வியாழன், 11 ஜனவரி, 2018

கனவு அல்ல கனவு


நீள் வட்டப்பரப்பாய் தார் ரோடு, குளத்தைச்சுற்றி வளையமாய் சுற்றிச் செல்கிறது.இரவில் சந்திர கிரகணம் போல தெருவிளக்கின் வெளிச்சத்தில் கருமை படிந்த வட்டக் கோளத்தை சூழ்ந்து சாலை ஊர்ந்து கொண்டிருக்கும். அது பிரிந்து மலையை நோக்கி செல்லும் இலந்தையடி விளையைத் தாண்டி கட்டங்களாய் குத்தி நிற்கும் காங்கிரீட் குப்பை வீடுகள் உள்ள ஊருக்குள் புகுந்து தென்னந்தோப்புகளில் மண் பாதையாக, கால்தடங்கள் பதிய உருமாறியிருக்கும். அங்கு தோப்புகளுக்குள் பட்டி அடித்த தரைகளில் உருளை உருளைகளாக அளவிட்ட புழுக்கைகளுக்குள் ஆடுகள் உவர்க்கும் வாடையுடன் தங்களுக்குள் சதா ரகசியங்கள் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும். அந்த இரவில் சுவர்க்கோழிகளின் மென் சலனிக்கும் குரல் மட்டுமே சூழ்ந்த சாலையில் இருபுறமும் வெட்டையான வயல்களின் ஊடே நடந்து வந்து கொண்டிருந்தேன். குளத்தினருகில் சப்பாத்துப் படித்துறையில் தீராத அலையடிப்பில் போத்தலொன்று கடக்க இயலாத குப்பிச்சத்தத்தை படிக்கல்லில் இடித்து இடித்து முணங்கியது.
மறுகரையில் ஆலமர விழுதுகள் குளத்தில் முடிச்சிட்டிருந்தது. வேர் முண்டுகள் நிலத்திலிருந்து வெடித்தெழுந்த மனிதப் பிரேதம் போல பாதி முங்கியும் மீதி தெறித்து வெளியிலும் நெம்பி இருந்தது. மரம் இரவைத் தவிர்க்க எண்ணியது போல நீர்ப்பரப்பில் எதிரொளிக்கும் தன் பிம்பத்தை தானே விழுங்க இலைகளடர்ந்த கிளைகளைத் துழாவித் துழாவி தன்னுள் அதை உட்கிரகித்தது. குளத்தினுள்ளுள் இருந்து இன்னொரு மரம் எழுந்து ஸ்தூலமான அதன் கருங்குழிகள் பொதிந்த மேற்தோலை உரசிக் கொண்டிருந்தது. மிணுங்கும் சாரைப்பாம்பு இதற்கு சம்பந்தமில்லாதது போல அதன் அடிவாரப் பொந்தில் சுருண்டு அயர்ந்திருந்தது. அதன் உரிந்த தோல் பிளாஸ்டிக் கவர் போல கரையில் கொவுர, அடுத்த சலனத்தில் அது முழுக்கடித்து மறைந்தது.
நான் படித்துறை மதிலில் அமர்ந்து கொண்டு அனிச்சையாக என்னுள் ஊடுருவும் ஒரு அன்னியக் குரலை கூர்ந்திருந்தேன். மிகப்பரிச்சயமான குரல். ஆனால் வெகுநாள் நான் தவறவிட்டிருந்தது. திரும்ப கிரகிக்க முயல்கையில் அது வீரியமிழந்து அதன் கார்வை மென் மலைச்சுனையில் பாறைப்பொந்துகளுக்கிடையில் ஊடுருவும் நதியின் த்வனியாய் ஆழத்தில் தடம் பதிந்தது. அக்கரை வெகு தூரத்திலும் அருகிலுமாக சுருங்கி விரிந்து காட்சி பிறழ்ந்தது. கண்டறிய எத்தனிக்க, குரல் குரல்களாய் மாறி அது தனித்தனி உருவங்களாய் குளத்தின் கரையை சுற்றி வடிவிலியாய் இருளுக்குள் அமிழ்ந்து பின் எழுந்து கொண்டிருந்தது. ஒரு ஓற்றைக் கண் என் தலைக்கு மேல் நின்று உற்று நோக்கிக் கொண்டிருந்தது. அண்ணாந்து பார்க்க துணியவில்லை. பெரிய கருப்பு ஓநாயைப் போல அது இருந்ததை பிறகுதான் நான் உணர்ந்து கொண்டேன். திரும்பி விடலாம், இந்த அமானுஷ்ய உருவங்கள் தங்களுக்குள் ஓயாது கதைத்துக் கொண்டிருந்தது. ஆனால் அதன் மொழி எனக்கு தெரியவில்லை. ஆனால் அதன் இசைவில் என் குரலின் வெவ்வேறு மங்கலான அதிர்வுகளின் கண்ணிகளின் வழி அதை நான் உணர முடிந்தது. அவைகள் பேசிக் கொண்டிருக்கவில்லை. அது ஒரு பாடலாக இருந்தது. ஒரு பெண் குரலைப் போலவும். நான் அந்த பாட்டைப்பாட ஆரம்பித்தேன் பெண் குரலில்.
“சிமிழிக்குள் அடைத்தாலும், சிவனறியா மாயமுண்டோ
அறைக்குள்ளே அடைத்தாலும் அரனறியா மாயமுண்டோ” என்று அந்த பகவானும்…என்று அந்த பகவானும்!

காட்சி மங்கியது. விடுமாடன் கொடையில், மஞ்சனை அவிய, என் கழுத்தறுபடுகிறது. மெல்ல ஒருக் கூரிய கத்தி குரல்வளைக் கீழ் நெளிவிலுள்ள தென்னிய நரம்பை மட்டும் துண்டாக்க, குருதி பீய்ச்சுகிறது. ஆனால் அது ஒரு பெரும் பள்ளத்தில் நிதானமின்றி நிரம்பி வழிந்து கொண்டே இருக்கிறது. என் முகம் முழுதும் மரப்பல்லிகள். எந்த எதிர்வினையுமில்லாது அதை நானே பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதன் அடித்தோலின் வெண்மையில் பச்சை நரம்புகளும், பக்கவாட்டில் நெளியும் வால்களுமாக மரத்திலிருந்து என் மேல் விழுந்து கொண்டே இருந்தது. சட்டென்று தலையை உதர, திரும்பவும் பாடல் சன்னமாக ஒலிக்கத் தொடங்கியது.
இந்த முறை என் வீட்டில் நான் படுத்துக் கிடந்தேன். என் அறைக் கதவிடுக்கில் ஒரு நீள் மூக்குள்ள மனிதன் அழைத்துக் கொண்டிருந்தான். ஒட்டிய கன்னங்களும், கிழிந்த வாயும், மயிரே இல்லாத உடலுமாக. ஆம் அவன் அம்மணமாக இருந்தான். ஆனால் அவனுக்கு குறி இல்லை. அதைத் தான் நான் முதலில் கவனித்தேன். துணிக்கடை பொம்மை போல சற்றே வீங்கியிருந்தது அங்கு. இதற்கு முன் நான் அவனை பார்த்தது அந்தக் குளத்துக்கரையில் தான். இல்லை அது அவனல்ல. அதே போல மூக்கு உள்ள நாரை. அந்த நாரையின் முகத் தோற்றம் தான் இவனுக்கும். ஆனால் அந்த உடல், அதன் உட்குழிவுகள், கூன் விழுந்த முதுகு என்று அவன் பார்க்க தட்சிணாமூர்த்தி கிழவனின் சாயல். கிறுக்கனாகி ஆள்காட்டி விரலைத் தூண்டி சுட்டிக் கொண்டே, அக்குளில் ஒரு அழுக்குத் துணியை அதக்கிக் கொண்டு கெட்டவார்த்தைகள் உதிர்த்து திரிபவன். அம்மணமாக மட்டுமில்லை, சிறு கோவணம் போல துணி இறுக்கி விட்டிருந்தார்கள் யாரோ. போன தீபாவளி நாளன்று ஒழுகினசேரி தண்டவாளத்தில் சிதைந்து கிடந்த அந்த உடல் இன்னும் கபாலத்தின் அதிர்விலிருந்து அகலவில்லை. உணர்ந்ததும் குறுக்கில் ஊசி நுழைந்தது போல திடுக்கிட்டேன். ஆனால் அவன் அழைக்கவில்லை, எப்பொழுதும் போல பிளாஸ்டிக் குவளையில் டீ கேட்டு மஞ்சள் பற்கள் விரிய, கருத்த சுண்டுகளை வலிக்க விரித்து இளித்தான்.
படியில் விதிர்த்தலையும் பாசிகள், எதையோ பற்றிக்கொள்ளத்துடிக்கும் வலையைப் போல ஓயாது ஒழுக்கின் அசைதலுக்கேற்ப நழுவிக் கொண்டிருந்தது. உருவமிழந்து விட்ட குரல்கள், இப்பொழுது சலசலப்பாய் தூரத்தில் ஓடிக் கொண்டிருந்தது. வாய்க்காலுக்கு திறந்து விட்ட மதகின் வழியே சதுப்பாய் நகர்ந்தது குளம். அது ஒரு நதியாக ஆகிவிட்ட பெருமிதம் தொனிக்க குதூகலித்தது. அகப்பட்டிருந்த எல்லைகள் உடைந்து பீறிடும் அந்த துமியில் குளைகள் அகப்பட்டு மட்டுப்படுத்தியது. ஆலமரத்தின் நிழல் கூந்தல் விரித்துக் கிடந்தது குளம் முழுமைக்கும். அதன் பின் பக்க பீடத்தில் தான் மாடனும் மாடத்தியும் குந்தியிருந்து ஊர்ப்பாடு பேசுவார்கள். அன்று என்னைப் பிள்ளையார் துரத்திய கதையைப் பற்றித்தான் கேலி செய்து கொண்டிருந்தனர். அவர்களின் இருப்பை நான் இங்கிருந்தே உணர்ந்து கொண்டிருந்தேன். மனிதக் குரல் போல அல்ல. அது கோட்டான்களின் விழி போலவும், அகவலும், கீரிச்சிடலாகவும் இருந்தது. ஆனால் அவர்கள் என்னைப்பற்றிப் பேசுவது எனக்கு விருப்பமில்லை. அதுவும் பிள்ளையார் துரத்தத் துரத்த நான் இந்தக் குளத்தைத் தான் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தேன். அவருக்கும் உடலில் மயிரே இல்லை. ஏதோ சதுர்த்தி விழாவிலிருந்து திடுதிப்பென எழுந்து வந்த பொம்மை தான். ஆனால் அதன் கண்கள் உயிருள்ள யானைக் கண்கள். மழுங்கிய சிவந்த பிளாஸ்டிக் கொம்புகள். தொப்பை அலங்கவே இல்லை. அங்கவஸ்திரம் கீழே விழும் போதெல்லாம் பிடிக்காமல் வழுகி விழுந்து எழுந்து வந்து துரத்தி வருகிறது. சட்டென நின்று விட்டேன். அவரும். ஆனால் மாடத்தி இதைப் பார்த்து விட்டாள். அவள் நளியாக ஏதோ குசுகுசுத்தாள். ஏன் என்று அப்போதுதான் புரிந்தது. நான் எதுவும் அணிந்திருக்கவில்லை. பத்தாதற்கு நான் நின்ற இடத்தில் முன் பின் தெரியாத ஒரு பேரிளம் பெண் என் குறியை உறிஞ்சி வாய்ப்புணர்ச்சி செய்து கொண்டிருக்கிறாள். அவள் உடையணிந்திருந்தாள். போர்வையை உடலில் சுற்றி வைத்திருந்தாள். தலைக்குக் கீழ் உடலெனும் ஒன்றிருப்பதாகத் தெரியவில்லை.
திரும்ப அந்தப் பாடலின், கதை வந்து பிரக்ஞையில் துளைத்தது. மதலை, வெறும் சதைப் பிண்டமாக, அம்மிக்குழவி போல உருளும் மாயாண்டி சுடலை ஈசன். அவனுக்கு கண் காது உருவங்களை ஈசன் வரைந்து உயிர்ப்பித்து அம்மையிடம் கொடுக்கிறார். அவன் தினமும் பூலோகத்தில் புகுந்து பிணம் தின்று வருகிறான். பிண நாற்றம் அடிப்பத்தை அறியும் அம்மை, தேவனிடம் செல்கிறாள். அவன் பூலோகத்திற்கே அவனை அனுப்பிக் சுடலையின் காவல் தெய்வமாக ஆக்குகிறான். மெல்ல ஒரு நீர்க்கோழி கழுத்து நீட்டி அலையெழுப்பி முழுகியது. நான் தணுப்பு தாங்காமல் விரைத்து, போர்வையை முகம் வரை மூடிப் புரண்டேன்.
ஹிட்லர் தனது கழிவறையில் விக்கித்து அழுது கொண்டிருந்தான். இதுவரையில் இரண்டு லட்சம் உயிர்களாவது பலி கொடுக்கப்பட்டிருக்கும். தனிமையில் புலம்பி அழுது கொண்டே கழிவறைக் கிண்ணத்தில் முக்கிக் கொண்டிருந்தான். அந்தக் கிண்ணம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. மலம் தூறலாய் பூமியெங்கும் விழுந்து கொண்டிருந்தது.
அவன் அறத்தினை எண்ணி அழுதிருப்பான் என்றான் தம்பி.
அப்படி ஒன்று இருக்கிறதா? இது நான்
பிறகு ஏன் அவன் அழ வேண்டும்.
அவன் வேறொன்றை நினைத்திருப்பான். தோல்வியுற்றவனாக ஆவதை அவன் உணர்ந்திருக்கக்கூடும். அவன் சாத்தானக்கப்படுதலை அவன் தெரியாமலா இருப்பான். அவன் அழுதது, தன் முன்னாலேயே தன் கோபுரங்கள் குப்புற விழுவதால் தான்.
இல்லை. அவன் பாவமன்னிப்பு கேட்க நினைத்திருப்பான். உயிர்கள் சாவதை அவன் தன் சாவை எதிர் நோக்கும் போது உணராமலா இருப்பான் என்றான்.
அதற்கு சாத்தியமே இல்லை. அவன் வெற்றியடைந்திருந்தால் இன்று இந்த சாவுகள் பற்றி உலகம் அறிந்திருக்கவே செய்யாது.
ஆம். ஆனால் அவன் தோல்வியுற்றது அறத்தின் பால் நம்பிக்கை கொள்ள வைக்கிறது.
என்ன நம்பிக்கை. அதில் என்ன உண்டு. கடவுள், கிறுஸ்து என்று சொல்லித்தானே யுதர்களைக் கொன்றார்கள் சாமன்ய மக்கள். மக்களுக்கு எந்தக்கருத்தியலும் கிடையாது. அவர்கள் பிம்பங்களின் மேல் தான் சரணடைவர். தனித்தனி மனிதர்களாக உள்ள விழுமியம். கூட்டத்தில் நிச்சயம் கிடையாது. அவன் மகா சல்லிப்பயல்தான்.
எனக்கு இன்னும் புரியாதது. அவன் அழுதது அவனுடைய மரணத்தை நினைத்துதான் என்றால், இத்தனை பிரேதங்களைப் பார்த்தும் அவனுக்கு அது தெரியாதது எப்படி. இத்தனைக் கொலைகளிலும் அவன் அறிந்தது அதிகாரத்தை விளைவது தானே. அது மனிதனை விடப் பெரிது.
ஆம். ஆனால் நான் அவனை நம்பவே விளைகிறேன். அவன் மனிதன் எனும் சாத்தியத்தில் இருக்கிறான்.
என்ன? மனிதன் வெற்றுக் கூடு.
இல்லை. அவன் ஒரு சோதனைப்பொருளாய் இருக்கிறான். அறியா சக்திகளின் முன்.
ஆமா! ஆமா! சக்திகள். அவனது மலம் உலகம் முழுதும் விதையெழுப்பியிருப்பதை நீ இன்று மறுக்க முடியுமா என்ன? அவனே அதற்கு முன் விழுந்த மலங்களின் எச்சம் தானே.
ஏன் இல்லை. நாம் கூட அதன் எச்சத்தின் சிறு துளியை சுவீகரித்துக் கொண்டிருக்கிறோம் அல்லவா!
இன்னும் மானுட அறம் என நீ சொல்வது எனக்கு விளங்கவில்லை.
தாயோளி! அத எங்கயோ மரபிலிருந்து எடுத்து சொல்லிட்டிருக்கோம் நிதர்சனத்துல நாய் மாறி ரோட்டுல சதைஞ்சு கெடக்குற மனுச உயிருக்கு யாரும் வந்து அறம் செய்யப்போறதில்லைலா!
தெரியவில்லை. ஆனால் என்னை நான் மாற்ற முடியும்னு நம்பிக்கைல நான் சொல்றேன்.
முடியாது. அறம்னு ஒன்னு நாம நமக்காக உருவாக்கி வச்சிறுக்கிற ஒன்னுதானே.
எதிர்மறையா யோசிச்சு பாரேன். அறம்னுஒன்னு இல்லைனா?
இல்லைனா என்ன? உன் பிள்ளைய உன் கண்ணு முன்னால உரிச்சு ஓப்பான்.
ஆமா! மனுசன் அத செய்யத்தானே விதிக்கப்பட்டிருக்கான். இல்லை இதை செய்யவும் தானா?
அவன் அழுதது அவன் சாவுக்குத்தான்னு சொல்றேன்.
இல்லை. அவன் அழுதது சாவுக்கு அதுக்க முன்னால, எல்லாம் புளிஞ்சு சக்கையா மனுசன் விடப்படதுனால.
அப்பம், அறங்றது…
சாளைப் புளிமொளம். போடா டேய்.

பதிலில்லாது அந்த அரூபக்குரல்கள் எதிர்க்கரையின் எருக்கஞ்செடிகளுக்கிடையில் சிக்கி என்னை விளித்துக் கொண்டிருந்தது. விடுமாடன் பீடத்தினருகியில் பழையாற்றுக்கு செல்லும் சாக்கடை நெளிந்து சென்று கொண்டிருந்தது. கதைகளின் மென் பொதியை அவிழ்த்து படிகளில் கவிழ்த்துக் கொண்டிருந்தேன். புளிப்பின் மதுரம் தேகமெங்கும் பரவி உருக ஆரம்பித்தது. நான் பிறளும் முன், அதை பார்த்தேன். அந்த ஒற்றைக்கண் இப்பொழுது என் எதிர்ப்புறம் நின்று சிமிட்டிக் கொண்டிருந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக