வியாழன், 24 பிப்ரவரி, 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -41

    

    ஜென்னசரேட் ஏரியைத்தாண்டியதும் பாலைவனம் தொடங்குகிறது. பாலைவனத்தினுள், செல்லச் செல்லச் சற்றுத் தொலைவில் அதன் மணல் வெளியின் ஊடே சென்றால், மணற்குன்றுகள் சூழச் சாம்பல் மற்றும் சிவப்பு நிறப்பாறைகள் படிந்த மொட்டைமலை. அதன் உச்சியிலிருந்து சற்றுக் கீழே செருகி வைத்தாற் போல, அதே சிவப்பு நிறப் பாறைகளால் செதுக்கப்பட்ட மடாலயம் இருக்கிறது. நடுநிசியில், வலுத்துப் பெய்த அடைமழையும், காற்றும் அங்காங்கே வெள்ளம் பெருகி, வழிப்பாதைகளை அடைத்தும், பெயர்த்தும் மழை நீர் பாய்ந்து கொண்டிருக்கிறது. ஓநாய்களின், கழுதைப்புலிகளின், காட்டுநாய்களின் ஊளைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை. சிங்களின் கூட்டம் ஒன்று இடிமுழக்கம் போல விடியலை எழுப்பக் கர்ஜித்துக் கொண்டிருக்கிறது. வானத்தின் மின்னல் வெட்டுகளின் மிணுக்கம், மடாலயத்தின் இருப்பை மங்கியும், ஒளிர்த்தும் அலைக்கிறது. ஒளியின் ஊடுபாவுகளுக்கிடையில் மடாலயம், அம்மலைக்குன்றின் ஒற்றைக் கண் போல சிமிட்டியது. அளவிட முடியாத நீர்மையின் ஒற்றைத்தாக்குதலில் அது தத்தளித்துக் கொண்டிருந்தது. வானத்தின் கட்டுப்படுத்த முடியாத தன்மையினால் பேதலித்துப் போயினர் துறவிகள். மாறி மாறி அறைந்து கொண்டிருக்கும் மழையின் வலுத்த சப்தங்கள், சினாய் மலைக்குன்றின் தெய்வத்தின் அடங்காதக் கசையடிகள் போல எங்கும் எதிரொலித்தன. துறவிகள் கண்கள் தாழ்த்தி மன்றாட்டுதலில் தங்களை ஆட்படுத்தியிருந்தனர். தந்தையே! திரும்பவும் உன் கோபத்தினை மொத்தமாகப் பூமியில் இறக்காதிரியும். நோவாவிற்கு உனது வார்த்தைகளை அருளியதைப் போல, உன் மறுதலிக்க முடியாதக் கருணையினால், பூமிக்கும் வானிற்கும் இடையே வண்ணங்களினால் பாலம் அமைப்பாய்! என்று நம்பிக்கையுடன் அவர்கள் தங்கள் முழங்கால்களை மடக்கி அமர்ந்து நிலத்தில் தலை குத்திட பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்.

    கூடத்தில் ஏழு நிலைகள் கொண்ட மெழுகுவர்த்தி விளக்கு ஒன்று மடாதிபதியின் அறையினுள்,  சைப்ரஸ் மரத்தினால் செய்யப்பட்ட மேஜையில் இருந்தது. அதன் நடு மையத்தில் இருந்த விளக்கு மட்டும் உருகிக் கொண்டிருக்கிறது. எதிரே தனது நாற்காலியில் அமர்ந்திருந்தார் மடாதிபதி ஜோயாசிம். நலிந்த உடல்,  பழுத்தச் சிறியக் கண்கள், வளைந்து நீண்ட மூக்கு, சுருங்கி வெளிர்ந்த உதடுகள். முன் மண்டையில் சுத்தமாக முடி உதிர்ந்து வழுக்கையாக இருந்தது. பின் மண்டையிலிருந்த கற்றையாக கழுத்துவரை சிகையும், நெஞ்சு வரைத் தாடியும் தூய வெண்ணிறத்தில் இருந்தது. நீண்டு உடல் முழுதும் மறைக்கும் வண்ணம் வேலைப்பாடுகள் கொண்ட அங்கி ஒன்று அணிந்திருந்தார். அவருக்கு எதிரே புதிதாய் மடத்தில் இணைந்த இளைஞன் ஜான், தரையில் அமர்ந்து புனிதர் டேவிட்டின் வார்த்தைகளை வாசித்துக் கொண்டிருந்தான்.

    "இரவின் கூர்மையான பார்வை என் மேல் விழுந்தது. மகாசமுத்திரத்திற்கு மேலே நான் பார்க்கிறேன், சொர்க்கத்தின் நான்கு தூய சிறகடிப்புகளின் காற்று அலைக்கிறது. சமுத்திரத்திற்குள்ளிருந்து நான்கு ராட்சச மிருகங்கள் வெளிவருகின்றன. ஒவ்வொன்றும் தனித்தன்மையான உரு கொண்டிருக்கின்றன. முதலில் வெளிவந்த ஒன்று சிங்கத்தின் உடலும், கழுகின் சிறகுகளும் கொண்டிருந்தது. அது தன் சிறகுகளை உயர்த்தி மேலே பறக்கும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். அது மனிதனைப் போலவே காலூன்றி எம்பியது. அதன் நெஞ்சில் மனித இதயம் துடித்துக் கொண்டிருந்தது. அதற்குப் பின்னே உடல்முழுதும் முடிகள் அடர்ந்த ஒரு கரடி எழுகிறது.  வா! வந்து எங்களின் சதைகளை விழுங்கு என்று அதன் எழுச்சியைப் பார்த்ததும் யாரோ கத்துகிறார்கள். மூன்றாவதாக எழுந்தது ஒரு சிறுத்தை. மஞ்சள் நிறத்தில், திட்டுகளாய் கரும்புள்ளிகள் கொண்ட அதற்கு நான்கு சிறகுகளும், நான்கு தலைகளும் இருந்தது. அதன் கூர்மையானக் கண்கள், அது பசியில் இருப்பதை வெளிக்காட்டியது. நால் திசைக்கும் ஒன்றாக அதன் ஒற்றைக் கழுத்திலிருந்து நான்கு முகங்கள் நாலாபுறமும் கிளைத்திருந்த்து. முதுகில் செதில்கள் போல சவ்வுகள் கொண்ட சிறகுகள் ஒரு சமயம் பறவையைப் போலவும், மறுசமயம் கடல் வாழ் உயிரினம் போலவும் காட்டியது. ஆதிக்கம் செலுத்துவதற்கான அரசாட்சி அதனிடமே கையளிக்கப்பட்டிருந்தது..."

    அமைதியற்றிருந்த புதியவன் வாசிப்பை நிறுத்தினான். எந்த சலனமுமற்று  நாற்காலியில் அமர்ந்திருந்தார் மடாதிபதி. அவரது மனக்குமுறல்களை அடக்கிக் கொள்ள விரல் நகங்களால் இருக்கையின் மரத்துகள்களை கீறிக் கொள்ளும் சப்தம் கூடக் கேட்கவில்லை. வெகு நேரம் அவரின் மூச்சினையும் அவன் உணரவில்லை. ஒரு வேளை இறந்து விட்டாரா? நாட்கள் செல்லச் செல்ல அவர் சுத்தமாக உணவையே மறுத்துவிட்டு, முழுப் பட்டினியாக இருக்கிறார். தண்ணீர் கூட அருந்துவதில்லை. கடவுளிடம் இருக்கும் கோபத்தில் தன் உயிரை மாய்த்துவிடும் நோக்கில் இருக்கிறார். அவரது இந்நோக்கத்தை ஏற்கனவேத் தன் சகத் துறவிகளிடம் தெரிவித்திருந்தார். அவரது மரணம் ஒரு இலைப் பழுத்து சருகாவதைப் போல இருக்க வேண்டும் எனத் தீர்மானித்திருந்தார். அப்பொழுதுதான் சுமையற்ற இத்தேகத்திலிருந்து அவரது ஆன்மா நேரடியாகச் சொர்க்கத்தினுள் நுழைந்து கடவுளைச் சந்திக்கும். அங்கு கடவுளிடம், அவரது  வாழ்நாள் முழுதும் அரித்துக் கொண்டிருக்கும் புகாரை தெரிவிக்க வேண்டும். அது அவருக்கு மிகவும் இன்றியமையாததாக அவரது இத்தனை நாள் இருப்பின் ஒரே எண்ணமும், உறுதியுமாக இருந்தது. ஆனால் அவரது உடல் அவரை விடுவதாக இல்லை. அது அவரை இங்கு நிலைப்படுத்த முயற்சி செய்கிறது. அதனால் அவரை உடலை மறுதலித்தார். அதன் குரல்களை ஒடுக்கினார். உணவிட மறுத்தார். முற்றிலுமாக அதனைச் செயலிழக்கச் செய்து, ஒரு உண்மையான ஆன்மாவாக இந்த ஜோயாசின் தன் மனத்தாங்குதல்களுடன் கடவுளிடம் செல்ல வேண்டும் என்று சொல்லிக்கொள்வார். அது அவரின் கடமை. அவர் இஸ்ரவேலத்தின் தந்தையர்களில் ஒருவர் அல்லவா! மானிடர்களுக்கு வாயிருந்தும் அவர்கள் கடவுளிடம் தங்கள் வலிகளை, வதைகளைச் சொல்வதில்லை. ஆனால் ஜோயாசிம்முக்கு அப்படியல்ல, அவருக்கு இதைத்தவிர வேறு வழியோ, வாய்ப்புகளோ இல்லை.

    புதியவன் திரும்ப அவரை உற்று நோக்கினான். ஒற்றை விளக்கின் ஒளியில் அதிர்ந்து கொண்டிருந்தது ஜோயாசிம்மின் மண்டை. நார் நாரான அவரது முடிக்கற்றைகளுடன் அவரைப் பார்க்கும் பொழுது, பாலைவனத்தில் இறந்துபட்ட, நாளான ஏதோ ஒரு விலங்கின் வெறிக்கும் மண்டை ஓட்டினைப் போல அவனுக்குத் தோன்றியது. பட்டினி நோன்பிருந்து எலும்புகளும், குழிகளும் மட்டுமே கொண்டிருக்கும் அவரது சதைப்பிண்டம், புழுக்கள் அரித்து அரித்துச் சிதைந்தது போல அங்காங்கே புடைத்தும், சுருங்கியும் இருந்தது. என்ன அவரினுள் உள்ளது? எதை நோக்கி அவர் செலுத்தப்படுகிறார்? எதற்காக இத்தனை சுயவதைகள்? அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. எத்தனையோ முறை சொர்க்கத்தின் கதவுகள் அவர் முன் திறந்தன, நரகத்தின் பாழ்குழிகள் அவர் பாதைகளில் வந்து ஆட்கொண்டன. ஆனால் ஜேக்கப்பின் ஏணியைப் போன்று அவரது அகமோ இஸ்ரவேலத்தின் துன்பங்களையும் ,நம்பிக்கைகளையும் சுமந்துகொண்டு மேலேறுவதும் கீழிறங்குவதுமாய் இருக்கிறது.

    கண் விழித்தவர் எதிரே நின்ற ஜானைப் பார்த்தார். வெளிறியக் கண்களில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தின் நொடி தீட்சண்யம். இருளுக்கும் ஒளிக்கும் அலையும் முகம், வெளிச்சமும் நிழலும் இணைந்து தோற்றம் கொண்டது. வாயைச் சற்றுக் கோணலாகச் சுழித்துக் கொண்டவரின் ஒளிரும் கண்களில், அவரது கன்னித்தன்மையும், நாட்பட்டப் பெருந்துன்பமும் ஒருங்கே கொந்தளித்தன.

    சுருங்கித்தடித்த ரேகைகள் கொண்ட உதடுகளைப் பிரித்து சற்று புன்னகைக்க முயற்சித்தார். எதிரில் நின்றிருந்த இளைஞனை அவருக்குப் பிடிக்கும். பழைய செபதீயிலிருந்து என் தந்தை தான் அவனை இங்கே தருவித்திருப்பார். ஒரே சமயம், போக்கிரித்தனமும், புத்திசாலித்தனமும் கொண்டவன். அதே நேரம் அவனது அடிபணிதலும், முரட்டுத்தனமும் அவனை அவருக்கு வெகுவாகக் கவர்ந்தன. என்னிடம் இல்லாத, நான் பெற முடியாத ஒன்றை இந்த இளைஞன் கொண்டிருக்கிறான். நிச்சயமாக என்னிடம் பேசாத அக்கடவுள் இவனிடம் பேசுவார். என் தோள்களில் இருக்கும் இருபுண்களையும் இவனே சிறகுகள் ஆக்குவான். நான் இனிமேல் சொர்க்கத்தின் வழியை என் வாழ்நாளில் அடைய முடியாது என்றே நினைக்கிறேன் ஆனால் இவன் அதன் சரியான வழியை கூர்வான், தயக்கமின்றி செல்வான். கிழவர் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டார். அவரது பழுத்த ஒளிரும் கண்கள் எதிரே நின்ற புதிய இளைஞனான ஜானை அன்புடன் நோக்கியது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக