செவ்வாய், 8 மார்ச், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் - 66

    
Author: Nikos Kazantzakis

    சென்னிற வட்டப் பொட்டாய்ச் சூரியன் கீழிறங்கி வானத்தின் அடித்தளத்தை நோக்கி நகர்கிறது . நோய் பீடித்த நாளில் காற்றின் அனத்தம் கூட இன்னும் குறைந்த பாடில்லை. கடல் நாரைகள் பாறைக்குன்றங்களில் சிறகொடுக்கி, தன் கூரிய நீளமான அலகினை நீர்ப்பரப்பிற்குச் சற்று மேலே வைத்துக் கொண்டு, அசைவற்று இரைக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. அவைகளுக்கு அன்றைக்கான பசி இன்னும் அடங்கவில்லை. ஜென்னசரேட் ஏரியின் நீரலைகள் சிவப்பாகவும், நீலமாகவும் மாறி மாறி அலையிடுகின்றன.

    கலீலியிலிருந்து வந்த பாவப்பட்ட வேலைக் கூலிகள் தாங்கள் செய்யவேண்டிய வேலைகளையும் மறந்துவிட்டு அவனிடம் எதையோ வேண்டுவது போலக் காத்து நிற்கின்றனர். எதற்காக காத்து நிற்கின்றனர்? அவர்களுக்கே அது தெரியவில்லை. பசியையும், அம்மணத்தையும் மட்டுமே இதுவரை வாழ்க்கையில் பெற்று வந்த இம்மக்கள், சிறிதளவாயினும்  எஞ்சியத் தானியங்களையும், திராட்சைகளும் நாள் முழுமைக்குமானக் கூலியாக இந்தத் தந்திரமான நில உடைமையாளர்களிடமிருந்து பெறுவதற்கே தினம் தினம் போராட வேண்டியிருக்கிறது. இந்த மாதிரியான சமயத்தில் எஞ்சியிருக்கும் வேலையையும்  அப்படியே விட்டு விட்டு காந்தம் போல இவர்கள் மேரியின் மகனால் கவரப்பட்டு இங்கே அசைவின்றி நிற்கின்றனர். காலை முதல் ஒவ்வொரு திராட்சைத் தோட்டங்களாக அவர்கள் சென்று கொண்டிருந்தாலும், அவர்களின் கூடைகள் காலியாகவே இருந்தது. அதே போல அறுவடை நிலங்களின், ஒவ்வொரு வயல்களாகச் சென்று இரந்தும் ,கெஞ்சியும் அவர்களது பையில் ஒரு பொட்டு தானியம் கூட இதுவரை விழவில்லை. அந்தியாகிவிட்டது. தங்கள் கூடாரங்களில் காத்திருக்கும் அவர்களின் பிள்ளைகள், இப்பொழுது பசியில் வாடி, வாய்திறந்துக் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கும். ஆனால் என்ன நிகழ்ந்தது?  திடீரென்று அவர்களின் பைகளும், கூடைகளும் இப்போது எப்படி நிரம்பின? என்று அவர்களுக்குப் புரியவில்லை. தங்கள் உள்ளுணர்வினால் முன்னே நிற்கும் வெள்ளை அங்கி அணிந்த மனிதனை விட்டு அகல முடியாமல் அவர்கள் நிலைத்து நின்றனர். 

    அவர்கள் காத்திருக்கின்றனர்? ஆனால் எதற்காக? அவர்களுக்கே அது தெரியவில்லை.

    மேரியின் மகனின் பார்வை அந்த ஏழை மக்களை நோக்கி இருந்தது. அவனும் காத்திருக்கிறான். தன் முன்னே நிற்கும் இந்த ஆன்மாக்கள் எல்லாம் தன்னுள் இருந்து வெளிவந்ததாகவே அவன் உணர்ந்தான். தான் பிறர் எனும் இருமை மறைந்து அவர்களின் வலி, துக்கம், ஏக்கம் எல்லாம் தமக்குள்ளும் அது போலவத் துளிர்ப்பது போல அவனுக்குத் தோன்றியது. "என்னிடம் என்ன வேண்டுகிறார்கள்?, என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமே இல்லையே? என்னால் என்ன இவர்களுக்கு அளிக்க முடியும்?." அவன் அவர்களைப் பார்க்கிறான். இன்னும் இன்னும் எனத் தன்னுள் அவர்களை, அவர்களின் எண்ணங்களை, வேண்டுதல்களை, பிரார்த்தனைகளை என்று அதனுள் சென்று கொண்டே இருக்கிறான். செல்லச் செல்ல அவன் தன் தைரியத்தை இழக்கிறான். ஆனால் அவனின் பயமும், கோழைத்தனமும் இப்பொழுது அவனை வெட்கப்பட வைத்தது. "தன் கால்களைப் பற்றிக் கொண்டிருக்கும் மாக்தலேன்  என்ன ஆவாள்?" சுற்றி அவனை மட்டுமே நோக்கிக் கொண்டிருக்கும் மக்கள் திரளின் கண்கள், அவனின் வார்த்தைகளைக் கேட்க ஏங்கி நிற்கின்றன. ஆற்றுப்படுத்த முடியாத இந்த ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், காத்திருப்புகள். என்னால் இவர்களை இப்படி விட்டு விட்டுப் போக முடியாது. அவன் தனக்குள்ளேயே வாதிடுவதும், குழம்புவதுமாய் இருந்தான். "போவதா? எங்கே போவது? எல்லாப் பக்கங்களிலும் கடவுள் இருக்கிறார். அவரது கருணையே இங்கே இந்தப் பாவப்பட்ட மக்களின் முன்பு என்னை இன்று நிறுத்தியிருக்கிறது. இல்லை அவரின் வலிமை! அழிவேயற்ற அவரின் சக்திதான் என்னை உந்தி இங்கே வரவழைத்திருக்கிறது. மறுதலிக்க முடியாத இறைவனின் நாமத்தால் நான் சத்தியம் செய்கிறேன். இந்த பூமியே என் வீடு. நான் எங்கு சென்றும் தப்பிக்க விரும்பவில்லை. இந்த மண்ணே என் உடல். என்னால் வேறு எங்கும் போகமுடியாது. இந்த மனிதர்களின் உள்ளம்  தான் நான் மண்டியிட்டுப் பிரார்த்திக்கும் பாலை நிலம். எனக்கு வேறெந்தப் பிரார்த்தனைக் கூடமும் தேவையில்லை."

    "இறைவா! நீயே பெரியவன்! உனது விருப்பமே நிறைவேறும்." விதிர்விதிர்க்க அவன் தனக்குள் முணகினான். பின் தலை குனிந்து தன் நெற்றி நிலத்தில் பட வீழ்ந்துத் தன்னை நிலத்திற்கு அர்ப்பணித்தான். "இறைவா! உன் கருணையின் வழியில் என்னை செலுத்துகிறேன்!"  "நீயே என் வழி!! நீயே என் கதி!"

    ஒரு முதியவர் அந்த ஏழை நாடோடிக் கூட்டத்திலிருந்து எழுந்து மேரியின் மகனைப் பார்த்துப் பேசினார், "ஜீசஸ்! நாங்கள் பசித்திருக்கிறோம். ஆனால் நாங்கள் உன்னிடமிருந்து ரொட்டிகளைப் பெற வரவில்லை. நீயும் எங்களைப் போவே ஏதுமற்றவன். உன் வாயைத் திறந்து இறைவனின் கருணை மிகு வார்த்தைகளை எங்களுக்கு அளி! நாங்கள் அச்சொற்களால் திருப்திப்படுகிறோம்."

    "மேரியின் மகனே, அநீதியின் வலுத்த கயிறுகளால் எங்களின் குரல் வளைகள் நெருக்கப்படுகின்றன. நீ சொன்னாயே! எங்களுக்கான கனிவு மிகு செய்தி ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறேன் என்று! அச்செய்தியை எங்களுக்கு அறிவி! எங்களுக்கு உன் சொற்களால் நீதி வழங்கு!" ஒரு துணிச்சலான இளைஞன் அவனைப் பார்த்துக் கதறினான்.

    மேரியின் மகன் மக்களைப் பார்த்தான். பசியின், சுதந்திரத்தின் குரல்கள் அவனைச் சூழ்ந்திருக்கின்றன. அவர்களின் ஏக்கங்களின் வீரியம் அவனை அடித்துச் சென்றது. இத்தனை வருடங்களாக இந்தக் குரலைக் கேட்கத் தான் அவன் காத்துக் கொண்டிருந்தான். அது இப்பொழுது மிகச்சரியானத் தருணத்தில் அவனை அழைக்கிறது. அகமும் புறமும் அவனை உந்தித்தள்ளுகிறது. தன் கைகளை இருபக்கமும் உயர்த்தி அம்மக்களைத் தன் நீண்டக் கூர்மையானப் பார்வையுடன் தீர்க்கமாக நோக்கினான்.

"சகோதரர்களே! வாருங்கள்... போகலாம்!"

    இந்தத் தருணம், இந்த அழைப்பு! இதற்காகத் தான் அவர்களும் காலங்காலமாகக் காத்திருந்தனர். அவர்கள் தங்கள் கைகளை உயர்த்தி ஆரவாரித்தனர், சிலர் அழுதனர், சிலர் வெறி கொள்ளக் கத்தினர், 

"ஆம்! நாம் போகலாம்! எல்லாம் வல்ல இறைவனின் பெயரால்!"

    மேரியின் மகன் முன்னே செல்ல அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் இணைந்து ஒரே உடல் போலச் செல்லத் தொடங்கினர். ஏரியினருகில் ஒரு சிறிய மலைக்குன்றம் இருக்கிறது.  குட்டைப் புதர்களும், சைப்ரஸ் மரங்களும் அடர்ந்த அக்குன்று வெயில் சுட்டெரிக்கும் இப்பருவத்திலும் தன் பசுமையை முற்றிலுமாக இழக்காமல் வெளிர் பச்சை நிறத்திலிருந்தது. நாள் முழுதும் இறைந்த வெம்மையினால் இன்னும் சூடு அடங்காத பாறைத்துண்டங்களிலும், சரளைக் கற்களிலும் அவர்கள்  தங்களின் வெற்றுக் கால்கள் பதித்து ஒருவர் பின் ஒருவராகச் சென்று கொண்டிருந்தனர். அந்தியின் செம்மஞ்சள் நிற ஒளி வானில் அசையாது குத்தி நிற்கிறது கதிரவன். மென் குளிர்மையும், ஈரப்பதமும் படரத் தொடங்கின. வரிசையாக அடர்ந்திருந்த தைல மரத்திலிருந்து, கார வீச்சமும் மணமும்  குன்றினைச் சுற்றி நிறைந்து வீசுகிறது. குன்றின் உச்சியில் சிதிலமடைந்த கட்டிடத் தொகுதிகளும், உடைந்த களிமண் கற்களின் அடுக்குகளும், தூண்களும்  தெரிந்தன, அது ஏதோ தொன்மையான தெய்வ வழிபாட்டிடத்தின் மீதமிருந்த எச்சங்களாக இருக்கும் என்று அவர்கள் நினைத்துக் கொண்டனர். இரவு மீன்பிடிக்குத் தனியாகத் தன் படகுடன் செல்லும் பொழுது, இந்தச் சிதில இடத்தின் வெளித்திண்டில், அமர்ந்திருக்கும் வெள்ளை உருவத்தைத் தான் அடிக்கடி இரவுகளில் காண்பதாக ஒரு மீனவன் சொன்னான். அதன் அழுகை சத்தத்தைக் கூட நமது முதிய ஜோனா கேட்டிருக்கிறார் என்றான். தன்னிலையற்று, தங்களை எதுவோ வலுவாக உந்தி விளிப்பதைப் போல, அவர்கள் ஒரே குடும்பமாக மலை உச்சியை நோக்கி ஜீசஸிற்குப் பின்னால் அணிவகுத்துச் சென்றனர்.

    முதிய சலோமித் தன் மகனைப் பார்த்து, "என்னை உன் கைகளைல் தாங்கிக் கொள், நாமும் அங்கே செல்வோம்" என்றாள். அவள் மேரியின் கைகளை விடவில்லை. "அழாதே மேரி!" "உன் மகன் சாதாரணன் அல்ல, அவன் முகத்தில் ஒளிரும் தீர்க்கத்தை நீ பார்த்தாய் அல்லவா!"

    "எனக்கு யாரும் மகனில்லை, எனக்கு யாரும் மகனில்லை" மேரி வலிப்பு வந்தது போல உதடுகளைச் சுழித்துக் கொண்டு வெறுப்புடன் அழுது கொண்டேக் கத்தினாள். அதோ அவனோடு போகிறார்களே அந்தப் பாவப்பட்ட கூட்டத்திற்குத்தான் அவன் மகன். எனக்கில்லை.எனக்கு யாருமில்லை! இல்லை! இல்லை!" அவள் தன் புலம்பல்களுடனும் மலையேறத் தொட்ங்கினாள். உறுதியாகவே அவளது சித்தத்தில் உறைத்து விட்டது. தன் மகன் தன்னை முழுமையாகக் கைவிட்டு விட்டான் என்பது. அத்திகைப்பிலிருந்து அவளால் இன்னும் வெளிவர முடியவில்லை. அவனைத் தொட்டுத் தழுவி அணைத்துக் கொண்டிருக்கும் பொழுதும், அவன் எப்படியும் தன்னுடன் வந்து விடுவான் என்று அவள் நம்பிக் கொண்டிருந்தாள். ஆனால் அவனது பார்வையோ பொருளற்று, உணர்ச்சிகளுமற்றிருந்தது. "நான் தான் உனது அம்மா" என்று அவள் சொல்லும் பொழுது கூட அவன் அவளைத் தெரிந்தது போலக் காண்பிக்கவே இல்லை. உண்மையிலேயே அவன் மறந்து விட்டானா இல்லை நடிக்கிறானா என்று அவளால் அச்சமயம் யூகிக்க முடியவில்லை. சட்டெனத் தன் கைகளை விலக்கித் தள்ளி விட்டுப் போனானே! அந்த விலகல் அவள் இனி காலம் முழுதும் அனுபவிக்கப்போவது என்று இப்போதுவரை அவள் அறிந்திருக்கவில்லை.

    கூட்டத்தோடு கூட்டமாகத் தன் மனைவியும் மலையை நோக்கிச் செல்வதை, முதிய செபெதீ பார்த்தார். அவர் தலையில் அடித்துக் கொண்டே எரிச்சலாக, அருகிலிருந்தத் தன் மகன் ஜேக்கப்பையும், அவனின் இரு துணைவன்களான பிலிப் மற்றும் நாத்தனேலையும் பார்த்தார். அவர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டு செல்லும் அக்கூட்டத்தினைப் பார்த்துக் கொண்டிருந்தனர். "பிச்சைக்காரக்கும்பல், பட்டினியில் கிடக்கும் பசித்த ஓநாய்கள்! எக்கேடாவது கெட்டுப் போகட்டும். நாமும் அவர்களுடன் ஊளையிடுவோம், இல்லையேல் இவர்கள் நம் ஆடுகளையும், நம்மையும் சேர்த்தே விழுங்கி விடுவார்கள். நாமும் அவர்களின் பின்னால் அவர்களைத் தொடர்ந்து போவோம். ஆனால் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள், காற்றில் சொற்களால் ஜால வித்தை காட்டும் மேரியின் மகன், அவன் இந்தப் பஞ்சப் பயல்களிடம் பேசும் பொழுது நாம் நம் எதிர்ப்பைக் காட்ட வேண்டும். புரிந்ததா! அந்தப் பயல்! அவனின் கை இவர்களுக்கு முன் உயர்ந்திட விடக்கூடாது. நன்றாக உங்களின் வெறுப்பை பட்டைத் தீட்டிக் கொள்ளுங்கள். நாம் சேர்ந்து அங்கே போகலாம். ம்ம்! வாருங்கள்!" செபெதீ கடுமையாகக் கூறிக் கொண்டு தன் குழுவுடன் மேலே ஏற முனைந்தார்.

    ஒரு நொண்டிக் கழுதையைப் போலத் தன் கம்பை நிலத்தில் ஊன்றித் தடுமாறி அவர்களுடன் அவர் முன்னே சென்று கொண்டிருந்தார்.

    ஜோனாவின் இரு மகன்களும் அங்கே பின்னால் கூட்டத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். பீட்டர் தன் அண்ணன் ஆண்ட்ரூவைக் கவனமாகக் கைகளில் பிடித்துத் தாங்கிக் கொண்டு, அமைதியாகவும், அவனுக்கு உறுத்தாத மென்மையானக்குரலோடும் பேசிக் கொண்டு வந்தான். ஆனால் தொட்டால் பற்றிக் கொள்வது போன்றக் கனலும் சீற்றமிகு கண்களால் ஆண்ட்ரூ மலையேறிச் செல்லும் மனிதத்திரளைக் கண்டான். முன்னே அவர்களை வழி நடத்திச் செல்லும் வெள்ளை அங்கி உடுத்திய மனிதன் ஒரு புள்ளியாக அவனுக்குத் தெரிந்தான். மொத்தத்தில் என்ன நிகழ்கிறது என்று புரியாமல் அவன் நிலைகுலைந்துக் குழம்பிப் போயிருந்தான்.

    "யார் அவர்கள், எங்கே போகிறார்கள்?" பீட்டர் யூதாசைப் பார்த்துக் கேட்டான். அவன் இன்னும் எந்த முடிவும் எடுக்க முடியாமல் மலை அடிவாரத்தில் நின்று கொண்டிருந்தான்.

"மேரியின் மகன்" செந்தாடிக்காரன் பதிலுரைத்தான்.

"அவனுக்குப் பின்னால் படை போலச் செல்கிறார்களே, அந்த மக்கள்?"

    "திராட்சைத் தோட்டங்களிலும், வயல் வெளிகளிலும் அறுவடைக் காலங்களில் கூலிக்கு வேலைக்கு வருவார்களே அந்த பாவப்பட்ட ஏழைகளின் கூட்டம்தான் அது. அவன் அந்த மலை உச்சிக்குப் போய் அவர்களிடம் தன் செய்தியை உரைப்பான் என்று நினைக்கிறேன்."

    "அவன் என்ன பேசுவான்?, ஒரு ஜோடிக் கழுதைக்கு வைக்கோல் பிரித்து ஒழுங்காகத் தீவனம் வைக்கக் கூடத் தெரியாத சின்னப்பயல் அவன், என்ன பேசிக் கிழிக்கப் போகிறான்" பீட்டர் ஏளனமாகச் சிரித்தான்.

    யூதாஸ் தன் தோள்களை அலட்சியமாக அசைத்துக் கொண்டான். "பார்ப்போம் அவன் அப்படி என்ன பேசுகிறான் என்று" சொன்னவன், அவனும் அந்தக் குன்றினை ஏற ஆயத்தமானான்.

    வியர்க்க விறுவிறுக்கத் தலையில் திராட்சைப் பழங்கள் நிறைந்தக் கூடையைத் தூக்கிக் கொண்டு இரு கரிய நிற வலுவானப் பெண்கள், தோட்டத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தனர். பார்ப்பதற்கு பொறாமை கொள்ளும் வகையில் திடமான உடற்கட்டு அவர்களுக்கு. வெறுமனே அன்றைய நாளில் எஞ்சியிருக்கும் நேரத்தைக் கடப்பதற்காக, ஊர்வலம் செல்லும் திசை நோக்கி, அம்மக்களைத் தோழமையுடன் அணுகி,  அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார்கள்.

    முதிய ஜோனா, தோள்களில் தன் வலையுடன், அவனது குடிலை நோக்கி மெதுவாக ஏரியிலிருந்து வந்து கொண்டிருந்தார். பசியுடன் , சீக்கிரமேக் குடிலுக்குச் செல்லும் அவசரத்தில் இருந்தார் அவர். மலைக்குன்றில் ஏறிக் கொண்டிருக்கும் தன் மகன்களையும், கும்பல் கும்பல்களாகச் செல்லும் மக்கள் கூட்டத்தையும் பார்த்தவர், நடையை நிறுத்தித் தன் மீன் போன்றக் கண்களால் தூரத்தை வெறித்தார். அவர் எதைப்பற்றியும் நினைக்கவில்லை. யாரிடமும் எதுவும் கேட்கவில்லை. யாராவது செத்துப் போனார்களா?, யாருக்காவது கல்யாணமா? இல்லை எதற்காக இத்தனை மனிதர்கள் விரைவாக மலை ஏறிப் போகிறார்கள்? என்ற எந்தக் கேள்விகளும் அவரிடமில்லை. வெறுமனே அவர் நிமிர்ந்து அங்கே நிகழ்வதற்கு ஒரு சாட்சியம் போலத் தன வாயைத் திறந்து கொண்டுப் பார்த்தார்.

    "வா! மீனவத் தீர்க்கதரிசியே, வா! போகலாம்!" எதிரே வந்து கொண்டிருந்த செபெதீ அவரை அழைத்தார். "அங்கே விருந்து நடக்கிறது! நம் மேரி மாக்தலேனிற்குத் திருமணம் நடக்கப் போகிறது என்று நினைக்கிறேன். நீயும் வா! அங்கு வந்து களிப்புற்றிரு!" செபெதீயின் வழக்கமானக் கிண்டல் பேச்சு.

    ஜோனா தன் தடித்த வாயைத் திறந்து பேச முயன்றார். ஆனால் எதுவும் பேசாது தன் தோள்களில் இருந்த வலையை இழுத்து சரிசெய்து கொண்டு, கனத்தக் காலடிகளுடன் அங்கிருந்து நகர்ந்தார். குறிப்பிட்ட நேர இடைவெளிக்குப் பின்பு அவர் தன் குடிலைச் சரியாக அடைந்திருக்கும் பொழுது, பேறுகால வலி போல அவருள் உழன்று கொண்டிருந்த சொல், சட்டெனப் பிரிந்து வெளிவந்தது. "நரகத்திற்குப் போ! முட்டாள் செபெதீ!" தன் கண்களை விரித்துச் சத்தமாகச் சிரித்துக் கொண்டே சொன்னவர், கதவைத் திறந்து உள்ளே சென்றார்.

    செபெதீயும், அவருக்குத் துணையாக வந்தவர்களும் மலை உச்சியினை அடையும் பொழுது, ஜீசஸ், அங்கிருந்த உயரமானப் பாறையின் மேல் சம்மணமிட்டு அவர்களைப் பார்த்து அமர்ந்திருந்தான். அவன் இன்னும் வாய் திறக்கவில்லை. அவன் அனைவரும் வந்துவிட்டனரா என்று அவர்களுக்காகக் காத்திருந்தான். ஆண்கள் நிலத்தில் சம்மணமிட்டும், பெண்கள் அவர்களுக்குப் பின்னே நின்று கொண்டுமிருந்தனர். அந்த பாவப்பட்ட உழைக்கும் வர்க்கம் மொத்தமும் அவனுக்கு முன்னே அவனைப் பார்த்துக் காத்திருந்தது. அந்தி பொலிந்து இருள் வெளிவருவதற்கானத் தருணம். சூரியன் மறைகிறது. ஆனால் வடக்கே,  தொலைவில் ஹெப்ரான் மலைக்குப் பின் புறம் அதன் கரங்களின் விரல் நுனிகள் இன்னும் தெரிந்து கொண்டிருக்கிறது. வானத்தின் சாம்பல் வெளிச்சம். விண்மீன்களின் ஒளிர்வு தொடங்கிக் கூடுகிறது. நிலவின் கீற்றுகள் அப்பொழுதுதான் தன் மூடிதிறந்து நிலமெங்கும் நறுமணம் கிளர்த்த முயல்கிறது.  மக்களின் சின்னச் சின்ன சலசலப்புகள் இன்னும் அடங்கவில்லை. இன்னும் மலைக்குன்றத்தின் உச்சியில் ஒளி  முற்றிலுமாக அகலவில்லை. கீழே கோட்டு வெளிச்சமாக, நீரலைகளின் அடர்வு நீல நிறமாக மாறிக் கூடி வருகிறது.

    ஜீசஸ் தன் கைகளை, மார்புக்குக் குறுக்கே கட்டி, வானத்தை நோக்கிகிறான். ஒளிக்கும் இருளுக்கும் நடக்கும் போராட்டம், தன் தலைக்கு மேல் தொடர்ந்து கொண்டிருப்பதை உற்று நோக்குகிறான். மெதுவாகக் கீழேக் குனிந்து, தன் எதிரே இருக்கும் மக்களின் முகங்களைத் தனித்தனியேப் பார்க்கிறான். பசியில் வாடியிருந்த அந்த முகங்கள், சுருங்கியும், கவலை தோய்ந்தும் இருந்தும் ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன், பொறுமையின்றி இருக்கிறது. 

    அருகில் வலதுபுறம், அவனைக் குற்றம் சாட்டும் தொனியிலிருந்த ஒரு ஜோடிக் கடுமையானக் கண்கள். பழி வாங்கத் துடிக்கும் அதன் மிருக லயிப்பு.

    அங்கே செபெதீ மற்றும் அவர் கூட வரும் மற்றவர்களையும் கண்டவுடன் , ஜீசஸ், தன் வாயைத் திறந்து வரவேற்றான். "வாருங்கள்".
அனைவரும் சற்று முன்னே வந்து என்னைச் சுற்றி அமர்ந்து கொள்ளுங்கள். என் குரல் அத்தனை வலிமையானதல்ல. நான் உங்களிடம் பேச விளைகிறேன்."

    செபெதீ, ஊரின் பெரிய மனிதன் மற்றும் முதலாளியாகையால் அவனை முன்னே இருக்கும் ஒரு சிறியக் கல்லின் மேல் அமரும் வகையில் அனைவரும் இடம் விட்டு ஒதுங்கினர். அவனுக்கான உரிமை மற்றும் மரியாதையின் பெயரில், அவனுக்கு வலப்புறம் அவனது இரு மகன்களையும், இடப்புறம் பிலிப், மற்றும் நாத்தனேலும் அமர்ந்தனர். சலோமியும், ஜோசப்பின் மனைவி மேரியும் பின்னே பெண்களின் கூட்டத்தில் நிற்கின்றனர். இன்னொரு மேரி, மேரி மாக்தலேன் ஜீசஸின் காலடியில் தலைகுனிந்து அமர்ந்திருக்கிறாள். அவளது தலைமுடி அவனது பாதங்களைத் தழுவிக் கிடக்கிறது. அவளின் மூச்சின் வெம்மை, ஜீசஸின் விரல்களைத் தழுவுகிறது. அங்கு நடப்பதை பார்ப்பதற்கு ஏதுவாக, சற்று மேடான நிலத்தில்,  காற்றில் அசைந்தாடும் தேவதாரு மரத்தின் அடியில் தனியனாக யூதாஸ் நிற்கிறான். அம்மரத்தின் கூர்மையானக் கிளைகளின் ஊடே அவனது கத்தி போன்ற நீலக் கண்கள், மேரியின் மகனை விட்டு அகலவில்லை.

    ஜீசஸ் தனக்குள்ளேத் தைரியம் வரவழைக்கப் போராடிக் கொண்டிருந்தான். அமர்ந்திருந்தவனின் கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தது. "பல வருடங்களாக இந்தத் தருணத்தை எதிர்கொள்வதைத் தான் பயத்துடன் எதிர்பார்த்திருந்தேன். இதோ அது நிகழப் போகிறது. இறுதியில் கடவுளின் விருப்பம் நிகழ்கிறது. என்னைப் பிடித்து இங்கேத் தள்ளிக் கொண்டு வந்திருக்கும் அவரின் வலுமிகு கைகளை இன்னும் உணர்கிறேன். என் வழியே அவரின் வார்த்தைகளைச் சொல்ல நினைக்கும் அவரின் பிரயாசைகளை நான் நினைத்தால் மட்டும் தடுத்துவிட முடியுமா என்ன!. இதோ என் முன்னே என் மக்கள் திரண்டிருக்கின்றனர். ஆனால் நான் என்ன பேசப் போகிறேன். இந்த நொடி வரை எனக்குள் எந்த எண்ணங்களும் இல்லை." அவன் தன்னுள் அலசிக் கொண்டிருந்தான். அவனது எண்ணங்களின் அலைவுகளில் இது வரை அவனுக்கு நடந்த கொஞ்சமே கொஞ்சம் மகிழ்ச்சியான விஷயங்களும், கடவுளிடம் மல்லுக்கு நின்று அவன் வாங்கிக் கொண்டப் பல துக்ககரமான சம்பவங்களும் தோன்றி மறைந்தன. தன் தனிமையுடன் அவன் சுற்றித் திரிந்த பொழுது கண்ட மலைகள், பறவைகள், பூக்கள், ஒரு ஆட்டிடையன் தன் தோள்களில் தன் செல்ல ஆட்டுக்குட்டியைத் தூக்கிக் கொண்டு ஆனந்தமாக குடிலுக்குத் திரும்புகிறான், மீனவர்கள் தங்கள் விரிந்த அகலமான வலையை இழுத்து நீரினுள் படர்க்க வீசுகிறார்கள், ஒரு விவசாயி விதைகளைக் கிளர்த்திய மண்ணில் தூவுகிறான், தானியங்கள் செழித்து நிற்கும் அறுவடை வயல்கள், கதிரடிக்கும் தளம், மக்கள் மாறி மாறி கோதுமைப் புற்களைக் கட்டி அடித்துத் தொலிக்கிறார்கள்.  அதை மூடைகளாக சேகரிக்கிறார்கள். மூடைகளைப் பாரங்களாக கட்டித் தங்கள் கழுதைகளை ஓட்டிக் கொண்டு, அன்றைய நாளின் சேகரிப்புகளுடன் வீடு திரும்புகிறார்கள், வானமும் பூமியும் மாறி மாறி இரு ஜன்னல் கதவுகள் போல திறந்து மூடுகின்றன. கால்களுக்கு கீழும் தலைக்கு மேலும் ஏதுமற்றிருப்பதைப் போல ஒரு நொடி நேரத் தயக்கம். அனைத்துக் காட்சிப்புலமும் ஒரு திரவ மிணுக்கம் போல அவனுள்  முங்கித் தெளிகிறது. இறைவனால் நிகழ்த்தப்படும் அத்தனை அற்புதங்களும் அவன் கண் முன் வந்து போகின்றன. ஆனால் அவன் தன் சொல்லின் வார்த்தையை அதில் எங்கே போய்த் தேட என்று விசனித்தான். அவனுக்குத் தோன்றிய அனைத்தையும் வெளிப்படுத்தியேத் தீர வேண்டும் என்ற உறுதி அவனை உந்தித்தள்ளுகிறது. ஆற்றுப்படுத்த முடியாத இதயத்துடன் என் முன்னே இருக்கும் இம்மனிதர்களைத் தேற்ற விளையும் வார்த்தைகள் எப்படி இருக்க வேண்டும். ஒரு சரியான முடிவை அவனால் எடுக்க முடியவில்லை. சொற்களின் திரள் அவனை விழுங்கித் துப்பியது. 

    தன் முன்னே திறந்துக் கிடக்கும் இவ்வுலகம் கடவுளின் அழகான, தேவதைக் கதையில்லாமல் வேறென்ன. ராட்சசர்களும், இளவரசிகளும் பயணிக்கும் கதை. என் பாட்டி, குழந்தைப்பருவத்தில்  அழுகையிலிருந்து என்னைத் தேற்றுவதற்காகச் சொல்வாளே! அது போன்ற ஒரு கதை! ஆம்! கடவுள் சொர்க்கத்தின் விளிம்பிலிருந்து தன் விரல் நீட்டி மனிதனிடம் கடத்திவிட்ட, மனிதனுக்காக அவன் இயற்றிய ஒரு தேவதைக்கதை.

    அவன் புன்சிரிப்புடன் அவர்களைப் பார்த்து தன் இரு கைகளையும் சிறகுகளைப் போல உயர்த்தினான்.

    "சகோதரர்களே!" இன்னும் அவனது குரல் நிலைபெறாது நடுங்கிக் கொண்டு இருந்தது. "சகோதரர்களே! நான் உங்களுக்குக் கதை சொல்லப் போகிறேன். ஆம்! ஒரு நீதிக்கதை! என்னை மன்னியுங்கள்! நான் படிக்காதவன். எந்த மேதைமையும் என்னிடம் கிடையாது. உங்களைப் போலவே ஒரு பாவப்பட்டவன். என் இதயத்தில் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. ஆனால் என் அறிவால் அதனை உங்களுக்கு விளக்க இயலவில்லை. நான் என்னுள் எந்த எதிர்பார்ப்பும், எண்ணங்களுமின்றி உங்கள் முன் வாயைத் திறக்க முயற்சி செய்கிறேன். என் வார்த்தைகளால் அதை  நான் சொல்ல விளையும் பொழுது அது என்னுள் கதைகளாகவே வெளிவருகிறது. மன்னியுங்கள்! என் சகோதரர்களே!. நான் உங்களிடம் நீதிக் கதைகளின் மூலம் உரையாட விரும்புகிறேன்.

    "நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம், மேரியின் மகனே! மக்கள் திரள் ஒட்டுமொத்தமாகக் கத்தின. "நாங்கள் கேட்கிறோம்!"

திரும்பவும் ஜீசஸ் தன் வாயைத் திறந்தான்.

    "விதைப்பவன் நிலத்தில் விதைகளை விதைக்கிறான். சில விதைகள் பாதைகளில் விழுகின்றன, பறவைகள் அதைக் கொத்தித் தின்கின்றன. சிலக் கற்களின் மேலே விழுகின்றன. அது முளைப்பதற்கான மண் கிடைக்காமல் காய்ந்து வீணாகின்றன. மற்றும் சிலக் கூரிய முட்களில் விழுகின்றன. முட்கள் வளர்ந்து, விதைகளுக்கு சுவாசமோ, வெளிச்சமோக் கிட்டாமல் அழிந்து விடுகின்றன. கடைசியாக வெகுச்சிலவே, நல்ல வளமான மண்ணில் விதைகின்றன. பின் அது வேர்பிடித்து முளைத்துப் பயிராகின்றன. பயிர் செழித்து வளர்ந்துப் பால் பிடித்துக் கனிந்து நெல்லாகித், தானிய மணிகளாகி, மனிதகுலத்திற்கே உணவாகின்றன. நம்மில் கேட்கக் காதுள்ளவர்கள் எவரோ,  அவர்கள் இதைக் கேட்கட்டும்".

    யாரும் பேச வாயெடுக்கவில்லை. திகைப்பும் , குழப்பமுமாக அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தனர். முதிய செபெதீ சண்டை போட வேண்டும் என்ற ஒரே முனைப்புடன் தன் ஏறுக்கு மாறானக் கேள்விகளை கேட்க முயன்றார்.

    "மன்னிக்கவும்!", எனக்குப் புரியவில்லை. எனக்குக் காதுகளும், செவித்திறனும் மிகத் தெளிவாகவே இருக்கிறது. கடவுளுக்கு நன்றி! உன்னுடையக் கதையை நான் தெளிவாகவேக் கேட்டேன். ஆனால் எனக்குப் புரியவில்லை. இதன் மூலம் நீ என்ன சொல்ல விளைகிறாய்? இன்னும் கொஞ்சம் சரியாகச் சிக்கலின்றி உன்னால் விளக்க முடியுமா?" கிண்டலாகச் சிரித்துக் கொண்டவர், பெருமையாகத் தன் வெண்ணிறத் தாடியைத் தடவிக் கொண்டு சுற்றும் முற்றும் உருவாகும் சலசலப்பைக் கவனித்தார்.

    "அல்லது, நான் நினைப்பது போல நீதான் அந்த விதை விதைப்பவனா?"

    "ஆமாம்!" ஜீசஸ் அவரை வினயமாகப் பார்த்தான். "நானே விதைப்பவன்"

    "அந்தக் கடவுள் நம்மைக் காக்கட்டும்!" முதியவர் அலட்சியபாவத்தில் கூச்சலிட்டார். தன் கைக்கோலைத் தரையில் இடித்துக் கொண்டு சரியாக அமர்ந்தார். " ம்ம்! நிச்சயமாகநாங்கள் கற்களும், முட்களும்தான். பின் எங்கே விதைக்கப் போகிறாய் இளைஞனே!"

    "உங்களிடம் தான்" மேரியின் மகனின் சொற்கள், தணிவுடன் குழைவாக எதிராளியை அணுகியது. 

    ஆண்ட்ரூ மிகுந்தப் பதற்றத்துடன், தன் செவிகளைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறான். ஜீசஸைப் பார்த்ததும் அவனின் இதயம் பதற்றத்துடன், ஒரு காதலியைப் பார்ப்பதைப் போலத் தாறுமாறாகத் துடித்தது. இதே போன்ற ஒரு அனுபவத்தைத் தான் அந்த ஜோர்டான் நதிக்கரையில் அவனது ஆன்மீகக் கடைத்தேற்றுதலை மாற்றி அமைத்த ஞானஸ்நானம் செய்பவரான- யோவனைப் பார்த்த பொழுதும் உணர்ந்தான். பிரார்த்தனைகளினாலும், விழிப்புகளாலும், உண்ணா நோன்புகளினாலும் உடலை வருத்தி, சூரியன் தின்று மிச்சமிருந்த நலிந்த உடலில் இடைக் கச்சையாக மிருகங்களின் தோலை உடுத்திக் கொண்டு நின்ற அம்மனிதனின் ஆளை விழுங்கும் காட்டு மிருகத்தின் ஒளிர்க்கண்கள்,  அந்த எரியும் இரு தீக்கங்குகளை இப்பொழுது தன் நினைவில் இருத்தினான். அவரின் குரல்வளையிலிருந்து ஒரு சன்னதமாய், ஏதோ ஒரு தொல் மூதாதையின் விளியாகக் கேட்ட அச்சொல் அவன் காதுகளில் அடர்ந்தது. "வருந்து, வருந்து!" அந்தக் குரலின் ஒவ்வொரு அதிர்வலைகளுக்கும், ஜோர்டான் நதி எழுந்தடங்கியது. வணிகர்களின் கூண்டு வண்டிகளும், ஒட்டகங்களும், அங்கிருந்து நகரமுடியாமல் நின்ற அந்தக் காட்சி இன்றும் அப்படியே ஒரு ஓவியம் போல அவனுள் காட்சியளித்தது.

    ஆனால் இங்கு என் முன்னே நிற்கும் இன்னொரு மனிதனோ, கனிவாகச் சிரிக்கிறான், அவனது குரலோ அமைதியும், நடுக்கமும் கொள்கிறது, பார்க்க ஒர் பொம்மைப் பறவையைப் போல இருக்கிறான். முதன் முதலாக தன் கீச்சிடலை வெளிப்படுத்த முயன்றுப் போராடிக் கொண்டிருக்கிறான், பாவம்! ஆனால் இவன் கண்கள், எரிவதற்குப் பதிலாக என்னைக் குளிர்விக்கிறது. ஒரு மயில் இறகினைப் போல வருடுகிறது. ஆண்ட்ரூவின் சிறகுகள் கொண்ட இருதயம் இருவருக்குள்ளும் அனாயசமாகப் பறந்துப் பாய்ந்து தடுமாறுகிறது

    ஜான் மெதுமெதுவாகத் தன் தந்தையிடமிருந்து விலகி ஜீசஸை நோக்கிச் சென்றான். செபெதீ அவனைக் கவனிக்கும் பொழுது அவன் ஜீசஸூக்கு அருகில் சென்று அவன் காலடியிலேயே உட்கார்ந்துக் கொண்டான். அது செபெதீக்கு மேலும் ஆத்திரம் வர வைத்தது. "இந்தப் பயலுக்குப் பிடித்த பித்து இன்னும் இறங்கவில்லை. ஏற்கனவே வலுவற்று நோஞ்சானாக இருக்கிறான். இதில் தவறானத் தீர்க்கதரிசிகளைத் தேர்ந்துத் தன் தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுக் கொள்கிறான். "செபெதீ கோபத்துடன் தன் மகனைப் பார்த்துத் திட்டினார்" வருடத்தின் ஒவ்வொரு நாளும் இம்மாதிரி புதிதாய் முளைத்து வருபவர்கள், என்னவோ இந்த உலகத்தையே தன் தோள்களில் தாங்குவது போலப் பாவலா செய்கிறார்கள்; ஆனால் இந்த ஒவ்வொருப் போக்கிரிப் பயல்களுக்கும் மண்டையில் என்னதான் இருக்கிறதோ?  கடவுளுக்குத்தான் வெளிச்சம்! ஏதோ தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவத்தில் நேராக வந்து நிலஉடைமையாளர்களை, பாதிரிமார்களை, அரசர்களைத் தொல்லைபடுத்துவதற்கு வேண்டிய எல்லா செயல்களையும் செய்கிறார்கள். ஸ்திரமானதாகவும், மக்களுக்குப் பயன்படும் வகையிலும் உலகில் என்னவெல்லாம் நல்ல தன்மைகள் இருக்கிறதோ அதையெல்லாம் உடைத்து சுக்குநூறாக்குவதே தங்கள் கொள்கையாக கடைப்பிடிக்கிறார்கள். ஆஹ்! அடுத்தது என்ன? இதோ இங்கே எளிமையின் ஸ்வரூபமாக மேரியின் மகன்! இன்னும் இளமையும், மென்மையுமாக இருக்கும் இந்தப்பயலின் தலையைத் திருகி விட்டால்தான் என்ன! அப்படியாவது திருந்துவார்களா! தெரியவில்லை" செபெதீ தனக்குள்ளேயே அங்கலாய்த்துக் கொண்டிருந்தார்.

    தனக்குச் சாதகமானச் சூழல் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள, மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று சுற்றும் முற்றும் பார்க்கிறார் செபெதீ. தன்னருகில் இருக்கும் மகன் ஜேக்கப்ப்  ஆத்திரத்திலா இல்லை வருத்தத்திலா என்று அறுதியிட்டுக் கூற முடியாத பாவத்தில் மேரியின் மகனைப் பார்க்கிறான். இப்பொழுது பின்னாடி மனைவியைத் திரும்பிப் பார்க்கிறார். இன்னும் அழுகையை நிறுத்தாமல் கைக்குட்டையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பயத்துடன் நடுங்கிக் கொண்டிருக்கும் அவள், எதிரே பட்டினியால் அனுதினமும் போராடிக் கொண்டிருக்கும் பசி மட்டுமே கொண்ட மெலிந்த மனிதர்களைக் காண்கிறாள். அவர்கள் மேரியின் மகனை, அவனது சொற்களை ஊன்றிக் கவனித்து நிற்கிறார்கள். பக்தியும், நம்பிக்கையும் ஒருசேர, அங்கே நிற்கும் பசித்த மானிடர்களைப் பார்ப்பதற்கு, தன் அன்னையை எதிர் நோக்கி, வாயைத் திறந்து உணவிற்காகக் கூக்குரல் இட்டுக் கொண்டே இருக்கும் குஞ்சுப் பறவைகள் போல அவளுக்குத் தோன்றியது.

    "ஒரு கொள்ளை நோய் பீடித்துக் கொண்டதைப் போலல்லவா இந்தப் பிச்சைகாரப் பயல்கள் நிற்கிறார்கள்!" அவர் தலையில் அடித்துக் கொண்டு தன் மகனின் தோள்களைப் பற்றி சாய்ந்து கொண்டார். "நான் வாயைத் திறக்காமல் இருப்பதே நல்லது. இல்லையென்றால் என்னை நானே பிரச்சனைக்குள் தள்ளிவிடுவேன்".

    ஒரு சாந்தமான, மனதை உருக்கும் குரல் ஜீசஸின் காலடியிலிருந்து கேட்டது. செபெதீயின் இளைய மகன் நிமிர்ந்து தன் குருவின் முகத்தைப் பார்த்து பேசத் தொடங்கினான். சுற்றியிருந்த மக்கள் கூட்டம் அக்குரலைக் கேட்டு சற்று எழுந்து அமர்ந்தது.

    "நீங்களே விதைப்பவர்! நாங்களோ கற்களும், முட்களும், வளமான நிலங்களும் ஆவோம். ஆனால் நீங்கள் விதைக்கப் போகும் விதை! அது என்ன?"

    அவனின் குழப்பமான,  சிறுவனைப் போன்ற முகம் ஜ்வாலையுறுகிறது. பாதாம் போன்ற சிறியக் கருமையானக் கண்கள், துயரத்துடன் ஜீசஸை நோக்குகின்றன. சதைப்பற்றுள்ள அவனின் வெளுத்த தேகம், காற்றில் அசையும், செடியைப் போல நடுங்குகிறது. ஜீசஸ் சொல்லும் பதிலைக் கொண்டே தன் இனிமேலான வாழ்க்கையின் பாதை அமையப் போகிறது  என்ற உள்ளுணர்வுடனும், திடத்துடனும், பொறுமையாக ஊன்றிக் காத்துக் கொண்டிருக்கிறான்.

    ஜீசஸ் குனிந்து அக்குரலின் விளியைத் தன்னுள் உள்வாங்கிக் கொண்டு, அசையாது அமர்ந்திருந்தான். தன் இருதயத்தில் ஒரு சரியான சொல்லை, அவன் துழாவிக் கொண்டிருந்தான். காலாதீதமான, அழியாத, எளிமையான ஒரு சொல்! தனக்குள் போராடிக் கொண்டிருந்த அவனின் முகம் முழுதும் வியர்வை  படிந்து நாடியிலிருந்து சொட்டுகிறது.

    "என்ன விதையை நீங்கள் விதைப்பதற்காக வைத்திருக்கிறீர்கள்?" செபெதீயின் மகனின் படபடத்தும் குரல் திரும்பவும் அவனைத் துளைக்கிறது.

    அவன் சொல்லிமுடிக்கும் முன், ஜீசஸ் தன் உடலை இடம் வலமாக அசைத்துக் கொண்டே, அச்சொல் தன்னுள்ளிருந்து முளைப்பதைப் போல தன் கைகளை இருபுறமும் வானை நோக்கி உயர்த்தி முன்னே மக்களைப்பார்த்தான்.

"அன்பு", "ஒருவரையொருவர் நேசியுங்கள்" ஒரு தீர்க்கமானக் குரல் அவனது அடித்தொண்டையிலிருந்து அதிர்வுகளுடன் வெளிவந்தது.
"ஒருவரையொருவர் நேசியுங்கள்!"

    சொல்லி முடித்ததும், அவன் தனக்குள் முற்றிலுமாகக் காலியானதைப் போல உணர்ந்தான். அமர்ந்திருந்த இடத்திலிருந்து சரிந்து விழப் பார்த்தவன் சற்று நிதானித்துக் கொண்டு, தன்னுள் இருக்கும் சொற்கள் அனைத்தும் தீர்ந்ததைப் போல சோர்வாக நிலத்தைப் பார்த்தான்.

    மக்கள் ஒருவருக்கொருவர் கிசுகிசுத்துக் கொண்டு, சலசலப்புடன் எழுந்தனர். பலர் இல்லை என்பதைப் போலத் தலையை அசைத்தனர். சிலர் தங்களுக்குள் கிண்டல் செய்வதைப் போலச் சிரித்துக் கொண்டு அங்கிருந்து போக எத்தனித்தனர்.

    "அந்தப் பையன் என்ன சொன்னான்?" கூட்டத்தில் இருந்தக் கேட்கும் திறன் மந்தமானக் கிழவர் தன்னருகில் நின்றிருந்தவனிடம் கேட்கிறார்.

"அது நாம் ஒருவரை இருவர் நேசிக்க வேண்டுமாம்"

    "சாத்தியமற்றது!" கோபமாக அந்தக் கிழவர் கத்தினார். பட்டினியிலும், பசியிலும் கிடக்கும் ஒரு மனிதன், வயிறு நிரம்பத் தின்று திருப்தியாக இருப்பவனை எப்படி நேசிக்க முடியும். அநீதியினால் பாதிக்கப்பட்ட ஜனங்கள், தங்களை ஒடுக்குபவர்களை எப்படி நேசிப்பார்கள். இது சாத்தியமற்றது. வாருங்கள் நாம் திரும்பப் போகலாம்"

    "ம்ம்! தச்சனின் மகனே!, இதைச் சொல்வதற்காகத் தான் நீ எங்களை இங்கு அழைத்து வந்தாயா? இந்த வியக்கத்தக்க, அற்புதமான செய்தியைத்தான் நீ எங்களுக்காகக் கொண்டு வந்திருக்கிறாய்! அப்படியென்றால் நீ அந்த ரோமானியர்களையும் நேசிக்கச் சொல்கிறாய்! அதாவது உன்னைப் போலவே!, நாங்கள் அவர்களின் முன்னே சென்று எங்கள் கழுத்தை நீட்டித் தெரிவிக்க வேண்டும், என் அன்பு சகோதரர்களே! தயவுசெய்து எங்கள் தலையை அறுத்துத் கொள்ளும் என்று" அருகிலிருந்த தேவதாரு மரத்தில் சாய்ந்து நிற்கும் யூதாஸ், ஆத்திரத்தில் தன் சிவந்தத் தாடியைத் தடவிக் கொண்டே முணுமுணுத்தான்.

    கூச்சல்கள், வசை மொழிகள், அலறல்கள், முறைக்கும் தீப்பற்றியப் பார்வைகள். தனக்குள் அனிச்சையாக உருவாகும் கசப்பை விழுங்கிக் கொண்டு ஜீசஸ் அங்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் எல்லாவற்றையும் பார்க்கிறான். தன் முழு சக்தியினாலும் உந்தி, அங்கிருந்து விலகிச் செல்ல எத்தனிப்பவர்களை, பலமாக அழைக்கும் தொனியில் கத்தினான்.

   "ஓருவரையொருவர் நேசியுங்கள்!" ஒருவரையொருவர் நேசியுங்கள்!" உறுதியான ஒரு மன்றாட்டு அவன் குரலில் வெளிப்பட்டது. 
"அன்பே இறைவன்! நானும் அவனை ஒரு கொடூரமானக் காட்டுமிராண்டி என்றும், அவன் தொடுகையினால் தான் மலைகளெல்லாம் தீப்பிடித்து எரிகின்றன. மனிதர்கள் சாகிறார்கள் என்றும் எண்ணியிருந்தேன். அவனிடமிருந்து  தப்பிப்பதற்காக மடாலயத்திற்குப் போய் என்னை மறைத்துக் கொண்டேன். என் முகத்தை தரையில் புதைத்து என் பிரார்த்தனைகளின் ஊடே அவனின் விளிக்காகக் காத்திருந்தேன். இதோ அவன் வந்துவிட்டான். எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ஒரு மின்னல் வெட்டு போல அவன் எனக்குள் புகுந்தான். ஒரு நாள் விடியலில், அவன் வந்தான், காலையின் குளிர் இளந்தென்றலாக, "எழுக! என் மகனே! நானும் எழுகிறேன் உன் வழியே! நான் வந்துவிட்டேன். இதோ நான் இங்கிருக்கிறேன்!"

    அவன் கைகளை மார்புக்கு குறுக்காகக் கட்டிக் கொண்டு, தன் இடுப்பு வரைக் குனிந்து அவர்களை அழைக்கும் வண்ணம், அவர்கள் முன்னே அமர்ந்திருந்தான்.

    "கடவுள் விடியலின் குளிர்ந்த தென்றலா!" வலிச்சம் காட்டுவது போல செபெதீ உதட்டைச் சுழித்து ஜீசஸைப் பார்த்துக் கேலி செய்தார். "நரகத்திற்கு போ! போலியே!" என்று தன் கையிலிருந்த கம்பை எடுத்து அந்தரத்தில் சுழற்றியவர். தொண்டை அடைக்க இருமி, கபத்தைத் தரையில் காறி உமிழ்ந்தார்.

    மேரியின் மகன் கீழிறங்கி வந்து அவர்களுடன் அமர்ந்து கொண்டான். அவன் தான் பேசுவதற்காகத் தன்னை  உந்திக் கொண்டிருந்தான். அவர்கள் ஒவ்வொருத்தர் முகங்களையும் அமைதியாக உற்று நோக்கி, வார்த்தைகளின்றி மன்றாடினான். அங்கிருந்து எழுந்து மக்கள் கூட்டத்தின் ஊடே நடந்து முன்னும் பின்னும் சென்றான். அது ஒரு மேய்ப்பன் தன் ஆடுகளைக் கட்டுப்பாட்டுடன் வழி நடத்துவது போல இருந்தது. 

    மறுபடியும் தன் கைகளை வான் நோக்கி உயர்த்தினான். பரலோகத்தின் சொற்களைத் தன்னுள் உறிஞ்சிக் கொள்வதைப் போல அவன் கைவிரல்கள் நடுங்கின.

    "அவன் நம் தந்தை!" ஆம்! ஆற்றுப்படுத்த முடியாத வலியினையும், துக்கத்தையும், குணப்படுத்தமுடியாத புண்களின் வாதைகளையும் அவன் நமக்கு இவ்வுலகத்தில் அளிக்கிறான் எனில். கவலையுறுங்கள்! துன்பப்படுங்கள்!  நாம் நம் வலியினையும், துக்கத்தையும், பசியினையும் எந்த அளவுக்கு வருத்தப்பட்டு சகித்துக் கொள்கிறோமோ, அதே அளவுக்கு, ஆம்! என் சகோதரர்களே! அதே அளவுக்கு. உலகின் அனைத்துத் துன்பங்களின் பாரங்களை வருத்தப்பட்டு சுமக்கிறவர்களே! உங்களின் பரலோக ராஜ்ஜியத்தில் உங்களை மகிழ்வினாலும், இன்பத்தினாலும் மிகுதியாக நம் தேவன் நிறைக்கப் பண்ணுவான்! ஆகையால் பெலப்படுக!".

"நீதிக்கான பசியும், தாகமும் கொண்டவர்கள் பாக்கியவான்கள்"

    "நீதி மட்டும் எங்களுக்குப் போதாது", கூட்டத்தில் பசியில் வாடி நிற்கும் ஒரு இளைஞன் இடை மறித்துக் கத்தினான். "எங்களுக்கு ரொட்டியும் வேண்டும்!"

    "ஆம்! ரொட்டியும் கூடத்தான்!", "ரொட்டியும் தான்...நீதிக்காக பசியும் தாகமும் கொண்டவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் நம் தேவனால் திருப்திபடுவர்" ஜீசஸ் மூச்சிறைத்தான். துக்கப்படுபவர்கள் பாக்கியவான்கள். தேவன் அவர்களை சுகப்படுத்துவான். பாவப்பட்டவர்கள், சாந்தமுடையவர்கள், அநீதி இழைக்கப்பட்டவர்களே, இது உங்களுக்காக, ஏழைகளே, அநீதியினால் உழைபவர்களே, அமைதியுடன் அனைத்தையும் ஏற்றுக் கொள்பவர்களே, உங்களுக்கானதே நம் தேவனின் பரலோக ராஜ்ஜியம்!"

    திராட்சைகள் நிறைந்த கூடைகளை தலையில் சுமந்து கொண்டு நிற்கும் அந்த இருக் கரியப் பெண்களும், ஒருத்தரை ஒருத்தர் அமைதியுடன் பார்த்தனர். அவர்கள் தங்களுக்குள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அவர்களின் பார்வை ஒரு புள்ளியில் சந்தித்துக் கொண்டன. அவர்கள் தங்கள் கூடைகளை இறக்கினர். திராட்சைக் கொத்துக்களை கைகளில் எடுத்துக்கொண்டு வலப்புறமும், இடப்புறமும், பசியோடு அமர்ந்திருக்கும் மக்களுக்கு வினியோகம் செய்யத் தொடங்கினர். ஜீசஸின் கால்களைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறாள் மாக்தலேன், தலையை உயர்த்தி மக்களுக்கு தன் முகத்தைக் காட்டும் தைரியம் இன்னும் அவளுக்கு வரவில்லை. மிக ரகசியமாகத் தன் ஆசிரியனின் கால்களை கேசத்தால் வருடிக் கொண்டே முத்தமிடுகிறாள். அவளது சுவாசத்தின் வெம்மையும் கண்ணீரும், அவன் கால்களின் புழுதியில் படிந்து ஒரு சிதறலான நீர்க்கோலமிடுகிறது.

    ஜேக்கப் பொறுமையிழந்திருந்தான். சகிக்கமுடியாமல் எழுந்தவன், திரும்பிப்பார்க்காமல் அங்கிருந்து நகர்ந்தான். ஆண்ட்ரூ வெறி பிடித்தது போலத் தன் சிவந்தப்பித்துக் கண்களுடன்,  தன் தம்பியின் பிடியிலிருந்து விலக்கிக் கொண்டு ஜீசஸுக்கு அருகில் வந்து அமர்ந்தான். யூதேயாவின் ஜோர்டான் நதிக்கரையிலிருந்து நான் இங்கு வந்திருக்கிறேன். அவனது குரல் மிருகத் தன்மையுடன் கடுமையாக இருந்தது. "அங்கே ஒரு தீர்க்கதரிசி இவ்வாறு தன்னைப் பிரகடனப்படுத்துகிறார்: "மனிதர்கள் வைக்கோல் பதர்கள். நான் நெருப்பு!, நான் அதற்கு தீ வைக்கிறேன். நான் பூமியை எரித்து சுத்தப்படுத்த வந்திருக்கிறேன். தீயினால் ஆன்மாவைக் கழுவித் தூய்மையாக்குவதன் மூலம் நம் மெசியா முன்னே வரும் பாதையினைச் செப்பனிடுகிறேன் என்கிறார். ஆனால் தச்சனின் மகனே! நீயோ அன்பைப் போதிக்கிறாய்! சுற்றிப் பார்! உனக்கு முன்னால் இருக்கும் இந்த மனிதர்களை!  எல்லோருமே ஒவ்வொருவகையில்  பொய்யர்கள், கொலைகாரர்கள், வழிப்பறி செய்பவர்கள், கொள்ளையர்கள், நேர்மையற்றவர்கள். இதோ ஏழைகளும், பணக்காரர்களும். ஒருபுறம் ஒடுக்கப்படுபவர்கள், மறுபுறம் அவர்களை ஒடுக்குபவர்கள். உன் முன்னே அமர்ந்து பவ்யமாக உன் வார்த்தைகளைப் பிரதியெடுப்பவன், நீதியை இயற்றி மக்களை வழி நடத்தும் அரசன், எல்லோரும்! எல்லோரும் அவரவர் வழியில் தீங்கு செய்பவர்கள்தான்! 

    ஆம்! நானும் கூடப் பாவிதான்! ஒரு பொய்யன், நேர்மையற்றவன். அதோ இருக்கிறானே என் தம்பி பீட்டரையும் , தன் பெருத்த தொப்பையைச் சுமந்து கொண்டு நிற்கிறானே கிழட்டு செபெதீ  அவனையும் சேர்த்துதான் சொல்கிறேன். அவன் உன் "அன்பு" என்ற வார்த்தையைக் பிடித்துக் கொண்டு தன் படகுகளையும், அடிமைகளையும் தந்திரமாக எப்படிப் பயன்படுத்தலாம் என்றும், எப்படித் தன் திராட்சை மதுக்கூடத்திலிருந்து மக்களுக்கு வினியோகிக்க வேண்டிய பங்குகளைத் திருடலாம் என்றும் கணக்கு போட்டுக் கொண்டிருப்பான்"

    தன்னைப் பற்றிய கடுஞ்சொற்களைக் கேட்டதும், முதிய செபெதீ ஆத்திரத்துடன் ஆவனை நோக்கி ஓடிவந்தார். கழுத்து நரம்புகள் புடைக்க, ஆண்ட்ரூவைப் பார்த்து வசை பொழிந்து கொண்டு ஆவேசமாகத் தன் கையிலிருக்கும் கம்பைக் கொண்டு அவனை அடிக்கப் பாய்ந்தார். ஆனால் சலோமி சரியான நேரத்தில் அவரைத் தடுத்து நிறுத்தி அம்ர்த்தினாள்.

    "அவமானமாக இருக்கிறது உங்களைப் பார்த்தால், வயதாகியும் உங்களின் சின்னத்தனங்களை நீங்கள் திருத்தவே இல்லை. வாருங்கள் நாம் நம் வீட்டிற்குப் போகலாம்"  சலோமி அவசரமாகத் திரும்பினாள்.

"வெற்றுக்காலுடன், காலணிகள் வாங்கக் கூட வழியில்லாமல் நிற்கும் பிச்சைக்காரப் பயல்களா! ஒருத்தனும் கையேந்திக் கொண்டு இரந்து என் வீட்டுப் பக்கம் வந்துவிடாதீர்கள்" செபெதீ தன் குரலை உயர்த்தி அனைவரும் கேட்கும்படிக் கத்தினார். சற்றே மூச்சிறைக்க, சுவாசத்தை உள்வாங்கிக் கொண்டு, மேரியின் மகனைப் பார்த்து தொடர்ந்தார். "அப்புறம், நீ! தச்சனே! உன் மெசியாக் கதைகளை வைத்துக் கொண்டு, இந்த விளையாட்டையெல்லாம் என்னிடம் காண்பிக்காதே! ஏன் சொல்கிறேன் என்றால், இதன் பாதிப்பை இனிமேலும் நீ புரிந்துகொள்வாயோ! தெரியவில்லை, பாவம்! உன்னிடம் சொல்லி மட்டும் என்ன செய்ய, கிறுக்குப்பயல்! நீயும் மற்றவர்களைப் போல சிலுவையில் அறையப்படுவது தான் நடக்கப் போகிறது. அதுதான் உன் பிரச்சனைகளை நீ மறப்பதற்கு இருக்கும் ஒரே வழி. ஆனால் அதற்காக நீயல்ல!  நானே வருந்துகிறேன், நீ இதிலிருந்து தப்பிப்பாய் என்று எனக்குத் தோன்றவில்லை. உன் துரதிஷ்டம் பிடித்த தாய் உன்னைத் தன் ஒரே மகனாய்ப் பெற்றதுதான் அவள் வாழ்க்கையில் செய்த ஒரே பாவம். 

    எதிரே கற்குவியலுக்கு மேலே  ஒரு பொட்டலம் போலத் தன் முகம் தரையில் உராயச் சரிந்து கிடக்கும் மேரியைக் கைத்தூண்டிக் காண்பித்து செபெதீ பேசிக் கொண்டிருந்தார்.

    ஆனால் அந்தக் கிழவரின் கோபம் இன்னும் அடங்கவில்லை. தன் கைக்கோலால் தரையில் ஊன்றி அழுத்திச் சத்தம் போட்டார், "அன்பு ! என்று அனைவருக்கும் முன்னே நின்று சொல்லும் இந்தக் கிறுக்கன்! நாமெல்லாம் சகோதரர்கள்! அதனால் என் வீட்டில் புகுந்து, உங்களுக்கு வேண்டிய, உங்களால் முடிந்த எல்லா பொருட்களையும் அள்ளிச் செல்லுங்கள் என்று அபத்தமாக ஏதாவது உளறுவான் போலிருக்கிறது. அன்பு! என்னால் என் எதிரியை நேசிக்க முடியுமா? இல்லை என் முற்றத்திற்கு வெளியேக் கூலிக்காக கையேந்தி , என் வாசல் கதவிற்கு வெளியே நின்று இரந்து பிழைக்கும் இந்தப் பிச்சைக்காரக் கூட்டத்தை என்னால் நேசிக்க முடியுமா? அன்பு! இந்த அற்பப் பயல் சொல்வானாம், இந்த மாட்டுமூளைக் காரர்கள் கேட்பார்களாம். பஞ்சப்பராரிகள். அதனால்தான் நான் எப்போதும் ரோமானியர்களிடம் என்னுடைய நன்றியுறுதல்களைத் தெரிவிக்கிறேன். அவர்கள் வெளியாட்களாக நம்மை ஆட்சி செய்தாலும், எல்லாவற்றையும் அதனதன் வரிசையில் சரியாக வைத்திருக்கிறார்கள்.

    செபெதீயின் பேச்சு சுற்றி நின்ற பாவப்பட்டக் கூட்டத்திற்குச் சினத்தை ஏற்படுத்தியது. அவர்கள் ஒருமித்து மறுத்துக் கூச்சலிட்டுக் கொண்டு செபெதீயை நோக்கி வந்தனர். யூதாஸ் அதுவரை காத்திருந்து, தேவதாரு மர நிழலடியிலிருந்து வெளியேக் குதித்து அவர்கள் முன் வந்து நின்றான். முதிய சலோமி அவனைக் கண்டதும் பயத்துடன் நடுங்கத் தொடங்கினாள். அவள் தன் கணவனின் வாயைப் பொத்திக் கொண்டு அங்கிருந்து திரும்பிச் செல்ல ஆயத்தமானாள். ஆனால் அவர்களை மிரட்டும் படியாகக்  கூட்டம் முன்னேறி வந்து கொண்டிருந்தது.

    "அவரின் பேச்சினைக் கேட்காதீர்கள்! மக்களே! ஆத்திரத்தில் அவர் தலைகால் புரியாமல் உளறுகிறார். உண்மையில் அவர் வேறு எதையோ சொல்ல நினைத்து, கோபம் தலைக்கேறிப் பொருளின்றி பிதற்றுகிறார்"

    அவள் செபெதீயைப் பார்த்து கண்டிப்பானக் குரலில் கட்டளையிட்டாள். "வாருங்கள்! நாம் சீக்கிரம் இங்கிருந்து போய்விடலாம்" என்று அவசரப்படுத்தினாள்.

    அவள், ஜீசஸீன் காலடியில் அமைதியாகவும்,மகிழ்ச்சியுடனும் அமர்ந்திருக்கும் தன் இளையமகனை நேருக்கு நேர் பார்த்து தலையசைத்துக் கண்களாலேயே வரும்படி அழைத்தாள். 

"வந்துவிடு! என் மகனே!, இருளத் தொடங்கிவிட்டது"

    "நான் இவருடன் இருக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன் அம்மா!" அவன் உறுதியாகப் பதிலளித்தான்.

    கீழே விழுந்து கிடந்த மேரி, உடனடியாகத் தன் கால்கள் தடுமாற எழுந்து நின்றாள். கண்ணீரை அழுத்தித் துடைத்துக் கொண்டு, தன் மகனைத் தன்னோடு வீட்டிற்கு அழைத்துப் போகும் நோக்குடன் ஓட்டமும் நடையுமாக அவனை நோக்கிப் போனாள். 

    அந்தப் பரிதாபகரமானப் பெண் உள்ளூரப் பயந்திருந்தாள். ஒருபக்கம் அன்பு எனும் சொல்லினால் ஆட்பட்டு அவனைப் பின்தொடரக் காத்திருக்கும் பாவப்பட்ட ஏழை மக்கள், மறுபக்கம் அச்சுறுத்தும் வகையில், தன் மகனைப் பார்த்து சாபங்களைப் பொழியும், கிராமத்தின் பணக்கார முதியவர். அவள் தான் என்ன செய்ய என்று தெரியாமல் நடுநடுங்க முன்னே சென்றாள்.

    "நான் உங்களிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன், கடவுளின் பெயரால் அவன் சொல்வதைக் கேட்காதீர்கள், திரளில் நிற்கும் ஒவ்வொருத்தராக மாறி மாறி அவள் கதறிக் கொண்டே சொல்கிறாள்.
"அவனுக்கு நோய் பீடித்திருக்கிறது, அவன் ஒரு நோயாளி" அவனை விட்டு விடுங்கள்!"

    உதறல் எடுத்தது போல விரைத்த கைகளை மடக்காமல் நடந்து அவனை நோக்கி பக்கத்தில் வந்தாள். அவன் தன் கைகளை மார்பிற்கு குறுக்கே கட்டிக் கொண்டு அமைதியாக கீழே தூரத்தில் வெளிக்கும் ஏரியின் அலைச்சுழிகளை கண்ணடைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறான். "வா! என் மகனே!" வா! நாம் ஒன்றாகச் சேர்ந்து நம் வீட்டிற்குப் போய்விடலாம்" அவளது குரல் இறைஞ்சி, மென்மையாக அவனை அழைக்கிறது.

    அவன் அக்குரலின் முகத்தைத் திரும்பி ஆச்சர்யத்துடன் பார்த்தான். இவள் யாராக இருக்கும் என்ற துணுக்குறல் அவனது பார்வையில் இருந்தது.

    "வா! என் அன்பு மகனே!" மேரி திரும்பவும் அவனைத் தன் கனிவானக் கண்களுடன் ஆழமாகப் பார்த்தாள். ஆனால் அவனது கண்கள்! பார்வை! நோக்கு! அது புரிந்து கொள்ள முடியாததாக இருந்தது.  "ஏன் இப்படி என்னைப் பார்க்கிறாய் ஜீசஸ்? என்னைத் தெரியவில்லையா? நான் உனது அம்மா! வா! அங்கே நாசரேத்தில் உனக்காக உன் சகோதரர்களும்,  உன் வயதான அப்பாவும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்."

    மகன் தலையைப் பலமாக ஆட்டினான். "யார் அம்மா, எந்த சகோதரர்கள்? என் அம்மாவும் சகோதரர்களும் இதோ இங்கே இருக்கிறார்கள்!"

    அவன் தன் கைகளை நீட்டி முன்னே நிற்கும் ஏழை பாழைகளை, அவர்களின் மனைவிகளை, முதியப் பெண்களைச் சுட்டினான். செந்தாடிக்காரன்-யூதாஸ் திரும்பவும் தேவதாரு மரத்தில் அப்படியே  சாய்ந்து நின்று கொண்டு, எதுவும் பேசாமல் ஆத்திரம் பொங்க அவனைப் பார்க்கிறான்.

    பின் ஜீசஸ்  தன் கைகளை மேலே உயர்த்தி தலை நிமிர்ந்து வானத்தைப் பார்த்து கூறினான். "என் தந்தை அதோ அங்கே இருக்கிறார், கடவுள்தான் என் தந்தை "

    "இந்த மொத்த உலகத்திலும் என்ன விட அதிகமாகத் துன்பப்படும் அன்னை யாராவது இருக்க முடியுமா? எனக்கிருந்தது ஒரே ஒரு மகன், ஆனால் அவனும் இன்று...." மேரியின் கண்கள் காய்ந்திருந்தது. சுரப்பதற்கு அவளினுள் நீரில்லை. சுருங்கிய அவளின் முகத்தில் நெற்றிச்சுருக்கங்கள் அடர்ந்து இன்னும் ஆழமாகக் கிழவித் தோற்றம் கொண்டிருந்தாள். நீண்டக் கூர்மையான மூக்கு சிவந்து வீங்கியிருந்தது. முழங்காலில் இருந்தக் காயத்தில் ஈக்கள்கள் மொய்க்கின்றன. அவள் அதைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை. மூக்கை உறிஞ்சுக் கொண்டும் விசும்பிக் கொண்டும் அவள் அசைவற்று, பார்வை நிலத்தில் குத்திட நிற்கிறாள். உணர்ச்சிகளேயற்ற முகம். நாட்பட்ட நோயில் உழன்று, அதிலிருந்து குணமடைய வாய்ப்பே இல்லாத போது, ஒருவர் அதனுள் அப்படியே அமிழ்ந்துவிடுவர். சிலசமயம் தன் வாழ்க்கையையே அந்த நோயின்றி வாழ முடியாத வாய்ப்புகளும் உண்டு. மேரி அம்மாதிரியான விளிம்பில் நின்று கொண்டிருந்தாள்.

    சற்றுத் தொலைவில் இதனைப் பார்த்துக் கொண்டிருந்த சலோமி, தன் கணவனை விட்டு விட்டு அவளை நோக்கி ஓடி வந்து, அவளைத் தன்பால் அணைத்துக் கொள்ளக் கைகளை நீட்டினாள். ஆனால் அவள் நீட்டியக் கைகளைத் தட்டிவிட்டுத் தன் மகனிடம் திரும்பவும் சென்றாள்.

    "நீ வரமாட்டாய் இல்லையா?" அந்த அம்மா தன் இதயம் பிளப்பதைப் போல, வலியுடன் அவனைப் பார்த்தாள். "இதுவே கடைசி முறையாக நான் உன்னை அழைக்கிறேன், வா! வந்துவிடு!" 

    சொன்னவள் அங்கேயே அவன் முன் நின்று கொண்டிருந்தாள். அவள் மகன் இன்னும் அமைதியாகவே இருந்தான். தன் முகத்தை அவளிடமிருந்து விலக்கிக் கொண்டு ஏரியையே பார்த்துக் கொண்டிருக்கிறான்.

"உன் அம்மாவின் பழிச்சொல்லிற்கு கூட நீ அஞ்சமாட்டாயா?"

    "நான் எதற்கும் பயப்படுவதில்லை" அவன் முகத்தைத் திருப்பாமல் பதிலளித்தான். "நான் யாரைப் பார்த்தும் பயப்படுவதில்லை, கடவுளைத்தவிர! அவனது குரல் நிலைத்து ஒலித்தது.

    மேரியின் முகம் மூர்க்கமானது. அவள் தன் கை முஷ்டியை வானை நோக்கி உயர்த்தி, தன் வாயைத் திறக்கிறாள். உள்ளத்தில் கனலும் அவளின் சாபம் வெளிவருவதற்கு முன்,  சலோமி அவளின் உதடுகளைப் பொத்திக் கையைத் தாழ்த்தி விடுகிறாள். 

    "வேண்டாம்! வேண்டாம்! நான் சொல்வதைக் கேள்!. அவள், மேரியின் இடுப்பில் கைகளால் பற்றிக் கொண்டு, கால் நகங்கள் தரையில் உராய இழுத்துச் செல்கிறாள். வா! என் அன்பு மகளே! மேரி! வா! நாம் போய்விடலாம். நான் உன்னிடம் சில விஷயங்களைப் பேச வேண்டி இருக்கிறது. சலோமி அவளைத் தேற்றப் பாடுபட்டாள்.

    அந்த இரு பெண்களும் குன்றின் உச்சியிலிருந்து கார்பெர்னத்தைப் பார்த்தனர். கீழே பாதையில், சரளைக்கற்களை அழுத்தமாக மிதித்துக் கொண்டும், தன் கையிலிருந்த கம்பால் பாதை வளைவில் செறிவாய் வளர்ந்திருக்கும் முட்செடிகளைக் கொத்திக் கொண்டும், மெதுவாக சென்று கொண்டிருந்தார் செபெதீ.

    "என் இப்படி அழுகிறாய்? மேரி! என் மகளே! நீ அவர்களைப் பார்க்கவில்லையா? "

    மேரி தன் கண்களைத் துடைத்துக் கொண்டு ஆச்சரியமாக அவளைப் பார்த்தாள். "எதை? யாரை?" 

    "அவன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவன் பின்னே படபடத்துக் கொண்டிருந்ததே அந்த நீலச் சிறகுகள். பல்லாயிரம் நீலச் சிறகுகள் ஒன்று கூடி அவன் பின்னே பறந்தனவே, நான் பார்த்தேன் மேரி! நான் சத்தியமாகச் சொல்கிறேன். அவனுக்குப் பின்னே தேவதைகளின் பெரும் படையே பாதுகாவலாக இருக்கிறது"

    மேரி விரக்தியுடன் தலை அசைத்தாள். "நான் எதையும் பார்க்கவில்லை. என் கண்ணுக்கு எந்த சிறகுகளும் தெரியவில்லை. ஆம்! எதுவும் தெரியவில்லை. தெரிந்தாலும் இந்த தேவதைகள் எனக்கு என்ன செய்துவிடப் போகின்றன, சலோமி! நான் வேண்டுபவனவற்றை இத்தேவதைகளால் தரமுடியாது. நான் வேண்டுவது என் குழந்தை, அவன் மூலம் எனக்கு பேரக்குழந்தைகள் வேண்டும். நான் இந்த தேவதைகளைச் சபிக்கிறேன்"

    ஆனால் முதிய சலோமியின் கண்கள் இன்னும் அச்சிறகுகளால் நிறைந்திருந்தது. அவள் தன் கைகளால் மேரியின் நெஞ்சைத் தழுவி, அருகில் சென்று பெரிய ஒரு ரகசியத்தைச் சொல்வதைப் போல மென்மையாகக் கிசுகிசுத்தாள். "நீ ஆசிர்வதிக்கப்பட்டவள், மேரி,  உன் கருவறையில் கனிந்த கனியும் ஆசிர்வதிக்கப்பட்டது".

    ஆனால் மேரி எங்கோ அப்பால் இருந்தாள். அவளது நினைவுகள், தன் மகனின் பால்யத்திற்குள் அலைபாய்ந்தது. அது அவனுடனான ஸ்பரிசங்கள்,  முலைப்பாலூட்டியது, தன் கையால் உணவு ஊட்டி விட்டது,  அவனின் அடிபட்டக்காயத்திற்கு மருந்திட்டது,  அவனைக் குளிப்பாட்டி, நறுமணத் தைலம் பூசிவிட்டது, "அவன் என் சொல்லுக்கடங்கியவன். அம்மா பிள்ளையவன். ஆனால் இன்று அவனை நான் தொலைத்துவிட்டேன்". அடக்க மாட்டாமல் அவள் மீண்டும் வீறிட அழத் தொடங்கினாள்.

    ஜீசஸைச் சுற்றி நின்ற வெறிகொண்ட மக்கள் தங்கள் கம்புகளைக் காற்றில் வீசிக் கூச்சலிட்டனர். ஏதோ திறக்கமுடியாத பூட்டின் சாவி கைக்குக் கிடைத்ததைப் போல ஆரவாரமிட்டுக் கத்தினர். தாங்கள் வைத்திருந்தக் காலிக் கூடைகளை வானை நோக்கி எறிந்து நடனமிட்டனர். குழப்பமும் சலசலப்புமாகச் சூழல் இருண்டு கொண்டிருந்தது.

    "மரணம்! மரணம்! இந்தப் பணக்காரக் கூட்டங்களுக்கு மரணம்! கட்டுப்படுத்த முடியாததாக அது மாறிக் கொண்டிருந்தது. நீ சரியாகப் பேசினாய், மேரியின் மகனே! செல்வச் செழிப்பானவர்களுக்கு மரணம்!".

    "எங்களை முன் நடத்திச் செல்! நாம் செபெதீயின் வீட்டை எரித்து சாம்பலாக்குவோம்" 

    "இல்லை! எரிக்க வேண்டாம்!", மற்றவர்கள் மறுத்தனர். வீட்டின் களஞ்சிய சேகரிப்பை உடைத்துத் தேவையான கோதுமை, ஆலிவ் பழங்கள், எண்ணெய், திராட்சை மது மற்றும் அலமாரிகளில் வைத்திருக்கும் விலை உயர்ந்தத் துணிகளையும், கருவூலப் பெட்டகத்தில் பத்திரமாக வைத்திருக்கும் வெள்ளிக்காசுகளையும் கொள்ளையடித்து, நமக்குள் பங்கிட்டுக் கொள்வோம்! ஆம்! செல்வச் செழிப்பானவர்களுக்கு மரணம்!"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக