வியாழன், 10 மார்ச், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் - 68

     

Author: Nikos Kazantzakis

    காலம் என்பது ஒரு நிலமல்ல. அது கடலினாலோ, எல்லைகளினாலோ அல்லது தூரங்களினாலோ கூட அளக்கப்படுவது அல்ல. அது ஒரு இதயத்தின் துடிப்பு. நாட்கள்? மாதங்கள்? வருடங்கள்? என நிச்சயத்தின் காலம் நீடித்துக் கொண்டே இருக்கட்டும்.  மேரியின் மகனின் உதடுகளிலிருந்து நல் வார்த்தைகள், ஒவ்வொரு கிராமம் கிராமமாக வெளிப்படுகிறது. ஆம்! கிராமம் கிராமமாக, மலைகள் மலைகளாக, இன்னும் படகு வரிசைகளின் வழியே ஏரியின் இக்கரையிலிருந்து அக்கரைக்கும், அக்கரையிலிருந்து இக்கரைக்கும் அது  வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. இந்த நிச்சயத்தில் அவனே மணமகன். நிலமே அவன் நிச்சயித்த மணப்பெண். நிலத்தில் அவன் பாதங்கள் மிதிக்கும் இடங்களெல்லாம் பூக்கள் முளைக்கின்றன. மரங்களைப் பார்த்ததும், அது காய்த்துக் கனிந்துக் குலுங்குகின்றன. மீனவர்களின் படகில் அவன் ஏறியதும், மீன் பிடிக்குச் சாதகமானக் காற்றும் அலையும் கொண்டு கடல் அவனை வரவேற்கிறது. மட்பாண்டங்கள் செய்யும் குயவனைப் போல, அவன் மனிதர்களின் இதயங்களை சிறகுகளாகத் தன் வார்த்தைகளால் வடிக்கிறான். அவனது நிலம் மனிதனின் இதயம். அவனது நிச்சயத்தில் களிப்பின், இன்பத்தின் தினங்களுக்கு முடிவே இல்லை. தன் கனிவின், கருணையின், பேரன்பின் சொற்களை அவன் தன் நாவுகளால் இந்நிலத்தில் விதைத்துக் கொண்டே இருக்கிறான். தற்செயலாக, நிலத்தில் கிடக்கும் கல்லைக் குனிந்தெடுத்துப் பார்த்தால் தேவனின் கிருபை அதன் அடியிலிருந்து வெளிப்படுகிறது. கதவைத் தட்டினால், நம் தேவன் உனக்கானக் கதவைத் திறக்கிறான். உன்னதக் கண்களால் உன் நண்பனையோ இல்லை எதிரியையோப் பார்த்தால் நம் தேவன் அவனுள் ஒரு சிறுவனைப் போலத் தன் குறும்பான ஒளிர்ப்புன்னகையுடன் அமர்ந்திருப்பதை நீ காண்பாய்.

    ஜீசஸின் செயல்களினால் மக்காபீசுகளின் வழித்தோன்றல்களான பரிசேயர்கள், ஏமாற்றமும் கோபமும் அடைந்தனர் "மனிதனுக்கான ஆன்மத்தேற்றல், விரதங்களிலும், தன்னை வருத்துவதிலும், தன் பாவங்களுக்காகக் கண்ணீர்விட்டுக் கதறுவதிலும் தான் இருக்கிறது என்கிறார் தீர்க்கதரிசி யோவான்-ஞானஸ்நானம் செய்பவர் ". அவர்கள் ஜீசஸை மறுத்துக் கடுமையாகத் திட்டத் தொடங்கினர். அவன் மேல் மிகுந்த அதிருப்தியுடன் அவர்கள் பலப்பலக் குற்றங்கள் சுமத்தினர். "எங்களின் தீர்க்கதரிசி யோவான் சிரிப்பதில்லை, அச்சுறுத்தும் வகையில் அவரின் போதனைகள் இருக்கின்றன. ஆனால் நீ---எங்கு திருமணம் நிகழ்ந்தாலும் நீயே அங்கு முதன்மையும், முக்கியத்துவமும் பெற்றவனாய் இருக்கிறாய். அவர்களுடன் கூடி உண்பதும், குடிப்பதும், சிரித்துக் குலாவுவதும், ச்ச்சீ... கானாவில் நடந்த ஒரு திருமண விழாவில் எந்த வெட்கமுமின்றி நீ இளம் பெண்களுடன் நடனமாடினாய். இது போல சிரிக்கின்ற, நடனமாடுகின்ற ஒரு தீர்க்கதரிசியை யாராவது இவ்வுலகில் கண்டதுண்டா?"

    ஆனால் ஜீசஸ் வெறுமனே உணர்ச்சிகளின்றி சிரித்தான், "பரிசேயர்களே, என் சகோதரர்களே, நான் என்னைத் தீர்க்கதரிசி என்று எப்பொழுதுமே சொன்னதில்லையே! நான் திருமணத்திற்காக நிச்சயிக்கப்பட்ட மணமகன்."

    "மணமகனா?" பரிசேயர்கள் எரிச்சலிலும், குழப்பத்திலும், பித்துப்பிடித்தது போலத்  தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு அலறினர்.

    "ஆம்! பரிசேயர்களே, என் சகோதரர்களே, நான் ஒரு மணமகன். என்னை மன்னித்துவிடுங்கள், என்னை வெளிப்படுத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை"

    ஜீசஸுன் பார்வை,  தன் துணைவர்களான ஜான், ஆண்ட்ரூ மற்றும் யூதாஸ் வழியாக,  அவன் வார்த்தைகளைக் கேட்க, அந்த முகத்தின் வசீகரத்தால் ஆட்கொள்ளப்பட்டு, தங்கள் வயல்வெளிகளையும், படகுகளையும் அப்படியேப் போட்டுவிட்டு வந்து நிற்கும் விவசாயிகளையும், மீனவர்களையும், பின் அவர்களையும் தாண்டி நிற்கும் பெண்களையும் பார்க்கிறது. அவர்களின் இடுப்பில் அமர்ந்திருக்கும் குழந்தைகளைக் கவனிக்கிறது.

    "உங்களுடன் உங்களின் மணமகன் இருக்கிறான். ஆகையால் களிப்புறுக,இன்பமடைக!, "அவன் உங்களுக்குத் தெரிவிப்பான். " நீங்கள் விதவைகளாகவும், அனாதைகளாகவும் ஆவதற்கான நாள் வரலாம், ஆனால் உங்களின் நம்பிக்கைகளைத் தேவனிடம் நிலையாக வைப்பீர். வானத்துப் பறவைகளைப் பாருங்கள், அவைகள் விதைப்பதோ, அறுப்பதோ இல்லை. இருந்தும் தேவன் அவற்றிற்கு உணவிட மறப்பதில்லை. மண்ணில் விரிந்திருக்கும் பூக்கள், நூல் நூற்பதோ, துணி நெய்வதோ இல்லை. ஆனால் யார் அதன் இதழ்களை இத்தனை சிரத்தையுடனும், அழகுடனும் வடிவமைத்தார். உடலைப் பற்றி எண்ணுவதை விட்டொழியுங்கள்.  அது என்ன உண்ணும்,  எதை உடுத்தும், எங்கு போய்த் தங்கும் என்பதை தேவனின் கையில் கொடுத்துவிடுங்கள். உங்களின் உடல் என்பது புழுதி. அது இறுதியில் புழுதியில் தான் போய்ச் சேரும். உங்களின் கவலையும், அக்கறையும் தேவனின் ராஜ்ஜியத்தில் அமையட்டும். ஆம்! மகத்தான அழிவற்ற ஆன்மாவில் நாம் உயிர்த்திருப்போம்!"

    கேட்டுக் கொண்டிருந்த யூதாஸ், தன் உதடுகளை அதிருப்தியில் சுழித்தான். அவனது புருவ ரேகைகள் முடிச்சுகளிட்டன. உண்மையில் இந்த சொர்க்க ராஜ்ஜியங்களின் பிதற்றல்களில் அவனுக்கு எந்த நம்பிக்கையுமில்லை. அவன் இதோ நம் முன் தெளிவாகத் தெரியும் பூமி முழுமைக்குமான ராஜ்ஜியத்தை அடைவதைப் பற்றியும், குறைந்தபட்சம் நம் இஸ்ரவேலவர்களுக்கானத் தனித்த அதிகாரம் கொண்ட ராஜ்ஜியத்தின் உருவாக்கதைப் பற்றியும் சிந்திப்பவன். இந்த ராஜ்ஜியம் மண்ணாலும், கற்களாலும், மனிதனாலும் உருவாக்கப்பட்டது. எங்கோ மேகங்களுக்குள்ளிலோ, பிரார்த்தனைகளினாலோ கட்டுவிக்கப்படும் மாயலோகமல்ல அது. எங்கிருந்தோ வந்த இந்த அந்நியர்களும், காட்டுமிராண்டிகளுமான ரோமானியர்களின் காலடியில் மிதிபட்டு அமிழ்ந்து சுவாசிக்கக் கூட வழியில்லாமல் கிடக்கிறது நம் சொந்த மண். முதலில் இவர்களின் அதிகார பீடத்தை உடைத்து, இவர்களை இங்கிருந்து வெளியேற்ற வேண்டும். நம் மண்ணை, நம் சொந்த ரத்தத்தைக் கொடுத்து மீட்டெடுக்க வேண்டும்.அப்புறம் இந்த சொர்க்க ராஜ்ஜியத்தைப் பற்றிய அபத்தங்களைப் பற்றிக் கனவு காணலாம்.

    யூதாஸின் சுருக்கள் அடர்ந்தக் குழப்பமான முகத்தைப் பார்த்ததுமே. அவன் மனதின் ரேகைகள் ஜீசஸுக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டது.

    "சொர்க்கமும், பூமியும் ஒன்றே, யூதாஸ், என் அன்பு சகோதரனே", என்று அவனைப் பார்த்து புன்முறுவலுடன் பேசத் தொடங்கினான் ஜீசஸ். "கற்களும், மேகங்களும் வேறு வேறல்ல, தேவனின் சொர்க்க ராஜ்ஜியம் எங்கோ வானத்தினுள் இல்லை, அது நம்முள், நம் ஒவ்வொருத்தரின் இதயங்களிலும் இருக்கிறது. ஆம்! யூதாஸ், உன் இதயத்திடம் கேள்! வானும் மண்ணும் ஒன்றுகலக்கட்டும். இஸ்ரவேலத்தவர்களும், ரோமானியர்களும் பரஸ்பரம் தழுவிக் கொள்ளட்டும், எல்லாம் ஒன்றாக ஆகட்டும்"

    செந்தாடிக்காடிக்காரன் கோபத்தைத் தன்னுள் அடக்கிகொண்டான். அதன் கொந்தளிப்புகளை அடைகாப்பதைப் போலத் தனக்குள் சேமித்துவைத்து, நான் சரியானத் தருணத்திற்காகக் காத்திருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டான். "இவன் தான் என்ன பேசுகிறோம் என்று புரியாமலேயே பேசிக் கொண்டிருக்கிறான். ஏதோ ஒரு கனவுலகில் இருப்பதைப் போன்ற பிரம்மையுடன், தன்னைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருப்பவற்றின் உண்மைத்தன்மையைப் புரிந்து கொள்ளாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறான். என்னைச் சூழ்ந்திருக்கும் இந்த உலகம் மாறாமல் என் இதயம் எப்படி மாறும். என் இதயம் சொல்வதையே நான் கேட்கிறேன். எப்பொழுது ரோமானியர்கள் இந்த மண்ணை விட்டு அகல்கிறார்களோ, அன்றே என் துயர் என்னை விட்டு நீங்கும்."

    செபெதீயின் இளையமகன் நாளின் ஓய்வானச் சமயத்தில், தன் சந்தேகங்களைச் ஜீசஸிடம் கேட்க விளைந்தான். 

    "என்னை மன்னித்துவிடுங்கள் துறவியே", என்னுள், என்னால் யூதாசை விரும்ப முடியவில்லை. நான் அவனருகில் செல்லும் பொழுதெல்லாம் இருள் சூழ்ந்த வனத்தில், தனியாக அகப்பட்டதைப் போல உணர்கிறேன். வேடனின் வலையினில் கால்கள் பிறண்டு, தத்தளிக்கும் ஒரு சிறியப் பறவையின் வேதனையே என்னில் தோன்றுகிறது. அவனது பார்வை, பல்லாயிரம் கூர் ஊசிகள் போல என்னைத் துளைத்து உடல் முழுதும் காயங்கள் ஆக்குகின்றன. ஒரு நாள் நான் அதைப் பார்த்தேன். அவன் முதுகுக்குப் புறத்தே ஒரு கருப்பு உருவம் புகை போலப் பரவுகிறது. அது அவன் காதுகளில் ஏதோ ரகசியம் கிசுகிசுக்கிறது. என்ன சொல்லியிருக்கும் அந்தக் கருப்பு உரு?"

    "அந்த ரகசியத்தின் முன்னறிவிப்பை நான் அறிவேன்" ஜீசஸ் அமைதியாகத் தன் வெளிமூச்சை சீராக வெளிவிட்டான்.

"என்ன, எனக்குப் பயமாக இருக்கிறது" என்ன சொல்லியது அந்த உரு?"

    "சரியானத் தருணத்தில் நீ அதனை உணர்ந்து கொள்வாய், உண்மையில் எனக்கும் சரியாக அதன் அர்த்தப்பாடுகள் விளங்கவில்லை."

    "ஏன் அவனை உங்களுடன் எப்பொழுதும் கூட்டிச் செல்கிறீர்? இரவும் பகலும் அவன் உங்களுடன் பயணிக்க, உங்களைத் தொடர ஏன் அனுமதிக்கிறீர்? ஏன் உங்களின் குரல் எங்களிடம் பேசுவதை விடவும் அவனிடம் பேசும் பொழுது, மிகுந்தக் கனிவுடனும், நடுக்கத்துடனும் இருக்கிறது?"

"அது அப்படித்தான் என் அன்பு சகோதரனே, அவன் அன்பிற்காக ஏங்கி நிற்கிறான். இதைவிடப் பெரிய விளக்கங்கள் தேவையில்லை"

    ஆண்ட்ரூ தனது புதிய ஆசிரியனைத் தொடர்கின்றான். அவனது உலகம் நாளுக்கு நாள் மாறிக் கொண்டிருக்கிறது. உண்மையில் உலகமல்ல, அவனது இதயம்! உண்பதும், குடிப்பதும், களிப்பதும் இனிமேல் பாவங்கள் இல்லை என்பதே அவன் திருப்தியுறுவதற்குப் போதுமானதாக இருந்தது. அவன் நிலத்தில் தன்னை முழுமையாக வேர் விட்டிருந்தான். வானிற்குக் கீழே பூமியின் கருணையில் அவன் அமைதியடைந்திருந்தான். அவனது ஒரு நாள் இனி கோபத்திலும், ஆத்திரத்திலும், வெடித்துச் சிதறப் போவதில்லை. உலகத்தின் இறுதி நாள், இறுதித்தீர்ப்பு போன்ற கட்டுக்கதைகளை அவன் நம்பப் போவதில்லை. ஒரு நாள் என்பது அறுவடை, மது நொதிக்கும் பருவம், திருமணம், முழுமையான நடனம். அது நிலம் தன் கன்னித் தன்மையை நிரந்தரமாகப் புதுப்பித்துக் கொண்டே இருப்பது. ஒரு நாள் என்பது ஒவ்வொரு நொடியும் மாறிக் கொண்டே இருக்கும் ஒரு மலர்ச்சி. மொட்டவிழ்ந்து பூ விரிவது போல, காலமும் தன்னை அவிழ்க்கிறது. ஒவ்வொரு நாளையும் நம் தேவன் ஆசிர்வதிக்கிறார். அவரின் புனிதமானக் கைகளின் ஸ்பரிசம் பட்டு நிலமெங்கும் கருணை ஒரு மழையினைப் போலத் தங்கு தடையின்றிப் பொழிகிறது. மழையினைப் போல நீ எனக்கு எல்லாம் தந்தாய்!

    நாட்கள் செல்லச் செல்ல ஆண்ட்ரூ புதியவனானான். அவனது நடுக்கங்கள் முற்றிலுமாகக் குணமாகியிருந்தது. நண்பர்களுடன் சந்தோஷமாகப் பங்கிட்டு உணவு உண்டான். அவனது வெளிர்ந்தக் கன்னங்கள் சிவந்தன. சோர்வுகள் எல்லாம் மறந்து ஒரு உற்சாகமான மனிதனாகிவிட்டான். எப்பொழுதும் விருந்துகள் இருந்தன. நன்றாக உண்பதும் ,குடிப்பதும் தான் அவனது முக்கியத் தேவையாக இப்போது இருந்தது. நண்பர்களின் விருந்துகளில், தன் உணவைப் பங்கிட்டுக் கொடுப்பது ஜீசஸின் பழக்கம். அவனது ரொட்டித்துண்டை வாங்கிக் கொள்ளும் ஆண்ட்ரூ அதில் தன் மிகுதியான அன்பினையும், சிரிப்பினையும் கலந்து எல்லோருக்கும் பகிர்ந்து கொடுப்பான். தனது நண்பர்களுடனும், அவர்களின் குடும்பத்துடனும், உணவுண்டு மகிழ்ந்து நிறைவாகக் கழித்தான்.

    ஆனால் ஒரு நாள், அவன் தன் மாறவே மாறாத தந்தையையும், முதிய செபெதீயையும் நினைத்துப்பார்த்தான். அவனது நினைவுகள் தூரத்தைக் கடந்து சென்றது. அந்த இரு முதியவர்களும் பூமியின் இரு வேறு துருவங்களில் தன்னந்தனியே நிற்பதைப் பார்த்தான். அதே போல ஜேக்கப்பும் ,பீட்டரும். அவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள். எந்த வாதையினால் உழன்று கொண்டிருக்கிறார்கள். அவனது எண்ணங்கள் சுழன்றோடின.

    "நாம் அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும்" ஜீசஸ் சிரித்துக் கொண்டே பதிலளித்தான். அவர்களும் நம்மைக் கண்டறிவார்களாக!, கவலைப்படாதே, ஆண்ட்ரூ. நம் தேவனின் முகப்போ மிகப்பெரியது. அதில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக இடம் உண்டு." 

    ஒரு மாலைப்பொழுதில் ஜீசஸ் பெத்சைதா கிராமத்திற்கு வந்திருந்தான். சிறுவர்கள் ஆலிவ் மற்றும் பேரீச்சை மரக் கிளைகளினைக் கைகளில் வைத்துக் கொண்டு அவனை வரவேற்றனர். இல்லத்தரசிகள் தங்கள் வீட்டு வேலைகளை அப்படியேப் போட்டுவிட்டு மேரியின்மகனைப் பார்ப்பதற்காகவும், அவனது நற் சொற்களைக் கேட்பதற்காகவும் ஓடோடி வந்தனர். மகன்கள் தங்கள் கைகால்கள் செயழிழந்த வயதானப் பெற்றோர்களையும், பேரர்கள், விழிகள் மங்கிப் போனத் தாத்தா, பாட்டிகளையும், நாட்பட்ட நோயினால் மடிந்து கொண்டிருப்பவர்களையும்,  தங்கள் தோள்களில் சாய்த்துக் கொண்டும் கைகளில் ஏந்திக் கொண்டும் அவனை நோக்கிப் படையெடுத்தனர். பிசாசுகளினால் பீடிக்கப்பட்ட, கிறுக்குப்பிடித்த மனிதர்களையும், அவர்களின் உறவினர்கள் அங்கே கட்டி இழுத்து வந்தனர். ஜீசஸின் கைகள் பட்டால் போதும், அவர்களின் ரோகமெல்லாம் குணமாகி விடும் என்ற நம்பிக்கையில் அவர்கள் தங்கள் பாரங்களைச் சுமந்துகொண்டு அவனைப் பின் தொடர்ந்து வந்தனர்.

    அதே நாளில் தான் தாமஸ், தெருத்தெருவாய்ச் சென்று பொருட்களை விற்பனை செய்பவன்,  அந்தக் கிராமத்தில் வியாபாரத்திற்காக வந்திருந்தான். தன் தலைச்சம்மாடாக வைத்திருந்தக் கூடையில் பலவண்ண நாடாக்கள், வாறுகோல்கள், பெண்களுக்குத் தேவையான சில அழகு சாதனப் பொருட்கள், பித்தளை வளைகள், வெள்ளிக் கம்மல்கள் போன்ற பொருட்கள் இருந்தன. அவன் ஊதுகுழலை ஊதிக் கொண்டும், வாடிக்கையாளர்களை நோக்கிப் பொருட்களின் பட்டியலைக் கூறிக் கொண்டும், கிராமத்தின் தெருக்களில் அங்குமிங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்தான். ஊதுகுழல் சத்தத்தை வைத்துதான் அந்த மக்களின் ஆரவாரத்திற்கிடையிலும் ஜீசஸ் தாமஸைக் கண்டுபிடித்தான். அவனைப் பார்த்ததும் ஜீசஸுக்கு சூழலின் நிலைமையே முற்றிலுமாக மாறிவிட்டது போல இருந்தது. அவன் கண்களுக்கு தாமஸ் ஒரு மாறுகண் கொண்ட முரட்டு வியாபாரி மாதிரித் தெரியவில்லை. தாமஸ் கைகளில் ஒரு ரெசமட்டம் வைத்திருக்கிறான். அவனைச் சுற்றி வேறு வேறு தேசங்களிலிருந்து வந்திருக்கும் பலவிதமான மனிதர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அங்கு ஒரு மாபெரும் கட்டிடம் கட்டி எழுப்பப்படுகிறது. கூலியாட்கள் அதற்கானக் கற்களைப் பாரவண்டியில் இழுத்து வருகிறார்கள். மண்ணும், களிமண்ணும் கலந்தக் கலவைகளை, மண்வெட்டியால் குழைத்துக் கொண்டிருக்கிறது ஒரு குழு. இது வரை உலகில் இல்லாத அழகுடன் , பளிங்குக் கற்களால் அது வடிவமைக்கப்படுகிறது. அதன் வாசலில் எழுப்பப்பட்ட தூண்களை அணுகும், அந்த மாபெரும் கோவிலின் கட்டிட நுணுக்கங்களை வடிவமைத்த பெருஞ்சிற்பியானத் தாமஸ் தன் ரெசமட்டத்தைக் கொண்டு அத்தூண்களை அளக்கிறான். அதன் கட்டுமானங்களிற்குள் அங்கும் இங்கும் அலைந்து எல்லா புறமும் அதன் ஒழுங்கை அளந்து பார்த்து, பணி, திட்டமிட்ட படி சரியாக நடக்கிறதா என்று நோட்டமிடுகிறான்....ஜீசஸ் தன் கண்களைச் சிமிட்டுகிறான். அதற்கு பதில் சொல்வது போல தாமஸ்ஸும் கண்களைச் சிமிட்டுகிறான். அச்சமயம் சரியாக அவர்கள் தங்களைத் தாங்கள் அறிந்து கொண்டனர். அவன் தன் தலைச் சம்மாட்டைக் கீழே இறக்கி வைத்து விட்டு, தன் ஒன்றரைக் கண்களை உருட்டியபடி, திடமானக் கைகளால் காற்றைத் துழாவிக் கொண்டே அவனிடம் வந்தான்.

    ஜீசஸ் அவன் தலையில் தன் கைகளை வைத்து ஆசிர்வதித்தான். "தாமஸ் நீ என்னுடன் வா, நான் உன் தலையில் வேறுவிதமானப் பாரங்களை ஏற்றி விடுகிறேன்: ஆன்மாவின் உன்னதமான ஆபரணங்களையும், அதன் நறுமணத்தைப் பரப்பும் சொற்களின் பெருக்கையும் உனக்கு அளிக்கிறேன். நீ உலகின் கடைசி எல்லை வரை அதைக் கொண்டு செல். இந்தப் புதிய மகத்துவமான பொருட்களின் பூரணத்துவத்தை அவர்களுக்கு விளக்கிப் பங்கிட்டுக் கொடு"

    நான் என்னிடம் இருப்பதை வைத்துப் பிழைத்துக் கொள்கிறேன். அந்த புத்திசாலி வியாபாரி சிரித்துக் கொண்டே பதிலளித்தான். "ம்ம்! பார்ப்போம்! உன்னுடைய வித்தைகளும் எத்தனை நாட்கள் விலைபோகின்றன என்று. கொஞ்சம் பொறுப்போமே! என்ன!..."அவனது குரலின் அழுத்தம் கூட, ஏளனமாகக் கைகாட்டி நகைத்தான். பின் தன் சம்மாட்டைத் தூக்கிக் கொண்டு பாரம் அழுந்த அங்கிருந்து நழுவித் தன் அன்றைய வியாபாரத்தைத் தொடர்ந்தான்.

    ஜீசஸுன் விழிகளில் இந்தப் பழமையானக் கிராமம், ஒருபுறம் மிகுந்த வசதியும், கருணையின்மையும்,  அநீதியையும் ஒருங்கேக் கொண்டிருந்தது. அதன் நெரிசல்களுக்கிடையில், அவன் அதனைக் கைவைத்து அகற்றி முன்னேறி மறுபுறம் அதன் மக்களைக் காண வருகிறான். தன் முன் நிற்கும் மக்கள் திரளை ஆச்சர்யத்துடனும், ஆர்வத்துடன் நோக்குகின்றான். சிறுவர்கள் கூட்டம் கூட்டமாக பேரீச்சை இலைகளையும், ஆலிக் கொப்புகளையும் தங்கள் தலைக்கு மேலே தூக்கிக் கொண்டு ஆரவாரித்து அவனை வரவேற்கின்றனர். கிராமத்திலிருந்த எல்லா வீட்டுக் கதவுகளையும் தட்டி அவனது வருகையை அறிவிக்கின்றனர். "அவர் வருகிறார், டேவிட்டின் மகன் இங்கே வந்து கொண்டிருக்கிறார்" என்று. தூய வெண்ணிறமான அங்கி அணிந்த, தன் தோள்கள் வரைக் கிடக்கும் முடியைக் கோதிக் கொண்டு வாசல்கள் தோறும் கடந்து வரும் அந்த இளைஞனை அவர்கள் பின் தொடர்ந்து செல்கின்றனர். தன் வலப்புறமும், இடப்புறமும் நிற்கும் மக்களின் தவிப்பான முகங்களை உற்று நோக்கும் அவன் தன் இதயத்தில் கைவைத்து ஆசிர்வதிக்கின்றான். அவனருகில் வருபவர்கள் சிலரைத் தொடுகின்றான், ஆரத்தழுவுகின்றான், தன் கைகளால் அவர்களின் தலையில் கைவைத்து இனிய சொற்களைப் பேசுகின்றான். சிலரை கட்டிப்பிடித்துக் கன்னங்களில் முத்தமிடுகின்றான். அடுத்தகணம் என்ன செய்வான் என்பதை அவனாலும் கூடத் தீர்மானிக்க் முடியவில்லை. அவனை ஸ்பரிசிக்கவும், முடியவில்லை என்றால் அவனது உடையின் சிறு தீண்டலையாவது தன் மீது ஏந்திக்கொள்ளவாவது  வேண்டும் என்ற ஏக்கத்துடனும் இரு பெண்கள் போட்டி போட்டு ஓட்டமும் நடையுமாக நெரிசலிற்குள் அவனைப் பின் தொடர்கின்றனர். தூர தூரத்தில் பார்வையிழந்தவர்களும், நலிந்தவர்களும், குணப்படுத்தமுடியாத ரோகத்தால் முடங்கிக் கிடப்பவர்களும், எனப் புதியப் புதியக் கதவுகள் அவனை நோக்கித் திறந்து கொண்டே இருந்தன. அவன் ஒவ்வொருத்தராக தன் வருகையையும், இறைவனின் கிருபையையும், நம்பிக்கையையும், தன் தந்தையின் மாட்சிமை பொருந்திய பரலோக ராஜ்ஜியத்தையும் பற்றி அறிவித்துக் கொண்டே வந்தான்.

    "இப்போது இது யார் புதிதாக?" ஒரு கிழவனார் தன் சஞ்சலமானக் குரலில் தள்ளாடிக் கொண்டே கேட்டார். கூட்டநெரிசலை முறித்துக் கொண்டு அவரால் போகமுடியவில்லை. நடக்கவும் தெம்பில்லாமல் ஓரிடத்தில் உட்கார்ந்திருந்தார். 

    "நம்முடையப் புதிய தீர்க்கதரிசி". வழியில் அவரைக் கடந்து சென்ற ஒருவன் பதிலளித்தான். "அனானியஸ், உம்மைக் கடந்து செல்லும் அந்த வெள்ளை அங்கி அணிந்த மனிதனை நீர் பார்த்தீரா? அவன் தன் ஒரு கையில் வாழ்வையும், மறுகையில் மரணத்தையும் வைத்திருக்கிறான். அதனை சரிசமமாகப் பங்கிடும் வித்தை அறிந்தவன். முடிந்தால் அவனை வரவேற்று உபசரித்துத் திருப்திபடுத்தும். அவனின் ஞான வார்த்தைகளால் உமக்கும் கிருபை உண்டாகவும் வாய்ப்புண்டு"

    அதைக் கேட்ட முதிய அனானியஸ், அவரது பயங்களை நினைத்து திகிலுற்றார். இது நாள்வரை அவரை அச்சுறுத்தும் விசித்திரப் பிரச்சனைகளைப் பற்றிய எண்ணங்களுக்குள் தலையிட்டார். அது அவரது ஆன்மாவைத் தினம் தினம்  சிதைத்துக் கொண்டிருந்தது. தினமும் இரவில் தான் திடுக்கிட்டு எழும் சமயங்களில், தன்னால் பேசமுடியாதவாறு தன் நாக்கு மரத்துப் போவதும், தொண்டை அடைத்து விடுவதும். நரகக்குழியினில் தன்னுடலின் கழுத்திலிருந்து, கால்வரை தீயில் வெந்து கொண்டிருக்க, தன் தலை தாளமுடியாத வலியினால் நாக்கு நீட்டி அலறிக் கொண்டிருப்பது போலவும், தன் சொப்பனங்களில், தான் துர்மரணம் அடைந்து உடல் சிதைந்து கிடப்பதைப் போலவும், இந்த பயங்கள் அவரை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. "இதிலிருந்து விடுபடுவதற்கான மார்க்கமாகக் கூட இத்தருணம் அமையலாம். ஒருவேளை இவனால் என்னைக் காப்பாற்றமுடிந்தால். உலகம் சுழல்வதே ஒரு வித மந்திரவித்தைதான். இந்த மனிதனும் மாய மந்திரங்களில் விற்பன்னனாகத் தெரிகிறான். இவனுக்கு ஒரு நல்விருந்தினை ஒருங்கு செய்வோம். பெரிதாய் ஒன்றும் செலவாகிவிடாது. பார்க்கலாம், ஒருவேளை இவன் அற்புதங்கள் புரிந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை" என்ற முடிவுக்கு வந்த முதியவர் எழுந்து, அவனை நோக்கி நடக்க முற்பட்டார்.

அவர் தன் ஒரு கையை நெஞ்சில் வைத்துக் கொண்டு, அவனை அழைத்துக் கொண்டே கூட்டத்திற்குள் புகுந்தார் "டேவிட்டின் மகனே" "இந்த முதியவனின் பெயர் அனானியஸ், நான் ஒரு பாவி, நீயோ புனிதன். எங்களின் கிராமத்திற்குள் நீ அடியெடுத்து வைத்திருக்கிறாய் என்பதை இப்பொழுதுதான் அறிந்துகொண்டேன். நான் உனக்காகவும், உன் துணைவர்களுக்காகவும் என்னுடைய இல்லத்தில் ஒரு சிறியவிருந்தினை ஏற்பாடு செய்ய விரும்புகிறேன். தயை கூர்ந்து என்னுடன் வந்து இரவுணவை ஏற்றுக்கொள்ளும். நீ கருணாமூர்த்தி என்பது எங்களுக்குத் தெரியும். இது பாவிகள் புனிதர்களுக்கு அளிக்கும் சிறிய  காணிக்கை என்று வைத்துக் கொள்ளும். இருள் மண்டிக் கிடக்கும் என் உலகத்தில் நீவீர் ஒளி பாய்ச்சுவீர். என் இல்லத்தின் புனித தாகத்தை உன் தேவனின் வார்த்தைகளால் நிறைக்கப்பண்ணுவீர்!

    ஜீசஸ் நின்று திரும்பி அம்முதியவரைப் பார்த்தான். "உங்களின் தயையை நான் ஏற்றுக் கொள்கிறேன், உங்களை சந்தித்ததில் உண்மையில் பெருமகிழ்ச்சியடைகிறேன்."

    அவன் அந்தக் கிராமத்திலேயே இருந்த ஒரு பெரிய பங்களாவிற்கு அழைத்து வரப்பட்டான். அடிமைகள் முற்றத்தில் சாப்பாட்டு மேஜைகளை அமைத்து, அவர்கள் சுகமாக இருக்கப் பண்ணுவதற்காக, தலையணைகளை அமைத்தனர். ஜீசஸ் நடுவில் அமர, இருபுறமும், ஜான், யூதாஸ் மற்றும் ஆண்ட்ரூ அமர்ந்தனர். தாமஸ்ஸும் இடையில் இக்கூட்டத்திற்குள் வந்து அவர்களுடன் கலந்துவிட்டான். ஒரு நல்ல இரவுணவை அவன் இழக்க விரும்பாததால், சீடனைப் போல பவ்யமாக வந்து ஜீசஸுக்கு வலப்புறம் வந்து அமர்ந்திருந்தான். செல்வந்தரான முதியவர் ஜீசஸுக்கு எதிரே அவனை நேருக்கு நேரே பார்க்கும் வண்ணம் தனது விலையுயர்ந்த ஆசனத்தில் அமர்ந்தார். முதியவர் தன்னுள் ஆழ்ந்திருந்தார். அவர் எப்படி உரையாடலைத் தன் துர்க்கனவுகளைப் பற்றித் திருப்ப என்று நுட்பமாக யோசித்தவர், ஒருசமயம் இவனது மந்திரங்களால் தன் தீராத இந்த மரணம் பற்றியக் கவலைக்குத் தீர்வு கிடைக்குமா என்று குழம்பிக் கொண்டிருந்தார். உணவுகள் பாத்திரங்களிலிருந்து எடுத்து வைக்கப்பட்டன. இரண்டு குடுவைகள் நிறைய திராட்சை மது நிரம்ப நுரைக்க முன்னே வைக்கப்பட்டது. வாசலுக்கு வெளியே மக்கள் கூட்டம் காத்துக் கொண்டிருந்தது. உணவு உண்ணுதல், கடவுள் பற்றிய வியாக்கானங்களை உரையாடுதல், தட்பவெப்ப நிலை, அறுவடைக்காலம், பயிர்களின் வளர்ச்சி, திராட்சைத் தோட்டங்களைப் பராமரித்தல் என்று ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள் என்று அவர்கள் நினைத்துக் கொண்டனர். தங்களுக்குள் கேலி பேசிக் கொண்டும், குசுகுசுத்துக் கொண்டுமிருந்த ஆண் பெண்களின் சலசலப்புகள் சூழலின் அமைதியை குலைத்தது. விருந்தினர்கள் உண்டு  முடித்ததும் கை கழுவி விட்டு, நிமிர்ந்து அமர்ந்தனர், உணவுண்டக் கோப்பைகள், பாத்திரங்கள் மற்றும் குவளைகளை அவரது அடிமைகள் எடுத்துச் சென்றனர்.  மேசையில், ஒரு ஜாடி தண்ணீரும், குவளைகளும், ஒரு தட்டு நிறையப் பேரீச்சைப் பழங்களும் மட்டும் இருந்தது. நான் நினைத்தது போல இவனுக்கும், இவன் துணைவர்களுக்கும் நன்றாகவே விருந்தளித்து விட்டேன். திருப்தியாக உண்டும், குடித்தும் வந்து அமர்ந்திருக்கிறார்கள். இப்பொழுது நான் உரிமையுடன் இவனிடம் என் பிரச்சனைகளுக்கானத் தீர்வினைக் கேட்கலாம் என்று தனக்குள் சொல்லிகொண்டார். 

    "துறவியே! எனக்கு இரவில் துர்கனவுகள் வருகின்றன," அவர் சொல்லத்தொடங்கினார். நீர்  மந்திர, தந்திரங்களில் தேர்ந்தவர் என்பது என் திண்ணம். நான் உமக்கு வேண்டிய அனைத்தையும் செய்யச் சித்தமாக இருக்கிறேன். உம் புனிதத்தன்மையினால் எனக்கு நீர் உதவி செய்யவேண்டும். நீர் கதைகளின் வாயிலாகவே, உம்மந்திரங்களை வெளிப்படுத்துவதாய் நான் கேள்விப்பட்டேன். எனக்காக நீர் கதை சொல்லும், அதிலிருக்கும் உள்ளார்ந்த அர்த்தத்தை நான் புரிந்து கொண்டு குணமடைகிறேன். இந்த உலகில் அனைத்தும் மாயஜாலங்களினாலேயே நிகழ்கிறது என்று நான் நம்புகிறேன். அப்படித்தானே! அப்படியென்றால் உம் மந்திரத்தால் எம்மை பெலப்படுத்தும்!

    பொருளற்று சிரித்த ஜீசஸ், தீவிரமாக முதியவரின் கண்களுக்குள் பார்த்தான். இது போன்றப் பேராசை கொண்ட முகங்களைப் பார்ப்பது அவனுக்கு இது முதல்முறையல்ல. பெருந்தீனியால் உடல் கொளுத்த ஒரு முதிய உடல். தாடைச் சதை இறங்கி கழுத்தை ஆக்கரமித்திருந்தது. பெருத்த வயிறு அங்கியினுள் இருந்துப் புடைத்து எட்டிப் பார்க்கிறது. கண்ணுக்கு கீழே ரெப்பை தொங்க, சிவந்து வீங்கியிருக்கும் இந்த தேகத்தைப் பார்க்க உண்மையில் அவனுக்கு அருவருப்பாக இருந்தது. "இவர்கள் தங்களைத் தாங்களே நாசப்படுத்திக் கொள்கிறார்கள். இந்த உலகம் தனக்கு மட்டுமே சொந்தமானது என்பது போல, இந்தப் பிறவிகள் உண்கிறார்கள், குடிக்கிறார்கள், சிரிக்கிறார்கள், நடனமிடுகிறார்கள்,பரத்தையர்களையும், பிற பெண்டிர்களையும் நாடிச் செல்கிறார்கள். ஆனால் இவர்கள் கொஞ்சமும் இதைப்பற்றி வருந்துவதில்லை, தான் செய்யும் செயல்கள் மூலமே நரகத்திலிருக்கும் தனக்கானக் குழியில் தாமே கங்குகள் இட்டுக் கனல வைக்கிறோம் என்பதை. ஆனால் அவர்களை மரணம் நெருங்கும்பொழுது, தனது நிரந்தரமான நித்திரையின் காலம் நெருங்கிவிட்டது என்பதை அவர்கள் உணரும் பொழுது கண் விழிக்கிறார்கள். "ஜீசஸ், திரும்பவும் நன்றாக உற்றுப்பார், இந்தக் கொழுத்துப் பருத்த உடம்பை, கண்களை, அளவுக்கு மீறிப் பிதுங்கும் சதையை. ஆம்! அதனுள் இருக்கும் உண்மைத்தன்மையை நீ கதையாகச் சொல்." 

    "உங்கள் காதுகளையும், இதயத்தையும்  நன்றாகத் திறந்து வையுங்கள். கடவுளின் பெயரால் நான் சொல்கிறேன்"

    "கேளுங்கள் அனானியஸ், ஒரு ஊரில் நியாயமும், நேர்மையுமற்ற பணக்காரன் ஒருவன் இருந்தான். அவன் நன்றாக உண்பதும், குடிப்பதும், பட்டும், பவளமுமாய், ஆடம்பரமாக உடுத்திக் கொண்டுத் தன்னை அலங்கரிக்கவும் செய்து தன் படோபடத்தை ஊராரிடம் காட்டிக் கொண்டிருந்தான். ஆனால் தன்னிடமிருக்கும் செல்வத்தில் ஒரு சிறிய சருகினைக் கூட அவன் தன் அண்டை வீட்டிலிருந்த பசியிலும், வறுமையிலும், குளிரிலும் வாடிக்கொண்டிருக்கும் லாசரஸ்ஸுக்கு கொடுக்கவில்லை. லாசரஸ் அவன் உண்டு மீதமாய்க் குப்பையில் போட்ட எச்சியிலிருந்து, ரொட்டித்துண்டங்களில் எஞ்சியதையும், கழிந்த எலும்புகளையும் நக்கித் தன் ஜீவிதம் நடத்திவந்தான். ஆனால் அவனது அடிமைகள் அவனை அடித்து உதைத்து வெளியே துரத்தினர். ஆனாலும் அவன் அனானியஸ்ஸுன் வீட்டு வாசலிலேயே எதாவது கிடைக்காதா எனக் கை நீட்டி அமர்ந்திருந்தான். அங்கு கிடக்கும் தெரு நாய்கள் அவன் காயங்களை நக்கி அவனை ஆற்றுப்படுத்தின. பிறகு அவர்களுக்காக நியமித்த நாள் வந்தது. அவர்கள் மரணித்தார்கள். ஒருவன் அழியாத நெருப்பில் இடப்பட்டான். ஒருவன் ஆப்ரஹாமின் நெஞ்சத்தில் நித்தியமாக இருத்தப்பட்டான்.  ஒரு நாள் அந்தப் பணக்காரன் தன் நரகக்குழியினுள் வெந்து கொண்டே வெளியே எட்டிப்பார்த்தான். அங்கே லாசரஸ் தேவனின் அணுக்கமான இருப்பில் மகிழ்வும், களிப்புமாகச் சிரித்துக் கொண்டிருந்தான். "என் தேவனே! என் தேவனே! லாசரசைக் கீழே இறக்கிவிடும், அவனது குளிர்ச்சியான விரல்களினால் நான் என்னைக் கொஞ்சம் ஈரப்படுத்திக் கொள்கிறேன். இங்கே நான் எரிந்து கொண்டிருக்கிறேன் என் தந்தையே! 

    "உன் கடந்தகாலத்தைக் கொஞ்சம் சிந்தித்துப்பார். நீ நன்றாக உண்டும் ,குடித்தும், உன் சொகுசுவாழ்க்கையை அனுபவித்துப் பெருத்துக் கிடக்கும் பொழுது இவன் தன் பசியுடனும், குளிருடனும் போராடிக் கொண்டிருந்தான். உன்னால் முடிந்தும், நீ இவனுக்காக ஒரு சிறிய பருக்கையாவது உன் உள்ளம் உவந்து கொடுத்திருப்பாயா? இப்பொழுது இவனுடைய முறை, இவனை நான் மகிழ்ச்சியாக இருக்கப் பண்ணுவேன். நீ இந்த எரிகுழியில் காலமற்று வெந்து கிடப்பாய்!" 

    ஜீசஸ் பெருமூச்சுகளுடன் கதையை முடித்துக் கொண்டு அமைதியானான். முதிய அனானியஸ்ஸுன் எதையோக் கேட்க எண்ணினார். ஆனால் எதுவும் பேசாமல் காத்திருந்தார். அவரது தொண்டை அடைத்திருந்தது. உதடுகள் காய்ந்திருந்தன. தன் நிலையற்றச் சிறியக் கண்களால் ஜீசஸை நோக்கினார். அனாதரவற்ற அந்தக் கலங்கிய கண்கள் பரிதவித்துப் பின் நிலத்தைப் பார்த்தது.

    "அவ்வளவு தானா?" அவர் திரும்பத்திரும்பக் கேட்டார். "அவ்வளவுதானா, இல்லை, இன்னும் இருக்கிறதா"

    "அவனுக்குச் சரியாக வழங்கப்பட்டது" யூதாஸ் அவரை முறைத்துக் கொண்டே சிரித்தான். எவனொருவன் தன் தேவையை மீறி உண்ணவும், குடிக்கவும் செய்கிறானோ, அவன் அவை  எல்லாவற்றையும் நரகத்திற்கு செல்கையில் திரும்ப வாந்தியெடுத்தேத் தீரவேண்டும்."

    ஆனால் செபெதீயின் இளையமகன்,  தாய் அடித்தாலும் திரும்பத் திரும்ப  அவளிடமே போய்ஒட்டிக்கொள்ளும் குழந்தையின் பாவத்தில், ஜீசஸின் மார்பில் சாய்ந்து அவனது முகத்தைப் பார்த்தான். "துறவியே, உங்களது வார்த்தைகளே எங்கள் இருதயத்திற்கு மருந்து. ஒவ்வொருமுறையும் உங்களின் சொற்களின் வழியிலேயே நான் சிந்திக்கிறேன். அதுவே நான் தேக்கி வைத்திருக்கும் தேவையற்றப் பாரங்களைவிட்டு இறங்க வழி செய்கிறது. நீங்கள் எத்தனை முறை எங்களுக்கு அறிவுறுத்தியிருப்பீர்கள், எதிரிகளையும் மன்னிக்க! "நீ உன் எதிரியையும் நேசிக்க வேண்டும் என்று சொன்னீர்கள். உன் எதிரி உனக்கெதிராக ஏழு முறை அல்ல, எழுபத்து ஏழு முறையும் தீமையே செய்தாலும், அவனுக்கு அந்த  எழுபத்து ஏழு முறையும் நீ நன்மை மட்டுமே செய்யவே விளைய வேண்டும் என்று எங்களுக்கு போதித்தீர்கள். வெறுப்பை ஒட்டுமொத்தமாக இந்த உலகம் முழுக்கிலுமிருந்து வெளியேற்றுவதற்கான சரியான வழி அதுவே என்று நான் நிச்சயமாக நம்புகிறேன் ஆனால்....இங்கே அந்தத் தேவனினால் கூட மன்னிக்க முடியாதா?

    "மனிதனை விட இறைவன் நேர்மையானவன்" இடைமறித்துப் பேசியச் செந்தாடிக்காரன், முதிய அனானியஸ்ஸைக் கிண்டலாகப் பார்த்தான்.

"இறைவன் பூரணமானக் கிருபையுடையவன்" ஜான் மறுத்தான்.

    "நம்பிக்கையிழப்பே இதன் முடிவா!" கிழவரின் தடுமாறிய சொற்கள் அவர்களுக்கு நடுவில் வந்து விழுந்தன. "இந்த நீதிக்கதை இத்துடன் முடிந்துவிட்டதா?"

    திடீரென எழுந்து வாசற்கதவை நோக்கி செல்லத் தொடங்கிய தாமஸ் நின்று திரும்பி அவர்களைப் பார்த்தான். "இல்லை! அன்பானக் கிழவரே! இன்னும் கதை முடியவில்லை", ஏளனமாக அவரைப் பார்த்து இளித்துக் கொண்டு தொடர்ந்தான். "இன்னும் சொல்வதற்கு மிச்சம் இருக்கிறது"

    "அதைச்சொல்! என் குழந்தையே! என்னுடைய ஆசிர்வாதங்கள் உனக்கு எப்போதும் உண்டு!"

    "அந்தப் பணக்காரனின் பெயர் அனானியஸ்!" என்று கத்திச் சொன்னவன், தன் அகன்ற கூடைச் சுமையைத் தலையில் ஏற்றிக்கொண்டு, வெளிப்பாதையில், தன் வியாபாத்தை பழைய மாதிரியே இயந்திரகதியில் தொடர்ந்தான். அவனது சத்தமானச் சிரிப்பொலி சிறிது நேரத்திற்கு சூழலில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.

    அவரது முகம் ரத்தம் தலைக்கேறிச் சிவந்து விட்டது. கொப்பளிக்கும் நடுக்கம் அவரை ஆட்கொள்ள அவரது பார்வை சிறுகச் சிறுக மங்கியது. தன் உடலைச் சற்று உலுக்கி சகஜப்படுத்திக் கொள்ள முயன்றார்.

    ஜீசஸ், அன்புக்குரிய ஜானின் கேசத்தில் தன் நீண்ட விரல்களால் அளைந்தான். ஒரு காதலன் காதலியைப் பார்ப்பதைப் போல அவனைத் தன் கண்களுக்குள் உள்வாங்கி அமைதியாகச் சற்று நேரம் பார்த்தான். "ஜான்" தித்திப்புடன் அப்பெயர் அவன் உதடுகளிலிருந்து வெளிவந்தது. "எல்லோருக்கும் காதுகள் இருக்கின்றன, அவர்கள் கேட்கிறார்கள். எல்லோருக்கும் மனம் இருக்கிறது, அவர்கள் முடிவெடுக்கிறார்கள். இறைவன் நேர்மையானவன் என்று அவர்கள் சொல்கிறார்கள். அதற்கப்பால் அவர்களால் செல்ல முடியாது. ஆனால் நீ உன் இருதயம் சொல்வதன் வழி நடக்கிறாய். அதனால் உனக்கு இறைவனின் நேர்மை மட்டும் போதவில்லை. ஆம்! அவன் பூரணமானக் கிருபையும் கொண்டவன். அதனால் இந்த நீதிக்கதையை இத்துடன் முடிக்க முடியாது. இதற்கு வேறு ஒரு முடிவு நிச்சயமாக இருக்கிறது."

    "மன்னித்துவிடுங்கள், துறவியே" , ஆனால் இதைத்தான் என் உள்ளுணர்வு உணர்கிறது. மனிதன் மன்னிப்பான். அதை நானே எனக்குச் சொல்கிறேன். இது சாத்தியமெனில் கடவுளினால் ஏன் முடியாது? இல்லை, இது நிச்சயமாகச் சாத்தியம் தான். இந்தக் கதை அந்தரத்தில் நிற்கிறது. ஒரு காறியுமிழ்ந்த வசை போல. கண்டிப்பாக இதற்கு வேறொரு முடிவு உண்டு என்று நான் நம்புகிறேன்."

    இக்கதைக்கு பிறிதொரு முடிவு இருக்கிறது என் அன்பானவனே", ஜீசஸ் புன்சிரிப்புடன் பேசத் தொடங்கினான். "கேளுங்கள் அனானியஸ், இதை நான் உறுதியுடன் கூற விளைகிறேன். கேளுங்கள், முகப்பிலும், வெளியேயும் நிற்கும் எம்மக்களே, தெருக்களில் சிரித்துக் கொண்டு நிற்கும் அண்டை அயலார்களே!, கடவுள் நேர்மையானவர் மட்டுமல்ல, அவர் நல்லவர், நல்லவர் மட்டுமல்ல, அவர் நம் தந்தையும் ஆவார். லாசரஸ் தன் தந்தையின் சொல்லைக் கேட்டதும், அவன் தன் மனதிற்குள்ளிருந்து கடவுளை அழைத்தான். "கடவுளே, எப்படி ஒரு மனிதனின் ஆன்மா என் கண் முன்னே காலமற்றுத் தீப்பற்றி வெந்து கொண்டிருக்கையில் உன் சொர்க்க ராஜ்ஜியத்தில் என்னால் சுகம் அனுபவித்து மகிழமுடியும். அவனை இளைப்பாற்று, கடவுளே, நானும் இளைப்பாறுகிறேன். அவனை விடுவி, நானும் விடுபடுகிறேன். இல்லையென்றால் அந்த எரியின் வெம்மையை எனக்கும் அளித்துவிடு. கடவுள், அவனது வார்த்தைகளினால் மகிழ்ச்சியடைந்தார். "லாசரஸ், என் அன்புக்குரியவனே!", கீழே செல். நரகக் குழியில் தாகத்தால் வெந்து கொண்டிருக்கும் உன் நண்பனை விடுவிக்க நீயே உன் கைகளைக் கொடு. எனது சுனையின் நீர்மை என்றுமே வற்றுவதில்லை. அவனை இங்கு அழைத்து வா, தாகம் தீர என் நீரினை அருந்தி அவன் தன்னை விடுவித்துக் கொள்ளட்டும். ஆம்! அவன் மூலம் நீயும் புத்தியிர்ப்படைவாய்!....என் அன்பே! உங்கள் இருவரையும் என் முடிவற்ற நித்தியத்துவத்திற்குள் இருக்கப் பண்ணுவேன்.

    ஜீசஸ் அத்துடன் நிறுத்திக் கொண்டு எழுந்துவிட்டான். இரவு நன்றாகத் தெளிந்திருந்தது. தூரத்தில் ஒளித்துணுக்குகள் பொட்டலங்களாக ஆங்காங்கே கிடந்தன. கூடியிருந்த மக்கள் கூட்டம் காலியாகியிருந்தது. ஆண்களும், பெண்களும் தங்களின் குடில்களுக்குச் சென்று, அன்று நடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் எண்ணிக் கொண்டு சிலாகித்துக் கொண்டனர். அவர்களின் இருதயங்கள் பூரண அமைதியில் திருப்தியுற்றிருந்தது. ஒரு சொல்லைத் தின்று உயிர்வாழ்ந்திட முடியுமா? தெரியவில்லை. ஆனால், அச்சொல்லின் மகத்துவம் அதனை சாத்தியப்படுத்தும்.

    ஜீசஸ் தன் விடைபெறுதலை அந்த வயதான முதலாளியிடம் கூறுவதற்காக கைகளை உயர்த்தினான். ஆனால் சற்றும் எதிர்பாராவண்ணம் அனானியஸ் அவனது கால்களில் விழுந்தார்.

"துறவியே,""என்னை மன்னியும்!" அவர் வெடித்தழத் தொடங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக