Author: Nikos Kazantzakis
தொலைவில், நாசரேத் நகரில், ஜோசப்பின் மனைவி மேரி அவளது சிறியக் குடிலில் பொறுமையின்மையுடன் அமர்ந்திருந்தாள். குடிலில் ஒற்றை விளக்கு எரிந்து கொண்டிருந்தது. கதவுகள் திறந்து கிடந்தன. கைகளில் வைத்திருந்தக் கம்பளித்துணியில், பின்னல் வேலைப்பாடுகளை வேகமாக செய்து கொண்டிருந்தவளின் அகம் எங்கோ தூர நிலங்களில் திரிந்து கொண்டிருந்தது. மாக்தலாவில், கார்பெர்னத்தில், ஜென்னசரேட் ஏரிக்கரைகளில், அதைத்தாண்டிய பாலை நிலத்தில் என அலைந்து கொண்டிருந்தது. தன் மகனைத் தேடி கிராமங்களுக்குள் சென்று விசாரிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டவள், பின்னல் வேலையைப் பாதியில் நிறுத்தினாள். அவளால் தொடர்ந்து அதனைச் செய்ய முடியும் என்றுத் தோன்றவில்லை. தனிமையும், நம்பிக்கையின்மையும் அவளை வருத்தியது. கையிலிருந்த கம்பளித்துணியை எடுத்து வைத்தாள். அடிபட்ட இடத்திலேயே திரும்பத் திரும்ப ரணமாகிக் கொண்டிருந்தது அவளுக்கு. தன் மகன் திரும்பவும் தன்னை விட்டு எங்கோ போய்விட்டான். திரும்பவும் கடவுள் தன் நுகத்தடியில் அவன் கழுத்துகளை இறுக்கி விரட்டுகிறார். கொஞ்சமாவது அவனிடம் இரக்கம் காட்டக்கூடாதா? இல்லை. இந்தக் கடவுள் என்னிடம் தான் பரிதாபப்படப் போகிறாரா? நாங்கள் அப்படி என்னப் பாவம் செய்து விட்டோம்.! இதுதானா நீ எங்களுக்கு கையளித்த அன்பும், நம்பிக்கையும், மகிழ்ச்சியும்?
எதற்காக, ஜோசப்பை மலர்ச்சியுடன் என்னிடம் தருவித்தாய்? என்னை ஒரு இம்முதியவரைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினாய்? இடிமுழக்கங்களாக என் கருவறையில் இறங்கியவன் ஒரு பகற்கனவு காண்பவன், தூக்கத்தில் நடப்பவன். ஆம்! என் ஒரே மகன். உன் அருளாலும், கருணையினாலும் என்னுள்ளே உதித்தான். அவன் ஒரு துரதிஷ்டசாலி. நான் கருவுற்றிருந்த பொழுது ஒருக்கணம் கூட விடாமல் பெண்களும், குழந்தைகளும் என்னருகே இருந்து எனக்குப் பணிவிடைகள் செய்தனர்.
"மேரி, நீ பாக்கியவதி! பெண்களில் தலை சிறந்தவள். இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவள் என்று என்னிடம் சொன்னார்கள். நான் ஒரு பாதாம் மரம் தன் வேரிலிருந்து உச்சி வரைத் தன் உடல் முழுதும் பூக்கள் மொட்டவிழ்ந்து மலர்ந்து கிடக்குமே அது போல என்னுள் பூத்துக் குலுங்கினேன். என்னைக் கண்ணுற்றவர்களால் எளிதாகக் கடந்து செல்ல முடியாது. என் அருளின், கனிவின் பார்வையில் கட்டுண்டவர்களாக, என் குடில் வழியேக் கடக்கும் பெரியப் பெரிய வணிகர்கள் கூட, என்னை அணுகி, வணங்கி, என் மடியைப் பரிசுப் பொருட்களால் நிரப்பிச் சென்றனர். ஆனால் திடீரெனக் காற்று சுழன்றடித்தது. நான் வெறுங்கைகளுடன் நின்று கொண்டிருந்தேன். என் வறண்ட மார்பகங்களைப் பிடித்துக்கொண்டு நான் மட்டுமேயானத் தனிமையில் நின்று கொண்டிருக்கிறேன்.
இறைவா! நீ எனக்கு அனைத்தையும் தந்தாய். பின் அனைத்தையும் ஊதித்தள்ளினாய். என் மலரிதழ்கள் அனைத்தும் உதிர்ந்து ஒரு காய்ந்த மொட்டைக்காம்பாக மட்டுமே உன் முன்னே நிற்கிறேன். நான் திரும்பவும் நம்பிக்கைக் கொள்ள எந்த வாய்ப்புமே இல்லையா!
என் உள்ளம் அமைதியற்றிருக்கிறது. சிறிதளவு இருந்த நம்பிக்கைகள் கூட மறைந்துவிட்டிருந்தன. என்னால் நிலைவுற இருக்க முடியவில்லை. உடைந்த குப்பித்துண்டுகள் போல என் மகனைப் பற்றிய எண்ணங்கள் என்னைக் குதறுகின்றன.
முந்தைய நாள் காலையில், தன் அம்மாவிடம் சொன்ன படி, அவன் ஏரிக்கரையையும் தாண்டி பாலைவனத்தின், மலைக்குன்றில் சிவப்புக்குத்து பாறைகள் கொண்டப் பக்கவாட்டுப் பகுதியில் செருகியிருக்கும் மடாலயத்தினை நெருங்கி வந்து விட்டிருந்தான்.
"மடாலயத்தை நெருங்க நெருங்க, உள்ளூற பயம் ஏறுகிறது. மனம் நடுக்கம் கொள்கிறது. ஏன்! நான் சரியானப் பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறேனா? ஏன் நான் பின்வாங்க முயல்கிறேன். என் இதயம் ஒரு கண்ணாடிப் பிம்பம் போல பாளம் பாளமாக என்னை விரிசலாக்கிக் காட்டுகிறது. உன் வழி நடத்துதலிலேயே நான் இங்கு வந்து முட்டிக்கொண்டிருக்கிறேன். நீயே என்னை இந்தப் புனிதப்பாதைக்கு உட்படுத்தினாய். பின் ஏன் என் மனம் அலைக்கழிகிறது. பிறகு ஏன் உன் சமிஞ்சைகளை எனக்குத் தெரிவித்து என்னை ஆற்றுப்படுத்த மறுக்கிறாய்! தேவா!" மேரியின் மகனின் அகம் இன்னும் நிலைகொள்ளாது பிதற்றிக் கொண்டிருந்தது.
தூய வெள்ளை அங்கி அணிந்திருந்த இரு துறவிகள் வாசலை அணுகி, அருகிலிருந்த சற்று உயரமானக் குத்துப்பாறையைப் பிடித்து மேலே ஏறினர். கார்பெர்னம் இருக்கும் திசையை நோக்கிப் பார்வையை செலுத்தி உதட்டைச் சுழித்துக் கொண்டனர்.
ஏதும் ஆளரவம் தெரிகிறதா! அவர்களில் ஒருவர் கேட்டார். ஒரு அரைப்பைத்தியக்காரன் போல இருந்த அவரின் முகம் ஒடுங்கிச் சுருங்கியிருந்தது. கூன் விழுந்தது போல வளைந்திருந்தார். ஒட்டியிருந்த தேகத்தில் மயிர்ச்சுருள்கள் முளைத்திருந்தன. பெரிய உருளைக் கண்களும், தீர்க்கமான நெற்றியும், ஆட்டுத்தாடியும், குழிவிழுந்த கன்னங்களும் கொண்டிருந்த அம்மனிதன், நழுவித் தரையில் விழுந்து விடுவது போலக் குளிரில் நடுநடுங்கிக் கொண்டிருந்தார்.
"அவன் வருவதற்கு முன் அவர் இறந்துவிடுவார்," என்று பதற்றமுற்றார் இன்னொருத்தர். அவர் யானை போல பெருத்த உடலும், சுறாவைப் போலக் காதுவரைக் கிழிந்த வாயும் கொண்டிருந்தார்.
"நீங்கள் உள்ளே செல்லுங்கள்! ஜெரொபோம், நான் ஒட்டகம் வரும் வரை, இங்கிருந்துத் தொடர்ந்து கண்காணிக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டு அங்கேயே நின்று தூரத்தை வெறித்தார்.
சரி! நல்லது! நான் உள்ளே மரணித்துக் கொண்டிருக்கும் அவரைப் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிக்கொண்டுத் தன் நலிந்த உடலை, அவசர அவசரமாகத் திருப்பிக் கொண்டு உள்ளே போனார்.
மேரியின் மகன் எந்தத் தடையுமின்றி, மடாலயத்தின் பரந்து விரிந்த முற்றத்திற்கு வந்துவிட்டான். அவனது இருதயம், மணியின் நாக்கு போல அங்கும் இங்கும் அசைந்து கொண்டிருக்கிறது. உள்ளே போகலாமா வேண்டாமா! என்று ஒரு கணம் யோசித்தான். முற்றத்தைச் சுற்றி வட்டவடிவில் துறவிகளின் உறைவிடம் இருக்கிறது. தட்டையானக் கற்கள் பாவிய நடைப்பாதை செப்பனிடப்பட்டிருந்தது. சுற்றும் முற்றும் எந்தப் பசுமையுமில்லை. ஒரு பூவோ, ஒரு பறவையோ ஏதுமில்லை. முட்கள் கொண்ட பேரிக்காய்ச் செடிகள் மட்டும் அடர்ந்து வளர்ந்திருந்தது. இருளடைந்த பாழ்குழிகள் போல அறைகள். வட்ட வடிவ உறைவிடத்தில் அங்காங்கே பாறைகளைக் குடைந்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிதனிக் குகைகள் அமைத்திருந்தனர்.
இதுதானா சொர்க்கத்தின் ராஜ்ஜியம்? மேரியின் மகன் தனக்குளேயே கேட்டுக்கொண்டான். இங்குதான் மனிதர்கள் தங்கள் இதயங்களை எரித்து இறைவனுக்குச் சமர்ப்பித்து, ஞானமடைகின்றனரா!
அவன் அங்கும் இங்கும் அலைந்தான், பார்த்தான். ஆனால் முற்றத்தைத்தாண்டி அவனால் உள்ளே செல்ல முடியவில்லை. அங்கே வாசலில் இரு கருத்த வேட்டை நாய்கள்,தன் மூர்க்கமான கண்களுடன் கோரைப்பற்கள் தெரிய, குரைக்கத் தயாராகிக் கொண்டிருந்தது.
அந்த வளர்ச்சி குன்றிய, நலிந்த உடல் கொண்டத் துறவி, யாரோ ஒரு வருகையாளர் வந்திருப்பதைக் கவனித்து, நாய்களை அமைதி கொள்ளும்படி அதற்றினார். திரும்பிப்பார்த்து அவனை வரும்படி அழைத்தார். ஆராயும் தொனியில் அவன் உச்சி முதல் பாதம் வரைப் பார்வையால் அளந்தார். அவனது கண்களைக் கூர்ந்தவர், நாட் பட்டப் பழைய புண்ணைப் பார்ப்பதைப் போல, அதன் துன்பத்தை உணர்ந்தார். அவனது உடுதுணிகள் அழுக்கடைந்து, புழுதி படிந்திருந்தது. தலைக்குட்டையில் இன்னும் ரத்ததின் கோரை. கால்களில் வழியில் ஏதோ கற்கள் உராய்ந்திருக்க வேண்டும், முழங்காலில் பிளந்து ரத்தம் வடிந்து உறைந்திருந்தது. அவன் அதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வது போலத் தலை தாழ்த்தினான்.
உள்ளே வா! சகோதரா! எந்தக் காற்று உன்னை இழுத்து இந்தப் பாலை நிலத்திற்குள் தள்ளியது என்று கேட்டார்?
"கடவுள்" பதிலுரைத்த மேரியின் மகன் ஆழத்தினுள், கசக்கும் தன் குரலை உணர்ந்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக