வியாழன், 11 ஜனவரி, 2018

கழிவிறக்கம்

ஒரு உக்கிரமான நாள்,
ஆரம்பித்த உடனேயே தெரிந்து விடுகிறது.
அதை சிசிபசின் பாறைக்குண்டாக
சுமக்க பிரயத்தனமாகிறேன்.
வசைகளுக்கேயான இச்சை
நாவில் ஊறுகிறது.
எண்ணம் குறுகிய அவயான் பொந்தாகிப்
பறண்டுகிறது.
அழைப்புகளில்
எதிராளியின் பல் பிடுங்கும் சூட்சுமம்
எளிதில் கைக் கூடிகிறது.
பசி ஒரு வேட்டை மிருகத்தின் லாவகத்துடன்
கோரைப்பற்கள் காட்டுகிறது.
பலியும்,
பலிகொள்ளும் மிருகமும்
நகரும், நகராப் படிக்கட்டுகளைப் போல.
அதன் இடைவெளிகளில்
சற்று ஆசுவாசத்துடன் அமர்கையில்
ரேடியம் பந்தாய் நிலையற்ற சாட்டம்.
திரும்பத் திரும்ப
எக்காளமிடும்
அன்றைய நாளின்
கடிகார முட்களின் மீத நகரல்.
மூத்திரம் கழித்து மஞ்சள் திப்பிகளால்
பரிசுத்தமான வெண்ணிறத்தைக் கோழையாக்கிக்
காண்கையில்,
ஒரு உக்கிரமான நாள் முடிவது எத்தனை ஆனந்தம்.
உலகம் எவ்வளவு ரம்மியமானதும் அழகானதும் கூட.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக