வியாழன், 11 ஜனவரி, 2018

90 களின்

இது வரை உள்ள பழக்கங்கள்
நாடார்கடை பழக்குலை போலத்
தொங்கிக் கொண்டிருக்கிறது கண்முன்னே.
பூசனம் பிடித்த சர்பத் குவளைகளில்,
பிள்ளைப் பிராயங்களின் நினைவுகள்
மண்பானைத் தண்ணீர் போன்ற தணுப்புடன்
அடி மண்டுகிறது.
பாக்குவெட்டித் திருகல்களிலும்,
கணேஷ் போயிலைகளின் உதிரி மணத்திலும்
சொக்கலால் வகையறாக்களிலும்
குத்திட்டு படர்கிறது,
பட்டணம் பொடியாய் நாசி நிறைக்கும்
பதின்மத்தின் பழுத்த சூடு.
இன்று சீ ப்ரீசுகளிலும், லா-மார்டின்களிலும்,
இன்னும் பெயர் தெரியவே வழியில்லாத
சாக்கடைத் திரவங்களிலும்
ஒரு பசலை அடர்ந்த அடிமனம்
தன்னிடமிருந்து பிடுங்கப்பட்ட
உவகையின் துணுக்கை,
சுரண்டல் லாட்டரியைப் போல
நகக்கண்களில் ரத்தம் கட்ட
பிறாண்டிக் கொண்டே இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக