புதன், 9 மார்ச், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் - 67

     

Author: Nikos Kazantzakis

    ஜீசஸ் கூச்சலும், குழப்பமுமாக ஆரவாரமிட்டுக் கொண்டிருக்கும் கூட்டத்தைப் பார்த்து விரக்தியுடன், அவர்களை மட்டுப்படுத்துவதற்காகத் தன் கைகளை அசைத்தான். "நான் அப்படிச் சொல்லவில்லை" "நான் அப்படிச் சொல்லவில்லை" அவன் பதற்றத்துடன் கத்தினான். "சகோதரர்களே, நான் அன்பு செய்யச் சொன்னேன், ஒருவரையொருவர் நேசிக்கச் சொன்னேன்".

    ஆனால் பசியின் மூர்க்கம் அவர்களைத் தன்னிலை இழக்க வைத்திருந்தது. களிப்பும், ஆத்திரமும் மிகுந்து, அவர்கள் இதுநாள் வரைக் கட்டுப்படுத்தியிருந்த வன்மத்தை வெளிப்படுத்தும் சரியானத் தருணத்திலிருந்தார்கள். யார் பேச்சையும் அவர்கள் கேட்கும் மனநிலையிலில்லை.

    "ஆண்ட்ரூ சொன்னது சரியே! முதலில் நமக்குத் தேவை, நெருப்பு! பின் கோடாரி! அதற்கும் பின் தான் அன்பு" ஜீசஸ் எரிச்சலுடன் அவர்களைப் பார்த்தான். அருகிருந்த ஆண்ட்ரூ ஜீசஸ் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான். ஆனால் அவனது அகம் எண்ணங்களுக்குள் அலைந்து திரிந்தது. நிலையற்ற நோக்குடன் குனிந்து நிலத்தை வெறித்துக் கொண்டிருந்தவன் எந்த பதிலும் பேசவில்லை.  தனது ஆன்மகுரு,  அந்தத் தீ எரியும் பாலை நிலத்தில் நின்று பேசிய வார்த்தைகள் அவன் செவிகளுக்குள் சுழன்றன. அவரின் சொற்கள் கற்களைப் போல எங்களின் தலையை உடைத்து நொறுக்கியதை நினைத்தான். ஆனால் என் எதிரே நிற்கும்  இம்மனிதன் முற்றிலும் வேறுபட்டவன். இவனிடமிருந்து வெளிவரும் சொற்கள், உண்மையில் ரொட்டித்துண்டங்கள். அது ஜீவனின் நித்தியமானப் பசியினை உள்ளூற அறிந்தவை.  யாருடைய வழி சரியானது? எந்தப் பாதை உலகத்தின் இரட்சிப்பை நோக்கி நம்மை வழிநடத்தும். வலிமையா? அன்பா?".

    சிதறிக் கொண்டிருந்த அவனது மனத்தின் நிலைகொள்ளாமை, இந்தக் கேள்விகளின் உந்துதலால் இன்னும் அழுத்தம் கூடித் தெறிக்கத் தொடங்கியது. தாங்கமுடியாமல்  அவன் தன் கைகளால் உச்சந்தலையை இறுக்கிப்பிசைந்தான். அவனருகில் வந்த ஜீசஸ் தன் வெம்மையான உள்ளங்கைகளை அவனது தலையில் பதித்தான். அதன் நீண்ட மென்மையான விரல்களின் ஸ்பரிசம், ஒரு குடை போலக் குவிந்து அவனைத் தழுவி நிறைந்தது. எல்லையில்லாக் கருணையின், குளிர்ச்சி ஒரு சுனை போல அவனுள் இறங்கியது. ஆண்ட்ரூ அசையாமல் அக்கைகளினுள் கண்கள் மூடி அமர்ந்திருந்தான். விவரிக்கமுடியாத உணர்வினால் ஆட்கொள்ளப்பட்ட ஆண்ட்ரூ,  தையல் பிரிவதைப் போலத் தன் தலைபிரிந்து, மூளைக்குழியினுள், தித்திக்கும் அடர்த்தியானக் கூழ் போன்ற தேன் பாய்வதை உணர்ந்தான். அது மெல்ல மெல்ல அவன் கண்கள், நாசி, வாய், கழுத்து, இருதயம் என இறங்கித் தன் அந்தரங்க உறுப்புகளைத் தழுவிக் கிளைபிரிந்து இரு கால்களின் வழியாக உள்ளங்கால்களின், பாதங்களுக்குள் புகுந்து வேரிட்டு அமைந்தது. தாகம் கொண்ட மரம் ஒன்று தண்ணீரை வெறியுடன் உறிஞ்சிக் கொள்வதைப் போல உடலெங்கும் அவ்வின்பம் நிறைந்து பரவியது. தன் உடலும் ஆன்மாவும் ஒரு குளிர்ச்சுனையில் முங்கி எழுந்தது போல, இதுவரை தன்னுள் அடைந்திருந்த வியாகுலங்கள் எல்லாம் கரைந்து புத்துணர்ச்சியும், மகிழ்ச்சியும் அவனுள் பெருகியது. அங்கிருந்து விலகாமல் தாழ்ச்சியுடன் இருந்தவன்,  தன் தலையில் அமிழ்ந்திருக்கும் இக்கைகள் தன்னைவிட்டு என்றுமே அகலக்கூடாது என வேண்டிக் கொண்டான். இது வரைத் தான் பட்டக் கஷ்டங்களும், போராட்டங்களும் தூசித்துகள்கள் போல அவனை விட்டுப் பறந்தன. வாழ்விலே முதன்முறையாக, ஒரு குஞ்சுப்பறவை, தன் தாயின் மார்பினுள் புதைந்து லயித்திருக்குமே, அந்த உண்மையானப் பாதுகாப்பையும், உள்ளார்ந்த மனநிம்மதியையும் அடைந்ததைப் போல உணர்ந்தான்.

    சற்று தொலைவில், இதனைப் பார்த்துக் கொண்டிருந்த இணைபிரியாத நண்பர்களான பிலிப்பும், நாத்தனேலும் தங்களுக்குள், நடந்த நிகழ்வுகளைப் பற்றி வம்பளந்துக் கொண்டிருந்தனர்.

    "எனக்கு இவனைப் பிடித்திருக்கிறது" செருப்பு தைப்பவன் முதலில் ஆரம்பித்தான். இவனது வார்த்தைகள் தேன் போல அமிழ்தாய் இருக்கின்றன. அதை உண்மையிலேயே நம்பிக் கேட்டேன் என்றால், நான் என் வாயில் சப்புக் கொட்டிக் கொள்வேன் தெரியுமா!"

    "எனக்கு இவனைப் பிடிக்கவில்லை, இவன் பேசுவது ஒன்று, செயல் வேறு. பார்! இங்கு அன்பு! அன்பு! என்று சொல்கிறான், ஆனால் இவன் தான் கொல்வதற்குச் சிலுவைகளும் செய்து கொடுக்கிறான், இவன் நம்பிக்கைக்குரியவன் போல எனக்குத் தோன்றவில்லை", மேய்ப்பன் வெறுமனேக் கைகளைக் காற்றில் அசைத்தான்.

    "அது முடிந்து விட்டது, பிலிப்", இவன் அதனைக் கடந்து வந்துவிட்டான். சிலுவைகள் செய்த அந்த மனிதன் அல்ல நம் எதிரே நிற்பவன். இவன் அப்பாதையின் வழியேக் கடந்துத் தேவனின் வழியைச் சரியாகத் தேர்ந்தெடுத்திருக்கிறான் என்றே எனக்குத் தோன்றுகிறது".

    "நான் செயல்கள் வழியேதான் ஒருவனை நம்புகிறேன்" பிலிப் வலியுறுத்துவதைப் போலச் சொன்னான். "என் ஆடுகளுக்கு சொறி வருகிறது என்று வைத்துக்கொள், இவன் அவைகளை ஆசிர்வதித்து, தன் வீரியமிக்கச் சொற்களால் அது வராமல் தடுக்கவோ, இல்லை குணப்படுத்தவோ செய்ய வேண்டும். அப்பொழுது நான் இவனை நம்பிக் கொள்கிறேன். இல்லையெனில், இவன் தன் பாசாங்குகளைக் கொண்டு மற்றவர்களிடம் போய்த் தன் கருணை மொழியால் பேசி மயக்கட்டும். எனக்கென்ன வந்தது!, எதுக்கு நீ இப்படி தலையை ஆட்டி இல்லை என்கிறாய்? சரி! போகட்டும்! இந்தப் பையன் நம் உலகை இரட்சிக்க வந்திருக்கிறான் என்றே வைத்துக் கொள்வோம், ஏன் அவன் என் ஆடுகளிடமிருந்து தன் இரட்சணிய யாத்திரையைத் தொடங்கி விடக்கூடாது."

    இரவு தொடங்கியிருந்தது. ஏரியின் நீரலைகளில் இருளின் நெளிவுகள் இறங்கி அதன் நிறமிகள் குலைகின்றன. திராட்சைத் தோட்டங்களின் இருளிற்குள் படர்ந்திருந்த மீதப் பழங்கள், இருட்டின் பல்லாயிரம் குமிழ்க்கண்கள் போல கொத்துக் கொத்தாய் அடர்ந்திருந்தது. டேவிட்டின் சேனையான விண்மீன் கூட்டங்கள் வானை ஆக்கிரமிக்கின்றன. வடக்கே துருவ நட்சத்திரம் எழுந்து பிரகாசமாகிறது. காற்றின் குளிர்ச்சி கூடிக்கொண்டு வருகிறது. நிற்கும் மனிதர்கள் அனைத்தும் நிழலுருக்களாக மாறிக் கொண்டிருந்தனர்.

    ஜீசஸ் சோர்வாகத் தன் மூட்டுகளை விடுவித்துக் காலை நீட்டிக் கொண்டு அமர்ந்தான். பசி, அவனது கண்களில் தெளிவாகவேத் தெரிந்தது. அவன் தனிமையில் இருக்க விரும்பினான். கூட்டம் மெதுமெதுவாக மலையை விட்டு கழன்று கொண்டிருந்தது. ஆண்களும், பெண்களும் தங்களின் குடிலை நோக்கித் திரும்பிச் செல்கின்றனர். அங்கே அவர்களுக்காக அவர்களின் குழந்தைகள் காத்திருக்கிறார்கள். எல்லாம் பழைய நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. மக்கள் தங்கள் பழைய வலிகளைத் தழுவிக் கொண்டுத் திரும்பவும் உறங்கப் போவார்கள். ஒரு ஒளி வீச்சம் மட்டுமேயாக அந்த நாளின் நிகழ்வுகள் அவர்களுக்குள் மிணுங்கி மறைந்துவிடும். எப்பொழுதுமுள்ள நிரந்தரச் சுழலில் கண்ணிகள் பொருத்தப்பட்டு, அவர்களின் தினசரித் தேவைகளின் சக்கரங்கள் சுழலத் தொடங்கிவிடும். தனித்தனியாகவும், ஜோடிகளாகவும் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மலைவிட்டு இறங்கினர். ஆரவாரங்கள் அடங்கி, முற்றிலுமான அமைதி. காலங்காலமானத் தங்களின் புலம்பல்களின், வேண்டுதல்களின், விசும்பல்களின் சொற்கள் அவ்வெற்று நிலத்தில் புழுதியாய் வீசிக்கொண்டிருந்தது

தன் மனச்சோர்வைத் தள்ளி வைத்து, ஜீசஸ் தான் அமர்ந்திருந்த பாறையிலிருந்து இறங்கிக் கீழே வந்து நின்றான். யாருமே அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை. யாருமே அவனைக் கைப்பிடித்து அவனுக்கு விடைபெறுதல்கள் சொல்லவில்லை. தான் பசித்திருக்கிறேனா, இந்த இரவில் நான் எங்கே போய்த் தங்குவேன்? யாரும் எதுவும் கேட்கவில்லை. அவனுக்கு எதிரே பூமி இருண்டு கொண்டிருந்தது. விரைந்து போகும் காலடிச் சப்தங்கள், திரும்பத் திரும்ப அந்தத் தப்படிகளைக் கேட்டான். பின் எல்லாம் நிசப்தமானது. சுற்றி முற்றிப் பார்த்தான். இருள் தவிர யாரும், எதுவுமில்லை. மக்கள் திரள் முற்றிலுமாக மறைந்திருந்தது. அவன் தலை உயர்த்தி வானைப் பார்த்தான். தலைக்கு மேலே விண்மீன்களும், காலுக்கு கீழேப் புழுதியையும் தவிர்த்து வேறொன்றுமில்லை. தனக்குள் பசியையும், களைப்பையும் மட்டுமே உணர்ந்தான். எங்கே போவது? எந்த வீட்டின் கதவுகளைத் தட்டுவது? கால்கள் நடுங்க அப்படியேத் தரையில் சுருண்டுப் படுத்துக் கொண்டான். ஏதோ பழிச்சொல்லால் தாக்குண்டது போல வேதனையுடன் முணகினான். "நரிகள் கூட இந்நேரம் தன் குகைகளுக்குள் அண்டிக் கொண்டிருக்கும், எனக்கு அதுவுமில்லை". இருளின் குளிர் கூடுகிறது, காற்றின் வேகம் அதிகரிக்கிறது. அவன் தன் தேகத்தைத் தானே கட்டிக் கொண்டுத் தரையில் விரைத்துக் கிடந்தான்.

    ஏதோ ஒரு மனித சஞ்சலம். இருளினுள் மென்மையாக அழுதுகொண்டிருக்கும் ஒரு பெண்ணின் இருப்பைத் தன் முதுகுக்குப் பின்னால் உணர்ந்தான். அமைதியாகத் தலையைத் திருப்பிப் பார்க்கையில், அவள் மெல்லத் தரையில் கால்கள் பாவித்து ஊர்ந்து அவனை நோக்கி வந்தாள். அருகில் வந்ததும் தன் விரிந்த கேசத்தால் அவனின் பாதங்களை வருடினாள். தூர தூரங்கள் பயணித்த அப்பாதங்கள் வெடிப்பெடுத்து பாளங்களாக இருந்தது. அவளின் பிரத்யேகமான உடல் மணம், அவளின் இருப்பை அவனுக்கு உணர்த்தியது.

    "மாக்தலேன்! என் சகோதரியே!" என்று அழைத்தவன் தன் வெம்மையானச் சிவந்தக் கைகளால் அவள் தலையைத் தொட்டான். பின் அவளின்  தலைமுடியை நெற்றியிலிருந்து தொடங்கி பின் நோக்கி, ஒரு குழந்தையை அன்புடன் வருடுவது போல விரல்களால் அளைந்தான். "மாக்தலேன், என் சகோதரியே, நீ உன் இல்லத்திற்குத் திரும்பச் செல், உனக்கு இனி பாவங்கள் இல்லை."

    "ஜீசஸ், ஜீசஸ்!" வார்த்தைகள் அவளினுள் தடுமாறின. அவள் அவனின் கால்களைத் தூக்கித் தன் மடியில் இருத்தி முத்தமிட்டாள். "நான் சாகும் வரை உங்களின் நிழலாகப் பின் தொடர வேண்டுகிறேன் அன்பே! அன்பு என்றால் என்ன என்று எனக்குப் புரிந்தது, என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் தேவனே!"

    "உன் இல்லத்திற்குத் திரும்பப் போ!" ஜீசஸ் மறுபடியும் கூறினான். சரியானத் தருணத்தில் நான் உன்னைத் திரும்ப அழைப்பேன்"

    "நான் உனக்காக என் உயிரையும் கொடுக்கச் சித்தமாக இருக்கிறேன், என் குழந்தையே!"

    "பொறுமையிழக்காதே!, மாக்தலேன். அதற்கான நேரம் வரும். இன்னும் அது வரவில்லை.  உன்னை நான் அந்த சரியான நேரத்தில் அழைப்பேன்."

    அவள் அவனின் வார்த்தைகளை மறுதலிக்க எண்ணினாள், ஆனால் வலுவான அவனின் குரல் திரும்பவும் அவளை விரட்டியது. "போ".

    மாக்தலேன் எழுந்து தன் கண்களைத்துடைத்துக் கொண்டு அமைதியாக மலையை விட்டு கீழிறங்கத் தொடங்கினாள். அவளின் மெல்லியக் காலடிச்சப்தம் மறையும் வரை அதைக் கூர்ந்துக் கேட்டுக் கொண்டிருந்தான். பின் எல்லாம் மறைந்து பொருளற்ற இரவின் குழறல்களும், பூச்சிகளின் ரீங்காரங்களும் மட்டுமேயாக அந்தமலை ஜீசஸுடன் தனித்து விடப்பட்டது. சிறிது நேரம் நிலைத்திருந்த அவளின் வாசத்தையும், குளிர்க்காற்றின் பீறிடல் அழித்துத் துடைத்து விட்டிருந்தது.

    மேரியின் மகன் திரும்பவும் தன் தனிமையில் ஆழ்ந்தான். வானத்தின் கருமை நிறத்தை உட்கிரகித்து, நிழல் வெளிகளும், பிம்பங்களும் பூமியில் திட்டுத்திட்டாய்ப் பரவியிருந்தது. ஏரியின் நீரலைகள் அலையிடும் ஒலி இன்னும் தெளிவாகக் கேட்கிறது. நட்சத்திரங்களின் ஒளித்துணுக்குகள் வானத்தின் இடைவெளிகளின் வழி ஒளிர்கிறது. வானம் பலகோடித்துளைகள் கொண்ட சல்லாத்துணி போலவும், அதன் பின்புறம், அழியாத ஒளியினைக் கொண்ட ஒரு மாபெரும் வெளிச்சக் கோளம் , நிற்காமல் சுழன்று கொண்டிருப்பதைப் போலவும் தோன்றியது. ஜீசஸ் அந்த ஒளிர்வுகளினுள் இருந்து தனக்கு  எதாவது கேட்கிறதா என்று கவனித்தான். அவன் தன் செவிகளைக் கூர்மையாக்கிக் கொண்டு இன்னும் இன்னும் ஆழமாக அவ்வொளியினைத் தன்னுள் ஏற்றிக் கொண்டுப் பார்க்கிறான். ஆனால் ஏதுமில்லை. அவன் அந்த ஏதுமில்லாத ஒன்றிடம் ஒரு கேள்வி கேட்க முயல்கிறான். "தேவனே! நீர் என்னில் மகிழ்கிறீர்களா?" ஆனால் அவனுக்குக் கேட்கத் துணிவில்லை. இன்னும் நிறையக் கேள்விகள் கேட்பதற்கு அவனிடம் இருந்தன. ஆனால் அவன் எதையும் கேட்கத் துணியவில்லை. திடீரெனத் தன்னை அமிழ்த்துவது போல இதுவரை இல்லாதிருந்த ஒரு அடர் நிசப்தத்தை அச்சமயம் உணர்ந்தான். நிச்சயமாகக் கடவுள் என் மேல் அதிருப்தி அடைந்திருப்பார். அவனது தலை முதல் கால் வரை அதிர்ந்து கொண்டிருந்தன. ஆனால் நான் ஏன் என்னைக் குற்றம் சொல்ல வேண்டும்.  நான் எத்தனை முறை உன்னிடம் சொன்னேன். என்னால் பேச முடியாது ! என்னை விட்டு விடு! என்று. ஆனால் நீயே என்னைத் திரும்பத் திரும்ப உந்தித் தள்ளினாய். சிலசமயம் சிரித்தாய். சில சமயம் கோப வெறியில் கத்தினாய்; ஆனால் என்ன நடந்தது. என்னை அடுத்த மடாதிபதியாக ஆக்க இந்தத் துறவிகள் உறுதி பூண்டு, நான் தப்பித்துவிடாதவாறு அறையினுள் பூட்டி அடைத்து வைத்தனர். ஆனால் இன்று அதிகாலையில் என்ன நடந்தது. என்னை இங்கிருந்து வெளியேற்ற நீதான் அந்தச் சிறியக் கதவுகள் கொண்ட ரகசிய வழியை எனக்குக் காண்பித்தாய். பயந்துப் பின்வாங்கிய என்னை உன் கொடூரமானக் கூர் உகிர்களால் மூளைக் குழியினுள் பிறாண்டி, என்னைத் தப்பித்து ஓடக் கட்டளையிட்டாய். பின் இங்கே வரவழைத்து இந்த மகத்தான மனிதகுலத்திற்கு முன்னால் என்னை நிற்க வைத்தாய். "பேசு, பேசு!" என்று உந்தினாய். அந்தத் தருணத்திலும் நான் வாயை இறுக்கமூடி, என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக  நின்றேன். நீ கத்தினாய்! ஆனால் நான் பேசவில்லை. கடைசியில் பொறுமையிழந்து, நீ என்னைப் பிடித்து உலுக்கி உன் வார்த்தைகளால் என்னுள்  முடுக்கி,  என் வாயைத் திறக்க வைத்தாய். நான் இல்லை! நீ தான்! நீ தான் என்னைப் பேச வைத்தாய். உன்னுடைய வலிமையினால், உன் வார்த்தைகளால் என்னைக் காற்றினில் அலையும் சருகினைப் போல அலைக்கழித்தாய். நீ என்னில் தருவித்த அச்சொற்கள், ஒரு நெருப்பு போலக் கனலவில்லை, இதற்கு முந்தையத் தீர்க்கதரிசனங்களின் வழிகளிலிருந்து முற்றிலுமான ஒரு புது வழியினைப் பற்றி அதில் நீ அறிவித்தாய். அது அமிழ்தின், இனிப்பின், சுகந்தத்தின், மகிழ்வின், வற்றாத ஊற்றானப் பேரன்பின் பாதை. இறுதியாக நான் அதனைப் பேசினேன். ஆனால் என்னுள்ளம் பற்றி எரிந்தது, அச்சொற்கள் என்னை அழத் தூண்டின. அந்த ஒவ்வொரு கணத்திலும் நான் உன் சொற்களை மறுதலித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் என்னால் தடுக்க முடியவில்லை. நெருப்பே கடவுள்! தீர்க்கதரிசி யோவானின் சொற்படி தேவன் நெருப்பு வடிவானவன். மானுடத்தை எரித்து சுத்தப்படுத்துவதே சரியான வழி. அநீதியும், ஒழுக்கமின்மையும், வஞ்சகமும் கொண்டு இந்த பூமியை சூறையாடும் மானுடத்தை எரிப்பதை விட எது சிறந்த வழியாக இருக்கும். மானுடனே உன்னால் எங்கும் ஒளிந்து கொள்ள முடியாது. அவன் வந்து கொண்டிருக்கிறான். இதைத்தான், இதைத்தானே என் இருதயம் உரைப்பதற்காகக் கொளுந்து விட்டு எரிந்தது. ஆனால் நீ என் உதடுகளின் வழியே இம்மக்களுக்குக் கையளிக்க விளைவது தேன்!. ஆம்! நான் அழுது புலம்பியதற்குப் பதிலாக, உன்னிடமிருந்து வந்த சொல்லோ "அன்பு, அன்பு!"

"தேவனே! ஓ! என் தேவனே! என்னால் இனிமேலும் உன்னுடன் போராட முடியாது. நான் உன்னிடம் சரணடைகிறேன். உன் விருப்பமே நடக்கும். நீயே என் வழி! நீயே என் கதி!" ஜீசஸ் தனக்குள் உண்டாகியச் சொற்களின் குவியலைப் பொட்டலமாக்கித் தனக்குள்ளேயே எரித்து அழித்தான்.

    இதைச் சொல்லி முடித்ததும், அவன் எதிலிருந்தோ விடுபட்டதைப் போல உணர்ந்தான். தலையைக் கீழே மார்பை நோக்கித் தொங்க விட்டுக் கொண்டு மெதுவாக இழுத்து சுவாசித்தான். பார்ப்பதற்கு உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு சின்னஞ்சிறியப் பறவையைப் போல இருந்தது அவனது செய்கை. அப்படியே உட்கார்ந்த இடத்திலேயே கண்களை மூடி உறங்கிப் போனான். உச்சிவானில் நிலவு பிரகாசிக்கிறது அதன் வெண் ஒளியின் தண்மை அவனை அணைத்துப் போர்த்தியிருந்தது. உறங்கிக்கொண்டிருந்தவனின் இடது புறம், அவனின் நிழல், ஒளியின் அலைவுகளுக்கு ஏற்ப நெகிழ்கிறது. சற்றே அசைகிறது. நிழலினுள் அவன் தன் மேலங்கியினுள் இருந்து, ஒரு விதையைத் துழாவி எடுக்கிறான். அதனை மண்ணில் விதைத்து, நீரிட்டு வளரவிடுகிறான். சிறிது நேரத்தில் அவ்விதை பூமியைப் பிளந்து எம்பி, இலைத் துளிர்க்கிறது, கிளைகள் நாற்புறமும் விரிகின்றன, செடி, மரமாகிறது. கிளை நுனிகளிலெல்லாம் பழுத்துத் தொங்குகின்றன பல நூறு சிவப்பு ஆப்பிள் பழங்கள்...அவன் சற்றே அசைந்து திரும்பிப் படுத்தான். நிழல் மரங்கள் எல்லாம் காற்றில் கரைந்து தூசுத்துகள்களாகி, புழுதிபடலங்களாய் நிலம் விட்டு அகன்றது.

    சரளைக் கற்களை மிதித்து முன்னே வரும் காலடிச்சப்தம். ஜீசஸ் உறக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்து பார்த்தான். எதிரே ஒரு மனிதன் இருளினுள்ளிருந்து ஒளியை நோக்கி வந்து கொண்டிருந்தான். இனியும் நான் என் தனிமையைக் கட்டிக் கொண்டு அழவேண்டியதில்லை என நினைத்துக் கொண்டு சற்று ஆசுவாசமானான். அமைதியாக, எதுவும் பேசாமல் அம்மனிதனை வரவேற்கும் தொனியில் நிமிர்ந்து உட்கார்ந்தான்.

    அந்த இரவு வருகையாளன் நேராக அவன் முன் வந்து மண்டியிட்டான். "நீ பசியுடன் இருப்பாய் என்று தெரியும். நான் உனக்காக ரொட்டியும், தேனும், மீனும் கொண்டு வந்திருக்கிறேன்" 

"நீ யார்? சகோதரனே?"

"ஜோனாவின் மகன் ஆண்ட்ரூ"

    "எல்லோரும் என்னை இப்படியேக் கைவிட்டு சென்று விட்டனர். ஆமாம்! நான் மிகுந்த பசியுடன் இருந்தேன். எப்படி இது நடந்தது? எப்படி உனக்குத் தெரியும் சகோதரா? நான் இங்கேத் தனியாக, பசியோடு இருக்கிறேன் என்று. நீ எனக்காக உணவு எடுத்து வந்திருக்கிறாய். எல்லாத் தயவுகளும் கடவுளினால் நிகழும். அவனின் அன்பானச் சொற்களைத் தவிர நான் வேறு எதையும் கேட்க விரும்பவில்லை."

    "நான் அதையும் கூறத்தான் வந்திருக்கிறேன்" ஆண்ட்ரூ பதில் கூறினான். இருள் அவனுக்குக் கொஞ்சம் தைரியத்தைக் கொடுத்தது. அவனது நடுங்கும் கரங்களையோ, கன்னங்களிலிருந்து வழியும் வெம்மையானக் கண்ணீரையோ, ஜீசஸ் கவனிக்கவில்லை.

    "ஆம்! அது தான் முதலில், அந்தக் கருணை மிகுந்த இறைவனின் வார்த்தை" ஜீசஸ் அவனது கைகளைத் தன் கைகளுக்குள் ஒரு குஞ்சுப்பறவையைப் பொத்துவதைப் போலப் பொத்திக் கொண்டு கண்கள் விரிய, ஈறு தெரியப் புன்னகை செய்தான்.

"தேவதேவனே! என் அன்பான ஆசிரியனே!", என்று ஒரு மந்திரம் போல ரகசியமாக ஜீசஸுன் காதுகளில் கிசுகிசுத்து, சட்டென்றுக் குனிந்து, அவன் பாதங்களில் முத்தமிட்டான் ஆண்ட்ரூ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக