வியாழன், 11 ஜனவரி, 2018

தா!

ஒரு காலி மதுப்புட்டியை
எப்போதும் என்னுடன் வைத்துக் கொள்ள
அனுமதிக்க வேண்டும்.
நான் அதனை வைத்து கப்பல்களும் கடல்களும் செய்து கொள்வேன்.
அணுக்கமான இணை உடலை உருவாக்கிக் கொள்வேன்.
அவசரமின்மையின் ஆழ்ந்த லயிப்பையும்
அதன் வெறுமையினையும்
கண்ணாடிப் பேளைக்குல் ஊற்றி
நிரப்பிக் கொள்வேன்.
அவமானங்களின் நகங்களை
அதில் வளர விட்டு
ஆசை தீரக் கடித்துத் துப்புவேன்.
உரையாட முடியாத,
விரும்பாத சொற்களைத் தேக்கி வைத்து
வாந்தி எடுக்கும்
பழக்கத்தை விட்டொழிப்பேன்.
உன்னைக் காதலிக்கிறேன் என்றும்
வெறுக்கிறேன் என்றும்
சொல்வதை
முடிந்த வரை ஒத்திப் போடுவேன்.
ஆனால் காலிக்குப்பியையே தா!
இல்லையேல்                         
எதற்கும் நான் பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக