செவ்வாய், 1 மார்ச், 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -57

Author: Nikos Kazantzakis

    அவனது தீவிரமான நடுங்கும் குரலைக் கேட்டத் துறவி பயந்தேவிட்டார். உண்மையில் கடவுளின் பெயரை, ஒரு மனிதனின் குரலில் இத்தனை ஆழமானக் கார்வையில் அவர் கேட்டதே இல்லை.

    சற்று தன்னை நிதானித்துக் கொண்டவரைப் பார்த்து தொடர்ந்து பேசிய, மேரியின் மகன், தான் மடாதிபதியைப் பார்க்க வந்திருக்கிறேன் என்றான். 

    "ஒரு வேளை நீ அவரைப் பார்க்கலாம். ஆனால் அவரால் உன்னைக் காண முடியாது. அவரிடம் உனக்கு வேண்டியது என்ன." என்று கேட்டார்.

    "எனக்குத் தெரியாது, நான் ஒரு கனவு கண்டேன்....அதற்காக நாசரேத்திலிருந்து வருகிறேன்."

"கனவா!", அரைப்பைத்தியக்காரத்துறவி நகைத்தார்.

    "ஆம்! அது ஒரு பயங்கரக் கனவு!, அருளாளரே! அந்தக் கனவிற்குப் பின் எனக்கு ஊன், உறக்கமில்லை. முற்றிலுமாக நிம்மதியிழந்து விட்டேன். நமது அருட்தந்தை ஒரு புனிதர். பறவைகளின் மொழியும், கனவுகளின் மொழியும் கடவுள் அவர்க்குக் கற்பித்திருக்கிறார் என்று அறிந்தேன். அவரால் எனக்கு விளக்கமளிக்க முடியும் என்று நம்பினேன். அதனால் இங்கு வந்தேன்"

    உண்மையில் அவன் இம்மடாலயத்தினுள் நுழையும் வரைக்கூட அவனுக்குத் தான் சிலுவையைச் செய்து முடித்த அன்று இரவில் கண்டக் கனவைப் பற்றிய விளக்கத்தைக் கேட்க வேண்டும் என்ற எண்ணமில்லை. ஒரு ஊன் மிருகத்தின் துரத்தல் போல, அக்கனவில், செந்தாடிக்காரன் முன்னே வர, அவனைத் தொடர்ந்து அவனது படைகளான குள்ளர்கள், கைகளில் வதைக்கும் ஆயுதங்களுடன் துரத்திக் கொண்டு வருகின்றனர். இப்பொழுது, மடாலயத்தின் முற்றத்தில் காலடி எடுத்து வைக்கும் பொழுது ஒரு ஒளி மினுக்கம் போல அக்கனவு அவன் அகத்தைக் கிழித்து வெளிவந்தது.

    "ஆம்! அதற்காகத்தான். கடவுள் எனக்கானப் பாதையைக் காண்பிப்பதற்காகத் தான் சரியானத் தருணத்தில் இந்த ஞாபகத்தை ஏற்படுத்தினார். இந்தப் புனிதர் என் கனவின், புதிரின் சிக்கல்களை நிச்சயமாக விடுவிப்பார்" என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

    நமது அருட்தந்தை இறந்து கொண்டிருக்கிறார். நீ மிகவும் தாமதமாக வந்திருக்கிறாய் சகோதரா! திரும்பப் போ! என்று அந்தத் துறவி சொல்லுற்றார்.

    என்னை இங்கே வரச்சொல்லிக் கட்டளையிட்டிருப்பவர் கடவுள். அவர் தன் பிள்ளைகளிடம் புரளிகள் கூறுவதில்லை! என்று மேரியின் மகன் சீற்றத்துடன் பதிலுரைத்தான்.

    துறவி கையை வாயில் பொத்திக் கொண்டு கேலியாக சிரித்தார். அவர் கடவுளுக்காக ஒரு நல்ல ஒப்பந்ததத்தை தன் வாழ்நாள் முழுதும் செய்து கொண்டிருக்கிறார், அதனால் அவருக்கு கடவுளிடம் எந்த நம்பிக்கையுமில்லை.

    "அவனே பெரியவன், இல்லையா! அவன் தன் மண்டையில் என்னவெல்லாம் தோன்றுகிறதோ அதையெல்லாம் செய்வான். அவனால் அநீதிகளை இழைக்க முடியவில்லையெனில், அவன் எப்படி சர்வ வல்லமை படைத்தவனாவான்!" என்று சிரிப்பை அடக்காமல் சொல்லிக் கொண்டிருந்தார் துறவி.

    அவர், இளைஞனின் முதுகில் மெதுவாகத் தன் கைகளால் அடித்தார். பாசாங்கற்ற அடியாக அது இருந்தாலும், துறவியின் கைகள் வலுவாகவும், மரத்தும் இருந்ததால், மேரியின் மகன் சற்றுத் தடுமாறினான்.

    நல்லது! கவலைப்பாடாதே! உள்ளே செல்! நான் தான் இங்கு வரவேற்பாளன் என்றார், துறவி.

    அங்கிருந்து துறவிகள் தங்கும் இடம் நோக்கி நகர்ந்தனர். முற்றத்தில் காற்று சற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது. புழுதி கிளம்பியடித்து, அங்கே சிறிய புழுதிப்புயல் காற்றுடன் இணைந்து உருவாகியது. சூரிய ஒளியை மறைப்பது போல அது உருவாகிச் சுழற்றியடித்தது. சூழல் சற்று இருண்டத் தோற்றம் கொண்டது.

    வெளிமுற்றத்தின் நடுவில் ஒரு வறண்டக்கிணறு. சாதாரண சமயங்களில் கூட அதில் நீர் இருக்கும். ஆனால் இப்போது மண் மண்டிக் கிடக்கிறது. அதன் திண்டின் விளிம்பினில் இரு ஓணான்கள், அமைதியாக, அசைவற்று வெயிலை உடலில் ஏற்றிக் கொண்டிருந்தது.

    மடாதிபதியின் அறை திறந்தது. துறவி, இளைஞனின் கைகளைப் பிடித்துக் கொண்டு உள் நுழைந்தார். சற்றுப் பொறு! நம் சகோதரர்களிடம் நான் அனுமதி வாங்கிக் கொள்கிறேன். அதுவரை இங்கேயே நில்! என்று உள்ளே சென்றார்.

    அவன் தன் கைகளை மார்பிற்கு குறுக்காகக் கட்டிக் கொண்டு அமைதியுடன் நின்றிருந்தான். அருட்தந்தையைக் கிடத்தியிருக்கும் அறையின் வாசலில் இரு நாய்களும் கட்டப்பட்டிருந்தன. அது படிகளை முகர்ந்தும், அங்கும் இங்கும் நோட்டமிட்டுக் கொண்டு வாயைப் பிளந்து கொட்டாவி விட்டது. அதன் கூரியக் கோரைப்பல் வெளித்தெரிந்தது. பின் நின்ற இடத்திலேயேக் கால்களை மடக்கு, தலையைத் திருப்பி உடலில் அமர்த்திக் கண்கள் அயர்ந்தது.

    மடாதிபதியின் உடல், வாசலைப் பார்த்துக் கால்களை நீட்டிப் பாயில் கிடத்தப்பட்டிருந்தது. இருபுறமும் அவரது சீடத்துறவிகள், இரவெல்லாம் விழித்திருந்து அவரைக் கவனித்ததால்,  முற்றிலும் சோர்வுற்று, கண்கள் கிறங்க நின்று கொண்டிருந்தனர். நோய்வாய்ப்பட்டு நலிந்த அவரது உடல் வெளிச்சத்தில் தெளிவாகத் தெரிந்தது. திறந்திருந்த கண்களின் பார்வை வாசலை நோக்கி அலையாடியது. நிழலுருக்களாய் வெளிச்சம் அசையும் பொழுது முகம் கோணலாகி அதிர்வுற்றது. ஏழு நிலைகள் கொண்ட மெழுகு விளக்கில் மஞ்சள் ஒளி துடித்துக் கொண்டிருந்தது. அது அவரது தலைக்கு மேலே, ஒவ்வொரு உடல் அதிர்வுகளுக்கும் பதிலுரைப்பதைப் போல அசைந்து கொண்டிருந்தது. மன நிறைவற்றக் கலங்கலானக் கண்கள், கழுகின் அலகினைப் போல வளைந்திருந்த மூக்கு, நீலம் பாரித்த உதடுகள், தோள் வரை சரிந்து கிடந்த வெளுத்த நீண்ட நரை முடி, எலும்புகள் புடைத்த மார்பு என ஒரு அரைப்பிணம் போலத்தான் அவர் தரையில் கிடந்தார் துறவிகள் காய்ந்த ரோஜா இதழ்களை மண்ணால் செய்த தூபக்கல்லில் போட்டு எரித்து நறுமணப்புகையை அவரைச்சுற்றிப் பரப்பினர். அதன் புகைச்சுருள் அவரது உடலுக்கு மேலே சுருண்டு மேல்நோக்கிப் பறந்தது. நறுமணம் நாசிகளைத் துளைத்தும், அறையின் காற்றினை ஆக்கிரமித்தும் நிரம்பிக் கொண்டிருந்தது.

    உள்ளே வந்தத் துறவி, தான் எதற்காக வந்தோம் என்பதையே மறந்துத் தன் குருவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். 

    சூரியனின் நீண்ட ஒளிக்குழாய்கள் முற்றத்தைக் கடந்து, மடாதிபதியின் பாதங்களைத் தழிவித் தன் வெளிச்சத்தை அறையெங்கும் பரப்பிக் கொண்டிருந்தது. மேரியின் மகன் இன்னும் வெளியில்தான் காத்துக் கொண்டிருந்தான். நாய்கள் உசாவிக் கொள்ளும் முணகல் ஒலியும், தூரத்தில் தகரத்தை அறையும், இரும்புப்பட்டறையின் சத்தமும் தவிர்த்து எந்த ஒலிகளுமில்லை. 

    காத்திருந்து காத்திருந்து நாள் நகர்ந்து கொண்டே இருந்தது. அவர்கள் அவனது இருப்பையே மறந்து விட்டிருந்தனர். இரவு முழுதும் பனியின் சில்லிப்பில் பயணம் செய்து தளர்ந்து வந்தவனுக்கு, இங்கு இந்த உறைவிடத்தின் பாதையில் வெம்மை அளவாய் இருந்தது. சூரியனின் கதிர்கள் அவன் உடலைத் துளைக்கும் பொழுது அவனுக்கு சுகமாக இருந்தது.

    திடீரென அச்சூழலின் அமைதி நிலைகுலைந்தது. வெளியே கண்காணித்துக் கொண்டிருந்தத் துறவிக் கத்தும் சப்தம் பாறைகளுக்கிடையில் இருந்து வெளிவந்தது.

"அவர்கள் வருகிறார்கள்! அவர்கள் வருகிறார்கள்!"

    அருட்தந்தையின் அறையில் நின்று கொண்டிருந்த அத்தனைத் துறவிகளும் அவரைத் தனியே விட்டு விட்டு வெளியே ஓடினர்.

    உதறல் எடுத்தது போல, மேரியின் மகன் இரண்டு அடி எடுத்து முன்னே சென்றான். பின் கூச்சத்துடன் வாசலிலேயே நின்று உள்ளே எட்டிப் பார்த்தான். உள்ளே இருந்த அமைதி! மரணம், மரணமின்மைக்கிடையில் அலைந்து கொண்டிருந்தது. சூரிய ஒளியில் அவரின் வெளுத்தப்பாதங்கள் தெரிந்தன. ஒரு ஈச்சையின் ரீங்கரிப்பு உத்தரத்திலிருந்து கீழ் நோக்கிக் கேட்கிறது. அது விளக்கொளியால் ஈர்க்கப்பட்டு அதன் நிலைகளில் ஆடுகிறது. ஒன்றிலிருந்து ஒன்றாகச் சென்று தன் சிதைக்குழியை முயன்று தேடிக்கொண்டிருந்தது அது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக