வியாழன், 11 ஜனவரி, 2018

கலைதல்


ஒரு நாளை
எங்கிருந்து துவக்குகிறேன்.
பதற்றத்தின் நுனியை
மெல்ல மெல்ல
கடைவாயின் அதக்கிலிருந்து
விடுவிக்கிறேன்.
மௌன இருளின் மந்திர உச்சாடனம்.
கொசுக்களின் ரீங்காரம்
அர்த்தமற்ற துண்டுக் காட்சிகள்
அங்கு
ஒளிக்கு சலங்கை ஒலி
ஒலிக்கு தாளிக்கும் மணம்
ஜன்னல் வழி, கீற்றின் ஸ்பரிசம்
சூடான இறைச்சி மிருது
கண்கள் திறந்ததும் உடல் கனம் கூடுகிறது
உத்திரத்து வெண்மேகங்களினுள்
குளத்து மீன்களின்
பல ஜோடிக் கண்களின் திரையாடல்.
சுழலும் வானம்
மின் விசிறியின் அடிவயிற்றுச் சூட்டில்
போர்வை ஓடு உதிர பிளந்தெழுகிறது.
உடைந்து கொண்டே இருக்கும்
பென்சில் முனைகளால்
விடுபட்டு தொடர்பின்றி உருவெடுக்கிறது
அந்த நாள்.
மறுபடியும் முதலிலிருந்து தொடங்க முடியாதோ!
ஒரு பெரியத் தாய் மிருகத்தின்
கனலும் நாக்காய்
நக்கு நக்கித் துயில் கலைக்கிறது.
அறைக் கடிகாரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக