சிக்னலிற்குள்ளிருக்கும்
பச்சை மனிதனை
நான் இப்பொழுது
நம்புவதில்லை
குமிழுக்குள்ளிருந்து
வெளி வந்தவன்,
என்னைப் பின் தொடர்ந்தான்.
இல்லை இல்லை!
அவனை நான் பின்
தொடர்ந்தேன்
சிவப்பு நிறம்
உருவாகிய
பழங்கதையை
ஒரு தெருப்பாடகன்
போல
அவன் பாடிக் கொண்டு
நகரத்தின் வீதியெங்கும்
அலைந்தான்.
சின்னஞ்சிறு நாய்க்குட்டியாய்,
அவனது இடை நில்லாப்
பாதங்களை
மோப்பம் பிடித்து
தொடர்ந்தேன்.
பாடலின் மகுடிச்
சுழலில்
நான் மூர்ச்சையுற்றதும்,
என் மூட்டையை அவிழ்த்தான்.
அதுவரை நகராமல்
நின்றிருந்த ஜனங்கள்
என் தலையைச் சவட்டிப்
பிதுக்கி நகர்ந்தனர்.
அவன் அந்த சிறியக்
குமிழுக்குள்
சாவகாசமாய் நடந்து
கொண்டே இருந்தான்.
நான் மட்டும் தான்
இந்த சாலையின்
இக்கரையில் நொதிக்கிறேனா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக