ஞாயிறு, 13 மார்ச், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் - 69

     

Author: Nikos Kazantzakis

    வழிப்பாதையில் ஆலிவ் மரங்கள் அடர்ந்த ஒரு பகுதியில், அம்மரங்களுக்குக் கீழே அமர்ந்து அவர்கள் அன்றைய இரவைக் கடக்க முடிவு செய்திருந்தனர். நாளின் அயர்வில் கால்கள் நீட்டி ஒருக்கழித்து உறங்கத் தயாராகினர். அவர்களுடன் யூதாஸ் படுக்கவில்லை. அவன் அமைதியிழந்திருந்தான். சற்று தொலைவில் இருந்த ஒரு சிறியப் பாறைக் குன்றத்திற்குப் பின்புறம் தனியாக எரிச்சலுடன் அமர்ந்திருந்தான். குழுவில் ஜீசஸ் இன்னும் உறங்கவில்லை. மற்றவர்களின் நீண்ட மூச்சுச் சப்தத்திற்கு இடையில் அவன் தனித்திருந்தான். அவர்கள் இருவருமே ஏதோ ஒரு வகையில் அந்த இரவை அசௌகரியமாக உணர்ந்தனர். வானத்தின் நட்சத்திரங்களில் சில மின்னாமினுங்கிகள், இங்கும் அங்கும் பயணித்து, ஒரு தீப்பொறி போல ஒளிர்ந்து அணைகிறது. அருகிலிருந்த ஆலிவ் மரத்தின் வேர் ஆழமாக நிலத்தில் ஊன்றி, மண்ணைப் பிறாண்டி வெளியேத் தெரிகிறது. கிளைகளின் தலைவிரி கோலம், இருளினுள் மாய உருவம் கொண்டிருந்தது. நிலத்திலிருந்து இணைந்துப் பிணைந்த அடிமரம் பின் விரிந்துக் கிளைத்த கிளைகள், கிளைகளிலிருந்து நாலாபுறமும் துளிர்த்தும், காய்ந்தும் தொங்கும் இலைகள், உருண்டைக் கொத்துக்களாய்க் கருஞ்சிவப்பு நிறக் கனிகள், வெளிர்பச்சை நிறக் காய்கள். நன்கு வயதான அம்மரத்தின் வேர்ப்பட்டைகளில் இரு மரப்பல்லிகள் அசையாமல் காத்திருக்கின்றன. அவைகள் தங்களின் இரையை எதிர் நோக்கி அமைந்திருக்கின்றன. ஒன்று வேர் நுனியிலும், இன்னொன்று வேர், தண்டாக கிளம்பும் அடிமரத்தின் தொடக்கத்திலும் இருக்கிறது. அவைகளின் கண்களில் கூட சிறிதும் அசைவில்லை. ஒன்றின் சாம்பல் நிறச் செதில்களில் ஒரு எறும்பு ஊறி ஏற முயற்சிக்கிறது. பல்லியின் நாக்கு சட்டென அதைக் கவ்விக் கொண்டு சவைக்கிறது. எறும்பின் உடல் முறியும் சப்தம். பின் அதே அசைவின்மை. அதன் செதில்களில், கண்களில் சின்ன சிலிர்ப்பு, பின் மறுபடியும் அது அசைவற்று அமிழ்கிறது. காற்றின் நீடித்தப் பீறிடல். அடிமரத்தின் நுனியில் இருந்த பல்லி இப்பொழுது மேலேறி மரத்தின் ஒரு பொந்து வழியே உட்குழிந்து உள்ளே சென்று விட்டது. ஜீசஸ் பெருமூச்சுகளுடன் புரண்டு படுத்தான். உறக்கமற்ற இரவு நீண்டு கொண்டிருந்தது. காற்றின் சலனம் அவனது அமைதியைக் குலைத்தது. யூதாசுக்கு அவனுடன் பேச வேண்டும், அப்பொழுதுதான் அவன் தன் மனத்திண்மையை மீட்டெடுக்க முடியும். அல்லாது தனக்கானப் பாதையில் இடரும் கற்களைப் பற்றியப் புரிதல் அவனுக்குச் சரியாகத் தெரியாமல் போகலாம். இன்றைய நிகழ்வு அவனைப் பெரிதும் தொந்தரவு செய்து கொண்டிருந்தது. யூதாஸ் ஜீசஸுடன் அதைப் பற்றியத் தன் தெளிவான அபிப்ராயத்தையும், நம் குழுவின் உண்மையான நோக்கம் என்ன என்பதை அறிந்து கொண்டு தான் எவ்வகையில் முன்னேறிச் செல்லவேண்டும் என்பதைப் பற்றியும் பேச நினைத்திருந்தான். ஒரு வியாபாரியின் தராசினைப் போல தம் இருவரின் எண்ணங்கள், செயல்கள் சரிவிகிதமாக அளக்கப்படுதல் அவசியம் என்பதில் அவன் உறுதியாக இருந்தான். சக உயிர்களை வஞ்சித்து, சுகபோகம் அனுபவிக்கும் ஒரு குற்றவாளியான அந்தக் கிழவனுக்கு, அதற்கானத் தக்க தண்டனை நரகத்தில்  வழங்கப்படும் என்று உணரும் வகையில் அவன் மகிழ்ச்சியாகக் கைகளைத் தட்டி ஆரவாரித்தான், "அவனுக்கானது சரியாக வழங்கப்பட்டுள்ளது" என்று. அப்பொழுது அவனது இடதுபுறம் கடைசியில் அமர்ந்திருந்த ஜீசஸுன் கண்கள் அவனைத் தொட்டு மீண்டதை அவன் கவனித்தான். அந்தப் பார்வை வெகுரகசியமாக ஒரு வசையினைப் போல ஒரு நொடி அவனை வெறித்துச் சென்றது. அதுதான் அவனை வெறுப்பேற்றி, வேதனைப்படுத்துகிறது. "இப்பொழுது வரைத் தன்னுள் நொதித்துக் கொண்டிருக்கும் அப்பார்வைக்கான அர்த்தம் என்ன? இதுவரை எங்களுக்குள் எந்தக் கையளித்தலும் இல்லை. எங்களுக்கிடையிலானக் கணக்குகள் எப்பொழுதும் ஒரே அளவை தான். முற்றுப் பெறாத பாதி வார்த்தைகளோ அல்லது இது போல ரகசியமானக் கண்டிக்கும் பார்வைகளோ இந்த யூதாஸ் ஒருபோதும் விரும்புவதில்லை"

"வா! யூதாஸ், நான் உனக்காகவே காத்திருந்தேன்."

    "மேரியின் மகனே நான் மற்றவர்களைப் போல உன் சொற்களில் பொருந்திப் போகிறவன் அல்ல", செந்தாடிக்காரன் நேரடியாக அவனைப் பார்த்து முறைத்தான். எனக்கு உன் அன்பானவனான, இந்தச் சிறுவன் ஜானைப் போல, கன்னித்தன்மையோ இல்லை நன்மையைப் பற்றி அறிந்துகொள்ளும் எண்ணங்களோ கிடையாது. இன்னொருத்தன், இந்தப் பகல்கனவு காண்பவனும், காற்றின் திசைக்குத் தன் புத்தியையும் மாற்றிக் கொள்ளும், சிதறிய எண்ணங்களும், எந்த உறுதிப்பாடுகளும் இல்லாத மாட்டு மூளைக்காரன் ஆண்ட்ரூவினைப் போல என்னை எண்ணி விடாதே. நான் சற்றுக் கடுமையானவன். எந்த சமரசமும் கொள்ள விரும்பாத ஒரு காட்டுமிருகம் நான். முறைதவறிப் பிறந்தவன், என் தாய் என்னைப் பிஞ்சிலேயே ஒரு புதர்க்காட்டில் வீசி விட்டுச் சென்றுவிட்டாள். அங்கு நான் ஓநாய்களின் பாலைக் குடித்து வளர்ந்தேன். அதனால் நான் கடினமும், முரட்டுத்தனமும் கொண்ட ஒரு நேர்மையான விலங்கு. நான் யாரை நேசிக்கிறேனோ, அவன் காலடியில் ஒரு தூசாகக் கூடக் கிடப்பேன். வெறுப்பவர்களைக் கொல்வதில் எந்த பச்சாதாபமும் காட்டமாட்டேன்.

    அவனது திடமானக் குரல் உயர்ந்து எதிரொலித்தது. கண்கள் இருளினுள் கனன்று கொண்டிருந்தது. அதிர்ந்து கொண்டிருக்கும் அவனது தலையில் தன் கைகளை வைத்து அமைதிப்படுத்த முயன்றான் ஜீசஸ். ஆனால் செந்தாடிக்காரன் தன் தலையை அசைத்து அவனது கைகளை விலக்கினான்.

    அவனில் அழுந்திக்கொண்டிருந்த சொற்கள் ஒன்று ஒன்றாக வெளிவந்து கொண்டிருந்தது. "நான் என் அன்பிற்குரியவர்களையும் கொல்வேன், அவர்கள் உண்மையானப் பாதையிலிருந்து தவறிச் செல்ல நினைத்தால்" 

"எது உண்மையானப் பாதை, யூதாஸ், என் சகோதரா?"

"இஸ்ரவேலத்தின் விடுதலை"

    ஜீசஸ் எந்தப் பதிலும் பேசாமல் தன் கண்களை மூடிக் கொண்டான். இரு தீப்பிழம்புகள் அவனுக்கு முன் தழலாடின, அது கொஞ்சம் கொஞ்சமாக அவனில் பற்றி எரிகின்றன. யூதாஸின் சொற்களின் தழலில் அவன் உருகிக் கொண்டிருந்தான். "ஆம்! விடுதலை! இஸ்ரவேலத்தின் விடுதலை. ஆனால் ஏன் இஸ்ரவேல், எதற்காக இஸ்ரவேலத்திற்கு மட்டும்? நாம் அனைவருமே சகோதரர்கள் அல்லவா?

    செந்தாடிக் காரன் ஜீசஸின் பதிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தான். ஆனால் அவன் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தான். யூதாஸ் அவனைப் பிடித்து உலுக்கி, எழுப்ப முயன்றான். "உனக்குப் புரிகிறதா? நான் என்ன சொல்கிறேன் என்று உனக்குப் புரிகிறதா?"

    "ஆம்! நான் புரிந்துகொண்டேன்" கண்களைத் திறந்த ஜீசஸ் பதிலுரைத்தான்.

    "நான் உன்னிடம் நேரடியாகக் கேட்கிறேன், எந்தக் கதைகளுமின்றி, எந்தப் புதிர்களுமின்றி நேருக்கு நேராக உன்னைக் கேட்கிறேன். நான் யார்? என் விருப்பம் என்ன?  என்பதை நீ அறிந்து கொண்டு எனக்கு பதிலளி. என்னை உன்னுடன் அழைத்துச் செல்ல நீ விரும்புகிறாயா இல்லையா? எனக்கது தெரிய வேண்டும்.

"என்னுடன் நீ வர வேண்டும், யூதாஸ், என் அன்புச் சகோதரனே!"

    "ம்ம்! நான் உன்னிடம் வெளிப்படையாக என் மனத்தில் உள்ளதைப் பற்றி ஒளிவுமறைவின்றிப் பேச விளைகிறேன். உனக்கு ஒரு விஷயம் சரியென்று தோன்றுகிறது. ஆனால் எனக்கு அது தவறாகத் தெரிகிறது. நான் அதைச் சரியாக விளக்குகிறேன், அப்போது உன் மனதிலிருக்கும் சந்தேகங்கள் தெளிவுறும். எல்லோரும் நீ போதிப்பதை வாயைத் திறந்து கொண்டு ஆச்சர்யத்தோடும், அன்போடும் ஆமோதித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் என்னால் முடியாது. நான் யாருக்கும் அடிமையில்லை., சுதந்திரமானவன். நான் எனக்கான வழியிலேயே சிந்திப்பேன். அதனால் உன் பாவனைகளை அகற்றிச் சரியாக அதனை எனக்கு விளக்குவது, உனக்கு நல்லது"

    "ஆம்! சுதந்திரம்!, நானும் அதனையே என்னுள்ளும் விளைகிறேன், யூதாஸ்"

    செந்தாடிக்காரன் சட்டென அவன் தோள்களில் தன் வலுவானக் கைகளை வைத்து அழுத்திப் பேசத் தொடங்கினான். ஆம்! அதுதான் சரி! அப்படியென்றால் இஸ்ரவேலத்தை ரோமானியர்களிடமிருந்து விடுவிப்பதே உன் விருப்பமும்?"

"பாவங்களிலிருந்து நம் ஆன்மாவை விடுவிப்பது"

    அவன் தோள்களிலிருந்து கைகளை விலக்கிய யூதாஸ், அவனைப் பார்த்துக் கொண்டே அருகிலிருந்த ஆலிவ் மரத்தின் அடிப்பட்டையில், தன் கை முஷ்டியினால் ஆத்திரம் தீரக் குத்தினான்."இங்குதான் நம் வழிகள் பிரிகின்றன", அவனது குரல் ஒரு ஓநாயைப் போல ஊளையிட்டது. ஜீசஸுன் முகத்தை ஏறிட்டு வெறுப்புடன் பார்த்தது, "முதலில் நம் உடல் ரோமானியர்களிடமிருந்து விடுபடவேண்டும், அதன் பிறகே நம் ஆன்மா பாவத்திலிருந்து விடுபடும். இது தான் பாதை. உன்னால் இப்பாதையில் வரமுடியுமா? கூரையிலிருந்து தொடங்கி ஒரு வீட்டைக் கட்ட முடியாது. நாம் அடித்தளத்திலிருந்துத் தொடங்க வேண்டும்."

"நமது ஆன்மாவே அடித்தளம் யூதாஸ்"

    "இல்லை, நமது உடலே அடித்தளம்-அதிலிருந்தே நாம் தொடங்குகின்றோம். நன்றாகக் கவனி மேரியின் மகனே! நான் சொன்னதைத் திரும்பவும் உனக்குச் சொல்கிறேன். கவனித்துக்கொள்! இந்தப்பாதையைத் தேர்ந்துகொள். நான் சொல்வதைக் கேள்! நான் எதற்காக உன்னுடன் இணைந்து வந்து கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறாய்? உனக்கானச் சரியானப் பாதையை காட்டுவதற்காகவே."

    பக்கத்திலிருந்த ஆலிவ் மரத்தடியில் படுத்திருந்த ஆண்ட்ரூ, சத்தம் கேட்டு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தான். தீவிரமாகப் போய்க் கொண்டிருக்கும் அச்சப்தங்களின் கூச்சல் அவனை முதலில் பயமுறுத்தியது.அதில் ஒன்று துறவியின் அமைதியானக் குரல். மற்றொன்று கடுமையாக, கோபத்தில் பேசும் முரட்டுக்குரல். அவனால் சரியாக என்ன நடக்கிறது என்பதை யூகிக்க முடியவில்லை. அவன் கடுவாயைக் கண்ட மான் போல நடுக்கமுறத் திடுக்கிட்டு அசையாது அச்சப்தத்தைக் கூர்ந்தான். "இரவில் யாரேனும் வந்துத் துறவியினைத் தொந்தரவு செய்கிறார்களா? நமது ஆசிரியர் எங்கு சென்றாலும், அங்குள்ள ஆண்களும், பெண்களும், ரோகிகளும், பாவப்பட்டத் தொழிலாளிகளும், குழந்தைகளும் அவரது வருகையை அவ்வளவு விரும்புகின்றனர். அவரது சொல்லிற்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணிக்கக் காத்துக் கிடக்கின்றனர். அதே நேரம், ஊரிலுள்ள, முக்கியஸ்தர்கள், பணக்காரர்கள், ஏழைகளின் உழைப்பைச் சுரண்டி வாழ்க்கை நடத்தும் காரியக்காரர்கள் எல்லாம் அவரை வெறுக்கின்றனர். தங்கள் கூழ்ச்சியினால், அவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தவும், குற்றங்கள் சுமத்தவும் முயல்கின்றனர். இந்தப் படுபாவிகள் நம் குருவிற்குத் தீங்குவிளைவிக்க, ஏதும் போக்கிரியை அனுப்பி விட்டிருப்பார்களோ? என்று பதைபதைத்தான். அவன் அப்படியே சத்தமிடாமல் மெல்ல ஊர்ந்து, அக்குரல்களின் திசை நோக்கிச் சென்றான். அச்சூழலில் சிறிதாகச் சலனம் ஏற்படுவதை செந்தாடிக்காரன் உணர்ந்தான். அவனது அழுத்தமானக் காலடிகளை வைத்து முன் நோக்கி உற்றுப் பார்த்தான்.

"யார் அது" அவன் விளித்தான்.

    ஆண்ட்ரூவிற்கு அக்குரல் யாரென்று புரிந்தது. "யூதாஸ், இது நான் தான். ஆண்ட்ரூ"

    "திரும்பிப் போய்ப் படுத்துக் கொள், ஜோனாவின் மகனே! நாங்கள் தனியாகப் பேச வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது"

"போய் உறங்கு, என் அன்பே" ஜீசஸும் சொன்னான்.

    யூதாஸ் தன் குரலைத் தாழ்த்திக் கொண்டான். அவனது ஆழமான சுவாசத்தின் சூட்டை எதிரே ஜீசஸ் பலமாக உணர்ந்தான்.

    "உனக்கு ஞாபகம் இருக்கிறதா? பாலைவனத்தில் என்னை நான் உன்னிடம் வெளிப்படுத்தினேனே ! உன்னைக் கொல்வதற்காக எங்களின் சகோதரக் குழு என்னைத்தான் நியமித்திருந்தது. ஆனால் கடைசி நொடியில் நான் என் மனதை மாற்றிக் கொண்டு என் கத்தியைத் திரும்ப உறையில் போட்டுவிட்டு, மடாலயத்திலிருந்து ஒரு திருடனைப் போலத் தப்பிச்சென்றேன்.

    "எதனால் நீ உன் மனதை மாற்றிக் கொண்டாய, யூதாஸ், என் சகோதரனே. நான் தயாராகவே இருந்தேன்" 

"நான் காத்திருக்க எண்ணினேன்"

"எதற்காகக் காத்திருக்க?"

    யூதாஸ் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தான். "ஒரு வேளை நாங்கள், இஸ்ரவேலத்து மக்கள் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் அந்த ஒருவன் நீதானா என்று அறிந்து கொள்வதற்காக" என்று திடீரென்று ஜீசஸுன் கண்களை ஆழமாக உற்று நோக்கிக் கூறினான்.

    உடலதிர பின்னால் இருந்த ஆலிவ் மரத்தின் மேல் அப்படியே சாய்ந்தான் ஜீசஸ். அவனது கை கால்கள் நடுங்கத் தொடங்கின.

    "நான் இதில் அவசரப்பட விரும்பவில்லை. ஏனென்றால் எங்களுக்கான மீட்பனை நான் கொல்லத் துணியவில்லை. ஆம்! நான் அதை ஒருக்காலும் செய்ய மாட்டேன்." அவனது குரல் தழுதழுக்க கண்ணீர் சிந்தினான். தன் நெற்றி வியர்வையை அழுத்திச் சிந்திக் கொண்டு திரும்பவும் பேசத் தொடங்கினான். "உனக்குப் புரிகிறதா? அவன் தன் உடலும் உள்ளமும் நோக உள்ளார்ந்துக் கதறினான். யாரோ அவனது கழுத்தைப்பிடித்து நெரிப்பதைப் போல தாடை இறுகி, தோள்பட்டைகள் உயர்ந்தன. "உனக்குப் புரிந்ததா? நான் அதனை ஒருக்காலும் செய்ய மாட்டேன்"

    அவன் உடலைக் குலுக்கித் தன்னைச் சமப்படுத்த முயன்றான். "ஓருவேளை அவனுக்குக் கூடத் தான் யார் என்பது தெரியாமல் இருக்கலாம், நான் எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன். அதனால் நான் பொறுமையாகக் காத்திருக்கிறேன். அவன் உயிரோடு இருக்க வேண்டும். உயிரோடு இருந்தால் தான் அவன் என்ன சொல்கிறான், செய்கிறான், என்பதை நாங்கள் அறிந்து கொள்ள முடியும். அவன் நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அந்த ஒருவனாக இல்லாத பட்சத்தில் அவனைக் கொன்றுக் கிழித்துத் தொங்க விடப் பெரிதாக நேரம் தேவைப்படாது. இதைத் தான் எனக்குள் நானே  சொல்லி கொண்டிருக்கிறேன். அதனால்தான் நான் உன்னை இன்னும் உயிரோடு விட்டு வைத்திருக்கிறேன்."

    கொந்தளித்துக் கொண்டிருந்த அவன் இதயம் சற்று அமைதிப்பட்டது. அவன் அங்கும் இங்கும் கற்களை ஆழமாக மிதித்து நடந்தான். வானத்தைப் பார்த்து வெறித்தான், நிலத்தில் காறி உமிழ்ந்துத் தொண்டையை செருமிக் கொண்டான். ஜீசஸை நோக்கி வந்தவன் திடீரென அவனைத் தன் கைகளில் பிடித்து இறுக்கிக் கொண்டான். உதட்டைச் சுழித்துக் கசப்புடன் அவன் முகத்தைப் பார்த்தான். அவனுள் அவநம்பிக்கைத் தொற்றிக் கொண்டது. "எனக்குத் தெரியவில்லை, உன்னை எப்படி அழைப்பது என்று, நீ மேரியின் மகனா? தச்சனின் மகனா? இல்லை, டேவிட்டின் மகனா? உன்னைப் பார்க்கையில், என்னால் இன்னும் இதில் நீ யாரென்று அறிந்து கொள்ளமுடியவில்லை. ஆனால் இதில் ஏதாவது ஒன்றுதான் நீ என்று என் உள்ளம் சொல்கிறது. நாம் இதற்கானப் பதிலைக் கண்டறிவோம். இதனால்தான் நம் இருவருக்குமே விடுதலை. இல்லை! இந்த உறுதிப்பாடின்மை இப்படியேப் போய்விடாது. இதோ! உன்னைப் பின்தொடரும் மற்றவர்கள். நீ இவர்களைப் பார்க்காதே! இவர்கள் பாவப்பட்ட ஆட்டு மந்தைகள். உன்னைக் கவர்வதற்காகவும், அனுதாபம் தேடுவதற்காகவும் உன்னை நோக்கி வரும் பெண்களைப் பார்க்காதே!, எப்படியானாலும் அவர்கள் வெறும் பெண்கள். அவர்களுக்கு இருதயத்தை மட்டுமே ஆண்டவன் கொடுத்திருக்கிறான். மூளையை அல்ல. நமக்கு அதை வைத்து எந்தப் பிரயோஜனமுமில்லை. இது நாம், நம்மிருவர் மட்டுமே கண்டறிய வேண்டிய ஒன்று. இந்த ஜ்வாலையில் எரிவதன் மூலம்,  நீ இஸ்ரவேலத்தின் கடவுளா இல்லை சாத்தானா என்று நிச்சயமாகத் தெரிந்து விடும். ஆம்! உறுதியாகச் சொல்கிறேன், நாம் தான் இந்தக் கனலெரியும் கங்குக் குழியினுள் குதிக்க வேண்டும். வேறு வழியில்லை."

    கலங்கிய விழிகளுடன், தடுமாற்றத்துடன் ஜீசஸ் பேசத் தொடங்கினான். "இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும், யூதாஸ், என் அன்பே? நம்மால் எப்படி இதன் பதிலைத் தெரிந்து கொள்ள முடியும், எனக்கு உதவி செய்! என் நண்பா!

"அதற்கு ஒரு வழி இருக்கிறது"

"என்ன?"

    "நாம் அந்த ஞானஸ்நானம் செய்து வைக்கும் துறவியான யோவானைக் காணுவோம். அவன் இதற்கு சரியான வழி கூறுவான். அவன் தானே சதா கத்திக் கொண்டிருக்கிறான், "அவன் வருகிறான், வருகிறான்! வந்து கொண்டிருக்கிறான் என்று" அதனால் அவன் உன்னைக் காணட்டும். அவன்  அனுதினமும் அழைத்துக் கொண்டிருப்பவன் நீதானா!, என்பதை அவன் கண்டறியட்டும். நாம் அவனிடம்  போகலாம். நீ உன்னை, உன் உணர்வுகளை சற்று அமைதிப்படுத்து. நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குள் யோசிக்கிறேன்"

    ஜீசஸ் கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் மூழ்கினான். அவனது எண்ணங்கள் அவனது வலிகளிற்குள் சென்று கொண்டிருந்தது. எத்தனை முறை இந்தக் கவலை, பழுக்ககாய்ச்சியக் கம்பியைப் போல அவனுள் பாய்ந்து, அவன் அகத்தைச் சிதைத்திருக்கிறது. எத்தனை முறை அந்தக் கூரிய நகங்களால் அவன் மூளைக்கூழ் பிளந்து, வாயில் நுரைதப்ப, கைகால்கள் இழுத்து வெட்டு வந்துத் தன்னிலை அழிந்துத் தரையோடுத் தரையாகக் கிடந்திருப்பான். அவன் பேய்களாலும், சாத்தான்களாலும் ஆட்கொள்ளப்பட்டுப் பித்துப் பிடித்து அலைகிறான் என்று, மனிதர்கள் அவனருகில் வரக் கூடப்பயந்து ஓடினார்கள். ஆனால் அவனோ இன்று  தேவனின் ஏழாவது சொர்க்கத்தில் இருக்கிறான். அவனது உள்ளம் தான் இருந்த வலிகளின் கூண்டினுள்ளிருந்து வெளியேப் பாய்ந்து, வானத்திற்கு உந்திப்பறக்கிறது. அங்கு தேவனின் கதவைத் தட்டி அவனை அழைத்துக் கேட்கிறது, "நான் யார்? நான் ஏன் பிறந்தேன்? இந்த உலகைக்காக்க நான் என்ன செய்ய வேண்டும்? எது அதற்கான குறுகிய பாதை? ஒரு வேளை என் மரணம் தான் அதற்கான வழியா?"

    அவன் கண்கள் திறக்காது தன் கைகளை வான் நோக்கி உயர்த்தினான். யூதாசின் முழு உடலும் அவன் மேலே சாய்ந்தது.

    "யூதாஸ், என் சகோதரா, என்னருகில் படுத்துக் கொள். நம் தேவன் ஒரு ஆழ்ந்த உறக்கமாய் நம் மேல் கவிந்து நம்மை அணைத்துக் கொள்ளட்டும். நாளை விடியலில் சீக்கிரமே, நாம் தேவனின் ஆணைப்படி, யூதேயாவிலிருக்கும் அந்த தீர்க்கதரிசியைக் காணச் செல்வோம். நம் தேவனின் நோக்கம் எதுவோ அது நடந்தேறட்டும். நான் தயாராக உள்ளேன்."

"நானும் தயாராக இருக்கிறேன்",

     அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து கொண்டு, அம்மரத்தின் அடியில் படுத்துக் கொண்டனர்.

    மிகுந்த சோர்விலிருந்த இருவரும் படுத்தவுடன் உறங்கிவிட்டனர். அடுத்த நாள் காலை விடியல் துளிர்க்கும் பொழுது, முதலில் எழுந்த ஆண்ட்ரூ அக்காட்சியைக் கண்டான். அவர்கள் ஒருவரின் கைகளில் இன்னொருவர் தலையை வைத்து, ஒரே உடல் போல ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

    காலை இளஞ்சூரியன் எல்லாவற்றையும் மொட்டவிழ்க்கிறது. ஏரி நீரில் அதன் ஒளிக்கதிர்களின் மினுக்கம், பூமியில் பல்லாயிரம் நட்சத்திரங்கள் முளைத்தைதைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது. வெக்கை எரியும் பாதையின் வழியே செந்தாடிக் காரன் முன்னே சென்று கொண்டிருந்தான். அவனைப் பின்தொடர்ந்து ஜீசஸ் தன் இரு துணைவர்களுடன் வந்து கொண்டிருந்தான். தாமஸ்ஸுன் வியாபாரம் முடியடையவில்லை. விற்பதற்கு இன்னும் பொருட்கள் இருந்ததால் அவன் கிராமத்திலேயேத் தங்கி விட்டான். "மேரியின் மகன் சொல்வது உண்மையில் ஒரு  நல்ல வழிதான்". தாமஸ் தனக்குள் நினைத்துக்கொண்டான். அது நிலைமையின் இருபக்கங்களிலும் இருக்கும் சிறந்ததைக் கோருகிறது. ஏழைகள் தங்கள் வயிறு நிரம்பத் தின்றும், குடித்தும் என்றைக்குமாய் சுகப்படட்டும்...சீக்கிரமே அவர்கள் உழைப்பைக் கைவிட்டுத் தங்கள் கூடைகளை எட்டி உதைக்கட்டும். அது சரிதான்! அதற்குப்பின் தான் இருக்கிறது  சமாச்சாரம், ஆம்! அப்புறம் அவர்களுக்கு என்ன நேரும், அவர்கள் என்ன செய்வார்கள்? என்பதுதான் இவன் வார்த்தைகளில் இருக்கும் சூட்சுமம். கவனம், தாமஸ்! கவனம்! இருபக்கங்களிலும் அதற்கே உண்டானப் பாதகமானச் சூழல் இருக்கிறது. அதனால் எந்த ஒன்றிலும் நாம் சிக்கிக் கொள்ளக் கூடாது. மிக நூதனமாக, நாம் நமக்குப் பாதுகாப்பான வழியைக் கைகொள்ள வேண்டும். நாம் செய்யவேண்டியது, நம் கூடையின் மேல்தட்டில், அதே பழையப் பொருட்களான, சீப்பு, கண்ணாடி, வண்ண நாடாக்கள், அழகு சாதனப் பொருட்களால் நிரப்பிக்  கொள்ள வேண்டும். கூடைக்கு அடியில், நமது முதற்தர வாடிக்கையாளர்களுக்காகவே ஒதுக்கப்பட்ட  தேவனின் சொர்க்க ராஜ்ஜியத்தை ஒளித்து வைத்திருக்க வேண்டும்.....தனக்குள்ளேயே இளித்துக் கொண்டவன் சுமையைத் திரும்பவும் ஏற்றிக் கொண்டான். வெளிச்சம் உருளும் பாதையில், தன் ஊதுகுழலை ஊதிக்கொண்டே மறுபடியும் பெத்சைடாவின் தெருக்களின் வழியே, பூமிக்குத் தேவையானப் பொருட்களைக் கூவி கூவி விற்கத் தொடங்கினான்.

    கார்பெர்னத்தில், பீட்டரும், ஜேக்கப்பும் விடியலுக்கு முன்னேமே கரை திரும்பியிருந்தனர். அவர்களின் வலையில் குவிந்த கொத்துக் கொத்தான மீன்களின் பாரம் அழுந்த, வலுக்கொண்டுக் கரைக்குத் தங்கள் படகுகளை இழுத்து வந்தனர். இதுவே முன்பு நிகழ்ந்திருந்தால், இந்தச் சிறந்த அறுவடைக்கு அவர்களின் மகிழ்ச்சியும், களிப்பும், ஆரவாரமும் இருமடங்காகி இந்த நாளையேக் கொண்டாடித் தீர்த்திருப்பர். ஆனால் இன்று அவர்கள் மனம் இதில் லயிக்கவில்லை. ஒரு சிறு சொல் கூடப் பேசிக்கொள்ளாமல் அமைதியாக வள்ளத்தை ஓட்டிக் கொண்டு வந்தனர். அவர்களின் எண்ணங்கள் கடலுக்கும் வானத்திற்கும் அப்பால் எங்கோ தூக்கியெறியப்பட்டிருந்தது. காலங்காலமாக இந்த ஏரியின் மாயத்தூண்டில்களில் தங்களின் செவுள்கள் தலைமுறை தலைமுறையாக அகப்பட்டுக் கொண்டிருக்கும் விதியை அவர்கள் தங்களின் அகத்தில் அசை போட்டுக் கொண்டிருந்தனர். திரும்பத் திரும்பத் தங்களுக்கு அமையப் பெறாத சிறகுகளைப் பற்றியக் கனவுகளில் அவர்கள் போராடிக் கொண்டிருந்தனர். "என்னடா வாழ்க்கை இது!, வலை வீசி, மீன் பிடித்து, உண்டு உறங்கிப் பின் அடுத்த நாளைக்கும், அதே பழையக் கைக்கும் வாய்க்கும் பிழைக்கும் பாடு. திரும்பத்திரும்ப , நாளுக்கு நாள், வருடம் முழுதும், நம் வாழ்வு முழுமைக்கும். இப்படியேக் காலம் கடத்தி, இப்படியே செத்து மடியவும் வேண்டும். அவர்கள் இதுவரைத் தங்கள் வாழ்வில் இப்படி ஒரு எண்ணத்தால் அடித்துச் செல்லப்பட்டதில்லை. தங்களுக்குக் கிடைத்த வாழ்வை முடிந்த வரை அதன் போக்கிலேயே சாந்தமாகக் கழித்து தங்கள் முதுமையிலும் கூட எந்தப் புகார்களும், குழப்பங்களும் இன்றி வாழ்வதே நோக்கமாகக் கொண்டிருந்தனர். அவர்களது பெற்றோர்களே அதற்குச் சரியான உதாரணம். ஏன் அவர்களின் தாத்தாக்களும் மற்றும் அனைத்து மூதாதையர்களுமே இப்படித்தான் இந்த ஏரியிலேயே வாழ்க்கை முழுதும் மீன்களுடன் போராடித் தங்கள் வாழ்க்கையைக் கழித்தனர். பின் ஒரு நாள், தன் விரைத்த கைகளை மடித்துக் கொண்டு மாண்டும் போயினர். அவர்களின் பிள்ளைகளும் , பேரக்குழந்தைகளும் அந்தப் பழக்கப்பட்டப் பாதையின் வழக்கமான ஜீவிதத்தின் அலைப்பாடுகளில் அயராமல் துடுப்புகளிட்டு இன்றுவரை ஓய்வொழிச்சலின்றி இயங்கித் தங்கள் படகுகள் இந்த வானத்திற்குக் கீழேக் கவிழாமல் பார்த்துக்கொண்டனர். இந்த இருவர்களும், பீட்டரும் ஜேக்கப்பும் கூட புகார்கள் ஏதுமின்றியே உழைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் திடீரென அவர்களைச் சுற்றிச் சுவர் எழும்பி, அவர்கள் மூச்சு கூட விட முடியாதவாறு அழுத்தத் தொடங்கி விட்டது. அவர்கள் வேலையைத் தொடர்ந்தாலும், பார்வை எங்கோ தூரத்தொலைவிலேயே வழி தவறி விட்டிருந்தது. எங்கே? எதை நோக்கி? அவர்களால் இப்போது வரையிலும் கூட இந்த உள்ளார்ந்தத் துன்பத்தின் அலைக்கழிதலைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்களுக்குப் புரிவதெல்லாம் எதோ ஒரு விசைத் தங்களை அழுத்திக் கொண்டே இருப்பது மட்டும் தான்.

    இந்த வேதனைகள் போதாதென்று, ஒவ்வொரு நாளும் வழிப்போக்கர்கள்  வேறு புதிய புதிய செய்திகளைச் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். "இறந்த சடலங்கள் உயிர்ப்பிக்கப்படுகின்றன. கை கால்கள் முடங்கிக் கிடந்தவர்கள் எழுந்து நடக்கிறார்கள். பார்வையிழந்தவர்களுக்கு பார்வை கிடைத்து அவர்கள் ஒளியை உணர்ந்தனர். "யார் இந்தப் புதிய தீர்க்கதரிசி?" ஒரு வழிப்போக்கன் அந்த இரு மீனவர்களிடம் கேட்டான். அவன் தச்சனின் மகனல்ல. புனிதர் டேவிட்டின் மகன் என்று சொல்லிக் கொள்கிறார்களே! அது உண்மையா?."ஆனால் அவர்கள் அதைப்பற்றி சட்டை செய்யாதது போல தங்கள் தோள்களைக் குலுக்கிக் கொண்டுத் திரும்பவும் வலையை இழுக்கத் தொடங்கினர். உண்மையில் அவர்கள் உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தனர். அவர்கள் இந்தப் பிரச்சனையிலிருந்து எப்படி விடுபட என்பது தெரியாமல் புலம்பிக் கொண்டிருந்தனர். அந்த வழிப்போக்கன் சற்றுத் தூரத்தொலைவிற்குப் போன பின், பீட்டர் தன் சகதோழனைத் திரும்பிப் பார்த்தான். "நீ இந்த அற்புதங்களை உண்மையிலேயே நம்புகிறாயா, ஜேக்கப்?"

    "பேசாமல் வலையை இழு!"அந்த வாயாடிக் கிழவனின் மகன் ஜேக்கப் அவனிடம் பொரிந்தான். ஒரு பக்கம் அமிழ்ந்து பாரம் அழுந்தும் தக்கையை அவன் கையில் கொடுத்து இன்னும் வலுவாக இழுக்கச் சொன்னான். கரையில் தரை தட்டும், வலையின் பின் பக்கத்தைத் தன் கைகளில் தாங்கி முன்னே உந்தித்தள்ள முயன்று கொண்டிருந்தான் ஜேக்கப்.

    அதே நாளில், சில பார வண்டிக்காரர்கள் அந்த வழியேப் புதிய செய்திகளுடன் வந்தார்கள். அவர்கள் விஸ்தாரமாக இழுத்து இழுத்து நடந்த நிகழ்வுகளைப் பற்றிச் சொல்லத்தொடங்கினர். "அதாவது புதிய தீர்க்கதரிசி பெத்சைடாவில் இருக்கும் கிழட்டுக் கருமியான அனானியஸ்ஸுன் இல்லத்திற்கு விருந்துக்குப் போனதும், அங்கு அவரும், அவர் சீடர்களும் கிழவனுடன் சேர்ந்து உண்டு, குடித்துச் சாப்பிட்டு முடித்ததும், கைகளைக் கழுவிக் கொண்டதும், அடிமைகள் அவர்களுக்கு உபசரித்ததும்,  அவர் அந்தக் கிழவனின் அருகில் அமர்ந்து காதில் எதுவோ மந்திரம் போல ஓதிவிட்டதையும். அந்தக் கணத்தில் கிழவனின் மனதில் அழுந்திக் கொண்டிருந்தத் துன்பங்களின் பாரங்களெல்லாம் இறங்கி முற்றிலுமாகக் குணமாகித் திருந்தி,  தன்னிடமிருந்த பொருட்களையெல்லாம் பங்கிட்டு அந்த ஊரிலிருந்த ஏழை பாளைகளுக்கே தானமாக அளித்துவிட்டானென்றும் ஒருவழியாகச் சொல்லி முடித்தார்கள்.

    "என்ன ரகசியம் அவன் ஓதினான்?" பீட்டர் கேட்டான். அவனது பார்வைத் திரும்பவும் நிலையழிந்து, தூர தூரத்திற்குப் போயிருந்தது.

    "ஆஹ்! அது மட்டும் எனக்குத் தெரிந்திருந்தால்!" அந்த வண்டிக்காரன் இளித்துக் கொண்டே பேசினான்." நான் அந்த மந்திரத்தை ஊரிலுள்ள எல்லா பணக்கார முதலாளிகளின் காதுகளிலும் ஓதியிருப்பேனே! பாவப்பட்ட நாமளும் கொஞ்சம் நிம்மதியாக மூச்சு விட்டிருப்போம்" "சரி! அது கிடக்கட்டும். இன்றைக்கு மீன் பிடி எப்படி? நல்ல அமோகமா!" என்று கண்கள் விரியத் தாழ்ந்து கிடக்கும் வலையைக் கவனித்தான். "அப்போ! சரி! நாங்கள் போய்வருகிறோம்! என்று அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.

    பீட்டர் தன் துணைவனுடன் பேசுவதற்கு விளைந்தான் ஆனால் உடனே தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். "என்ன அவனிடம் சொல்வது? இன்னும் அதிகமான வார்த்தைகள்? இவர்கள் பிதற்றியது காணாதா? இதில் நான் வேறு".அவன் தன் முன்னிருக்கும் இந்த உலகையே உடைத்துத் தவிடு பொடியாக்கிட வேண்டும் என்று நினைத்தான். அவ்வளவு வெறுப்பும் கோபமும் அவனை ஆட்படுத்தியிருந்தது. அங்கிருந்து எங்காவது, கண் காணாத தொலைவு ஓடிப் போய்விடலாமா என்றும் தோன்றியது. எங்கே? எங்காவது போகலாம் எனில் எங்கே? அவனுக்குத் தெரியவில்லை. ஜோனாவின் குடில் அவனது இருப்பிற்கு உண்மையில் மிகவும் சிறியதாக இருந்தது. பிறகு இந்தக் கழுவும் தொட்டி, ஜென்னசரேட் ஏரியும்  அதன் நீர்மையும். ச்சே! இதற்குப் பெயர் தான் வாழ்க்கையா? நான் எங்காவது போகிறேன்! என்ன இது? என்ன நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? இல்லை! இல்லை! என்று தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டான். 

    ஜேக்கப் அவனை உற்றுப்பார்த்தான். "என்ன புலம்பிக் கொண்டிருக்கிறாய் நீ? கொஞ்சம் அமைதியாய் இரு" என்றான்.

    "ஒன்றுமில்லை! அடச்சே! ஒன்றுமில்லை!" பதில் சொன்ன பீட்டர், வேகவேகமாக வலையை இழுக்கத் தொடங்கினான்.

    சரியாக அதே கணம், ஒரு தனித்த ஓநாய் வெறியுடன் வருவதைப் போல யூதாஸ் தன் திடமான ஆகிருதியை, நிலைத்து முன் வைத்து, ஜீசஸ் தன் முதல் வார்த்தையை அறிவித்த, பசுமை அடர்ந்த மலைக்குன்றின் உச்சியிலிருந்து வெளிப்பட்டான். அவன் கைகளில் ஒரு முதிர்ந்து ஓய்ந்தக் காட்டுக் கருவேல மரத்தின் கிளையை முறித்து துரட்டிக்கம்பைப் போல வைத்திருந்தான்.மற்ற மூன்றுத் துணைவர்களும் அவனுக்குப் பின்னால் வந்துகொண்டிருந்தனர். மூச்சிரைக்க மலை உச்சியில் சற்றே நிதானித்த அவர்கள் கீழே இருக்கும் உலகத்தை வெறுமனே நோட்டமிட்டனர். வானின் வெளிச்சம். சூரியக்குழாய்கள் மேகங்களின் வழியே ஏரி நீரைத் தழுவிப் படர்ந்திருந்தது. புள்ளிகளாகப் பலவண்ணப் படகுகள். மனிதர்களின் நடமாட்டங்கள். சற்றுத்தொலைவில் சந்தையின் கூச்சல்கள்.அப்பால் ஏரி, கடலில் கலக்கும் விளிம்பின்  எல்லைக் கோடு வரைத் தெரிந்தது. கடற்காகங்களின் கிரீச்சிடல்கள். நீல நீரினில், மீனவர்கள் துடுப்புகளுடன் படகுகளில் கடப்பது, பறவைகள் சிறகுயர்த்தி திசையற்ற வானத்தைக் கடப்பதைப் போல இருந்தது. ஒளிக்கு கீழே எல்லாம் தீர்க்கமாகவும், தெளிவாகவும் அதனதன் சுயத்திலிருந்து ஒளிர்ந்தன.

    "பார்! அதோ பீட்டர்" ஆண்ட்ரூ கரையைக் காண்பித்தான். அங்கே பீட்டர் வலையை இழுத்துக் கரைக்குக் கொண்டு வர உந்திக் கொண்டிருந்தான்.

    "ஜேக்கப்பும் நிற்கிறான்" ஜான் பெருமூச்சுடன் சொன்னான். "நல்லது, அவர்கள் இன்னும் தங்களை உலகத்திலிருந்து பிடுங்கி எறிந்துவிடவில்லை"

    ஜீசஸ் சிரித்துக் கொண்டான். "கவலை கொள்ளாதே என் அன்பே! நீங்கள் இங்கேயே அமர்ந்து ஓய்வெடுங்கள். நான் கீழே போய் அவர்களை அழைத்து வருகிறேன்"

    அவன் வேகமாகச் சரிவுகள் வழியே, ஓட்டமும் நடையுமாகச் சென்று கொண்டிருந்தான். "அவர் செல்வது உண்மையில் நடப்பதைப் போலவே இல்லை. காற்றில் மிதந்துகொண்டே அவர் தூரங்களைக் கடக்கிறாரோ என்று தோன்றுகிறது." ஜான் ஜீசஸ் போவதையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். "ஒன்றே ஒன்றுதான் தவறுகிறது. அது அவரது இரு சிறகுகள். அதுவும் இருந்தால் அவர் ஒரு தேவதையேதான்." அவன் தன்னை பக்தியுடன் ஜீசஸுக்கு அர்ப்பணித்திருந்தான்.

    பாறைகளையும், சரளைக்கற்களையும் மிதித்து அவன் கீழிறங்கிக் கொண்டிருந்தான். பார்வைக்கு அவர்கள் தெளிவாகத் தெரிந்ததும், ஏரி மண்ணில் கால்பாவித்து விரைவாக அவர்களை நெருங்கினான். அங்கே அவர்கள் இன்னும் தங்கள் வலையுடன் போராடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு முன்னே வந்து நின்ற ஜீசஸ், வெகு நேரம் எதுவும் பேசாது அமைதியாகப் பார்த்தான். எந்த சிந்தனைகளும் அவனுள் இல்லை, முழுதும் காலியானது போல உணர்ந்தான். இது வரை அவனை இழுத்துக் கூட்டி வந்த சக்தி சட்டென்று எங்கோ போய்விட்டதைப் போல இருந்தது அவனுக்கு. அவனுக்கு முன்னால் இருந்த நிலத்தின் காட்சிப் பிளன்றது. எல்லாமே ஒளிர்வுடன் மிதப்பதை அவன் பார்த்தான். ஏரி நீரின் மேல் ஒளிர்வு கூடுகிறது. அதன் திரவ மிணுக்கத்தில் அலையிடும் வெளிச்சம் கூடிக் கூடித் தன் முன் நிற்கும் இரு மீனவர்களும் ஒளியாலானார்கள். வீச்சமான வெண்ணிற ஒளி ஒரு மாபெரும் போர்வை போல அச்சூழலையே மூடி மறைத்தது. கண்களை விரித்து இன்னும் இன்னும் என ஒளியினுள் நுழைகின்றான், ஒளித்திட்டுகளில் மனிதர்கள், சிரிக்கிறார்கள், அழுகிறார்கள், களிப்புறுகிறார்கள், நடனமாடுகிறார்கள், நீர்மையெங்கும் மனிதக் கொண்டாட்டம் நுரைத்துத் ததும்புகிறது. துள்ளத்துடிக்க மீன்களைப் போலச் சாடிக் கொண்டும், பறந்து கொண்டும் இருப்பது மனிதர்களே. தெய்வத்தின் கருணையே அந்த நீரின் விளைச்சல்கள். அதை அறுவடை செய்து இன்புற்றிருப்பதே மனிதத்தின் நோக்கம்."

    திடீரென அந்த இரு மீனவர்களும், தங்கள் தலைக்கு மேலேக் கூசும் வெளிச்சம் அடர்வதைப் பார்த்தனர். அதன் இனிமையான மிருது அவர்கள் உடலினுள் ஊடுருவி அவர்களை அப்படியே ஸ்தம்பித்து நிற்க வைத்தது. அசைவற்று ஒளியினை ஊடுருவிப் பார்க்கும் இரு மனிதக் கண்களை அந்த நிலையிலும் அவர்கள் அணுக்கமாக உணர்ந்தனர்.  சட்டென்று தன்னிலையடைந்தவர்கள் தங்களை இழுத்து முடித்து சரிசெய்ய முயன்றனர். கைகால்களை அசைத்து ஒழுங்கு படுத்தினர். அவர்கள் உடல் முழுதும் ஒளியின் வெம்மையினால், சூடாகி உருகி நடுங்கியது. ஆனால் வலியில்லை. அது ஒரு சுகமான இருப்பாக அவர்களுக்குள் சுழன்றது. அவர்களுக்கு முன்னே ஜீசஸ் அமைதியாக, அசைவற்று நின்று அவர்களை உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.

    மன்னித்து விடு துறவியே! பீட்டர் தலை குனிந்து நின்றுகொண்டிருந்தான்.

    "எதற்காக பீட்டர்? நான் மன்னிக்க வேண்டிய அளவுக்கு நீ என்ன செய்துவிட்டாய்!"

    "ஓன்றுமில்லை!" பீட்டர் நடுங்கிக்கொண்டிருந்தான். "நீ இதனை வாழ்க்கை என்று சொல்வாயா? இது என்னை உயிரோடுத் தின்கிறது."

    "நான் மட்டும் என்ன?" ஜேக்கப் தன் கைகளிலிருந்த வலைத்தக்கைகளை அழுத்தி, ஆத்திரம் தலைக்கேறத் தரையில் எறிந்து மிதித்தான். ஒரு உயிருள்ள பொருள் போலவே அது தரையினுள் அலைந்து மிதந்தது.

    "வாருங்கள்" ஜீசஸ் தன் கரங்களை இருபுறமும் நீட்டி அவர்களைத் தன் உடலோடு அணைத்துக் கொள்வதைப் போல அழைத்தான். "வாருங்கள், நான் உங்களை மனித இதயங்களைப் பிடிப்பவர்களாக்குகிறேன!"

    அவன் அவர்களை தன் கைகளினுள் அணைத்துக் கொண்டு இணைந்து நடக்கத் தொடங்கினான். "நாம் போகலாம்!".

    "நான் என் தந்தையிடம் விடைபெறல் சொல்ல வேண்டுமா?" பீட்டர் தன் தந்தை ஜோனா தனியாக இருப்பதை நினைத்துக் கேட்டான்.

"திரும்பிப் பார்க்காதே பீட்டர், நமக்கு நேரமில்லை. நாம் செல்வோம்"

"எங்கே?" ஜேக்கப் நின்றான்.

    "எதுவும் கேட்காதே? எந்தக்கேள்விகளும் இல்லை, ஜேக்கப்! வா!. அவனது குரலை அவர்களால் மறுக்க முடியவில்லை. பயமும், கவர்ச்சியும் பற்றிக் கொள்ள அவர்கள் இணைந்து சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக