செவ்வாய், 1 மார்ச், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -60

     

Author: Nikos Kazantzakis

    முதியத் துறவி மூச்சை இழுத்துக் கொண்டு பேசத் தொடங்கினார். நானும் உன்னைப் போலத்தான். என்னுடைய இளமையில் உன்னைபோலவே துன்பங்களால் வேதனைப்பட்டேன். கடவுள் தன் அச்சுறுத்தும் கரங்களால், என்னைச் சோதனைக்குள்ளாக்கினார். நான் எதுவரை, எவ்வளவு காலம் தாக்குப் பிடிப்பேன் என்று பார்க்க நினைத்தார். எனக்கும் பலப்பல சபலங்கள் இருந்தன. ஆனால் அவை காட்டுமிராண்டித்தனமான முகங்களுடன் வரும் சபலங்கள் அல்ல. இனிமையும், மகிழ்வும் கொள்ள வைக்கும் அடக்கி வைக்கப்பட்ட சபலங்கள். நான் அதைக் கண்டே பயந்தேன். அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே இந்த மடாலயத்திற்கு வந்தேன்,  நீ செய்தது போலவே. ஆனால் கடவுளின் வழிகள் திசைகளற்றது. என்னைத் துரத்தி வந்த அவர், இங்கு சரியாக வந்து என்னைப் பிடித்துக் கொண்டார். ஒரு அழகான பெண்ணின் வடிவில். ஐயோ! அந்த சபலத்திற்கு முன் நான் வீழ்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. ஒரு வேளை கடவுளின் விருப்பமும் அதுவாகத்தான் இருந்ததா? ஒரு வேளை  அதற்காகத்தான் அவர் என்னை இவ்வளவு வேதனைகளுக்கும் உள்ளாக்கினாரா? ஆனால் அதன் பிறகு நான் அமைதியானேன். என்னைத்துரத்தியக் கடவுளும். நாங்கள் எங்களுக்குள் சமரசம் செய்து கொண்டோம். நாங்கள் இப்பொழுது நண்பர்கள் ஆகிவிட்டோம். அதே வழிதான் உனக்கும். நீயும் கடவுளுடன் சமரசம் செய்து கொள்வாய். குணப்படுவாய். 

    மேரியின் மகன் தலையைப் பக்கவாட்டில் அசைத்துக் கொண்டே முணுமுணுத்தான். "அவ்வளவு எளிதாக எனக்கது நிகழும் என்று தோன்றவில்லை." இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அமைதியாக நின்றனர். அவர்களின் சீரற்ற மூச்சொலிகள் இருளினுள் வெளித்தது.

    "எனக்கு எங்கிருந்து தொடங்க எனத் தெரியவில்லை" ஏதோ சொல்ல உந்தியவன், "நான் இன்னும் தொடங்கக் கூட இல்லை எனும் போது எனக்கு என் மேலேயேக் கேவலமும், வெறுப்புமாக இருக்கிறது."

    துறவியின் நிலையானக் கைகள் இன்னும் அவனது கால் மூட்டினைத்தான் தழுவிக் கொண்டிருந்தது. "எழும்பாதே!" அவர் கடுமையானக் குரலில் கட்டளையிட்டார். "எழும்பிச் செல்ல உந்தாதே!" கேவலமும் ஒரு சபலம் தான். அதை வெளிப்படுத்து! அமைதியாகவும், பொறுமையாகவும் நான் கேட்கும் கேள்விகளை உள்வாங்கிப் பதில் சொல். 

"நீ எதற்காக இந்த மடாலயத்திற்கு வந்தாய்"

"என்னைக் காப்பாற்றிக் கொள்ள"

"யாரிடமிருந்து? எதற்காக? உன்னைக் காப்பாற்ற வேண்டும்"

"கடவுளிடமிருந்து"

"கடவுளிடமிருந்தா!" துறவி அழும் குரலில் தழுதழுக்கக் கேட்டார்.

"அவர் என்னை வேட்டையாடிக் கொண்டிருக்கிறார். கூர்மையான உகிர்கள் கொண்ட பறவை போல என் தலைக்கு மேலே பறக்கிறார். தன் நகங்களைக் கொண்டு என் மண்டை ஓட்டை உடைத்து, உள்ளே உள்ள மூளையை, என் இதயத்தை, என் அந்தரங்க உறுப்புக்களைத் துளைத்துக் குதறுகிறார். என்னுள்ளிருந்து நிணம் தெறித்துச் சிதறுவதை போல உணர்கிறேன்."

"எங்கேயிருந்து"

"செங்குத்தானப் பாறைகளிலிருந்து"

"எந்தச் செங்குத்துப் பாறைகள்"

"அவனுடைய மலைமுகடிலிலிருக்கும்!, அப்போது எனக்கு எழுந்து கைகளை உயர்த்திக் கத்த வேண்டும் போலிருக்கும். நான் என்னக் கத்துவேன்?. என்னைத் தனியாக விடு! என்னிடம் பேச வேறு எந்த வார்த்தைகளுமிருந்ததில்லை! ஒரு தனித்த வழிதவறிய விலங்கு எங்கு செல்ல என்பதை அறியாமல்,  பாலைவனத்தின் பாழ் வெளியை நோக்கிக் கத்திக் கொண்டே இருக்குமே, அது போல நானும் வியாபித்திருக்கும் வானத்தை நோக்கிக் கத்துவேன். ஆனால் அவன் என் கதறலை, வலியை நிராகரித்தான். அவனிடமிருந்து எந்த சாத்தியமானப் பதில்களும் இதுவரை வந்ததில்லை. அதனால் நான் திரும்பத் திரும்ப அவனை விளிப்பேன், ஓ! நீ என் வாதைகளின் வேதனையை நிராகரிக்கிறாய் இல்லையா! அப்படியென்றால் நீ என்னை வெறுக்கும்படியானச் செயல்களை நான் செய்வேன்!. அதன் மூலம் என்னை உனக்குக் காட்டுவேன். அப்பொழுது என்னை நீ மறுதலிக்க முடியாமல், விட்டு அகல்வாய். என்னைத் தனியாக இருக்க விடுவாய். அதற்காகத் தான் நான் பலரும் செய்யத் துணியாத, எனக்குச் சாத்தியமான பாவங்களையெல்லாம் செய்யத் தொடங்கினேன்.

    "சாத்தியமான பாவங்களுக்குள்" துறவி இன்னும் விசும்பிக் கொண்டிருந்தார்.

    ஆனால் இளைஞனுக்கு அவரின் குரல் கேட்கவில்லை. அவன் தன் கோபத்திலும், வலியிலும் அடித்துச் செல்லப்பட்டான்.

    "எதற்காக அவன் என்னைத் தேர்ந்தெடுத்தான், என்னுடைய மார்பைக் கிழித்து அவன் பார்த்திருப்பானானால், அதில் எண்ணிலடங்கா அரவங்கள் மொலுமொலுத்துக் கொண்டிருப்பதைக் காண்பான். ஒன்றை ஒன்றுப் பிணைந்துக் கொண்டு ஒரு சுழிப்பாக, உடலப்பெருக்காக அவைகள் ஊறிக் கொண்டிருக்கும் என் அகத்தை, அதன் அளவேயற்றப் பாவங்களை. எல்லாவற்றிற்கும் மேலே...."

    வார்த்தைகள் தொண்டையில் அடைத்திருந்தது. அவனது தலை முடியிலிருந்து காதுகள் வழியே வியர்வை வழிந்தது.

"எல்லாவற்றிற்கும் மேலே" துறவி உணர்வற்றுக் கேட்டார்.

"மாக்தலேன்!" ஜீசஸ் தன் தலையை உயர்த்தி நிமிர்ந்துப் பார்த்தான்.

"மாக்தலேன்"

துறவியின் மிகம் சுருங்கி வெளிறியது.

    "அது என்னுடைய பிழை. என்னால் தான் அவள் இந்தப் பாதையில் சென்று விட்டாள். நான் தான் இந்த உடலின்பத்தின் வழிக்கு அவளை இழுத்துச் சென்றேன், நான் மிகச்சிறுவயதில் இருக்கும் பொழுதே. ஆம்! நான் அதை ஒத்துக் கொள்கிறேன். கேளுங்கள்! துறவியே! நான் சொல்வது உங்களைத் திகிலடையச் செய்யலாம்.  ஆனால் எனக்கு இதைச் சொல்வதைத்தவிர வேறு வழி தெரியவில்லை. எனக்கு அப்பொழுது மூன்று வயதிருக்கலாம். வீட்டில் யாரும் இல்லாத சமயம். நான் வாசற்படியில் தடுமாறிக் கீழே விழுந்து விட்டேன். என் கைகளை உயர்த்திப் படியில் அமர்ந்திருக்கும் மேரியை அழைத்தேன். நாங்கள் எதுவும் உடுத்தியிருக்கவில்லை. நாங்கள் கைகளைப் பிடித்துக் கொண்டு நிலத்தில் அம்மணமாகப் புரண்டோம். எங்கள் உடல்கள் தழுவிக் கொண்டன. எப்படியான மகிழ்வானத் தருணம் அது. ஒரு இன்பமயமானப்பாவம். அன்றிலிருந்து நான் அவளைத் தொலைத்துவிட்டேன். அவள் முற்றிலுமாகத் தொலைந்தே விட்டாள். அதன்பின் ஆணின்றி, ஆண் மகன்களின்றி அவளால் வாழ முடியாமல் போயிற்று." 

    அவன் முதியத்துறவியைப் பார்த்தான். ஆனால் அவர் தன் முழங்கால்களுக்கிடையில் தலையை மறைத்துக் கொண்டு நிலத்தைப் பார்த்து எதுவும் பேசாமல் விசும்பிக் கொண்டிருந்தார்.

    "அது முழுக்க முழுக்க என்னுடையத் தவறு! நான் தான்! நான் தான்! மேரியின் மகன், காயம் பட்ட பாலை விலங்கினைப் போலக் கதறினான். தன் கைகளால் மார்பில் குத்திக் கொண்டே இருந்தான்.

    "ஆனால் அது மட்டுமில்லை"  சிறிது நேரம் கழித்து அவன் தொடர்ந்தான். "துறவியே, என்னுடைய சிறு வயதிலேயே, விபச்சாரத்தின் துளி மட்டுமல்ல, ஆணவத்தின், அதிகாரத்தின் துளியும் என்னுள் இருந்தது. அந்த சாத்தான்கள் தான் என்னை வழி நடத்துகிறதோ என்னவோ! நான் சிறுவனாக இருக்கும் பொழுது, என்னால் நடக்க முடியாத சமயம். நான் வீட்டுச்சுவரை அணுகி அதன் வழியே செல்வதற்காகத் தவழ்ந்து கொண்டே செல்வேன். சுவற்றில் ஒட்டிக் கொண்டு நிற்கும் பொழுது நான்  கீழே விழாமலிருந்தேன். என் கால்களை பலமாக உணர்ந்தேன். கைகளை இருபுறமும் சுவரோடு சுவராக உயர்த்தி, நான் எனக்குள்ளேயேக் கத்துவேன், கடவுளே என்னைக் கடவுளாக்கு, கடவுளே என்னைக் கடவுளாக்கு என்று. பிறிதொரு நாளில் என் கை நிறைய திராட்சைக் கொத்தை வைத்துக் கொண்டு தோட்டத்தில் நின்று கொண்டிருந்தேன். வழியே சென்று கொண்டிருந்த ஒரு நாடோடிப் பெண், என்னருகே வந்துக் குந்தி, என் கைகளைப் பிடித்தாள். எனக்கு திராட்சைகள் கொடு, உன் எதிர்காலத்தை நான் சொல்கிறேன் என்றாள்.  நான் அவளுக்கு திராட்சைகள் கொடுத்தேன். அவள் கைகளை உயர்த்தி ரேகைகளை உற்றுப் பார்த்தாள். பார்த்தவள், ஓலமிட்டு அழத்தொடங்கினாள். "ஐயோ!, நான் சிலுவைகளையும்,நட்சத்திரங்களையும் அதில் காண்கிறேன் என்றாள். பிறகு புன்முறுவலுடன் என்னைப் பார்த்து, "நீ யூதர்களின் அரசன் ஆவாய்" என்று சொல்லியவள் திரும்பிபார்க்காமல் சென்று விட்டாள். ஒரு வித மூர்க்கத்துடன் அதை நான் நம்பினேன். இத்தனை காலம் நான் ஒழுங்கான மனநிலையில் இருந்ததேயில்லை. உங்களிடம் தான் இதனை முதன் முறையாகத் தெரிவிக்கிறேன் மாமா. என்னுடைய ஆன்மாவின் வழியே நான் இதனை உள்ளுணர்வாக உணர்கிறேனா, தெரியவில்லை. ஆனால் அந்த நாளிலிருந்து நான் தெளிவற்ற மனத்துடன் கொந்தளித்துக் கொண்டிருக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக