தனக்குக் கீழ்
சுருங்கும் சிறிய உலகத்தில்
மனிதர்கள் வாழ்வதை
(?)
தன் தன்னந்தனிமையைக்
கொண்டு கண்காணிக்கிறது
மிக உயர காங்கிரீட்
மரம்.
தன் நகராத் தன்மையினால்
உண்டாக்கிய
மாபெரும் நிழலை,
புறாக்களுக்கு
இரை தூவும் லாவகத்தில் இறைகிறது
நகர் முழுமைக்கும்.
எளிதில் அண்டவிடாத
அதன் எல்லை விளிம்பில்
மானுடம் கொணர்ந்த
பலிச்சோறின் ஊசல்
மணம்.
புற்றுகளுக்குள்ளிலிருந்து
அரவங்கள்,
ஒளி நெளிந்து
ஒவ்வொருவர் உடல்களாய்
சுருட்டிச் சுருட்டி
விழுங்கத் தொடங்குகிறது.
பத்திலிருந்து
ஒன்றிற்கு நகரும் வெண்திரவப் பளபளப்பு
நின்றதும்
நகரின் இருள் முக்குகளைத்தான்
தேடினேன்
எங்கேனும் எனக்கான
வருடத்தொடக்கத்தை
இந்த தனிமையை ஒதுக்கி
சுகித்து விடக்கூடாதா!
தனிமை மிக உயரத்தில்
இருப்பதனாலேயே,
என்னை என்னால்
அதில்
மறைத்துக் கொள்ளவும்
முடியவில்லை.
இன்னொரு நாளும்
தொடங்கி விட்டது.
அதன் நிழலின் அடியிலேயே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக