புதன், 2 மார்ச், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -61

     

Author: Nikos Kazantzakis

     ஒரு நிமிடம் அமைதியாக நின்றிருந்தவன், திரும்பக் கத்தத் தொடங்கினான். "லூசிபர்! லூசிபர்" "நான் தான் லூசிபர்". அது முற்றத்தின் இருள்க் காற்றிலிருந்து விளக்கின் ஒளியை நோக்கி எதிரொலித்தது. அருட்தந்தையின் அறையில் இருந்த ஏழு நிலை விளக்கு எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு தன் மஞ்சள் நிற ஒளியை வாசலைத்தாண்டி நீட்டியது.

    குனிந்து தரையைப் பார்த்துக் குந்தியிருந்த முதியத்துறவி, உடனே அவன் வாயைப்பொத்தினார். 

    "பேசாமல் இரு" அவர் கண்டிப்பானக் குரலில் பதற்றத்துடன் சொன்னார்.

    "இல்லை! என்னால் முடியாது", மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சியுடன் கண்கள் வெளித்தள்ள இளைஞன் இருந்த இடத்திலிருந்து எம்பினான். இப்பொழுது தான் நான் என்னை வெளிப்படுத்துகிறேன். என்னால் பேசாமலிருக்க முடியாது. இனிமேல் என்னைத்தடுக்க முடியாது. நான் ஒரு பொய்யன். பாவனைகளைத் தூக்கிக் கொண்டு வாழ்பவன். என் நிழலைக் கண்டே பயப்படுகிறவன். நான் யாருக்கும் உண்மையாய் இருந்ததில்லை. கோழை. நான் ஒரு பெண்ணைக் கண்டால் நாணித் தலைகுனிந்து கொள்வேன். ஆனால் என் அகம் முழுதும் காமம் ததும்பி வெளியேறத் துடிக்கும். நான் கொள்ளையடிக்கவோ, கொலை செய்யவோ இல்லை என்பது, என்னால் முடியாது என்பதால் அல்ல, மாறாக நான் ஒரு பயந்தாங்கோழி என்பதால் தான். எனக்கு என் அன்னையை, அந்த நூற்றுவர்த் தலைவனை, ஏன் இந்தக் கடவுளையும் எதிர்த்துக் கலகம் செய்யவேண்டும் என்று தோன்றும். ஆனால் என்னால் செய்ய முடியாது. அதற்குண்டான தைரியம் என்னிடமில்லை. என்னுள்ளே உங்களால் பார்க்க முடிந்தால், வளைக்குள்ளே உயிருக்குப் பயந்து பதுங்கிக் கொள்ளும் ஒரு முயலைக் காணலாம். என்னுள் முழுக்க முழுக்க உண்மையில் உணர்வது இந்தப் பயம் மட்டுமே. என் அன்னையும் தந்தையும் கடவுளும் எல்லாம் அது தான்."

    முதியத்துறவி, ஜீசஸின் கைகளைப் பிடித்துத் தன் கைகளுக்குள் பொத்திக் கொண்டார். வலிப்பு வந்தது போல அவனது உடல் அதிர்ந்து கொண்டிருந்தது. கழுத்து நரம்புகள் புடைக்க, தோள் எலும்புகள் எம்பி, கண்கள் வெளித்தள்ளிய ஒரு விகாரத் தோற்றத்தில் தொடர்ந்து அவன் கதறிக் கொண்டிருந்தான்.

    "பயப்படாதே, என் அன்பு மகனே" அவனுக்குத் தைரியம் தரும் வகையில் துறவி அவனைப் பார்த்தார். நமக்குள் அதிகமான சாத்தான்கள் இருக்குமெனில், நாம் தேவதைகளினால் கூடிய விரைவில் ஆட்கொள்ளப்படும் வாய்ப்புகள் இருக்கிறது என்று அர்த்தம். வருத்தப்படுகின்ற குரல்களுக்கெல்லாம், ஒரு தேவதை செவி கூரும். சாத்தான்களின் வாதைகளே, மனிதனைத் தேவதையின் வழிக்கு இட்டுச் செல்கிறது. நீ! அவைகளால் வாதையுறுகிறாய்!பாவங்களின் கண்ணிகளில் அகப்பட்டு உழலும் மனிதனை, வலியை மட்டுமேக் குடித்துக் கொண்டு அதனுள் சகிக்க முடியாமல் நெழியும் மனித அகத்தை, தேவதைகள் கண்டு கொள்ளும். அவைகள் அதற்காகவே இறைவனால் படைக்கப்பட்டன. அதனால் நீ கவலை கொள்ளாதே! என்னை நம்பு! என்று சொல்லித் தேற்ற முயன்றார். "கடைசியாக ஒரே ஒரு கேள்வி, ஜீசஸ்!"

"நீ ஒரு பெண்ணுடன் படுத்திருக்கிறாயா"

"இல்லை! "அவன் மெதுவாக பதிலளித்தான்.

"அதை நீ விரும்பவுமில்லை, சரியா!"

    இளைஞனின் முகம் சிவந்திருந்தது. எதுவும் பேசவில்லை. ஆனால் அவனது தலை முதல் கால் வரைக் குருதி சூடாகக் கொப்பளித்துக் கொண்டிருந்தது.

    "நீ அதைச் செய்ய மாட்டாய், இல்லையா!" துறவி மறுபடியும் உசாவினார்.

    "நான் செய்வேன்". அவனுக்கு மட்டுமே கேட்கும் குரலில் மிக மெதுவாக இளைஞன் பதில் கூறினான்.

    சொன்ன மறுகணம் விடைத்துக் கொண்டிருந்த தன் உடலைக் குலுக்கி அழத் தொடங்கினான். "இல்லை! இல்லை! என்னால் அதனைச் செய்ய முடியாது" என்று அடித்தொண்டையிலிருந்து ஓலமிட்டான்.

"ஏன் கூடாது?"  

    இளமையின் வலிக்கு வேறு எந்த மருந்துமில்லை என்பதைத் தெளிவாகவேத் தன் அனுபவங்கள் வாயிலாக அறிந்து கொண்டிருந்த முதியத் துறவி, முகத்தில் எந்தவித உணர்ச்சியுமின்றி அவனைப் பார்த்துக் கேட்டார். நனவிலும், கனவிலும் பலப்பலப் பிம்பங்களின் ஊடாக பல்கிப் பெருகிய வலிகளின், தாபங்களின், உணர்ச்சிகளின் காலத்தைத் திரும்பவும் நினைவு கூர்ந்தார். எத்தனைச் சுருங்கிய சிறிய உலகத்தில் தான் அல்லாடிக் கொண்டிருக்கிறோம் என்று தன்னுள்ளேயும், தன் அழிக்க முடியாத உணர்ச்சிகளுக்குள்ளும் போராடிக் கொண்டிருந்தவர் அவர், தன் சாபங்களின் அகன்றக் கூரியப்  பற்கள் கொண்ட வாய்த் தன்னை விழுங்குவதற்காக, காலமற்றுக் காத்துக் கொண்டிருந்த சமயம். ஒரு புள்ளியில் தான் வெடித்துச் சிதறுவதே வழி என்று ஆனார். ஆனால் இப்போது அவருக்கு விளங்குகிறது, உலகம் மிகவும் பெரியது. தான், தன் மனைவி, பிள்ளைகள் என்று நான் என்னை நீட்டித்துக் கொள்கிறேன் என்று நினைத்துக் கொண்டார்.

    "அது எனக்குப் போதவில்லை" இளைஞன் இதுவரையுமில்லாத தீர்க்கமானக் குரலில் கூறினான். நான் அதைவிடப் பெரியதை வேண்டுபவன்.

    "உனக்குப் போதவில்லை" தன் புருவங்களை உயர்த்தி ஆச்சர்யத்துடன் துறவி அவனைப் பார்த்தார்.

"நல்லது, அப்படியென்றால் உனக்கு என்ன வேண்டும்!"

    "நிமிர்ந்த நடையுடன், பிட்டத்தைக் குலுக்கிக்கொண்டு மாக்தலேன் அவனை நோக்கி வருவதைக் காண்கிறான். திமிர்த்த முலை, அவளது மையிட்ட அழகானக் கண்கள், உதடுகள், ஒடுங்கி வடிவான நாடி, முகத்தில் அவள் வரைந்திருக்கும் அலங்காரங்கள் எல்லாம் அவன் காட்சியில் அலையிடுகிறது. அவள் புன்னகைக்கிறாள். செதுக்கியதுப்  போன்ற சீரான வெண் பற்கள், கதிரவனின் ஒளிர்வில் மின்னுகிறது. ஆனால் அவள் ஒரு படலமாகத் தன் முன் நெகிழ்கிறாள். அவளது உடல் மாறிக் கொண்டே இருக்கிறது. அவள் வெவ்வேறு உடல்கள் கொண்ட மனுசிகளாக உருமாறிக் கொண்டிருக்கிறாள். ஒன்றிலிருந்து துளிர்த்து பலப்பல உடலங்களாக முளைத்துக் கொண்டே இருக்கிறாள்.தன் முன்னே எல்லைகளற்றுக் கிடக்கும் கடலைக் காண்கிறான். அதன் சீற்றமான அலைகள் ஒவ்வொரு முறையும் கரையைப் பற்றித் தன் கை விரல்கள் உடைந்து நுரையாகிப் பின் கடலிற்கேத் திரும்புகிறது. அது ஒரு தொடர் நிகழ்வாக, நுரைகளின் குமிழ்ப் பெருக்கு ஒன்று கரைக்கும், கடலுக்குமிடையில் ஒரு வெண்ணிறக் கோடு வரைந்தது போலக் காட்சியளிக்கிறது. கடலின் நீர்மையெல்லாம் மாக்தலேன்கள். அவளின் அளவிட முடியா ஆகிருதிகள். அவள் தன் உடலிலிருந்து கிளைத்துப் பெருகி நீர்மமாய்க் கடல் முழுக்க வியாபித்து மிதக்கின்றாள். அவள் உடலின் பெருக்கின், ஒவ்வொரு அணுத்துகளின் உள்ளிருந்தும், ஆயிரமாயிரம் ஆண் பெண் உடல்கள், முட்டை ஓட்டினைப் பிரித்து குஞ்சு வெளிவருவதைப் போலப் பல்கிப் பெருகுகின்றன. வானத்தின் ஒளி. நிலைத்த மங்காதப் பேரொளி அவர்கள் ஒவ்வொருவர்களுக்குள்ளும் நுழைந்து பெருகுகிறது. கட்டுப்படுத்த முடியாத அவ்வுடலங்களின் பெருக்கு முகிழ்த்துக் கொண்டே இருக்கிறது. கடலின் நீர்மை என்பது உடலன்றி வேறு எதுவுமில்லாதது போல நிறைந்துப் பெருகுகிறது. ஆற்றல் மிக்க ஒளியாய் அதனை மேலிருந்துக் கண்ணுருகிறான், மேரியின் மகன். அவனே அவ்வொளியின் தீட்சண்யம். அவன் திரும்பத் திரும்ப அக்காட்சியின் நிழல்வெளியைத் தன் அகத்தினுள் நோண்டும் பொழுதும், தீட்சண்யமான அவ்வொளியை மட்டும் தான் அவனால் நினைவு கூர முடிந்தது.

    "என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்? துறவி கேட்டார். "ஏன் நீ பதிலளிக்க மறுக்கிறாய்?"

    "உங்களுக்கு கனவுகளில் நம்பிக்கையுண்டா" எனக்குண்டு. ஒருவகையில் அதை நம்பித்தான் நான் வாழ்கிறேன் என்று கூட வைத்துக் கொள்ளலாம்" நொடிநேரம் காற்றும் ஸ்தம்பித்து நின்ற நிசப்தமானக் கணத்தில் வெடித்துத் துளைப்பதைப் போல அவன் துறவியைப் பார்த்துக் கேட்டான். 

    ஓர் இரவு, என் கனவில், கண்ணுக்குத் தெரியாத என் எதிரிகள் என்னைப் பிடித்து ஒரு இலைகள் உதிர்ந்த மொட்டை சைப்ரஸ் மரத்தில் கட்டிவைத்தனர். நீண்ட சிவப்பு அம்புகள் என் தலை முதல் கால் வரை உடலின் ஒரு அங்கம் விடாமல் துளைத்திருந்தது. ரத்தம் ஒரு சுனை போல என்னைச்சுற்றிப் பெருகிக் குழுமியது. என் தலையில். முட்களால் செய்த கிரீடத்தை அழுத்தி இறுக்கியிருந்தனர். முட்களின் பிணைப்புகளுக்கிடையில் தீ உமிழும் ஒரு வார்த்தை, "புனித இறைப்பழியாளன்". ஆம்! நானே அந்தப் புனித இறைப்பழியாளன். அதனால் துறவி சிமியோன், நீங்கள் என்னிடம் எதுவும் கேட்காமல் இருப்பது நல்லது. இல்லையேல் நான் இறைவனைப் பழிக்கும் செயல்களில் ஈடுபடத் தொடங்கிவிடுவேன்.

    "நல்லது! தொடர்ந்து அவ்வழியிலேயே செல்! என் மகனே!" துறவி அமைதியாகப் பதிலளித்தார். திரும்பவும் அவனது கைகளை தன் கைகளுக்குள் பொத்திக் கொண்டார். "உன் இறை நிந்தனைச் செயல்களைச் செய்யத் தொடங்கு, அதன் மூலம் உன்னை விடுவித்துக்கொள்" என்றார்.

"என்னுள் இருக்கும் சாத்தான் உண்மையில் அழுகிறது. அதன் அழுகுரல் உனக்குக் கேட்கிறதா! மகனே! நீ ஒரு சாதாரண தச்சனின் மகனல்ல! நீ நமது அரசன் டேவிட்டின் மகன்! நீ வெறும் மனிதனுமல்ல! புனிதர் டேனியல் கூறியதைப் போலவே, நீ மனித குமாரன். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நீ ஒரு தேவகுமாரன்! ஆம்! தேவர்களுக்கெல்லாம் தேவன், தேவதேவன்!"

    தலை தாழ்த்தி நிலத்தைப் பார்த்து சொல்லிக் கொண்டிருந்தார் துறவி. அவரது உடல் நடுங்கிக் கீழே விழுந்து விடுவாரோ என்றுத் தோன்றியது. இளைஞனின் உதடுகள் அதிர்ந்து எச்சில் நுரைததது. தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த அவனது நாக்கு மேல் அண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. அவனால் இனிப் பேசமுடியாது. ஆனால் இன்னும் என்ன அவன் பேச வேண்டியிருந்தது. அவன் தான் சொல்லவேண்டிய அனைத்தையுமேக் கொட்டித் தீர்த்து விட்டானே. அவனது இதயத்திலிருந்த சொற்கள் அனைத்தும் வடிந்து காலியாகியிருந்தது. நடுங்கும் தன் கைகளை துறவியின் கைகளிற்குள்ளிருந்து வெளியே எடுத்தான். எழுந்து அவரைத் திரும்பிப் பார்த்தான். "இன்னும் என்னிடம் கேட்க கேள்விகளுண்டா" அவன் சற்றே உதட்டைச் சுழித்துச் சிரித்துக் கொண்டேக் கேட்டான். 

    "இல்லை! அதே உணர்ச்சியற்றத் துறவியின் குரல். அவர் தனது வலுவெல்லாம் இழந்து சோர்ந்திருந்தார். தளர்வாகத் தன் உடலை அசைத்துக் கொண்டு சம்மணமிட்டுத் தரையில் அமர்ந்திருந்தார். அவரது வாழ்நாளில் மனிதர்களின் வாயிலிருந்து எத்தனையோப் பேய்களின், பிசாசுகளின் குரல்களை அவர் வெளியேற்றியிருக்கிறார். உலகின் எந்த மூலையிலிருந்தும் வரும் பீடிக்கப்பட்ட ஜனங்களை அவர் தன் மந்திரங்களால், மருத்துவத்தால் குணமாக்கியிருக்கிறார். அந்த சாத்தான்கள் எல்லாம் மிகமிகச்சிறியது. நீரினால் உருவாகும் நோய்களும், கோபத்தால், வன்மத்தால், பகையால், ஆறாத சீற்றத்தால் மனிதர்களைப் பீடிக்கும் எளியப் பேய்கள், நோய்கள். ஆனால் இப்பொழுது, இம்மாதிரியான ஒரு சாத்தானிடம் அவர் எவ்வாறுச் சண்டையிடுவார்?

    வெளியே, இன்னும் ஜெகோவாவின் அடங்காத மூச்சு உட்புகுந்து வந்துவிட, சீற்றத்துடன் கதவை அறைந்து கொண்டிருக்கிறது. பீறிடும் காற்றைத்தவிர எந்த சத்தமுமில்லை. தூர தூரத்தில், கழுதைப்புலிகளின் ஊளையோ, காகங்களின் கரைதலோ எதுவுமே இல்லை. மண்ணில் இருந்த எல்லா உயிரினங்களும் பயந்து தங்கள் வளைகளினுள் பதுங்கி இருக்கின்றன. இறைவனின் கோபம் இன்னும் அடங்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக