புதன், 17 ஜனவரி, 2018

புத்தம்

எங்கிருந்து துவக்க என்பதை
அறியாது நின்றிருந்தது,
மரக்கிளையில் மகரந்தங்கள்.
அந்தியின் விரல்கள்,
கிளைக்கூந்தல் கோதி அவிழ்த்து
தன் பொன்னிற உள்ளங்கையில்
மிகப்பத்திரமாக அதனை சேமித்துக் கொண்டது
இரவு, தன் கனத்த அடிவயிற்றைத்
தடவித் தடவிக் கோர்த்த சூல் விதைகள், 
பூரிப்புடன் காத்திருக்கின்றன.
துவக்கத்தின் பதற்றம் தொலைந்து மரம்,
சூழ் கொள்ளும் உஷ்ணத்தை
மிகப்பாதுகாப்பாய்
உதிர்க்க உதிர்க்க
துளிகளும் துளித்துளிகளும்
உருத்திரண்டு
விடிய முயல்கிறது.
விடியல் தன் நடுங்கும் கரங்களால்
குமிழிகளாய்
ஒவ்வோர் இலை நுனிகளையும்
பற்றிக் கொள்கிறது.
தனித்த மரம் 
யாவர்க்குமாய் பகிர்ந்து கொண்டிருந்தது
அந்த
புத்தம் புது அதிகாலையை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக