செவ்வாய், 1 மார்ச், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -59

    

Author: Nikos Kazantzakis

    எரியும் மணல் பரப்பில் தன் கால்களை ஆழ ஊன்றி அவர்கள் ஒன்றாகச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் தங்கள் நாசியையும், வாயையும் துணியை வைத்து அடைத்துக் கொள்ள முயற்சி செய்தனர். ஆனால் ஏற்கனவே மணல் துகள்கள் அவர்களின் தொண்டை வழியே மார்பு வரை சென்று அடைத்திருந்தது. காற்றின் அழுத்தம் தாழாமல் முன்னே சென்று கொண்டிருந்த மூத்தத் துறவி ஹுப்பாக்குக் நிலை தடுமாறினார். அவரது ஊன்றியக் காலை மணல் புதைவிலிருந்து அசைக்க முயற்சிக்க கீழேச் சரிந்து விழுந்தார். மணற் குழைவுகள் அடர்ந்து பார்வைக்கு எதுவுமே தென்படவில்லை. மற்றவர்கள் அவர்களைக் கவனிக்காமல் குருடர்கள் போலத் தத்தித் தத்தி முன்னே சென்று கொண்டிருந்தனர். பாலையின் கனத்த ஊளை மட்டும் நிதானமாகக் கேட்டுக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு தடவை அவர்கள் புதையும் கால்களை அழுத்தி வெளியேற்றும் பொழுது உருவாகும் கிரீச் சத்தம் தான் அவர்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கே தெரியப்படுத்தியது. கீழே விழுந்து கிடந்தத் துறவி, தொண்டை கிழியக் கதறினார். ஆனால் அனல் கொதிக்கும் நிலத்தின் அடங்காத காற்றின் ஒலியை மீறி எந்த சப்தமும் வெளிவரவில்லை.

    மகாசமுத்திரத்திலிருந்து முகிழ்க்கும் குழுமையானக் காற்று ஏன் ஜெகோவாவின் மூச்சாக இருக்கக் கூடாது, என்று நினைத்த மேரியின் மகன் தன் அருகில் வந்துகொண்டிருக்கும் துணைவனிடம் அதைக்கேட்க நினைத்து அடக்கிக் கொண்டான். ஜெகோவாவின் காற்று ஏன் இந்தப் பாழ் நிலத்தின் கிணறுகளை நிரப்பும் நீரினைத் தருவிக்கவில்லை? ஏன் நம் கடவுள் பசிய இலைகளையும், மனிதனின் கைவிடப்பட்ட நிலையினையும் நினைத்து இரங்கி அவனுக்கு அருளவில்லை. மாறாக தன் வலியக் கரங்களால், அவனைக் கிழித்துச் சிதறும் வேலையைத்தான் அவர் செய்கிறார். ஐயோ! ஒரு மனிதன், ஒரே ஒரு மனிதன் அவரைக் கண்டடைந்து, அவரிடம் சென்று அவரது கால்களில் விழுந்து மண்டியிட்டு அழுது, தன் பரிதாபகரமான நிலையினையும், வாதையினையும், இந்த நிலையற்றத் தன்மையினாலும், உன் வலுவான மாயக் கரங்களினாலும் தங்களின் வாழ்க்கை எப்படிச் சுழன்றடிக்கப்படுகிறது என்பதை விளக்க முடிந்திருந்தால், அவரின் எரிக்குழிக்குள் அவன் சாம்பலாகும் முன் அதற்கான வாய்ப்பு மனிதனுக்கு அழிக்கப்பட்டிருந்தால்! என்று தன்னைத்தானேக் கேட்டுக் கொண்டான்.

    யூதாஸ், அந்தத் தாழ்ந்த நிலைப்படிகள் கொண்ட, தனியான அறையில் தன் பட்டறையை அமைத்திருந்தான். வாய் கிழிய சிரித்துக் கொண்டேத் தன் அறையில் இருந்து இறுதிச் சடங்குகளின் நிகழ்வுகளையும்,  ஊர்வலமாக, அவர்கள் தங்கள் குருவைத் தூக்கிக்கொண்டு பாலைவன வெளியில் சுருட்டி மடங்கிச் சென்றுக் காணாமல் போவதையும் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தக் காட்சியை மீண்டும் தன் அகத்தில் ஓட விட்டவன், சரியாகத் தன் வேட்டை விலங்கை அதில் கண்டு கொண்டான். அவனது பெரியக் கருமையானக் கண்கள் மகிழ்ச்சியில் மின்னியது.

    "இஸ்ரவேலத்தின் கடவுள் மிகப்பெரியவர்" அவன் இதயப் பூர்வமாகப் பிரார்த்தித்தான். 

    "அவர் எவ்வளவு அழகாக எல்லாவற்றையும் கட்டமைக்கிறார். என்னுடையக் கத்தியின் கூர்முனைக்கு எதிரே சரியாக அந்தத் துரோகியை அவர் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்" என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

    தன் நீண்டு சிவந்தத்தாடியை நீவி விட்டுக் கொண்டே உள்ளே இருந்த ஒரு அறைக்கு சென்றான். இருண்டிருந்த அறையின் ஒரு மூலையில் இருந்தச் சிறிய அடுப்பில் கங்குகள் கனன்று கொண்டிருந்தன. குட்டை தாட்டையான, புனிதமும், கிறுக்கும் ஒருங்கே கொண்ட அத்துறவி, துருத்தியை வைத்து, கங்குகளை அடுப்பிற்குள் குத்திக் கொண்டிருந்தார்.

    உள்ளே வந்தக் கொல்லன், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கைகளை உயர்த்தினான். "வணக்கங்கள்! அருளாளர் ஜெரோபோம்!". அவன் நல்லமன நிலையில் இருந்தான். புன்சிரிப்புகள் வழிய வெளியை நோக்கினான். "இந்த வெறிக் காற்றுதான் கடவுளின் மூச்சா? எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. நான் கடவுளாக இருந்திருந்தாலும் இப்படித்தான், ஆத்திரம் தீர ஊதித் தள்ளியிருப்பேன்! நல்லது!" என்றான்.

    துறவி வெறுமனே சிரித்தார். "என்னால் இப்படி ஊதித்தள்ள முடியாது. நான் மிகக் களைப்பகவும், சோர்வாகவும் இருக்கிறேன்." துருத்தியை எடுத்து ஓரமாக வைத்தவர். ஒரு பருத்தித்துணியை எடுத்து நெற்றியிலும், கழுத்திலும் வழிந்த வியர்வையை ஒற்றித் துடைத்தார்.

    யூதாஸ் அவரை அணுகிக் கேட்டான். " எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா, நேற்று மடாலயத்திற்கு  ஒரு இளைஞன் வந்தானே! ஒல்லியான நீண்ட தேகமும், சிறிய அடர்கரு நிறத் தாடியும், வெற்றுக்கால்களும், அழுக்கடைந்த உடையும், தலையில் ரத்தம் தோய்ந்த துணியும் கட்டியிருந்த ஒரு அரைக்கிறுக்கன்!"

    "ஆம். நான் தான் அவனை முதலில் பார்த்தேன்" அவரது குரல் காற்றின் ஊடே அறையினுள் அலையாடியது. "ஆனால் கேள்! அவன் ஒன்றும் அரைக்கிறுக்கனில்லை, முழுப்பித்தன். தான் ஏதோ கனவு  கண்டதாகவும், அதற்காக நாசரேத்திலிருந்து இங்கு வந்திருப்பதாகவும் கூறினான். இருமுனைகள் கொண்ட ஒரு கூர் ஆயுதம் அவனை இங்கும் அங்கும் அலைக்கிறது. தெரியவில்லை! அவன் கொஞ்சம் தன்னை அமைதிப்படுத்த வேண்டும். என் அன்புக்குரிய யூதாஸ்"

    "அப்படியென்றால் சரி! ஒரு விஷயம், நீர் தானே இங்கே வரவேற்பாளர். யார் இங்கு வந்தாலும், அவர்களுக்கு அறை ஒதுக்கி, படுக்கை ஒருக்கம் செய்து, உணவும் தருவித்துக் கொடுப்பது நீர் தானே?"

    "ஆம்! அதில் எந்தக் குழப்பமுமில்லை. ஏனென்றால் வேறு எதற்கும் நான் லாயக்கற்றவன் என்று என்னை ஒதுக்கி விட்டார்கள். நான் இங்கு துணிகளைத் துவைப்பதும், சுத்தம் செய்வதும், வருகையாளர்களை வரவேற்பதும் தான் செய்து வருகிறேன்."

    நல்லது! அப்படியென்றால்,  ஒரு உதவி செய்யும். அவனுக்கு என்னுடைய அறையில் தயவு செய்து படுக்கை அமைத்துக் கொடும். எனக்கு இரவில் கொடுங்கனவுகள் வருகின்றன. எப்படி நான் உமக்கு விளக்குவேன்? என்னால் தனியாக உறங்க முடியவில்லை. சாத்தான் என்னுடைய கனவிற்குள் வந்து என்னை சபலப்படுத்துகிறான். எனக்குப் பயமாக இருக்கிறது. நான் நரகக்குழியினுள் தள்ளப்படுவது திண்ணம். யாராவது ஒரு மனிதன் என்னருகில் இருந்தால் போதும் நான் அமைதியடைந்து விடுவேன். தயவுசெய்து இந்த உதவியை எனக்கு செய்து தாரும். நான் உமக்கு அதற்காகப் பரிசு தருகிறேன். ஒரு பெரிய மற்றும் சிறிய அளவானக் கத்திரிக்கோல்களைத் தருகிறேன். உமது தாடியைத் திருத்திக்கொள்ளலாம். மற்ற துறவிகளுக்கும் நீ முடி வெட்டி விடலாம். ஓட்டகங்களுக்கும் கூட. அதன்பிறகு யாரும் உன்னை எதற்கும் லாயக்கற்றவன் என்று சொல்ல மாட்டார்கள். என்ன, நான் சொல்வது கேட்கிறதா?

"கத்திரிக் கோல்களைக் கொடு!"

    அவன் தன் பையினுள் துழாவி, ஒரு ஜோடிப் பெரிய கத்திரிகளை எடுத்து நீட்டினான். துறவி அதைப் பிடுங்கி, வெளிச்சத்தில் வைத்துப் பார்த்தார். அதை தன் விரல்களுக்கிடையில் வைத்து இயக்கினார். ம்ம்! நன்றாக இருக்கிறது என்று சொன்னவர் அதைத்திரும்பத் திரும்ப இயக்கினார்.

    "கடவுளே! நீயே பெரியவன்!, உனது படைப்புகள் எதுவும் சோரம் போவதில்லை" என்று சொல்லிக் கொண்டே முட்டாள்தனமாகச் சிரித்தார்.

    "ரொம்ப நல்லது" என்று கேலியாக அவரைப் பார்த்து சிரித்த யூதாஸ். அவரை அந்நிலையிலிருந்து உலுக்கி எழுப்பினான்.

    "இன்றிரவு நிச்சயம் நீ அவனுடன் இருப்பாய்" என்றவர் கைகளில் கத்திரிக்கோல்களை ஆட்டிக் கொண்டே சென்றுவிட்டார்.

    மற்றவர்கள் ஏற்கனவேத் திரும்ப வந்திருந்தனர். அவர்களால் வெகுதூரம் செல்ல முடியவில்லை. நகரக் கூட விடாமல் ஜெகோவாவின் மூச்சுக் காற்று அவர்களை நிலைகுலைத்தது. அவர்கள் பிணத்துடன், புழுதிவெளியில் போராடி அங்காங்கே கீழே விழுந்தனர். எப்படியோ ஒரு குழியினைக் கண்டறிந்து, பிணத்தை உருட்டித் தள்ளினர். பின் இறுதிப்பிரார்த்தனையை செய்வதற்காக அருட்தந்தை ஹுப்பாக்குக்கைத் தேடினர். ஆனால் அவர் அங்கே இல்லை. கத்தி அழைத்துப்பார்த்தனர். காற்றின் ஊளையன்றி எந்த எதிரொலிப்பும் வரவில்லை. நாசரேத்திலிருந்து வந்த முதிய துறவி, குழிக்கருகில் குனிந்து மண்டியிட்டுக் காலியான அந்த வெற்று உடலைப் பார்த்துக் கத்தினார், "நீயும் இதைப் போல ஒருப் புழுதிதான், அதனால் அந்த புழுதியிலே நீ போய் சேர்! உன்னுள் இருந்த ஆன்மா வெளியேறிவிட்டது. இனிமேல் நீ வெறும் தசைப்பிண்டம். இனிமேல் இப்பூமியில் உனக்கான செயல்கள் ஏதுமில்லை. புனித இறையாளரே! உனக்குக் கையளிக்கப்பட்ட செயல்களை, நீ செவ்வனே நிறைவாகச் செய்து முடித்துவிட்டாய். உன் உடலும் நிறைவாக அதைச் செய்ய உனக்கு உதவியது. ஆன்மாவே! இதுவரை இந்த உடல் வழியேப் புலன்களினால் பூமியில் அனுபவித்த சுக துக்கங்களிலிருந்து உன்னை விடுவித்து, சூரிய சந்திரர்களையும், கோளகங்களையும் தாண்டி நமது தந்தையின் நிலமான சொர்க்கத்தை அடைய, இறைவனின் திருநாமத்தின் வல்லமையால் அவரது அழிவே அற்ற பாதங்களில் மண்டியிட்டு அமர நாங்கள் பிரார்த்திக்கிறோம். இனி இந்த மனித உடல் நம் அருட்தந்தைக்கு தேவையில்லை. அதனால் இப்புழுதிக்குழியில் மண்ணோடு மண்ணாகக் அது கலக்கட்டும். "மண்ணிற்குள்ளதை மண்ணும், விண்ணிற்குள்ளதை விண்ணும் ஏற்றுக் கொள்ளட்டும்" என்று சொல்லி முடித்தார் முதிய துறவி. பின் அனைவரும் புனிதக் குறிகளை நெஞ்சிலும், உதட்டிலும், நெற்றியிலும் இட்டுக் கொண்டனர்.

    சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, பொதிப் பொதியாக மணற்காற்று பிரேதப் பொட்டலத்தை அப்பி மூடத் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக அது மணலின் குழிவினுள் முழுகிக் கொண்டிருந்தது. இன்னும் வேகமாகக் காற்றின் இழுப்புகள் அவர்களை அழுத்தின. புழுதியினுள் எதுவுமே கண்ணுக்குத் தெரியவில்லை. குத்துமதிப்பாக வந்தத் திசை நோக்கி அவர்கள் வேகமாகத் திரும்பிச் சென்றனர்.

    அவர்கள் மடாலயத்தின் உள் நுழைவை அடையும் பொழுதுதான் வெளியே மணலோடு மணலாக மூத்த அருளாளர் ஹீப்பாக்குக் கிடப்பதைப் பார்த்தனர். உடல் முழுதும் மண்ணில் படிந்து கிடக்க அவர் உள்ளே வர எத்தனித்து தவழ்ந்து வந்து கொண்டிருந்தார். அவரது கூக்குரல்கள் எதுவும் வெளிவராத வண்ணம் தொண்டையில் மணல் வாரி இறைத்திருந்தது. அவர்கள் அவரைத் தூக்கி வந்து மடாதிபதியின் அறைக்கருகில் இருத்தினர். ஒரு அழுக்கில்லாத ஈரத்துணியால் கைகள், வாய், கழுத்து, முகம் என்று ஒற்றித்துடைத்தார். வாசல் கதவுகளை அடைத்த பின்பும், எரியும் காற்றின் வீச்சமும், கட்டுப்படுத்தமுடியாத ஓலமும், இடைவெளிகள் வழியே பீறிட்டுத் தெறிக்கும் மணற் கச்சையும் இன்னும் அடங்கியபாடில்லை. ஜெகோவாவின் மூச்சின் சீற்றமும் எரிவும் உலகத்தையே அழிக்கும் வண்ணம் அறைந்து கொண்டிருந்தது.

    அவரைப் பார்த்த முதிய துறவி சிமியோனின் மூளையில், தீர்க்கதரிசிகளின் முடிவே இல்லாத பயணம், ஒவ்வொரு கோவில் கோவில்களாக, எல்லாம் வல்ல இறைவனை அணுக அவர்கள் அலைந்து திரியும்பொழுதும் இது போலவே அவனின் மூச்சின் வேகம் அவர்களை எரித்து சாம்பலாக்கியிருக்கும். அவர்களின் மூச்சும், உதடுகளும், கண்களும், எண்ணங்களும் எல்லாமே தீயின் ஜ்வாலைகளாக உருமாறித் தன்னையே ஒரு எரித்தழல் போல ஆக்கி அவனுக்கு முன்னே எரிய விட்டிருக்கும். ஆம்! கடவுள் ஒரு தீப்பற்றி எரியும் காற்று! மின்னிக் கொண்டே இருக்கும் அலகில்லா ஒளித்தணல், அது எனக்குப் புரிகிறது என்று அவர் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டார். அவனிடம் எந்தக் கனிவுமில்லை. மொட்டுகள் அவிழ்வது போன்ற பூப்படையும் எந்த மென்மையான ஒன்றும் அவனிடமில்லை. ஆனால் மனிதனின் மனமோ ஒரு மெலிந்த நரம்புகளோடும் பச்சை இலை. கடவுள் அதன் தண்டுகளை உடைத்து அதை சருகாக்குகிறார். நாம் என்ன செய்வது? எப்படி நடந்து கொண்டால் அவன் மகிழ்வான்? அவனுக்கு நாம் ஆடுகளைப் பலியிடும் பொழுது, அவன் கத்துகிறான் எனக்கு ஊன் பலித் தேவையில்லை. சங்கீதங்களைப் பாடு என்கிறான். நாம் நித்தியமான மொழியினால் அவனுக்கு சங்கீதங்களைப் பாட ஆரம்பித்தால், எனக்கு சொற்களின் ஜாலங்கள் வேண்டாம் என்று அலைக்கழிக்கிறான். எனது பசி! ஆடுகளின் பலியினாலோ, உங்களின் வார்த்தைகளின் குதப்பல்களாலோ அடங்காது. என் மகன்! என் ஒரே மகன்! அவன் தான் என் பசிய அடக்க வல்லான்!"

    கிழவர் சிமியோனின் எண்ணங்கள் குழைந்து சரிந்தது. மூச்சிறைக்க கைகளை நெஞ்சில் தாங்கிக் கொண்டு சற்று ஆசுவாசப்பட்டார். ஒரு பயங்கரக் கனவு போல இறைவனின் விருப்பம் அவருள் வந்து அவரை சோர்வுற வைத்தது. அவர் புனித அருட்தந்தை கிடத்தியிருந்த மூலையை, பொருளற்று நோக்கிக் கொண்டிருந்தார். உறக்கமில்லாமல் கழிந்த பொழுதுகளினால் எல்லாத் துறவிகளும் அயர்ந்து போய் இருந்தனர். அவர்கள் அவரவர் அறைகளுக்குச் சென்று படுக்கையில் வீழ்ந்தனர். சன்னமான மூச்சொலிகள் நிரம்பிப் பரவத் தொடங்கியது. நாற்பது தினங்கள் இறந்தவரின் இருப்பு, மடாலயத்தைச்சுற்றி நடமாடிக் கொண்டிருக்கும். தன் சீடர்களைக் கவனித்துக் கொண்டும், அவர்களுக்கு போதனைகள் சொல்லவும், கடிந்து கொள்ளவும் செய்யும் . நிச்சயமாக அவர்களின் கனவுகளின் வழியே தங்கள் புனிதத்தந்தையினை அவர்கள் காண்பார்கள். கிழவர் சுற்றும் முற்றும் பார்த்தார். எல்லோரும் சென்று விட்டனர். மரணித்தவரின் காலியான அறையை வெறித்தார். வாசலில் கட்டியிருந்த இரு நாய்களும், சுருண்டுப் படுத்துக் கிடந்தது. அதன் வயிற்றுப் பகுதியில் சுவாசம் ஏறி இறங்குவதுத் துல்லியமாகத் தெரிந்தது. மெல்லிய முணக்கங்களுடன், புழுதி படிந்த தேகத்தில் காற்றின் சில்லிடல் இன்னும் அடங்காததால், அதன் மயிர்க்கால்கள் குத்திட்டிருந்தது. வெளியே அதேக் காற்றின் ஆரவாரம். அது ஓங்கி ஓங்கிக் கதவை அறைந்து உள் நுழைய முயற்சித்துக் கொண்டிருந்தது.

    அவர் அந்த நாய்களுக்கு அருகிலேயே அப்படியே சாய்ந்து படுப்பதற்காகத் தலையை சாய்த்தவர். வெளியே மூலையில் மேரியின் மகன் அசைவற்றுத் தரையைப் பார்த்து நின்று கொண்டிருந்ததை விளக்கொளியின் அலைவில் கவனித்தார். உறக்கம் கலைந்து இமைகளை விரித்து மறுமுறை இருளைப் பார்த்தார். ஒரு தொந்தரவாக நினைத்துக் கொண்டவர், எதையும் காட்டிக் கொள்ளாமல் எழுந்து அவனருகில் சென்றார். அவர் தன்னை அழைப்பார் என்பதற்காக அவரைப் பார்த்தபடி அமைதியாக நின்று கொண்டிருந்தான் அந்த இளைஞன். முன்னே வந்தவன், உதடுகளைச் சுழித்து, கசப்பாக அவரைப் பார்த்து புன்னகைத்தான்.

    "உட்காரு, ஜீசஸ், நான் உன்னிடம் பேச நினைத்திருந்தேன்" அவர் சொன்னார்.

    "நான் கேட்கிறேன்" பதிலுரைத்தவன் அவருக்கு எதிரேக் குந்தி அமர்ந்தான். "நானும்  உங்களிடம் பேச வேண்டும் என்றிருந்தேன், மாமா".

    "நீ இங்கு என்ன தேடிக் கொண்டிருக்கிறாய்?, அங்கே உன் அம்மா கிராமம் முழுதும் உன்னைத் தேடி அலைந்து புலம்பிக் கொண்டிருக்கிறாள் தெரியுமா!"

    "அவள் என்னைத் தேடுகிறாள், நான் கடவுளைத் தேடுகிறேன்" நாங்கள் எப்பொழுதும் சந்திக்கப் போவதே இல்லை"

    "நீ இருதயமற்றவன். ஒரு மகனாக, நீ உன் தாய், தந்தையிடம் ஒரு போதும் அன்பு செலுத்தியதில்லை"

    "அது உண்மையில் மிகவும் நல்லது, என் இருதயம் ஒரு கனன்று கொண்டிருக்கும் கங்கு, யார் அதைத் தொடுகிறார்களோ, அவர்கள் எரிந்து விடுகிறார்கள்"

    "உனக்கு என்னதான் பிரச்சனை, எப்படி உன்னால் இப்படியெல்லாம் பேச முடிகிறது? என்ன உன்னுள் குறையாக இருக்கிறது? துறவி அவனைப் பார்த்துக் கேட்டார்.

    நிமிர்ந்து அவனைச் சரியாகப் பார்த்தார். கன்னங்கள் வழியே கண்ணீர்துளிகள் வழிய அவன் எதிரில் அமர்ந்திருந்தான். "ஏதோ விவரிக்க முடியாத வாதை, உன்னை விழுங்கிக் கொண்டிருக்கிறது என் அன்புக் குழந்தையே! என்னிடம் அதை வெளிப்படுத்தி, உன்னை அமைதிப்படுத்து. உன் ஆழத்தில் புதைந்திருக்கும் அந்த வலி----"

"ஒன்று?", இடைமறித்துப் பேச ஆரம்பித்தான் இளைஞன். ஒரு சுழிவானப் புன்னகை, அவன் முகம் முழுதும் தெறித்தது. 

"ஓன்றல்ல, பல"

    தன் இதயத்தைக் கிழித்துக் குருதி பீறிடுவதைப் போல, அவனது குரல் கிழவரைத் துளைத்தது. தன் நடுங்கும் கைகளால், அருகில் அமர்ந்திருந்த அவனின் முட்டிகளைத் தழுவி அவனைக் கொஞ்சம் தைரியப்படுத்த முயன்றார். 

    "நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன், ஜீசஸ்" அவர் கனிவானக் குரலில் சொன்னார். "உன்னுடைய வேதனைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவா. உன் அகத்திலிருந்து அதனை வெளியே எடுத்து வீசு. இருளிற்குள் அது பல்கிப் பெருகிறது. ஆனால் ஒளி! சிறிது ஒளி கூட அதனைக் கொல்லும். அதனால் பயப்படாதே! வெட்கப்படாதே! பேசு!"

    ஆனால் மேரியின் மகனால் அதனை எப்படி விளக்க, எங்கிருந்துத் தொடங்க என்ற எந்த யோசனையும் இல்லாமல் இருந்தது.

    வெளிப்படுத்த முடியாத எந்த ஒன்றைத்தன் இருதயத்தினுள் புதைத்து வைத்திருக்கிறான். அதிலிருந்து அவன் தன்னை உயிர்ப்பித்து வெளிவர உண்மையில் என்ன வழி இருக்கிறது. கண்ணாடிப்பாளம் போலக் கீறி, விரிசலாகியிருந்தது அவனது அகம். அதன் பலப்பல பிம்பங்களில் கடவுள், மாக்தலேன், ஏழு பாவங்கள், சிலுவைகள், அதில் அறைந்து, வதைக்கப்பட்டு இறந்தவர்கள் என எல்லோரும் பெருகி வழிந்தனர். அவர்களின் உடல், குரல், எண்ணங்கள், கடந்த கால நினைவுகள் எல்லாம் குழைந்து உருகியோடிக் கொண்டிருந்தது.

    தன் முன்னே ஸ்தம்பித்து அமர்ந்திருந்த இளைஞனை எழுப்புவது போல அவனது முழங்கால்களில் தட்டி, அவன் பெயரை மென்மையாகக் கூறினார், முதிய துறவி.

"உன்னால் முடியும் ஜீசஸ்" என் அன்பானவனே" உன்னால் முடியும்". திரும்பத் திரும்பத் துறவி மெல்லியக் குரலில் இறைஞ்சுவது போல அவனிடம் கூறினார்.

"இல்லை, மாமா" என்னால் முடியாது.

"உன்னைச் சூழ்ந்து பலப்பல சபலங்கள் இருக்கின்றனவா?" அவர் இன்னும் குரலைத் தாழ்த்தி அவனுக்கு மட்டுமே கேட்கும்படி கேட்டார்.

"ஆம்! நிறைய" ஒரு வித நடுக்கத்துடன் வெட்டு வந்தது போல, வாயைக் கோணிக் கொண்டு பதிலளித்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக