வியாழன், 25 ஜனவரி, 2018

பார்க்

எண்ணச் சருகுகள் சூழக் காத்திருக்கிறேன்.
அந்தியின் பிசுக்கல் மணத்துடன் மண்ணிலிருந்து எழுந்தடங்குகின்றன
நீர்ச்சுழிகள்.
பெஞ்சுகள் கேட்பாரற்ற சுமையுடன்
மனிதர்களின் குதவாசனையை முகர்ந்து,
தங்களுக்குள் குசுகுசுக்கின்றன.
இரவின் பளிங்கு வெம்மையுடன்,
மின்சாரத் துண்டங்களின் வெளிச்சம்
புள்ளியைக் குலைத்துக் கோழை வரைகின்றன.
நிலமெங்கும் நிறங்களின் கலங்கல் தெறிப்பு. வெகுநாட்கள் பழகிய இணக்கத்துடன்,
தன் பச்சிளம் அணைப்புடனும் கதகதப்புடனும், 
நடு நின்ற ஒற்றை மரம் மூச்சிழைக்கிறது.
அடிமரத்தின் வேர்ப்பிடிகளில்
என்னை அவிழ்த்து அவிழ்த்துக்
குமையத் தொடங்கின,
சருகுகளின் சொப்பனத் தாவல்.
அமைதியற்று சுழியும் நீர்த் தேக்கத்தில்
வந்தமர்ந்தது வானப் பறவை,
மிக மிகப் பொறுமையுடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக