செவ்வாய், 1 மார்ச், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -58

     

Author: Nikos Kazantzakis

    திடீரென அவரது உடல் அதிர்வடைந்தது. உடலின் மொத்த எடையையும் வலுக் கொண்டு  ஊன்றித் தலையைத் தூக்கிப் பார்த்தார். கலங்கியிருந்த கண்கள் ஒரு குவியமின்றி அலைந்தன. வாய் திறந்திருந்தது. மூச்சை அழுத்தி இழுக்கும் சத்தம் கேட்டது. வெட்டு வந்தது போல இழுத்துக் கொண்டிருந்தது முகத் தசைகள். அறைவாசலில் அவரைப் பார்த்துக் கொண்டிருந்த மேரியின் மகன், தன் வலது கையை நெஞ்சிலும், உதடுகளிலும், நெற்றியிலும் வைத்து வணக்கம் தெரிவித்தான்.

அருட்தந்தையின் உதடுகள் அசைந்தன. 

    "நீ வந்துவிட்டாய்! நீ வந்து விட்டாய்!"  தனக்கு மட்டுமே கேட்கும் குரலில் முணுமுணுத்தார். அவருக்கு வாசலில் மங்கலான ஒரு உரு மட்டும்தான் தெரிந்தது. நகர முடியாது, பக்கவாட்டில் இழுத்துக் கொண்டிருந்தது உடல். ஆனால் விவரிக்க முடியாத ஆனந்தம் அவர் கண்களில் பனிந்தது. முகம் பொலிந்து ஒளிர்ந்தது, ஆனால் எல்லாமே ஒரே ஒரு ஒற்றைக்கணம் . பின்பு எல்லாம் தளர்ந்து வீழ்ந்தன. கண்ணிமைகள் மூடின. நாசியடைத்து மூச்சு நின்றது, திறந்த வாயிலிருந்து "ஹக்" ஹக்" என்று எதையோத் துப்புவது போல சப்தம் வந்தது. இரு கைகளும் மார்போடு ஒட்டிப் பிணைந்திருந்தது. உள்ளங்கைகள் உடலோடு அழுத்தமாக ஒட்டியிருந்தது. 

    அதே சமயம், முற்றத்திற்கு வெளியே இரு ஒட்டகங்கள் வந்து நின்றன. துறவிகள், அந்த முதியப் போதகர் கீழே இறங்க உதவி செய்து கொண்டிருந்தனர்.

    அவர் உயிருடன் இருக்கிறாரா? சொல்லுங்கள் தந்தையே, அவர் உயிருடன் இருக்கிறாரா!. ஜான் கவலை தோய்ந்த குரலில் விசனித்தான்.

    அவர் இன்னும் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார். அவரால் எல்லாவற்றையும் பார்க்கவும், உணரவும் முடிகிறது. ஆனால் பேச முடியவில்லை, அருளாளர் ஹப்பாக்கக் பதிலுரைத்தார்.

    முதியத்துறவி முற்றத்திலிருந்து வாதிலை நோக்கி சென்றார். அவரைத்தொடர்ந்து புதியவனும், பின் துறவிகளும் வந்துகொண்டிருந்தனர். கையில் மதிப்பு வாய்ந்த ஒரு பெட்டியை அவர் வைத்திருந்தார். அதில் நோயுற்றவர்களைக் குணப்படுத்துவதற்கான மருந்துகளும், மூலிகைகளும், மந்திரத் தாயத்துக்களும் இருந்தது. அவர் வருவதைப் பார்த்ததும் வாசலில் கட்டியிருந்த நாய்கள் தன் கவைக்கிடையில் வாலைச் சுருட்டிக் கொண்டுத் தலைத் தாழ்த்தி நிலத்தில் குத்திட்டிருந்தன. அவைகள் வாயைத் திறக்காமலேயே மூக்கினால் முணகும் ஒலி, ஒரு மனித விளி போலவே ஒலித்தது.

    முதிய துறவி, மற்றவர்களைப் பார்த்து "இல்லை" என்பது போலத் தலையைப் பக்கவாட்டில் அசைத்தார். மிகவும் தாமதமாகிவிட்டது. அவரால் இப்போது பேசமுடியாதே! என்று சொல்லிக்கொண்டவர். நேராக மடாதிபதியின் அறையை நோக்கி சென்றார். அங்கேக் கீழே ஈச்சம் பாயில் அவரது உடலைக் கிடத்தியிருந்தனர். முதியத் துறவி மண்டியிட்டு, தன் கைகளை நெஞ்சில் வைத்துப் பார்த்தார். பின் அவர் உதடுகளுக்கு அருகில் முத்தமிடுவது போல முகம் தாழ்த்தி மூச்சினைக் கூர்ந்தார்.

    நான் மிகவும் தாமதமாக வந்துவிட்டேன்! இனி செய்ய ஒன்றுமில்லை. "நீவீர், விண்ணுலகில் நிலை கொள்க! தந்தையே! என்று மேலே பார்த்துக் கைகளை உயர்த்தினார்.

    ஒட்டுமொத்தமாக அழுகைகளின் கூக்குரலில் அறை நிறைந்தது. துறவிகள் எல்லோரும் மண்டியிட்டு அவரது உடலை முத்தமிடத் தொடங்கினர். ஒவ்வொருத் துறவியும் அவரவர்களது சேவையின் அனுபவத்தின் படி அவரது உடலை முத்தத்திற்காகப் பிரித்துக் கொண்டனர். அருளாளர் ஹிப்பாக்கக், அவரது கண்களுக்கும், மற்றத்துறவிகள் அவரது நாடியிலும்,  இறுகிப்பிடித்திருந்த உள்ளங்கையிலும், புதியவன் அவரது கால்களிலும் முத்தங்களிட்டனர். ஒருவர் அவரது பெருமை மிகு புனிதக்கோலை எடுத்து வந்து அவருக்கு அருகில் வைத்து அவருடைய அருள்த்தன்மை கெடாமல் பார்த்துக் கொண்டார்.

    முதியத்துறவி அழவில்லை. அவரது கண்கள் ஆச்சர்யத்துடன் அருட்தந்தையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தது. தூயக் குழந்தைத்தனமான புன்னகை இன்னும் அவரது உதடுகளில் மிளிர்ந்தது. அவரது முகமே ஏதோ ஒரு அழியாத ஜோதியின் ஆட்கொள்ளலில் பொலிந்து ஜொலிப்பதை போல, மிளிர்வு. மறையாத சூரியன் இன்னும் அவரினுள் ஒளிர்கிறது. எங்கே அந்தச் சூரியன்.

    முதியதுறவி இன்னும் மரணித்த அவரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். துறவிகள் தங்களின் இறுதி அஞ்சலியை மண்டியிட்டு அவருக்கு செலுத்திக் கொண்டிருந்தனர். அவரது காலடியில் ஜான் அமர்ந்திருந்தான். வழக்கமாக அவரின் தளர்ந்த பாதங்களைப் பிடித்து விடுவதைப் போலவே, அவரின் பாதங்களைத் தன் விரல்களால் வருடினான். பின் முத்தமிட்டு அழுதான். முதியத்துறவியின் பார்வை ஒவ்வொருத்தர் முகங்களாக நகர்ந்து கொண்டிருந்தது. திடீரென அவர் அவனைக் கவனித்தார். அமைதியாக பின்னாலிருந்த மூலையில் அசைவற்று ஒரு நிழல் போல இருளில் நின்று கொண்டிருந்தான் மேரியின் மகன். கைகளை மார்புக்கு குறுக்கே இறுக்கி நிற்கும் அவனது முகத்திலிருந்து அதே குழந்தைத்தனமானத் தூய சிரிப்பும், அமைதியும் கிளர்ந்து அந்த அறை முழுதும் பரவியது.

    அடுத்த நாள், சூரியன் தன் வெம்மையான சென்னிறக் குழம்புகள் பொதிந்தக் கீற்றுக்களை பூமியை நோக்கி விடுவித்தது. பாலைவனம் எரிந்து கொண்டிருந்தது. அங்காங்கே மணல் புயல்கள் உருவாகிப் புழுதிப்படலம் வானம் வரை படர்ந்தது. கட்டவிழ்க்கப்பட்டக் காற்று நிலத்தின் தோலைக் குதறிக் கிழித்துப்  பெயர்த்தெடுத்தது.  மேகமற்ற வானத்திற்குக் கீழே புழுதியப்பியப் பழுப்பு நிற உலகம் ஒன்று புதிதாக உருவாகியிருந்தது. மடாலயத்தின் வாசலிலில் கட்டியிருந்த, கருப்பு நாய்கள் இரண்டும் உடலைச் சுருக்கித் தலையைக் கவட்டைக்குள் பொருத்திக் கண்களை மறைத்துக் கொண்டன, அதன் முகம் தவிர்த்து உடல் முழுதும் புழுதி மயிர்கள் குத்திட்டு வளர்ந்திருந்தன. ஒட்டகங்கள் நிலத்தில் குந்தித் தன் கண்களை மூடிக் கொண்டு அசைவற்று, அமைதியாக அமர்ந்திருந்தன. பார்க்கும் திசையெல்லாம் புழுதி மட்டுமே நிறமாக எல்லாம் உருமாறிக் கொண்டிருந்தது.

    அவர்கள் தங்கள் அருட்தந்தையின் உடலை நறுமணத் தைலங்களால் கழுவி, உடைகள் அணிவித்துப் பின், இறைவனின் அழிவற்ற இருப்பில் அவரது ஆன்மா நிலைத்திருக்கச் சடங்குகளும், பிரார்த்தனைகளும் செய்தனர். பின் தலை முதல் கால் வரை கனமானப் போர்வை போன்றத் துணியால் இறுக்கி மறைத்துப் பொட்டலம் போலக் கட்டினர். தாங்களும் உடலையும் முகத்தையும் ஒழுங்காக மூடிக் கொள்ளும் வகையில் உடுத்திக் கொண்டுத் தயாராகினர். ஒருவர் பின் ஒருவராகத் துறவிகள்,  மடாதிபதியின் உடலைத் தூக்கிக் கொண்டு ஒரு சங்கிலிப் போலப் பிணைந்து மெதுவாக அப்பாலைவன நிலத்தில் சென்று கொண்டிருந்தனர். தடுமாறும் பொழுதெல்லாம் மற்றவர்களின் உடல் எடையினால் சம நிலைப்படுத்திக் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தனர். காற்றின் இழுப்பில் அவர்கள் சாய்வதும் பின் மீள்வதுமாய் இருந்தது. ஒரு பதாகை போல அவர்களின் தோள்களின் மேலே அவரின் உடல்ப் பொட்டலம் இருந்தது. பாலைவனம் கடலலையில் தோணி போல அலங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் தங்கள் குருமார்களைப் புதைக்கும் இடுகாடு இருக்கும், பாலைவனத்தின் கிழக்குப் பகுதி நோக்கி ஒரு பாம்பு போல நெழிந்து நெழிந்து சென்று கொண்டிருந்தனர்.

    இந்தப் பாலைப்புயலின் காற்று, நம் தந்தை ஜெகோவாவின் மூச்சு, ஜான் தனக்கு எதிரே வந்து கொண்டிருக்கும் மேரியின் மகனைப் பார்த்து முணுமுணுத்தான். இது எல்லாப் பசுமையையும் அழிக்கும், வசந்ததின் நிலம் எரிந்து வாடும். நம் வாய்களில் மணலை அள்ளி நிரப்பும். நாம் இந்தப் புனித எச்சத்தை அங்கே தூரத்தில் தெரியும் பள்ளத்தில் போட்டால் போதும். பாலையின் மணல் தானாக எல்லாப் பக்கத்திலும் இருந்து விழுந்து மூடிக் கொள்ளும்.

    அவர்கள் மடாலயத்தின் முற்றத்தைக் கடக்கும் கணம், தன் தோளில் சுத்தியலை வைத்துக் கொண்டு தூரத்தொலைவில் பனிப்படலம் போல புழுதிபடிந்து சீறிக் கொண்டு வேகமாக வீசும் காற்றையும், புழுதிப்புயலால் இருண்டுகிடக்கும் வானத்தையும் பார்த்து நிற்கும் செந்தாடிக்காரனைப் பார்த்தனர். புழுதி போர்த்திய வெளியில் தோன்றியும் மறைந்தும் தெரிந்தது அவன் ஆகிருதி. செபெதீயின் மகன்,  புழுதிப்படலத்தினுள், பாலைவன ஓநாய்ப் போல முன்னே, புழுதியுருவாய் அந்தக் கொல்லன் தெரிவதைப் பார்த்து நடுக்கத்துடன் தன் அருகில் வரும் இளைஞனின் கைகளைப் பற்றிக் கொண்டான்.

    அது யாராக இருக்கும்? நீ அவனைப் பார்த்தாயா? தன்மையானக் குரலில் ஜான் கேட்டான்.

    ஆனால் மேரியின் மகன் பதில் பேசவில்லை. கடவுள் தன் எல்லாச் செயல்களையும் கச்சிதமாகத் தனக்கு வேண்டியத் தருணத்தில் நிகழ்த்துகின்றார். பார்! என்னையும், யூதாசையும் ஒருங்கே உலகின் கடைசி மூலையான இப்பாலைவனத்திற்கு வரவழைத்திருக்கிறார். அப்படியென்றால் எல்லாம் சரிதான்! உன் விருப்பப்படி எல்லாம் நடந்தேறட்டும்! என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு சிரித்துக் கொண்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக