வியாழன், 11 ஜனவரி, 2018

மன்றாட்டு

அளவற்றதை
நாம் தூக்கி சுமக்கத் தொடங்கியவுடன்,
அளவுகளின் விகிதங்களைக்
கணக்கிடுகிறோம்.
அதுவரை இல்லாத பூதாகரமான
சமன்பாடுகளையும் காரணங்களையும் கொண்டு
அளவுகளை உருப்பெருக்கி
ராட்சசத் தோற்றம் கொள்ள வைக்கிறோம்.
சுமையினை மென்மேலும் உண்டாக்கி
பரிதாபத்தின் பிடரியை
வருடி வருடி
உருவாக்கும் மொண்ணை முகங்களில்
அளவுகள்            
வீக்கங்களாய் குமிழியிட்டுக் கொள்கின்றன.
அதனை எதிர்பார்த்தது போல
அளவற்றதுகளின் பாரங்கள்
தங்களுக்குள்ளேயே
இருப்பை பற்றிக் கொள்ளும் வெறியால்
முனையிட்டு
அளவுகளிடம் மன்றாடுகின்றன.
அளவுகள்
நாய்களுக்கு இரை போடும் ரசிப்பில்
தந்திரமாக இளித்துக் கொள்ளும் பொழுது
அளவற்றது
மலக்குழியில் விழுந்து
தற்கொலை செய்வதை
நான் பார்த்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக