செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -32

     

Author: Nikos Kazantzakis

    கால்களும், கைகளும் இழுத்துக் கொண்டிருந்தன. இருகைகளையும் தரையுடன் இறுக்கியது போல இருபுறமும் நீட்டியிருந்தான். கால்களின் அடிப்பாதமும், கரண்டையும் மண்ணின் செதில்களில் உராய்ந்து பிசுபிசுப்பாய் ரத்தம் கன்றியிருந்தது. தான் ஒரு மாபெரும் சிலுவையில் அறையப்பட்டதைப் போல அவன் நிலத்துடன் அமிழ்ந்து கிடந்தான். மேலே சொர்க்கராஜ்ஜியத்தின் மிணுங்கல். மகா ஒளி! இருண்டிருந்த வானத்தில் நட்சத்திரத்தோணிகள் போல ஆளற்று  அலைகின்றன. காற்றின் நுண் கிரீச்சிடல். காதுகளிலும், கண்களிலும், தலைமுடி முழுதும் வெளிச்சத்தைப் பற்றிக் கொள்ளும், பூச்சிகள் போலப் புழுதி அப்பியிருந்தது. ஒரு வலுவான அழுத்தம் மேலிருந்து செலுத்தப்படுகிறது. அது அவனது உடலெங்கும் பரவி அசையமுடியாதவாறு அழுத்துகிறது. அவனது பிரக்ஞ்சையோ கட்டுப்பாடற்றத் தன் உடலை மீட்க அதனுடன் போரடிக் கொண்டிருக்கிறது. வானிற்குக் கீழே சிறகுகள் சிக்கிக் கொண்ட பறவை போலக் காட்சியழித்தான். வலுக்கொள்ளும் தோறும் முடிச்சுகள் இன்னும் பெரிதாகிக் கொண்டேயிருந்தது.

    அப்படியே வெகு நேரம் தரையில் வீழ்ந்துக் கிடந்தான். தூரத்தே, நாய்களின் குரைப்புகள், மனித இருப்பை அவனுக்கு ஞாபகப்படுத்தியது. இருள் ஒரு பிசின் போலத் தோண்டத் தோண்ட வந்து கொண்டே இருந்தது. பாதைகளற்ற வானத்தில் பறவைகள் தத்தமது பாதைகளில் படபடக்கின்றன. குளிர் ஒரு புள்ளியாய்த் தொடங்கி, நீள் வட்டம் போலச் சுழல்கிறது. உடலின் அணுக்கள் முழுதும் வெப்பத்திற்காக ஏங்கியது. தொலைவிலிருந்து வரும் காற்றின் கசிவு சற்றே வெக்கையாய் அவனுள் நிறைந்தது. முதுகில் சரல் கற்களின் அழுத்தம், உராய்ந்த வெட்டுக் காயங்கள் தாறுமாறாகக் கோடுகள் கிழித்து, ஒரு வெறி கொண்ட மிருகம் என அவனைப் பிறாண்டிக் கொண்டிருந்தது, பூமி!

    மலையடிவாரத்திலிருந்து வரும் மணியோசைகளின் இனிய நாதத்தை அவன் கேட்டான். நடுநிசி, ஒட்டகங்களை ஓட்டிச்செல்லும் ஒரு வழிப்போக்கன் தாழ்ந்த குரலில் சோகமயமானப் பாடலைப் பாடிக் கொண்டு செல்கிறான். குசுகுசுப்பது போல சப்தங்கள், தெளிவாக ஒரு பெண்ணின் குரல் இருளிலிருந்து அவனுள் படர்கிறது. பின் மறுபடியும் ஆழ்ந்த அமைதி! தங்கச்சேணங்கள் பூட்டிய விலையுயர்ந்த ஒட்டகம் அது. அவள் தனது மெல்லிய மூச்சினை உறிஞ்சிகையில் இளைஞன் அவளை அறிந்து கொண்டான். வீங்கிப் போன கண்கள், வெகுகாலம் தூக்கமே இல்லாதது போலச் சோர்ந்தும், கண்ணீரில் அலங்கோலமாகவும் இருந்தது அவள் முகம். இன்னும் விசும்பல் அடங்கவில்லை. இந்நள்ளிரவில் அவள் எனக்கு வெகுஅருகே கடந்து சென்றுகொண்டிருந்தாள். அவள் அமர்ந்திருக்கும் அந்த ஒட்டகத்தைச்சுற்றி அடிமைகள் பாதுகாத்துச் செல்கின்றனர். உலகின் நான்கு மூலைகளிலிருந்தும் வந்திருக்கும் வியாபாரிகள். அங்கே அவளுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இன்று அவர்கள் அவளை அந்தக்குளிர்ச்சுணைக் கிணற்றிலோ, இல்லை வீட்டிலோக் கூடக் கண்டறிய முடியவில்லை. அவசர அவசரமாகத், தங்கள் அடிமைகளை விடுத்து அவளைத் தேடிக் கண்டறிய அனுப்பினர். இந்த வணிகர்களின் வழிகள் தந்திரமானதும், அபாயகரமானதுமானது. ஒன்றை அடைய வேண்டுமெனில் என்னவும் செய்யத் துணிந்தவர்கள். விடாமல் தங்கள் மனத்திரையில் அவள் உடலைப் பகற்கனவுகளில் புணர்ந்தனர். இப்பொழுது அதனை மிச்சம் வைக்காமல் புசிப்பதற்கு இங்கே மாக்தலேவாவிற்கு வந்திருக்கின்றனர். அங்கு மாக்தலேனின் கூடத்தில், பொறுமையற்றுக் கண்கள் மூடிக் கொண்டு அவளுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    மணிச்சப்தம் இருளினுள், நீர்க்குமிழ்களின் அலைகள் என அருகிலும், தூரத்திலுமாகச் சுழன்று சுழன்றுக் கடக்கிறது. ஒரு மென் உசாவலாய்த் தொடங்கி மயக்கும் ஒலிகளாய், அலைகளாய், அதிர்வுகளாய் அவனைச்சுற்றிக் குழுமுகிறது. பூ வாளியிலிருந்து நீர் மெது மெதுவாக இலைகளை, வேர்களை, பூக்களைத் தழுவும்பொழுது அத்தாவரம், குளிர்ச்சி மிகு நீரினில் முகிழ்த்துக் கிடக்குமே அது போல, அமிழ்ந்து அமிழ்ந்து ஆழ் உறக்கத்தில் சரிந்தான் இளைஞன்.

    நிலமெங்கும் பச்சைப்பசேலென புல் வியாபித்துக் கிடக்கிறது. எங்கும் தூய்மையின் மலர்ச்சி. இரு வளைந்த கொம்புகளுடைய, பழுத்த ஆலிவ் பழ நிறம் கொண்ட துடுக்குச்சிறுவன் ஒருவன், ஒரு தண்ணீர்த்தொட்டியின் அருகே உட்கார்ந்து தன் மிருதுவான விரல்களால் புல்லாங்குழலை இசைக்கத்  தொடங்கினான். அதன் இனிமை, ஜீசஸ் தன் வாழ் நாளில் இதுவரையிலும் உணர்ந்திராத லயத்தில், கமகங்கள் அந்தரவெளியில் ஒன்றுடன் ஒன்று மோதி மிதக்க ஒலிந்து கொண்டிருந்தது. அவனின் இசைவெளியில், கீழே மணல்பரப்புகள் துகள் துகள்களாகக் கிளர்ந்தெழுந்துக் கோள வடிவாயின. திடீரெனஅழகான உருளைக் கொம்புகள் கொண்ட புள்ளிமான்கள், அப்புல்வெளி முழுதுமாக நிறைத்துப் பெருகியது. சிறுவன் தன்னருகில் இருந்த நீர்த்தொட்டியினைப் பார்த்ததும், மீன்கள் எண்ணிலடங்காமல் பல்கிப் பெருகின. தனக்குப் பின்னால் ஓங்கி உயர்ந்து நிற்கும் தேவதாருவை நோக்குகிறான். அதன் பசிய இலைகளெல்லாம் சிறகுகள் படபடக்க வானை நோக்கிப் பறக்கத் தொடங்கின. குழலில் கானம் வேகமெடுத்தது, விரல்கள் துளைகளுக்கிடையே நடனமாடின. மனித அளவேக் கொண்ட இருப்பூச்சிகள் நிலத்தினுள்ளிருந்து எழும்பி வெளிவந்தன. அவைகள் அங்கு வசந்தத்தின் மாபெரும் புல்வெளியைக் கண்டதும் அடக்கமுடியாமல் தழுவிக் கொண்டன. முத்தமிட்டன. புல்வெளி முழுதும் கட்டிப்புரண்டன, பிரிந்தன, சேர்ந்தன, நகைத்தன, கேலி பண்ணின. அனைத்தையும் அச்சிறுவன் சற்றே சீற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனின் கானம் இன்னும் முடிந்துவிடவில்லை. அவைகள் எதையும் கண்டுகொள்ளாமல் புணரத்தொடங்கின. சற்றும் இதனை எதிர்பாராதச் சிறுவன், புல்லாங்குழலைத் தன் கைகளாலேயே சுக்கு நூறாய் உடைத்துப் பொடியாக்கினான். பொறுமையற்று அவைகளை நோக்கிக் கத்தத் தொடங்கினான், அந்தக்கணம் எல்லாம்! எல்லாம்! பறவைகளும், மான்களும், மரங்களும், தண்ணீரும், புல்வெளிகளும், பிண்ணிக்கொண்டுக் கிடந்த அந்த ஆணும், பெண்ணும் எல்லாம் தூசித்துகள்களாய் மறைந்து போயின.

    விதிர்விதிர்த்து, மேரியின் மகன் அலறிக் கொண்டு எழுந்தான். தன் கண்களைத் திறக்கும் முன்னே இன்னும் அழியாமல் தங்கியிருக்கும் இரு உடல்கள், பிணைந்திருக்கும் அதன் அம்மணம் அவனுக்குள் தெளிவாகத் தெரிந்தது. தன் கைகளால் முகத்தை அழுத்த மூடிக் கொண்டான். பின் தரையில் காறி உமிழ்ந்தான்.

    இத்தனைக் கேவலத்தை என்னுள் பதுக்கி வைத்திருக்கிறேன்! திரும்பத் திரும்ப வெறி கொள்ளக் காறி உமிழ்ந்தான்.

    இரும்பு முட்கள் பொருத்திய தன் இடுப்புவாரினை உருவினான். சற்றும் தாமதியாமல் உடைகளைக் களைந்தான்.  உடலின் அனைத்து பாகங்களிலும் அதன் கூர் முனைகள் படும் படி சரியாக அழுத்தி அழுத்தி கசையடிகளைக் கொடுக்கத் தொடங்கினான். ஒவ்வொரு முறை அதை வலுக்கொண்டுத் தன் உடலிலிருந்து பிய்க்கும் பொழுதும் குருதிக்குமிழ்கள், சதையுடன் தெறித்துத் தரையில் விழுந்தன.

முற்றிலும் தணிந்திருந்தான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக