வியாழன், 11 ஜனவரி, 2018

சுயம்


ஒரு பழைய வாடகை சைக்கிளின்
துருப்பிடித்த கேரியரில்
அழுந்தி இருக்கிறது,
நான் இதுவரை சேர்த்து வைத்திருக்கிற
என்னுடைய பெயரின் பாரம்.
ஒவ்வொரு முறை
என்னை அழைக்கும் போதும்
சைக்கிளின் உதிரிபாகங்கள்
இறைஞ்சி ஈனமெழுப்புகின்றன.
அங்கு என் பெயர்
உடைந்த ரிம்களுக்கிடையில்
அரைபட்டு அரைபட்டு
குருதி வழியச் சிதைகிறது.
பெயர் தான் இப்படியென்றால்,
புனைப்பெயர்கள்
சைக்கிளைத்துரத்தும் வெறி நாய்கள்.
பெயரில்லாமல் இருப்பது
உயிரற்றிருப்பது போலவா?
நான் பெயரல்ல என்பதை,
அவர்கள் எல்லோர் பெயர்களையும் கொண்டு
கூவிக் கூவிக்
கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறேன்.
இந்த் தெருமுக்கில்,
அந்த சாலை வளைவில்
என் கழிவறையில்
என் மதுக்கூடத்தில் என.
ஆனால்
நான் ஒரு பெயர் தான் என்று
மணிக்கட்டுகளில்
ஆணி அடித்து நிரூபிக்கத்துடிக்கிறது.
என் சொந்தப் பெயரின் பாரம்.
எங்குமே பயணம் செய்ய இயலாத,
பெடல்களுமில்லாத
இந்த சைக்கிளில்,

ஒரு அழுக்குத்துணியாய் பிதுங்கி விழிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக