ஞாயிறு, 28 ஜனவரி, 2018

பசி

தொடங்கியதும் பாழ் நிலவிரிவிலிருந்தேன்.
ஜன்னல்களில் துலக்கமாகியது
ஒரு நீள் வட்டப் பாதை.
மணல் திட்டுகளிலிருந்து கிளம்பும்
ஒலி நாக்குகளின் சீழ்க்கைகள்.
வழித்தடாகங்களில்,
கானல் பிம்பங்களின்
சதுப்புப் புதைவிற்கிடையில்
நெளிந்து நீளும் மென்மயிர் நெடுஞ்சாலை.
பதித்து பதித்து நகர்த்தப்படுகிறேன்.
திருப்பங்களிலெல்லாம்
முன்வரையறை இன்மையின்
நீண்ட பதற்றத்தின் நிறுத்தக் குறி.
நிறுத்தங்களிலெல்லாம்
மாறிப் போன பாதைத் தடங்களின் வெடித்த பீடம்.
பீடங்களிளெல்லாம்
தலைதிருகிய சேவல்களின் கேவல்கள்.
தேடித் தேடி வந்தடைந்த இறுதித்திறப்பில்
வற்றிய நீர்க்குளத்தின் பொருக்குகள்.
கரை படர்ந்த உடை முட்களில்
சொட்டச் சொட்டக் காத்திருந்தது,
எனக்கான குருதி.
தொடங்கியது என்றும் முடிந்தது என்றும்     
வெறுமனே சொல்லிக் கொள்கிறேன்.
வெட்டுண்டு
தலை தாழ்த்திக் கிடக்கிறது என் பசி
தன் குரலுடனும் நிழலுடனும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக