செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -33

    


    எலும்புகளைத்துளைக்கும் உறைபனி. தலைக்கு மேலே நட்சத்திரங்கள் மெல்ல அழிந்து நீலம் படர்கிறது. மேகங்களற்ற வானத்தின் வெளிச்சத்தில் எல்லாம் துலங்கத் தொடங்கின. சருகுகளின் ஓயாதக் கூச்சல். ஆயிரம் சிறகுள்ள ஒரு ராட்சசப் பறவை ஒன்று பறக்க எம்புவதைப் போலத் தனக்கு மேலே குத்திட்டு நிற்கும் தேவதாருவின் கிளைகளும் இலைகளும் காற்றின் அசைவுக்கு இசைகிறது. சுற்றும் முற்றும் யாருமற்ற வெளி. இளைஞன் திரும்பிப் திரும்பிப் பார்த்தான். இருளினுள் நிழல் ரூபமாய்த் தெரிந்த அந்த கழுகுத் தலை உருவம், காற்றில் மணல்த்திட்டுக்கள் உரிந்து அழிவதைப் போல மெல்ல மெல்ல உருவிழந்து மறைந்தது.

    இங்கிருந்து அகன்று எப்படியாவது, பாலை நிலத்தை அடைந்துவிட வேண்டும். மாக்தலேவாவில் எக்காரணம் கொண்டும் காலடி வைப்பதில்லை. எங்கும் நிற்கப் போவதில்லை, பாலையைக் கடந்துத் துறவிகளின் மடாலயத்தினுள் என்னைப் புதைத்துக் கொள்ளப் போகிறேன். என் ரத்தத்தின் கொப்பளிப்புகளைக் களைந்து புனிதத்தின் தூய்மையை மட்டும் என்னுள் வரித்துக் கொள்ளப் போகிறேன் என்று கூறிக் கொண்டான்.

    கற்பாதையில் கால்கள் இடர்படத் தடுமாறியவன், அருகில் இருந்த ஒரு பழமையான சைப்ரஸ் மரத்தின் அடித்தண்டினைப் பற்றிக் கொண்டான். கூம்பு போலக் கைகள் கூப்பி வான் நோக்கித் தவமிருக்கும் அதன் உடலை அண்ணாந்துப் பார்த்தான். ஆனால் அதன் வேர்களின் அழுத்தமும், வலுவும், மண்ணில் ஆழமான ஊன்றுதலும் அவனை அலைக்கழித்தன. 

    "விடை பெறுகிறேன் சகோதரி", என் கீழ்மைகளால், நேற்று இரவு, உன் நிழலடியை அசுத்தம் செய்து விட்டேன். மன்னித்து விடு. 

    ஆதூரத்துடன் அம்மரத்தைத் தழுவிக் கொண்டவன், முன்னே வளைந்து வளைந்து இறங்கிச் செல்லும் மலைப்பாதையினை நோக்கி விறுவிறுவென்று நடக்கத் தொடங்கினான்.

    மலையிறங்கி சமவெளி நிலத்தின் பரந்த வயல்வெளிகளை அடைந்தான். காலைச்சூரியனின் செங்கதிர்களின் கோடுகள், முற்றிக் காத்திருக்கும் கோதுமை நாணல்களினைத் தொட்டுத்தழுவின. ஆழ்த்துயிலில் இருந்து நிலம் மெல்ல மெல்ல சொடுக்கிக் கொண்டு எழுந்தது. சிதறிக் கிடந்த அதன் தாள்களில் ஒளிப்பட்டு, ஒரு பரந்த பொன்மஞ்சள் வெளியாய் உருமாறிக்கொண்டிருந்தது. 

    எனக்குப் பயமாக இருக்கிறது. என்னால்...நான்...எதுவோ! கண்டிப்பாக மாக்தலேனாவின் பாதை வழியே செல்லக் கூடாது என்று தனக்குள் இறைஞ்சினான். தனக்கு முன்னே இரு வழிகள் இருந்தது. வலதுபுறம் ஏரியை நோக்கி செல்லும் நீண்ட நேரானப் பாதை, இடதுபுறம் மாக்தலேனிற்கு செல்லும் வளைவானப் பாதை. தான் எங்கு செல்ல வேண்டும் எனத் தீர்மானித்துக் கொண்டவன், உறுதியுடன் அப்பாதை வழியே அழுந்த மிதித்து நடந்தான்.

    முன்னே நடக்க நடக்க அவனது எண்ணங்கள் அலைமோதின. அவனின் அகம் மாக்தலேனிலிருந்து வெளியேறுவதைப் பற்றி நினைத்ததும்,  பாவத்திலிருந்து இறைமைக்கு, சிலுவையிலிருந்து மோட்சத்திற்கு, அன்னையின், தந்தையின் முகங்கள், தூர தூர வெற்று நிலங்கள், நீலக் கடல்வெளிகள், வெண்மை, மஞ்சள், கருமை என எண்ணிலடங்கா முகங்களின் பெருக்கு. ஆனால் இஸ்ரவேலின் எல்லையை அவன் இதுவரைத் தாண்டியதில்லை. அவனது பால்யத்தில் இதுபோன்ற உணர்வுகளை அவன் உணர்ந்திருக்கிறான். ஒரு நாள் கண்கள் மூடி அமர்கையில், தான் ஆகாச வெளிகளில் எல்லைகளைக் கடந்து நிலங்களைக் கடந்து, பெருங்கடல்களைக் கடந்து வலுவான சிறகுகள் துடிக்கப் பறந்து கொண்டிருந்தான். தனக்குக் கீழேயான நிலம் கணத்திற்குக் கணம் மாறிக் கொண்டே இருக்கிறது. மிக மிக உயரத்தில் வானும் மண்ணுமற்ற அந்தர வெளியின் ஊடே வளைந்த அலகுகளும், கூர்ச்செம்மைக் கண்களும், நீண்ட வலுவான சிறகுகளும் கொண்ட ஒரு பருந்தினைப் போல அவன் இருந்தான். இன்றும் அது போலவே, உடலினை மறக்கடித்தல்! சதையின் வெம்மையிலிருந்துத் தப்பித்து அழிவடையா இறையின் சொர்க்கத்தை அடைதல். அதற்காகத் தான் அவன் தன் வாழ்நாள் முழுதும் வலியுடன் ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்.

     நீள்க்கோடு போல செல்லும் பாதைகளில் எந்தத்தயக்கமுமின்றி சென்று கொண்டிருந்தான் இளைஞன். திராட்சைத்தோட்டங்களும், ஆலிவ்மரங்களும் அடர்ந்தப் பாதையினைக் கடந்து செல்கிறான். அடங்காப் பசியும் தாகமும், உடல் முழுதும் காயங்களின், வலிகளின் பொருக்குகளின், வடுக்களின் வதையுடனும், நிரைவேயுறாத, பொருளற்றப் பாடலினைக் கூவிக் கொண்டே கடந்து செல்லும் ஒரு கடற்காகம் போல, எதனாலோ உந்தப்பட்டு, கனவு வெளியில் கால்கள் அந்தரத்தில் மிதப்பது போல சென்று கொண்டிருந்தான். காற்றினில் அசைந்தாடும் கிளைகளினால் அவனை வரவேற்கின்றன பசிய ஆலிவ் மரங்கள். திராட்சைக்கொடிகள் விம்மி விம்மித் தாழ்ந்து நிலத்தை உராசிக் கொண்டிருந்தன. சிறுமிகள், தங்கள் வெண்ணிறத் தலைக்குட்டைகளை சரியாக இறுக்கிக் கொண்டுத் தங்களுக்குள் கேலி பேசிக் கொண்டு அவனைக் கடக்கின்றனர். ஒரு இளங்கன்று காலை வெயிலைக் குடித்துக் கொண்டு, அவனைக் கருநிறக் கண்ணாடிக் கண்கள் ஒளிர அழைக்கிறது.

வா! வா! கருணையும், அமைதியும் பெருகட்டும்!

    மனித நடமாட்டமே இல்லாத பகுதிகளில் அவன் அந்த வலுவானக் காலடிச்சப்தத்தைத் திரும்பவும் உணர்ந்தான். மிக மிக அருகில் தீப்பற்றிக் கொள்ளும் கருகல் மணம், அதே கவசங்கள் உராயும் ஒலி. அந்த நகைப்பினைத் தலைக்கு மேலே அழுந்தக் கேட்டான். ஆனால் இம்முறை அவன் பொறுமை இழக்கவில்லை. இன்னும் சிறிது தூரமே, ஏரியை அடைந்து விடலாம். நீர்மையின் நீலவழிகளின் ஊடே, ஒரு ராஜாளியின் கூட்டினைப் போல சிவப்புப் பாறைகளுக்கிடையில் தெரிகின்ற மடாலயத்தைத் தன் உள்ளும் புறமும் எதிர் நோக்கி நடந்தான்.

    தன் வழியில் தான் மட்டுமேயாக நடந்து கொண்டிருந்தான். ஆனால் திடீரென ஒரு இடத்தில் நின்றான். அங்கு பழுத்த பேரீச்சம் பழங்கள் அடர்ந்த பாதையின் ஊடே ஒரு நிழல்தாங்கல். அவனுக்குத் தெரியும் அது யாருடையது என்று. தடுமாறினான். கால்கள் பின் வாங்கின. இங்கும் அங்கும் ஊசலாடிக் கொண்டிருந்தது மரம். இன்னும் பசியுடனும் சோர்வுடனும் தான் அவன் இருந்தான். அவ்விடத்தின் நறுமணம் அவன் நாசி நிரம்பியது. கைகளால் தலையைப் பிடித்துக் கொண்டு பலிபீடத்தில் நிற்கும் ஆட்டினைப் போல இருபுறமும் அசைத்தான். நரகத்தின் தீய்மையில் சதா கனன்று கொண்டிருந்தது அவளுடைய இல்லம்.

    இல்லை! வேண்டாம்! நான் போக மாட்டேன்! குரல் எழாது தனக்குள்ளேயே அலறினான். ஒரு நாய் மோப்பம் பிடித்தும் முகர்ந்தும் பாதையினைத் தேர்ந்து செல்வதைப்போல அதன் சுகந்தம் அவனைப் பிடித்திழுத்தது. அப்பாதையில் இரு அடிகள் வைத்தவன் பின் மறுதலித்து பின் வாங்கினான். சரிவினை நோக்கி நீர்மை நகர்வது போல அவனும் வசப்பட்டான்.

    ஓரிடத்தில் அசையாமல் நின்று கொண்டிருந்தவன், திரும்பி ஏரியை நோக்கி செல்லும் பாதையைப் பார்த்தான். அங்கிருந்து எதிரே மறுமுனையில் இப்புறம், சுத்தமான வெண்ணிறப்பூச்சிட்ட வீடுகளைக் கண்டான். அருகில் பளிங்குவிளிம்புகளால் அலங்கரிக்கப்பட்ட, பழமையான வட்டக் கிணறு ஒன்று இருந்தது. கலவையானக் கூச்சல்கள். நாய்களின் குரைத்தல் சப்தத்தினிடையில், பெண்கள், சிறுமிகளின் குரல்கள், சிரிப்புகள், அங்கலாய்ப்புகள். கிணற்றின் அருகே பூட்டிய ஒட்டகங்களின் முதுகில் பாரங்கள் பொதியப்பட்டிருந்தது. 

    நான் அவளைப் பார்க்க வேண்டும். கண்டிப்பாக அவளைப் பார்த்துதான் தீர வேண்டும். அவனுள் இருந்து தவிப்பான ஒரு குரல் எழுந்தது. அது மிகமிக அத்தியாவசமானது. கடவுளின் வழி  நடத்துதனாலேயே நான் இங்கு வந்தேன். நான் வெறும் கருவி! இது கடவுளின் செயல்! ஏனென்றால் நான் அவளைப் பார்க்க வேண்டும் என்பது கடவுளின் விளைவு! 

    அவளைப் பார்த்து, அவளது காலடிகளில் வீழ வேண்டும். அவள் என்னை மன்னிக்காவிடில் எனக்கான கடைத்தேற்றம் இனி இல்லை. என்னால் ஒரு துறவியாகவும், அவளது மன்னித்தல் இன்றி வாய்ப்பில்லை. நான் எங்கு செல்லக் கூடாது என்று என்னை அணுதினமும் தடுத்தேனோ, அங்கே என்னைக் கூட்டி வந்தாய். கடவுளே! உனக்கு நன்றி! 

    உண்மையில் அவன் மகிழ்ச்சியாக உணர்ந்தான். அடைபட்டிருந்த ஒன்று சட்டென அவனுள் பீறிட்டது. நன்றாக இழுத்து மூச்சு வாங்கிக்கொண்டான். மாக்தலாவிற்கு செல்லும் பாதையின் இறக்கம் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது.

    கிணற்றின் அருகே, ஒரு ஒட்டகமந்தை, தங்கள் வயிறுகள் நிலத்தில் அமிழும்படி குந்தி அமர்ந்திருக்கின்றன. தீனி முடிந்து சாவகாசமாக கண்கள் சொக்கி அசை போட்டுக் கொண்டிருந்தன. ஏதோ தூர தேசத்திலிருந்து அவைகள் இங்கு வந்திருக்கக் கூடும். அச்சூழலே ஒரு வித நறுமணம் பற்றிக் கொண்டிருந்தது. 

ஜீசஸ் கிணற்றின் அருகி இருந்த திண்டில் கால்களை நீட்டி அமர்ந்தான். ஒரு முதியவள் தன் வாளியில் இருந்த நீரை அவன் குடிப்பதற்காக ஏந்தினாள். தாகம் தீரக் குடித்து முடித்தவன், அவளிடம் மேரியின் இல்லம் எங்கிருக்கிறது என்று கேட்க நினைத்தான். ஆனால் அவளுக்கு கூச்சமாக இருந்தது. அவள் நிச்சயமாக அங்கிருப்பாள். கடவுளின் விருப்பம் அதுவாயின் அது நடந்தே தீரும் என்று எழுந்து நடக்கத் தொடங்கினான்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக