிரி. இப்பூமியின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருக்கிறென். மிக அழகான சிவந்த நிற கொடுக்குகள் தலைக்கு இரண்டாக எனக்கு இருந்தது. நான் எண்ணிலடங்கா கால்களைக் கொண்டிருந்தேன். காண்பவை அனைத்தையும் கொட்டுவதே எனக்கு அளிக்கப்பட்டிருந்தது. உண்மையில் காண்பது அல்ல. உணர்வது. எனக்கு கண்கள் இல்லை. உணர் கொம்புகள் மூலமே நான் அனைத்தையும் அறிந்தேன். 
என் தலைகள் முரண்படும் பொழுது ஒன்றினை ஒன்று விழுங்கத் தொடங்கின. நீர்த் துளிகள் தரையில் சிதறுவது போல நான் சிதறிக் கொண்டிருந்தேன். எல்லா தலைகளும் விழுங்கிய ஒற்றை தலை பாரம் தாங்காமல் சரிந்து விழுந்தது. பின் நான் உடல் மட்டுமே ஆனேன். நான் உணர்வதை எல்லாம் என் உடல் கொண்டே விழுங்கினேன். நான் பெருத்து சிதறிய நாளில் முட்டைகள் ஈனினேன். கரும்பழுப்பு நிற முட்டைகள். என் உதிர்ந்த தலை அதை ஒவ்வொன்றாக விழுங்கியது. 

விதிர்த்தெழுந்த பொழுது ரத்த விளாராய்க் கிடந்தேன். தோல் கிழிந்தும் பிளந்தும் என் உடல் பல்லாயிரம் வாய்களால் ஆனது போல இளித்தது. ரத்தம் வாய்களிலிருந்து கசிந்து என்னைச் சுற்றி தேங்கி நின்றது. நான் கூவினேன். என் முட்டைகள் உடையவில்லை உடையவில்லை என்று மண்ணைப் பார்த்து கூவினேன்.

12 அப்போஸ்தலர்கள் என் வருகையை அறிவிக்கும் நிமித்தம் என் பிணத்தின் முன் அமைதியுடனும் மிகுந்த சிரத்தையுடனும் நின்று கொண்டிருந்தனர்.  அவர்கள் அனைவரும் வானையே அணுகினர். அவர்கள் தங்கள் ஒவ்வொருவரின் வலது முழங்கையிலிருந்து மூன்று துளி ரத்தம் வீதம் என் முன்னே சொட்டினர். என் பிணம் நாறிக் கொண்டிருந்தது. அவர்கள் மந்திரம் போல ஒன்றாக திரும்பத் திரும்ப சொல்லினர்.

"ரத்தம் மூலமே நீ இறவாதிருந்தாய்
ரத்தமே உன்னை அறிவித்தது
ரத்தமே உன்னை விடுவித்தது
ரத்தமே உன் சொல்
ரத்தமே உன் மொழி
ரத்தமே உன் இருப்பு
ரத்தமே நீ"

உன் ரத்தம் மூலம் மீண்டும் எழுந்தருள்வாய் என் தேவனே!"

ஒரு கருவி வேண்டும். தன்னந்தனியாக மரணத்தை அனுபவிக்க ஒரு கருவி. எனக்காக நானே உருவாக்கிக் கொள்ள வேண்டும். என் சொந்த கைகளினால். அது எப்படி இருக்க வேண்டும். ஒரு குமிழ் போலத் தொடங்கி கடல் ஒதம் போல வலியை உருமாற்றும் கருவி. நான் விடுவிக்க விடுவிக்க என்னை இறுக்கிக் கொண்டே இருக்கும் ஒன்று. உயிர் என்பது உடலின் ஒவ்வொரு அணுக்களிலும் நிறைந்திருப்பதை அதன் மூலம் உணர்வேன். நான் வலியை மறுதலிக்க விரும்புகிறேனோ என்று தோன்றியது. இல்லை காலமற்றிருப்பதை விரும்பினேனா. தன் சொந்த மரணத்தை சூதாடி பணயம் வைப்பதைப் போல நான் பணயம் வைத்தேன். அதன் மூலம் நான் அடைந்தது தான் என் ரத்தம்.

என் குறிப்பேட்டில் என்னுடைய வார்த்தைகளையே நான் திரும்பத் திரும்ப எல்லா பக்கங்களிலும் எழுதிக் கொண்டிருந்தேன். அது என் மரணத்தின் சொல்.

ஆம்.

தேடுங்கள் தரப்படும்
தட்டுங்கள் திறக்கப்படும்.

என் பிணம் ஒரு அழுத்திச் சப்பிய மாங்கொட்டை போல சியொன் மலைக் குன்றில் கிடந்தது. அவர்கள் ஜபித்துக் கொண்டிருந்தனர்.

"ரத்தம் மூலமே நீ இறவாதிருந்தாய்
ரத்தமே உன்னை அறிவித்தது
ரத்தமே உன்னை விடுவித்தது
ரத்தமே உன் சொல்
ரத்தமே உன் மொழி
ரத்தமே உன் இருப்பு
ரத்தமே நீ"

உன் ரத்தம் மூலம் மீண்டும் எழுந்தருள்வாய் என் தேவனே!"

செவ்வாய், 12 மே, 2020

மாசறு கழீஇய யானை - குறுந்தொகை

இந்த பெருமழைக் காலத்தில் மலைகளைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருக்கிறேன். இம்மலைகள் இதன் நிலைத்த தன்மை. மேகங்களுக்கிடையில் தியானித்திருக்கிறேன். நான் நான் என்று அறைகிறது மழை. மழை அனைத்தையும் தருவித்துக் கொண்டிருந்த இரவில் மலைகள் என்ற தனி நிலம் காணாமல் ஆகியது. நீரினுள் அமிழ்வதும் உன்னில் ஆழ்வதும் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். இருமை அவிழ்ந்த நிலை. உண்மையில் அவிழ அவிழ நீ துலங்கி வருகிறாய். மாசற்ற நிலம் உன் உடல். நீல வெளியின் கருமையிலிருந்து முகிழ்த்த நீர்மை உன் தேகத்தின் ஈரம். ஆனால்  இரவில் தனித்துப் பொழியும்  ஆழிமழையின் கண்களில் உப்பின் சுவை. உன் சுவை.

அது அடைய இயலாது தனித்துப் பொழிந்தது. அதனாலேயே அளவற்றிருந்தது.

நள்ளென்றன்றே யாமம்- குறுந்தொகை


இரவிற்கு குரல் உண்டா. நிறம் உண்டா. யாருமில்லாத குளத்து படித்துறையில் என் அமைதியற்ற நாட்களின் இருள் இரவுகளை முழுதுமாய்  கழித்திருக்கிேறன். அப்பொழுது குளம் நடு நடுங்கிக் கொண்டே இருப்பதைப் பார்ப்பேன். அக்கரை உள்ளீடற்றதாய்ஆகியிருக்கும். நீரின் குரல் ஒரு குழந்தையின் மழலை போல அந்தியில் இருக்கும். இருளில் முழுக முழுக அது வயசாளியின் குரலாய் ஆகியிருக்கும். அதுவரை அது சேமித்து வைத்திருந்த குளிரை ஒரு மிகக் குறுகிய வாய் வழியே தெளிப்பது போல உணர்வேன். அது இருளை இன்னும் அணுக்கமாக அறிவது. என் கனவுகளில் நீரலைகள் கொந்தளித்துக் கொண்டிருக்கும. அதில் உடல்கள். அவளின் உடல்கள். அப்பொழுது குளம் கடலாய் உருமாறத் தொடங்கும். நள்ளிரவின் கடல் ஒரு அலகு நீண்ட பறவையை போல இருந்தது. 

குருதிப் பூ - குறுந்தொகை

செங்களம் படக் கொன்ற அவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பின் செங்கோட்டி யானைக்
கழல் தொடிச் சேஎய் குன்றம்,
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே.

மலைத் தொடர்களுக்கிடையே செம்மையின் துளி. உருகி உருகி கருமை முழுதும் வழிந்து பெருகியது. பெரிய கரும்பாறையின் முதுகிலிருந்து மத்தகம் வழியே ஒழுகிய திரவம் எப்பொழுது தீயாகியது. வான் நோக்கி தழலும் செந்தழல். தீ மலராகி எரிந்தது. அணையா எரி. தீயின் மகரந்தங்கள்  மலை முகடுகளிலும் பாறை இடுக்குகளிலும் பொருக்கு போல படிந்திருந்தது. தோண்டத் தோண்டக் குருதி. செங்குருதி.

ஞாயிறு, 10 மே, 2020

மாடத்தி

மடுத்துப் போச்சு மக்கா. இதுக்கொரு வாழி பாடி ஓய்ச்சு விடலான்னா, நடக்க மாட்டுக்கு. இந்த திருப்பு கொடைக்கு நிக்க மாட்டேன் கேட்டியா. சரியான உழுந்தரைச்ச அம்மி மக்கா நான். பாரு இன்னும் சொர்ணாவிட்டிருக்கேன்.
மாமா! நீங்க போய்ட்டா, யாராடுவா? இன்னும் பத்து நாள்ள கார்த்திகை வந்திரும்.
ஒனக்கு வெளங்காது லெ. தரித்திரியம். இங்கன இருந்தா அவ என்னக் கடிச்சு திம்பா. அதான் ஒருக்கே நடக்க போகு.
மெதுவாக பிளாஸ்டிக் குவளையில், கட்டிங் ஊற்றினேன்.
லே! என்னத்தல வாங்கிருக்க. நம்ம பாய் கடைலயா?
இல்ல மாமா. எசக்கிக்க.
அரதப்பயலுக்க பொறைந்தைக. வேகாதத தந்திருக்கான். சவக்கு சவக்குனு. ரப்பர் மாறி.
இரவின் நிசப்தம். பொட்டல் வெளியில் மாடன் மட்டும் ஏழடி உயரத்தில். நிலவைக் குடிக்கும் அவரது நிழல் நாங்களிருக்கும் மண் மேட்டைத்தாண்டி படர்ந்து கிடந்தது.
இவனைப்பாரு, அவனக்க ஒலக்க மூட்ட, நீட்டிட்டு கெடக்கான்.
மாமா! அந்தப் பறக்குடிக்கு இப்பம் போகதுண்டா!
லேய், நாரப்பயலே. நீ என்ன வாக்குமூலம் வாங்குதையாக்கும். சவட்டிப்போடுவேன் அந்த தேவடியாள.
                மாமா! எனக்கு உங்கள்டே வருத்தமுண்டு. அன்னைக்கு ஏன் அப்படி செஞ்சேங்க.
                எதைல சொல்லுக.
                சட்டில பீயள்ளி, விடுமாடனுக்கும், மாடத்திக்கும் மேல எறிஞ்சேங்கல்லா!
                நா எப்பம்ல எறிஞ்சேன்.
                பொறவு ஆராக்கும்.
                ஆமாண்டே. நீயே பாரு, எத்தன வருசமாச்சுடே.
                எனக்க இருவத்து நாலு வயசுல இருந்து ஆடுதேன். இப்ப நாப்பத்தேழு. எதாம் ரெட்ச உண்டா.
                அந்த ஆஸ்ராமங்காரி, அத்துட்டு போய்ட்டா. எனக்க பிள்ளைகளக் கூட காணிக்க மாட்டுக்கா. ஒத்தைல கெடக்கேன்.
                உம்ம மேல கொறையே இல்லைலா? போ வே!
சரிடே! ஊத்து.
அதாண்டே. கிறுக்கு புடிக்கு. இந்தத் தெருவ விட்டு போயிராலான்னா. எதான் வழி கெடைக்குன்னு பாத்தா, அவ...அவதாம்லே அந்த சிறுக்கிவிள்ள உட்டாத்தானே. பட்டியப் போல ஆக்கிட்டா. ஒரு கெதிக்கும் வழியில்ல. காஞ்ச பீ மாறி இருக்கேன் மக்கா இங்கன.
சரி. விடும் வே! இந்த திருப்பு நீ இல்லைனு வச்சுக்கிடும். கொடை கழியாது. போன கொடைல நீர் மட்டையாயிப் போட்டேரு. மாடத்தி வருத்தில்ல. மாடன் ஊட்ட ஏக்கல. மகராச மாமாக்கு செவுட்டுல அடி உழுந்து. அதுக்கப்பொறவு அவரு கோயிலுக்கே வர மாட்டேண்டார். உமக்கு தெரியாதா!
ஆமா! அவனக்க ஒரு ஊட்டு. மயிராண்டிக்க சுன்னியெழும்பி வருசமாச்சு. இப்பங்கெடக்கது கிழட்டுப்பய. அவனுக்க ஒரு கொடை. அந்த மண்ணு மூட்ட இடிச்சு தள்ளனும். சில நேரங்களில் மாமாவின் குரல் அவருடையதைப் போலவே இருக்காது. அதுவும் மாடனைப்பற்றிப் பேசினாலே கொதிப்பார் கெடந்து.
நான் போய்ருக்கணும். இந்த ஊரப் பாரு. எவன் மூஞ்சிலயாது களை இருக்கா. இவன், இவந்தான் மக்கா, எல்லாத்துக்கும் காரணம். இந்த பொளையாடி மகனுக்கு கொடை மயிரு வேற.
காறி உமிழ்ந்தார். இரவுப்பூச்சிகளும், கொசுக்கடியும் அதிகமாக இருந்தது. தூரத்து மின் கம்பத்தில், வெளிச்சம் கழுத்திறுபட ஊசலாடிக் கொண்டிருந்தது. பழையாற்றின் தேங்கல் நீரில், நீர்க்கோழிகள் முழுக, கலந்திருக்கும் சப்தம் அலையாடியது.
மாமா, ஒரு புரோட்டா மாஸ்டர். ஒழுகினசேரில அவர் அளவுக்கு சால்னா, சூப், புரோட்டா, கொடல் கறி, மட்டன் ரோஸ்ட் வைக்க இன்னொருத்தன் பொறந்து வரணும். எந்த கடைலயும் அவர் ஒழுங்கா நிக்க மாட்டாரு. ஒரு வாரம். அதுக்குள்ள கிறுக்கு புடிக்கும், ஃபுல் போதைல எங்கயாவது சாக்கடைக் கெடைல கெடப்பார். இது வரைக்கும் நாலு பொண்ணு, எனக்குத் தெரிஞ்சு. மத்தது கதைகள் எத்தனையோ! பொண்டாட்டி அவர தொரத்தி உட்டுட்டா. பைசா வாங்கதுக்கு மட்டும் அப்பப்ப வந்து கலையரசி டீக்கடைக்கிட்ட நிக்கத பாத்திருக்கேன்.
லேய். கமுத்திப் போடு. வெரல நல்லா இறுக்கிக் கெட்டு. குண்டியக் கழுவுல. பேதி போய்ருக்கு.
களபம் எடுத்தியா! தண்ணி நறைய ஊத்திட்டே. கொவுந்திட்டு.
பன்னீரக் கொளைச்சு, அடை. நாடிக்கெட்ட இப்படியால கட்டுவான்.
கண்டாற வோளிக்கு சூத்தப்பாத்தியாலே.
கதம்பைய இங்கன வை. அங்க ரெண்டு வை. ரைட்டு.
தலைய இந்த செய்டு வைக்கணும். என்னத்தல படிச்ச நீ!
செம்மண் கொளைக்கும் போது தண்ணிய செய்டுல விட்டு கொளையும், மூத்திரம் பெய்ஞ்ச மாறி, இங்க கொடும் வே.
கங்கு…கங்கு எங்க? லேய் சுத்து போதும். திரும்பி பாக்காம சட்டிய உடு.
கங்கைப் பொதிந்து கதம்பைகளுக்கிடையில் செருக, உயிர் புகை மூட்டமாய் கமறியது. குளைத்த செம்மண்ணை பனை ஓலைப்பாயில் கொண்டு வந்து கொட்டினார்கள்.
லேய் இரு! ஒரு நிமிட்… கோட்டர் உடைத்து பிரேதக்குழியில் ஊற்றினார்கள்.
இல்லைனா...இவன் வேகவே மாட்டான் கேட்டியா. சிரிப்புச்சத்தம் அடங்குவதும், மூன்று ஓட்டைகளின் வழி வெண் புகை உத்திரத்தை நிரப்பி வெளியை பொத்துக் கொண்டு சிதறுவதுமாய் இருந்தது. வேப்ப மரத்திலிருந்து உதிர் சருகுகள் ஓயாது ஏதோ ரகசியம் சொல்ல விளைவது போல முணுமுணுத்து, காற்றோட்டத்தில் நின்றவர்களின் கால்களுக்கிடையில் இறைஞ்சிக் கொண்டிருந்தது. தோர்த்தும் சோப்பு டப்பாவுமாக நின்றவர்கள் நகர்ந்து வடக்காத்துப்படித்துறையை நோக்கி சென்றனர்.

நையாண்டி மேளம் உருவ, தென்னை ஓலை எரியும் நெருப்பில் தப்பட்டைகளை சூடு காட்டினார்கள். ஒத்தைக்கொட்டு உறுமிக் கொண்டு ஆரம்பமானது. நாதஸ்வரங்கள் இருபுறமும் மேலெழும்பி, ஒரு பிளிறலைப் போலவும், கனைத்தலைப் போலவும் சப்தித்தது. அது பின்னர் ஓயாது பிறாண்டும் மென் உகிர் போல பிடறியில் சொரிந்து கொண்டிருந்தது. அவ்வையார் வழக்கம் போல மஞ்சனையை விழுங்கிக் கொண்டு, கமுகம் பூவை முகத்தில் அறைந்து, மறுகையால் முந்தானையையும் சரி செய்து கொண்டிருந்தாள். மாடன் கிராமத்து படித்துறையில் பால்குடமெடுக்கும் நிகழ்விலிருந்து கோவிலை நோக்கி வந்து கொண்டிருக்கிறான். கச்சைகள் குலுங்க உடலெல்லாம் சந்தனம் மொழுக, கோலுடனும், தடியுடனும், விடைத்த காது கொண்ட தலைக் கச்சை அணிந்து, துள்ளலே நடையாக நகர்ந்து கோவிலை நோக்கி வருகிறான்.
என்னுடல் என்னுடையதல்லாதது போல சத்தங்களின், ஒலிகளின், நாதங்களின் இழுப்புகள் தாளம் தடுமாற கை, கால்கள் விடைக்க, நாக்கு பற்களுக்கிடையில் மடிந்து இழுபட, கண்கள் ரத்தக்கனலாய்த் தெறிக்க சுழன்று கொண்டிருக்கிறேன். நான்கு பேர் என்னைப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். மஞ்சனையை என் முகம் முழுதும் பூசிக் கொண்டிருக்கிறேன். கைகளில் சூலமும், கமுகம் பூவும், சம்மந்தி மாலையும் நாசியில் மணம் நிறைக்கிறது. என்னைச் சூழ்ந்து கொண்டு தப்பட்டை அறைகிறது. கொட்டின் எண்ண ஓட்டங்கள் என் மூளை நரம்புகளுக்குள் கிழிபடுகிறது. நாதஸ்வரம் உயர்கையில் மூச்சின் கடைசிக் கார்வை அறுபட்டு நான் அந்தரத்தில் மிதக்கிறேன். திரும்ப தரையில் கால்கள் அழுந்துகையில், வெறிக்கூச்சல் என் குரல் வளையிலிருந்து எழுந்து கோவிலின் உள்ளறைகளில் எதிரொலிக்கிறது. இது நான் மட்டுந்தானா? உடலினுள் இருப்பு தங்காது வெளியில் குதிக்க எண்ணும் இன்னொரு குமிழ் என்னுள் எம்பிக் கொண்டிருக்கிறது. நான் அதை வேடிக்கை பார்க்கிறேன்.
அங்கு நானல்லாது என்னுள் நிகழ்ந்து கொண்டிருக்கும் இன்னொன்றிடம் வினவ முயல்கிறேன். அதன் கோரைப்பற்கள் என்னை விழுங்கத் துடிக்கிறது. ஒரே சமயத்தில் கெஞ்சலும், உறுமலுமாக பெண்குரலில் ஆடிக் கொண்டிருக்கிறது என்னுடல். இடுப்பில் பாவாடை. மார்பில் மேற் கச்சை. கைகளில் சூலம். ரத்தம் ஊறும் நாக்கு. கோரைகளாக சிதறித் தழலும் கூந்தல். ஆட்டின் கிழிந்த கழுத்தை வாயில் உறிஞ்சிக் கொண்டிருக்கிறேன். பாதங்கள் கிழிந்து குருதி வழிய அந்த மண் பீடத்தில் மூர்ச்சையற்று வீழ்வது வரை, மேலிருந்து எண்ணிலடங்கா கயிறுகள் என் உடலில் முடிச்சிட்டிருக்கிறது. அறிய இயலாத அந்த கைகளின் அசைவில் என்னுடல் அகப்பட்டுக் கொண்டிருந்ததை நான் பின்பு மீள் செய்கையில் உணர்ந்தேன்.
காடாத்துக்கு எலும்பு பொறுக்கிக் கொண்டிருந்தார்கள். கபாலம் சிதைந்து மண் துகள்களாக இருந்தது. அதில் எஞ்சிய பெரிய ஓட்டையும், கைகால்களின் நொறுங்கிய எலும்புகளையும் வாழை இலையில் அடுக்கி வைத்தனர். மஞ்சள் பிடித்து பூஜை செய்த பின், கெண்டி நீரில் எலும்புகளைக் கழுவி, பாலூற்றி, மலர்கள் தூவி சூடங்கொழுத்தி கும்பிட்டு பிளாஸ்டிக் பொதியில் கட்டிக் கொண்டனர். சங்கிலித்துறையில் எலும்புகளை விட்டு விட்டு திரும்பி பாராது நகர்ந்து வந்தேன். மூதாதைகள் வாழும் பாதாள லோகமொன்று இதன் அடிமண்டிய பிரதேசத்தில் உண்டு எனும் நம்பிக்கை.
மாடத்தி கூட அங்க இருந்து தான் வந்தாளோ?
மக்கா, நம்ம விடுமாடத்தி என்னைக்கு வந்தாளோ அன்னைக்கு புடிச்ச சனியன் மக்கா. வாழ்க்கைய தொலைச்சாச்சு.
நடு நிசி தாண்டிய பின்னிரவு. கூகை இழுத்து விடும் ஓங்கார விளி. பழையாற்றுக்கரைச் சாக்கடையில் பன்றிகள் உருளுவதும், பின் உறுமுவதும், இடையில் நிற்கும் வேப்பமரத்துக் கிளைகளின் இடைவெளியாய் என்னுடைய போதத்தில் வந்திறங்கியது.
லேய்! அவ ஒரு தேவடியா கேட்டியா. நான் இருக்கம்போவே அவனக் கூட்டிட்டு வருவா. இன்னைய நாளு வரை என்ன மனுஷணா அவ மதிச்சதே இல்ல.
ஆமா! உம்ம சீருக்கு மதிக்கவா முடியும். எனக்குள்ளேயே முணுமுணுத்தேன்.
லேய். நான் யாரு? யாருன்னு நெனைக்க. மாடத்தியாக்கும்.
மாமாவின் குரல் இளகியது.
என்னாச்சு! என்னாச்சு…
ஒன்னும்மில்லடே. இதாக்கும். இதாக்கும் எல்லாத்துக்கும் காரணம்.
அதாண்டே ஒனக்கு வெளங்காது. லேய். தீந்தா!
கடைசி கட்டிங்கை இருவரும் நிரப்பிக் கொண்டோம்.
மக்கா. சாமியாடுதுன்னா. என்னனு நெனைக்க. அது நமக்கு கெடைக்கது இல்ல. அவ வந்து விழது. நமக்கு வேற வழியெல்லாம் கெடையாது. அது பாதாளக்குழியாக்கும். உள்ள போனவன் திரும்பதுக்கு ஒக்காது. அங்கனயே கெடந்து சாக வேண்டியதான்.
இவ, நம்ம மாடத்தி இருக்காள்ளா, லேசுபட்டவளா. செரியான உக்கிரம் பிடிச்சவ. யார் கம்பைக்கும் அடங்க மாட்டா. அவ கதை தெரியுமா உனக்கு.
சிவங்கிட்ட வரம் வாங்குனவளாக்கும். இங்க ஒழுகினசேரி ஊருக்கு அங்க எங்கயோ கெழக்க இருந்து வந்திருக்கா. தேவிக்க உடமபுல இருந்து சப்த தேவதைகள் வந்தாங்களாம். அதுல அவளுக்கு நாக்குல இருந்து அவதாரம் எடுத்தவளாக்கும்.  மகிசாசுரன்னு அரக்கன கொல்லதுக்கு உருவானவள்ள மொதல்ல வந்தவளாக்கும். அவன தலைய வெட்ட வெட்ட அந்த ரத்தத்தில இருந்து திரும்ப உருவாயிருவான். அதுனால சிந்தச் சிந்த ரத்தத்த குடிச்சவளாக்கும் நம்ம மாடத்தி. அதான் மூணு ஆட்டு ரெத்தத்த குடிச்சாலும் அடங்க மாட்டுக்கா.
எங்கிருந்தோ ஒரு ஒரு இரவுப்பறவை எங்கள் தலைக்கு மேலே சிறகுகள் படபடத்த பறந்து சென்றது.
ஆங்…சத்தியம்!
அப்படியாக்கும் இங்க வந்தா. முன்னைலா, மனுஷ பலியாக்கும். இப்பம் ஆடுங்கெடையாது. முட்டையும், தடியங்காயும், கோழியும் கொடுத்து பசி தீக்காணுகோ. கள்ளவாளிப்பயக்கோ.
சரி அது கெடக்கு, நான் சொல்ல வந்தது அதில்ல டே. கேட்டியா!
அவள வருத்தி ஆடுதம் பாத்தியா. அவ எப்பவும் ஏங்கூட இருக்க மாறி ஆயிட்டு.
அதுக்குத் தான் இந்தக் குடி. இது இல்லைனு வை. நான் செத்தேன். அவ என்ன தின்னு போடுவா.
உனக்கு தெரியாது. அன்னைக்கு எனக்க மத்தவா, அவ உண்மையிலேயே பாத்துட்டா.
பொறவு நான் இப்பம் எங்கயும் போகதுங்கெடையாது.
என்ன நடந்துச்சு.
ஒன்னுமில்லடே. நான் அவக் கழுத்த நெறிக்கேன். எனக்கு தெரியல. அவ பாத்தது அங்க என்னைய இல்ல. அவ நல்லா பயந்துட்டா. அங்க களபமும், மஞ்சனையும் மணந்துனு அதுக்குப்பொறவு ஒரு நா போதைல இருக்கம்போ சொன்னா.
ஆமா மக்கா, நான் தனியா இருக்கம்போ கண்ணாடிய பாக்கவே மாட்டேன்.
அன்னைக்கு நான் பாவாடைக்கட்டிக்கிட்டு என் முலைய, நானே உறிய மாறி சொப்பனம். எந்திரிச்சா ஒரு ரெண்டு மணியிருக்கும். அடுத்த நாளாக்கும் ஆடிப்பூரம்.
அவ என்ன உட மாட்டா.
என்னத்த செய்யதுக்கு, குடிச்சேன்னு வை. ஸ்டடி ஆயிரும். பொறவு போட்டி மயிருனு நான் பாட்டுக்கு இருப்பேன்.
என் பொண்டாட்டி ஒரு நா சொன்னா, உனக்கு மேல நாத்தம் அடிக்குனு. எனக்கு புரியல. என்னட்டினா, பொண நாத்தம் அடிக்கு மனுசா. எங்க கெடந்து வாரியும் இங்கனனு கேட்டா. அதுக்க முன்னாடித்தான் குளிச்சு சூடங்கொழுத்தி மாடத்தியக் கும்பிடுட்டு வந்தேன்.
ஒன்னுஞ்செரியில்ல கேட்டியா. இங்க இருந்து போனா விமோசனம்.
சரி விடும் வே. நான் பீடியைச் சொருகி பற்ற வைத்தேன். தொண்டைக்குழி வழி அந்த புகை நெஞ்சுக்கூட்டில் இறங்குவது வரை இழுத்து விட்டார்.
காற்றில் பீடத்தின் மணிச்சத்தம் மெல்ல அலங்கிக் குலுங்கியது.
லேய்! நான் மாடத்தியாக்கும் லேய். வெட்டிழுத்தது போல அவரது கண்கள் சொருகி மேலே சென்றது. நாசி வழி ரத்தம் கசிந்தது. மண்ணில் கமுந்து கைகால்கள் இழுபட நெஞ்சு, சரளைக் கற்களில் உராயத் துடித்துக் கொண்டிருந்தார்.
ஆம்! நீங்கள் யூகித்தது சரிதான். நான் கேட்டது ஒரு உக்கிரமான் பெண் குரல்.


புதன், 6 மே, 2020

ஏதோ ஒன்று

மீட்ட இயலாத இசைக் கருவியை வைத்திருக்கிறேன்
என் பாடல்கள் பாடப்படவே இல்லை
இரவின் கமகங்கள் 
ஒரு தூறல் மழை போல அலைக்கழிகிறது
பகலின் மேகமற்ற வானம் 
கால்களற்ற ஊர்வன போல
நகர்கிறது
அவள் முகமோ குரலோ வாசமோ ஏதும் இன்று இல்லை
ஒரு கதைப்பாடல் போல அவள் என்றோ உருமாறியிருந்தாள்
ஒரு வேண்டாத உறுப்பு போல இந்த இசைக் கருவியை வைத்திருக்கிறேன்
அதன் நரம்புகளில் இருந்து ஒரு பழைய பாடல் 
பழுத்த இலை போல உதிர்கிறது
சருகுகளின் அடிப் பொழுதுகளில்
உறங்குகிறேன்
அவள் முகமோ குரலோ வாசமோ ஏதோ ஒன்று


இசை

இரு வானங்களுக்கிடையில் என்ன உண்டு 
மௌனம் என்றாய்
என் இசைக் கருவிகள் துருப்பிடித்திருந்தன
நீ வெறுமனே என் முன்னே அமர்ந்திருக்கிறாய்
உன் இருப்பில் 
நான் அமைதியற்றிருந்தேன்
இறுதியில் நீ அதனை செய்தாய்
சுக்கு நூறாகும் படி அனைத்தையும்
உடைத்தெறிந்தாய்
இரு மண் துகள்களுக்கிடையில் என்ன உண்டு
ஒரு வானம் என்றாய்
பின் ஒரு மௌனம் என்றாய்

- தாகூர்

பறத்தல் அல்லது பாடுதல்

நீ என்னைப் பாட அழைத்தாய்
குழந்தை அன்னை அறியாது மறைத்து வைத்திருக்கும் 
மிட்டாய்த் துணுக்கினைப் போல என் பாடல்களை வைத்திருந்தேன்
சங்கடங்களும் திருப்தியின்மையும்
ஒரு கூன் போல என் குறுக்கில் பொதியப் பட்டிருப்பதைப் பார்த்தாய்
எனக்கு நீலச்சிறகுகளை அளித்தாய்
நான் அறிவேன்
நான் அழிவற்றதைப் பாடுபவன்
உன் விரல் சுட்டிய திசையினில்
நான் பறக்கிறேன்
எல்லையற்று விரிந்த இந்த நீர்மையின் உப்பினைப் பருகுவேன்
நீ பறத்தல்
நான் என் சிறகுகள்

- தாகூர் 


வேணு

நீ என்னை முடிவற்றவனாய் ஆக்கினாய்
இவ்வுடைந்த வெற்றுப் பாத்திரத்தில் 
மீள மீள நிரம்பிக் கொண்டிருக்கிறது
உன் மழை
சின்னஞ்சிறிய என் துளைகளின் வழி முகிழ்க்கிறது உன் மூச்சின் பாடல் 
நீ! உன் ஸ்பரிசம் தொட்டு மீண்டதும்
அழிவற்றதாகிறது
என் உலகம்
என் கைகளுக்குள் அடைபடாத ஒன்றை எப்பொழுதும் பரிசளிக்கிறாய்
இன்னும் இன்னும் என்னுள் நிரம்புகிறாய்
நீ நிரம்ப நிரம்ப நான் நெகிழ்ந்து
கொண்டே இருக்கிறேன்
நீ என்னை முடிவற்றவனாய் ஆக்கினாய்!

தாகூர்

யூமா வாசுகி


இந்த அகால இரவின் சன்னல்களின் வழியேயே அறிகிறேன் உன்னை.  இருண்ட மழை நாளின் ஈசல்களாய் உன் முகம். என் உள்ளறையினுள் தனிமையில் அமர்ந்திருக்கிறேன். அவ்வப்பொழுது எரிந்தணையும் வெளிச்சத் துளிகளிலிருந்து வரைந்தெடுக்கிறேன், உன்னை வெறுப்பதற்கான நியாயங்களை. என் ஓவியத் திரையினுள் என்னவாயிற்று. ஒவ்வொரு முறை  என் வெளிச்சத்தைத் தேடி வரும் உன் முகத்தின் ஈசல்கள். அதைப் பற்றிக் கொள்கையிலேயே செத்து வீழும் உன் சிறகுகளின் கடைசித் துடிதுடிப்பு. ஆம். திரும்பத் திரும்ப என்னிலிருந்து உதிரும் வன்மத்தின் ஈரத் துணுக்குகளின் பல்லாயிரம் நிறங்களைச் சிதறடிக்கிறது உன் ஞாபக ஊற்று. என்னுள் சொல்லிக் கொள்வதும் உடைந்தழுவதும், மீற மீற முயற்சிப்பதும் தோற்று, உன்னுள் வந்து விழுகிறேன். உன் முகமல்லாத ஒன்று என் வெளிச்சத்தினுள் அணைவதில்லை. நீயல்லாத இந்த ஓவியத்தாள் வெளிச்சத்தின் கனத்த வெம்மையினுள் பொசுங்கிக் கொண்டிருக்கிறது. சன்னல்களை  இனி மூடப்போவதில்லை. நிறங்களின் ஈரம் உருகியோடுகிறது. இருண்ட மழை நாட்கள் முடியப் போவதே இல்லை.


அப்பாவின் டைரி


இரண்டு விதமான கவிதைகளை அறிந்திருந்தேன்.

வலியின் ரணமும், ரணத்தின் ஆசுவாசப்படுதலும்.

அப்பாவின் டைரியில் பெரும்பாலானவை பிரார்த்தனைகள். அதுவும் ஒரு மன்றாட்டு. அப்பாவின் கடவுளும் அப்பாவைப் போலவேதான். தன் அப்பாவிடம் மன்றாடிக் கொண்டிருந்தார். ஆனால் நான் திடுக்கிட்டது அதன் மத்தியில் செருகி வைத்திருந்த படம். நிர்வாணமான ஒரு கருத்த பெண், இன்னும் கருமையான விடைத்த முலைக் காம்புகளுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கவிதை இவ்வாறு தொடங்கியது.

உன் கனவினுள் மட்டுமே
நான் வாழ்கிறேன்
வலியினால் உருக்கொண்ட நிலம் என் உடல்
தன்னந்தனியினுள் அமிழ்ந்திருக்கிறது
அதன் கொடுக்குகள்
நான் இங்கிருக்கிறேன்
என் உடலினுள் மீள மீள அதை சுவீகரிக்கிறேன்
எல்லையின் இப்புறமும் அப்புறமும்
பல நூறு துண்டுகளாய் சதைத்து
உதிர்த்து வைக்கிறேன்

வலியினால் உருக்கொண்டது என் நிலம்
உன் கனவினுள் வாழ்கிறது என் வலி

தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது மலை. இரவுகளில் என் தனிமையுடன் அமர்ந்திருக்கின்றன. சொல்லொணா ஒன்றினை அவைகள் தன்னில் மடித்து வைத்திருக்கின்றன. நாற் புறமும் இருள் சூழ அமர்ந்திருக்கிறேன். கண்கள் பழக்கப்பட இயலாத இருள். ஒரு அடர் திரவம்.

இறைவா! அவனை மன்னித்து விடு.






ஹிப்பி

கட்டுப்பாடின்மை ஒரே சமயம் தன் இரு புறங்களைக் கொண்டுள்ளது. முழுக்க முழுக்க பாவனையானதாகவும், குழந்தைத்தனமானதாகவும். மனிதர்களுக்குள் பெரும்பாலும் இந்த பாவனையின் அதன் பல்வேறு பிம்பங்களின் ஊடாக மட்டுமே சுதந்திரத்தனம் என்பது நிலை கொள்வதை மிக அணுக்கமாக என் மூலமே உணர்ந்திருக்கிறேன். இருப்பது போல ஆனால் இல்லை.  ஆனால் பழங்குடித் தன்மை அப்படி அல்ல. அது கொண்டாட்டத்திற்காக ஒன்றிலிருக்கும் ஆதி மிருகம். அதே சமயம் அதன் மூர்க்கமும் வன்மமும் கூடத்தான். பாலினம் கடந்த வன்மம். ஓஷோ அதைத் தவற விட்டிருந்தாரா? இல்லை அதை சிதறடித்து கலங்கடித்தார் என்று சொல்லலாம். எல்லாவற்றிலும் நம்பிக்கை இழக்கும் சமூகம் என்னவாகும். ஒன்று முழுக்க தன்மய நோக்குடன் அத்தனையும் நோக்கும் ஒரு சமூகம் உருவாகியிருக்குமோ. இரு உலகப் போர்களுக்குப் பின் முற்றிலும் அபத்தக் குழியில் விழத் துடிக்கும் இளைஞர்களின் தலைமுறையில் ஹிப்பித் தனம் பீடித்தது. அவர்கள் தன்னளவிலேயே கலகக் காரர்களாக இருக்க விரும்பினர். மதம் கடந்த பால் கடந்த உடல் கடந்த ஒரு சமூக அமைப்பை உருவாக்க எத்தனித்தனர்.

உண்மையில் போதை எப்பொழுது இயற்கையினுள் ஒன்றுகிறது என்ற கேள்வியே அபத்தமாக இருந்தது. மொத்த இயற்கையும் சற்று போதைத் தனத்துடன் தான் இருக்க முடியும். தர்க்க ஒழுங்கற்ற அதன் மர்மமே அதன் இயல்பு. மனிதன் அதிலிருந்து தப்ப விளைபவனாகவும் அதனுள்ளே மூழ்கி சாகக் கூடியனாகவும் இருக்கிறான். அது தான் அவன் பிரச்சனை. ஒரே நேரத்தில் அவன் அதனால் ஈர்க்கவும் அதை வெறுக்கவும் நினைக்கிறான். இந்த முரண்களுக்குள் தான் ஹிப்பியும் இருந்திருக்க முடியும். அவன் அதனை அள்ள அள்ள இன்னும் இன்னும் என்று அது நிறைந்து கொண்டிருந்தது.

கடலினுள் நான் இருக்கிறேன்
என்னுள் கடல் இருக்கிறது

போதையினுள் சுய போதமின்றி குதிக்கிறோம். பின் திரும்பவும் ஒரு மைதுனம் போல அதனைத் திரும்ப திரும்ப செய்யத் துடிக்கிறோம். கட்டற்று இருப்பது என்பது போதையன்றி வழியின்றி போகும் பொழுது நாம் முழுக்க தோற்கடிக்கப்பட்டிருப்போம்.

தன் தர்க்கங்களிற்குள் அதனை அகப்படுத்திக் கொள்ள அவன் கலையைப் படைத்தான். ஆனால் கலை இயற்கையை மறு உருவாக்கம் செய்வதன்றி வேறென்ன. அதன் ஒழுங்கற்ற ஒன்றே அதை அழகாக்குகிறது.

ஒழுங்கற்றது வடிவமற்றதாய் உள்ளது. 
பிரக்ஞைக்குள் அகப்படாது இருப்பதை கடவுள் ஆக்குகிறோம். மூலமாய் வடிவம் ஒழுங்கு அமைகிறது. பின் நிலைத்த தன்மையை அதற்கு அளிக்கிறோம். மாறாத ஒன்றாய் அதை ஆக்குகிறோம். கட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கும அதனுள் பீறிடக் காத்திருக்கும் எதிர் நிலைக் கடவுளர்களை உருவாக்குகிறோம். முரண் தனக்குள் சமநிலையை அடைகிறது.

ஆனால் எப்பொழுதும் நேர் எதிர் நிலைகளில் அது அப்படி அமைந்து விடுவதில்லை. ஒரு இரண்டுமற்ற நிலை மனிதர்களாகவே நாம் பெரும்பாலும் இருக்கிறோம். 

கனவு

கனவு மொழியாவதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். வெவ்வேறு தளங்களுக்குள்புகுந்து வெளிவருதல். கால இடமற்ற வெளி ஒன்று ஸ்தூலமாக உருவாகிக் கொண்டிருக்கும் பொழுதே இல்லாமல் ஆவதும். காலம் என்ற அளவை உடலால் பிளவுறுதல். உடல் வலி மட்டுமே ஆனதாய் அந்த வலியினால் உருவாகும் மொழி கொண்டதாய் ஆகி விடுதல். 

மரணம் நித்தியத்துவத்துடன் அலையாடியது. மரணம் பற்றி நான் இவ்வாறு நினைத்துக் கொண்டேன்.

"கடல் அலையினில் அலைக்கழியும் மதுக்குப்பி போல"

துரத்திக் கொண்டிருக்கும் ஒன்று திடுமென்று நின்றது. அருகில் அன்போடு அழைத்தது. அதன் சொற்கள் அழைத்துச் சென்ற தூரம் ஒளி கொண்டிருந்தது. ஒளி என்பது நிலையற்றதாய் இருந்தது. சிறிது துளிர் போதும். இருள் வந்து அணைந்து கொள்ளும். பின் இருள் மட்டுமே ஆனது.  இருள் தன் பிரத்யேகமான காட்சியினை ஒளிர்த்தது.